பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43 – அ)

4

 

பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43)

எழுத்துத் தமிழுக்கென்று ஒரு கட்டுப்பாடு உள்ளது. எனவே  ‘ லட்டு’, ‘ ராமன்’ என்று பேச்சுவழக்கில் உள்ள சொற்களை எழுதும்போது, ‘ இலட்டு’ ‘ இராமன்’ என்று எழுதுவதால் எந்தவொரு பிரச்சினையும் தோன்றாது. அயல்மொழிச் சொற்களைத் தமிழில் கடன்வாங்கும்போது, தமிழ் அமைப்புக்கு உட்பட்டே கடன்வாங்கவேண்டும் என்பது எனது கருத்து..
-ந. தெய்வசுந்தரம். (தமிழ் மன்றம் மின்குழு விவாதத்தில் கருத்துப் பதிவு)

எந்த மொழியிலும் அதன் சொற்களின் ஒலியமைப்பில் ஒரு கட்டுப்பாடு உண்டு. ஒலியின் வரிசையிலும் ஒலி வருமிடத்திலும் கட்டுப்பாடு வெளிப்படும். மொழியை எழுதும்போது இந்தக் கட்டுப்பாடு பின்பற்றப்படும். பொதுவாக, பேச்சை விட எழுத்தில் கட்டுப்பாடு அதிகமாக இருக்கும். எழுத்தின் கட்டுப்பாட்டு விதிகளைப் பள்ளி மொழியைப் பேசுபவர்களிடம் வலியுறுத்தும். இந்த உலகளாவிய மொழியியல்புக்குத் தமிழ் விலக்கல்ல.

காலப்போக்கில் இந்தக் கட்டுப்பாட்டில் மாறுதல் ஏற்படுவது இயற்கை. மாறுதலுக்கு மொழியின் பரிணாம வளர்ச்சியும் பிற மொழித் தொடர்பும் காரணங்களாக அமையும். பேச்சு மொழியில் ஏற்படும் மாறுதல்கள் எழுத்து மொழியில் காலம் தாழ்த்து ஏற்றுக்கொள்ளப்படும். கலாச்சாரக் காரணங்களால் ஏற்றுக்கொள்ளப்படாமலேயும் இருக்கலாம். பிற மொழித் தொடர்பினால் சொற்கள் தமிழுக்கு வந்துசேரும்போது அதன் உச்சரிப்பு தமிழின் சொல்லொலி அமைப்புக்கு ஏற்ப மாறியிருக்கும். பிற மொழியில் புலமை இல்லாதவர்களிடம் அதிகமாகவே மாறியிருக்கும். tractor என்னும் ஆங்கிலச் சொல்லை ஆங்கிலம் தெரிந்தவர்கள் ட்ராக்டர் என்றும், தெரியாதவர்கள் தேக்தர் என்றும் உச்சரிக்கலாம். முன்னதில் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் ஒலியமைப்பு விதிகள் மாறியிருப்பதைக் காணலாம். எழுதும்போது அவற்றில் ஒன்றைக் குறைத்து டிராக்டர் என்று சிலர் எழுதலாம்.

சொல்லின் முதலில் டகரம் வராது என்னும் விதியைப் பின்பற்றி எழுதினால் சொல்லின் முன்னால் ஒரு உயிர் -இகரம்- சேர்த்து இடிராக்டர் என்று எழுத வேண்டியிருக்கும். இதைப் போலவே லகர ரகரத்தில் துவங்கும் சொற்களும். பிற மொழிச் சொற்கள் அதிகமாகித் தமிழோடு கலந்தபின் சொல்லின் ஒலியமைப்பு முறை மாறும். இந்த மாற்றம் மெதுவாக எழுத்திலும் பிரதிபலிக்கும். புகுந்த புதியதை இலக்கணமும் ஏற்றுக்கொள்ளும். இது பள்ளி முதலான நிறுவனங்களின் மூலம் நிகழ்வதால் மாற்றத்தை நிறுத்திவைக்கும் முயற்சிகளும் எடுக்கப்படலாம். இன்றைய சமூகச் சூழ்நிலையில் பள்ளியாசிரியர், இதழாசிரியர் கட்டுப்பாடில்லாமல் எழுதும் வாய்ப்பைத் தொழில்நுட்பம் தந்திருப்பதால் இத்தகைய நிறுவன முயற்சிகளின் வெற்றி வாய்ப்பு குறைவு.

எழுத்து மொழி பேச்சு மொழியின் எழுத்துப்பெயர்ப்பு அல்ல என்றாலும், எழுத்து மொழியின் மரபுகள் வேறாக இருக்கலாம் என்றாலும் இரண்டுக்கும் இடைவெளி அதிகமாக இருபபது மொழி கற்பதில் இடர்ப்பாட்டை ஏற்படுத்தும். எழுத்து மொழியை உறைந்த மொழி ஆக்கிவிடும், அதன் செயற்கைத் தன்மையை அதிகமாக்கிவிடும். இதனால், டகரம், ரகரம், லகரம் ஆகிய ஒலிகளில் துவங்கும் புதிய சொற்களை அப்படியே எழுதும் புதிய மரபு தோன்றும். இந்த மரபில் இந்த சொற்களை இகரம் முதலான முன்னுயிர் இட்டு எழுதத் தேவை இல்லை.

தமிழுக்கு இவை புதிய சொற்கள்; புதிய ஒலியமைப்பை அறிமுகப்படுத்தும் சொற்கள் என்பதற்கு மேலாக, இகரமோ உகரமோ அகரமோ சொல்லின் முதலில் சேர்த்து எழுதுவதற்கு வேறு காரணங்கள் இல்லை. இந்தச் சொற்களின் முன்னால் காதுக்குப் புலனாகாத உயிரொலி இருப்பதாக ஒலி ஆய்வுக் கருவி காட்டும் என்று நான் நினைக்கவில்லை. உச்சரிப்பில் spade என்னும் ஆங்கிலச் சொல்லை இகரம் சேர்த்து இஸ்பேடு என்று சிலர் உச்சரித்தால் அந்த மாதிரியான சொற்கள் இரண்டு மெய்களுடன் துவங்கும். புதிய சொற்கள் முன்னுயிரோடு உச்சரிக்கப்படுவதாக எடுத்துக்கொண்டாலும், அந்த உயிர் சொல்லின் பொருளில் மாற்றம் ஏற்படுத்தும் ஒலியன் அல்ல. அதனால் அது எழுத்துப் பெறாது. ஒலியனாக உள்ள உயிர் இருந்தால், சந்தியில் வெளிப்படும். சேர்த்துப் பேசும்போதும் எழுதும்போதும் இனிய இலட்டு என்பது இனியவிலட்டு என்றாகும், இனிய இதயம் இனியவிதயம் ஆவது போல. ஆனால், பேச்சிலும் எழுத்திலும் அப்படி ஆவதில்லை. இகரம் இட்டு இந்தச் சொற்களை எழுதுவது மொழியில் நிகழ்ந்துள்ள மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாததே காரணமாகும்.

பிற மொழித் தொடர்பால் தமிழுக்கு வந்துசேர்ந்த சொற்களால் ஏற்படும் சொல்லொலி அமைப்பின் மாற்றங்களை எழுத்தில் ஏற்றுக்கொள்வதில் வரையறை உண்டா என்பது முக்கியமான கேள்வி. ஒன்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்பதும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் தமிழின் வளர்ச்சிக்கு உகந்தவை அல்ல; மொழிகளின் பொது இயல்போடு ஒத்தவையும் அல்ல. இலக்கணத்திற்கப்பால் மொழி சார்ந்த கலாச்சார மரபுகளும் வரையறையைத் தீர்மானிப்பதில் பங்குபெறுகின்றன. தெலுங்கு, கன்னடம் போல், மூலத்திராவிடத்தில் இல்லாத வர்க்க எழுத்துகளைக் கடன்சொற்களால் தமிழ் சேர்த்துக்கொள்ளவில்லை. சொல்லில் இணைந்து வராத மெய்யெழுத்துகளை உயிர் கொடுத்துப் பிரித்து எழுதுவதும் – ப்ரச்னா என்று எழுதாமல் பிரச்சினை / பிரச்சனை என்றும் ப்ரியம், ப்ரிமியம், ப்ளேட் என்று உச்சரிப்பதைப் பிரியம், பிரிமியம், பிளேட்டு / பிளேட் என்று எழுதுவதும்- தமிழின் மொழிக் கலாச்சார மரபுக்கு உதாரணங்கள். சங்கம், யுகம், வோட்டு முதலான சொற்களில் சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துகளாகப் புதிய எழுத்துகளைத் தமிழ் சேர்த்துக்கொண்டுள்ளது. கேக், பந்த், சிங் முதலான சொல்லின் இறுதியில் புதிய எழுத்துகளைச் சேர்த்துக்கொண்டுள்ளது. சர்க்கரை, அர்த்தம் முதலான சொற்களில் குறிலுக்குப்பின் /ரு / அல்லாமல் /ர்/ வருவதை ஏற்றுக்கொண்டுள்ளது. இவையும், பழைய இலக்கண விதிக்கு மாறுபட்டதானாலும், தமிழ் மொழி மரபே.

மேலே சொன்னதைப் போல, ஒரு சொல்லைப் பேசுவதைப் போலவே  எழுதுவதும், அதன் மூல மொழியின் உச்சரிப்பைப் போலவே எழுதுவதும் எந்த மொழியிலும் இல்லை. எழுதும் விதிகளில் மொழியின் மரபுகள் வேறுபடுகின்றன. தமிழின் எழுதும் மரபு காலத்தால் உறைந்துவிடாமல் நெகிழ்வைத் தழுவ வேண்டும். இந்த நெகிழ்வைத் கடைசியில் தீர்மானிப்பவர்கள் புலவர்களோ, ஆசிரியர்களோ, மொழி ஆர்வலர்களோ, இலக்கணவாதிகளோ மொழியியலாளர்களோ அல்ல. தமிழைத் தங்கள் காலத்தின் தேவைக்கேற்ப எழுதும் பல துறை மக்களே ஆவர்.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43 – அ)

  1. பேரா.அண்ணாமலையின் கூற்று “இந்த நெகிழ்வைத் கடைசியில் தீர்மானிப்பவர்கள் புலவர்களோ, ஆசிரியர்களோ, மொழி ஆர்வலர்களோ, இலக்கணவாதிகளோ மொழியியலாளர்களோ அல்ல. தமிழைத் தங்கள் காலத்தின் தேவைக்கேற்ப எழுதும் பல துறை மக்களே ஆவர்” நூற்றுக்கு நூறு பொருந்தும. . . எளிய கூகுள் பரிக்ஷையே போதும் , தற்காலத்தில் இ, அ ர, ல முன் வருவது பெருமளவில் நின்றுவிட்டது என்பதை காண்பிக்க. கூகிளில் ராமன் என்பது , இராமன் என்பதை விட 5 மடங்கு அதிகம் பக்கங்களை தருவது. அதேபோல் லக்ஷ்மணன் இலக்குவனை பல மடங்கு தோற்க்கடிக்கிரது. பத்திரிக்கைகள், புதினம் ஆசிரியர்கள் அல்லது யார் தொழில் ரீதியில் பொது மக்களுக்கு எழுதுகின்றனரோ, அவர்கள் இந்த “நியதியை”ப் பற்றி கவலை கொள்வதில்லை. பொது ஜன நுகர்வுக்கு எழுதாமல் , பழமையையே நிலைநாட்ட துடியாய் துடிப்பவர்கள்தான் இன்னும் இந்த “நியதியை” பின்பற்றுகிறனர். . . வன்பாக்கம் விஜயராகவன்

  2. //இகரம்- சேர்த்து இடிராக்டர் என்று எழுத வேண்டியிருக்கும்.//

    Tractor என்பதைத் திராக்டர் என்றும்கூட எளிதாக எழுதலாம். ஆங்கிலம் தெரிந்தவர் ஆங்கிலத்தில் பேசும்பொழுது “ட்ராக்டர்” என்றோ அந்த டகரங்களை தமிழ் டகரமாக அல்லாமல், நுனிநாக்கு பல்லணை ஆங்கில டகரமாகவோ கூட ஒலிக்கலாம். ஆனால் தமிழில் சொல்லும் பொழுது திராக்டர் என்றோ குறைந்தது “டிராக்டர்” என்றோ, ஏன் தமிழ்ச்சொல்லாகிய இழுவை என்றோ கூடச் சொல்லலாம். கற்றவர்கள் ஒழுக்கம் காக்காததாலேயே இந்தச் சீரழிவுப்போக்கு! தமிழர்களே தமிழ்நாடு என்பதை ஆங்கிலத்தில் சொல்லும் பொழுது ட*மில்நாட்’ என்று கூறுவதைப் பார்த்திருக்கலாம் (இதனை நான் தவறென்று கூறவில்லை. அது ஆங்கிலத்தில் சரியே!). ஆகவே தமிழில் பேசும்பொழுது ஆங்கில ஒலிப்பு வேண்டும் என்பது இல்லை. தமிழ் முறைக்கு முரண் எனில் கூடாது!! அதுவும் நம் மொழியை, மொழி மரபுகளைக் கெடுத்துக்கொண்டு வேற்று மொழி ஒலிப்புகளைத் தமிழில் காட்டத் தேவை இல்லை. நெகிழ்ச்சி எனில் ஏன் இந்த நெகிழ்ச்சியை filosofi என்று எழுதுவதில் காட்டக் கூடாது? தமிழில் எழுதும் பொழுது மட்டும் ஏன் அத்தனை விதிமீறல்?

    //ப்ரியம், ப்ரிமியம், ப்ளேட் என்று உச்சரிப்பதைப் பிரியம், பிரிமியம், பிளேட்டு / பிளேட் என்று எழுதுவதும்- தமிழின் மொழிக் கலாச்சார மரபுக்கு உதாரணங்கள். //

    இங்கும் உங்கள் கருத்தை மறுக்கின்றேன். “ப்ரியம்” என்று ஒலிப்பவர் மிகமிகக்குறைவு. ரொம்பப் பிரியமா இருப்பார் என்பது போல உயிர் சேர்த்துக் கூறுவோரே மிக அதிகம். நுணுகிக்க் கேட்டுப் பாருங்கள் ப்ரியம், ப்ரிமியம் என்று அத்தனை எளிதாகக் கூறவே முடியாது . பிரியம், பிரிமியம், பிளேட்டு என்றே கூறுவர். அந்த இகரமோ உயிரொலியோ சற்று குறுகியதாக இருக்கலாம். ப் என்னும் எழுத்தை ஒலிக்க ஈரிதழ்களை மூடியபின், பின் வாயைத் திறந்துதான் ரி/ளே ஆகியன கூற முடியும் ? அங்கே நுண்ணிதாகக் கட்டாயம் உயிரொலி வந்தே தீரும். உயிரொலி சேர்ப்பதால் எளிதாகக் கூறலாம். ஆனால் எல்லாவற்றையும் தாண்டி அதுவே மொழி மரபு என்பதால் கைக்கொள்ளல் வேண்டும் (அறிவுடைய விதியாகவும் இருப்பதால், மேலும் வலுவான காரணம்), அதுவே மொழி இயல்பு. மிகச்சிலரால் மட்டும் அந்த உயிரொலியை மிகச்சிறிதாகக் கூற முடியும் (அறவே இல்லாமல் கூற முடியாது!) என்பதால் அதனை விட்டு மெய்யெழுத்தாக எழுதுவது பிழை! அப்படி எழுதுவது தமிழைக் கெடுத்துச் சிதைப்பது ஆகும். அதே போல இறுதி எழுத்தாக க்,ச்,ட்,த்,ப். ற் ஆகியவற்றை ஒலிக்கவே முடியாது. ஒலி வெளிப்படவே முடியாது. கேக் என்று சொல்லிப்பாருங்கள் கேப் என்று சொல்லிப்பாருங்கள். அடுத்து ஓர் உயிரொலி வந்தால்தான் நிறைவுறும். அந்த வல்லின எழுத்துகளின் ஒலியும் வெளிப்படும்!

    கூகுள் தேடலின்வழி வருவன காலத்தால் மாறுபடுவன. இப்பொழுது இணையத்தில் எழுதுவோர்கள் ஒரு சிறு பகுதியினரே. கூகுள் முடிவுகளைக் கொண்டு இது சரி அது சரி என்று கூறுதல் இயலாது. 0.1% கூட இல்லாத மக்களில் பெரும்பான்மை சிறுபான்மையும் பார்க்க முடியாது!

    //தமிழைத் தங்கள் காலத்தின் தேவைக்கேற்ப எழுதும் பல துறை மக்களே ஆவர்.//

    உண்மை. ஆனால் பாருங்கள் எந்த அளவுக்கு மொழி வழக்கில் ஒழுக்கங்கெட்டவர்களாக நாம் இருக்கின்றோம் என்று. ஆங்கிலத்தில் New York என்னும் நகரத்தின் பெயரை எல்லோரும் ஒரு விதமாகத்தானே எழுதுகின்றார்கள்? ஆனால் இந்தியாவின் தலை நகரான புது தில்லியை எப்படியெல்லாம் எழுதுகின்றார்கள்? புது தில்லி, நியூ டில்லி, நியூ டெல்ஹி, நியூ டெல்லி. ஐதராபாது என்பதை ஐதராபாத், ஹைதராபாத், ஹைட்ராபாத், ஹைதராபாத்து, ஹைட்ராபேட் என்று பல்வேறு விதமாகச் சீரற்ற முறையில் எழுதுகின்றனர். தமிழ் மொழியில் எழுதும் பொழுது சில அடிப்படை விதிகளையும் ஒழுக்கங்களைக் கடைபிடிக்க வேண்டும் என்பதே கூடாது என்று சில சிதைப்பாளர்கள் கூறுவதும் தங்கள் விருப்பப்படி எழுதுவதாலுமே பெரும் குழப்பம்.

  3. செல்வா ஐதராபாது என்பதை ஐதராபாத், ஹைதராபாத், ஹைட்ராபாத், ஹைதராபாத்து, ஹைட்ராபேட் என்று பல்வேறு விதமாகச் சீரற்ற முறையில் எழுதுகின்றனர் என கூருவது வேடிக்கையாக உள்ளது. கூகிளில் போட்டால் செல்வாவின் “சீருள்ள” ஐதராபாது 4 பக்கங்களை கொடுக்கிறது. ஹைதராபாத் 5 லக்ஷம் பக்கங்கள் மேல் கொடுக்கிறது. ஊடகங்களும் புஸ்தகங்களும் ஹைதராபாத் எனத்தன் எழுதுகிரன. செல்வா தன் தனிக்கருத்துகளையே “சீரான” தமிழ் என்பதும், பொது வழக்கங்களை “சீரற்ற” தமிழ் என்பதும் நகைப்பிற்க்கு உரியது . இதிலிருந்து யார் தமிழை குலைக்கின்றனர் என தெரியுது. .

    ஹைதராபாத் என்பதுதான் written standard தமிழ் வன்பாக்கம் விஜயராகவன்

  4. பேராசிரியர் அண்ணாமலை, ஆங்கிலத்திலே New York என்பதில் உள்ள முதற்சொல்லை ˈnyü அல்லது njuːஎன்றுதானே ஒலிக்கின்றார்கள் அப்பொழுது Nyoo York என்றோ Nyu York என்றோ எழுதலாம் என்று அவரவர் விருப்பம் போல் எழுதலாமா? ஏற்பார்களா? தமிழில் பிரியம், பிரிமியம், பிளேட்டு என்று ஒழுக்கமாக ஒரே சீராக எழுத வேண்டும் என்று கூற வேண்டிய பேராசிரியர்களே, சீர்குலைக்கக் கூறினால், சீர்குலைப்பவர்களை ஆதரித்துப் பேசினால் என்ன சொல்ல முடியும்?!

    பாலகுமரன் என்னும் புகழ்பெற்ற எழுத்தாளர் ஐதராபாத்தை ஹைதராபாத்து என்று சரியான ஈற்றெழுத்துகளால் எழுதுகின்றார்.
    (பார்க்க: http://balakumaranpesukirar.blogspot.ca/2008/07/blog-post.html
    “ஹைதராபாத்து நகரிலிருந்து வெகு தொலைவில் உள்ள பிலிம்சிட்டியில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டாலும், நேரம் கிடைக்கும்போது ஹைதராபாத்திற்கு வந்து ..”)
    ஆனால் செயமோகன் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் ஹைதராபாத் என்று தவறான ஈற்றெழுத்துகளுடன் (ஒலிக்கவே முடியாத ஈற்றெழுத்துகளுடன்) எழுதுகின்றார்கள். தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தின் 34-தொகுதி கலைக்களஞ்சியத்தில், சீர்மைகள் பல பேணப்படவில்லை எனினும், ஐதராபாது என்றாவது சரியாக எழுதியுள்ளனர். தெலுங்கு மொழியில் హైదరాబాదు (ஹைத³ராபா³து³). தமிழில் ஐதராபாது.

    ஆங்கிலத்தில் Nyoo Yaark, Nyoo York, Nyu York என்று கண்டபடி எழுதிப் பாருங்கள்!
    ஆங்கிலத்தில் but, put என்கிறோமே, அதனால் foot என்பது போல put என்பதை poot என்று எழுதலாம். அப்படித்தானே ஒலிக்கின்றோம் அது இது என்று சொல்லிப்பாருங்களேன். தமிழ் என்றால் கிள்ளுக்கீரை! எந்த ஒழுக்கமும் பேணவேண்டாம். அப்படித்தானே?

    //எழுத்தின் கட்டுப்பாட்டு விதிகளைப் பள்ளி மொழியைப் பேசுபவர்களிடம் வலியுறுத்தும். இந்த உலகளாவிய மொழியியல்புக்குத் தமிழ் விலக்கல்ல.//

    அப்படியா ? மதிப்போடேயே கேட்கின்றேன், எங்கே உங்கள் புலமையை filosofi என்றும், Nyoo York, Nyoo Yaark என்றும் இன்னும் பலவிதமாகவும் எழுதிக்காட்டுங்களேன்?!! மொழியியல்பு இல்லை ஐயா, சீர்குலைப்பை, அறியாமையை, ஒழுக்கமின்மையை முன்னிறுத்துவது!! (அறிவியல், மொழியியல்பு என்னும்படியெல்லாம் பார்த்தால் தமிழ் முறைகளே வெல்லும். வன்திரிப்பையும் நுண்ணரசியலையும், மொழிக்கெடுப்பையும் அறிவின்மையையும் ஒழுக்கமின்மையையும், நேர்மையின்மையையும் முன்னிறுத்தினால் நீங்கள் குறிப்பிடும் திரிப்பு வாதம், புரட்டு வாதம் வெல்லும்).

    செல்வா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *