தீக்கொழுந்தில் பனித்துளி (அத்தியாயம்-12)

0

முகில் தினகரன்

மைதிலி ஏற்படுத்திய மெகா அதிர்வு சுந்தரைக் கொஞ்சம் கொஞ்சமாய் சாகடிக்க ஆரம்பித்தது. எவ்வளவோ முயற்சி பண்ணியும் அவனால் அதன் பாதிப்புக்களை மறைக்க முடியவில்லை. உடல் துரும்பாய் இளைத்துக் கொண்டே போனது. கன்னக் கதுப்புக்கள் காணாமல் போக, ஒடுக்கு முகம் ஒட்டிக் கொண்டது. கண்களில் நிரந்தர சோகம் வந்து பலவந்தமாய் அமர்ந்து கொண்டு, பார்ப்போரையெல்லாம், “என்ன சுந்தர்.. உடம்புக்கென்ன?…ஏன் இப்படியாகிப் போனாய்?.. ” என்று பரிதாபத்துடன் விசாரிக்கும் நிலைக்கு ஆளானான்.

அவ்வப்போது ஏற்படும் வயிற்றுத் தையலின் வலி ஒரு புறமும், அதை விடப் பெரிய மன வலி இன்னொரு புறமுமாய் அவனை வாட்டி வதைத்தன.

“மடையா.. இப்ப சும்மா வந்து பொண்ணு பார்த்திட்டுப் போயிருக்காங்க…அவ்வளவுதான்!…இதுக்குப் போயி இப்படி அலட்டிக்கறியே!…இன்னும் எத்தனை இருக்கு.. பொண்ணை அவங்களுக்குப் பிடிக்கணும்!…அப்புறம் ஜாதகம் பொருந்தணும்!…அப்படியே ஜாதகம் பொருந்தினாலும் கொடுக்கல் வாங்கல் பேச்சு வார்த்தைல சுமுகம் ஏற்படணும்!…இத்தனையையும் தாண்டித்தானய்யா கல்யாணம்!.. ”

அம்மா சொல்லும் அந்த வார்த்தைகள் தன்னை ஆறுதல் படுத்த மட்டுமே என்பதை உணர்ந்தும் சுந்தரின் மனம் அவ்வார்த்தைகளை ஊன்றிக் கேட்டது.

“டேய்.. இண்ணொண்னு தெரியுமா உனக்கு?…வந்து பார்த்திட்டுப் போன மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஜலகண்டாபுரத்துல ரொம்பப் பெரிய வசதியான குடும்பத்துக்காரங்களாம்!…இதே மாதிரி வெளிய நெறைய வசதியான எடத்திலெல்லாம் பொண்ணுப் பார்த்து வெச்சிருக்காங்களாம்!…எல்லாத்தையும் பார்த்து முடிச்சிட்டு அதுல எது தோதுப்படுதோ அதை முடிக்கப் போறாங்களாம்!…அப்படிப் பார்க்கும் போது நிச்சயமா நம்ம மைதிலிய ஒத்துக்கறதுக்கு வாய்ப்பேயில்லை!…”

கண்களில் ஒரு வித பிரகாசத்துடன் தாயைப் பார்த்தான் சுந்தா;.

“ஆக.. மைதிலி உனக்குத்தான்!.. கவலையே படாதே!…இது நீயும் நானும் எடுத்த முடிவல்ல.. .அந்த சாமி போட்ட முடிச்சு!”

பித்துப் பிடித்தவனைப் போல் திரியும் தன் மகனின் வேதனை ஜூரத்தைக் குறைக்கும் விதத்தில் மனதறிந்து பொய்களை மானாவாரியாய் வீசினாள் லட்சுமி.

அவனுக்கா தெரியாது?… அவள் வாயிலிருந்து வருபவை வெறும் ஆறுதல் வார்த்தைகளே என்பது.

சிரமப்பட்டு சிரித்து, “சேச்சே!.. அதுக்காக நான் கவலைப்படலைம்மா!.. கொஞ்சம் உடம்பு சரியில்லை.. அதான்.. டல்லாயிருக்கேன்!” பொய்யாய் சந்தோஷித்தான்.

அப்போது, வாசலில் நிழலாட,

இருவரும் ஒரு சேரத் திரும்பிப் பார்த்தனர்.

மைதிலி!.

வழக்கமாய் அவளைப் பார்த்ததும் “வா.. மைதிலி!” என்று வாயெல்லாம் பல்லாக வரவேற்கும் லட்சுமி, இன்று சுரத்தேயில்லாமல். “வாம்மா!” என்றாள் எங்கோ பார்த்தபடி.

ஆனால் அந்த வித்தியாசமான வரவேற்பைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத மைதிலி, “விடு..விடு”வென்று உள்ளே வந்தாள்.

அவள் கையில் ஓரங்களில் மஞ்சள் தடவப்பட்ட, திருமண அழைப்பிதழ்.

நேரே லட்சுமியின் எதிரே வந்து நின்றவள். “அடுத்த வாரம் புதன் கிழமை.. பச்சை நாயகி அம்மன் கோவில் மண்டபத்துல எனக்குக் கல்யாணம்!…ரெண்டு பேரும் கண்டிப்பா வரணும்!” என்றாள் கையிலிருந்த பத்திரிக்கையை நீட்டியபடி,

சடாரென்று தலையைத் தூக்கி, அதை வாங்கிக் கொண்ட லட்சுமி இறுகிய முகத்துடன் அவளை ஊடுருவிப் பார்த்தாள்.

“என்னடா இது இவ வந்து அழைப்பு வைக்கறான்னு பார்க்கறீங்களா?…அம்மாவும் அப்பாவும் அழைக்க வருவாங்க.. .இது என்னோட தனிப்பட்ட அழைப்பு.

எதுவும் பேசாமல் சிலையாய் நின்றிருந்த சுந்தரின் கைகளில் பத்திரிக்கையைத் திணித்து விட்டு நாசூக்காய் அங்கிருந்து நகர்ந்தாள் லட்சுமி. இங்கிதம் தெரிந்த தமிழ்த்தாய்;.

அம்மா அங்கிருந்து நகர்ந்ததும், மைதிலியின் அருகில் வந்து நின்ற சுந்தர், “மைதிலி.. என்னோட ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு மைதிலி!…இந்தக் கல்யாணம் முழுக்க முழுக்க உன்னோட சம்மதத்தின் பேர்லதானே நடக்குது?”

“கண்டிப்பா.. அதிலென்ன சந்தேகம்?”

;எப்படி.. மைதிலி.. எப்படி உன்னால..?”

“ப்ச்!..”என்றபடி முகத்தைத் திருப்பி சலித்துக் கொண்டவள், “இங்க பாருங்க!…நீங்க.. உங்க ஒரு சிறுநீரகத்தைத் தானம் பண்ணிட்டு.. ஊனமா நிக்கறீங்க!..”

“ஊனமா?…இது ஊனமில்லை மைதிலி..” அவசரமாய் இடை புகுந்து சொன்னான் சுந்தர்.

“என்னைப் பொறுத்தவரை இதுவும் ஊனம்தான்.!..கை காலு ஊனம்ன்னாக் கூட கல்யாணம் செஞ்சுக்கலாம்.. புள்ளைகுட்டிகளைப் பெத்துக்கலாம்.. வளர்க்கலாம்!…ஆனா.. இது அத விட மோசமாச்சே!”

“அய்யோ.. மைதிலி புரியாமப் பேசாத மைதிலி”

“எனக்குப் புரியாதுங்க!…நான் படிக்காதவதான்!…ஆனா சிறுநீரகம் இல்லாதவனைக் கட்டிக்கற அளவுக்கு முட்டாளில்லைங்க!”

“ஆண்டவா.. இவளுக்கு நான் எப்படிப் புரிய வைப்பேன்?” வாய் விட்டே புலம்பினான்.

“எல்லாம் தலைக்கு மேல போயாச்சு.. இனி புரிஞ்சும் பிரயோஜனமில்லை!…நான் வர்றேன்.. .முடிஞ்சா கல்யாணத்துக்கு நீங்களும் வாங்க!…இல்லைன்னா..அத்தைய மட்டுமாவது அனுப்பி வைங்க!” சொல்லி விட்டு வேகவேகமாய் வெளியேறினாள் மைதிலி.

அவள் செல்வதையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன் அப்படியே சுவற்றில் சாய்ந்து மெல்லச் சரிந்து தரையிலமர்ந்தான்.

காதல்ங்கறது “டவுன் பஸ்ல லேடீஸ் சீட்டுல உட்கார்ந்து பயணம் செய்யறது மாதிரி.. எந்த நிமிஷமும் பறி போகும்!” என்று எங்கோ.. எப்போதோ படித்தது இப்போது ஞாபகத்திற்கு வந்தது.

 

படத்திற்கு நன்றி: http://www.hearttouchingpoetry.com/2012/06/bichar-gaye-hum-donon-anaa-ko-beech.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *