பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (44)

3

 

தொல்காப்பியம் எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி பற்றிய பகுதியில் பின்வருமாறு விளக்குகிறது:

 முதலீர் எண்ணின்முன் உயிர்வரு காலைத்

தவலென மொழிப உகரக் கிளவி

முதனிலை நீடல் ஆவயினான (தொல். எழுத்து 455)

முதலிரண்டு (ஒரு, இரு) எண்களுக்குப்பின் உயிர் வந்தால் (நிலைமொழி ஈறான) உகரம் கெடும் என்றும் அத் தருணத்தில் அதன் முதலெழுத்து நீளும் என்றும் இந் நூற்பா மிகத் தெளிவாகக் கூறுகிறது. நூற்பாவின் தொடக்கத்திலேயே, ‘முதலிரு என்ற சொல்’, ‘முதலீர்’ என்று வந்து ‘உடம்பொடு புணர்த்தல்’ என்ற உத்திப் படி, நூற்பாவுக்கு எடுத்துக்காட்டை நூற்பாவிலேயே தருகிறது. இந் நிலையில், இது “பழைய இலக்கண நூல்களில் இல்லாத ஒன்று” என்று அண்ணாமலையார் கூறுவதை எப்படி ஏற்பது?

செ. சீனி நைனா முகம்மது, தமிழ் மன்ற மின்குழுவைச் சேர்ந்த செ. இரா. செல்வக்குமார் வழியே. இவருடைய முழு எதிர்வினையை http://groups.google.com/group/tamilmanram/browse_thread/thread/0a54034d540291b6?hl=ta_US# இல் பார்க்கலாம்.

நான் என் முந்தைய பதிலில் கூறியபடி, தமிழில் ஒரு சொல்லுக்குக் குறில், நெடில் வேறுபடும் மாற்று வடிவங்கள் உண்டு. பெயர் என்ற சொல்லின் இடையில் உள்ள மெய் கெட்டு பெஅர் என்றாகும்போது, இரண்டு உயிர்கள் ஒரு சொல்லில் அடுத்தடுத்து வராது என்ற சொல்லின் ஒலியமைப்பு முறைமைப்படி, குறில்கள் இரண்டும் சேர்ந்து பேர் என்று நெடிலாகின்றன. பெயர், பேர் என்ற மாற்று வடிவங்கள் தோன்றுகின்றன. இந்த மாற்று வடிவங்கள் சந்தியால் தோன்றவில்லை. மெய் கெடாமல் உயிர் கெட்டுக் குறில், நெடில் வேறுபடும் மாற்று வடிவங்களும் உண்டு. இவற்றை எண்ணுப்பெயரடைகளில் காணலாம்: ஒரு – ஓர், இரு – ஈர், எழு – ஏழ். எழுகடல், ஏழ்கடல் என்னும் தொகைகளில் உள்ள மாற்று வடிவங்கள் சந்தியால் வந்தவை அல்ல.

 

இந்த மாற்று வடிவங்கள் சந்தியாலும் வரும். அதாவது, சொல்லின் இறுதியில் உள்ள உயிர் சந்தியால் கெட்டு, முதலில் உள்ள குறில் நெடிலாகும். மேலே சுட்டிய தொல்காப்பிய நூற்பா சந்தியால் தோன்றும் மாற்று வடிவங்களைப் பற்றியது. தற்கால இலக்கண ஆசிரியர் கூறும் ஒரு, ஓர் பயன்பாட்டு விதி, அதாவது அடுத்து வரும் பெயரின் முதலில் உள்ள எழுத்தைப் பொறுத்து ஒரு, ஓர் என்னும் எண்ணுப்பெயரடைகளைப் பயன்படுத்த வேண்டும் என்னும் விதி, சந்தி சாராதது; சொற்களின் தொடரைப் பற்றியது. இது பழைய இலக்கணத்தில் இல்லை என்பது என் கருத்து.

 

தொல்காப்பிய நூற்பா தருவது புணர்ச்சி விதி. உயிருக்கு முன்னால் முற்றியலுகரம் கெடாது. தெரு + ஏ = தெருவே. ஒரு, இரு, எழு என்னும் சொற்களில் உள்ள முற்றியலுகரம் கெடும். ஒரு ஆயிரம் = ஓராயிரம்; ஒருவாயிரம் அல்ல. முற்றியலுகரம் கெடுவதைச் சொல்லத்தான் இந்த நூற்பா. முற்றியலுகரம் கெடும்போது, என் பதிலில் சொன்னது போல, சொல்லின் ஓசையமைதிக்காக /ஒ/ என்னும் குறில் நெடிலாகிறது. இந்த ஓசையமைதி கட்டாயமாதலால் தமிழ்ச் சொற்களில் குறிலுக்குப் பின் / ர் / வருவதில்லை. கர்த்தர், கர்ப்பம், சர்க்கரை, சர்ச்சை, அர்த்தம் போன்ற ருகரம் இல்லாத சொற்கள் பிற மொழியிலிருந்து பெறப்பட்டவை. இன்று தமிழாகிவிட்ட சொற்கள். இதனால் தமிழில் சொல்லின் ஒலியமைப்பு முறைமை மாறுகிறது; இலக்கண விதியும் அதற்குத் தகுந்தபடி மாறும்.

கட்டாயமானாலும், இந்த விதிப்படி முற்றியலுகரம் கெட்டும் குறில் நெடிலாகாத சில விலக்குகள் உண்டு. தெரு + ஏ = தெருவே. இங்கு முற்றியலுகரம் கெடவில்லை. அதனால் குறில் நெடில் ஆகும் தேவை இல்லை. ஒரு + ஏ = ஒரே என்பதில் முற்றியலுகரம் கெட்டாலும், குறில் நெடிலாகி ஓரே என்று வருவதில்லை. இன்னொரு உதாரணம் அடையாக வரும் அதே (தெரு). இதில் உகரம் கெட்டபின் குறில் நெடில் ஆகவில்லை அது பெயராக வரும்போது உகரம் கெட்டும் கெடாமலும் வரும்: அதே / அதுவே (நல்லது). உகரம் கெடும்போதும் குறில் நெடிலாவதில்லை. தொல்காபியரின் சந்தி விதி (எழு உட்பட) எண்ணுப் பெயரடைக்கு மட்டுமே பொருந்தும்.

ஒருவேளை, ஒருசேர, ஒருமை போன்ற என்னுப் பெயரடையிலிருந்து பிறந்த சொற்களில் உகரம் உயிருக்கு முன்னால் வரவில்லை. அதனால் கெடவில்லை; /ஒ / நெடிலாகும் தேவை ஏற்படவில்லை.

என் பதிலில் கூறியது போல, இக்காலத் தமிழில் ஓராயிரம், ஈரேழ் போன்ற தொகைச் சொல் உருவாகும்போது, தொல்காப்பிய நூற்பா சொல்கின்றபடி, இந்த விதி பின்பற்றப்படுகிறது. இந்த விதி, வாக்கியத்தில் சொற்கள் ஒன்றுக்குப் பின் ஒன்று ஓசை இடைவிட்டு வரும்போது பின்பற்றப்படுவதில்லை. குறில் நெடிலாகும் ஓசையமைதி ஒற்றைச் சொல்லுக்கும், சந்தியால் சேர்ந்த சொல்லுக்குமே பொருந்தும்; சந்தி இல்லாமல் வரும் இரண்டு சொற்களுக்கிடையே இது நிகழாது. இது தவறான விளக்கம் என்றால், தொல்காப்பியரே தன் விதியைப் பின்பற்றவில்லை என்று சொல்ல வேண்டியிருக்கும்..

இந்த விளக்கத்தின்படி, பழைய இலக்கியத்தில் மேலே காட்டிய தொல்காப்பிய விதி இரண்டு தனிச் சொற்கள் தொடரும்போது பின்பற்றப்படவில்லை எனலாம். மெய்யெழுத்துக்கு முன் எண்ணுப் பெயரடையின் நெடில் வடிவம் (ஓர்), குறில் வடிவம் (ஒரு) ஆகிய இரண்டும் வருகின்றன. தொல்காப்பியத்திலும் வருகிறது. ஓர் வரும்போது உகரம் சந்தியால் கெட வாய்ப்பில்லை; எனவே உகரம் கெட்டு முதல் குறில் நெடிலாக மாறிய மாற்று வடிவம் இது எனலாம். சில எடுத்துக்காட்டுகள்:

மெய் முதல் சொல்லோடு ஒரு: தொல்காப்பியம்: ஒரு மொழி 43.1, ஒரு பெயர் 180.1, ஒரு பொருள் 526.1, ஒரு வினைக் கிளவி 530.1, ஒரு சொல் 535.3; நற்றிணை: ஒரு கோடு 18.9, ஒரு நாள் 328.5

மெய் முதல் சொல்லோடு ஓர்:: தொல்காப்பியம்: ஓர் பக்கம் 991.8; குறுந்தொகை: ஓர் யான் 6,4, ஓர் பெற்றி 28.4: நற்றிணை: ஓர் வாய்ச்சொல் 32.4,  ஓர் போர்வை 310.11

உயிர் முதல் சொல்லோடு உகரம் கெட்ட நெடில் வடிவமான ஓர் மட்டுமே வருகிறது. கீழே உள்ள எடுத்துக்காட்டுகளில் ஓர் அகச்சந்தியின் விளைவு எனலாம். சில எடுத்துக்காட்டுகள்:

தொல்காப்பியம்: ஓர் எழுத்து 43.1, ஓர் அளபு 3.3, ஓர் இடம் 964.2, ஓர் அசை 1316.1, ஓர் இனம் 1429.2; குறுந்தொகை: ஓர் இளம் மாணாக்கன் 33.1, ஓர் ஏர் உழவன்; நற்றிணை: ஓர் ஆன் 37.2, ஓர் எயில் 43.11, ஓர் ஆயிரம் 310.7. தொகையில்

மேலே காட்டிய இலக்கிய வழக்கிலிருந்து, தொடரில் எண்ணுப் பெயரடையின் இரண்டு வடிவங்களும் வரலாம்; சந்தி தேவையான இடங்களில் சந்தி விதி பின்பற்றப்பட்டு, இரண்டாவது சொல்லின் உயிர் நெடிலாகி ஓர் என்ற வடிவம்மட்டுமே வரும் என்பது தெரிகிறது.

இன்றைய தமிழ் இலக்கணத்தில், ஒரு, ஓர் பயன்பாட்டு விதியை இரண்டு சொற்கள் தொடர்ந்து வரும்போது கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும் என்பது பழைய இலக்கணத்தில் சொல்லாத ஒன்று. இந்த விதி சந்தியில் பின்பற்றப்படும் என்பதே பழைய இலக்கணம்.

இக்காலத் தமிழில் ஒரு என்பது உயிருக்கு முன் ஓர் என்றாவது கட்டாயம் இல்லை. விட்டிசைப்பதைக் (phonetic pause) குறிக்க இன்றைய தமிழில் இடம்விட்டு இரு சொற்களை எழுதும்போது புறச்சந்தி பரவலாகத் தவிர்க்கப்படுகிறது. இதன்படி, ஒரு அரசன், ஓர் அரசன் என்று எழுதுவது வழக்கில் உள்ளது. இதில் வரும் இரண்டு எண்ணுப் பெயரடைகளையும் மாற்று வடிவங்கள் என்று கொள்ள வேண்டும்; இரண்டாவதைச் சந்தி மாற்றம் என்று கொள்ளக் கூடாது. சந்தி இல்லாத இடங்களில் ஒரு மன்னன், ஓர் மன்னன் என்று இரண்டு மாற்று வடிவங்களும் வருவதைக் காணலாம்.

புது வழக்குப் பெருகும்போது அதை ஏற்று இலக்கண விதி அமைப்பது தமிழ் இலக்கண ஆசிரியர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்று. சங்கம், சகடம் முதலான சொற்கள் வழக்கிற்கு வந்தபின், நன்னூல் தொல்காப்பியச் சூத்திரத்தை விரித்து, சகரம் சொல்லுக்கு முதல் எழுத்தாக வரும் என்று விதி அமைத்தது. இந்தத் தமிழ் இலக்கண மரபு இக்காலத் தமிழுக்கு வந்துள்ள மாற்றங்களை ஏற்று விதி சொல்ல அனுமதிக்கிறது. நன்னூலின் புதிய இலக்கண விதிகள் எப்படித் தமிழ் இலக்கணத்தையோ தமிழ் மொழியையோ சீர்குலைக்கவில்லையோ அப்படியே இக்காலத் தமிழ் வழக்கின் அடிப்படையில் எழுதும் இலக்கண விதிகளும் தமிழ் இலக்கணத்தையும் மொழியையும் சீர்குலைக்கவில்லை. அப்படி ஒருவர் சொன்னால் அவர் தமிழில் இலக்கண வளர்ச்சி நின்றுவிட்டது என்று சொல்கிறார் என்றே கொள்ள வேண்டும். புதிய விதி மரபிலக்கண அறிவினாலோ மொழியியல் அறிவினாலோ வெளிப்படலாம். இரண்டும் ஒன்றையொன்று மறுப்பவை அல்ல. இரண்டும் மொழியின் வளர்ச்சியை ஏற்பவை.

சிலருடைய பார்வையில், தமிழ் மொழியின்மீது கருத்துக் கொண்டிருப்பவர்கள் தமிழைக் காப்பவர்கள், தமிழை அழிப்பவர்கள் என்று பிரிக்கப்படுகிறார்கள். இந்தப் பிரிப்பு தமிழ் பற்றிய ஒருவரின் மொழிக் கருத்தாக்கத்திலிருந்து பிறப்பது. என்னுடைய பார்வையில், தமிழ் வளர்ச்சியில் கரிசனம் உள்ளவர்கள், கரிசனம் இல்லாதவர்கள் என்னும் பிரிவே உண்டு. தமிழ் வளர்ச்சி பற்றி மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். அவை ஒன்று அழிப்பு, மற்றொன்று காப்பு என்று பார்க்கத் தேவை இல்லை. மொழிக் காப்பும் மொழி வளர்ச்சியும் ஒன்றல்ல என்பது என் கருத்து. தமிழ் உயிருள்ள மொழி; வளரும் மொழி. ‘கெடாமல்’ காப்பதற்காகத் தமிழை உறைய வைத்துப் பனிப்பெட்டியில் வைப்பது அதன் வளர்ச்சிக்கு உதவும் செயல் அல்ல.

முந்தைய வினாவும், விடையும்
 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (44)

  1. பேரா.அண்ணாமலையின் கூற்று “சிலருடைய பார்வையில், தமிழ் மொழியின்மீது கருத்துக் கொண்டிருப்பவர்கள் தமிழைக் காப்பவர்கள், தமிழை அழிப்பவர்கள் என்று பிரிக்கப்படுகிறார்கள். இந்தப் பிரிப்பு தமிழ் பற்றிய ஒருவரின் மொழிக் கருத்தாக்கத்திலிருந்து பிறப்பது”…. இந்த கருத்தாக்கம் தமிழில் மரபான கருத்தாக்கம் இல்லை. 20ம் நூற்றாண்டில் மறைமலை அடிகள், பாரதிதாஸன், தேவநேசன் ஆகிய மூவர்களால் முன் நிறுத்தப்பட்ட கருத்தாக்கம். இந்த கருத்தாக்கம் தமிழுக்கோ , புதிய தமிழுக்கோ ஒரு உதவியும் செய்யவில்லை; மாறாக தமிழின் adaptability யைத்தான் குலைத்தது. .

    …………..
    ம-பா-தே மரபினர் மற்றவர்களை குறை கூருவதைத்தவிர வேறொன்ரும் சாதித்து விடவில்லை. ம-பா-தே கருத்துகளால் ஆங்கிலம் இன்று படித்த தமிழர்களின் முதன் மொழி, முதல் பிழைப்பு மொழி ஆகிவிட்டது தமிழ் கூரும் நல்லுலகம் ம-பா-தே மரபினை முற்றிலுமாக குப்பைத்தொட்டியில் போட்டால் ஒழிய, தமிழ் மறுமலர்ச்சி காணாது..
    .
    வன்பாக்கம் விஜயராகவன்

  2. பேராசிரியர் அண்ணாமலை அவர்களே,

    வணக்கம். உங்கள் மறுமொழிக்கு என் நன்றி.
    உங்கள் மறுமொழி பற்றிய என் கருத்துகளை வைக்கும் முன்
    முதலில் தொல்காப்பிய நல்லறிஞர் கவிஞர் செ. சீனி நைனா முகம்மது ஐயா அவர்கள் தமி மடலில் ஒரு மறுமொழி அனுப்பியிருந்ததைப் பகிர்ந்துகொள்கின்றேன். அந்த மடலைத் தமிழ் மன்றம் கூகுள் குழுமத்தில் இட்டுள்ளேன். அதன் மறைபடி (bcc) ஒன்றை உங்களுக்கும்அனுப்பியுள்ளேன். தமிழ் மன்றத்தில் உள்ள மடலில் தொடுப்பு இதோ:
    http://groups.google.com/group/tamilmanram/browse_thread/thread/90c958201ffd679b#

    என்னுடைய பிற கேள்விகளையும் கருத்துகளையும் அடுத்ததாக தனியாக வே இங்கே இடுகின்றேன்.

    அன்புடன்
    செல்வா
    —————–
    வாட்டர்லூ, கனடா
    அக்டோபர் 1, 2012

  3. செல்வா கொடுத்த சுட்டியை படித்துப்பார்த்தேன்.
    . “தொல்காப்பிய நல்லறிஞர் ” என செல்வாவால் வர்ணிக்கபடும் கவிஞர் நைனா முஹம்மது ஒரு / ஓர் பண்டைய வழக்கைப் பற்றி அபிப்பிராயம் கூரியுள்ளார். அது சிந்திக்கத்தக்கதுதான். அதே சமயம், நைனா முஹம்மது , பேரா. அண்ணாமலை போன்ற மொழியியலாளர்களின் இலக்கண சிந்தனைகளையும், விளக்கவுரை பிரயத்தினங்களையும் புறம் தள்ளூவது விவாதங்களுக்கு அழகோ, ஏற்ப்புடையதோ அல்ல. திரு. முஹம்மதின் பதிலிலுருந்து சில வாக்கியங்கள் வருந்தத்தக்கவை: உதாரணங்கள் : ” புதிய இலக்கணம் என்னும் பெயரால், மொழியியலாளர்கள் செய்துவரும் தமிழ்க்கொடுமை கொஞ்சமா! ” .
    ”மரபிலக்கணப் புலவர்களை மட்டத்தட்டுவதும், மொழியியல் கற்றவர்கள்தான் சரியான இலக்கண விளக்கமறிந்த மேதைகள் என்று பீற்றுவதும் இவரது நோக்கங்களாக இல்லாதிருந்திருந்தால்”.

    .
    ”இவர்கள் வகுப்பது புது இலக்கணம் அன்று; புற்று இலக்கணம்”
    . ”வளர்ச்சி என்ற சொல்லை வசதியாகக் கையாண்டு இவர்கள் தமிழையும் தமிழர்களையும் ஏமாற்றுகிறார்கள்”
    .
    ”இவர்கள் கற்ற புதிய மொழியியலை முதன்மைப் படுத்துவதற்காகவும், மரபுகளையும் மரபிலக்கணத்தையும் அவற்றின் செம்மை கெடுமாறு குழப்புவதும், மரபிலக்கண அறிஞர்களையும் ஆக்கமான மொழிவளர்ச்சிக்கு இயன்றவாறு உழைப்பவர்களையும் பழித்து, அவர்களது நல்ல பணிகளைத் தடுப்பதும் ”.
    . “மிகையான தன்மதிப்பையும் செருக்கையும் கைவிட்டு, மொழிக்கும் இனத்துக்கும் நலம்செய்யுங்கள் என்று அண்ணாமலையாருக்கும் அவரது மொழியியல் கூட்டாளிகளுக்கும் வேண்டுகோள் ”..

    “தமிழர்கள் தங்கள் மொழியைப் போற்றுவதையும் அதன் செம்மைபற்றிப் பெருமைகொள்வதையும் காணப் பொறுக்காமல் அழுக்காறு மிகுந்து அதை இயன்ற வழிகளிலெல்லாம் சீர்கெடுப்பதற்காகப் மறைமுகமான முயற்சிகளைத் திறம்படச் செய்துவரும் கூட்டத்தினரின் வழக்கா?”. ….“if you cannot convince them, confuse them” என்று சொல்லிக்கொடுப்பார்களாம். இந்த உத்தியை அண்ணாமலையார் திறம்படக் கையாள முயன்றுள்ளார்.
    ………….

    இது போன்ற வாக்கியங்கங்ளும், கருத்துகளும் பொழியியலாளர்களுக்கும், குறிப்பாக திரு. அண்ணாமலையாருக்கும் செய்யப்படும் அநீதி ஆகும். மொழியியலின் முதல் குறிக்கோள் மற்றவர்கள் “பிழை”களை திருத்துவது இல்லை என்பது முஹம்மது போன்றவர்கள் உணரவேண்டும். எப்படி மொழியை மக்கள் கையாளுகின்ரனர் என்பதை புறவயமாகவும் , தரவுகளுடனுடன் ஆய்வதே மொழியியலின் முதல் வேலை , அதன் அடிப்படையில்தான் இலக்கணம் எழுகின்றது. பேச்சு மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் தற்கால மொழியியலின் சிறப்பு அம்சம் . அதன் அடிப்படையில்தான் மொழியியலாளர்கள் தன் அபிப்பிராயங்களை செம்மைப்படுத்திக் கொள்கின்ரனர்.
    ……. மேலும் திரு.முஹம்மதின் வாக்கியம் “ ‘வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே’ ” என்பது ஜனநாயகத்திற்க்கு எதிரானது. தமிழ் மொழியை பொருத்தவரை எல்லோர் தமிழழையும் சமதளத்தில் வைத்து எது இலக்கணம் என ஆய்வதுதான் சரி – இதில் உயர்ந்தோர் / தாழ்ந்தோர் என்ற வேறுப்படு இல்லை இதை செல்வா, நைனா முஹம்மது போன்ற மரபு துதியாளர்கள் உணர்ந்தால் நல்லது ..

    வன்பாக்கம் கொமாண்டூர் விஜயராகவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *