திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-15)

0

விஜயகுமார்

அர்த்த ஜாமம் – இரவு மணி ஒன்றரைக்கு அலாரம் வைத்து எழுந்த ஒரே கூட்டம் நாங்களாகத்தான் இருக்க வேண்டும். அதுவும் முதல் நாள் மலை ஏறிய களைப்பில் அந்த மர லாட்ஜில் குளிருக்கு அடக்கமாகக் கீழே ஒரு கம்பிளி மேலே ஒரு கம்பிளி என அடை காக்கும் அம்மாவின் அரவணைப்பில் இருந்து வெளியே வர மறுக்கும் பறவைக் குஞ்சைப் போல மனமில்லாமல் வெளியே வந்தோம். எங்கும் கும்மிருட்டு, வெட வடக்கும் குளிர், அருகில் பலர் வின்ட் சீட்டர், ஏறுவதற்கு ஸ்பெஷல் ஹைக்கிங் குச்சி என்று தட புடலான ஏற்பாடுடன் இருந்தனர். நானோ, சரியான குளிர் ஆடைகள் இல்லாமல், கொண்டு வந்த ரெண்டு டி ஷர்ட், அதற்கு மேலே ஷர்ட் என்று நான் மட்டும் வயற்காட்டு வைக்கோல் பொம்மை போல இருந்தேன். ஒரே ஒரு நல்ல விஷயம், இதற்கு மேல் சிகரத்துக்குச் சென்று உடனே திரும்பிவிட வேண்டும் என்பதால் முதல் நாள் போல முதுகில் எதையும் தூக்கிச் செல்ல தேவை இல்லை. சரியாக இரண்டு மணிக்குக் கிளம்பினோம்.

எங்கும் ஒரே இருட்டு. தலையில் மத்திய பிளாஷ் லைட் வெளிச்சம் பளீர் என்று புறப்பட்டாலும் இரண்டு மூன்று அடியில் இருட்டில் மறைந்தது. முன்னால் செல்லும் நண்பரை அந்த ஒளியில் வைத்துக்கொண்டு விடு விடு என்று நடந்தேன். சற்றுத் நேரத்தில் பாதை கொஞ்சம் கடினமானது. அந்தக் குளிரிலும் வியர்வைத் துளிகள் வந்தன. சற்றுத் தொலைவில் திருப்பதி மலை ஏறும்போது கடைசிப் பாதியில் ( முழங்கால் முடிச்சுப் பாதி) கோபுர விளக்குகள் தெரியும், அதே போல செங்குத்தாகப் பல விளக்குகள் தெரிந்தன. அவை என்ன என்ற குழம்பிக்கொண்டே அருகில் சென்ற போது தான் அந்த விளக்குகள் மெல்ல மெல்ல மேலே நகர்வதும் தெரிந்தது. ஆத்தாடி, இப்படிச் செங்குத்தான பாறையெல்லாம் ஏற வேண்டுமா? அதுவும் இரவு இரண்டரை மணிக்கு? எவ்வளவோ பண்ணிட்டோம்.. என்று ஒரு அசட்டுத் தைரியத்தில் கயிறாய் பிடித்துக் கொண்டு மேலே ஏறத்துவங்கும் போதே தோள்பட்டைகள் அட்டெண்டன்ஸ் கொடுக்கத் துவங்கின. பாதி வழியில் கட் அடித்து விட்டு எஸ் ஆக முற்பட்டன. அந்தரத்தில் வவ்வால் போலத் தொங்கும் பொது, அதுவும் மேலும் கீழும் பலர் ஏறும் போது – வேறு வழில்லாமல் முக்கி முனகி அதையும் கடந்தேன்.

மணி நாலு ஆகியது. முன்னர் பக்கத்தில் செடி கோடி, மரம் காலுக்கு அடியில் கொஞ்சம் மணல் என்று இருந்ததெலாம் மாறி எங்கும் ஒரே பாறை. சுமார் எழுவது டிகிரி செங்குத்து – கீழே ஒரு தடிமனான வேலிக்கயிறு போடப்பட்டு இருந்தது. அதைத் தலை டார்ச்சின் வெளிச்சத்தில் வைத்துக்கொண்டே ஏறினோம். சில இடங்களில் அதைப் பிடித்துக் கொண்டு செங்குத்தாக ஏற வேண்டும் – மூன்று மணி நேரம் அந்தக் குளிரில் விடாமல் விரட்டி விரட்டி ஏறச் சொன்னான் மௌன்டைன் கைடு. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துத் தாமதமாகப் போனால் தான் என்ன? படம் நியூஸ் ரீல் போடும் போதில் இருந்து பார்ப்பதைப் போல – சிகரத்தைக் கண்டிப்பாக ஆறு மணிக்குள் சென்றடைய வேண்டும் என்பது என்ன அரச ஆணையோ? அப்படி இல்லை, சிகரத்தில் ஆதவனின் முதல் கிரணங்கள் படுவது ஸ்பெஷல், மேலும் எட்டு மணிக்கு மேலே அங்கே இருக்கக் கூடாது என்று சொல்லி விட்டு மளமளவெனச் சென்று விட்டான்.

மணி ஐந்து. பெரும்பாலான நண்பர்கள் முன்னால் சென்று விட்டார்கள். படிக்கும் போதே நாம் கடைசி பெஞ்ச் ..இங்கும் அப்படியே – நம்முடன் நம்மைப் போல பிட் ஆக இல்லாத ஒரு சில கெட்ட ஆப்பிள்கள் தான் மிச்சம். மேல் மூச்சு கீழ் மூச்சு எல்லாம் அடங்கி எதோ மந்திரித்து விட்ட கோழிகளைப் போல தட்டித் தடவி முன்னேறினோம். பாதை இன்னும் கரடு முரடானது. “வாராய் நீ வாராய்” என்ற பாடலைப் பாட யாரும் இல்லையே என்று எண்ணிய போது, கிழக்கில் சற்று வெளிச்சம் வரத் துவங்கியது. எங்கும் ஒரு பனி மூட்டம். அப்போது முன்னால் போன கைடு எதிரில் ஒரு பாறையின் மேலே எங்களுக்காகக் காத்திருப்பது தெரிந்தது. சும்மா உக்காராமல் பிகில் வேறு அடித்துக்கொண்டிருந்தான். நமக்கு வெறுமனே நடப்பபதற்கே நாக்குத் தள்ளும் போது, இவன் அசால்டாக பிகில் அடித்துக்கொண்டே கூட நடந்து வருவது வெறுப்பேற்றுவது போல இருந்தது. சிகரத்தை நெருங்க நெருங்க இன்னும் பல கைடுகள் இதே போல விசில் அடிப்பது வியப்பாக இருந்தது. அதுவரை பேசாமல் வந்த இவர்கள் அனைவருக்கும் திடீரென என்ன சங்கீத மோகம் என்று புரியவில்லை.

முடிவில் சிகரத்தை ஆறு மணிக்குள் சென்றடைந்தோம். கடைசி நூறு மீட்டர் மிகவும் கடினம் – ஏதோ பெரிய வேதாளம் ஒன்று விளையாட்டாய் பெரிய பெரிய பாறைகளை எடுத்து அடுக்கியது போல இருந்தது. இவ்வளவு தூரம் வந்தாயிற்று என்று ஒரு பிரம்மப் பிரயத்தனம் – பகிரதனை மனதில் நினைத்துக்கொண்டு மேலே ஏறி அந்த லோ’ஸ பீக் பலகைக்கு முன்னால் போட்டோ எடுத்தாயிற்று. இதை லோ பீக் என்று எந்த நல்லவன் பெயர் வைத்தானோ! சுமார் நாலாயிரம் மீட்டர் உயரம்!! எட்டுக் கிலோ மீட்டர் நடக்கப் போகிறேன் என்று ஆரம்பித்த பயணம் எட்டு கிலோ மீட்டர் ஏறி நாலாயிரம் மீட்டர் உயரத்தில் முடிந்தது !

அந்த உயரத்தில் அந்த வசீகரக் காட்சி – இயற்கை அன்னையின் எழில் – ஆதவனின் பொன்னிறக் கிரணங்கள், அப்படியே ஒரு ஐந்து நிமிடங்கள் லயித்து நின்றேன். சுற்றிப் பார்த்து விட்டு, சற்றுக் கீழே பார்க்கும் போது. ஏதோ கால்களில் ஒரு நடுக்கம். ஏறிய களைப்போ என்று எண்ணுகையில், வெளிச்சம் நன்றாக வர – இறங்க வேண்டிய பாதை எதிரில் தெரிந்தது. ஏறும்போது இருட்டில் – நிஜமாகவே குருட்டுத் தைரியத்தில் ஏறியாச்சு!! இப்போது வெளிச்சத்தில் அதல பாதாளம் – கருப்புப் பாறை கம்பளம் விரித்தாற் போல கிடுகிடு பள்ளம். வழுக்கி விழுந்தால் பிடித்துக்கொள்ளவோ தடுக்கவோ ஒரு மரம் செடி கூட இல்லை. முன்னால் சென்றவர்கள் அதற்குள் இறங்கத் துவங்கி விட்டனர் – தொலைவில் எறும்பு போலக் காட்சியளித்தனர். நமது கைடு இன்னும் பிகில் அடித்துக்கொண்டே இறங்கத் துவங்கி விட்டான். அந்தப் பாதாளத்தை வெளிச்சத்தில் பார்க்கும் போது விட்டுச் சென்ற தாத்தா பாட்டியெல்லாம் தெரிகிறார்கள். கைகளும் கால்களும் டைப் அடிக்க …. வயிறு கலக்கியது.

அப்போது தான் புரிந்தது. இன்று பெண்டு கழட்டப் போறாங்க என்று. ஒரே பாய்ச்சலில் இரவுக்குள் கீழ் இறங்க வேண்டும். இறங்குவது சுலபம் என்று எண்ணி அரை மணி இறங்கியதும்தான் அது ஏறுவதை விடக் கடினம் என்று புரிந்தது. சற்று இளைப்பாற அமர்ந்தால் நோ நோ என்று ஆடு மாடு விரட்டுவதைப் போல கைடு விரட்டினான். ஏம்பா உனக்கு இந்த அவசரம் என்று கேட்கும்போது தான் அவன் அந்தத் திடுக்கிடும் தகவலைக் கூறினான்.

அந்த மலை மிகவும் பயங்கரமானது என்றும், காலையில் சிகரத்தில் வரும் பனி மூட்டம் (பொதுவாக எட்டு மணிக்கு மேலே வருமாம்) பல மணி நேரம் விலகாது என்றும், அதில் சிக்கி வழி தவறினால் கண்டிப்பாக யமலோகம் தான் என்றும், அங்கே பல முன்னோர்களின் ஆவிகள் வசிப்பதாகவும், அவற்றுக்கு இந்த டிஸ்டர்பன்ஸ் பிடிக்காது என்றும் – அவற்றை ஆசுவாசப் படுத்தவே அவர்கள் அனைவரும் அவற்றுக்கு விசில் அடிப்பதாகவும் சொன்னான். அவன் உண்மையைச் சொன்னானோ, இல்லை நம்மைப் பயமுறுத்தி இன்னும் சீக்கிரம் நடக்க வைக்கச் சொன்னானோ – நடை விரைவானது.

மதியம் பதினோரு மணிக்கு பேஸ் கேம்ப் வந்தடைந்து – ஹெட் லைட் திரும்பக் கொடுத்து விட்டு, மூட்டைகளை மீண்டும் எடுத்துக்கொண்டு மேலும் நடக்க வேண்டும். என்னால் முடியவே முடியாது, நீ முன்னால் போ, நான் ஒரு அரை மணி கண் அசந்து விட்டு வருகிறேன் என்று சொல்லி அவனை அனுப்பி விட்டு ஒரு சிறு தூக்கம் போட்டேன். மதியம் ஒரு மணிக்கு எழுந்து பார்த்தால் யாருமே இல்லை, நான் மட்டும் தனியாக இருக்கிறேன். உடனே விரைந்தேன்.

சுமார் நான்கு மணிக்கு அவன் ஒரு பாறையில் எனக்காகக் காத்து இருந்தான். மிகவும் பரபரப்புடன் இருப்பதனை உணர்ந்தேன். எனது மூட்டையை வாங்கிக்கொண்டு அவன் இறங்கினான். இருவருமாக அரை மணி பேசாமல் இறங்கியபோது – திடீரென அடை மழை. சற்றுத் நேரத்தில் பாதை இருந்த இடம் ஒரு சிறு ஆறு போல மாறி நீர் ஓடியது. அதில் இறங்கும்போது கால் வழுக்கும் அபாயம் – இன்னும் அரைமணி மழை நீடித்தது. ஒரு பெரிய மரத்தின் அடியில் ஒதுங்கினோம். அருகில் காட்டாற்று வெள்ளம் போல மழை நீர் ஓடும் சத்தம் கேட்டது. கைடு மீண்டும் மீண்டும் தனது கைக் கெடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தான். அடுத்த சவாரிக்கு நேரம் ஆகி விட்டதோ என்று நினைத்தேன்.

மணி சரியாக ஐந்தரை. நேரத்துக்கு நான் கிளம்பி நடுவில் மழை வராமல் இருந்திருந்தால் இந்நேரம் மலையை விட்டு இறங்கி இருக்க வேண்டும். ஆனால் இப்போது இன்னும் ஒரு மணி நேரமாவது இறங்க வேண்டும். அப்போது திடீரென சினிமாத் தியேட்டரில் படம் போடும் போது விளக்குகள் அணைவது போல வெளிச்சம் தடால் எனப் போய் விட்டது. எங்கும் ஒரே இருட்டு – மலையடி என்பதால் அடர்ந்த காடு, அருகில் காட்டாறு ஓடும் சத்தம் வேறு. எதிரில் நிற்பவரின் முகமே தெரியவில்லை. கைடு, இப்படி மேலே செல்ல முடியாது (பேஸ் காம்பில் டோர்சுகளை வேறு திரும்ப கொடுத்து விட்டோம்!!) – இரவு இங்கேயே இருக்க வேண்டியது தான். இல்லை நாம் வரவில்லை என்று தெரிந்து காப்பாற்ற வனத்துறை அதிகாரிகள் வருவார்கள் என்றான்.

இது என்னடா சோதனை என்று இருக்கும் போது – நோக்கியா மற்றும் ப்ளாக் பெர்ரி உதவிக்கு வந்தனர். அந்த அடர்ந்த காட்டில் சிக்னல் கிடையாது. எனினும் கும்மிருட்டில் அந்த செல் போன் டிஸ்ப்ளே வெளிச்சம் நன்றாகவே இருந்தது. அதைக் கொண்டு மெதுவாக நடக்கத் துவங்கினோம்.. சற்றுத் நேரத்தில் எங்கள் கண்களும் அந்த இருட்டுக்குப் பழக்கப்பட்டு ஒரு வழியாக எட்டு மணிக்கு மலையை விட்டு இறங்கினோம். அங்கே இரண்டு ஜீப்புகளில் வனத்துறை அதிகாரிகள் இன்னும் பத்து நிமிடம் தாமதம் ஆனால் எங்களை மீட்கத் தயாராகிக் கொண்டு இருந்தனர்…. ஒரு வழியாக அவர்களுக்கு நன்றி கூறி கோட்டா கினபாலு ஏறியதற்குச் சான்றாக ஒரு செர்டிபிகேட்டையும் பெற்றுக்கொண்டு பிழைத்தது பெரியவர்கள் செய்த புண்ணியம் என்று தோன்றும் முன்னரே காரிலேயே உறங்கி விட்டேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *