வல்லமை மின்னிதழின் மூன்றாம் ஆண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு, இணையத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியை வல்லமை மின்னிதழில் அறிவித்தோம். வல்லமையின் ஆலோசகர் இன்னம்பூரான் அவர்கள், இதற்கான பரிசாக, ரூ.1000 மதிப்பிலான புத்தகங்களை வழங்க முன்வந்தார். இந்தத் தலைப்பில் ஒருவர் கட்டுரை எழுத, உழைப்பும் முயற்சியும் சற்று அனுபவமும் தேவை. சவால்கள் பல இருப்பினும் வல்லமை வாசகர்கள் இதில் உற்சாகமாகப் பங்கேற்றனர். அவற்றிலிருந்து இறுதிச் சுற்றுக்கு ஆறு கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்தோம். அவற்றை உத்தமம் அமைப்பின் தலைவர் மணி மு. மணிவண்ணன் அவர்களுக்கு அனுப்பினோம். தகுதியான ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டினோம்.

மணி மு. மணிவண்ணன் அவர்கள், சிமண்டெக் நிறுவனத்தின் சென்னைக் கிளையில் முதுநிலை நெறியாளர், உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்கிற உத்தமத்தின் தலைவர், அமெரிக்காவிலிருந்து வெளியாகும் தென்றல் இதழின் முன்னாள் ஆசிரியர், புலம் பெயர்ந்த அமெரிக்கத் தமிழர், கணிஞர், கணித்தமிழ் ஆர்வலர், சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்ற உறுப்பினர். பாரதியின் “பாஞ்சாலி சபதம்” – கவிதை நாடகம், இந்திரா பார்த்தசாரதியின் “இராமானுஜன்”, மற்றும் “அக்கினிக்குஞ்சு – பாரதி வரலாறு” நாடகங்களை தமிழ்மன்ற மேடையில் அரங்கேற்றியவர். கடந்த மூன்றாண்டுகளாய்ச் சென்னையில் வாழ்கிறார்.

நம் வேண்டுகோளை ஏற்று, பல்வேறு பணிப் பளுவுக்கும் மத்தியில், படைப்புகளை ஆராய்ந்து, தமது முடிவினை மணி அறிவித்துள்ளார். அவருக்கு நம் நன்றிகள். இதோ அவரது கட்டுரையும் தீர்ப்பும்.

 

வல்லமை கட்டுரைப் போட்டி – தீர்ப்பு

————————————————————————————————————————————–

 

மணி மு. மணிவண்ணன்

வல்லமை இதழ் ”இணையத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி?”என்ற கேள்வியை எழுப்பியது மட்டுமல்லாமல், அதற்குத் தக்க விடையைக் கணினி வல்லுநர்களிடம் கேட்பதை விட அன்றாடம் இணையத்தைப் புழங்கி அதனால் பயனுறும் வாசகர்களையே விடையளிக்கக் கேட்டதைப் பெரிதும் பாராட்டுகிறேன்.  தொழில்நுட்ப வல்லுநர்களும், தம் தொழிலில் இணையத்தைப் புழங்குபவர்களும் இணையத்தை அணுகும் கோணம் வேறு.  பொதுமக்கள் இணையத்தை அணுகும் கோணம் வேறு. ஆனால் இணையத்தின் அடிப்படைத் தொழில்நுட்பங்கள் என்னவோ இருவருக்கும் பொதுவானதுதான்.

சில பத்தாண்டுகளுக்கு முன்னால் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய மாபெருங்கணினிகளால் மட்டுமே செய்யக் கூடிய செயல்களை இன்று மிக எளிதாக அலைபேசிக் கணினிகளை வைத்துச் செய்ய முடிவது என்பது மிகவும் மலைக்கத்தக்க செயல். கடுகைத் துளைத்து ஏழு கடலைப் புகுத்திக் குறுகத் தரித்த குறள் என்று திருக்குறளைப் பாராட்டினார் ஔவையார்.  இன்று அத்தகைய ஆற்றல்களைத் தொழில்நுட்பம் தெரியாத பொதுமக்களின் கையில் கொண்டு வந்துள்ளனர் வல்லுநர்கள்.  அப்படிக் கொண்டு வரும் முனைப்பில் அவர்கள் பொதுமக்கள் எப்படித் தங்கள் கருவிகளைப் புழங்குகிறார்கள் என்பதில் பெரிதும் ஆர்வம் கொண்டுள்ளனர்.

கணினியையும் இணையத்தையும் புழங்குவது மட்டுமல்லாமல் அவற்றைத் தம் தாய்மொழியாம் தமிழிலும் புழங்குபவர்களுக்கு என்னென்ன வசதிகள் உள்ளன, அவற்றை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்பதைத் தெளிவாக எளிய நடையில் விளக்குவதற்குப் பயனாளர்களை விட வேறு யார் பொருத்தமாக இருக்க முடியும்?

இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு நடுவரை எட்டிய கட்டுரைகள் ஆறு. ஒவ்வொருவரும் தத்தம் நடையில், தம் பார்வையில் இணையத்தில் கிடைக்கும் வசதிகளைப் பற்றி எழுதியுள்ளார்கள்.  கட்டுரையில் சிறந்த கட்டுரை எது என்று தேர்ந்தெடுக்க நான் சில வரைமுறைகளை வகுத்துக் கொண்டேன்.

1. முழுமை:

இணையத்தின் ஆணிவேராக இயங்கும் பெரும்பாலான அடிப்படைத் தொழில்நுட்பங்களைப் புழங்குவது பற்றிக் குறிப்பிட வேண்டும். மின்னஞ்சல் (email), வலைத்தளங்கள் (web pages), வலைப்பூக்கள் (blogs), தேடுபொறிகள் (search engines), வலைக்கூடங்கள் அல்லது சமூக வலைத்தளங்கள் (socical network such as Twitter, Facebook, LinkedIn), வலைத்திரைகள் (video sharing services such as You-Tube), மின்னாட்சி (e-governance), மின்வணிகம் (e-Commerce), வலையூடகங்கள் ( web versions of electronic media), மின் தரவுத்தளங்கள் (online encycopedia such as wikipedia), மின்கலைக்கூடங்கள் (electronic art galleries), இணையக் கல்விக்கூடங்கள் (web based learning, e-learning) என்பவை இவற்றில் அடங்கும்.  இவற்றில் பெரும்பாலானவற்றைக் குறிப்பிடாமல், இணையத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தும் வழி வகைகளை முழுமையாகச் சொல்லிவிட முடியாது.

2. நம்பகத்தன்மை:

சொல்வதைச் சரியாகப் பிழையில்லாமல் சொல்வது மட்டுமல்லாமல் தக்க சான்றுகளையும் காட்ட வேண்டும். இணையத்தின் மிகப் பெரும் சிக்கலே நம்பகத்தன்மைதான்.  இணையத்தில் கிடைக்கும் பெரும்பாலான செய்திகளை நாம் “கண்னால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என்ற பார்வையில்தான் அணுக வேண்டும்.  யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதுவதால் உண்மை எது, பொய் எது என்று புரியாமல் தடுமாறுகிறோம்.  அதனால், இணையத்தின் பயன்பாடு பற்றிக் கட்டுரை படைப்பவர்கள் நம்பகமான தரவுகளைத் தக்க சான்றுகளுடன் எடுத்துச் சொல்வது கட்டுரையின் நம்பகத்தன்மைக்கு வலிமை தருகிறது.

3. மொழிநடை

தொழில்நுட்பங்களைப் பற்றிச் சாதாரண மனிதர்களுக்கும் புரியும் வகையில் சுவையோடு சொல்வது என்பது ஒரு தனிக்கலை.  மறைந்த எழுத்தாளர் ‘சுஜாதா’ ரங்கராஜன் அவர்களுடைய எண்ணற்ற கட்டுரைகளால் ஈர்க்கப்பட்டுக் கணினித் தொழில்நுட்பத்தைப் படிக்க வந்தவர்கள் பலர்.  எளிய தமிழில், மிரட்டலான செய்திகளை, கொச்சைப்படுத்தாமல் அதே நேரத்தில் ஆர்வம் ஊட்டும் வகையில் எழுதினால் சொல்லும் செய்திகள் படிப்போரைச் சென்றடையும். வல்லமையின் வாசகர்கள் அதன் மொழிநடையால் ஈர்க்கப்பட்டுப் பல செய்திகளை புரிந்து கொள்கிறார்கள் இல்லையா.

இந்த மூன்று வரைமுறைகளைக் கொண்டு பார்த்தால் சிறந்த கட்டுரையைத் தேர்ந்தெடுப்பது மிக எளிதாகிறது.  

வருணனின் கட்டுரை இணையத்தின் அடிப்படைத் தொழில்நுட்பங்கள் பலவற்றையும் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். நூலகத்தில் சென்று தேடித் திரட்ட வேண்டியிருந்த பல செய்திகள் இன்று இணையம் ஊடாக நம் விரல் நுனியில் கிடைப்பதைப் பற்றி அவர் சுவையாகச் சொல்லியிருக்கிறார்.  அவரது கட்டுரையின் முழுமையும் நம்பகத்தன்மையும் ஏனைய கட்டுரைகளை விடத் தனித்துக் காட்டுகின்றன.  அவரது மொழிநடையும் இயல்பாக, தெளிவாக, அதே நேரத்தில் வல்லமையின் தன்மையோடு இணைந்து வரும் மிடுக்கோடு இருக்கிறது.

ஹுசைனம்மாவின் கட்டுரையும் வருணனின் கட்டுரைக்கு ஏறத்தாழ இணையாக அமைந்திருக்கிறது.  ஆனால், வருணன் அளவுக்கு அவரது கட்டுரையில் முழுமையான தகவல்கள் இல்லை.  இருப்பினும், இணையத்தில் பாதுகாப்பாக இயங்கத் தேவையான செயலிகளை வாங்க வேண்டியதன் அவசியத்தை அவர் மிகவும் பொறுப்புடன் விளக்கியுள்ளார். ஏனைய கட்டுரைகளை இந்த மூன்று வரைமுறைகளில் பார்க்கும்போது மேலும் முயன்றிருந்தால் நன்றாக அமைந்திருக்கும் என்றே தோன்றுகிறது.

எனவே வருணனின் கட்டுரையைப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கிறேன்.  ஹுசைனம்மாவின் கட்டுரையை சிறப்புப் பரிசுக்குப் பரிந்துரைக்கிறேன்.

 

———————————————————————————————————————————————–

திரு மணி மு.மணிவண்ணன் அவர்களின் பரிந்துரையை ஏற்று ஹுசைனம்மா அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது. ஐக்கியா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திரு வையவன் அவர்கள் ரூ.450 மதிப்புள்ள புத்தகங்களை சிறப்புப் பரிசாக வழங்க இசைந்துள்ளார்கள்.

தலைப்பினை நல்கிய தேவ் அவர்களுக்கும் முதற் பரிசினை வழங்கும் இன்னம்பூரான் அவர்களுக்கும், சிறப்புப் பரிசினை வழங்கும் ஐக்கியா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திரு வையவன் அவர்களுக்கும், தேர்ந்தெடுத்து உதவிய மணி மணிவண்ணன் அவர்களுக்கும் நன்றிகள். வெற்றியாளருக்கு வல்லமையின் மனமார்ந்த வாழ்த்துகள். பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுகள்

மணிவண்ணன் ஓவியம் – சபரீஷ் பாபு

 

முதற்பரிசு வென்ற கட்டுரை

 

 சிறப்புப் பரிசு வென்ற கட்டுரை

 

பதிவாசிரியரைப் பற்றி

11 thoughts on “இணையப் பயன்பாடு – கட்டுரைப் போட்டி முடிவுகள்

  1. பரிசுக்குத் தேர்வுபெற்ற வருணன், ஹுசைனம்மா ஆகியோருக்கு வாழ்த்துகள். தங்கள் திறனும் புகழும் மேலும் வளரட்டும். தொடர்ந்து புதிய ஆக்கங்களை வழங்குங்கள். 

  2. மிகவும் மகிழ்ச்சியும், நன்றிகளும்!!

    திரு. வருணன் அவர்களுக்கும் வாழ்த்துகள். இவரது கட்டுரையை தேர்வாளர் வர்ணித்திருப்பதைப் பார்க்கையில் அக்கட்டுரையை வாசித்துப் பார்க்கவேண்டுமென்ற ஆர்வம் மேலிடுகிறது. வல்லமையில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  3. தோழர் அண்ணாகண்ணன் அவர்களே, தங்களது மனம் திறந்த பாராட்டிற்கும், ஊக்கத்துக்கும் மனமுவந்த நன்றிகள்.

    தோழி ஹுசானம்மா, தாங்களுடைய படைப்பும் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி. வாழ்த்துக்குக்களும் அன்பும்.

    மதிப்பிற்குரிய நடுவர் அவர்களுக்கு நன்றிகள். ஒரு தேர்ந்த வல்லுனரால் எனது படைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து மட்டற்ற மகிழ்வடைகிறேன்.

    தொடர்ந்து எனது கவிதைகளையும், தற்போது இக்கட்டுரையையும் வெளியிட்டு எனது படைப்பூக்கியாய் செயல்படும் வல்லமைக்கும், ஆசிரியர் பவள சங்கரி அவர்களுக்கும் எனது உளம் கனிந்த அன்பும் நன்றிகளும்.

  4. திரு வருணன் , ஹுசைனம்மா இருவருக்கும் என் பாராட்டுகள்.
    நல்வாழ்த்துகள்

  5. செ.இரா.செ. , ஹுஸைனம்மா என்ற பெயரை உசைனம்மா என சொதப்பாதீர்கள். மற்றவர்கள் பெயரை சொதப்புவது அவமதிப்பது ஆகும்.

    விஜயராகவன்

  6. sankirit names have benn tamilised but christians and muslims use only arbic ,urdu and english or sankiritised tamil .our tamil protectors dont dare to question this even devaneya (sankiritised tamil) used only sanskirised tamil . wonder why

    —uday

  7. வாழ்த்தியவர்களுக்கு எனது நன்றிகள்!!

    வன்பாக்கம் விஜயராகவன் அவர்களே!! என் பெயர் முதல்முறை தட்டச்சு செய்யும்போது தவறுவது இயல்பானதுதான். யாரும் வேண்டுமென்றே செய்வதில்லை. உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.

  8. பரிசு பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *