சிரிக்கச் சிரிக்க கீதை – பகுதி 3

2

ஹாஹோ

“எங்கே ஞானக்கண்? எங்கே ஞானக்கண்?”, என்று கேட்டுக் கொண்டே ஒரு புது தட்டில் பட்டுத்துண்டு போட்டு மூடிய விரிப்பை ஏந்தியபடி ஓடி வந்தான் மக்கான்.

“கண் நீயப்பா, ஞானக்கண் தா அப்பா… ஆம்பிராய்ஸ காணலேயப்பா!”, தமாசு பாட்டை எடுத்து விட்டது. காலங்காத்தால கழுதை முகத்தில் முழித்தால் நல்லது என எண்ணி முக்குட்டு வீட்டு ஆத்தா அவசர அவசரமாக அங்கு வந்து சேர்ந்தாள்.

“நான் சொல்லலை அவர் வரமாட்டார்ன்னு, யார் என் பேச்சைக் கேட்கறாங்க?”, என்று சொல்லி விட்டு அவர் வாராமல் இருந்தால், அக்கிராமத்தில் தம் மதிப்பு உயரும் என்று நினைத்தவராய் ஆம்பிராய்ஸின் வராமைக்காகக் காத்திருந்தார் நாத்திக்சாமி.

“சரி நாங்களெல்லாம் அவரு வருவாருன்னு வந்திருக்கோம் நீ எதுக்காக வந்திருக்கே?”, என்றார் பேரறிவு. “நீங்களெல்லாம் ஏமாறுவதைப் பார்க்கத்தான்!”, என்று சட்டெனப் பதில் தந்தார் நாத்திக்.

சரியாய் மணி ஆறடிக்கவும் நாலைந்து ஆட்கள் சகிதம் ஜீப்பில் வந்து இறங்கினார் ஆம்பிராய்ஸ். “அனைவருக்கும் இனிய காலை வணக்கம். தாமதத்திற்கு மன்னிக்கவும். கீதை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் யாருக்கும் தெரியாமல் ஆரம்ப நாளிலிருந்து இதைப் படம் பிடித்து வைத்திருக்கிறேன். உங்களது அனுமதி இல்லாமல் அப்படிச் செய்தமைக்கு, தயவு செய்து ஹாஹோவும் மற்றவர்களும் என்னை மன்னிக்கவும். இதோ இந்தப் பெரிய டிவியில் இதை உங்களுக்குப் போட்டுக் காண்பிக்க வேண்டும் என்று நினைத்தேன். இதை அருகிலுள்ள நகரத்திற்கு சென்று எடுத்துவர கொஞ்சம் காலதாமதமாகி விட்டது. மீண்டும் என்னை என்னை மன்னியுங்கள். அறிவியல் முன்னேற்றத்தினால் இன்று நாம் பெற்றுள்ள இந்த வசதியை அன்றே உங்கள் நாட்டு யோகிகளும் தவ சீலர்களும் பெற்றிருந்தார்கள் என்று புரிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் நேற்று இதைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கவில்லை. இனி உங்களுக்குக் குறுக்கே நான் நிற்க மாட்டேன். உங்களது கீதை உரையாடலை முதல் ஸ்லோகத்திலிருந்து பார்த்து ரசிக்கலாம்!”, என்று ஆம்பிராய்ஸ் சொல்லி முடித்தார்.

“நான் சொல்லலை ஞானக்கண்னுன்னு சொல்றதெல்லாம் புரூடான்னு, பேசுனத வீடியோ ரெகார்ட் பண்ணி வச்சுகிட்டு ரீல் சுத்தறாரு”, யாருக்கும் காதில் விழாமல் சொன்னார் நாத்திக்சாமி.

“நம்ம நாட்டு ஞானிகளோட பெருமையை ஒரு வெளி நாட்டுக்காரன் புரிஞ்சி வச்சிருக்கான், நமக்குப் புரியலை, ஞானசூன்யங்கள்!”, என்றார் பேரறிவு.

“நல்ல விஷயம் செஞ்சிருக்கீங்க அப்புடியே முடிஞ்சா எனக்கு ஒரு நகல் கொடுத்தீங்கன்னா மிகவும் சந்தோஷப் படுவேன்”, என்றார் ஹாஹோ.

“அப்பத் தட்டுல ஒன்னும் கிடைக்காதா?”, என்றான் மக்கான் ஏக்கத்தோடு.

டிவி ஓடத் தொடங்கியது. கூட்டம் ஆர்வத்துடன் கேட்கத் துவங்கியது!

“இன்றிலிருந்து இங்கே நாம பகவத் கீதையை அலசி ஆராயப் போறோம். இங்கே பல்வேறு எண்ண ஓட்டம் உள்ள ஒரு இருபது பேர் கூடியிருக்கோம். இது என்னோட உபன்யாசம் இல்லை. கலந்துதுரையாடல். யார் வேணுமானாலும் அவங்க கருத்த சொல்லலாம். கேள்வி கேக்கலாம். யாரும் எதுக்கும் கோவிச்சிக்கக் கூடாது. பேரறிவு போன்ற ஆழ்ந்த சாஸ்த்திர அறிவுள்ளவர்களும், சமூக அக்கறையுள்ளவர்களும், பக்தி சிரோன்மணிகளும், என்னை வழிநடத்தணும். ஆரம்பிக்கலாமா?”, என்றார் ஹாஹோ.

“எங்கே ராமாயணம் நடந்தாலும் ஆஞ்சநேயன் வந்து கேப்பாரமுல்ல, அதப் பாருங்க ஒரு கொரங்கு ரூபத்துல ஆஞ்சநேயர் வந்துக்கிட்டிருகிறத!”, என்று மக்கான் சொல்லவும், “வாயுகுமாரா!, அனுமந்தா!, ஆஞ்சநேயா!”, என்று குரங்கைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டார் பக்திபழுத்தான்.

“இதப் பாருங்க இதுனாலதான் இத மாதிரி எடங்களுக்கெல்லாம் வர்றதே இல்ல, இங்க பேசப் போறது ராமாயணமும் இல்ல, நம்மூருக்கு குரங்கு ஒன்னும் புதுசும் இல்ல, அதப் போயி மூடத்தனமா சாமி, அனுமார்ன்னுட்டு!”, நாத்திக்சாமி கொஞ்சம் கடுமையாகவே முகத்தை வைத்துக் கொண்டார்.

“கல்லெடுத்து அடிக்காம கன்னத்துலதான போட்டுக்கிறாங்க, மத்த உயிரினங்களை அழிக்காம இருக்க பக்தி உதவியா இருந்தா அது பாட்டுக்கு இருந்துட்டுப் போவுதே!”, என்றார் சமூகன்.

“ஆமாமா, நேத்துக் கூட நம்ம மக்கான் ஒரு ஓணானை புடிச்சி கையில வச்சு மூனு வெரலால தடவிக் கிட்டிருந்தான், என்ன செய்யறன்னு கேட்டதுக்கு ராமரு எல்லா அணிலையும் தடவி குடுத்ததால அதுக்கு முதுகுல மூனு கோடு விழுந்திருக்கு, அப்ப இந்த அணில் மட்டும் வேற ஊருக்குப் போயிடிச்சு போலிருக்கு, பாவமா இருந்திச்சு அதான் நாமளானும் தடவிக் குடுக்கலாமேன்னுட்டுத்தான் செஞ்சிக்கிட்டிருக்கேன்கிறான்! டேய் இது அணில் இல்ல ஓணான்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறான்”, என்றார் தமாசு.

“அப்புடியா மக்கான், தமாசு சொன்னா மாதிரி ஓணானைப் புடிச்சுத் தடவிக் கொடுத்தியா?” என்று கேட்டார் நடுவு.

“இல்ல மாமா அது அணிலுதான் நான் தடவிக் கொடுத்தவுடன அதுக்கும் மூனு கோடு வந்துடிச்சு. அதோ ஓடுது பாருங்க, அந்த அணிலுக்குத்தான் நான் தடவிக் குடுத்தது!”, என்று சொல்லிவிட்டு அணிலின் பின்னால் ஓட ஆரம்பித்தான் மக்கான்.

“ஒங்களுக்கெல்லாம் ஒன்னு தெரியுமா? கிருஷ்ணர் அருச்சுனனுக்குக் கீதை சொல்றப்ப ஆஞ்சநேயர் போர்த் தேரோட கொடியில உட்கார்ந்தபடி பவ்யமா, பக்தி சிரத்தையோட முழுக்கீதையையும் கேட்டுக்கிட்டிருந்தாராம். இராமாயணம் மஹாபாரதம் ரெண்டுலயும் நம்ம ஆஞ்சநேயர் வர்றார்! பீமனும் வாயு புத்திரன், அனுமனும் வாயுபுத்திரன்! அதுனால ரெண்டு பேரும் அண்ணன் தம்பி!”, தனது இதிகாச ஞானத்தை வெளிப்படுத்தினார் பேரறிவு.

“நாங்க கீதையைக் கேட்க ஆர்வமா இருக்கோம், நீங்க ஆரம்பிக்கிறீங்களா ஹாஹோ?”, என்றாள் சாதாரணீ.

“த்ருதராஷ்ட்ர உவாச!”, என்று ஹாஹோ ஆரம்பித்ததுமே, “அட இது கிருஷ்ணர் சொன்ன கீதையில்லையா, திருதராஷ்ட்டிரர் சொன்னதா, அவர் யாருக்கு கீதை சொன்னார்? கீதையையே சொன்னாருன்னா அவரு அப்ப கெட்டவர் இல்லையா?”, இப்படிக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார் அவசரகுமார்.

“கொஞ்சம் பொருங்க குமார், இது கிருஷ்ணர் சொன்ன பகவத் கீதைதான்! அது த்ருதராஷ்டிரரது பேச்சோடுதான் ஆரம்பமாகிறது. இதுல 700 ஸ்லோகம் இருக்கு. 18 அத்தியாயம் இருக்கு. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்வதாக 575 ஸ்லோகங்கள், அர்ஜுனன் சொல்வது 84, சஞ்சயன் பேசுவது 40, ஒரே ஒரு ஸ்லோகம் திருதராஷ்டிரன் சொல்வதாக உள்ளது!”, என்று பொறுமையாக விளக்கினார் பேரறிவு.

“அப்புடின்னா அந்த ஒன்னுதான் இந்த ஒன்னா?”, என்று கேட்டார் தமாசு.

“தர்மபூமியாகிய குருசேத்திரத்தில் கூடி நின்ற என்னவர்களும், பாண்டவர்களும் என்ன செய்தார்கள் சஞ்சயா?, இப்படியொரு கேள்வியோடுதான் பகவத்கீதை ஆரம்பமாகிறது!” என்று முதல் ஸ்லோகத்தின் பொருளை எடுத்துரைத்தார் ஹாஹோ.

“போர்க்களத்தில் சண்டை போடாமல் பேந்தாவா (பளிங்கு விளையாட்டு) விளையாடுவார்கள்? என்ன ஒரு அசட்டுத்தனமான கேள்வி!”, என்று குரலெழுப்பியது தமாசு.

“திருதராஷ்டிரன் இப்படிக் கேட்டதற்கு ஒரு அர்த்தம் உள்ளது!”, என்று புதிர் போட்டு நிறுத்தினார் ஹாஹோ.

“அந்த அர்த்தத்தையெல்லாம் கேட்கத்தானே இங்க கூடியிருக்கோம், சொல்லுங்க சீக்கிரம்”, என்றார் அவசரகுமார்.

“கோடு போடாத இன்னொரு அணில புடிச்சிட்டேன்!”, என்று கத்திக்கொண்டே ஓடிவந்தான் மக்கான். என்ன அதிசயம் அவனது கைகளில் சாம்பல் நிறத்தில் எந்தவிதக் கோடுகளுமின்றி நிஜமாகவே ஒரு அணில் இருந்தது.

“இதையெல்லாம் நான் நம்ப மாட்டேன்!”, என்றார் நாத்திக்சாமி.

“நிஜத்தைத் தொலைத்து விட்டு நம்பிக்கையின்மையில் வாழ்வது ஒரு வாழ்வாகாது!”, என்றார் பேரறிவு.

“இனி இது போன்று புரியாத மொழியில் பேசினால் கீதையை விட்டுவிட்டு சினிமாவுக்குப் போய்விடுவேன்”, என்று மிரட்டினார் நடுவு. “திருதராஷ்டிரன்…”, என்று மீண்டும் ஆரம்பித்தார் ஹாஹோ.

 

(தொடரும்)

 

படத்திற்கு நன்றி: http://bhoffert.faculty.noctrl.edu/REL255/007.Epics.BhagavadGita.html

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “சிரிக்கச் சிரிக்க கீதை – பகுதி 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *