‘நான் ஈ’ கொடுத்த கோக்கோ கோலா

0

விசாலம்

ஆன்மீகத்தில் எப்போதும் ஊறித் திளைத்த  எங்களுக்கு  ஒரு மாற்றம்  தேவையாக இருந்தது.

இந்த  ” நாங்கள்’  யார் என்றால் ? தங்கள்   கடமைகளை முடித்து அப்பாடி என்று மூச்சு விட்டபடி ஒரு சௌகரியமான இடத்தில் வந்து சேர்ந்து நிம்மதி காணும்   தம்பதிகள் எனலாம். அந்த இடம் தான்  கோயம்பத்தூரில்  ‘நானா நானி ‘ என்ற  முதியோர்களுக்கென்று  அமைந்த  தனித்தனி ‘வில்லா”. இங்கு வந்திருக்கும்  தாய்மார்களுக்கு    சமையல்   அறை   பிரச்னை இல்லை.      “ஏன் இன்னிக்கு குழம்புல இத்தன உப்பு”, “இன்னிக்கும் உப்புமா டிபனா” என்று மூஞ்சியைத் தூக்கும் அல்லது  சுளுக்கும்   கணவர்மார்களுக்கு தங்கள் அர்த்தநாரியான மனைவியை இங்கு ஒன்றும் சொல்லமுடியாது. ஏன் என்றால் பொதுவான கிச்சனில்தான் சாப்பாடு. இங்கு எல்லாவற்றையும் மறந்து தம்பதிகளாக சாப்பிடும் வாய்ப்பல்லவா ஏற்படுகிறது.

வெள்ளிக்கிழமை லலிதா சஹஸ்ரநாமம். சனிக்கிழமை விஷ்ணு சஹஸ்ரநாமம்.  வியாழன்  சாயிபஜன். தினமும் கீதை  தவிர வீட்டில் பூஜை என்று தொடர் சங்கிலி போல்  இங்கு வந்திருக்கும்  மாமிகளின்  வாழ்க்கை நகர்ந்ததால்  கொஞ்சம் மாறுதலுக்கு   இவர்கள் மனம் விழைந்தது.     இதைச்சிந்தித்து எல்லா   மாமிகளும் கூடினர்.   இதில் நானும் பங்கு பெற்றேன்.

முதலில்  காமாட்சி மாமி ஆரம்பித்தாள்.

“மங்களா. எனக்கு ரொம்ப போரடிக்க ஆரம்பிச்சுடுத்து. சென்னைல ஆழ்வார்பேட்டைல நான் அத்தனை பிசி. இங்கு வந்து   நேரமே போகவில்லை. எதாவது யோசனை சொல்லேன்.”

“எதாவது படம் போலாமா ?  சொல்லுங்கோ எங்காத்துக்காரர்  புக் பண்ணிடுவார்.”

“ஆமாம்  நான்கூட சென்னைல ஒரு படமும் விடமாட்டேன்.  வீட்டுப்பக்கத்ல தான் தியேட்டர்.” என்றாள் பிரேமா மாமி.

“ஆமாம்  மாமி . எங்கேயாவது போய்ட்டு வரலாம்  இப்ப என்னல்லாம் படம் ஓடறதுன்னு  தெரிமா ?”  என்று பங்கஜம்  கேட்க,

“இருங்கோ நான் டைம்ஸ் ஆப் இண்டியாவில் பார்க்கறேன் … ஆ….. கண்டுபுடிச்சுட்டேன்  ப்ரூக் பீல்டில்   “நான் ஈ” படம் ஓடறது” என்றாள் அகிலா  மாமி.

“ஆமாம்  ஆமாம்  நான் கூட ரிவ்யூ படிச்சேன். ரொம்ப நன்னாயிருக்காம்.”  இது இடையில் புகுந்த மங்களத்தின் குரல்.

“அப்படியா  மார்னிங் ஷோ இருக்கானு  பாரு . சௌகரியமா இருக்கும் “

“இருக்கு மாமி. இந்தப்படம் ரொம்ப நாளா ஓடறது. அதனாலே நேரே போனாக்கூட டிக்கட் கிடைக்கும்.”

“சரி  யார் யார் வரேள் ? ஒரு வேன் வச்சுண்டு போய்விடலாம்,  என்ன சொல்றே விசாலம் ?”

“ரொம்ப சரி மாமி  அத்தனை தூரம் போறதுனாலே போக வர வேன் பேசிண்டு போனால் சௌகரியமாக இருக்கும்  நான் வரேன்.”

“வேறு யார் யார் வரேள்னு சொல்லுங்கோ.  சினிமா பாத்துட்டு  அப்படியே ஒரு இடத்துல  சாட் ஐட்டம் ஒரு வெட்டு வெட்டலாம் “என்று  குழந்தையைப்போல் நான் சொன்னேன்.  எனக்கு சாட் ஐட்டம் என்றால் உயிர்.

“வந்துட்டா எங்க தில்லிக்காரி”என்றபடி  மங்களா என் முதுகைத்தட்டினாள்.  

இப்படியாக கூட்டம் முடிந்து,  மொத்தம்  எட்டு பேர்கள்   படத்திற்கு வர ரெடியானார்கள்.  மாருதி வேனும் புக் செய்தாகிவிட்டது.   போய்ட்டுவர    ரூ 1000 லிருந்து ஆரம்பித்து  ரூ 800 ல் வந்து நின்றது. 

காலை  பூஜையெல்லாம் அவசரமாக முடித்துக்கொண்டு,  காலை உணவையும் அவசரமாக முழுங்கிவிட்டு, சீவி முடித்து சிங்காரித்து  எல்லோரும் வயது நாற்பதுக்கும் கீழாகி, வேனில் அமர்ந்தோம்.  சினிமா நடக்குமிடம்  ஒரு பெரிய மால்.

இந்த மால் ஷாப்பிங்குக்கெல்லாம் கூட ஆத்துக்காரர் வந்தா போச்சு. மஜாவே வராது. அவாளுக்கு பொறுமை பத்தாது. மூஞ்சியிலே சிடுசிடுப்பு, கொஞ்சம் கொஞ்சமாக தெர்மாமீட்டர் போல ஏறும். ஒன்றுக்கு இரண்டா பார்க்கமுடியாது. நாம ரூபாய் நீட்டினாலும் பிரச்சனை அவாள கொடுக்கச்சொன்னாலும்  பிரச்சனை !

வேன் ப்ரூக்பீல்டு வந்தது. எல்லோரும் வேனிலிருந்து இறங்கி கீழே லிப்ட்டில் ஏறப்போனால் அங்கு ஒருவருமில்லை.

“என்னங்க  இங்கு யாராச்சும் இருகாங்களா?”

மெதுவாக ஒருவன் வந்தான்.

“என்னம்மா  என்ன வேணும் ?”

“மேலே நாலாம் மாடிலே படம் ஓடறது,  அதுக்கு போவணுங்க’

“படமா  அப்படியொன்னுமில்லீங்க, இன்னிக்கு மார்னிங் ஷோ கிடையாதுங்க.”‘

“என்ன இல்லையா?  சீ அப்படியொன்னும் இருக்காது.  உனக்கு  ஒண்ணும் தெரியாது.  போன்ல விசாரித்து சொல்லப்பா”

“இல்லீங்க, எங்களுக்கு முதல்லேயே செய்தி வந்துடுங்க”

“சரி சரி நாங்க மேலே போய் பாக்கறோம்.  முதல்ல லிப்டை எடு .”

“லிப்டு இப்போ ஓடாதுங்க.  கரண்ட் இல்லீங்க ”    

இதைக்கேட்ட   உடனேயே   எங்களில் சிலர் இடுப்பைப்பிடித்தபடி நின்றனர்.  நாலு மாடி எப்படி ஏறுவது என்ற பயத்தினால் வலி இன்னும் அதிகமானது போலும்.   

எங்களைப்பார்த்து பரிதாபப்பட்ட ஒருவன்,  சாமான்கள் ஏற்றும் லிப்டை  ஆபரேட் செய்து எங்களை அதில் போக அனுமதியளித்தான்.

அவன்   அம்மா அப்பாவை நன்றாக கவனிப்பான் போலிருக்கிறது.

அப்பாடி மேலே நாலாம் மாடி வந்தாகி விட்டது. அந்த இடத்தில் ஒரு ஈ காகா இல்லை. நாங்கள் தான்  அங்கு நாலாம் மாடியை அலங்கரித்தபடி நின்றோம். ஒரே நிசப்தம். படம் நடக்கும் இடம்போல தெரியவில்லை.  எல்லா இடங்களும் மூடியிருந்தன. எங்கள் குழுவில்  இருந்த  அகிலா மாமி  டிக்கெட் கொடுக்கும் இடத்திற்குச்சென்றாள்.

“என்ன இங்க ஒத்தருமில்லையா? ஒரு எட்டு டிக்கெட் வேணும்  10 –30 க்கு ஷோ. ‘நான் ஈ’ படம்”

” என்ன ‘நான் ஈ’ படமா?’ அது காலை ஷோ கிடையாதம்மா  சனிக்கிழமைதான் காலை ஷோ . இன்னிக்கு  1-30 க்குதான்  ஷோ ஆரம்பம்”

“என்ன மார்னிங் ஷோ இல்லையா? என்ன வெளையாடறீங்களா?  டைம்ஸ் ஆப் இண்டியா பேப்பர்ல பாத்துட்டுத்தான்  வந்திருக்கோம்”

“அதுல கிளியரா காலம்பற டைம் போட்டிருக்கே?   இதோ பாரு   தேதியை.  28 ந்தேதி  பேப்பர்.  நீங்க எங்களுக்கு படம் காட்டத்தான் வேணும்.”

“என்னம்மா  ஒரு எட்டு பேருக்குன்னுட்டு  யாரானாச்சும்   படம் போடுவாங்களா ? இப்ப  ஷோ இல்லம்மா சொன்னா புரிஞ்சுக்குங்க” 

இப்போது எல்லோரும் குரல் கொடுக்கத் தயாரானோம்.  பல குரல்கள் ஒரே நேரத்தில் ஒலித்தன.  சக்திகளின் வலிமை அங்கு தெரிந்தது.

“இது  நியாயமேயில்லை.  நாங்க எத்தன  செலவழிச்சு வந்திருக்கோம் தெரிமா? 800 ரூபாய்.”

“இன்னிக்கி எங்க குரூப்ல ஒத்திக்கி பர்த்  டே  அவளுக்கு ட்ரீட் தான் இந்தப்படம்.      இப்படி ஏமாத்தி விடறயே”

“உங்க மேனேஜரை கூப்பிடுங்கோ.  நாங்க அவரிட்ட பேசறோம்” 

“ஒழுங்கா பேப்பரைப்பாத்துட்டு, அதுபடி வந்திருக்கோம்.  எங்கள  முட்டாளா ஆக்கறீங்களே!”

‘குய்யோமுறையோ’ன்னு எல்லோரும் கத்த,  ஒரு சீனியர் வந்தார்.

“என்னம்மா பிராப்ளம்  ஷேல் ஐ ஹெல்ப் யூ”

“வீ வான்ட்  ஜஸ்டிஸ்”  என்றபடி அகிலா மாமி ஆரம்பத்திலிருந்து எல்லாம் விவரித்தாள்.

“அம்மா நாங்கள் மேனேஜரைக்கேட்டு சொல்றோம். நீங்கள் எந்த பேபர் பாத்தீங்க?”

“டைம்ஸ் ஆப் இண்டியா 28  ஆகஸ்டு”

“நாங்க ஹிண்டு பேபர்ல வாங்கறோம். அதுபடிதான் பாலோ பண்றோம். இருங்க  டைம்ஸ்ல   நீங்க சொல்றபடி இருக்கா ன்னு பாக்கறோம்”

“என்ன இது ரொம்ப டேமேஜிங்கா இருக்கே.  நாங்க என்ன பொய்யா சொல்றோம்?  கொண்டாங்கோ பேப்பரை, அதில நாங்க காட்டறோம்.”

பேப்பர் கொண்டுவரப்பட்டது. எல்லோரும் கூடி அதில் பார்க்க, அதில் மார்னிங் ஷோ  போடப்பட்டிருந்தது. பார்த்த சிப்பந்திகளுக்கு முகத்தில் ஈயாடவில்லை.

“இப்போ என்ன செய்ய போறேள்? எங்களுக்கு ஒரு முடிவு சொல்லுங்க  உங்க மேனேஜர் கிட்ட  பேசுங்க”

அந்த சீனியர்,  மேனேஜரிடம் பேச அவர் “இப்போது நான் பிசி. அங்கு வரத் தயாராக இல்லை  ” என்று பதில் வந்ததாக சீனியர் சொன்னார்.

அது எந்தளவு நிஜமோ என்று தெரியாது.  

பின் நான் அங்கிருந்த சோபாவிலிருந்து எழுந்தேன். பின் அவரிடம் ” உங்க பேரென்ன   ? மானேஜர் பேரென்ன  ?’ என்றேன்.

அவன் பெயர்களைச்சொல்லவில்லை.

“நீங்க  ஏன் பேரைக் கேட்கறீங்க ?”

“நான் பத்திரிக்கையில  இதப்பத்தி எழுதணும், அதான் கேட்டேன்.”

அவன் முகம் கறுத்தது. “உங்களுக்கு இப்ப என்ன வேணும் ?”
 
இப்போது அகிலா   மாமி நுழைந்தாள்.

“தம்பி, ஒன்ணு,  எங்களுக்கு லஞ்ச் ஏற்பாடு பண்ணு  நாங்க  மேட்னி ஷோ  பாத்துட்டு போறோம். ரெண்டு, எங்களுக்கு போக வர டாக்சி செலவைக்கொடு.  மூணு,  எங்களுக்கு காம்பிளிமெண்ட் டிக்கெட் கொடு. ‘

“இதெல்லாம் முடியாது அம்மா, எங்களுக்கு ஹெட்டாபீஸுக்கு  கணக்கு காட்டணும்”

“தம்பி, தப்பு எங்க பேர்ல இல்லையே ?   பேப்பர்ல பாத்துட்டுத்தானே வந்தோம்.”

“என்னம்மா,   நாங்க  ஹிந்துல தான்  விளம்பரம் தர்றோம். நீங்க ஏன் ஹிந்துவைப் பார்க்கல ?”

“நன்னாருக்கே நீ சொல்றது?  டைம்ஸ் ஒரு பேர் பெற்ற பேப்பரில்லையா ? அல்லது  நீ    எங்க படமெல்லாம் ஹிந்துல தான் விளம்பரம் வரும் எங்கேயாவது சொல்லிருக்கியா?”

“அம்மா நாங்க என்ன செய்ய முடியும்  சொல்லுங்கோ?  மேனேஜர் முடிவு எடுத்தாத்தான் உண்டு.”

“அவர் தான் மூஞ்சியைக் காட்டமாட்டேங்கிறாரே ? என்னமோ போ, கிளம்பிய நேரமே சரியில்லை போல. ‘நான் ஈ’   பாத்தமாதிரிதான்.”

“சரி  இத்தனை ரூபாய் செலவு செய்து வந்த எங்களுக்கு ஒரு கோக்கோகோலா. பாப்கார்ன்னாவது கொடுப்பீங்களா இல்லையா?”

“வேறு வழியில்லன்னுட்டு மேட்னி ஷோ பாத்துத்தான் போணும். இத்தன பெரிய தப்பு செஞ்சிட்டு ஒண்ணுக்கும் அசஞ்சு  கொடுக்கமாடேங்கறதுகள்.    இந்தக்கால பசங்களுக்கு வயதானவான்னா மரியாதையே இல்ல!”

இப்படி அவர்களுடன் வார்த்தையாடி களைத்துப்போய் அமர்ந்தாள் அகிலா மாமி. இன்னும்  இரண்டு மணி நேரம் போயாக வேண்டும், அப்போதுதான்  ஈயைப்பார்க்க முடியும்   என்ன செய்ய ?

எல்லோருடைய முகமும் சுண்டைக்காய் போய் சுருங்கிப்போய் இருக்க,  ஏமாற்றம் மிக, என்ன செய்யலாம்   என்று குழு திரும்பவும் கூடியது. 

“ரொம்ப ஸ்டலாக  வீட்டைவிட்டு பிக்சர் பாத்துட்டு வருவோம் ன்னு கிளம்பி விட்டோம்.  முன் வச்ச காலை பின் வைக்க மாட்டோம். படம் பாத்துட்டே போகலாம். இந்த இரண்டு மணி நேரம் மாலில் பூந்து விளையாடலாம். அதான் ஷாப்பிங்க …” என்றாள் மஞ்சுளா.

அங்கிருக்கும் சிப்பந்திகளும்  எங்களை விட்டு தூர விலகிப்போனார்கள்.

எல்லா மாமிகள் கைகளிலும்  இப்போது மொபைல். எல்லோரும் அவரவர் பாணியில்   விஷயத்தை  அவர்களுடைய பதிதேவருக்குத் தெரிவித்தனர். நான் செல் கொண்டு போகாததால் சகாக்கள் மூலம் செய்தி சொல்லச்சொன்னேன்.

“ஏன்னா  நான் சாப்பிட வரமுடியாது  எனக்கு  வெயிட் பண்ணாதீங்கோ!  சினிமா லேட்டா ஆரம்பிக்கிறது, அதனால  நீங்க  சாப்டுடுங்கோ.  நாங்க  வரதுக்கு சாயங்காலம்  ஆயிடும்.” என்று ஒருத்தி சொல்ல  எல்லோரும் அதையே பின்பற்றினார்கள்.

பின் ஆரம்பித்தது ஷாப்பிங்.   எனக்கு இது பிடிக்காத ஒன்று. அதுவும் கூட்டத்தில்  மாலில்   நான் போவதைத் தவிர்ப்பேன். ஆனால், இங்கு அந்த மாதிரி செய்யமுடியவில்லை.  ஒற்றுமையாக எல்லோரும் கீழே இறங்கிப்போக முடிவு செய்தோம்.

நாங்கள் நகரும் படியில் (அதாங்க எஸ்கலேட்டர்)   நின்றபடி   கீழே போய்விட்டோம். பின் பார்த்தால் மீனா மாமியைக் காணோம். ‘எங்க போயிருப்பா இந்த மீனா ?’ என்றபடி கண்களைச்சுழலவிட்டு மேலே பார்த்தால், அங்கு மீனா மாமி படியில் காலை வைக்க பயந்து அங்கேயே நிற்கிறாள். நடுநடுவே  காலைப் படிவரைக் கொண்டு வருவதும், பின் ஆமை தன் தலையை உள்ளுக்குள் இழுத்துக்கொள்வது போல் காலை பின் வாங்கிக்கொள்வதும்… பார்க்க வேடிக்கையாக இருந்தது. சிரித்தால் அந்த மாமி எதாவது நினைத்துக்கொள்ளப்போறாளே என்று சிரிப்பை அடக்கிக்கொண்டோம். முதலிலேயே தெரிந்திருந்தால் நின்று அழைத்து வந்திருப்போம். இப்போ என்ன செய்யலாம் ?

“மாமி,   பயமில்லாமல்   காலை வச்சு கீழே வாங்கோ.  வேறு வழியில்லை  லிப்ட் வேலை செய்யலை.” என்று ஒருத்தி செய்கையாலும்  குரலாலும்   கீழே அழைத்தாள். மாமி அசையவில்லை. இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பரோபகார இளைஞன்  மேலே   வேகமாக நாலுகால் பாய்ச்சலில் பாய்ந்தான். அந்த மாமியின் கையைப் பிடித்து முதல் படியில் காலை வைக்கச்சொல்லி, பின் கீழே அழைத்து வந்தான்.

அப்பாடி, இப்படி ஒரு படலம் முடிந்தது. எப்படியோ  நேரம் போய்   வயிற்றுக்கும்  கொஞ்சம் போட்டுக்கொண்டு  படம் பார்க்கும் நேரம், மேலே வந்து சேர்ந்தோம். கியூவில் நிற்காமலே  எங்களிடத்தில் ஓடி வந்து, எட்டு டிக்கெட்டுகளை ஒருவன்  நீட்டினான். பாவம் எங்கள் கஷ்டத்தை அவன் உணர்ந்திருக்கிறான் போலும்!

அப்பாடி  உள்ளே வந்தாச்சு.   இனி ‘நான் ஈ’ ஐ நிம்மதியாகப்பார்க்கலாம்.    படமும் ஆரம்பித்தது. நாங்கள் சீட்டில் அமர்ந்து ஒரு பதினைந்து நிமிடம் ஆனவுடனேயே ஒருவன்  எங்கள் இருக்கைக்கு வந்தான். அவன் கையில் பெரிய அளவு  எட்டு கோக்கோ கோலாவும் பெரிய அளவு  பாப்கார்னும் இருந்தது. என்னடா  சாப்பிட்டு அரைமணி நேரம்கூட ஆகலையே  என்று நினைப்பதற்குள் எங்கள் கையில் இருட்டில் திணித்துவிட்டுச்சென்று விட்டான். மின்னல் போல் வந்தான்  மின்னல் போல் மறைந்தான். என்ன செய்ய !  அவரவர் சீட்டின் அருகில் அதை வைத்துக்கொண்டோம். இப்படித்தான்  ‘நான் ஈ’ ல கிடைத்தது இலவச  கோக்கோ கோலா! இது இரண்டும் சேர்த்து நூறு ரூபாய்க்கு மேல் ஆகியிருக்கும். ஒவ்வொரு பாப்கார்ன்  எங்கள் வாயினுள்ளே போக, கண்கள் சினிமாவில் சென்றது  ரொம்ப வித்தியாசமான  ஆரம்பம்.

ரொம்பவே வித்தியாசமான கதை . இதுவரைப்பார்த்த படங்களில் ஹீரோ, வில்லன், கதாநாயகி என்று இருப்பார்கள். ஆனால் இந்தப்படத்திலேயோ  ஒரு ஈ யே கதாநாயகன் இடத்தை எடுத்துக்கொண்டு, வில்லனைச் சாக அடிக்கிறது. நல்ல நடிப்பு. கதை தொய்வில்லாமல் ஓடுகிறது. கடைசியில் கொஞ்சம் இழுத்தாலும்,  சில இடம் நம்ப முடியாமல் இருந்தாலும், கதையின் ஆரம்பத்தில் வந்த  வசனங்கள் இதை சரிகட்டி விடுகின்றன. முதல் சீனில் ‘அப்பா கதை சொல்லேன்’ என்று குழந்தை கேட்பதும் அப்பா கதை ஆரம்பிப்பதும்  இதைக் கவசம் போல் காத்து விடுகிறது.

டைரக்டருக்கு என் வாழ்த்துகள் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *