இந்த வார வல்லமையாளர்!

திவாகர்

“அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந்தன்மை வளப்பெருங்காட்சி
ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன;
இன்னுழை கதிரின் துன் அணுப் புரையச்
சிறிய வாகப் பெரியோன், தெரியின்”   

(ஆராயுமிடத்துப் பல உலகங்களின் தொகுதிகளாகிய அண்டங்கள் பல கூடிய பேரண்டங்களான உருண்டைகளின் விளக்கமும், அளவிடற்கரிய தன்மையும், வளத்தினால் பெரிய காட்சியும் ஒன்றுக்கொன்று தொடர்ந்து நின்ற அழகையும் கூறினால். அவை அநேக கோடிகளாக மேற்பட்டு விரிந்துள்ளன. அவையனைத்தும் வீட்டினுள் நுழையும் கதிரவன் ஒளியில் நெருங்கியுள்ள அணுக்களை ஒக்கச் சிறியனவாகும்படி இறைவன் பெரியவனாக உள்ளான்.)

மாணிக்கவாசகரின் தெவிட்டாத திருவாசகத்தில் திருவண்டப்பகுதியின் முதல் ஐந்து வரிகள் இந்த பிரபஞ்சத் தொகுப்பைப் பற்றிய விஞ்ஞான விளக்கத்தை எவ்வளவோ அழகாக சொல்லியது என்று வியந்துள்ளேன். பழையகாலத்திலேயே விண்ணுலகின் அதி அற்புதங்களை அறிந்து வியந்த நம் முன்னோர்கள் அந்த அற்புதத்தைப் பற்றி சிறிதுதான் கோடி காட்டிவிட்டுச் சென்றார்கள்.. மெய்ஞ்ஞானத்தின் ஒரு பகுதியாகவே விஞ்ஞானத்தைக் கண்டார்கள். அதனால்தான் பார்க்கும் அத்தனை விந்தையைக் காட்டிலும் அதை படைத்த இறைவன் பெரியோன் என்றும் எழுதி வைத்துவிட்டுச் சென்றனர். நாம்தான் இந்த வியத்தகு விஷயங்களை கிரகித்துக் கொண்டு அதன் அடிப்படையில் மென்மேலும் முன்னேறவேண்டும் என்பதுதான் முன்னோர்களின் ஆசை.

இன்று விஞ்ஞான முன்னேற்றம் எங்கேயோ போய்விட்டது.. எத்தனையோ கோடிக்கணக்கான விண்ணுலகத்து அற்புதங்களில் நமக்குச் சொந்தமான சூரிய குடும்பத்து விவரங்களை நாம் தெளிவாக அறிந்து வருகின்றோம்.  பிரபஞ்சம் முழுவதும் நம்மால் துல்லியமாக அறிவதற்கு முடியாதுதான். ஆனால் முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார். இன்றைய காலகட்டத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் மேற்கத்தியவர் மட்டுமல்ல, நம்மவர்களும் கொடி கட்டிப் பறந்து வருகிறார்கள். அவர்களின் ஒவ்வொரு விளக்கமும் விண்வெளியைப் பற்றி ஓராயிரம் கதையைச் சொல்கின்றன.. நம் கற்பனைகளும் விரிகின்றன.

ஒற்றைச் சூரிய மண்டலம் போல்
இரு பரிதிக் குடும்பம்,
முப்பரிதிக் குடும்பம்,
நாற்பரிதிக் குடும்ப
ஏற்பாடு பிரபஞ்சத்தில் இயங்கிடும் !
ஒளிமந்தைப் பரிதிகள் சுற்றும்
கோள் குடும்பம் கோடி !
விண்வெளியில் அண்டக்கோள்
எண்ணூறு கண்டாலும்
மித வெப்ப  முடைய
மீறாக் குளிருடைய
நீர்க் கோள் ஒன்றை நிபுணர்
ஆராய வில்லை !

விஞ்ஞானி சி. ஜெயபாரதனின் மேற்கண்ட கவிதையும், கெப்ளர் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது பற்றிய அவரின் நீண்ட கட்டுரையும் இந்த வாரத்தின் ஹை-லைட் என்றுதான் கொள்ளவேண்டும்.

“நாசா ஏவிய கெப்ளர் விண்ணோக்கி, 2012 ஆகஸ்டு மாதத்தில் பூமியிலிருந்து 4900 ஒளியாண்டு தூரத்தில் உள்ள “அன்னப் பறவை விண்மீன் குழுவில்” [Cygnus Constellation of Stars]  சீரமைப்புக் கோள்கள் சுற்றும் ஓர் இரட்டைச் சூரிய ஏற்பாட்டைக் கண்டு வானியல் விஞ்ஞானிகளை வியக்க வைத்தது.   அந்த பரிதி ஏற்பாட்டிற்குக் கெப்ளர்-47 [Kepler-47] என்று பெயரிட்டனர்.” https://www.vallamai.com/literature/26256/

விஞ்ஞானி சி. ஜெயபாரதன் அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமைக் குழுவினர் சார்பாக தேர்ந்தெடுக்கிறோம். அவருக்கு எம் வாழ்த்துகள். இவரது விஞ்ஞான விளக்கக் கட்டுரைகள் நமக்கு அடுத்து வருகின்ற முன்னேற்றங்களை மென்மேலும் தெளிவித்து வரும் என்று விரும்புகிறோம்..

இந்த வாரத்தில் கடைசி பாராவில் இடம்பெறுவது இன்று (16/09/2012) டெக்கான் க்ரானிகல் தினப்பத்திரிக்கையில் இடம் பெற்ற ஒரு முக்கிய ‘செய்தி’தான் – பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒலிம்பிக் நீச்சல்வீரரான ‘ஆக்னெல்’ சமீபத்திய ஒலிம்பிக்கில் இரண்டு தங்கப்பதக்கங்களைப் பெற்ற பின்பு (ஒரு வெள்ளிப்பதக்கம் கூட எக்ஸ்ட்ரா கிடைத்ததாம்) அவரை மணந்துகொள்ள இளம் பெண்களை விட அதிக பட்சமாக ‘ஆண்களும்’ போட்டி போட்டுக் கொண்டு முந்துகிறார்களாம். இந்த இருபது வயதுக்காரரின் ‘பார்டனராக’ (மனைவியாக அல்லது கணவராக) வாய்க்க எந்த ஆணுக்குஅதிர்ஷ்டம் வாய்க்கப்போகிறதோ.. ஒருபக்கம் விஞ்ஞானத்தில் நாம் மிக வேகமாக முன்னேறிக்கொண்டே இன்னொருபக்கம் கலாச்சார விஷயங்களில் எங்கோ தவறிப்போய்க் கொண்டிருக்கிறோமோ.. மாணிக்கவாசகரால் போற்றப்பட்ட ‘பெரியோன்’ தான் பதில் சொல்லவேண்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “வல்லமையாளர்!

  1. மதிப்புக்குரிய நண்பர் திரு. திவாகர்,

    ‘சக்தி எல்லை யற்றது, முடிவற்றது, கூட்டுவது, கலப்பது, பிணைப்பது, வீசுவது, சுழற்றுவது, ஒன்றாக்குவது, பலவாக்குவது, சக்தி குளிர் தருவது, அனல் தருவது, எழுச்சி தருவது, கொல்வது, உயிர் தருவது என்று வசன கவிதையில் சக்தியைப் பற்றி விளக்கிய விஞ்ஞானக் கவி, மகாகவி பாரதியார்.

    ‘சக்தி முதற்பொருள் ‘ என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் பளு-சக்தி சமன்பாட்டைக் [Mass Energy Equation] காட்டிப் பிண்டமும் சக்தியும் ஒன்று எனக் கூறிய பெளதிகக் கவி. பாரதியின் நீண்ட வசன கவிதைகள் அனைத்திலும் அவரது பெளதிக, இரசாயன, உயிரியல் விஞ்ஞானக் கருத்துக்களை எளிதாகக் கூறும் கவித்துவத் திறமையைக் காணலாம்.

    மகாசக்தியைப் பற்றி எழுதிய பாவொன்றில் :

    விண்டுரைக்க அறிய அரியதாய்,
    விரிந்த வான வெளியென நின்றனை,
    அண்ட கோடிகள் வானில் அமைத்தனை,
    அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை,
    மண்டலத்தை அணு அணுவாக்கினால்
    வருவ தெத்தனை, அத்தனை யோசனை தூரம்
    அவற்றிடை வைத்தனை.

    என்று பிரபஞ்சத் தோற்றத்தைக் காட்டுகிறார்.

    இயல், இசை, நாடகம் என்னும் தமிழ்மொழின் முப்பரிமாணத்தை நாற் பரிமாணமாய் ஆக்குவது விஞ்ஞானப் பிரிவு. நமது தமிழ் இதழ்களில் / வலைப் பூங்காக்களில் எல்லாம் விஞ்ஞானப் பகுதி இணைக்கப் பட்டு அண்டவெளிப் பயணங்கள் விளக்கப் பட வேண்டும். அணுசக்தியின் ஆக்கவினைகளையும், அழிவுச் சேதங்களையும் எழுதி வர வேண்டும். அதுபோல் கணனி, மருத்துவம், உயிரியல், இரசாயனம், வானியல், பௌதிக விஞ்ஞானக் கட்டுரைகள் வெளிவர வேண்டும்.

    கடந்த பத்தாண்டுகளாக எனது ஓய்வுப் பணியாக திண்ணையில் தொடர்ந்து எழுத அதன் ஆசிரியர்கள் என்னை மிகவும் ஊக்குவித்தார். அவற்றை எல்லாம் திரட்டி எழுதி எனது அணுசக்தி நூலும்,வானியல் விஞ்ஞானிகள் நூலும் இப்போது வெளி வந்துள்ளன. மற்ற விஞ்ஞானக் கட்டுரைகளை திரு. வையவன் நூல்களாகத் தனது தாரிணி பதிப்பில் வெளியிட இசைந்துள்ளார்.

    இப்போது எனது விஞ்ஞானக் கட்டுரைகளை வல்லமை வாரா வாரம் வெளியிட்டு தொடர்ந்து எழுத என்னைத் தூண்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. வல்லமை ஆசிரியர்கள் இவ்வார வல்லமையாளர் விருதை எனக்கு அளித்து என்னை மேலும் ஊக்குவிப்பதைப் பெரு மதிப்பாகக் கருதி எனது பணிவான நன்றியைக் கூறிக் கொள்கிறேன்.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்.

  2. திரு ஜயபரதன் அவர்கள் எழுதிய பல விக்ஞான கட்டுரைகளை நான் படித்து ரசித்திருக்கிறேன் தவிர அவர் எழுதிய ஒரு புத்தகமும் எனக்கு அவர் அனுப்பிவைத்திருந்தார் விஷயங்களை மிகத்தெளிவாக எழுதுவார் .. பல விஷயங்கள் எனக்கு அதன் மூலம் தெரியவந்தது .அவரது ராமாயணமும் மிகவும் வித்தியாசக்கோணத்துடன் மிகச்சிறப்பாக ஆராயப்பட்டிருந்தது . அவருக்கு என் வாழ்த்துகள்

  3. விஞ்ஞானி சி. ஜெயபாரதன் ஐயா அவர்களுக்கு,

    விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

    இளங்கோ

  4. “மஹாகவி” என்ற பட்டம் பாரதியைத் தவிர வேறு யாருக்கும் பொருத்தமாக இருக்காது, என்று மற்ற கவிஞர்களினால் போற்றப் பட்டவர் பாரதியார். திரு ஜெயபாரதன் அவர்களுடைய எழுத்துக்களில் பாரதியாரின் கனவுகள் பிரிதிபலிப்பதைக் காணமுடிகிறது. சிறப்பான விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதி வல்லமை வார விருது பெற்ற திரு ஜெயபாரதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Leave a Reply to இளங்கோ

Your email address will not be published. Required fields are marked *