ஹரிகிருஷ்ணன்

                                                                     
                                                                     
                        ஓம் சக்தி!

பாஞ்சாலி சபதம் – முதற் பாகம்

ஓமெனப் பெரியோர்கள் – என்றும்
    ஓதுவதாய் – வினை – மோதுவதாய்
தீமைகள் மாய்ப்பதுவாய் – துயர்
    தேய்ப்பதுவாய் – நலம் – வாய்ப்பதுவாய்
நாமமும் உருவுமற்றே – புந்தி
    நாடரிதாய் – மனம் – தேடரிதாய்
ஆமெனும் பொருள் அனைத்தாய் – வெறும்
    அறிவுடன் ஆனந்த இயல்புடைத்தாய் (1)

பதம் பிரித்து:

ஓம் எனப் பெரியோர்கள் – என்றும்  
    ஓதுவதாய் – வினை – மோதுவதாய்
தீமைகள் மாய்ப்பதுவாய் – துயர்
    தேய்ப்பதுவாய் – நலம் – வாய்ப்பதுவாய்
நாமமும் உருவும் அற்றே – புந்தி
    நாட அரிதாய் – மனம் தேட அரிதாய்
ஆம் எனும் பொருள் அனைத்தாய் – வெறும்
    அறிவுடன் ஆனந்த இயல்பு உடைத்தாய்

குறிப்புகள்:

அ: சொற் பொருள்: ஏதுமில்லை.

ஆ: இலக்கணம்

புந்தி – புத்தி என்பதன் மெலித்தல் விகாரம்

இ: யாப்பு:

இது சிந்துப் பா என்ற வகையில் நொண்டிச் சிந்து என்ற உட்பிரிவைச் சேர்ந்தது.  சிந்துப் பா பெரும்பாலும் நாட்டுப்புறப் பாடல்களில் பயில்வது என்றாலும், இதற்கும் இலக்கண வரையறைகள் உண்டு.  ‘படிக்காதவனுக்கு எப்படி யாப்பு தெரியும்,’ என்று தோன்றலாம்.  இசைக் கணக்கு பிசகாத வரையில் யாப்பு பிசகவே பிசகாது.  இது உண்மை.  மேற்படிப் பாடலில் (இன்னும் தொடரப் போகும் பாடல்களிலும்) வெண்டளை மட்டுமே பயின்று வருவதைப் பார்க்கலாம்.  

இந்தப் பாடல் குளகம் என்று அறியப்படும் தரவு வகை.  தரவு என்றால் ஆங்கிலத்தில் stanza என்று சொல்கிறோமே, அது.  சிலர் paragraph என்கிறார்கள்.  கவிதையில் ஒரு பத்தியைப் பத்தி என்று சொல்வதில்லை.  அதற்குத் தரவு என்று பெயர்.  ஆங்கிலத்திலும் paragraph என்று சொல்வதில்லை; stanza என்றே சொல்கிறார்கள்.

ஒரு பாடல் நான்கு அடிகளுக்குள் (மறுபடியும்: கவிதையில் பயில்வதை வரி என்று சொல்வதில்லை.  அடி என்று சொல்ல வேண்டும்.) பொருள் முடிந்துவிட்டால், வாக்கியம் முடிந்துவிட்டால் அதை ‘முத்தகம்’ என்று சொல்வோம்.  அப்படி முடிவடையாமல், அடுத்த பாட்டுக்குத் தொடர்ந்தால் அதைக் ‘குளகம்’ என்போம்.  இந்தப் பாடலில் பயிலும் வாக்கியம் இன்னும் முடிவடையவில்லை.  அடுத்த பாடலுக்குத் தொடர்கிறது.   ஆகவே இது குளகம்.  அடுத்த பாடலில் வரும் ‘நின்றிடும் பிரமம் என்பார்’ என்னும் இடத்தில் பாடலின் ஒரு பகுதி முடிவடைகிறது.  ‘பிரமம்’ என்பதே இங்கே எழுவாய்.  அதாவது subject, predicate, object என்று சொல்வோமே, அவற்றில் subject.  

ஈ: பாடல் சொல்வது:

‘ஆம் எனும் பொருள் அனைத்தாய்.’  எதுவெல்லாம் உள்ள பொருளோ, எதுவெல்லாம் ‘இருக்கிறது’ என்று அறியப்படுகிறதோ அதுவெல்லாம்.  இந்த, ‘ஆம் என்னும் பொருளே’ ‘ஓம்’ என்னும் சொல்லுக்குப் பொருள்.  இதனால்தான் வேதத்தில் பிரமத்துக்கு இந்தப் பெயர்.  இது பாரதியே சொல்லும் குறிப்பு.

நின்றிடும் பிரமம் என்பார் – அந்த
    நிர்மலப் பொருளினை சிந்தை செய்வேன்
நன்றுசெய் தவம்யோகம் – சிவ
    ஞானமும் பக்தியும் நணுகிடவே
வென்றிகொள் சிவசக்தி – எனை
    மேவுறவே இருள் சாவுறவே
இன்றமிழ் நூலிதுதான் – புகழ்
    ஏய்ந்தினிதாய் என்றும் இலகிடவே. (2)

பதம் பிரித்து: இந்தப் பாடலுக்குத் தேவையில்லை.  இன்றமிழ் என்பதை இன் தமிழ் என்றும், ஏய்ந்தினிதாய் என்பதை ஏய்ந்து இனிதாய் என்றும் பிரித்துக்கொள்ள வேண்டும்.

அ: சொற் பொருள்:

நிர்மலப் பொருள்: மலம் என்றால் அழுக்கு; குற்றம்.  நிர்மலம் என்றால் அழுக்கற்றது; குற்றமற்றது.  

பிரமம்: பிரமம் அல்லது பிரம்மம் என்பது வேறு; பிரம்மன் எனப்படும் படைத்தல் தொழிலை மேற்கொண்ட இறைவன் வேறு.  

மேவுறவே: மேவுதல்: 1. அடைதல் (to reach); 2. விரும்புதல் 3. நேசித்தல், 4. ஓதுதல் (to learn) 5. உண்ணுதல் 6. நிரவி, சமம் ஆக்குதல் 7. மேலிட்டுக் கொள்ளுதல் (to manifest, to assume) 8. வேய்தல் (to thatch, to cover)

இந்த இடத்தில் ‘வெற்றிகொள்ளும் சிவசக்தி என்னை வந்து அடையட்டும்,’ என்று பொருள்.  ‘வீணையடி நீயெனக்கு மேவு விரல் நான் உனக்கு’ என்ற இடத்தினைப் போல்.  ‘நான் அதை அடைந்தவனாகட்டும்’ என்றிருந்தால், ‘நான் அதற்குத் தகுதியானவனாகட்டும்’ என்று பொருள் கொள்ளலாம்.  இங்கே அவ்வாறில்லை என்பது கவனிக்கத் தக்கது.

ஏய்ந்து: ஏய்தல் என்ற வினைச் சொல்லில் இருந்து பிறந்த சொல்.  பொருந்துதல் (to be suited), தகுதல் (to be fit) என்று இந்தச் சொல் transitive verb ஆகப் பயன்படும்போது பொருள் வரும்.  இந்த நூல் புகழ் பொருந்தியதாய், புகழுக்குத் தக்கதாய் விளங்கட்டும் என்ற வேண்டுதலுடன்

ஆ: இலக்கணம்: வென்றி: வெற்றி என்பதன் மெலித்தல் விகாரம்.

இ: யாப்பு: இதுவும் நொண்டிச் சிந்து

ஈ: பாடல் சொல்வது: நிர்மலப் பொருளாக விளங்கும் பிரமத்தை நான் என் மனத்தில் இருத்துகிறேன்.  தவமும், யோகமும், சிவஞானமும், பக்தியும் என்னால் நன்றாகச் செய்யப்படட்டும்.  சிவசக்தி என்னை அடையட்டும்.  இன் தமிழில் செய்யப்படும் இந்த நூல் புகழுள்ளதாக என்றும் விளங்கட்டும்.

சரஸ்வதி வணக்கம்

வெள்ளைக் கமலத்திலே – அவள்
    வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள்
கொள்ளைக் கனிஇசைதான் – நன்கு
    கொட்டுநல் யாழினைக் கொண்டிருப்பாள்.
கள்ளைக் கடலமுதை – நிகர்
    கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொலவே
பிள்ளைப் பருவத்திலே – எனைப்
    பேணவந்தாள் அருள் பூணவந்தாள். (3)

பதம் பிரித்து: இந்தப் பாடலுக்குத் தேவையில்லை

அ. சொற் பொருள்: –

ஆ. இலக்கணம்:

கொட்டுநல்: கொட்டும் நல் என்று ஏன் சொல்லவில்லை?  வருமொழி முதலில் ந-கரம் வரின், நிலைமொழி ஈற்று மகரம் கெடும்.  அதாவது, இரண்டாவது சொல் ‘ந’ வர்க்கத்தில் தொடங்கியிருந்தால், அதே சமயத்தில் அந்த இரண்டாவது சொல்லுக்கு முன்னால் இருக்கும் சொல் ‘ம்’ என்ற எழுத்தில் முடிந்திருந்தால், அந்த முதற் சொல்லின் கடைசி எழுத்தான ‘ம்’ ஒலிக்கப்படாது; எழுதப்படாது.  ‘கொட்டும்’ என்று முதற் சொல் ‘ம்’ என்ற எழுத்தில் முடிந்திருக்கிறது.  அடுத்த சொல் ‘நல்’ என்று ந-கரத்தில் தொடங்குகிறது.  எனவே கொட்டுநல்.  

இந்த விதியைப் பின்பற்றுவது ‘எளிமை நாடுவோருக்குச் சற்றுக் கடினம்’ என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர் ம. ரா. போ. குருசாமி அவர்கள்.  என்ற போதிலும் இந்த விதியை நெடுகிலும் போற்றியிருக்கிறான் பாரதி.  எல்லா இடங்களிலும் இந்த விதி பின்பற்றப்பட்டிருப்பதைக் காணலாம்.

கள்ளைக் கடலமுதை – கள்ளையும், கடல் அமுதையும் என்று ‘உம்’மை தொக்கி நிற்பதால் உம்மைத் தொகை.

கண்டதொர்: கண்டதோர் என்பதன் குறுக்கல் விகாரம்.

இ. யாப்பு:

இதுவும் நொண்டிச் சிந்து.  

ஈ. பாடல் சொல்வது:

‘சரஸ்வதி வணக்கம்’ என்று வாணியைத் துதித்துத் தொடங்கிய சில கவிஞர்களுள் பாரதி ஒருவன்.  இங்கே மட்டுமின்றி, பாஞ்சாலி சபதத்தின் ‘இரண்டாவது சூதாட்ட சருக்கம்’ தொடங்கும் போதும் ‘தெளிவுறவே அறிந்திடுதல்’ என்று தொடங்கி ‘ஒளி வளரும் தமிழ் வாணி’ என்று வாணி வணக்கம் செய்திருப்பதைக் காணலாம்.  பாஞ்சாலி சபதத்தின் இரண்டாம் பாகம் பராசக்தி வணக்கத்தோடு தொடங்குகிறது.

‘பிள்ளைப் பருவத்திலே எனைப் பேண வந்தாள் – அருள் – பூண வந்தாள்’ என்ற இடம், ‘சிறு வயதில் வாணியே தன்னை நேரில் ஆட்கொண்டாள்’ என்று கவிஞன் சொல்வதாகக் கருதுவோர் உண்டு.  பிள்ளைப் பருவ நிகழ்ச்சிகளைச் சொல்லும் போதெல்லாம் பாரதி இப்படி ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறான் என்பது நோக்கத் தக்கது.

ஆதிரைத்திரு நாளொன்றில் சங்கரன்
    ஆலயத்தொரு மண்டபம் தன்னில்யான்
சோதி மானொடு தன்னந் தனியனாய்ச்
    சொற்களாடி யிருப்ப மற்று அங்கு அவள்
பாதி பேசி, மறைந்து பின் தோன்றினாள்
    பங்கயக் கையில் மை கொணரந்தே ‘ஒரு
சேதி, நெற்றியில் பொட்டு வைப்பேன்’ என்றாள்.
    திலதமிட்டனள்.  செய்கை அழிந்தனன்.

என்று ‘கனவு’ என்ற தலைப்பில் செய்யப்பட்ட தன் வரலாற்றில் சொல்வது, வாணியின் அருள் பெற்ற நிகழ்வையா அல்லது இளம்பருவத்தில் ஏற்பட்ட காதலையா என்ற ஐயத்தைத் தந்தாலும், இன்னோர் இடத்தில் மிகத் தெளிவாகவே சொல்கிறான்.

‘மூன்று காதல்’ என்று சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி தேவியரின் மீது கொண்ட காதலை விவரிக்கும் கவிதை சரஸ்வதியைக் குறித்துத் தொடங்குகிறது.  

பிள்ளைப் பிராயத்திலே – அவள்
    பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேன் – அங்குப்
பள்ளிப் படிப்பினிலே – மதி
    பற்றிடவில்லை…..

ஆற்றங் கரைதனிலே – தனி
    ஆன மண்டப மீதினிலே – தென்றல்
காற்றை நுகர்ந்திருந்தேன் – அங்குக்
    கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள்….’

இது சிந்திக்கத் தக்கது.  

வேதத் திருவிழியாள் – அதில்
    மிக்கபல் லுரையெனும் கருமையிட்டாள்.
சீதக் கதிர்மதியா – நுதல்
    சிந்தனையே குழல் என்றுடையாள்.
வாதத் தருக்கமெனும் – செவி
    வாய்ந்த நற்றுணிவெனும் தோடணிந்தாள்.
போதமென் நாசியினாள் – நலம்
    பொங்குபல் சாத்திர வாயுடையாள். (4)

பதம் பிரித்து: இந்தப் பாடலுக்குத் தேவை இல்லை. நற்றுணிவு என்பதை நல் துணிவு என்று பிரித்துக் கொள்ளவும்.

அ. சொற் பொருள்

சீதக் கதிர்: குளிர்ச்சியான ஒளி.  சந்திரன் அல்லது மதியின் கிரணங்களுக்கு நிலா என்பது பெயர். (நிலா என்பது ஆகாயத்தில் வட்டமாக மிதக்கிறதே, அதைக் குறிக்கும் பெயராக இருந்ததில்லை.  சந்திரனின் ஒளிக்கு அந்தப் பெயர் வழங்கி வந்தது.)

கலவிக் களியின் மயக்கத்தால்
    கலைபோய் அகலக் *கலை மதியின்
நிலவைத்* துகில் என்று எடுத்து உடுப்பீர்!
    நீள்பொன் கபாடம் திறமினோ!
(கலிங்கத்துப் பரணி – கடைத் திறப்பு)

‘ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்’ என்று கண்ணதாசன்(?) எழுதிய திரைப்பாடலில் இந்தக் கருத்து இடம் பெற்றது.  

சுடர்ப் பரிதி ஒளிப்ப *நிலவு ஒழுக்கு மதி*
    ஒளிப்ப அலை அடக்கு தழல் ஒளிப்ப
        ஒளிர் ஒளிப் பிரபை வீசும்
(வேல் வகுப்பு – அருணகிரி நாதர்)
    
சூரியனின் கிரணங்களுக்குக் கதிர் என்று பெரும்பாலும் வழங்கும்.  ஆனால் சூரிய, சந்திரருக்கே கூட ‘கதிர்’ என்ற பெயர் உண்டு.  ‘சீத’ என்ற அடைமொழியோடு சொன்னதற்கு இந்தக் காரணம் இருந்திருக்கலாம்.

போதம்: ஞானம் (wisdom); அறிவு (knowledge, intelligence).  அறிவின் மேல் நிலையே ஞானம்.  அறிவு என்பது ஒரு data bank போல.  தகவல் தளத்தைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் முடிபுகளை மனிதன் இன்னும் துல்லியமாகக் கணக்கிட்டுக் கொள்கிறான் அல்லவா, அது ஏறத்தாழ ஞானம் என்று சொல்லலாம்.  

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

இதுவும் நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

வாணிக்கு வேதமே விழி; வேதங்களுக்குக் காணப்பட்ட உரை, அந்த விழிகளுக்கு இடப்பட்ட மை.  (‘மை கண்ணுக்கு நல்லது.  அழகுங் கூட.  ஆனால், அளவுக்கு மிஞ்சிப் பூசினால் விகாரமாகத் தோன்றுவதுடன் கண்ணே போனாலும் போய்விடும்’ என்று பாரதி இந்த இடத்துக்குக் குறிப்பு எழுதியிருக்கிறான்.  உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்பு.  {நான் எழுதுவது குறிப்பு.  உரையில்லை.  எனவே எனக்கு இது பொருந்தாதப்பா… :P}  குளிர்ச்சியான ஒளி விடும் சந்திரனே அவளுடைய நெற்றி.  சிந்தனையே அவளுடைய குழல்.)  வாதம், தருக்கம் என்பன அவளுடைய செவி.  அந்தச் செவிக்கு அலங்காரமான தோடு எதுவோ என்றால், துணிவு.  துணிவில்லாத வாதமோ, தருக்கமோ அழகில்லாமல், ஒளிவிடாமல் போகும் என்பது குறிப்பு.    ஞானமும், அறிவுமே சுவாசிக்கவும், உயிர் தரிக்கவும் தேவையான மூச்சைப் பெற்றுத் தரும் நாசி.  பல விதமான சாத்திரங்களே அவளுடைய வாய்.

‘சாத்திரங்களென்றாலே அருவருப்புக் கொள்பவன்’ பாரதி என்றொரு கருத்துண்டு.  ‘கோத்த பொய் வேதங்களும், மதக் கொலைகளும் அரசர்தம் கூத்துகளும்,’ என்றும் ‘சாத்திரங்கள் பல தேடினேன், அங்குச் சங்கையில்லாதன சங்கையாம்,’ என்றும் சொல்வதால் இப்படியொரு கருத்தை உருவாக்கிக் கொண்டுள்ளனர்.  பாரதி உண்மையில் சாத்திரங்கள் *எல்லாவற்றையும்* வெறுத்தவனல்லன்.  ‘சந்தி தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்’ என்று அவன் சொல்லும்போது, மிகுந்த பக்தி சிரத்தையுடன் ‘சாத்திரம்’ என்ற சொல்லை உச்சரிக்கிறான் என்பது என் கருத்து.  (வேதங்கள், பற்றிய பாரதியின் கருத்தில் ஒரு சிறிது, ‘கண்ணன் – என் தந்தை’யில் வெளிப்படக் காணலாம்.)

சாத்திரங்களை முற்றிலும் வெறுத்தவனாக இருந்திருந்தால், அவனுடைய வாணியை ‘நலம் பொங்கு பல் சாத்திர வாய் உடையாள்’ என்று சொல்லியிருக்க மாட்டான்.

‘சிந்தனையே குழல்’ என்று சொல்லியிருப்பது சுவைக்கத் தக்கது.  ‘முடியுமா?’ என்ற என் பழைய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:

————
“சீதக்கதிர் மதியா நுதல் சிந்தனையே குழல் என்றுடையாள்” என்றல்லவா சரஸ்வதியைப் பாடுகிறான் பாரதி?  சிந்தனையே குழல் என்றால்?  இரண்டுக்கும் அடர்த்தி இருந்தால்தான் மதிப்பு.  தொடர்ந்த பராமா¢ப்பு இல்லாவிட்டால் குழல் கெட்டுப் போகும்.  தொடர்ந்த, முறையான பயிற்சி இல்லாவிட்டால் சிந்தனை கெட்டுப்போகும்.   பொடுகு, பேன் என்று அடர்ந்த கூந்தலைக் கெடுக்க ஆயிரம் வெளித்தாக்குதல்கள்.  அடர்ந்த சிந்தனையைக் கூட பல வெளித்தாக்குதல்கள் கெடுக்கும் – சா¢யான முறைகளைப் பின்பற்றாவிட்டால்.  வெட்டி, திருத்தி, வா¡¢, முடிந்துவைத்தால்தான் குழல் அழகாக விளங்கும்.  வெட்டி, திருத்தி, ஒழுங்குபடுத்தி, தகுந்த முடிவுகளுடன் இருந்தால்தான் சிந்தனை அழகுற விளங்கும். வயதானால் வண்ணம் மாறுவதைக்கூட சொல்லலாம்.  ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு.  முப்பது வயதுக்குக் குறைந்தவன் கம்யூனிஸ்ட்டாக இல்லையென்றால் அவனுக்கு இதயமே கிடையாது.  முப்பது வயதுக்கு மேற்பட்டவன் இன்னும் கம்யூனிஸ்டாகவே இருந்தால் அவனுக்கு மூளையே கிடையாது.  (A person below thirty who is not a communist, has no heart.  A person above thirty and who is still a communist, has no head.)  சத்தியமாகக் கட்சித் தாக்குதல் இல்லை.  நமக்கு வேறெந்த சாயமும் கிடையாது.  வயதானால் வண்ணம் மாறுவதற்கு உதாரணம் காட்ட ஒரு பழமொழியை உபயோகித்துக் கொண்டேன்.  அவ்வளவுதான்.  முடிமீது கைவைத்து சத்தியம். சிந்தனையே குழலை இன்னும் வி¡¢த்தால் பாஞ்சாலியின் கூந்தலைப் போல வி¡¢யும்.  சொல்லப்போனால் பாஞ்சாலி சபதமும், பாரதப் போரும் கூந்தல் முடியத்தானே.  கம்பன் சொல்லியிருக்கும் இராமனின் குஞ்சி பற்றிய வர்ணனைகளில் பெரும்பான்மையும் சிந்தனைக்கும் பொருந்தும்.  கம்பனில் தோய்ந்த பாரதி இந்த இடத்திலிருந்தும் சிந்தனையே குழல் என்பதற்கான எண்ணத்தைப் பெற்றிருக்கலாம்.
————–
(முழுக் கட்டுரையும் எந்த வலைத் தளத்தில் இருக்கிறது என்பது நினைவில்லை)

இந்த இடத்தில் பிரசன்னா எழுப்பியிருக்கும் கேள்விக்கும் விடை சொல்லிவிடுகிறேன்.  

===========
“நீங்கள் தட்டச்சி இட்டதில் புந்தி நாடரிதாய் மனம் தேடரிதாய் என்று இருக்கின்றது.  என் புத்தகத்தில் மனம் நாடரிதாய்ப் புந்தி தேடரிதாய் என்று இருக்கிறது. மனமும் புந்தியும் இலக்கணப்படி எங்கிருந்தால் சரியாக இருக்கும்?”

“அந்த நிர்மலப்பொருளினை சிந்தை செய்வேன் என்பது அந்த நிர்மலப்பொருளினை நினைத்திடுவேன் என்று இருக்கிறது. எப்படி இப்படி மாறுபாடு வருகிறது?”
===========

பிரதி பேதம் அல்லது பாட பேதம் என்ற சாபக்கேடு நம் தமிழ் நூல்கள் அனைத்துக்கும் பொதுவானது.  முன்பெல்லாம் பிரதி செய்த (வேணாம்.  copy எடுத்த… சரியா?) பெரியவர்கள் கைத் தவறுதலாகச் செய்ததிலிருந்து, தவறாக உணர்ந்து செய்ததிலிருந்து, வேண்டுமென்றே நுழைத்ததிலிருந்து ஏராளமான காரணங்களால் பிரதி பேதங்கள் ஏற்பட்டன.  இப்போதெல்லாம் பதிப்பாசிரியர்களின் அலட்சியத்தால், கவனக் குறைவால் பெரும்பாலான பிரதி பேதங்கள் நிகழ்கின்றன.  வெறும் நூறு வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த பாரதியின் எழுத்தில் ஏராளமான பாட பேதம் (பிரசன்னா குறிப்பிட்டுள்ளதைப் போன்ற வேறுபாடுகள்) இருப்பது நம்முடைய பதிப்பாளர்களுடைய வருத்தத்துக்குரிய போக்கின் மீது வைக்கப்பட்டுள்ள  விமரிசனம்.  

பிரசன்னா, மனத்துக்கும் புத்திக்கும் வேறுபாடு தேடுவது இப்போதைக்கு செய்யக் கூடிய காரியமில்லை.  அதையெல்லாம் தனிக் கட்டுரையில் பார்க்கலாம்.  (அதாவது எழுத நேரம் கிடைத்தால்.)   சிந்துப் பாவின் இலக்கணப்படி, ‘மனம், புந்தி’ இரண்டையும் எந்த இடத்திலும் மாற்றிப் போட்டுக் கொள்ளலாம்.  பொருள் பொருத்தம் எது என்பது சிந்தனைக்குரியது.

ஆனால் மனம் வேறு; புத்தி வேறுதான்.

‘புத்தி மனம் சித்தம் புலன் ஒன்று அறியாமல்
வித்தை செயும் சூத்திரத்தின் மேவுமொரு பொம்மை என’
–குயில் பாட்டு.

மற்ற கேள்விகளுக்குப் பிறகு வருகிறேன் பிரசன்னா.  

பிரசன்னாவின் குள்ளச்சாமி யார் இழையில் கடைசிக் கேள்வி:
========
கொசுறு கேள்வி: நேரமில்லாத நேரத்துல இத்தனைக் கேள்வியான்னு என்னை யாரும்
திட்டலையே? 😛
========

யார் திட்டினாலும், நான் திட்ட மாட்டேன்.  நிறைய கேள்.  நான் இல்லாவிட்டாலும் யாராவது விடை சொல்வார்கள்.  நான் சொல்வதை எனக்குப் பொழுது கிடைக்கும்போதெல்லாம் சொல்கிறேன்.

===============
நேற்றைக்கு இருந்த நெருக்கடியில் ஒரு முக்கியமான குறிப்பு விட்டுப் போயிற்று.  முக்கியமாக நான் செய்திருக்க வேண்டிய திருத்தமும் விட்டுப் போயிற்று.  பாரதி பாட்டை – பாரதி என்று இல்லை, யார் எழுதியது என்றாலும் – பாரதி எழுதிய விதத்தில்தான் பதிப்பிக்க வேண்டும்.  பிரதிபேதம் எப்படி நேருகிறது என்று சொல்ல நினைத்தேன்.  காலை வேளை; அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் எப்படியோ போய்விட்டது.

அண்மைக் காலத்தில் வெளிவந்த பல பதிப்புகளில் ‘சீதக் கதிர்மதியே – நுதல்’ என்று அச்சிடப்படுகிறது.  நான் படித்த பழைய சக்தி வை. கோவிந்தன் பதிப்பில் ‘சீதக் கதிர்மதியா – நுதல்’ என்று இருக்கும்.  பாரதி காலமான பிறகு பாரதி பிரசுராலயத்தார் அவனுடைய கவிதைகளைப் பதிப்பித்தார்கள்.  இந்த, ‘சீதக் கதிர்மதியா’ அச்சுப் பிழை என்றெண்ணி, ‘சீதக் கதிர்மதியே’ என்று பதிப்பித்தார்கள்.  ஆகவே அதைத் தொடர்ந்து வந்த பதிப்புகள் பெரும்பாலானவற்றில் இந்த ‘யே’தான் இருக்கும்.  சக்தி கோவிந்தன் பதிப்பிற்குப் பிறகு சுமார் முப்பது-முப்பத்தைந்து பதிப்புகள் என்னிடம் இருந்தன.  இந்த ‘யே’ பழக்கம் என்னையும் தொற்றிக்கொண்டது.

பாரதி ‘சீதக் கதிர்மதியா’ என்றுதான் எழுதியிருக்கிறான்.  அவன் எழுதியிருக்கும் குறிப்புகளில் பின்வரும் விளக்கம் காணப்படுகிறது:

‘சீதக் கதிர்மதியா(ம்) நுதல்,’ குளிர்ந்த ஒளியையுடைய மதியே ஸரஸ்வதி தேவிக்கு நெற்றியாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது.  ‘ஊகம்’ என்பது அவளுடைய கூந்தல்.’

எனவே, ‘சீதக் கதிர்மதியா’ என்பதே சரியான பாடம்.  அது மட்டுமன்று.  முதல் பதிப்பு வெளிவரும் போது, ‘ஊகம்’ என்பதே குழல் என்று வர்ணித்திருக்கிறான்.  அச்சுப் புத்தகமாக வெளிவந்த பிறகு, ‘ஊகம்’ என்பதை விடவும், ‘சிந்தனை’ என்பதே குழலுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியிருக்கிறது.  அச்சுப் படியில் ‘ஊகம்’ என்ற சொல்லை அடித்துவிட்டு, ‘சிந்தனை’ என்று திருத்தியிருக்கிறான்.  (தஞ்சைப் பல்கலைக் கழக ஆய்வுப் பதிப்பில் காணப்படும் குறிப்பு.)

எனவே நாம் கொள்ள வேண்டிய பாடம், ‘சீதக் கதிர்மதியா’தான்.

கற்பனைத் தேனிதழாள் – சுவைக்
    காவிய மெனுமணிக் கொங்கையினாள்.
சிற்பமுதற் கலைகள் – பல
    தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப்பாள்.
சொற்படு நயமறிவார் – இசை
    தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறிவார்
விற்பனத் தமிழ்ப்புலவோர் – அந்த
    மேலவர் நாவெனும் மலர்ப்பதத்தாள். (5)

பதம் பிரித்து:

இந்தப் பாடலுக்குத் தேவையில்லை.

அ. சொற் பொருள் –

‘தேமலர்க் கரமென’ தேனை உடைய மலர்களைப் போன்ற கரம் என.  சிற்பம் முதலான பல கலைகளே வாணியின் கரங்கள்.  மலர்க் கரங்கள்.  தேன் கொண்ட மலர்க்கரங்கள்.

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

கவிதைக்கு இசை தேவையா இல்லையா?  இந்தப் பாடலில் பாரதியின் கருத்து என்ன என்பது தெளிவாக வெளிப்படுகிறது.  ‘சொற்படு நயம் அறிவார்.’  சொல்லுக்குள் உறைந்திருக்கும் நயத்தை அறிவார்.  ‘இசை தோய்ந்திடத் தொகுப்பதன் சுவை அறிவார்.’  அந்தச் சொல் இசையில் தோய்ந்திருக்குமாறு தொகுக்கின்ற வேலைப்பாட்டினால் விளைவதாகிய சுவையை அறிவார்.  யார்?  விற்பனத் தமிழ்ப் புலவோர்.  தமிழ்க் கவிதையை இசையோடு ஒத்துச் செய்வதன் சுவையை அறிந்தவர்கள் தமிழ்ப் புலவர்கள்.

கவிஞர்கள், பாவலர்கள், புலவர்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று சமமான பொருளுடைய சொற்களே.  ‘புலவர் என்பவர் scholar மட்டுமே.  அவர் கட்டுவது ஒன்றுக்கொண்டு ஒட்டாத செங்கல் அடுக்கு,’ என்றொரு கருத்தும் நிலவுகிறது.  அப்படி இருக்கலாம்.  இல்லாமலும் இருக்கலாம்.  A lawyer is an advocate; but an advocate need not be a lawyer என்பதைப் போல்தான் ‘கவிஞர் என்பவர் புலமை உள்ளவர்; புலவர் கவிஞராகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.’  தனிக் கட்டுரைக்கு உரிய ஒன்று.  இப்போதைக்கு இத்தோடு விட்டுவிடுகிறேன்.

வாணியைச் சரண்புகுந்தேன் – அருள்
    வாக்களிப்பாள் எனத்திடமிகுந்தேன்.
பேணிய பெருந்தவத்தாள் – நிலம்
    பெயரளவும் பெயர் பெயராதாள்.
பூணியல் மார்பகத்தாள் – ஐவர்
    பூவை திரௌபதி புகழ்க்கதையை
மாணியல் தமிழ்ப்பாட்டால் – நான்
    வகுத்திடக் கலைமகள் வாழ்த்துகவே! (6)

பதம் பிரித்து:

வாணியைச் சரண் புகுந்தேன் – அருள்
    வாக்கு அளிப்பாள் எனத் திட(ம்) மிகுந்தேன்.
பேணிய பெருந்தவத்தாள் – நிலம்
    பெயரளவும் பெயர் பெயராதாள்.
பூண் இயல் மார்பகத்தாள் – ஐவர்
    பூவை திரௌபதி புகழ்க்கதையை
மாண் இயல் தமிழ்ப்பாட்டால் – நான்
    வகுத்திடக் கலைமகள் வாழ்த்துகவே!

அ. சொற் பொருள்

பேணிய: பேணுதல் என்ற சொல்லுக்குப் பதினான்கு தனித் தனிப் பொருள் உண்டு.  இங்கே ‘போற்றுதல்,’ (to cherish, foster, nurture) ‘மதித்தல்’ (to regard), ‘அலங்கரித்தல்’ (to adorn) என்பன பொருந்தும். ‘பேணிய பெருந் தவத்தாள்’ என்றால் ‘போற்றக் கூடிய அளவுக்குப் பெரிய தவத்தைச் செய்தவள்’ என்று பொருள் காண்பது விபரீதமாக முடியும்.  கல்விக்கு இறைவியை அப்படிச் சொல்வது முறையில்லை.  ‘தன் அன்பர்களால் போற்றப்பட்ட பெரிய தவத்தை உடையவள்,’ என்றே கொள்ள வேண்டும்.  ‘தனது அன்பர்கள்’ என்பதை வருவித்துக்கொள்ள வேண்டும்.

மாண் இயல்: மாண் என்றால் மாண்பு; மாட்சிமை.  Splendour, excellence, glory, dignity. தமிழ்ப் பாட்டு – தான் இயற்றும் இந்தக் காவியம் – மாண் இயன்றது என்ற பெருமிதம் தோன்றச் சொல்வதைக் காணலாம்.  

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு
நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

நல்ல அணிகலன்களை (பூண்களை) மார்பின் மீது அணிந்தவளாகிய (இயல் – பூண் இயல்), ஐவர் தேவியான திரெளபதியின் புகழைச் சொல்லும் இந்தக் கதையை, நல்ல ஒளி நிறைந்த பாடல்களால் நான் சொல்ல வேண்டும் என்பதற்காக ‘உலகம் உள்ளளவும் தன் பெயர் உள்ளவளான’ வாணியைச் சரண் புகுந்தேன்.  அவள் எனக்கு அருள் நிறைந்த வாக்கினை அளிப்பாள் என்ற திடம் அதனால் எனக்கு உண்டாயிற்று.  

நூல்

அத்தின புரமுண்டாம் – இவ்
    அவனியிலே அதற்கிணையிலையாம்.
பத்தியில் வீதிகளாம் – வெள்ளைப்
    பனிவரைபோற் பலமாளிகையாம்
முத்தொளிர் மாடங்களாம் – எங்கு
    மொய்த்தளி சூழ்மலர்ச் சோலைகளாம்.
நத்தியல் வாவிகளாம் – அங்கு
    நாடும் இரதிநிகர் தேவிகளாம். (7)

பதம் பிரித்து:

அத்தினபுரம் உண்டாம் – இவ்
    அவனியிலே அதற்கு இணையிலையாம்
பத்தியில் வீதிகளாம் – வெள்ளைப்
    பனிவரை போல் பல மாளிகையாம்
முத்துஒளிர் மாடங்களாம் – எங்கு
    மொய்த்து அளி சூழ் மலர்ச் சோலைகளாம்
நத்து இயல் வாவிகளாம் – அங்கு
    நாடும் இரதி நிகர் தேவிகளாம்.

அ. சொற் பொருள்

பத்தி: ஒன்பது வேறுபட்ட பொருள் உண்டு இந்தச் சொல்லுக்கு.  இந்த இடத்தில் வரிசை என்று பொருள்.  
பனிவரை: பனி மலை.  
அளி: வண்டு
நத்து: நத்தை; சங்குப் பூச்சி
வாவி: நீர் நிலை

ஆ. இலக்கணம்

எங்கும் மொய்த்து என்னாமல் ‘எங்கு மொய்த்து’ என்றெழுதியிருப்பதைப் பார்க்கவும்.  முதல் சொல் ‘ம்’ என முடிந்து அடுத்த சொல் மகரத்தில் தொடங்கினால், முதல் சொல்லின் கடைசி எழுத்தான ‘ம்’ கெடும்.  ஒலிக்கப்படாது.  எழுதப்படாது.  இது நிலைமொழி ஈற்று மகரம் கெடுவது எப்போது என்னும் விதிகளில் இன்னொன்று.  இதையும் பாரதி நெடுகிலும் போற்றியிருக்கிறான்.  (பாடல் எண் ஐந்தில் ‘சிற்பமுதற் கலைகள்’ என்ற இடத்தில் ‘சிற்பம்’ என்ற சொல்லின் மகரம் கெட்டிருப்பதும், ‘சொற்படு நயமறிவார்’ என்ற இடத்தில் மகரம் கெட்டிருப்பதும் வேறு வேறு விதிகள்.)

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

அத்தினபுரம் உலகத்திலே தனக்கு நிகரான வேறு நகரம் ஏதுமில்லாதது.  அங்கே வீதிகள் வரிசை வரிசையாக இருக்கும்; வெள்ளைப் பனி சூழ்ந்த மலை(யான இமய மலையைப்) போன்ற மாளிகைகள் எங்கும் நிறைந்திருக்கும்.  முத்துப் போல் ஒளிவிடும் மாடங்கள் அந்த மாளிகைகளில் உண்டு.  எந்தத் திசையில் பார்த்தாலும் வண்டுகள் சூழ்ந்த மலர்களைக் கொண்ட சோலைகளும், சங்கினங்கள் நிரம்பிய நீர் நிலைகளும், இரதியைப் போன்ற அழகு வாய்ந்த தேவியரும் நிறைந்திருக்கும் ஊர் அத்தினபுரம்.  (ஹஸ்தினாபுரம்)

குரு வம்சம் அரசாண்ட இடம் ஹஸ்தினாபுரம்.  (Kuru வம்சம்)  ஹஸ்தி என்ற குரு வம்ச அரசன் உருவாக்கிய நகரமானதாலே அவனுடைய பெயர் சூட்டப்பட்டு விளங்குகிறது.  இதனை அஸ்தி-ந-பூர் – அழிவற்ற ஊர் என்றும் விளக்குபவர்கள் உண்டு.  அஸ்தி (அழிவு) என்ற சொல்லும் ஹஸ்தி என்ற பெயரும் வேறு வேறு.  எனவே இந்த விளக்கம் பொருந்தாது.  

அந்தணர் வீதிகளாம் – மறை
    ஆதிகளாம் கலைச் சோதிகளாம்
செந்தழல் வேள்விகளாம் – மிகச்
    சீர்பெறும் சாத்திரக் கேள்விகளாம்
மந்திர கீதங்களாம் – தர்க்க
    வாதங்களாம் தவ நீதங்களாம்
சிந்தையில் அறமுண்டாம் – எனில்
    சேர்ந்திடும் கலிசெயு மறமுமுண்டாம். (8)

பதம் பிரித்து:

இந்தப் பாடலுக்குத் தேவையில்லை.

அ. சொற் பொருள்

செந்தழல் வேள்வி.  முத்தீ வளர்த்து அன்றாட வழிபாடு செய்தல் அந்தணர் கடன்.  ‘அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தீ விளக்கு’ என்று புறநானூறு (இரண்டாம் பாடல்) சொல்கிறது.  ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினி என்பன மூன்று தீக்களின் பெயர்கள்.

தவ நீதங்களாம்.  நீதம் – தகுதி, நீதி, தானியம் என்று இந்தச் சொல்லுக்கு மூன்று பொருள் உண்டு.  தவத்தினால் உண்டாகும் தகுதி என்பது இந்த இடத்தில் அமையும் பொருள்.

நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
    நாய்களோ – பன்றிச் – சேய்களோ
நீங்கள் மட்டும் மனிதர்க ளோவிது
    நீதமோ – பிடி – வாதமோ

(கலெக்டர் வின்சுக்கு ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை சொல்லிய மறுமொழி)

இந்த இடத்தில் நீதம் என்பதற்கு நீதி என்பது பொருள்.  ‘நாங்களெல்லாம் நாய்களா, இல்லையென்றால் பன்றிக் குட்டிகளா?  நீங்கள் மட்டும்தான் மனிதர்களா?  இது என்ன நீதி?  இது வெறும் பிடிவாதமில்லையா?’

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

அத்தினபுரத்தில் உள்ள அந்தணர் வீதிகள், ‘வேதங்களின் ஆதி’ என்று சொல்லத் தக்க விதத்தில் இருந்தன.  அங்¦ல்லாம் விதிப்படியான முத்தீ விளங்கும்; புகழத் தக்க சாத்திரப் பயிற்சி – சொல்லுதல், கேட்டல், விவாதித்தல் என்று இவ்வண்ணமாக – எப்போதும் நடைபெறும்.  மந்திர கீதங்கள் முழங்கிக் கொண்டே இருக்கும்.  தர்க்க வாதங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.  தவத்தினால் ஏற்படும் தகுதியை உடையவர்கள் வசிக்கும் வீதிகள் அவை.  

அனைவர் சிந்தையிலும் அறம் இருந்தது.  ஆனாலும், கொஞ்சம் மதி மழுங்கிப் போனவர்களும் இல்லாமல் இல்லை.  கலி.  கலியின் விளைவால் அங்கே அறமில்லாததை எண்ணும் சிந்தை உடையவர்களும் இருந்தனர்.

கம்பன் கண்ட கோசல நாட்டிலிருந்து கொஞ்சம் போல விலகுகிறது, இல்லையா இந்த வருணனை?  இங்கேதானே பாஞ்சாலி துகிலுரியப்படப் போகிறாள்.  

கெளரவ வேந்தர் சபைதன்னில் – அறங்
    கண்டவர் யாவரும் இல்லையோ? – மன்னர்
செளரியம் வீழ்ந்திடு முன்னரே – அங்குச்
    சாத்திரம் செத்துக் கிடக்குமோ?

என்று இந்த நகரத்தில் நின்றுதானே பாஞ்சாலி கேட்கப் போகிறாள்.  அந்தச் சூழலுக்குத் தன் வாசகனைத் தயார்ப்படுத்துகிறான் கவிஞன்.  

மெய்த்தவர் பலருண்டாம் – வெறும்
    வேடங்கள் பூண்டவர் பலருமுண்டாம்.
உய்த்திடு சிவஞானம் – கனிந்
    தோர்ந்திடு மேலவர் பலருமுண்டாம்.
பொய்த்த இந்திரசாலம் – நிகர்
    பூசையும் கிரியையும் புலைநடையும்
கைத்திடு பொய்ம்மொழியும் – கொண்டு
    கண்மயக்கால் பிழைப்போர் பலராம். (9)

===========
பதம் பிரித்து:

இந்தப் பாடலுக்குத் தேவையில்லை.  ‘கனிந்தோர்ந்திடு’ என்பதை, ‘கனிந்து ஓர்ந்திடு’ என்று பிரித்துக்கொள்ளவும்.

அ. சொற் பொருள்

மெய்த்தவர்: மெய்யான தவம் மேற்கொண்டவர்

ஓர்ந்திடு மேலவர்: ஓர்தல்: ஆராய்ந்து அறிதல் (to consider attentively, examine, investigate)

உய்த்திடு: உய்தல் என்ற சொல்லுக்கு ‘வாழுதல் – ஜீவித்தல்’ என்ற பொருள் உண்டு.  ‘அபாயங்களின்றும், துயரங்களின்றும் நீங்குதல்’ என்பது இந்தச் சொல் தரும் பொருள்.  உய்தல் – செய்வினை – active voice.  உய்த்தல் – செயப்பாட்டுவினை (passive voice).

கிரியை: ஏழு வேறு வேறு பொருளுள்ள இந்தச் சொல்லுக்கு இங்கே பொருத்தமாவது: 1) செய்கை – act, action, deed.  2) சிவனை ஆகமங்களில் விதித்தவாறு அகத்தானும் புறத்தானும் வழிபடுவது

கைத்திடு: கைப்பதாகிய.  கசப்பான.

ஆ. இலக்கணம்
ஓர்ந்திடு மேலவர்: ஓர்ந்திடும் மேலவர்.  மகரம் கெட்டதன் விதியைப் பார்த்தோம்.

இ. யாப்பு
நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

துறவியரில் இரு வகை எந்தக் காலத்திலும் இருந்திருக்கிறது.  உண்மையான துறவு மேற்கொண்டு, உள்ளத்தால் உயர்ந்து நிற்போர் ஒரு புறமும், துறவு வேடம் புனைந்து மக்களை ஏமாற்றித் திரிபவர் இன்னொரு புறமும் இன்று நேற்றல்ல; திருவள்ளுவர் காலத்திலும் இருந்திருக்கிறார்கள்.  அதனால்தான் துறவிகளுக்கே பெரிதும் சொல்லப்பட்ட ‘கூடா ஒழுக்கம்’ என்ற அதிகாரத்தில் (அறத்துப் பால், துறவற இயலில் இந்த அதிகாரம் இடம் பெறுகிறது)

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

என்றார்.  ‘மனத்தைத் தன் வழிப் படுத்தும் வலி (வலிமை) இல்லாத நிலையை உடையவனுடைய (தவ வேடம் புனைந்த) வெளித் தோற்றம் எத்தகையது என்றால், பசு, புலியின் தோலைப் போர்த்துக் கொண்டு வயலில் இறங்கி மேய்வதைப் போன்றது.’  புலித்தோல் போர்த்திய பசுவைத்தான் நமக்குத் தெரியும்.  பசுத்தோல் போர்த்திய புலியைக் காட்டுகிறார் வள்ளுவர்.

பாரதி காட்டும் அத்தினபுரத்துத் துறவியருள்ளும் இரண்டு வகையும் இருந்திருக்கின்றனர்.  மெய்யான தவம் உடைய மெய்த்தவரும் அங்கே இருந்தனர்.  வேடங்கள் புனைந்தவரும் இருந்தனர்.  வாழ்வின் துன்பங்களிலிருந்து விடுவிப்பதான சிவஞானத்தை ‘ஓர்ந்து,’ ஆராய்ந்து அறிந்து, கனிந்திடும் ஞானியர் ஒருபுறம் இருந்தனர்.  பொய்யான இந்திரசாலமும் (கையை நீட்டினால் பொருள் கொட்டுகிறதே, அது போன்ற வித்தைகள்), அதற்கு நிகரான பூசைகளும், கிரியைகளும் (வெளித்தோற்றத்தால் சிவஞானம் பெற்றவர்போல் தோன்றி, உள்ளே நிகழ்வதால் நடிப்பதாகிய செயல் என இரண்டு பொருளையும் தரக் கூடிய சொல் என்பதை மேலே கண்டோம்), இழிவான நடத்தையும் (புலை நடை) கொண்டு, வாயைத் திறந்தாலே பொய் உதிரும்படியான கசப்பான செய்கையும் கொண்டு, கண்ணால் ஆளை மயக்கிப் பிழைப்பு நடத்தும் துறவியரும் அந்த ஊரில் இருந்தனர்.

பாரதி நிகழ்த்தும் சமூக விமரிசனம் இது.  

மாலைகள் புரண்டசையும் – பெரு
    வரையெனத் திரண்டவன் தோளுடையார்
வேலையும் வாளினையும் – நெடு
    வில்லையும் தண்டையும் விரும்பிடுவார்.
காலையும் மாலையிலும் – பகை
    காய்ந்திடு தொழில்பல பழகிவெம்போர்
நூலையும் தேர்ச்சி கொள்வார் – கரி
    நூறினைத் தனிநின்று நொறுக்கவல்லார். (10)

பதம் பிரித்து:

திரண்டவன் தோளுடையார்: திரண்ட வன்தோள் உடையார்

அ. சொற் பொருள்

வரை: மலை, கரி: யானை.

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

அந்தணர் வீதிகளில் தொடங்கிய அத்தினபுர நகர வருணனை, இப்போது மறவர் வீதிகளைக் காட்டுகிறது.  மாலைகள் அணிந்த, மலைபோன்ற தோள்களை உடைய மறவர்கள் அவ்வீதிகளில் வேல், வாள், வில், தண்டு (கதை) போன்ற ஆயுதப் பயிற்சிகளை மேற்கொள்வார்கள்.  காலை தொடங்கி மாலை வரை, பகைவரைகளை எதிர்பதற்குத் தேவையான ஆயுதப் பயிற்சியையும், போர் நூல் பயிற்சியையும் செய்வார்கள்.  ஒவ்வொரு மறவனும் தனி ஒருவனாக நின்று நூறு யானைகளை வீழ்த்தக் கூடியவன்.

ஒரு போர் வீரனின் ஆற்றலை அளக்கும் அளவைகளில் ஒன்று, ‘அவன் எத்தனை யானை வலுவுடையான்,’ என்பதும், ‘எத்தனை யானைகளை வீழ்த்த வல்லான்,’ என்பதும்.  திருதிராட்டிரன் ஆயிரம் யானை வலுவுடையவன்.  ‘நெடுங்கை வளர் யானை பலவற்றின் வலி காட்டிடும் வெந்திறல் வீமனை, உங்கள் பொய் வளர் சூதினில் வைத்திட்டேன், வென்று போ!’ என்று பின்னால் சூதாடும்போது தருமன் சொல்லப் போகிறான்.  வீமன், துரியோதனன் போன்றோரும் இப்படிப்பட்ட ‘ஆயிரம் யானை பலம்’ கொண்டவர்களாகச் சொல்லப்பட்டவர்கள்.

போர் வீரர்களில் முதல் – உயர் – பிரிவைச் சேர்ந்தவர்கள் தேர் வீரர்கள்.  அவர்களுடைய ஆற்றலை நான்கு வகையாகப் பிரித்திருந்தனர்.  அர்த்த ரதன், சமரதன் (அல்லது) ரதிகன், அதிரதன், மகாரதன் என்பன அவை.  மகாபாரதம், உத்தியோக பருவம், ரதாதிரத சங்கியான பருவத்தில் இதற்கான குறிப்பு காணப்படுகிறது.

அர்த்தரதன் என்பவன் தன்னை மட்டும் காத்துக்கொள்ளும் அளவுக்கு (நால்வகைப் படையில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்த ஏதாவது ஒரே ஒரு வீரனை எதிர்த்துப்) போரிடும் ஆற்றல் பெற்றவன்.  சமரதன் அல்லது ரதிகன் என்பவன் தன்னையும், தன்னுடைய தேர், சாரதி, குதிரைகளைக் காத்த வண்ணம் ஒரு வீரனை எதிர்த்துப் போரிடும் ஆற்றல் உடையவன்.  மகாரதன் என்பவன், தான், தன் தேர், சாரதி, குதிரைகள், தன் சேனை ஆகியவற்றைக் காத்தவண்ணம் ஒரு சில வீரர்களோடு போர் புரியும் ஆற்றல் பெற்றவன்.  (அதாவது, அதிரதனின் கீழ் ஒரு படைப்பிரிவு அடங்கும்.  அவன் ஒரு படைப்பிரிவின் தலைவனாகவும் இருப்பான்.)  மகாரதன் என்பவன், தான், தன் தேர், சாரதி, குதிரைகளையும், தன் சேனையையும் காத்துக் கொண்டு, பலரோடு ஒரே நேரத்தில் போரிட வல்லவன்.  Commander-in-Chief என்று சொல்லப்படும் பதவியைப் போன்ற பதவிக்குத் தகுந்தவன்.  

அர்ஜுனனை மகாரதன் எனவும், கர்ணனை அர்த்தரதன் (தன்னை மட்டும் காத்துக் கொள்ள வல்லவன்; தன் தேர், சாரதி, குதிரைகளைக் கூட காத்துக்கொள்ளும் வன்மை அற்றவன்) எனவும் என்று பிதாமகர் தரம் பிரித்த காரணத்தால், ‘இவர் வீழ்ந்த பிறகே போர்க்களத்தில் நுழைவேன்,’ என்று சபதமிட்டான் கர்ணன்.  இவ்வாறு மூன்று தருணங்களில் சபதம் செய்கிறான்.  இது மூன்றாவது தருணம்.

ஆரிய வேன்மறவர் – புவி
    ஆளுமொர் கடுந்தொழில் இனிதுணர்ந்தோர்.
சீரியல் மதிமுகத்தார் – மணித்
    தேனிதழ் அமுதென நுகர்ந்திடுவார்.
வேரியங் கள்ளருந்தி – எங்கும்
    வெம்மத யானைகள் எனத்திரிவார்.
பாரினில் இந்திரர்போல் – வளர்
    பார்த்திவர் வீதிகள் பாடுவமே. (11)

பதம் பிரித்து: வேன்மறவர்: வேல் மறவர்.  சீரியல்: சீர் இயல். வேரியங் கள்: வேரி அம் கள்.

அ. சொற் பொருள்

ஆரிய வேல் மறவர்.  ஆரியர் என்ற சொல் ‘வடவர்’ என்ற பொருளில் பெரும்பாலும் வழங்கப்படுகிறது.  ஆரியவர்த்தத்தில் வாழ்பவர்கள் என்று அறியப்பட்டது.  இமயமலைக்கும் விந்திய மலைக்கும் இடைப்பட்ட பகுதி ஆரியவர்த்தம் என்று வழங்கப்பட்டது.  ஆயினும், ஆரியர் என்ற சொல்லுக்கு ஏழு பொருள் உண்டு.  1) ஆரிய வகுப்பினன் 2) ஆரியவர்த்த வாசி 3) பெரியோன், உயர்ந்தவன் (worthy, respectable) 4) குரு, ஆசாரியன் 5) அறிவாளி 6) உபாத்தியாயன் 7) ஐயனார் சுவாமி.  இது சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி தரும் விளக்கம்.

பாரதி எங்கெல்லாம் ‘ஆரியன்’ என்று பயன்படுத்தியிருக்கிறானோ, அங்கெல்லாம் ‘உயர்ந்தவன்’ என்ற பொருளில்தான் பயன்படுத்தியிருக்கிறான்.   அவனுடைய உரைநடைகளில் இது வெளிப்படையாகவே காணப்படும்.  கம்ப இராமாயணத்திலும் ‘உயர்ந்தோன்’ என்ற பொருளில்தான் பெரும்பாலும் இந்தச் சொல் ஆளப்பட்டிருக்கிறது.

வேரி: தேன்

பார்த்திவர்: பார்த்திபர் – மன்னர்.  ‘பல் வளம் நிறை புவிக்கே – தருமன் பார்த்திவன் என்பதினிப் பழங்கதை காண்,’ என்று பின்னால் சகுனி சொல்லப் போகிறான்.

ஆ. இலக்கணம்

வேரியங் கள்: வேரி அம் கள்.  ‘அம்’ என்றால் அழகிய என்ற பொருள் இருந்தாலும், இங்கே அது பொருந்தாது.  அம் என்பது சாரியைகளுள் ஒன்று.  Euphonic augment என்று ஆங்கிலத்தில் குறிப்பார்கள்.  புளியங்காய் (புளி அம் காய்) என்பது போல்.

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

புவியை ஆள்வதான கடினமான செயலை, இனிமையான ஒன்றாகக் கருதி ஏற்றவர்களான வேற்படையை உடைய சிறந்த மறவர்கள் அந்த வீதிகளில் இருந்தனர்.  போர்த்தொழில் படித்த, பழகிய நேரம் போக மற்ற நேரங்களில் அழகிய முகத்தை உடைய பெண்களின் இதழ்களை அனுபவித்தவாறும், கள்ளைக் குடித்தவாறும் வாழ்பவர்கள்.  சினங் கொண்ட மதயானைகளைப் போல் அந்த வீதிகளில் திரிந்துகொண்டிருப்பார்கள்.  இத்தகைய மன்னர்கள் வாழும் வீதிகளைப் பாடுகிறேன்.

நல்லிசை முழக்கங்களாம் – பல
    நாட்டிய மாதர்தம் பழக்கங்களாம்
தொல்லிசைக் காவியங்கள் – அருந்
    தொழிலுணர் சிற்பர்செய் ஓவியங்கள்
கொல்லிசை வாரணங்கள் – கடுங்
    குதிரைக ளொடுபெருந் தேர்களுண்டாம்.
மல்லிசை போர்களுண்டாம் – திரள்
    வாய்ந்திவை பார்த்திடு வோர்களுண்டாம். (12)

பதம் பிரித்து: தேவையில்லை

அ. சொற் பொருள்

இசை என்ற சொல்லை மாற்றி மாற்றி வேறு வேறு பொருளில் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம்.  பாரதிக்கு(ம் சரி, கம்பனுக்கும் சரி) இது மிகவும் பிடித்த விளையாட்டு.  ‘தொல்லை வினைதரு தொல்லையகன்று சுடர்க தமிழ்நாடே’, ‘சாத்திரங்கள் பல தேடினேன்; அங்குச் சங்கையில்லாதன சங்கையாம்’ என்று ஒரே சொல்லைப் பல பொருளில் பயன்படுத்தும் ஆட்டத்துக்கு வள்ளுவரும் விலக்கல்லர்.

நல்லிசை: நல்ல இசை (பாடல்).  தொல்லிசை: தொன்மையான, புகழ்வாய்ந்த.  கொல்லிசை: கொல்லும் தொழிலுக்கு ஏற்ற, பொருத்தமான.  மல்லிசை: மல்யுத்த விதிமுறைகளுக்கு இசைவுடைய.

பாடல், புகழ், பொருந்தி வருதல், இசைவாக (in agreement with) என்ற நான்கு பொருளில் ‘இசை’ என்ற சொல் பயன்பட்டிருக்கிறது.

வாரணம்: யானை

மல்லிசை போர்: மல்யுத்தம், குத்துச் சண்டை.

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நொண்டிச் சிந்து.  ஒவ்வோரடியும் இடது பக்கத்தில் (அதாவது முதல் சீரில்) எதுகையுடனும் (நல்லிசை, தொல்லிசை, கொல்லிசை, மல்லிசை), ஒவ்வொரு அரையடியும் தமக்குள்ளே இயைபுடனும் (முழக்கங்களாம், பழக்கங்களாம், காவியங்கள், ஓவியங்கள், போர்களுண்டாம், வோர்களுண்டாம்) ஆக இரு பக்கங்களிலும் ஓசைச் சிறப்புடன் விளங்கும் பா.

ஈ. பாடல் சொல்வது

மறவர் வாழும் வீதிகளில் காணப்படும் காட்சிகள் தொடர்கின்றன.  ‘க்ஷத்திரியர்களுடைய தலைவன் ஒருவனுக்கு மாத்திரமன்றி, அக்குல முழுமைக்குமே தமிழில் மன்னர் முதலிய பெயர்கள் உண்டு.  நமது நாட்டடில் இப்போது ‘மறவர்’ என வழங்கும் கூட்டத்தார் க்ஷத்திரிய வமிசத்தவராத லுணர்க.’ இது பாரதியின் குறிப்பு.

அந்த வீதிகளில் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும்.  நாட்டிய மாதர்கள் தாம் பழகிய கலைகளை வெளிப்படுத்திக்கொண்டிருப்பர்.  (நாட்டிய மாதர்தம் ‘பழக்கங்களாம்’ என்பதற்கு வேறு விதமான பொருள் கொள்ள ஏது உண்டு என்ற போதிலும் பெரிதும் பொருந்தும் பொருள் சொல்லப்பட்டது.)  பழைய புகழ் வாய்ந்த காவியங்கள் அவ்வீதிகளில் பேசப்படும்.  சிற்பம் முதலான ஓவியம் சார்ந்த கலைகள் வளரும்.  குத்துச் சண்டைகள் நிகழும்.  பலர் திரளாக நின்று கண்டு களிப்பர்.

எண்ணரு மணிவகையும் – இவை
    இலகிநல் லொளிதரும் பணிவகையும்
தண்ணறும் சாந்தங்களும் – மலர்த்
    தார்களும் மலர்விழிக் காந்தங்களும்
சுண்ணமும் நறும்புகையும் – சுரர்
    துய்ப்பதற் குரியபல் பண்டங்களும்
உண்ணநற் கனி வகையும் – களி
    உவகையும் கேளியும் ஓங்கினவே (13)

பதம் பிரித்து:

எண்ணரு: எண்ண அரு; எண்ண அரிய.  தண்ணறும்: தண் நறும்

அ. சொற் பொருள்

இவை இலகி நல் ஒளி தரும் பணிவகையும்: இலகு: (ஒளி தோன்றும்படி) விளங்குதல்.  To shine, glisten, glitter.  ‘இலகு பெருங்குணம் யாவைக்கும் எல்லையாம், திலக முனிக்கொத்த அடிமைக்காரன்.’ (பாரதி).  ‘இலகிய பனியின் முத்தை இளங்கதிர்க் கையால் உண்பாய்.’ (பாரதிதாசன்)

பணி: ஆபரணங்கள்; நகைகள்.  தலையில் நாகரத்தினத்தை உடைய காரணத்தால் பாம்புக்குப் ‘பணாமுடி’ என்று பெயர்.  

தண் நறும் சாந்தங்கள்: குளிர்ச்சியும் வாசனையும் பொருந்திய, சாந்துக் கலவைகள்.  சாந்தம்: சாந்து.

மலர்த் தார்: மலர் மாலை.

சுண்ணம்: வாசனைப் பொடி.  (டால்கம் பவுடரைப் போன்ற பூசுவதற்கான பொடி.  மேனியில் பூசுவதற்காக ஈரத்துடன் குழைத்திருப்பது சாந்துக் கலவை.  உலர்ந்த பொடி சுண்ணம்.)

சுரர்: தேவர்.  அ-சுரர்: தேவர் அல்லாதவர்

துய்த்தல்: அனுபவித்தல்; பயன்படுத்தல்.

ஆ. இலக்கணம்

இ. யாப்பு

நொண்டிச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

மன்னர் வீதிகளில் காணப்படும் செல்வ வளமும், செல்வ வளம் மிக்கவர்கள் பயன்படுத்தும் பொருள்களும் பேசப்படுகின்றன.

சிவனுடை நண்பனென்பார் – வட
    திசைக்கதிபதி அளகேசனென்பார்
அவனுடைப் பெருஞ்செல்வம் – இவர்
    ஆவணந்தொறும் புகுந்திருப்பதுவாம்.
தவனுடை வணிகர்களும் – பல
    தரனுடைத் தொழில்செயும் மாசனமும்
எவனுடைப் பயமுமிலா – தினி
    திருந்திடும் தன்மைய தெழில்நகரே. (14)

பதம் பிரித்து: தவனுடை: தவன் உடை(ய); தரனுடை: தரன் உடை(ய); கடைசி அடியை ‘எவனுடைப் பயமும் இலாது இனிது இருந்திடும் தன்மையது எழில் நகரே’ எனப் பிரித்துக் கொள்ளவும்.

அ. சொற் பொருள்

அளகேசன்: குபேரன்.  அட்ட திக்கு பாலகர்களைப் பற்றி முன்னரே கண்டோம்.  வடக்கு திசையின் அதிபதி குபேரன்.  அளாகாபுரியை ஆள்பவன் என்பதனால் அளகேசன் என்பதும் அவனுடைய பெயரே.  

பல தரன் உடைத் தொழில் செய்யும் மாசனம்: பல தரப்பட்ட தொழில்களைச் செய்யும் பெருமக்கள்.  

ஆ. இலக்கணம்

தவன், தரன் ஆகியவை முறையே தவம், தரம் ஆகிய சொற்களின் வேறு வடிவங்கள்.  

எவன்செய இனிய இவ் அழகை எய்தினான்
அவம் செயத் திரு உடம்பு அலச நோற்கிறான்
நவம் செயத் தகைய இந் நளின நாட்டத்தான்
தவன் செயத் தவன்செய்த தவனென்.

சூர்ப்பனகை, இராமனைப் பார்த்த பார்வையில் அவன் மீது கொண்ட காதலில் தனக்குள் சொல்லிக் கொள்வது இது.  ‘என்ன காரியத்தைக் கருத்தில் கொண்டு, இந்த அழகு வீணாகும்படி, தன் உடலை வருத்திக் கொண்டு, தவ வடிவம் தாங்கி, தவம் மேற்கொண்டிருக்கிறான்?  புதிய தாமரை மலர்களைப் போன்ன அழகான கண்களை உடைய இவன் தவம் செய்ய வந்திருப்பது, ‘தவம்’ என்பதாகிய செயல் செய்திருக்கும் தவம்.’

இ. யாப்பு

நொண்டிச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

அந்தணர் வீதிகள் ஆயின.  அடுத்ததாக மறவர் வீதிகள்.  இப்போது வணிகர் வீதிகள்.  அத்தினபுரத்தில் இருக்கும் வணிகர்களிடம் புரளும் செல்வம் எப்படிப்பட்டதென்றால், குபேரனுடைய செல்வம் எவ்வளவோ, அவ்வளவு செல்வமும் இவர்களுடைய ஒவ்வொரு ஆவணத்திலும் சர்வ சகஜமாகப் புழங்குமாம்.  குபேர சம்பத்து எவ்வளவோ, அவ்வளவுதான் இவர்களுடைய ஆவணங்களில் புழங்கும் குறைந்தபட்சத் தொகையே.  [‘ஐநூறு ரூபாய் நோட்டுக்குச் சில்லறை இருக்குமா,’ என்று ஒருவன் – தன்னிடம் உள்ள பெரும் செல்வப் புழக்கத்தைக் காட்டிக் கொள்வதற்காகக் – கேட்டானாம்.  ‘ஐநூறு ரூபாய்தான் இங்க சில்லறையே’ என்று பதில் வந்ததாம். :-)]

வணிகர் வீதிகளையும், நான்காவது வருணத்தவர் வீதிகளையும் இந்தப் பாடலில் பேசுகிறான் கவி.  ‘பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை,’ என்று பெருமிதம் ததும்பப் பேசுதலன்றி, மற்ற தருணங்களில் அந்தச் சொல்லைப் பயன்படுத்தப் பெரிதும் தயங்கியவன் பாரதி.  ‘பல தரனுடைத் தொழில் செயும் மாசனமும்,’ பல வகையான தொழில்களைச் செய்யும் பெருமக்களும் என்று நான்காவது வருணத்தைக் குறிக்கின்றான்.

வேத மறிந்தவன் பார்ப்பான் – பல
    வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலைதவ றாமல் – தண்ட
    நேமங்கள் செய்பவன் நாய்க்கன்.

பண்டங்கள் விற்பவன் செட்டி – பிறர்
    பட்டினி தீர்ப்வன் செட்டி

என்று மூன்று வருணங்களையும் குறிப்பிட்டவன், நான்காவது வருணத்தைச் சொல்ல நேர்ந்த சமயத்தில்:

‘தொண்டர் என்று ஒரு வகுப்பு இல்லை.  தொழில் சோம்பலைப் போல் இழிவு இல்லை’ என்று ஒரே போடாகப் போடுவதைக் காணலாம்.

‘பல தரனுடைத் தொழில் செயும் மாசனமும்’ என்ற தொடருக்குக் குறிப்பெழுதும் போது, ‘மஹா ஜனங்கள்.  பொதுப்படையான குடிகள்.  இவர்களே தேசத்திற்கு உயரிராவர்.  இவர்களைச் ‘சூத்திரர்’ என்பது தற்கால வழக்கு.  ‘சூத்திரர்’ என்ற பெயரைச் சில மூடர் இழிவான பொருளில் வழங்குவது பற்றி நூலில் அப்பெயர் தரவில்லை.’

பாரதி வைத்திருந்த, திருத்தம் செய்த, முதற் பதிப்பின் அச்சுப்படியில், ‘இவர்களைச் சூத்திரர்…… தரவில்லை,’ என்ற வரி (பாரதியால்) நீக்கப்பட்டிருப்பதாகத் தஞ்சைப் பல்கலைக் கழக ஆய்வுப் பதிப்பு சொல்கிறது.  

துரியோதனன் சபை*

கன்னங் கரியதுவாய் – அகல்
    காட்சியதாய் மிகு மாட்சியதாய்
துன்னற் கினியதுவாய் – நல்ல
    சுவைதரு நீருடை யமுனையெனும்
வன்னத் திருநதியின் – பொன்
    மருங்கிடைத் திகழ்ந்தவம் மணிநகரில்
மன்னவர் தம்கோமான் – புகழ்
    வாளரவக் கொடி உயர்த்துநின்றான். (15)

பதம் பிரித்து:

துன்னற் கினியதுவாய்: துன்னற்கு இனியதுவாய்.  திகழ்ந்தவம் மணிநகர்: திகழ்ந்த அம் மணி நகர்

அ. சொற் பொருள்
துன்னல்: 1) நெருங்கி இருத்தல்; அருகில் இருத்தல்; அடைதல்.  2) சிறு துளி; திவலை.  

மருங்கு: பக்கத்தில், பக்கவாட்டில்.  இந்த இடத்தில் கரையில் என்று பொருள்படும்.

வாள்: ஒளி பொருந்திய, கொடிய.  வாள் அரவம் என்ற காரணத்தால், ‘கொடிய’ என்ற பொருளே பொருந்தும்.

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

கருப்பு வண்ணமுடையது; அகன்றது; பெருமை உடையது; (கரையில்) அருகில் இருக்க இனியது; சுவையான நீரை உடையதான யமுனை நதியின் கரையில் மன்னவர்களுக்கெல்லாம் மன்னவனான துரியோதனன் கொடியதான பாம்பைக் கொடியாக உயர்த்தி நின்றான்.  

யமுனா நதிக்கு யமி என்றும் பெயர் உண்டு.  சூரியனுக்கும் சுவாகா தேவிக்கும் தோன்றியவள்.  சூரியன் யமனுக்குத் தந்தையானபடியால், யமுனை யமனுக்குத் தங்கை.  யமி என்றும், காளிந்தி என்றும் பெயர் கொண்ட நதி.  கரிய வண்ணத்தில் நீர் ஓடும் என்பர்.

துரியோதனனை மன்னவர் தம் கோமான் என்று கவிஞன் அறிமுகப்படுத்தினாலும், அவன் முழு அதிகாரமும் கொண்ட அரசனாய் இயங்கினவனில்லை.  பல விஷயங்களுக்குத் தந்தையையும், சில விஷயங்களுக்கு வீட்டுமரையும் சார்ந்தே நின்றிருந்தான்.  அவன் காலம் முழுவதும் சக்ரவர்த்தியாக திருதிராட்டிரன் வீற்றிருக்கையில், சக்ரவர்த்தியைச் சார்ந்தே இயங்க வேண்டிய இளவலாகப் பல இடங்களில் காட்சி தருகிறான்.  

*இக் கிளைத்தலைப்பு பாரதியால் தரப்பட்டதன்று. பாரதி பிரசுரம் பின்னாளில் தந்தது.

துரியோதனப் பெயரான் – நெஞ்சந்
    துணிவுடையான் முடி பணிவறியான்
கரியோர் ஆயிரத்தின் – வலி
    காட்டிடு வோன்என்றந்தக் கவிஞர்பிரான்
பெரியோன் வேதமுனி – அன்று
    பேசிடும் படிதிகழ் தோள்வலியோன்
உரியோர் தாமெனினும் – பகைக்
    குரியோர் தமக்குவெந் தீயனையான். (16)

பதம் பிரித்து: தேவையில்லை.

அ. சொற் பொருள் –

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

முதல் பாடல் யாரைச் சொல்கிறது என்பது விளக்கம் பெறுகிறது.  துரியோதனன் நெஞ்சத்தில் அசாத்தியத் துணிவும், வணங்குதற்கு உரியாரையும் வணங்காத அகங்காரமும் கொண்டவனாக இருந்தான்.  ‘ஆயிரம் யானைகளின் வலிமையைக் கொண்டவன்,’ என்று வேதங்களைத் தொகுத்தவரும், பாரதத்தை இயற்றிய கவிஞருமான வியாசர் போற்றும்படியாகத் திகழ்ந்த வலிமையை உடையான்.  உறவினரே என்றாலும், பகைக்கு உரியவராய் நிற்கும்போது அவர்களுக்கெல்லாம் வெம்மையான தீயைப் போன்றவன்.

தந்தைசொல் நெறிப்படியே – இந்தத்
    தடந்தோள் மன்னவன் அரசிருந்தான்
மந்திரம் உணர்பெரியோர் – பலர்
    வாய்த்திருந் தாரவன் சபைதனிலே
அந்தமில் புகழுடையான் – அந்த
    ஆரிய வீட்டுமன் அறமறிந்தோன்
வந்தனை பெறுங்குரவோர் – பழ
    மறைக்குல மறவர்கள் இருவரொடே, (17)

மறைக்குல மறவர் – கிருபர், துரோணர்

பதம் பிரித்து:

அ. சொற் பொருள்: குரவோர்: தாய், தந்தை, தனயன், அரசன், குரு என்பவர் ஒருவனுக்கு ஐம்பெருங் குரவர்களாகின்றனர்.  இந்த இடத்தில் குரு என்று பொருள்படும்.

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

துரியோதனன், தன் தந்தையின் சொல்லும் வழியில் ஆட்சி செலுத்திவந்தான்.  மந்திரம் (ஆலோசனை) வல்லவ பெரியவர்கள் அவன் சபையில் இருந்தனர்.  முடிவற்ற புகழை உடைய பெரியவனான வீட்டுமன் இருந்தான்.  வணக்கத்துக்கு உரிய ஆசிரியர்களான, மறை ஓதும் குலத்தில் பிறந்து வில் பிடிக்கும் தொழிலைச் செய்யும் மறவர்களான கிருபரும், துரோணரும் அங்கே இருந்தனர்.

சரத்வான் என்ற முனிவருக்குக் காட்டில் பிறந்தவர்கள் கிருபரும் அவருடைய தங்கை கிருபியும்.  பிறந்த சில தினங்களிலேயே சந்தனுவால் கண்டெடுக்கப்பட்டு அரண்மனைக்குக் கொண்டுவரப்பட்டு அங்கே வளர்ந்தவர்கள்.  கிருபர் ஆயுதப் பயிற்சி பெற்றது இவ்வாறுதான்.  பரத்துவாஜ முனிவரின் மகனான துரோணருக்கு கிருபியை மணமுடித்தனர்.  எனவே துரோணர், கிருபருக்கு மைத்துனர் முறை.  துரோணர் அத்தினபுரத்துக்கு வந்து சேரும் வரையில் கிருபரே கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஆயுதப் பயிற்சி முதலானவற்றைக் கற்றுத் தந்தவர்.  ஆகவே இவர்கள் இருவருமே பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் ஆசிரியர்கள்.

மெய்ந்நெறி உணர்விதுரன் – இனி
    வேறுபல் லமைச்சரும் விளங்கிநின்றார்
பொய்நெறித் தம்பியரும் – அந்தப்
    புலைநடைச் சகுனியும் புறமிருந்தார்
மைந்நெறி வான்கொடையான் – உயர்
    மானமும் வீரமு மதியுமுளோன்
உய்ந்நெறி யறியாதான் – இறைக்
    குயிர்நிகர்க் கன்னனும் உடனிருந்தான். (18)

பதம் பிரித்து: தேவையில்லை

அ. சொற் பொருள்: புலை நடை: கீழான வழிகளை மேற்கொண்டு நடக்கும் இழிகுணம்.  
மைந்நெறி: மை: கருமேகம்.  சூல்கொண்ட மேகம் போன்ற கொ¨டைய உடையவன்.

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நொண்டிச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

மெய்வழியை உணர்ந்தவனான விதுரன் அங்கே இருந்தான்.  மற்ற அமைச்சர்கள் இருந்தார்கள்.  இவனுக்கு நேர் மாறாக, பொய் வழியே தம் வழி என்று நடக்கும் துச்சாதனன் முதலான தம்பியர்கள் அங்கே இருந்தார்கள்.  கருக் கொண்ட மேகம் போல் பொழியும் கொடையும், மானமும், வீரமும் அறிவும் நிறைந்தவனும்; இத்தனை இருந்த போதிலும் தீயவர்களின் வழியையும் நட்பையும் விட்டு விலகும் வழியை அறியாதவனுமான கர்ணன் அங்கே இருந்தான்.  துரியோதனனின் உயிரல்லவா அவன்.

மாண்டவ்யர் என்றொரு முனிவர் இருந்தார்.  மிகவும் போற்றப்பட்ட அவர் ஒரு நாள் நிஷ்டையில் இருக்கும் போது, அரசியின் நகைகளைத் திருடிக் கொண்டு வந்த திருடன் ஒருவன் அந்த வழியாக ஓடி வந்தான்.  வீரர்களால் துரத்தப்பட்ட அவன், மாண்டவ்யரின் பர்ணசாலைக்குள் நகைகளைப் போட்டுவிட்டு ஓடிப் போனான்.  நகைகளைப் பர்ண சாலையில் கண்டெடுத்த வீரர்கள், ‘இவை எவ்வாறு இங்கே வந்தன,’ என்று மாண்டவ்யரைத் திரும்பத் திரும்பக் கேட்டனர்.  நிஷ்டையில் இருந்த மாண்டவ்யரின் காதில் இந்தக் கேள்வி விழவில்லை.  ‘திருடன் நடிக்கிறான்,’ என்றெண்ணி நகைகளை மீட்டுக்கொண்டு அரசனிடம் சென்று விவரத்தைக் கூறினர்.  

மாண்டவ்யரைக் கழுவேற்றச் சொல்லி உத்திரவிட்டான் அரசன்.  உலக்கையைத் திருப்பி வைத்து நட்டாற் போன்ற வடிவத்தில் இருக்கும் கழு மரத்தின் கூர் முனையில் தண்டனை பெற்றவனை அமர்த்தி விடுவார்கள்.  குதத்தின் வழியாக உள்ளே நுழையும் கழு மரத்தின் கூர் முனை, கழுத்தின் அருகே துளைத்துக் கொண்டு வெளி வரும்.  இது நடந்து முடிய இரண்டு நாளாகும்.  மெதுவானதும், வேதனை நிரம்பியதுமான சாவு.  மாண்டவ்யரைக் கழுவேற்றிய நெடு நேரம் கழித்து, மக்கள் அவரை இன்னார் என்று அடையாளம் கண்டு கொண்டு, அரசனிடம் சென்று விவரம் சொல்லி, அரசன் ஓடி வந்து பார்ப்பதற்குள் பாதி உடலைத் துளைத்துக் கொண்டு வந்திருந்தது கழுமரம்.  கழுவிலிருந்து கீழே இறக்கி மன்னிப்புக் கேட்டான் மன்னன்.  அவ்வாறு இறக்கும் போது, கழு மரத்தின் ஒரு பகுதி (ஆணி) ஒடிந்து அவர் உடலிலேயே தங்கிவிட்டபடியால் அவருக்கு ‘ஆணி மாண்டவ்யர்’ என்ற பெயர் ஏற்பட்டது.

கழுமரத்திலிருந்து இறக்கப்பட்ட மாண்டவ்யர், மன்னனிடம் ஏதும் பேசவில்லை.  நேராக தரும தேவதையிடம் சென்றார்.  ‘எனக்கு இது ஏன் நேரிட்டது?’ என்று கேட்டார்.  ‘சிறு வயதில் நீர் தும்பிகளைப் பிடித்து, அவற்றின் வால் நுனியை வெட்டி, சிறு குச்சிகளைச் செருகி, அதில் நூல் கொண்டு கட்டி அவற்றைப் பறக்கச் செய்து விளையாடினீர்.  ஆகவே, இந்தத் தண்டனை நேர்ந்தது,’ என்றது தரும தேவதை.

‘அறியாத வயதில் செய்த செயலுக்கு இவ்வளவு கடுமையான தண்டனை வழங்குவதா?  உனக்கு தரும நெறிமுறையின் அளவு தெரியவில்லை.  மண்ணுலகத்தில் என்னைப் போல் மனிதனாய்ப் பிறப்பாய்.  நான் எவ்வாறெல்லாம் கழுமரத்தில் துன்பப்பட்டேனோ, அவ்வாறெல்லாம் மனத்தளவில் துன்பப்பட்டு, புண்பட்டு வருந்துவாய்,’ என்று சாபமிட்டார் மாண்டவ்யர்.

அந்தச் சாபத்தினால் பூமியில் வந்து பிறந்த தரும தேவதைதான் விதுரன்.  யுதிஷ்டிரனாவது தரும புத்திரன்.  கெளரவர்கள் பக்கம் தரும தேவதையே வந்து நின்றுகொண்டிருந்தது.  அதனால்தானோ என்னவோ அவர்கள் பக்கம் சற்று உயர்ந்தே கோலோச்சிக் கொண்டிருந்தது.  

வேறு

எண்ணி லாத பொருளின் குவையும்
    யாங்க ணுஞ்செலும் சக்கர மாண்பும்
மண்ணி லார்க்கும் பெறலரி தாமோர்
    வார்க டற்பெருஞ் சேனையு மாங்கே
விண்ணி லிந்திரன் துய்ப்பன போன்று
    வேண்டு மின்பமும் பெற்றவ னேனும்
கண்ணி லாத்திரி தராட்டிரன் மைந்தன்
    காய்ந்த நெஞ்சுடன் எண்ணுவ கேளீர். (19)

பதம் பிரித்து:

எண் இலாத பொருளின் குவையும்
    யாங்கணுஞ் செலும் சக்கர மாண்பும்
மண்ணில் ஆ(யா)ர்க்கும் பெறல் அரிதாம் ஓர்
    வார்கடல் பெரும் சேனையும் ஆங்கே
விண்ணில் இந்திரன் துய்ப்பன போன்று
    வேண்டும் இன்பமும் பெற்றவ னேனும்
கண் இலாத் திரிதராட்டிரன் மைந்தன்
    காய்ந்த நெஞ்சுடன் எண்ணுவ கேளீர்.

அ. சொற் பொருள்

வார்கடல்: நெடுங் கடல்.  வார்: நீண்ட, நேரான, நெடும்.

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

எண்சீர் விருத்தம் என்று பாரதி குறித்திருக்கும் கட்டளைக் கலிப்பா.  கட்டளைக் கலிப்பாக்களுக்கு எழுத்துக் கணக்கு உண்டு.  (கட்டளை என்று தொடங்கும் எல்லா வகைப் பாவினமும் ஒவ்வொரு அடியிலும் ஒரே அளவான எழுத்துகளோடு இருக்கும்.)  எண்சீர் விருத்தத்துக்கும் கட்டளைக் கலிப்பாவுக்கும் உள்ள ஒரே வேற்றுமை, ‘சந்தத்ததால் அளவொத்து வருவது விருத்தம்; எழுத்தால் அளவொத்து வருவது கட்டளைக் கலிப்பா.’  மற்றபடி இவை இரண்டும் ஒரே மாதிரியான அமைப்பை உடையவ¨தாம்.  மேற்படிப் பாவில் எழுத்தெண்ணிப் பார்க்கலாம்.  எண்ணும் போது, ஒற்று ஒழித்து எண்ண வேண்டும்.  அதாவது க், ச், ப், ந், ய், ல், போன்ற எல்லாப் புள்ளி எழுத்துகளையும் விட்டுவிட்டு எண்ண வேண்டும்.  ‘கடுகு’ என்ற சொல்லில் இருப்பது மூன்றெழுத்துகள்.  ‘கண்ணுக்குள்’ என்ற சொல்லில் இருப்பதும் மூன்றே எழுத்துகள்தாம்.  க ணு கு.  ண், க், ள் ஆகிய மூன்றையும் விட்டுவிட வேண்டும்.

இப்படி எண்ணினால், மேற்படிப் பாடலில் ஒவ்வோர் அடியிலும் இருபது எழுத்துகள் இருப்பதைக் காணலாம்.  ஒவ்வோர் அரை அடியிலும் பத்துப் பத்து எழுத்துகள் இருக்கின்றன.  (பதம் பிரிக்காத வடிவத்தில் எண்ணவும்.)  ஓர் அடி என்பது இரண்டு பாகங்களாகப் பிரிந்திருக்கிறது.  ‘எண்ணி லாத’ என்று தொடங்கி, ‘குவையும்’ என்பது வரை அரை அடி.  அதற்கு அடுத்ததாக ‘யாங்கணும்’ என்று தொடங்குவதும் அதே முதல் அடிதான்; சற்றே உள்ளே மடக்கிப் போட்டிருப்பதால் இதனை ‘மடக்கடி’ என்று சொல்வார்கள்.  இது முதல் அடியின் இரண்டாவது அரை அடி.  ஒரே நீண்ட அடியாகவும் இந்தப் பாடலை எழுத முடியும்.  அதாவது இப்படி:

எண்ணி லாத பொருளின் குவையும் யாங்க ணுஞ்செலும் சக்கர மாண்பும்
மண்ணி லார்க்கும் பெறலரி தாமோர் வார்க டற்பெருஞ் சேனையு மாங்கே
விண்ணி லிந்திரன் துய்ப்பன போன்று வேண்டு மின்பமும் பெற்றவ னேனும்
கண்ணி லாத்திரி தராட்டிரன் மைந்தன் காய்ந்த நெஞ்சுடன் எண்ணுவ கேளீர்.

ஐந்து சீர்களுக்கு மேல் போகும் எல்லா விருத்தங்களிலும், சிந்துப் பா வகைகளிலும் ஓரடியை இரண்டாகப் பிரித்து, இரண்டாவது அரை அடியை மடக்கி எழுதுவார்கள்.  பார்வைக்கு எடுப்பாக இருக்கும் என்பதுதான் இதன் பயன்.  வேறு எந்தவிதமான நோக்கமோ, அமைப்புக் கட்டுப்பாடோ கிடையாது.  இது ஒரு பதிப்புச் செளகரியம் (publishing convenience).  அவ்வளவுதான்.  

மேற்படி கட்டளைக் கலிப்பா ‘எண்’ என்று நேரசையில் தொடங்கியிருக்கிறது.  அடிக்கு இருபது எழுத்துகள் பயிலும்.  நிரையசையில் தொடங்கும்போது அடிக்கு இருபத்தோ ரெழுத்து இருக்கும்.  பேராசிரியர் ம. ரா. போ. குருசாமி அவர்கள் கொடுத்திருக்கும் குறிப்பிலிருந்து:

“எண்சீர் கொண்ட நாலடிப் பாடல்களில் இரண்டு வகை உண்டு.  ஒன்று எண்சீர்க் கழி நெடில் அடி ஆசிரிய விருத்தம்.  மற்றொன்று, கட்டளைக் கலிப்பாவாகும்.  இக் கட்டளைக் கலிப்பாவினை இனம் காணும் முறை: நேரசையில் தொடங்கும் அரையடியில் ஒற்று நீக்கி எண்ணுமிடத்துப் பதினோரெழுத்து இருக்கும்; நிரையசையில் தொடங்கும் அரையடியில் பன்னிரண்டு எழுத்து இருக்கும்.  காப்பியங்களில் இவ்வகையைக் காணலாம்.  பாரதியாரிலும் இப் பாடல்கள் பல. … … … … … … … … மரபு வழிப்பட்ட இவையேயன்றி நேரசையில் தொடங்கும் அரையடிக்குப் பத்தெழுத்தும், நிரையசையில் தொடங்கும் அரையடிக்குப் பதினோரெழுத்தும் கொண்ட புதுவகையான கட்டளைக் கலிப்பாக்களும் பாரதியாரில் உள்ளன.”

எழுத்துக் கணக்கெல்லாம் பார்த்து எழுதினால் அந்தப் பாட்டில் உயிர் எப்படி இருக்கும், கவிதை எப்படி இருக்கும், உணர்ச்சி எப்படி இருக்கும் என்றெல்லாம் விமரிசிப்பவர்களும், கவலைப் படுபவர்களும் இதைப் பார்க்கவும்:

நெரித்த திரைக்கடலில் நின்முகங்கண்டேன்;
    நீல விசும்பினிடை நின்முகங்கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங்கண்டேன்;
    சின்னக் குமிழிகளில் நின்முகங்கண்டேன்;
பிரித்துப் பிரித்துநித மேகமளந்தே
    பெற்றதுன் முகமன்றிப் பிரிதொன்றில்லை.
சிரித்த ஒலியினிலுன் கைவிலக்கியே
    திருமித் தழுவியதில் நின்முகங்கண்டேன்.

(கண்ணம்மா என் காதலி – பின்னே வந்து கண் மறைத்தல்.)

ஒவ்வோர் அடியையும் எழுத்தெண்ணிப் பாருங்கள்.  ‘நெரித்த’ என்று நிரையசையில் தொடங்கும் இந்தத் தரவில் ஒவ்வோர் அரையடிக்கும் பன்னிரண்டும், பதின்மூன்றுமாக எழுத்துகள் அமைந்திருப்பதைக் காணலாம்.  உங்கள் வசதிக்காக ஒற்று நீக்கிக் கணக்குப் போட்டும் காட்டுகிறேன்.  

நெரித திரைகடலி நிமுககடே
 3          5            5 = 13
    நீல விசுபினிடை நிமுககடே
              2     5                 5 = 12
திரித நுரையினிடை நிமுககடே;
   3         5             5 = 13
    சின குமிழிகளி நிமுககடே;
               2      5         5 = 12
பிரிது பிரிதுநித மேகமளதே
  3        5           5 = 13
    பெறது முகமறி பிரிதொறிலை.
                 3     4          5 = 12

சிரித ஒலியினிலு கைவிலகியே
   3        5           5 = 13
    திருமி தழுவியதி நிமுககடே.
                 3      5          5 = 13.

இந்தக் கவிதையில் இருந்து கடைசித் தரவை மட்டும் தந்திருக்கிறேன்.  நான்கு தரவுகளை (stanza) கொண்ட இந்தக் கவிதை முழுவதிலும் இந்த அமைதி பொருந்தி வரும்.  இந்தப் பாடலில் உணர்ச்சி இல்லையா, அழகில்லையா, கவிதையில்லையா?  முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.  

ஈ. பாடல் சொல்வது

எண்ணில் அடங்காத பொருட்களின் குவியலும், எல்லா இடத்திலும் செல்லுபடியாகும் அரச அதிகாரத்தின் பெருமையும், உலகத்தில் வேறு யாருக்கும் கிடைப்பதற்கு அரிதான நீண்ட கடலை ஒத்த சேனையையும், இந்திர போகம் என்று சொல்லத் தக்க எல்லா வகையான இன்பங்களையும் அனுபவிப்பவனே ஆனாலும், கண் இல்லாதவனான திருதிராட்டிரனின் மகன் நெஞ்சில் ஈரம் இல்லை; பசை இல்லை.  வற்றிக் காய்ந்த நெஞ்சை உடையனாக இருந்தான் – பாண்டவரிடத்தில்.  அப்படிப் பட்ட காய்ந்த நெஞ்சோடு அவன் எண்ணுவதைக் கேளுங்கள்.  

வேறு

பாண்டவர் முடியுயர்த்தே – இந்தப்
    பார்மிசை உலவிடு நாள்வரைநான்
ஆண்டதொர் அரசாமோ – என
    தாண்மையும் புகழுமொர் பொருளாமோ
காண்டகு வில்லுடையான் – அந்தக்
    காளையருச்சுனன் கண்களிலும்
மாண்டகு திறல் வீமன் – தட
    மார்பிலும் எனதிகழ் வரைந்துளதே. (20)

பதம் பிரித்து: காண்டகு: காண்தகு;   மாண்டகு: மாண் தகு

அ. சொற் பொருள்

காண்டகு: காணத் தகுந்த.  மாண்டகு: மாண்பினால் தகுதி வாய்ந்த.  

ஆ. இலக்கணம்

மாண்டகு: ஆல் என்ற மூன்றாம் வேற்றுமை தொக்கு நின்றதால் மூன்றாம் வேற்றுமைத் தொகை.

இ. யாப்பு

சந்தம் முந்தைய பாடலினின்று மாறுபடுவதைப் பார்க்கலாம்.  மறுபடியும் நொண்டிச் சிந்து வடிவத்துக்கு வந்திருக்கிறது.  இனி, பாடல் 37 வரை நொண்டிச் சிந்துதான்.

ஈ. பாடல் சொல்வது

அரசர்கள் என்ற தகுதியோடு பாண்டவர்கள் ஆட்சி செய்யும்வரையில், நான் ஆண்டது ஓர் அரசா?  என் ஆண்மை, புகழ் எல்லாம் ஒரு பொருளா?  காணத் தகுந்தவனும் வில்லாளுமான அருச்சுனம் கண்களிலும், பெருமை பொருந்திய திறலுடைய வீமனின் மார்பிலும் என் அவமானம் எழுதி வைக்கப்பட்டிருக்கிறதே!

எங்கேயோ காட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் பாண்டவர்கள்.  குரு வம்சத்தினரின் அரசு பாண்டுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது, அண்ணன் திருதிராட்டிரன் பார்வையற்றவன் என்ற ஒரே காரணத்தால்.  ஆகவே, பாண்டுவின் அரசு – ஒரு வகையில் பார்த்தால் – காபந்து அரசு (caretaker government).  ஆனால், குரு வம்சத்தின் ஆட்சி மிக விரிவாகப் பரவுவதற்குப் பாண்டு பெரிய காரணனாய் இருந்தான்.  குரு வம்சத்தின் சாம்ராஜ்ஜியத்தைத் தன் போராற்றலால் விரிவுபடுத்தினான்.  ஆகவே, இன்னொரு வகையில் பாண்டுவின் வம்சம் ஆட்சிக்கு உரிமையுடையதாக ஆகிறது.  ஆட்சிப் பொறுப்பை திருதிராட்டிரனிடத்தில் ஒப்படைத்துவிட்டு, பாண்டு வனவாசம் மேற்கொண்டிருந்தாலும், துரியோதனனுக்கு ஒரு வருடத்துக்கு முன்னால் பிறந்துவிட்டபடியால், தருமனுக்கு ஆட்சி உரிமை தானாகவே வந்து அமைகிறது.  இப்படிப்பட்ட பல சிக்கல்களுக்கு உரியதாக இருந்தது குரு வம்சத்தின் மகுடம்.

பாண்டவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் எங்கோ காட்டகத்தில்.  பாண்டு இறந்து, குந்தியும் பாண்டவர்களும் அத்தினபுரத்துக்குத் திரும்பியபோது தருமருக்குப் பதினாறு வயது.  வீமனுக்கும் துரியோதனனுக்கும் பதினைந்து வயது.  பிறந்தது முதல், ‘இவர்கள் வரமாட்டார்கள்; ஆட்சி முழுவதும் தன்னுடையது மட்டுமே,’ என்ற எண்ணத்தில் வளர்ந்தவனானபடியாலே துரியோதனனுக்கு, ‘குரு வம்சத்தின் மகுடத்தை இவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும்,’ என்ற எண்ணம் தாங்க முடியாத சினத்தையும், பொறாமையையும் விளைத்தது.  

அவனுடைய எண்ணத்தில் தருமன் ஒரு கோழை.  எப்போது பார்த்தாலும், எடுத்ததற்கெல்லாம் அற வழியைப் பற்றிப் பேசுபவன் கோழையாகவும், கையாலாகதவனாகவும்தானே இருக்க முடியும்!  ‘இவனுக்குப் போய் ஆட்சியா,’ என்று கொதித்துக்கொண்டிருந்தவன் திருப்தி அடையுமாறு காண்டவ வனத்தைப் பாண்டவர்களுக்குக் கொடுத்தான் திருதிராட்டிரன்.  குரு வம்சப் பேரரசின் அளவினால் பாதி அளவுக்கு விரிந்து கிடந்தது காண்டவ வனம்.  பாதி ராஜ்ஜியம் கொடுத்த கணக்கு.  கொடுத்தது என்னவோ, ஒன்றுக்கும் உதவாத, மக்கள் யாரும் வாழாத காடு.  அந்தக் காட்டைத் திருத்தி நாடாக்கி, இந்திரப் பிரஸ்தம் செய்து, திக்குவிஜயங்களால் தங்களுடைய ஆட்சியை விரிவுபடுத்திக் கொண்டனர் பாண்டவர்.  அதுவே பொறுக்க முடியவில்லை துரியோதனனுக்கு.  தருமன் செய்த ராஜசூய யாகத்துக்குச் சென்று திரும்பியிருக்கிறான் துரியோதனன்.  அங்கே தருமனுக்குச் செய்யப்பட்ட சிறப்புகளைக் காணக் காணப் பொறுக்க முடியாமல் வெதும்பிக்கொண்டிருந்தான்.  தன் மாளிகைக்குத் திரும்பியவுடன், தனிமையில் அந்த வெப்பம் வெளிப்படுகிறது.

அவனை வருத்தியதெல்லாம் தருமனின் உயர்வுமட்டுமல்ல.  தருமன் ஒரு கோழை.  அவனைப் பற்றி ஏதுமில்லை.  இருந்தாலும் இப்படிப்பட்ட, ஆற்றலில்லாத ஒருவனைப் போய் அத்தனை மன்னர்களும் விழுந்து விழுந்து வணங்கினர் என்பது சொல்லவொண்ணா சினத்தை ஏற்படுத்தியது.  ‘இவன் என்ன, தன்னுடைய தோள் வலியினாலா, தகுதியினாலா அத்தனைச் சிறப்புகளையும் பெற்றான்?  அங்கே இரண்டு பேர் இருக்கிறார்களே, அவர்களலல்லரா இத்தனைக்கும் காரணம்?  சிறப்பு வாய்ந்த வில்லை உடைய அருச்சுனனுடைய கண்களிலும், கதாயுதப் பிரயோகத்தில் ஆற்றல் மிகுந்தும் திகழ்ந்த வீமனின் மார்பிலுமல்லவா இவனுடைய அவமானம் வரைந்து வைக்கப்பட்டிருக்கிறது!

தருமன் ஒரு பொருட்டில்லை.  நகுல சகதேவர்கள் – துரியோதனனைப் பொருத்தமட்டில் – சிறுவர்கள்.  அவனுடைய கவலையெல்லாம் இந்த இருவரைச் சுற்றிதான்.  கதாயுதப் பயிற்சியில் சிறந்த வீமனுக்குத் தானே மாற்று என்றாலும், வில் பயிற்சியில் தேர்ச்சியுள்ள ஒருவன் அவனுக்குத் தேவைப்பட்டான்.  ‘அர்ச்சுனனுக்கு மாற்று இவனே,’ என்று பார்த்த பார்வையில் கர்ணனைத் தன் நண்பனாக்கிக் கொண்டதற்குக் காரணம் இதுதான்.  (கர்ணன், ஆரம்ப காலத்தில் துரோணரிடம் பயிற்சி பெற்றவன்தான்.)

பாரத நாட்டிலுள்ள – முடிப்
    பார்த்திவர் யார்க்குமொர் பதியென்றே
நாரதன் முதன்முனிவோர் – வந்து
    நாட்டிடத் தருமனவ் வேள்விசெய்தான்
சோரனவ் வெதுகுலத்தான் – சொலுஞ்
    சூழ்ச்சியும் தம்பியர் தோள்வலியும்
வீரமிலாத் தருமன் – தனை
    வேந்தர்தம் முதலென விதித்தனவே. (21)

பதம் பிரித்து:

சோரனவ் வெது குலத்தான்: சோரன் அவ் எது (யது) குலத்தான்.

அ. சொற் பொருள் –

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

‘பாரத நாட்டில் உள்ள அத்தனை மன்னவருக்கும் மன்னன் இவனே,’ என்று நாரதர் முதலான முனிவர்கள் வந்து சொல்லும்படியாக தருமன் இராஜசூய வேள்வியைச் செய்தான்.  இவனுக்கு என்ன தகுதியிருக்கிறது?  இவன் கொஞ்சமும் வீரமற்றவன்.  யது குலத்தைச் சேர்ந்த அந்தத் திருட்டுப் பயலின் சொல்லும், சூழ்ச்சித் திறனும், தம்பியருடைய தோள் வலிமையும் இந்தத் தகுதியற்றவனை வேந்தர்க்கெல்லாம் வேந்தன் என்று விதித்திருக்கின்றன.  (இவ்வளவு தகுதி எனக்கிருக்கிறதே, என்ன பயன்!)

யது குலம் என்பது யயாதியின் ஐந்து பிள்ளைகளில் ஒருவனான யதுவின் வம்சம்.  யதுவின் முதல் மனைவி, சுக்கிராசாரியாரின் மகளான தேவயானி.  இரண்டாவது மனைவி, சுக்கிராசாரியார் அரச குருவாக இருந்த விருஷபர்வா என்ற அசுர மன்னனின் பெண்ணான சர்மிஷ்டை.  யயாதிக்கும் தேவயானிக்கும் பிறந்தவர்கள் யது, துர்வசு என்ற இருவர்.  யயாதிக்கும் சர்மிஷ்டைக்கும் பிறந்தவர்கள் த்ருக்யு, அணு, பூரு என்ற மூவர்.  இவர்களில் யயாதிக்குத் தன் இளமையைத் தந்தவன் புரு என்ற சர்மிஷ்டை மைந்தன்.

யதுவின் குலமே யது குலம்.  துர்வசுவின் வம்சம் யவனர்கள்.  திருக்யுவின் பரம்பரை போஜர்கள் என்றறியப்பட்டது.  அணுவின் குலம் மிலேச்சர்கள்.  பூருவின் வம்சமே பெளரவ வம்சம்.  பெளரவ வம்சத்தில் வந்தவர்கள்தாம் துஷ்யந்தன், பரதன் போன்ற மாமன்னர்கள்.  இந்த வம்சத்தில்தான் பரதனுக்குப் பிள்ளையாக குரு (Kuru) தோன்றினான்.  குருவின் மகன் பிரதீபன்; பிரதீபனின் மகன் சந்தனு; சந்தனுவின் பிள்ளைகள் தேவ விரதன் (பீஷ்மர்) சித்திராங்கதன், விசித்திர வீரியன்.  ‘நீ எப்படி என் பெயரை வைத்துக் கொள்ளலாம்,’ என்று சித்திராங்கதனை, அதே பெயருள்ள ஒரு கந்தர்வன் வம்புக்கிழுத்து, போர் புரிந்து கொன்றான்.  விசித்திர வீரியன் க்ஷயரோகத்தால் இறந்தான்.  பின்னரே திருதிராஷ்டிரன், பாண்டு, விதுரன் ஆகியோர் பிறந்தனர்.

குருவின் வம்சமானபடியால் இது கெளரவ (Kaurava) வம்சமானது.  பாண்டவர்களும் கெளரவ வம்சத்தினரே.  பாண்டுவுக்குப் பிறந்த கெளரவர்கள் அவர்கள்.  

வியாச பாரதத்தில் சம இடம்:  தொடக்க கட்டத்தில், துரியோதனனுடைய பொறாமை மொழிகளில் பலவற்றையும், சகுனி, ‘பாண்டவர்களிடம் பொறாமை கொள்ளாதே’ என்று அவனுக்கு உபதேசித்ததையும் பாரதி விட்டுவிட்டான்.  துரியோதனுடைய பொறாமை மொழிகளை மட்டும் மிகச் சுருக்கமாக, தொடக்கத்தில் ஒன்றும் முடிவில் ஒன்றுமாக கோத்திருக்கிறான்.

ம வீ இராமானுஜாசாரியாரின் மொழிபெயர்ப்பிலிருந்து, ஒவ்வொரு பாடலிலும் இடம்பெறும் வியாச பாரதக் கருத்துகளைத் தருகிறேன்.  இந்தப் பாடலில் உள்ளது:

(சகுனியிடம் பாண்டவர்களுடைய வளர்ச்சியைக் குறித்து தன் உள்ளத்தில் பொங்கும் உணர்வலைகளை துரியோதனன் சொல்லத் தொடங்குகிறான்.  இது முதல் வாக்கியம்.)

‘மாமா! இந்தப் பூமி முழுமையும் மகாத்மாவான அர்ச்சுனனுடைய அஸ்திரப் பிரதாபத்தினால் ஜயிக்கப்பட்டு, யுதிஷ்டிரனுக்கு உட்பட்டுப் போனதையும்…..’ இந்தப் பகுதி ‘தம்பியர் தோள்வலியும்’ என்று சுருங்கியிருக்கிறது.

பேச்சின் இறுதிப் பகுதியில், ‘கிருஷ்ணன் அவர்களிடம் அன்புகூர்ந்து அவர்களுக்குச் செல்வங்களை விருத்தி செய்கிறான்’ என்று வருகிறது.  இதுவே ‘சோரன் அவ்வெது குலத்தான்’ என்னும் செய்யுட் பகுதி.  (ஸபா பர்வம், 74ம் அத்யாயம், த்யூத பர்வம்.)

ஆயிர முடிவேந்தர் – பதி
    னாயிரம் ஆயிரம் குறுநிலத்தார்
மாயிரும் திறை கொணர்ந்தே – அங்கு
    வைத்ததொர் வரிசையை மறந்திடவோ
தூயிழை ஆடைகளும் – மணித்
    தொடையலும் பொன்னுமோர் தொகைப்படுமோ
சேயிழை மடவாரும் – பரித்
    தேர்களும் கொடுத்தவர் சிறுதொகையோ? (22)

பதம் பிரித்து: மாயிரும் – மாஇரும்; தூயிழை: தூஇழை

அ. சொற் பொருள்

இரு (மாயிரும்): பெரிய

திறை: கப்பம்

தொடையல்: மாலை.  மணிகளால் ஆன மாலை.  தொடை என்றால் மாலை.  தொடுக்கப்படுகின்ற காரணத்தால் தொடை.  இது மணிகளால் தொடுக்கப்பட்ட மாலை.

ஆ. இலக்கணம்

மாயிரு: மா என்றாலும், இரு என்றாலும் பெரிய என்று பொருள் வருவதால் இது ஒருபொருட் பன்மொழி.  (ஒரே பொருளில் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைப் பயன்படுத்துதல்.)  இந்த ‘மாயிரு’ குறளில் பயில்கிறது.  (திருக்குறளில் எவ்வளவு ஆழ்ந்த பயிற்சி உடையவனாக இருந்தான் என்பதை பாரதியின் உரைநடையில் நெடுகிலும் காணலாம்.)

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
(குறள்)

சிரிக்கத் தெரியாதவனுக்கு இந்தப் பெரிய உலகம், பகல் வேளையிலும் இருட்டாகத்தான் இருக்கும்.

 
இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

ஆயிரக்கணக்கான அரசர்களும், பத்தாயிரக் கணக்கான குறுநில மன்னர்களும் பெரிய பெரிய அளவில் தருமனுடைய வேள்விக்குக் கப்பமாகப் பொருள் கொண்டுவந்து கொட்டினார்கள்.  அந்த வரிசையை என்னால் என்றேனும் மறக்க முடியுமோ?  ஒரு பக்கத்தில் சிறந்த ஆடைகளின் குவியல்; இன்னொரு பக்கத்தில் வைர வைடூரியங்களால் ஆன மாலைகளின் குவியல்.  இன்னொரு பக்கத்தில் மன்னர்கள் கொண்டு வந்து அளித்த தாதிப் பெண்களின் வரிசை.  குதிரைகள், தேர்கள்… இப்படிக் கொண்டுவந்து கொடுத்தவர்கள் கொஞ்சமா?

நினைக்க ஆரம்பித்ததும், அங்கே இருந்த பரிசுப் பொருளெல்லாம் கண்முன்னால் தோன்றுகிறது துரியோதனனுக்கு.  தொடர்கிறான்.

வியாச பாரதத்தில் சம இடம்: ஸபா பர்வம், 74ம் அத்தியாயம், த்யூத பர்வம்:

‘அந்தத் தகாத பெருங்காரியம் கிருஷ்ணனால் செய்யப்பட்டது*. மகாத்மாவான பாண்டவர்களின் பராக்கிரமத்தினால் அது நிலைத்தது.  அதனாலேதான் அரசர்கள் பலவகை ரத்னங்களை எடுத்துக்கொண்டு வைசியர்களைப் போலக் கப்பங்கட்டி, குந்திபுத்திரனான தர்மராஜாவைச் சேவித்தனர்.  அவ்வாறு தர்மராஜனிடத்தில் ஜ்வலிப்பதுபோலப் பிரகாசித்த அந்த ராஜ்யலக்ஷ்மியைக் கண்டு நான் பொறாமைத் தீயினால் அகப்பட்டுக்கொண்டு தாபமுற்றிருக்கிறேன்.’ *தகாத காரியம்: சிசுபாலனைக் கொன்றது.

ஆணிப்பொன் கலசங்களும் – ரவி
    அன்னநல் வயிரத்தின் மகுடங்களும்
மாணிக்கக் குவியல்களும் – பச்சை
    மரகதத் திரளுநன் முத்துக்களும்
பூணிட்ட திருமணிதாம் – பல
    புதுப்புது வகைகளில் பொலிவனவும்
காணிக்கையாக் கொணர்ந்தார் – அந்தக்
    காட்சியை மறப்பது மெளிதாமோ? (23)

பதம் பிரித்து:

அ. சொற் பொருள்

ஆணிப்பொன்: உயர்ந்த மாற்றுப் பொன்.  ஆங்கிலத்தில் தங்கத்தின் தரத்தை carat அளவில் குறிப்பதைப் போல், பொன்னின் உயர் தரத்தைக் குறிக்கப் பயன்படும் சொல்.  ‘ஆணி’ என்ற சொல்லுக்கு ‘உரைகல்’ (touchstone) என்றும் ஒரு பொருள் உண்டு.  ஆகவே, ஆணிப்பொன், ஆணிமுத்து ஆகியவை உயர்ந்த தரத்தைக் குறிக்கின்றன.  ‘ஆணித்தரம்’ என்று சொல்வார்கள்.  ஆணித்தரமாகப் பேசினார்.  முதல் தரமான பேச்சு என்று பொருள். சிறப்பான பேச்சு.  ஆணித்தரமாகப் பேசுதல் என்பதில் உள்ள ஆணி, hitting the nail on the head என்பதில் உள்ள ஆணியைப் போன்ற பொருளில் பயிலவில்லை.

பூணிட்ட திருமணி: திருமணி என்றால் முத்து என்பது பொருள்.  திருமணி குயிற்றுநர் என்றால் முத்துக் கோப்பவர்.

“திருமணி குயிற்றுநர், சிறந்த கொள்கையொடு
அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்….”
(சிலப்பதிகாரம், இந்திர விழவூர் எடுத்த காதை)

‘முத்துக் கோப்பவர்களும், (சங்குகளை) அறுத்து அழகான வளையல்களைச் செய்பவரும் நிறைந்த அகலமான வீதிகள்….’

மரகதத் திரளும் நன் முத்துக்களும் என்று சொல்லிவிட்ட பிறகு இன்னொரு முறை எதற்கு இதைச் சொன்னான் என்றால், அது முத்து மட்டும்.  இது பூண் இட்ட முத்து.  பொன்னால் பூண் பிடிக்கப்பட்ட முத்து.  

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

மிகச் சிறந்த பொன்னால் செய்யப்பட்ட குடங்கள்; சூரியனைப் போல் ஒளிவிடும் வைரங்கள் பதித்த மகுடங்கள், மாணிக்கக் குவியல், மரகதத் திரள், நல் முத்து, பொன்னில் பதித்த முத்து என்று புதுப்புது வகைகளாகச் செய்யப்பட்டு ஒளிவிடும் ஆபரணங்கள் என்றிவற்றை எல்லாம் காணிக்கையாகக் கொண்டுவந்தார்.  அந்தக் காட்சி என் மனக்கண்ணை விட்டு அகலுமோ?

வியாச பாரதத்தில் சம இடம்: மேற்சொன்ன பகுதியில் விடுபட்டனவற்றின் சாரம் கவிவடிவம் பெற்றுள்ளது.  (பின்னால் வரும் பாக்களில் அப்படி அப்படியே மொழிபெயர்க்கப்படுவதைக் காணலாம்.)  இங்கே இடம்பெற்றுள்ளவற்றுள் சில பகுதிகள், பின்னால் திருதிராஷ்டிரனிடம் பேசும்போது இடம்பெறுகின்றன.  அவற்றை திருதிராஷ்டிரனுடன் சகுனியும் துரியோதனனும் பேசும் அந்தந்தப் பாக்கள் வரும் இடங்களில் காணலாம்.

நால்வகைப் பசும்பொன் னும் – ஒரு
    நாலா யிரவகைப் பணக்குவை யும்
வேல்வகை வில்வகையும் – அம்பு
    விதங்களும் தூணியும் வாள்வகை யும்
சூல்வகை தடிவகை யும் – பல
    தொனிசெயும் பறைகளும் கொணர்ந்துவைத் தே
பால்வகை மன்னவர் தாம் – அங்குப்
    பணிந்ததை என்னுளம் மறந்திடுமோ? (24)

பதம் பிரித்து:

தேவை இல்லை.

அ. சொற் பொருள்

நால்வகைப் பசும்பொன்: தங்கத்தை நான்கு வகைகளாகப் பிரித்திருந்தனர்.  கோவலனும், கண்ணகியும் மதுரைக்குள் நுழைந்து வீதி வீதியாகப் பார்த்துக்கொண்டு வரும்போது, நகைக் கடைகள் நிறைந்த வீதிகளைக் கடக்கின்றனர்.  அப்போது சிலம்பு சொல்கிறது:

சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம்
சாம்பூ நதம்என ஓங்கிய கொள்கையின்
பொலந்தெரி மாக்கள் கலங்கஞர் ஒழித்து ஆங்கு
இலங்குகொடி எடுக்கும் நலங்கிளர் வீதியும்…

(சிலம்பு, மதுரைக் காண்டம், ஊர்காண் காதை)

சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் என்பவை தங்கத்தின் நான்கு வகை.

பால்வகை: “பால் வகை மன்னவர்” – பால்=பகுதி.  பல பகுதிகளாக வகுக்கப்பட்ட அரசர் (க்ஷத்திரியர் கூட்டங்கள்.”  இது பாரதியே தந்திருக்கும் குறிப்பு.  

‘பால்வகை’ என்பதைப் ‘பால்வளர்’ என்று பாரதியே திருத்தியுமிருப்பதால், பல பதிப்புகளில் இந்த இடத்தில் பால்வளர் என்றும் காணப்படும்.

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

நான்கு வகையான பசும்பொன்னையும், நான்காயிரம் விதமான பணக் குவியல்களையும் (பாரத நாட்டுக்குள்ளேயே பல பேரரசர்கள் இருந்தபடியால், ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு வகையான பணம் புழக்கத்தில் இருந்திருக்குமில்லையா?) வேல், வில், அம்பு, சூலம், தடி (தண்டு அல்லது கதை), பலவிதமான ஒலிகளை எழுப்பக் கூடிய வேறுபட்ட பறைகளையும், மன்னர்கள் கொண்டுவந்து கொட்டி, தருமனுடைய பாதத்தில் பணிந்தார்கள்.  அதை என் உள்ளம் என்றேனும் மறக்க முடியுமா?

=================
பதம் பிரித்து:
அ. சொற் பொருள்
ஆ. இலக்கணம்
இ. யாப்பு
ஈ. பாடல் சொல்வது

வியாச பாரதத்தில் சம இடம்: மேற்சொன்ன பகுதியில் விடுபட்டனவற்றின் சாரம் கவிவடிவம் பெற்றுள்ளது.  (பின்னால் வரும் பாக்களில் அப்படி அப்படியே மொழிபெயர்க்கப்படுவதைக் காணலாம்.)  இங்கே இடம்பெற்றுள்ளவற்றுள் சில பகுதிகள், பின்னால் திருதிராஷ்டிரனிடம் பேசும்போது இடம்பெறுகின்றன.  அவற்றை அந்தப் பாக்கள் வரும் இடங்களில் காணலாம்.

கிழவியர் தபசியர்போல் – பழங்
    கிளிக்கதை படிப்பவன் பொறுமையென்றும்
பழவினை முடிவென்றும் – சொலிப்
    பதுங்கிநிற் போன்மறத் தன்மையிலான்
வழவழத் தருமனுக்கோ – இந்த
    மாநில மன்னவர் தலைமை தந்தார்
முழவினைக் கொடிகொண்டான் – புவி
    முழுதையும் தனியே குடிகொண்டான். (25)

பதம் பிரித்து: தேவையில்லை

அ. சொற் பொருள் –

‘வழவழத் தருமன்’ (உலக வழக்கு).  உக்கிரத் தன்மை முதலிய மறவர் குணங்களில்லாத தருமன்.

இது பாரதி எழுதியிருக்கும் குறிப்பு.

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

இந்தத் தருமன், மறவர்களுக்கு உரிய குணங்கள் எதுவும் இல்லாதவன்.  (ஒரு காரியமும் செய்ய முடியாத) கிழவிகளைப் போலவும் (கிழவர்களைப் போல் கூட இல்லை!) (சும்மா அமர்ந்தபடி பேசிக்கொண்டிருக்கும்) தபசியர்களைப் போலவும் எப்போது பார்த்தாலும் (எப்படிப்பட்ட துன்பம் நேர்ந்தாலும்) ‘பொறுமை, பொறு¨யைக் கைக்கொள்ள வேண்டும்,’ என்றும், ‘இவையெல்லாம் முன் வினையின் பயனால் விளைந்தது,’ என்றும் திரும்பத் திரும்ப கிளிப்பிள்ளையைப் போல் சொன்ன பழங்கதையையே சொல்லிக்கொண்டிருப்பவன்.  எந்தக் காரியத்திலும் இறங்காமல் பதுங்கிக் கொள்பவன்.  மறவர்களுக்கு உரிய தன்மைகள் ஏதும் அற்றவன்.  

இப்படிப்பட்டவனுக்குப் போய் இந்த மாநில மன்னர்கள் எல்லோரும் சேர்ந்து தலைமையைத் தந்திருக்கின்றனர்!  (உலகத்தில் ஒருத்தனுக்குக் கூட அறிவில்லை பாருங்கள்!)  முரசினைத் தன் கொடியில் பறக்கும் சின்னமாகக் கொண்டவன், இந்த உலகம் முழுமையையும் தன் குடியாகவும் கொண்டுவிட்டான்.

தருமனின் கொடியில் இருந்த சின்னம் முரசு.  வீமனுக்கு, சிங்கத்தின் வால்.  பார்த்தனுக்கு, அனுமன்.  துரோணருக்கு, யாக வேதிகை.  இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு சின்னம் இருந்ததைப் போல், ஒவ்வொரு விதமான சங்கும் உண்டு.  அநந்தவிஜயம் என்பது தருமனுடைய சங்கின் பெயர்; பெளண்ட்ரம் என்பது பீமனுடையது; தேவதத்தம் அர்ஜுனனுக்குரியது; ஸுகோஷம் என்பது நகுலனுடையது; மணிபுஷ்பகம் என்பது சகதேவனுடையது.  கிருஷ்ணனுடையதுதான் எல்லோராலும் சொல்லப்படுவது – பாஞ்சஜன்யம்.

போர்க்களத்தில் தேரில் பறக்கின்ற கொடியாலும், கேட்கின்ற சங்கின் வேறுபட்ட, தனிப்பட்ட ஒலியினாலும், ‘இன்னார் இந்தக் களத்தில் இருக்கிறார்கள்,’ என்று உணர்த்துவதற்கான ஏற்பாடு.   மற்ற பயன்கள் ஒரு புறம்.

தம்பியர் தோள்வலியால் – இவன்
    சக்கர வர்த்தியென் றுயர்ந்ததுவும்
வெம்பிடு மதகரியான் – புகழ்
    வேள்விசெய் தந்நிலை முழக்கியதும்
அம்புவி மன்னரெல்லாம் – இவன்
    ஆணைதம் சிரத்தினில் அணிந்தவராய்
நம்பரும் பெருஞ்செல்வம் – இவன்
    நலங்கிளர் சபையினில் பொழிந்ததுவும் (26)

பதம் பிரித்து: மதகரியான் – மத கரியாகிய யான்.  மத யானையைப் போன்ற நான்.

அ. சொற் பொருள் –

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

இவன் என்ன தன் முயற்சியால், தன் வலிமையால் ஆட்சித் தலைமைக்கு வந்தவனா?  இவனுடைய இரண்டு தம்பிகள் கெட்டிக்காரர்களாய் இருக்கிறார்கள்; அந்தக் காரணத்தால் இவன் சிறந்திருக்கிறான்.  என்னால் இதைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.  இப்படி இவன் உயர்ந்து ஒரு பக்கம் என்யால், இவன் செய்தானே ஒரு புகழ் வாய்ந்த வேள்வி, அந்த வேள்வியின் சமயத்தில், இவன் வேள்வி செய்கின்ற (ஆமா, ரொம்ப பெரீய காரியம்!) செயலை அறிவித்து, முழக்கமிடும்படியான காரியத்தை, உள்ளுக்குள்ளே வெம்பிக் கொண்டிருக்கின்ற மதங்கொண்ட யானையைப் போன்ற நான் செய்ய நேர்ந்ததும், எல்லா மன்னர்களும் இவனுடைய ஆணை எல்லாவற்றையும் சிரமேற்று நின்றதும், நம்ப முடியாத அளவு பெரிய செல்வத்தை இவனுடைய சபையில் கொண்டுவந்து கொட்டியதும் எப்படிப் பொறுத்திடுவேன்?

தருமன் செய்தய ராஜசூய யாகத்தின் (‘ராய சூழ வேள்வி’ என்பது வில்லிபாரதம் தரும் பெயர்) போது, ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.  சமைத்தல், பரிமாறுதல் போன்ற காரியங்களை துச்சாதனன் கவனித்தான்.  வருகின்ற அரசர்களுக்கு மரியாதை செய்வதை சஞ்சயன் கவனித்துக்கொண்டான்.  பொற்காசுகளைக் கணக்கு வைத்துக்கொள்வது, தட்சிணை தருவது போன்றவற்றை கிருபரும், விதுரரும் கவனித்தனர்.  வில்லி சொல்கிறார்:

தானமும் தியாகம் தானும்
    தபனன்மா மதலை யான
மானவன் கொடுக்க என்றான்;
    வரம்பிலா நிதிகள் யாவும்
கானலம் கடல்சூழ் வையம்
    காவலன் காவல் என்றான்.
ஏனையோர் பலரும் வேந்தன்
    ஏவலின் முறைநின் றாரே.

தானங்களையும், தியாகங்களையும் வழங்குவதற்கு உரியவனாக கர்ணன் நியமிக்கப்பட்டான்.  (தபனன்: சூரியன், தபனன் மா மதலை: கர்ணன்)  மன்னர்கள் கொண்டுவந்து தருகின்ற அளவில்லாத பெருஞ்செல்வத்தை வாங்கிக் கொள்வதும், கணக்கு வைத்துக்கொள்வதுமான காரியத்தைத் துரியோதனன் செய்தான்.  இதைப் போல் தருமபுத்திரன் (ஒவ்வொரு மன்னருக்குக் கொடுத்த ஒவ்வொரு) ஏவலின்படி மன்னர்கள் வினையாற்றினர்.

வருகின்ற திரைப் பொருளை (இந்த நாள் வழக்கில் சொல்வதென்றால், மொய்ப் பணம்) வாங்கிக் கணக்கு வைக்கும் காரியத்தைச் செய்தவன், ஆகையினாலே அவ்வப்போது தருமனின் வேள்விப் பெருமையை முழக்க வேண்டிய நிலைமையை மேற்கொண்டவன் துரியோதனன்.  எவ்வளவு வந்தது என்பது அவனுக்கு நேரடியாகத் தெரியும்.  அவனுடைய உள்ளக் கொதிப்பு அப்போதே தொடங்கிவிட்ட ஒன்று.

வியாச பாரததத்தில் இந்த விவரங்கள், சகுனியும் துரியோதனனும், திருதிராஷ்டிரனிடம் சென்று முறையிட்டு, சூதாட்டத்துக்குப் பாண்டவர்களை அழைக்குமாறு கோரிக்கை வைக்குமிடத்தில் வருகின்றன.  அந்தப் பகுதி வரும்போது, அங்கிருந்து வியாச பாரதத்துச் சம இடங்களைப் பார்க்கத் தொடங்கலாம்.

எப்படிப் பொறுத்திடுவேன் – இவன்
    இளமையின் வளமைகள் அறியேனோ?
குப்பைகொலோ முத்தும் – அந்தக்
    குரைகடல் நிலத்தவர் கொணர்ந்து பெய்தார்
சிப்பியும் பவளங்களும் – ஒளி
    திரண்டவெண் சங்கத்தின் குவியல்களும்
ஒப்பில் வைடூரியமும் – கொடுத்
    தொதுங்கி நின்றார்இவன் ஒருவனுக்கே. (27)

பதம் பிரித்து:

அ. சொற் பொருள்

குரைகடல்: குரை என்ற பெயர்ச் சொல்லுக்கு, ஒலித்தல் என்றும், பரந்த, விரிந்த, பெரிய என்றும் பொருள் உண்டு.  ஒலிக்கும் கடல் என்றும் சொல்லலாம்.  பெரிய கடல் என்றும் சொல்லலாம்.  

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

இப்படிப்பட்ட சிறப்புகள் எல்லாம் இவனுக்கு அமைந்ததை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையே!  எப்படி பொறுப்பேன்!  இவன் சின்ன வயதில் எப்படி இருந்தான் என்பது எனக்குத் தெரியாதா! (‘இவுரு அந்தக் காலத்துல திண்டாடித் தெருப்பொறுக்கிட்டு இருந்த கதையெல்லாம் எனக்கு நல்லாவே தெரியும்!’) என்னையா!  முத்தென்ன குப்பையா!  குப்பையைக் கொண்டு வந்து கொட்டுவதைப் போல் அந்தக் கடல் நாட்டுக்காரர்கள் முத்தையும், சிப்பியையும், பவளங்களையும், வெண்சங்குகளையும் கொண்டு வந்து கொட்டினார்களே!  ஒப்பில்லாத வைடூரியத்தையும் அதே மாதிரி வாரி இறைத்தார்களே!  அத்தனையையும் கொடுத்துவிட்டு, வணக்கமாக ஒதுங்க வேறு ஒதுங்கி நின்றார்களே!  இத்தனைப் பெருஞ்செல்வமும் இவன் ஒருத்தனுக்கேயா!  எப்படி என்னால் இதைப் பொறுக்க முடியும்!

மலைநா டுடையமன்னர் – பல
    மான் கொணர்ந் தார்புதுத் தேன்கொணர்ந் தார்
கொலைநால் வாய்கொணர்ந்தார் – மலைக்
    குதிரையும் பன்றியும் கொணர்ந்துதந் தார்
கலைமான் கொம்புகளும் – பெரும்
    களிறுடைத் தந்தமும் கவரிகளும்
விலையார் தோல்வகையும் – கொண்டு
    மேலும்பொன் வைத்தங்கு வணங்கிநின்றார். (28)

நால்வாய் – நாலுகின்ற வாய். நாலுதல் – தொங்குதல். அதாவது தொங்குகின்ற வாயை உடைய விலங்கு – யானை.

பதம் பிரித்து:

அ. சொற் பொருள்: நால்வாய்: நாலுகின்ற வாய்.  நாலுதல் என்றால் தொங்குதல்.  தொங்கக் கூடிய வாயை உடைய விலங்கு – யானை.  விநாயகனுக்கு உள்ள தமிழ்ப் பெயர்களில் பெயர்களில் ஒன்று நால்வாயன்.  ‘நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று முக்கண்ணும் மும்மதச் சுவடும்,’ என்று ஒளவையின் விநாயகர் அகவல் பாடுகிறது.

ஆ. இலக்கணம்

நால்வாய்: சினையாகு பெயர்.  உடல் உறுப்பில் ஒன்று ஒட்டு மொத்த விலங்குக்கும் ஆகி வந்தது.  

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

மலை நாடுகளிலிருந்த வந்திருந்த மன்னர்கள் மான்களைக் கொண்டு வந்தனர்; புதிய தேனைக் கொண்டு வந்தனர்; கொல்லக் கூடிய போர்க் குணம் கொண்ட யானைகளைக் கொண்டு வந்தனர்; மலைக் குதிரைகளையும், பன்றிகளையும் கொண்டு வந்தனர்; கலைமானின் கொம்புகள், யானைத் தந்தங்கள், விலைமதிப்பு மிக்க பலவகையான தோல் என்று இவையெல்லாம் கொண்டுவந்து, அவை போதாதென்று பொன்னும் வைத்துத் தந்தனர்.

செந்நிறத்தோல் கருந்தோல் – அந்தத்
    திருவளர் கதலியின் தோலுடனே
வெந்நிறப் புலித்தோல்கள் – பல
    வேழங்கள் ஆடுகள் இவற்றுடைத்தோல்
பன்னிற மயிருடைகள் – விலை
    பகரரும் பறவைகள் விலங்கினங்கள்
பொன்னிறப் பாஞ்சாலி – மகிழ்
    பூத்திடும் சந்தனம் அகில் வகைகள் (29)

பதம் பிரித்து: தேவையில்லை.

அ. சொற் பொருள்

கதலி: இந்தச் சொல்லை பாரதி எங்கிருந்து பிடித்தான் என்பதே வியப்புக்குரிய ஒன்று.  தமிழ் இலக்கியத்தின் என்சைக்ளோபீடியா என்றறியப்படும் அபிதான சிந்தாமணியில் இந்த நுழைவே இல்லை.  அதுதான் போகட்டும் என்றால், சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி

1. வாழை, 2. கதலி வாழை (சிறிய வாழை வகை), 3. துகிற்கொடி (banner), 4. பறக்கவிடும் காற்றாடி

என்று மட்டும்தான் பொருள் சொல்கிறது.  வேறு பொருளே இல்லை.  ‘அகராதியை வைத்துக் கொண்டு பொருள் சொல்ல வேண்டும் என்றால், ‘வாழைப் பழத் தோலைக் கொண்டு வந்தார்கள்,’ என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும்’ என்று சொல்லிச் சிரிப்பார் என் ஆசிரியர் திரு. வேணுகோபாலன் (நாகநந்தி) அவர்கள்.  பாரதியோ ‘கதலி என்பது ஒரு வகை மான்,’ என்று குறிப்பெழுதுகிறான்.  இந்தப் பொருள் எந்த அடிப்படையில், எப்படிச் சொல்லப்பட்டது என்று என் ஆசிரியர் பெரு முயற்சி செய்து கண்டறிந்தார்.  நாநார்த்த தீபிகை என்ற நூலில்  இதற்கான குறிப்பு கிடைத்தது.  ‘இருபது அங்குலமே வளர்வதும், சேற்றிலே வாழ்வதுமாகிய ஒரு வகை மான்,’ என்று நாநார்த்த தீபிகை சொல்கிறது.  

என்ன வேடிக்கை என்றால், சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியே தவறவிட்ட குறிப்பு இது.  ஆறு தொகுதிகளாக வெளிவந்த பின்னர், ஏழாவது தொகுதியாக ஓர் அனுபந்தம் வெளியிட்டார்கள்.  அந்த அனுபந்தத்தில் ‘கதலிவாணன்: நெல்வகை,’ என்று சேர்த்திருக்கிறார்கள்.  ‘கதலி என்பது ஒரு வகை மான்,’ என்ற குறிப்பு இல்லை.  அகராதியை வெளியிட்ட நேரத்த்தில் அவர்களுக்கு இப்படி ஒரு ஆட்சி கிடைக்கவில்லை என்பது வெளிப்படை.  குறைந்தது நாநார்த்த தீபிகையிலிருந்தாவது பொருள் கண்டு சேர்த்திருக்கலாம்.  இனியாவது, பாரதி ஆண்ட சொல் என்ற முறையில் அகராதியில் இந்தச் சொல் இடம் பெறவேண்டும்.  நம்மால் முடிந்ததெல்லாம் விழைவுதான்.  இந்த விழைவு, அகராதியுள் நுழைவாக மாற நம்மால் முடிந்த காரியம், இதோ இந்தப் பதிவு.  அவ்வளவுதான்.  

பன்னிற மயிருடைகள்: பல நிறங்களை உடைய மயிரால் ஆன உடைகள்.  கம்பள ஆடை.  பலவிதமான விலங்குகளின் உரோமத்திலிருந்து ஆடை நெய்வது மிகத் தொன்மையான பழக்கம்.

பட்டினும், மயிரினும், பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்…..

(சிலப்பதிகாரம், இந்திர விழவு ஊர் எடுத்த காதை)

பட்டாலும், மயிராலும், பருத்தி நூலாலும் அழகாகப் பின்னிக் கட்டுகிற நெசவுத் தொழிலர் வாழும் வீதிகளும்…..

நூலினும், மயிரினும், நுழைநூல் பட்டினும்
பாவகை தெரியாப் பலநூறு அடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும்…

(சிலப்பதிகாரம், ஊர்காண் காதை)

துணிக் கடைத் தெருக்களில், பருத்தி நூலாலும், விலங்குகளின் மயிராலும், நெருக்கமாக நெய்யப்பட்ட பட்டாலும் ஆன ஆடைகள் பல நூற்றுக்கணக்கான அடுக்குகளாக வைக்கப்பட்டிருந்தன.

ஒரு வகை எலியின் மயிராலும் ஆடைகள் நெய்யப்பட்டன என்று அறிகிறோம்.

ஆ. இலக்கணம்

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

விலை மதிப்பிட முடியாத பல வகையான விலங்குகளின் தோல் கொண்டுவரப்பட்டதாகச் சென்ற பாடல் சொன்னது.  கருநிறத் தோல், சிவந்த நிறத் தோல், கதலி என்ற மானுடைய தோல், புலித் தோல், யானைத் தோல், ஆடுகளின் தோல், பலவிதமான மயிர்களால் ஆன உடைகள் (கம்பள ஆடைகள்), மிக அரிய வகையான பறவைகள், பாஞ்சாலி மகிழத்தக்க வகையிலான சந்தனம், அகில்….  (என்று இவற்றையும் கொண்டுவந்தார்.)

ஏலம் கருப்பூரம் – நறும்
    இலவங்கம் பாக்கு நற்சாதிவகை
கோலம் பெறக்கொணர்ந்தே – அவர்
    கொட்டி நின்றார் கரம் கட்டிநின்றார்.
மேலும் தலத்திலுள – பல
    வேந்தர் அப்பாண்டவர் விழைந்திடவே
ஓலந்தரக் கொணர்ந்தே – வைத்த
    தொவ்வென்றும் என்மனத் துறைந்ததுவே. (30)

பதம் பிரித்து: தேவை இல்லை.

அ. சொற் பொருள் –

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

தருமபுத்திரனுடைய வேள்விக்கு வேந்தர்கள் கொண்டு தந்த பொருள்களின் பட்டியல் நீள்கிறது.  ஏலக்காய், கர்ப்பூரம், இலவங்கம், பாக்கு, சாதிக்காய் போன்ற வாசனைப் பொருட்களை அவர்கள் கொண்டு வந்து கொட்டினார்கள்; கை கட்டி நின்றார்கள்.  உலகத்தின் பல பகுதிகளில் உள்ள மன்னவர்கள் அந்தப் பாண்டவர்கள் மனம் மகிழுமாறு பல பொருள்களைப் பொதிந்திருந்த பெட்டிகளைத் தரதரவென்று ஓசை உண்டாகுமாறு இழுத்துவந்து வைத்த வரிசை என் உள்ளத்தில் அப்படியே நிற்கிறது.

ஏலம், இலவங்கம், பாக்கு, சாதிக்காய் எல்லாம் விளைபொருள்கள்.  கற்பூரம் (அல்லது கர்ப்பூரம் அல்லது கருப்பூரம்) செய்பொருள்.  ‘சீனா, ஜப்பான் தேசங்களில் உண்டாகும் லாரல் மரத்தின் பால்.  இம் மரம் முதிர்ந்தவுடன், இதனை வெட்டித் துண்டுகளாக்கி, அவற்றை வளைந்த கழுத்துள்ள இருப்புப் பாத்திரத்திலிட்டுச் சல்லடைக் கண் போன்ற துவாரங்களை உடைய பலகையால் அதை மூடி அப்பலகை மீது பெரிய வாணா உரு அமைந்த மட்பாத்திரத்தைக் கவிழ்த்து விடுகின்றனர்.  பின் வாணலுக்கும் பலகைக்கும் இடையில் உள்ள உள்ளிடத்தை மலார், புல் முதலியவற்றால் மூடி இருப்புப் பாத்திரத்தை உஷ்ணப்படுத்தின் உள்ளிருக்கும் லாரல் துண்டிலிருந்து கற்பூரமானது ஆவியாய்க் கிளம்பி உஷ்ணமற்ற மலார் புல் முதலியவற்றில் உறைந்து போகிறது.  இது முத முதலில் அழுக்குடன் மஞ்சள் நிறமாக இருக்கிறது.  இதை மீண்டும் சுத்தப்படுத்த வெள்ளை நிறமான கற்பூரமாகிறது.’ (அபிதான சிந்தாமணி)

மாலைகள் பொன்னும் முத்தும் – மணி
    வகைகளில் புனைந்தவும் கொணர்ந்துபெய்தார்
சேலைகள் நூறு வன்னம் – பல
    சித்திரத் தொழில்வகை சேர்ந்தனவாய்
சாலவும் பொன்னிழைத்தே – தெய்வத்
    தையலர் விழைவன பலர்கொணர்ந்தார்
கோலநற் பட்டுக்களின் – வகை
    கூறுவதோ? எண்ணில் ஏறுவதோ? (31)

பதம் பிரித்து: தேவையில்லை

அ. சொற் பொருள்: வன்னம்: வண்ணம்

ஆ. இலக்கணம்

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

பல வகையான வேலைப்பாடுகளும் வடிவங்களும் கொண்ட பொன்னாலும் முத்தாலும் ஆன மாலைகள்; சித்திர வேலைப்பாடுகளும், தங்கச் சரிகைக் கரையிட்டதுமாக, தேவமாதர் விரும்பக் கூடிய பல நூறு வண்ணச் சேலைகள்; எண்ணிறந்த வகையிலான பட்டுத் துணிகள்… இவற்றின் வகையைக் கணக்கிட முடியுமோ?

கழல்களும் கடகங்களும் – மணிக்
    கலசமு மகுடமுங் கணக்கிலவாம்
நிழல்நிறப் பரிபலவும் – செந்
    நிறத்தன பலவும்வெண் ணிறம்பலவும்
தழல்நிறம் மேகநிறம் – விண்ணில்
    சாரும் இந்திர வில்லை நேருநிறம்
அழகிய கிளிவயிற்றின் – வண்ணம்
    ஆர்ந்தனவாய்ப் பணி சேர்ந்தனவாய். (32)

பதம் பிரித்து:

அ. சொற் பொருள்: கழல் – காலில் அணியக் கூடிய வீரக் கழல். Anklet.  

கடகம்: கையில் அணியும் அணிகலன்.  Bracelet, armlet

இந்திரவில்: வானவில்

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

ஏராளமான வீரக் கழல்களும், கையணிகளும், மணிகள் நிரம்பிய குடங்களும், மகுடங்களும் வந்தன.  நிழலை ஒத்த நிறத்திலும், சிவந்த நிறத்திலும், வெள்ளை நிறத்திலும், நெருப்பு நிறத்திலும், மேகத்தை ஒத்த நிறத்திலும் , வானவில்லைப் போல் பல வண்ணங்களிலும், கிளிவயிற்றை ஒத்த நிறத்திலும் வகை வகையான குதிரைகள் வந்திறங்கின.  அவை அனைத்தும் இட்ட கட்டளையை ஏற்று நடக்கும் (பணி சேர்ந்தன) பயிற்சி பெற்றவை.

சூரியனின் தேர்க் குதிரைகள் பச்சை நிறமுடையவை என்பது மரபு.  

‘உததியிடை கடவுமர கதவருண குலதுரக உபலளித கனகரத சதகோடி சூரியர்கள்’ என்றார் அருணகிரி நாதர்.  கடலுக்கு நடுவிலே செலுத்தப்படுகின்ற, மரகதப் பச்சை வண்ணத்தையும், மிகுந்த அழகையும் உடைய சாதிக் குதிரைகள் இழுக்கும் பொன்னாலான தேரில் தோன்றும் நூறுகோடி சூரியர்கள் (ஒரே நேரத்தில் வந்ததைப் போன்றது முருகனின் திருவடி).

காற்றெனச் செல்வனவாய் – இவை
    கடிதுகைத்திடும் திறல் மறவரொடே
போற்றிய கையினராய்ப் – பல
    புரவலர் கொணர்ந்தவன் சபைபுகுந்தார்.
சீற்றவன் போர்யானை – மன்னர்
    சேர்த்தவை பலபல மந்தையுண்டாம்
ஆற்றல் மிலேச்ச மன்னர் – தொலை
    அரபியர் ஒட்டைகள் கொணர்ந்து தந்தார். (33)

பதம் பிரித்து: கடிதுகைத்திடும்: கடிது உகைத்திடும்.  சீற்றவன்: சீற்ற, வன்

அ. சொற் பொருள்

உகைத்தல்: செலுத்துதல்.

பூணொ ணாததொர் அன்பு பூண்டு
    பொருந்தி நாள்தொறும் போற்றவும்
நாணொ ணாததொர் நாணம் எய்தி
    நடுக்கடலுள் அழுந்தி நான்
பேணொ ணாத பெருந்துறைப் பெரும்
    தோணி பற்றி உகைத்தலும்
காணொணாத் திருக்கோலம் நீவந்து
    காட்டினாய் கழுக் குன்றிலே!

(திருவாசகம், திருக்கழுக்குன்றப் பதிகம்.)

உன் அடியவர்களோ கட்ட முடியாத அன்பைக் காட்டிப் போற்றியபடி வந்தனர்.  நானோ, வெட்கப்பட்டுக்கொண்டு உன்னை அவ்வாறு போற்றத் தயங்கினேன்.  ஆகவே பிறவி என்ற கடலில் விழுந்தேன்.  துன்புற்றேன்.  அங்கே, பிறவிக் கடலைக் கடப்பதற்கு உதவும் தோணியாகிய உன் பாதத்தைப் பற்றினேன்.  அந்தத் தோணியால் *செலுத்தப்பட்டு* (உகைத்தலும்) வந்த எனக்கு உன் அழகுக் கோலத்தைத் திருக்கழுக்குன்றத்தில் காட்டி அருளினாய்.

மிலேச்சர்: அன்னியர்.  வெளிநாட்டவர்.  அரபியர், பாரசீகர் என்ற பொருள் இந்தக் குறிப்பிட்ட இடத்துக்குப் பொருந்தும்.  

‘தாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர்……. இந்நாட் படை கொணர்ந்து இன்னல் செய்கின்றார்…’ என்று சத்திரபதி சிவாஜி தனது சைநியத்தாருக்குக் கூறியது என்ற கவிதையிலும் பாரதி மேற்படிப் பொருளிலேயே இச்சொல்லை ஆண்டிருத்தலைக் காணலாம்.

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

காற்றென விரைந்து செல்லும் பல வகையான வண்ணங்களை உடைய குதிரைகள் மட்டுமில்லை; அவற்றை விரைவாகச் செலுத்தக் கூடிய திறமை உடைய வீரர்களையும் சேர்த்தே தந்தனர்.  போரிட வல்ல யானைகளைப் பல மன்னர்கள் தந்தனர்.  அரபிய, பாரசீக மன்னர்கள் ஒட்டகங்களைக் கொண்டுவந்தனர்.  

“வியாச முனிவர் அரபி தேசமென்று பெயர் குறிப்பிடாவிடினும், அவரது வர்ணனைகளைப் பார்க்குமிடத்துத் தரும புத்திரன் யாகத்துக்குக் காணிக்கையாக வந்த ஒட்டைகள் அரபி தேசத்தனவென்று தெளிவாகத் தோன்றுகிறது.” — பாரதியின் குறிப்பு

பாடல் 33ல் ஒட்டைகள் என்ற சொல்லுக்குப் பொருள் விட்டுப் போயிற்று.  எல்லோருக்கும் எளிதில் விளங்கக் கூடிய சொல்லென்று நான் எண்ணியதன் பிழை.   எழுத்துப் பிழை என்றெண்ணி அன்பர் ஒருவர் அனுப்பியிருந்த தனியஞ்சலால் இதனை உணர்ந்தேன்.  அன்பருக்கு நன்றி.

ஒட்டை என்ற பெயர், ‘ஒட்டகம்,’ என்ற பெயரின் இன்னொரு வடிவம்.
>:o0o:<

தென்றிசைச் சாவகமாம் – பெரும்
    தீவுதொட்டே வடதிசை யதனில்
நின்றிடும் புகழ்ச்சீனம் – வரை
    நேர்ந்திடும் பலபல நாட்டினரும்
வென்றிகொள் தருமனுக்கே – அவன்
    வேள்வியில் பெரும்புகழ் விளையும்வண்ணம்
நன்றுபல் பொருள் கொணர்ந்தார் – புவி
    நாயகன் யுதிட்டிரன்என உணர்ந்தார். (34)

பதம் பிரித்து: தேவை இல்லை.

அ. சொற் பொருள் – சாவகம் என்பது ஜாவா என்றறியப்படும் நாடு.

ஆ. இலக்கணம்: வென்றி: வெற்றி என்பதன் மெலித்தல் விகாரம்

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

தென் திசையில் ஜாவா தொடங்கி, வடக்கே சீனா வரையில் உள்ள பல நாடுகளின் மன்னர்களும் அவன் வேள்விக்குத் தேவைப்படும் பொருள்களைக் கொண்டுவந்தனர்.  அவர்கள் அனைவராலும் போற்றப்படும் தலைவனாக யுதிட்டிரன் விளங்குகிறான்.

ஜாவா – சாவகம் என்றும் யவத் தீவு என்றும் தமிழில் மிகப் பழைய இலக்கியங்களில் குறிக்கப்படுவது.  மிகப் பழைய காலம் தொட்டே இங்கெல்லாம் தமிழ்நாட்டுக்குத் தொடர்பிருந்தது.  மணிமேகலையில் ஆபுத்திரன் மணிபல்லவத்தில் இறந்த பிறகு, அரசனாக அடுத்த பிறவி அடைந்த இடம் சாவகம்.  இந்தப் பழைய தொடர்பை,

சிங்களம் புட்பகம் சாவகம் ஆதிய
    தீவு பலவினும் சென்றேறி – அங்குத்
தங்கள் புலிக்கொடு மீன்கொடி யும்நின்று
    சால்புறக் கண்டவர் தாய்நாடு

என்று பாரதி குறிக்கிறான்.  (செந்தமிழ் நாடெனும் போதினிலே…)

தருமபுத்திரனுடைய பெயர், மரியாதைக்குரிய அரசனாக ஜாவா முதல் சீனா வரை அறியப்பட்டிருந்தது என்பது துரியோதனின் பொறாமைக்கான காரணங்களில் ஒன்று.

ஆடுகள் சிலர் கொணர்ந்தார் – பலர்
    ஆயிரமாயிரம் பசுக் கொணர்ந்தார்.
மாடுகள் பூட்டினவாய் – பல
    வகைப்படு தானியஞ் சுமந்தனவாய்
ஈடுறு வண்டிகொண்டே – பலர்
    எய்தினர்; கரும்புகள் பலர்கொணர்ந்தார்
நாடுறு தயிலவகை – நறு
    நானத்தின் பொருள் பலர் கொணர்ந்துதந்தார். (35)

நானம் – கஸ்தூரி

பதம் பிரித்து: –

அ. சொற் பொருள்: ஈடுறு: ஈடு உறு.  ஈடு என்றால் ‘ஒப்பான’ (equal, compeer) என்ற பொருளிலும் இன்னும் ஓரிரு பொருளிலும் மட்டுமே பயன்படுத்தி வருகிறோம்.  ஈடற்ற, ஈடில்லா, ஈடறு என்னும் போது, ‘ஒப்பில்லாத’ (unequalled) என்ற பொருளில் பயன்படுத்துகிறோம்.  இங்கே ‘ஈடுஉறு வண்டி’ என்று சொல்வதை கவனிக்க வேண்டும்.  அதென்ன ஈடுறு வண்டி?  ஒப்பு உள்ள வண்டி என்றால் பொருத்தமாயில்லையே!  மொத்தம் பதினாறு பொருள் தருகிறது பேரகராதி, இந்தச் சொல்லுக்கு.  (‘இட்லி ஒரு ஈடு வைத்து எடு,’ என்று இட்டலி அவிப்பதைக் குறித்து அன்றாட வழக்கில் சொல்கிறோம்.  அங்கே, ‘இடுகை’ (மாவு இடுதல்) என்பது பொருள்.)  ‘பெரிய’ என்றொரு பொருள் உண்டு இந்தச் சொல்லுக்கு.  ஈடுறு வண்டி: மிகப் பெரிய வண்டி.

மிக எளிய சொல்லைப் போல்தான் தோற்றமளிக்கிறது.  பொருளை நாடும்போதுதான் பாரதியின் சொல்லாட்சித் திறம் தெரிய வருகிறது.  ‘பாரதியின் பாடல்கள் எளிமையானவை,’ என்ற எண்ணத்தோடு அணுகும்போது இத்தகைய அரிய சொல்லாட்சி கண்ணில் படாமல் போவது இயற்கையே.  

நாடுறு: நாடத் தக்க.  விரும்பத் தக்க.

தயிலம்: தைலம்

நானம்: கஸ்தூரி (musk)

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நொண்டிச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

சிலர் ஆடுகள் கொணர்ந்தனர்.  சிலர் ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொண்டுவந்தனர்.  மாடுகள் பூட்டப்பட்ட, பல வகை தானியங்களால் நிறைந்த பார வண்டிகளைப் பலர் கொண்டுவந்தனர்.  கரும்புகள் ஒரு பக்கம்.  கஸ்தூரி போன்ற வாசனைப் பொருட்கள் ஒருபுறம்.

(இத்தகைய எளிய பாடல்களுக்கெல்லாம் பொருள் சொல்கிறேன் என்றெண்ண வேண்டாம்.  பொருள் தொடர்பு பற்றி இவற்றைச் சொல்வது அவசியமாகிறது.  பாடலின் பொருள் எளிதே என்றாலும், சொற்பொருள் அவ்வளவு எளிதாக இல்லை என்பதையும் காணலாம்.)

நெய்க்குடம் கொண்டுவந்தார் – மறை
    நியமங்கொள் பார்ப்பனர் மகத்தினுக்கே
மொய்க்குமின் கள்வகைகள் – கொண்டு
    மோதினர் அரசினர் மகிழ்வுறவே
தைக்குநற் குப்பாயம் – செம்பொன்
    சால்வைகள் போர்வைகள் கம்பளங்கள்
கைக்கு மட்டிலுந்தானோ – அவை
    காண்பவர் விழிகட்கும் அடங்குபவோ? (36)

மகம் – வேள்வி. குப்பாயம் – சட்டை

பதம் பிரித்து: மொய்க்குமின் கள்வகைகள்: மொய்க்கும் இன் கள் வகைகள்.
தைக்குநற் குப்பாயம்: தைக்கப்பட்டதாகிய நல்ல குப்பாயம்.

அ. சொற் பொருள்

நியமம்: முறையான.

மொய்க்கும் இன் கள் வகை: மொய்ப்பதான, இனிய கள்.  (‘வேரியங் கள் அருந்தி’ என்ற தொடரைப் பாடல் 11-ல் காணலாம்.)  ‘தேனீ, வண்டு,’ என்று வருவித்துக்கொள்ள வேண்டும்.  வண்டு மொய்பதாகிய கள் வகைகள்.  (இந்த இடத்தில் ‘கள்’ என்பதற்குத் தேன் என்ற பொருளைக் கொள்ள வேண்டும்.  ‘நடப்பதோ வேள்வி.  அதுக்கெதுக்கு குடம் குடமாய்க் கள்?’ என்று தோன்றக் கூடும்; ஆகையினாலே சொன்னேன்.)

குப்பாயம்: சட்டை என்பது பொருள்.  மேலுக்குச் சட்டை அணிவது அண்மைக் காலப் பழக்கம் என்றெண்ணுகிறோம்.  குப்பாயம் என்ற பெயரில் (வேறு ஏதேனும் வடிவத்தில் இருந்திருக்கலாம்) அணியப்பட்ட ஒன்றுதான் அது.  ‘மெய்ப்பை’ என்பது சட்டைக்கு இன்னொரு பெயர்.

கண்ணுள் வினைஞர், கைவினை முற்றிய
நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர
மெய்ப்பை புக்கு விலங்குநடைச் செலவின்
கைக்கோற் கொல்லனைக் கண்டனன் ஆகி….
(சிலம்பு, கொலைக்களக் காதை)

கண்கவரும் வேலைப்பாட்டுடன் ஆபரணங்களைச் செய்ய வல்லவரான கொல்லர்கள் நூற்றுக் கணக்கில் பின் தொடர, சட்டை அணிந்தவனாய், கையில் (அதிகாரத்தின் அடையாளமான) கோலை ஏந்தியவனாக, இப்படியும் அப்படியுமாக விலகி விலகி (meandering) நடப்பதான நடையை உடைய பொற்கொல்லனைக் கோவலன் கண்டான். (விலங்கி: விலகி.  ‘விலங்கிய விகாரப்பாட்டின் வேறுபாடுற்ற வீக்கம்’ – கம்பன்)

சட்டை அணிதல் அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்பட்டிருக்கலாம்.  தொளதொளப்பான மேல் சட்டை அணிந்தவர்களும் உண்டு.  புறநானூற்றில் ஒரு கவிஞருடைய பெயர் பக்குடுக்கை நன்கணியார்.  ‘ஓர்இல் நெய்தல் கறங்க,’ என்றொரு அழகான கவிதையை இயற்றியவர்.  அவர் அப்படிப்பட்ட தொளதொளப்பான சட்டையை அணிந்திருந்தாராம்.  பக்கு என்றால் பை.  பை போன்ற உடுக்கையை உடுத்தியவரான காரணத்தால் பக்குடுக்கை என்ற அடைமொழி.  [கவிஞர்கள் அந்தக் காலத்திலிருந்தே ஜிப்பாதான் போடுவாங்க போலிருக்கு. :)]

இதைப் போலவே நாம் உடுத்தும் காற்சட்டையும் புழக்கத்திலிருந்திருக்கிறது.  Knickers, shorts என்பன போன்ற ஆடைகளும் இருந்திருக்கின்றன.  காற்சட்டையின் பெயர் காழம்.  முனிவர்களோடு உரையாடிக்கொண்டிருந்த இராமனுக்கு, மீனையும் தேனையும் காணிக்கையாகக் கொண்டுவந்த குகன் காழம் அணிந்திருந்தானாம்.  ‘காழம் இட்ட குறங்கினன்,’ என்பது கம்பன் வாக்கு.  நிக்கர் போட்ட தொடையை உடையவன் என்று வேண்டுமானால் நாம் சொல்லிக்கொள்ளலாம்.  

‘குப்பாயம்’ என்ற சொல் அரிய ஆட்சி.  சீவக சிந்தாமணி போன்ற சில நூல்களில் காணப்படுவது.  ‘பாரதி, சீவக சிந்தாமணியைப் படித்திருக்கிறான்,’ என்று நிறுவுவதற்குச் சில ஆதாரங்களை எடுத்து வைக்கிறார் டாக்டர் வ. சுப. மாணிக்கம் அவர்கள்*.  அவருடைய கவனத்துக்கே தவறிய ஓர் உண்மை என்னவென்றால், பாரதியே ஒரு கட்டுரையில், ‘நான் சிந்தாமணி படித்துக்கொண்டிருந்த போது,’ என்று குறிப்பிடுகிறான்.  இதை விடவும் இன்னொரு பெரிய ஆதாரம் தேவையில்லை.  பாரதி என்னென்ன நூல்களைப் படித்திருக்கிறான் என்பதற்கு அகச்சான்று வேண்டின் இத்தகைய சொல்லாட்சிகளைக் கவனமாகச் சேகரிக்க வேண்டியது பாரதி அன்பர்களின் கடமை.

* ‘தொல்காப்பியப் புதுமை,’ என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரைத் தொகுப்பில் காணப்படும் ‘பாரதியின் புலமை,’ என்ற தலைப்புள்ள கட்டுரை.  (டாக்டர் வ. சுப. மாணிக்கம், செல்வி பதிப்பு, காரைக்குடி.  – என்னிடமுள்ள பதிப்பு 1958ல் வெளிவந்த ஒன்று.  இதன் பிறகு வந்த பதிப்புகள் பற்றி அறியேன்.)

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நொண்டிச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

மறைகளில் சொல்லப்பட்ட முறைப்படி பார்ப்பனர் வளர்க்கும் வேள்விக்காக நெய்க்குடங்களையும்,  தேனீக்கள் மொய்க்கின்ற தேன்குடங்களையும், அரசர் மனம் மகிழும்படியாகச் சுமந்தபடி வரிசை வரிசையாக வந்து மோதினார்கள்.  தைக்கப்பட்ட சட்டைகள், பொன் சரிகையிட்ட சால்வைகள், போர்வைகள், கம்பளங்கள் என்று எடுத்து வைத்து எடுத்து வைத்துக் கையே ஓய்ந்துவிட்டது.  கைக்கு மட்டும்தானா, அவற்றின் வரிசை கண்ணுக்கும் அடங்கவில்லை.    

தந்தத்தில் கட்டில்களும் – நல்ல
    தந்தத்தில் பல்லக்கும் வாகனமும்
தந்தத்தின் பிடிவாளும் – அந்தத்
    தந்தத்திலே சிற்பமும் தொழில்வகையும்
தந்தத்தில் ஆதனமும் – பின்னும்
    தமனிய மணிகளில் இவையனைத்தும்
தந்தத்தைக் கணக்கிடவோ – முழுத்
    தரணியின் திருவுமித் தருமனுக்கோ? (37)

பதம் பிரித்து: தேவை இல்லை.

அ. சொற் பொருள்

ஆதனம்: ஆசனம்.  

தமனியம் – பொன்

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நொண்டிச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

ஒற்றைச் சொல்லை வைத்து விளையாடும் விளையாட்டுக்கு இன்னொரு பாடல்.  தந்தத்தால் செய்யப்பட்ட கட்டில்கள், பல்லக்கு, வாகனம், தந்தப் பிடிபோட்ட வாள், தந்தத்தில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், இன்ன பிற கலைப் பொருள்கள், தந்தத்தினால் செய்யப்பட்ட இருக்கைகள், பொன்னும், மணியும் சேர்த்துச் செய்யப்பட்ட நகைகள் என்று அவர்கள் கொண்டுவந்து கொட்டிய பொருட்களையெல்லாம் கணக்கெடுக்க முடியுமோ?  என்னையா இது!  இந்த பூமியில் இருக்கும் அத்தனைச் செல்வமும் இவன் ஒருத்தனுக்கேவா!  எந்த ஊர் நியாயமையா இது!  அத்தனையும் இவனுக்கே இவனுக்கா!

வேறு

என்றிவ் வாறு பலபல எண்ணி
    ஏழை யாகி இரங்குத லுற்றான்
வன்றி றத்தொரு கல்லெனும் நெஞ்சன்
    வானம் வீழினும் அஞ்சுத லில்லான்
குன்றம் ஒன்று குழைவுற் றிளகிக்
    குழம்பு பட்டழி வெய்திடும் வண்ணம்
கன்று பூதலத் துள்ளுறை வெம்மை
    காய்ந்தெ ழுந்து வெளிப்படல் போல (38)

பதம் பிரித்து: வன்றிறத்தொரு: வன் திறத்து ஒரு

அ. சொற் பொருள்

ஏழை: 1. Foolish, silly person, one of weak intellect – அறிவிலான்.  2. Ignorance, simplicity, harmlessness, mental weakness – அறியாமை. 3. Woman – பெண். 4. Indigent person, poor wretch, helpless person – தரித்திரன்.

ஏமுற்றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகை கொள்பவன். (குறள் 873)

பைத்தியக்காரனை விடவும் முட்டாள் யாரென்றால், யார் (எந்தத் துணையும் இல்லாமல் தனியாக நின்று) பலரைப் பகைத்துக்கொள்ளகிறானோ, அவன்.

கன்று: கன்றுதல்: முதிர்தல், to grow intense.  ‘பூதலத்து உள்ளுறை கன்று வெம்மை’ என்று கூட்டிக் கொள்ள வேண்டும்.

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும். (குறள் 284)

திருட்டுத்தனத்தின் மீது கொண்ட காதல் முதிர்ந்துவிட்டால், ஓயாத துன்பங்கள்தாம் அதனுடைய பயனாக வந்துகொண்டே இருக்கும்.

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

கட்டளைக் கலிப்பா.  ‘என்றிவ்வாறு’ என்று முதற்சீர் நேரசையில் தொடங்குவதால் ஒவ்வோர் அடியிலும் ஒற்று நீக்கி இருபது எழுத்துகள் இருப்பதைக் காணலாம்.  (கட்டளைக் கலிப்பாவில் எழுத்தெண்ணும் எடுத்துக்காட்டுக்குப் பார்க்க: பா 19)

பொருள் இந்த நான்கடிகளுக்குள் முடியாமல் அடுத்த பாட்டுக்குத் தொடர்வதால், இது குளகம்.

ஈ. பாடல் சொல்வது

இப்படிப் பலவிதமாக எண்ணியெண்ணி, வளர்கின்ற பொறாமை முதிர முதிர, அறிவைப் பயன்படுத்த முடியாதவன் ஆனான்.  இவனுக்கோ உள்ளம் கல்லால் ஆனது.  போதும் போதாதற்கு, அச்ச உணர்வு என்பது (அஞ்ச வேண்டிய இடங்களில் கூட) கொஞ்சமும் இல்லாததானது.  வானமே தலையில் இடிந்து விழுந்தாலும் அஞ்சாதவன் இவன்.  பூமிக்கு அடியில் இருக்கும் வெம்மையானது முதிர முதிர, திடமாக நிற்கின்ற மலை எப்படிக் குழைந்து போகிறதோ, எப்படி இளகுகிறதோ, எப்படிக் குழம்பாக மாறுகிறதோ, அப்படி இந்தக் கல் நெஞ்சனின் ‘நெஞ்சக் கன கல்’ உள்ளே கொதிக்கின்ற பொறாமையால் குழம்பு பட்டது.  அப்படி இளகிய மலையின் உச்சி வெடித்து எவ்வாறு எரிமலைக் குழம்பைக் கக்குகிறதோ அவ்வாறே துரியோதனனுடைய மனம் மாறியது.  

‘வானம் வீழினும் அஞ்சுதல் இல்லான்,’ என்ற அடியும், ‘உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை’ என்ற அடியும் கருத்தால் ஒன்றாயிருந்தாலும், காரணத்தால் வேறுபடுவதை உணரலாம்.  

நெஞ்சத் துள்ளோர் பொறாமை எனும்தீ
    நீள்வதால் உள்ள நெக்குரு கிப்போய்
மஞ்சன் ஆண்மை மறம்திண்மை மானம்
    வன்மை யாவும் மறந்தனாகி
பஞ்சை யாம்ஒரு பெண்மகள் போலும்
    பாலர் போலும் பரிதவிப்பானாய்க்
கொஞ்ச நேரத்தில் பாதகத் தோடு
    கூடி யேயுற வெய்திநின் றானால். (39)

பதம் பிரித்து: தேவை இல்லை

அ. சொற் பொருள்

மஞ்சன்: மைந்தன்.  ஆண்மகன், இளைஞன்.

‘நெஞ்சஞ் சுட உரைத்தல் நேர்மையெனக் கொண்டாயோ!
மஞ்சனே! அச்சொல் மருமத்தே பாய்வதன்றோ?’

என்று இதே பாஞ்சாலி சபதத்தில் பின்னால் விதுரன் உரையில் இந்தச் சொல்லைக் காணலாம்.

பஞ்சை: இந்தச் சொல்லுக்கான ஆறு வேறு வேறு பொருளில் இங்கே பொருந்துவது ‘அற்பத்தனம் உள்ள’ என்பது.  

‘தஞ்சம் உலகினில் எங்கணுமின்றித் தவித்துத் தடுமாறி
பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன்
பாரமுனக்காண்டே! ஆண்டே! பாரமுனக்காண்டே’
(கண்ணன் – என் ஆண்டான்)

இந்தப் பாடலில் ‘பஞ்சை’ என்ற சொல், ‘தரித்திரன், பலமற்றவன்’ என்ற பொருளில் பயன்படுவதைக் காணலாம்.

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

கட்டளைக் கலிப்பா.  நேரசையில் தொடக்கம்.  அடிக்கு ஒற்று நீக்கி இருபது எழுத்துகள்.  

ஈ. பாடல் சொல்வது

பூமிக்கு அடியிலிருந்த வெம்மை முற்றி முதிர்ந்து, மலையை இளக்கிக் குழம்பாக்கிச் சீறிப் பாய்ந்து வெளிப்படுவதுபோல், நெஞ்சுக்குள் இருக்கும் பொறாமை எனும் தீ நெக்குருகிப் போகச் செய்வதால், பையன் எல்லாவற்றையும் மறந்தான்.  எதையெல்லாம்?  ஆண்மை, வீரம், (நல்ல நெறியில் நிற்பதற்கான) உறுதி, மானம், ஆற்றல் எல்லாவற்றையும்.  அப்படி மறந்தவனாகி, அற்ப குணம் உடைய ஒரு பெண்ணைப் போலவும், சிறுவரைப் போலவும் பரிதவிக்கலானான்.  அப்படி அந்த நிலையில் கொஞ்ச நேரமே இருந்த போதிலும் பாதகத் தன்மையோடு அவன் உள்ளம் உறவு கொண்டது.  

அற்ப குணம் உள்ள பெண், பாலர் என்றெல்லாம் குறிப்பிட்டது,  ‘இன்னது செய்ய வேண்டும் என்று நினைத்த போதிலும், அவ்வாறு செய்யும் சக்தியற்றவராய் இருக்கும் நிலையை உடையவர்கள்,’ குணக் கேடும் அடைந்தால் எவ்வாறு செயலற்றுப் போய்ப் பரிதவிப்பார்களோ, அவ்வாறு என்பதைக் குறிக்கவே.

இவ்வளவு நேரமும் துரியோதனனைப் பொறாமை வருத்தியது.  அதனால் உண்டான தீ அவனை நெக்குருகச் செய்தது.  ‘எப்படியாவது பாண்டவர் செல்வத்தைத் தன் வசமாக்க வேண்டும்; அதைவிடவும் முக்கியமாய் அவர்களை வறுமை எய்தச் செய்யவேண்டும்,’ என்று விடாப்பிடியாக ஓரெண்ணம் உள்ளே ஒடிக்கொண்டிருக்கிறது.  அதனைச் செயலாக்குவது எப்படி என்று தெரியவில்லை.  இப்படிப்பட்ட, ‘செய்வதறியாத திகைப்பையும், செய்வதற்கான ஏது இல்லாத தவிப்பையும்,’ ஒருங்கே காட்டவே பெண், பாலர் ஆகியோரைச் சுட்டினான்.  (பெண்கள் அசக்தர்கள் என்ற பொருளிலோ, செயலாற்ற முடியாதவர்கள் என்றோ பொருளிலோ பயன்படுத்தவில்லை என்பது உணரவேண்டிய ஒன்று.)

யாது நேரினும் எவ்வகை யானும்
    யாது போயினும் பாண்டவர் வாழ்வைத்
தீது செய்து மடித்திட எண்ணிச்
    செய்கை ஓன்றறி யான்திகைப் பெய்திச்
சூதும் பொய்யும் உருவெனக் கொண்ட
    துட்ட மாமனைத் தான்சரண் எய்தி
ஏது செய்வம் எனச்சொல்லி நைந்தான்
    எண்ணத் துள்ளன யாவையும் உரைத்தே. (40)

பதம் பிரித்து: தேவை இல்லை

அ. சொற் பொருள் –

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

கட்டளைக் கலிப்பா.  நேரசையில் தொடங்குவதால் ஓரடிக்கு ஒற்று நீக்கி இருபதெழுத்துகள்.

ஈ. பாடல் சொல்வது

இவ்வளவு நேரமும் வாட்டிக்கொண்டிருந்த பொறாமைத் தீ வெளிப்படுகிறது.  என்ன நேர்ந்தாலும் சரி, எந்த வழியை மேற்கொள்வதானாலும் சரி, நமக்கு என்ன வகையான இழப்பு நேரிட்டாலும் சரி.  பாண்டவர் வாழ்வை அழிப்பதாகிய தீங்கை அவர்களுக்கு இழைத்தே ஆகவேண்டும் என்ற துடிப்பும், அதை எப்படிச் செய்வது என்றறியாத திகைப்பும் கொண்டவனாகி, சூதும், பொய்யும் ஓர் உருவம் கொண்டு வந்ததைப் போன்ற துஷ்டனான மாமன் சகுனியைச் சென்றடைந்தான்.  அவனைச் சரண் புகுந்தான்.  அவனிடம் தன் மனத்தில் தோன்றிய அனைத்தையும் சொல்லி, ‘என்ன செய்வோம்!’ என்று சொல்லிச் சொல்லி மனம் நைந்தான்.

மன்னர் மன்னன் யுதிட்டிரன் செய்த
    மாம கத்தினில் வந்து பொழிந்த
சொன்னம் பூண்மணி மற்றிவை கண்டும்
    தோற்றம் கண்டு மதிப்பினைக் கண்டும்
என்ன பட்டது தன்உளம் என்றே
    ஈன மாமன் அறிந்திடும் வண்ணம்
முன்னம் தான்நெஞ்சிற் கூறியஎல்லாம்
    மூடன் பின்னும் எடுத்து மொழிந்தான். (41)

பதம் பிரித்து: தேவை இல்லை

அ. சொற் பொருள்: மா மகம்: பெரிய வேள்வி.  சொன்னம்: சொர்ணம், தங்கம்

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

கட்டளைக் கலிப்பா.  நேரசையில் தொடக்கம்.  அடிக்கு ஒற்று நீக்கி இருபது எழுத்துகள்.  

ஈ. பாடல் சொல்வது

சக்ரவர்த்தியான தருமபுத்திரன் செய்த பெருவேள்வியில் (ராஜ சூய யாகம்) மற்ற மன்னர்கள் கொண்டுவந்து கொட்டிய தங்கத்தையும், மணிக் குவியலையும், அவற்றின் மதிப்பையும் பார்த்துப் பார்த்துத் தன் மனம் எப்படியெல்லாம் வெதும்பியது என்பதை கீழ்த்தரமான மனமுடைய மாமன் அறியும்படியாக மூடனான துரியோதனன் தான் முன்னர் நினைத்ததை எல்லாம் எடுத்துச் சொன்னான்.

வேறு

உலகு தொடங்கிய நாள்முதலாக நம்சாதியில் – புகழ்
    ஓங்கி நின்றார் இத்தருமனைப் போலெவர் மாமனே!
இலகு புகழ்மனுவாதி முதுவர்க்கு மாமனே – பொருள்
    ஏற்றமும் மாட்சியும் இப்படி உண்டுகொல் மாமனே
கலைகள் உணர்ந்தநல் வேதியர் பாவலர் செய்தவாம் – பழங்
    கற்பனைக் காவியம் பற்பல கற்றனை மாமனே
பலகடல் நாட்டையும் இப்படி வென்றதை எங்கணும் – சொல்லப்
    பார்த்த துண்டோ கதை கேட்டதுண் டோபுகல் மாமனே (42)

பதம் பிரித்து: தேவையில்லை

அ. சொற் பொருள்: முதுவர்: தமர் ஆகிய மூத்தோர், முன்னோர்

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

சிந்து. பதினோரு சீர், நான்கடி.  

ஈ. பாடல் சொல்வது

துரியோதனன் சொல்கிறான்: ‘என்றைக்கு இந்த உலகம் தொடங்கியதோ அன்று முதல் இன்று வரை நம் குலத்தில் இந்தத் தருமனைப் போல் புகழில் சிறந்து விளங்கியவர் யாராவது உண்டா மாமா!  மனு முதலான பெரும் புகழ் படைத்த மன்னர்கள் நமக்கு முன்னால் இருந்தார்கள்தாம்.  அவர்களுக்குக் கூட இப்படியொரு பொருட் செல்வமும், உயர்வும், மாண்பும் இருந்திருக்குமா!  மாமா!  நல்ல கலைகளை அறிந்த பழங்காலத்து வேதியர், கவிஞர் செய்த கற்பனைக் காவியங்கள் எத்தனையோ படித்திருப்பாய் நீ!   கடலால் சூழப்பட்ட பல நாடுகளை ஒரே போல இப்படி வென்ற கதையை எங்கேயாவது படித்திருக்கிறாயா, சொல்லக் கேட்டிருக்கிறாயா, சொல்லு மாமா!

எதனை உலகில் மறப்பினும் யான்இனி மாமனே – இவர்
    யாகத்தை என்று மறந்திடல் என்ப தேதுகாண்
விதமுறச் சொன்ன பொருட்குவையும் பெரிதில்லைகாண் – அந்த
    வேள்வியில் என்னை வெதுப்பின வேறு பலவுண்டே
இதனை எலாம்அவ் விழியற்ற தந்தையின் பால்சென்றே – சொல்லி
    இங்கிவர் மீதவனும் பகைஎய்திடச் செய்குவாய்
மிதமிகும் அன்பவர் மீதுகொண்டான் அவன் கேட்கவே – அந்த
    வேள்வி கண்டென்னுயிர் புண்படுஞ் செய்தி விளம்புவாய். (43)

பதம் பிரித்து:

அ. சொற் பொருள்: வெதுப்புதல், வெதும்புதல்: சினம் கொள்ளுதல்; மனம் கலங்குதல் (to be disturbed in mind)

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

சிந்து. பதினோரு சீர், நான்கடி.  

ஈ. பாடல் சொல்வது

இனிமேல் இந்த உலகத்தில் நான் எதை மறந்தாலும், இவர்கள் செய்த யாகத்தை என்றாகிலும் மறத்தல் என்பது ஏது மாமா?  ஏதோ பல விதமான பொருளின் குவியல் அவர்களுக்கு வந்துவிட்டது என்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை.  அந்த வேள்வியின் போது என்னைக் கோபப்படுத்தியவை இன்னும் பிற உண்டு.  (நான் உனக்கு அவற்றைச் சொல்கிறேன்.)  நீ போய் (நான் உன்னிடம் சொல்வதை எல்லாம்) அந்தக் குருட்டு அப்பனிடம் போய்ச் சொல்லி, இவர்கள் மீது அவனும் பகை கொள்ளும்படிச் செய்ய வேண்டும் நீ.  அவர்கள் மீது இவனுக்கு அளவில்லாத அன்பு இருக்கிறது.  அவனிடம் போய், இவர்களுடைய வேள்வியின் காரணமாக என் உயிர் எவ்வளவு புண்பட்டிருக்கிறது என்பதை எடுத்துச் சொல்வாய்.

திருதிராஷ்டிரனுக்குப் பாண்டவர்கள் மீது (இதுவரையில்) முழுமையான அன்பிருப்பதைப் போல் பாரதி சித்திரித்திருக்கிறான்.  இது வியாச பாரதத்தில் இவ்வாறில்லை.  வெளியில் அன்பும், உள்ளத்தில் காழ்த்த வயிரிப்பும் பாண்டவர்கள்பால் கொண்டிருந்தான் திருதிராட்டிரன்.  ‘இந்நூலிடையே திருதிராஷ்டிரனை உயர்ந்த குணங்களுடையவ னாகவும், சூதில் விருப்பமில்லாதவ னாகவும், துரியோதனனிடத்தில் வெறுப்புள்ளவனாகவும் காட்டியிருக்கிறேன்,’ என்று பாரதி பாஞ்சாலி சபத முன்னுரையில் குறிப்பிடுகிறான்.  திருதிராஷ்டிரன் பாத்திரப் படைப்பில் சிறிய மாறுதல்களைச் செய்திருக்கிறான்.  ஆனாலும், இந்தக் கட்டத்தில் வியாச பாரதத்திலும் திருதிராஷ்டிரன் சூதை வெறுத்தே பேசுகிறான்.  (சூது நடக்கும் போது அவனுடைய நடத்தை வியாச பாரதத்தில் அருவருப்புத் தருவதாக இருக்கிறது.  பாஞ்சாலியைப் பணயம் வைக்கும் கட்டத்தில் – கண்ணற்றவனாகிய காரணத்தால் – ‘ஜெயித்தாயிற்றா, ஜெயித்தாயிற்றா,’ என்று பக்கத்தில் இருப்பவர்களிடம் பரபரப்பாகக் கேட்கிறான்.  பாரதி அந்தக் கட்டத்தை விட்டுவிட்டான்.

கண்ணைப் பறிக்கும் அழகுடையார் இளமங்கையர் – பல
    காமரு பொன்மணிப் பூண்கள் அணிந்தவர் தம்மையே
மண்ணைப் புரக்கும் பாவலர் தாமந்த வேள்வியில் – கொண்டு
    வாழ்த்தி அளித்தனர் பாண்டவர்க்கே எங்கள் மாமனே
எண்ணைப் பழிக்கும் தொகையுடையார் இள மஞ்சரைப் – பலர்
    ஈந்தனர் மன்னர் இவர்தமக்குத் தொண்டியற்றவே.
விண்ணைப் பிளக்கும் தொனியுடைய சங்குகள் ஊதினார் – தெய்வ
    வேதியர் மந்திரத்தோடுபல் வாழ்த்துக்கள் ஓதினார். (44)

பதம் பிரித்து: தேவை இல்லை

அ. சொற் பொருள்: காமரு – விரும்பத்தக்க.  

கணிகண்ணன் செல்கின்றான் காமருபூங் கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டா – துணிவுடைய
செந்நாப் புலவன்யான் செல்கின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்.

தன் சீடனான கணிகண்ணன் காஞ்சிபுரத்தை விட்டுச் செல்லும்போது மதுரகவி ஆழ்வார் பாடியது.  ‘என் சீடன் கணிகண்ணன் போகின்றான்.  எனக்கும் இங்கே ஒரு வேலையும் இல்லை.  துணிச்சல் உள்ள கவிஞன் நான் போகின்றேன்.  விரும்பத் தக்க காஞ்சி மணிவண்ணா!  நீயும் உன் நாகப் பாயைச் சுருட்டிக் கொண்டு என்னோடு புறப்படு!’

காமரு என்னும் சொல் ‘காமர்’ என்ற சொல்லினின்றும் வேறுபட்டது.  காமர் என்ற சொல்லாட்சி இன்னும் சில பாடல்கள் கழித்து வரும்போது பார்க்கலாம்.  

மஞ்சர்: மைந்தர், ஆண் மக்கள்

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

சிந்து. பதினோரு சீர், நான்கடி.  

ஈ. பாடல் சொல்வது

வெறும் பொன்னும் பொருளும் மட்டுமா காணிக்கையாக வந்தது அவ் வேள்விக்கு! விரும்பத் தகுந்த, ஆபரணங்களை அணிந்த, கண்ணைப் பறிக்கும் அழகுடைய இள மங்கையர் எத்தனை!  மன்னர்கள் இந்தப் பெண்களைக் கொண்டுவந்து பாண்டவர்களுக்குப் பணிவிடை செய்யுமாறு அளித்தனர்.  எண்ணில் அடங்காத கூட்டம் கூட்டமான இளம் ஆடவர்களை இவர்களுக்குத் தொண்டு செய்யுமாறு கொண்டுவந்து கொடுத்தனர்.  விண் பிளக்குமாறு சங்குகளை முழக்கினர்.  வேதியர்கள் மந்திரங்கள் ஓதி இவர்களை வாழ்த்தினார்கள்.  இது மட்டுமா!

நாரதன் தானுமவ் வேதவியாசனு மாங்ஙனே – பலர்
    நானிங் குரைத்தற் கரியபெருமை முனிவரும்
மாரத வீரரப் பாண்டவர் வேள்விக்கு வந்ததும் – வந்து
    மாமறை யாசிகள் கூறிப் பெரும்புகழ் தந்ததும்
வீரர்தம் போரினரிய நற் சாத்திர வாதங்கள் – பல
    விப்பிரர் தம்முள் விளைத்திட உண்மைகள் வீசவே
சாரமறிந்த யுதிட்டிரன் கேட்டு வியந்ததும் – நல்ல
    தங்க மழைபொழிந் தாங்கவர்க் கேமகிழ் தந்ததும் (45)

விப்பிரர் – அந்தணர்

பதம் பிரித்து:

நாரதன்தானும் அவ் வேதவியாசனும் ஆங்ஙனே – பலர்
    நான் இங்கு உரைத்தற்கு அரிய பெருமை முனிவரும்
மாரத வீரர் அப் பாண்டவர் வேள்விக்கு வந்ததும் – வந்து
    மாமறை ஆசிகள் கூறிப் பெரும்புகழ் தந்ததும்
வீரர்தம் போரின் அரிய நற் சாத்திர வாதங்கள் – பல
    விப்பிரர் தம்முள் விளைத்திட, உண்மைகள் வீசவே,
சாரம் அறிந்த யுதிட்டிரன் கேட்டு வியந்ததும் – நல்ல
    தங்க மழை பொழிந்து ஆங்கு அவர்க்கே மகிழ் தந்ததும் (45)

அ. சொற் பொருள்:

ஆங்ஙனே: ஆங்ஙனம், ஆங்கனம்: அங்கனம், அவ்விதம்.
விப்பிரர்: அந்தணர்

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

சிந்து. பதினோரு சீர், நான்கடி.  பொருள் நான்கடிகளில் முடிவடையாமல் அடுத்த பாடலுக்குச் செல்வதால் குளகச் செய்யுள்.  ‘செப்புக நீ அவ்விழி அற்ற தந்தைக்கு,’ என்று அடுத்த பாடலின் நான்காவது அடியில் பொருள் முற்றுப் பெறுகிறது.  

ஈ. பாடல் சொல்வது

நாரதன், வேத வியாசர் தொடங்கி, நான் சொல்ல ஒண்ணாத பெருமையை உடைய முனிவர்கள், பெரும் பெரும் வீர்கள் எல்லோரும் அந்த ராஜ சூய வேள்விக்கு வந்திருந்ததும், மறை முதல் ஆசிகள் கூறியதும், வீரர்களின் மற்போர், விற்போரை விடவும் அரிதான சொற்போரை கற்றறிந்த அந்தணர்கள் நிகழத்திட, அந்த வாதங்களால் பல அரிய உண்மைகள் வெளிப்பட, அவற்றின் சாரத்தை அறிந்தவனான தருமன் அவர்களுக்குப் பொன் மழை பொழிந்ததும், அவர்கள் மகிழ்ந்ததும்…

சிறு சிறு வாக்கியங்களாகத் தொடங்கும் பேச்சு, திடுமென நீண்ட வாக்கியங்களாக மாறுவதை கவனிக்கவும்.  உணர்ச்சி ஏற ஏற, வாக்கியங்களின் நீளம் அதிகரித்துக்கொண்டே போவது மனித இயல்பு.  இந்த ஓரிடம் என்றில்லை; இனி வரும் இடங்களிலும் இவற்றைக் காண்போம்.  பாரதியின் பாடல்களில் உணர்ச்சியானது நெருப்பாகப் பற்றுவது எப்படி என்றால், இதோ, இதுவும் ஒரு காரணம்.  இவற்றையெல்லாம் எண்ணிச் செய்திருக்கிறான் என்று சொல்ல வரவில்லை.  படைப்பாளன் உள்ளம் ஒன்றி, தானே அதுவாகிச் செய்யும் எந்தப் படைப்பிலும் இந்த நேர்த்தி தானாகவே வெளிப்படும்.  

துரியோததன் பாத்திரத்தைப் பேசினால், பாரதி துரியோதனனாகிப் பேசுகிறான்.  பாஞ்சாலி பாத்திரத்துக்குள் அவனே பாஞ்சாலியாகிறான். வீமன், அர்ஜுனன், தருமன், ஏன், சகுனி என்று ஒவ்வொருவருள்ளும் பாரதி புகுந்து புறப்படும் ஆச்சரியத்தைக் காணலாம்.  கம்பனுக்கு அடுத்ததாக இப்படி ஒரு நேர்த்தியை நான் பாரதியிடத்தில்தான் காண்கிறேன்.  வில்லியிடம் கூட இப்படியோர் உணர்ச்சி ஓட்டத்தைக் காண முடிவதில்லை.  இரண்டாம் பாகத்தில், துகிலுரியும் கட்டத்தில் இந்த வாக்கிய அமைப்புகளைக் கூர்ந்து கவனிப்போம்.  இடையிடையே மற்ற இடங்களையும் பார்க்கலாம்.  

வாய்விட்டுப் படித்துப் பார்த்தால் இந்தப் பாடல்களில் என்னென்ன மாயங்கள் நிகழ்கின்றன என்பதை உணரலாம்.  உணர்சி ஓட்டம் மிக்க, இவ்வளவு நீளமான வாக்கியத்தைப் படிக்கும்போது, அங்கங்கே நிறுத்தி மூச்சு வாங்கிக் கொள்ள இடம் இயல்பாக அமைந்திருப்தை உணரலாம்.   பாரதி கவிதைகளில் உள்ள வாக்கிய அமைப்பு தனி ஆய்வுக்கு உரிய தலைப்பு.  

விப்பிரரா திய நால்வருணத்தவர் துய்ப்பவே – நல்
    விருந்து செயலில் அளவற்ற பொன்செல விட்டதும்
இப்பிறவிக்குள் இவைஒத்த வேள்வி விருந்துகள் – புவி
    எங்கணு நாம்கண்டதில்லை எனத்தொனி பட்டதும்
தப்பின்றியே நல்விருந்தினர் யார்க்கும் தகுதிகள் – கண்டு
    தக்க சன்மானம் அளித்து வரிசைகள் இட்டதும்
செப்புக நீஅவ் விழியற்ற தந்தைக்கு நின்மகன் – இந்தச்
    செல்வம் பெறாவிடில் செத்திடுவான் என்றுஞ் செப்புவாய். (46)

பதம் பிரித்து: தேவை இல்லை.

அ. சொற் பொருள்: விப்பிரர்: அந்தணர் என்பதைப் பார்த்தோம்.

ஆ. இலக்கணம்

எங்கணு நாம்: எங்கணும் நாம்.  வருமொழி முதலில் நகரம் தோன்றின், நிலைமொழி ஈற்று மகரம் கெடும் என்ற விதியை நாம் முன்னமேயே பார்த்தோம்.  (காண்க: பாடல் 3)

இ. யாப்பு

சிந்து. பதினோரு சீர், நான்கடி.

ஈ. பாடல் சொல்வது

அந்தணர் முதலான நான்கு வருணத்தவர் உண்ணுமாறு விருந்தளித்ததில் பெரும் பொருளைச் செலவிட்டதும், ‘இப்படி ஒரு வேள்வி, விருந்து, எதுவும் உலகத்தின் எந்தப் பகுதியிலும் நடந்து இந்தப் பிறவியில் நாம் பார்த்தில்லை என்று வந்திருந்த அனைவரும் பேசியதும், வந்திருந்த அத்தனை விருந்தினர்களுக்கும் அவரவர் தகுதிக்கு ஏற்ற வகையில் தருமன் சன்மானம் அறித்ததும், அந்தக் குருட்டு அப்பனிடம் போய்ச் சொல்.  இந்தச் செல்வம் எல்லாவற்றையும் உடனடியாக அடையாவிட்டால், உன் பிள்ளை செத்துப் போவான் என்தையும் சொல்.

அண்ணன் மைந்தன் அவனிக் குரியவன் யானன்றோ – அவர்
    அடியவ ராகிஎமைப் பற்றி நிற்றல் விதியன்றோ?
பண்ணும் வேள்வியில் யார்க்கு முதன்மை அவர்தந்தார் – அந்தப்
    பாண்டவர் நம்மைப் புல்லென எண்ணுதல் பார்த்தையோ
கண்ணனுக்கு முதலுப சாரங்கள் காட்டினார் – சென்று
    கண்ணிலாத் தந்தைக்கு இச்செயலின் பொருள் காட்டுவாய்
மண்ணில் வேந்தருட் கண்ணனெவ்வாறு முதற்பட்டான் – என்றன்
    மாமனே அவன்நம்மில் உயர்ந்த வகை சொல்வாய். (47)

பதம் பிரித்து: தேவையில்லை.

அ. சொற் பொருள்:

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

சிந்து. பதினோரு சீர், நான்கடி.

ஈ. பாடல் சொல்வது

திருதிராட்டிரனல்லவோ அண்ணன்?  அவனுக்கல்லவோ இந்த அவனி உரியது?  அப்படி இருக்க, இடையில் வந்த தம்பியின் மகனான இவன், எனக்கு மூத்தவனாக இருந்தால் மட்டும் என்ன?  இவனுக்கு எப்படி அரசுரிமை வந்தது?  அண்ணன் மகன், அவனிக்கு உரியவன் நான்.  தம்பியின் மகன் என்ற விதத்தில், எனக்கு அடியவர்களாகி என்னைப் பணிய வேண்டியது அவர்கள் கடன்.  அப்படியா நடக்கிறது இங்கே?  என்ன மரியாதை இருக்கிறது நமக்கு?  அந்தப் பாண்டவர்கள் நம்மைப் புல் என மதிக்கிறார்கள்.  போயும் போயும் கண்ணனுக்கு முதல் மரியாதை செலுத்தினார்கள்.  இதையும் போய் அந்தக் குருட்டு அப்பனிடம் சொல்.  இப்படி (எனக்கில்லாமல் இடைப் பயலான கண்ணனுக்கு) முதலுபசாரம் செய்ததன் பொருள் என்ன என்பதை எடுத்துச் சொல்.  அவர் நம்மை மதிக்கவில்லை என்பதை எடுத்துச் சொல்.  எந்தவிதத்தில் அந்தக் கண்ணன் மற்ற மன்னர்களைக் காட்டிலும் பெரியவனானான்?  எந்த வகையில் அந்தத் தருமனும் மற்ற பாண்டவர்களும் என்னையும் என் தம்பியரையும் விட உயர்ந்தவர்களானார்கள்?

அண்ணன் மகன், அவனிக்கு உரியவன் என்று இவன் கொண்டாடிக்கொண்டாலும், இவனுக்கு உரிய அரசாட்சியில் அவர்கள் ஏதும் கேட்கவில்லை.  அவர்களுக்கு அளிக்கப்பட்டதோ ஒரு காட்டுப் பகுதியான காண்டவ வனம்.  அதைத் திருத்தி, நாடு சமைத்து, அவர்கள் அவர்களுடைய அரசாட்சியை மேன்மைப்படுத்திக் கொண்டார்கள்.  அது பொறுக்கவில்லை இவனுக்கு.  இது ஒன்று.

அடுத்ததாக இவன் சொல்வது, ‘அக்ர பூசை,’ என்று சொல்லப்பட்ட முதல் மரியாதை.  ‘அக்ரம்’ என்பதற்கு நுனி என்பது பொருள்.  தருப்பைப் புல்லின் நுனியை ‘அக்ரம்,’ என்றும், மையப் பகுதியை ‘மத்யம்,’ என்றும், அடிப்பகுதியை ‘மூலம்,’ என்றும் குறிப்பிடுவது வழக்கம்.   எது மேற்பகுதியோ, எது முதன்மையானதோ, எது முதலில் இருக்கிறதோ அது அக்ரம்.  

ஆர்கொலோ அக்ர பூசனைக்கு உரியார்
    அரசரில் அந்தணீர் உரைமின்
பாரெலாம் தத்தம் குடைநிழல் புரக்கும்
    பார்த்திபர் யாரையும் உணர்வீர்
தாருலாம் மார்பீர் என்றலும் வியாதன்
    தருமன்மா மதலையை நோக்கிக்
காரின்மா மேனிக் கரிய செந்திகிரிக்
    கண்ணனுக்கு உதவெனக் கதித்தான்

என்கிறார் வில்லிபுத்தூரார்.  ‘இங்கே வந்திருக்கும் அத்தனை அரசர்களையும் நீங்கள் அறிவீர்கள்.  இவர்களில் முதல் மரியாதைக்கு உரியவர்கள் யார் என்பதைச் சொல்ல வேண்டும் அந்தணர்களே!’ என்று தருமன் கேட்டுக்கொண்டான்.  வியாசன் எழுந்து, தருமபுத்திரனைப் பார்த்து, ‘கண்ணனுக்கே அந்தத் தகுதி,’ என்று கூறினார்.

யேஷ ஹோஷாம் சமஸ்தானாம் தேஜோபல பராக்ரமைஹி
மத்யே தபன்னிவாபாதி ஜ்யோதிஷமி பாஸ்கரஹ

என்று வீடுமன் (பீஷ்மர்) சொன்னதாக வியாசர் கூறுகிறார். ‘இந்த எல்லோருடைய மத்தியிலும், தேஜஸாலும், பலத்தாலும், பராக்கிரமத்தாலும் சோதி மிக்க சூரியனைப் போல் பிரகாசிப்பவர் இவரே,’ என்று வீடுமன் சொன்னதன் பேரில் சகதேவன் கண்ணனுக்கு முதல் பூசை செய்தான்.  அந்தப் பூசை தனக்குச் செய்யப்படவில்லை என்பது துரியோதனனுடைய வருத்தம்.  

சந்திர குலத்தே பிறந்தோர்தம் தலைவன்யான் – என்று
    சகமெலாம் சொலும் வார்த்தைமெய்யோ வெறும் சாலமோ?
தந்திரத் தொழில்உணரும் சிறுவேந்தனை – இவர்
    தரணி மன்னருள் முற்பட வைத்திடல் சாலுமோ?
மந்திரத்தில் அச்சேதியர் மன்னனை மாய்த்திட்டார் – ஐய
    மாமகத்தில் அதிதியைக் கொல்ல மரபுண்டோ?
இந்திரத்துவம் பெற்றிவர் வாழு நெறிநன்றே! – இதை
    எண்ணிஎண்ணி என்நெஞ்சு கொதிக்குது மாமனே. (48)

பதம் பிரித்து: தேவையில்லை

அ. சொற் பொருள்: மாமகம் – பெரு வேள்வி

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

சிந்து. பதினோரு சீர், நான்கடி.

ஈ. பாடல் சொல்வது

ஏன் கண்ணனுக்கு முதல் மரியாதை செலுத்த வேண்டும்.  எனக்கென்ன குறை?  சந்திர வம்சத்தில் தோன்றியவர்களுக்கெல்லாம் தலைவன் நான்தான் என்று இந்த உலகமெல்லாம் சொல்கிறதே அந்த வார்த்தை உண்மையா, இல்லை வெறும் வாய் சாலமா?  போயும் போயும் தந்திர வித்தைகள் காட்டும் ஒரு சின்ன அரசனைப் போய், பெரிய பெரிய நாடுகளை ஆளும் இத்தனை மன்னர்களுக்கெல்லாம் மேம்பட்டவனாக, முதல்வனாக வைத்தது சரியாகுமா?  நியாயமா?  அந்தச் சேதியர் மன்னனை இவர்கள் எப்படிக் கொன்றார்கள்!  வேள்விக்கு வந்திருக்கும் அதிதியல்லவா அவன்!  வேள்வியின்போது அதிதியை யாராவது கொல்வார்களா!  இந்த அடிப்படை கூட இவர்களுக்குத் தெரியவில்லையே!  நல்ல இந்திரத்துவம் பெற்றார்கள் இவர்கள்!  இப்படி எந்த விதத்திலும் தகுதியில்லாதவர்கள் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறார்களே இந்த உலகத்தார்!  இதை எண்ணி எண்ணி என் மனம் கொதிப்புறுகிறதே!

சேதியர் மன்னன் என்பது, சிசுபாலனை.  கண்ணனுக்கு முதல் மரியாதை செலுத்தியதை எதிர்த்தான் சிசுபாலன்.  ‘இவன் என்ன பெரிதாகச் சாதித்துவிட்டான் என்று இவனுக்கு இந்த உபசரணை?’ என்று அவன் கேட்ட உரையிலிருந்து ஒரு சிறு பகுதி இது:

‘பாண்டவனே! நீ தகுதியில்லாத முறையில் பிறந்தவன்.  தகுதியற்ற காரியத்தைச் செய்கிறாய்.  தாழ்ந்த இடத்தை நோக்கி ஓடும் நதியின் புதல்வன் பீஷ்மன்.  அவன் கூற்றுப்படி பூஜையைப் பெற்றுக்கொண்டவனோ இடையன்.  இந்தச் சபையில் உள்ளவர்கள் ஊமையைப் போல் இருக்கின்றனர்….. ….. அரசன் அல்லாத இந்தக் கிருஷ்ணன் எந்த வகையில் இந்த மரியாதைக்குத் தகுதியுடையவன்?  வயதில் மூத்தவனா?  அப்படியென்றால் இந்தக் கண்ணனுக்கு அப்பனான வசுதேவன் இங்கேதானே இருக்கிறான்!  அப்பன் இருக்கும் போது இந்த மரியாதையை இவன் எப்படி ஏற்கலாம்?  இவனென்ன யாகத்தை நடத்திவைக்கும் ரித்விக்கா?  அப்படியானால் இவனை விடவும் பல்வகையிலும் மேம்பட்ட வியாசர் இருக்கிறாரே!  இவனென்ன உங்களுடைய ஆசாரியனா?  அப்படியானால் இங்கே துரோணரும், கிருபரும் இருக்கிறார்களே!  எங்களை அவமதிக்கவா இவ்வளவு தூரம் எங்களை வரவழைத்தாய்?  உன் வேள்விக்குக் கப்பம் அளித்தது உன்னிடம் பயந்துகொண்டு என்று எண்ணுகிறாயா?  கண்ணா!  இந்தப் பூசை உனக்குத் தகுதியானதா?  வேள்விக்கு உரிய அவிசை, நாய் தின்பதைப் போல் உனக்குப் பொருந்தாத இந்தப் பூசையை நீ ஏற்றுக் கொள்ளலாமா….’

நீண்ட உரையின் ஒரு சிறு பகுதிதான் இது.  தர்க்க ரீதியாக சிசுபாலன் பேசும் பேச்சைக் கேட்டால், ‘இவன் பக்கத்திலும் நியாயம் இருக்கிறதோ,’ என்று தோன்றும்படியாகச் செய்திருக்கும் நேர்த்தியை வியாசரிலும் காணலாம்; வில்லியிலும் காணலாம்.  பெரியவர்களுக்கும், மரியாதைக்கு உரியவர்களாகப் பெரும்பாலோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களுக்கும் எந்தக் காலத்திலும் இந்த வகையான எதிர்ப்பு இருக்கத்தான் செய்திருக்கிறது.

சதிசெய்தார்க்குச் சதிசெயல் வேண்டும்என் மாமனே – இவர்
    தாம்என் அன்பன் சராசந்தனுக்கு முன்எவ்வகை
விதிசெய்தார் அதைஎன்றும் என்னுள்ள மறக்குமோ? – இந்த
    மேதினியோர்கள் மறந்துவிட்டார் இஃதோர் விந்தையே!
நிதிசெய்தாரைப் பணிகுவர் மானிடர் மாமனே – எந்த
    நெறியினால் அது செய்யினும் நீள்புவி
துதிசெய்தே அடிநக்குதல் கண்டனை மாமனே – வெறும்
    சொல்லுக்கே அறநூல்கள் உரைக்கும் துணிவெல்லாம். (49)

பதம் பிரித்து: தேவை இல்லை

அ. சொற் பொருள்: துணிவு அல்லது துணிபு: மொத்தம் பதின்மூன்று பொருள் கொண்ட சொல்.  இங்கே கொள்ள வேண்டிய பொருள், கொள்கை, முடிவு,

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

சிந்து. பதினோரு சீர், நான்கடி.

ஈ. பாடல் சொல்வது

சதி செய்தவர்களுக்குச் சதி செய்ய வேண்டும் மாமா!  இவர்கள் என்ன சதி செய்தார்கள் என்று கேட்கிறாயா?  என் நண்பன் ஜராசந்தனை என்ன தந்திரமாக இவர்கள் கொன்றார்கள் என்பதை என் உள்ளம் என்றாவது மறக்குமோ?  ஆனால் இந்த உலகம் இதனை மறந்துவிட்டதே!  இது என்ன விந்தை!  வேறொன்றுமில்லை.  இவர்களிடம் செல்வம் சேர்ந்துவிட்டது மாமா.  பணக்காரனை எல்லோரும் பணிவார்கள்.  எந்த வகையில் அந்தப் பணத்தைச் சம்பாதித்தாலும் சரி.  ஒருவன் பணக்காரனாக இருந்துவிட்டால் அது போதும் இந்த உலகத்துக்கு.   இவர்களைப் போல் மோசடிகள் செய்து ஒருவன் பணம் சம்பாதித்தாலும் பரவாயில்லை.  இந்த உலகம் என்ன செய்யும் என்றால், இத்தகையவர்களைக் கண்டால், துதித்து, நாயைப் போல் இவர்களின் காலை நக்கும்.  அறமாவது புடலங்காயாவது!  அறமென்று நூல்கள் சொல்வது எல்லாம் வெறும் பேச்சுக்கு; ஒப்புக்குத்தான்.

மேலே இருக்கும் துரியோதனன் உரையில் பெரும்பகுதியும் அப்படியே வியாச பாரதத்தில் இருப்பதுதான்.  பாரதியின் கற்பனையோ, சொந்தச் சரக்கோ இல்லை.  ‘பெரும்பான்மையாக, இந்த நூலை வியாச பாரதத்தின் மொழிபெயர்ப்பென்றே கருதிவிடலாம்,’ என்று முன்னுரையில் பாரதி குறிப்பிடுகிறான்.  ஆனால், மொழிபெயர்ப்பில் இத்தனை உணர்ச்சிக் குவியல், கொதிப்பு, கோபம், உக்கிரம் வெளிப்படுவது சாதாரணமான கவிகளுக்கு வாய்ப்பதன்று.  பாரதியின் பாவனா சக்திக்கும், கவிதா சக்திக்கும் எடுத்துக்காட்டு பாஞ்சாலி சபதம்.  இன்னும் காண்போம்.  வியாசரிடமிருந்தும், வில்லியிடமிருந்தும் பாரதி காட்சிகளையும், உரைகளையும் எடுத்துக்கொண்டிருக்கிறான்.  ஆனால், கவிதாவேசத்தில் வில்லியை மிஞ்சுகிறான் என்பது மறுக்க முடியாத உண்மை.

பாஞ்சாலி சபதத்தின் இரண்டாம் பகுதியில், வியாச பாரதத்திலிருந்து எங்கெங்கே எந்தெந்த அடிகளை எடுத்தாண்டிருக்கிறான் என்பதை விரிவாக ஆய்ந்து தொகுத்து வைத்திருக்கிறேன்.  அவற்றை உரிய இடங்களில் இடுகிறேன்.  பாரதி வேறுபடும் இடங்களை மட்டும் அவ்வப்போது குறிக்கிறேன்.  

வேறு

பொற்றடந் தேரொன்று வாலிகன் கொண்டு விடுத்ததும் – அதில்
    பொற்கொடி சேதியர் கோமகன் வந்துதொடுத்ததும்
உற்றதோர் தம்பிக்குத் தென்னவன் மார்பணி தந்ததும் – ஒளி
    ஓங்கிய மாலைஅம் மாகதன்தான் கொண்டு வந்ததும்
பற்றலர் அஞ்சும் பெரும்புகழ் ஏகலவியனே – செம்பொன்
    பாதுகை கொண்டு யுதிட்டிரன் தாளினில் ஆர்த்ததும்
முற்றிடும் அஞ்சனத்திற்குப் பலபல தீர்த்தங்கள் – மிகு
    மொய்ம்புடையான் அவ்அவந்தியர்மன்னவன் சேர்த்ததும் (50)

பதம் பிரித்து: தேவையில்லை.

அ. சொற் பொருள்:

வாலிகன்: இந்தப் பெயரைப் பாஞ்சாலி சபதத்தில் இரண்டு முறை பயன்படுத்துகிறான் பாரதி.  வாலிகன் தந்த பொன் தடந்தேரைப் பற்றிய குறிப்பு மூன்று முறை வருகிறது.  ஆனால், வாலிகன் யார் என்பதற்கான குறிப்பு எனக்கு இதுவரையில் எங்கிலும் கிட்டவில்லை.  மொத்தம் ஐந்துவிதமான மகாபாரதப் பதிப்புகள் உண்டு என்னிடம்.  ஓரிடத்திலும் இந்தப் பெயர் சிக்கவில்லை.  எந்த இடத்திலிருந்து எடுத்தான் என்பதே புரியாத புதிராக இருக்கிறது.  அடுத்த முறை இந்தப் பெயரை பாரதி குறிப்பிடும் கட்டம் வருவதற்குள்ளாவது கிட்டட்டும்.

சேதியர் கோமகன்: சிசுபாலன்

தென்னவன்: மலையத்துவஜ பாண்டியன், பாண்டவர்களின் நெருங்கிய நண்பனாக இருந்தான்.  பாரதப் போரில் பங்கு பெற்று, பதினேழாம் நாள் யுத்தத்தின்போது அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டான்.  தென்னவன் என்ற இந்தப் பெயர் மலையத்துவஜ பாண்டியனைத்தான் குறிப்பதாக இருக்க வேண்டும்.  

மாகதன்: மகத நாட்டு மன்னன் மாகதன்.  (மாகதன் என்ற பெயரில் இன்னொரு பாத்திரத்தைப் பற்றிச் சொல்கிறது அபிதான சிந்தாமணி.  அந்தப் பாத்திரத்துக்கும் பாரதத்துக்கும் தொடர்பிருப்பதாய்த் தெரியவில்லை.)  மகத நாட்டு மன்னன் ஜராசந்தன்.  ஜராசந்தனைத்தான் வீமன் மல்யுத்தம் செய்து, இரு கூறுகளாகக் கிழித்து, தலைமாடு கால்மாடு மாற்றிப் போட்டுக் கொன்றான்.  ஆகவே மாகதன் என்பது ஜராசந்தனைக் குறிக்கவில்லை என்பது தெளிவு.  இங்கே சொல்லப்பட்டிருப்பது ஜராசந்தனின் மகனா சகதேவன்.  இவன் இன்னொரு சகதேவன்.

முன்நர மேதம் செய்வான்
    முடிச்சரா சந்தன் என்னும்
கின்னரர் பாடும் சீரான்
    கிளப்பரும் சிறையில் வைத்த
அந்நர பதிக ளோடும்
    அவன்மகன் மாக தேசன்
எந்நர பதிகளுக்கும்
    இரவியே என்ன வந்தான்.

என்று வில்லி பாடுகிறார்.  (வில்லி பாரதம், சபா பருவம், இராச சூயச் சருக்கம்)

முன்னொரு காலத்தில் மனிதர்களைக் கொன்று வேள்வி (நரமேத யாகம்) இயற்றுவதற்காக ஜராசந்தன் அடைத்து வைத்திருந்த அரசர்கள் எல்லோரும் வந்திருந்தனர்.  அவர்களோடு கூட, *மாக தேசனும்* வந்தான்.  ஜராசந்தன் ஆண்ட நாடு மகத நாடு.  ஆகவே மாகதன் என்பது அவனுடைய மகனான சகதேவனைக் குறிக்கிறது.

பற்றலர்: பகைவர்

ஏகலவியன்: ஏகலவன் என்ற இன்னொரு பெயர்கொண்ட (எப்படி, யார் தமிழில் ஏகலைவன் என்று அழைக்கத் தொடங்கினார்கள் என்பதைக் கண்டறிய முடியாத) அந்த அதே கட்டை விரலை குரு தட்சிணையாகக் கொடுத்த வேடுவன்.

ஏகலவியனைப் பற்றிய குறிப்புகள் அதிகம் கிடைப்பதில்லை.  பரவலான நம்பிக்கை சொல்வதைப் போல் அவன் ஓர் ஏழை வேடுவனல்லன்.  வேடர் குல அரசனுடைய மகன்.  ஏகலவியனின் தந்தை பெயர் ஹிரண்யதனுஸ் (பொன் வில்).  நாயின் வாயை அம்பினால் தைத்த முதல் சந்திப்பின் போது, ஏகலவ்வியனைப் பாண்டவர்கள், ‘நீ யாவன்?’ எனக் கேட்க அவன், ‘வீரர்களே! நான் வேடுவன மன்னரான ஹிரண்ய தனுஸின் மகன்.  துரோணரின் சீடன்.  தனுர் வேதம் பயில்பவன்,’ என்று சொல்கிறான்.

இவன் தன்னை விஞ்சியவனாக இருப்பதைக் கண்டு, சிறுவனாக இருந்த அர்ஜுனன் குருதேவரிடம் முறையிட, துரோணர் அவனுடைய கட்டை விரலை தட்சிணையாகப் பெற்றார்.  துரோணருக்கு ஜாதி உணர்வு இருந்தது என்பது மகாபாரதம் சொல்லும் செய்தி.  அவருடைய வருகைக்கு முன்னால் கர்ணனும் அந்த அரண்மனையில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தவன்தான்.  அவனை முதலில் வெளியே அனுப்பினார் துரோணர்.  அண்ணா என் சுப்பிரமணியம் போன்ற பேரறிஞர்கள், துரோணரை இந்தச் செயலுக்காகக் கண்டித்திருக்கிறார்கள்.

ஆனாலும், ஏகலவியன் சிறந்த வில்லாளிகளில் ஒருவனாகக் கருதப்பட்டிருக்கிறான் என்பது வியப்புக்குரிய ஒரு செய்தி.  கமலா சுப்பிரமணியம் மொழி பெயர்த்த மகாபாரதத்தில், சிசுபாலன் கண்ணனுக்கு அர்க்க பூசை செய்தது பற்றிக் கடிந்து கொள்ளும் உரையில் இப்படி ஒரு வாக்கியம் வருகிறது: ‘If you had the attention of honouring an archer, here is Ekalavya, the son of Hiranyadhanus.  He is the greatest archer now.  He is far better than your Arjuna.’

எனவே ஏகலைவன் என்று (தவறாக?) தமிழில் அறியப்படும் ஏகலவியன் அல்லது ஏகலவன் ஒரு ஏழை வேடனல்லன்.  வேட்டுவ குல அரசன் மகன்.  அவன் ராஜ சூய யாகத்தின் போது வந்திருக்கிறான்.  தங்கத்தினால் ஆகிய காலணியை தருமபுத்திரனுக்குப் பரிசளித்து, தன் கையாலேயே அதை அணிவித்தும் இருக்கிறான்.  ஆனால், பாரதப் போர் தொடங்கும் முன்னால் கண்ணனால் கொல்லப்பட்டவன் என்று அபிதான சிந்தாமணி சொல்கிறது.  அது பற்றிய குறிப்பு இன்னமும் எனக்குக் கிடைக்கவில்லை.

வேடுவன் மகன் என்ற ஒற்றை வாக்கியம் தந்த கற்பனையை வைத்து, ஏகலவியனைச் சுற்றி ஏராளமான படைப்புகள் உலா வருகின்றன.  எல்லாமே அடிப்படையற்றவை.  பாரதி தந்திருக்கும் இந்த முக்கியமான குறிப்பைப் பற்றியபடி உள்ளே நுழைந்தால், தேடி எடுக்க எவ்வளவோ விவரங்கள் இருக்கின்றன.

மொய்ம்பு: வலிமை.  ‘முப்பது கோடி முகமுடையாள்; உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்.’

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

யாப்பு மாறுபடுகிறது.  சிந்து.  நாலடி பதினெட்டு சீர்.  

ஈ. பாடல் சொல்வது

வாலிகன் பொன்னால் செய்யப்பட்ட ஒரு தேரைக் கொண்டுவந்து தருமபுத்திரனுக்குப் பரிசளித்தான்.  அந்தத் தேரில் சிசுபாலன் பொன்மயமான கொடி ஒன்றைப் பறக்க விட்டான்.  மலையத்துவஜ பாண்டியன் அர்ஜுனனுக்கு மார்பில் அணியும் அணி ஒன்றைப் பரிசளித்தான். ஒளியை உமிழ்வதாகிய மாலையை மகத அரசன் சகதேவன் (ஜராசந்தன் மகன்) கொண்டுவந்து தந்தான்.  பகைவர்கள் கண்டு அஞ்சக் கூடிய ஏகலவியன், பொன்னால் செய்யப்பட்ட பாத அணிகளைப் பரிசளித்து, தன் கையாலேயே தருமனுக்குப் போட்டும் விட்டான்.  தருமனுக்கு மங்கல நீராட்டு செய்வதற்காக பல்வேறு புனித நதிகளினின்றும் அவந்தியர் மன்னன் கொண்டு வந்து சேர்த்தான்.  

மஞ்சன நீர்தவ வேதவியாசன் பொழிந்ததும் – பல
    வைதிகர் கூடிநன் மந்திர வாழ்த்து மொழிந்ததும்
குஞ்சரச் சாத்தகி வெண்குடை தாங்கிட வீமனும் – இளங்
    கொற்றவனும் பொற்சிவிறிகள் வீச இரட்டையர்
அஞ்சுவர் போலங்கு நின்று கவரியிரட்டவே – கடல்
    ஆளுமொருவன் கொடுத்ததொர் தெய்விகச் சங்கினில்
வஞ்சகன் கண்ணன் புனிதமுறுங் கங்கை நீர்கொண்டு – திரு
    மஞ்சனமாட்டும்அப் போதில் எவரும் மகிழ்ந்ததும் (51)

சாத்தகி – சாத்யகி. கடல் ளுமொருவன் – வருணன்

பதம் பிரித்து: தேவை இல்லை

அ. சொற் பொருள்:

மஞ்சனம்: மங்கல நீராட்டம்

சாத்தகி: சாத்யகி – கண்ணனுக்குத் தம்பி (தம்பி முறை).  அர்ஜுனனிடம் வில் வித்தை பயின்றவன்.  பாரதப் போரில் பாண்டவர்களின் மிக முக்கிய படைத்தலைவர்களில் ஒருவனாக இருந்தவன்.  போச வம்சத்தைச் சேர்ந்தவன்.  சத்தியகன் குமாரன் என்பதால் சாத்யகி என்ற பெயர் வந்தது.  யுயுதானன் என்றும் ஒரு பெயர் இவனுக்கு உண்டு.

சிவிறி: விசிறி

கடல் ஆளும் ஒருவன்: வருணன்

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

சிந்து.  நாலடி பதினெட்டு சீர்.

ஈ. பாடல் சொல்வது

அவந்தியர் மன்னன் கொண்டுவந்த மங்கல நீரைக் கொண்டு வேத வியாசன் யுதிட்டிரனுக்கு மஞ்சனம் செய்வித்தான்.  வேத விற்பன்னர்கள் மந்திரம் ஒலிக்க நல் வாழ்த்துகளைச் சொன்னார்கள்.  யானையின் பலத்தை ஒத்த பலம் உடையவனான சாத்யகி வெண்கொற்றக் குடை தாங்கி நின்றான்.  வீமனும், அருச்சுனனும் பொன் பிடி போட்ட விசிறிகள் வீச, நகுல சகதேவர்கள் அஞ்சியவர்கள் போல் (பய பக்தியுடன்) கவரி வீசினார்கள்.  வருணன் கொடுத்த தெய்விகச் சங்கைக் கொண்டு தருமனுக்குக் கண்ணன் கங்கை நீரால் மஞ்சனம் செய்வித்தான்.

மூச்சை யடைத்தடா! சபைதன்னில் விழுந்துநான் – அங்கு
    மூர்ச்சை அடைந்தது கண்டனையே என்றன் மாமனே!
ஏச்சையும் அங்கவர் கொண்ட நகைப்பையும் எண்ணுவாய் – அந்த
    ஏந்திழையாளும் எனைச்சிரித்தாள் இதை எண்ணுவாய்
பேச்சை வளர்த்துப் பயனொன்று மில்லைஎன் மாமனே – அவர்
    பேற்றை அழிக்க உபாயம் சொல்வாய் என்றன் மாமனே!
தீச்செயல் நற்செயல் ஏதெனினும் ஒன்று செய்துநாம் – அவர்
    செல்வங் கவர்ந்தவரை விடவேண்டும் தெருவிலே! (52)

பதம் பிரித்து: தேவை இல்லை.

அ. சொற் பொருள்: –

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

சிந்து.  நாலடி பதினெட்டு சீர்.

ஈ. பாடல் சொல்வது

தருமனுக்கு இத்தனை சிறப்புகள் சேர்ந்தது எனக்கு மூச்சை அடைத்தது.  நான் மயக்கம் அடைந்து மண்டபத்தில் விழுந்ததைத்தான் நீ பார்த்தாயே மாமா!  என்ன வகையான ஏச்சுகள்!  எப்படியெல்லாம் சிரித்தார்கள்!  அந்தப் பாஞ்சாலியும் என்னைப் பார்த்துச் சிரித்தாளல்லவா!   இதை நீ எண்ணிப் பார்க்க வேண்டும்.  

வீணே பேச்சை வளர்த்து ஒரு பயனில்லை.  மாமா!  அவர்கள் அடைந்திருக்கும் பெரும் பேற்றை அழிப்பதற்கு எனக்கு ஒரு வழி சொல்.  அது நல்ல வழியாக இருந்தாலும் சரி; யாருமே ஒப்புக்கொள்ளாத அநியாய வழியாக இருந்தாலும் சரி.  எதையாவது செய்து, இவர்களுடைய செல்வம் எல்லாவற்றையும் கவர்ந்துகொண்டு இவர்களை நடுத்தெருவில் நிற்குமாறு செய்யவேண்டும்.  என்ன செய்யலாம் என்பதை எனக்குச் சொல்.

மயனால் நிர்மாணிக்கப்பட்ட மண்டபத்தில் பளிங்குத் தரையைக் கண்டு, தண்ணீர் நிரம்பிய செய்குளம் அங்கே இருக்கிறது என்றெண்ணி, ஆடையைத் தூக்கியவாறு நடந்ததும், தண்ணீர் இருக்கும் இடத்தில் தடுமாறி விழுந்ததும், சுவர் இல்லாத இடத்தைச் சுவர் என்றெண்ணி மயங்கியதும், பிறகு சுவரில் போய் முட்டிக்கொண்டதும் கூடியிருந்த அனைவருக்கும் நகைப்பை உண்டாக்கிய செயல்தான்.  எல்லோரும் சிரித்தார்கள்; பாஞ்சாலியும் சிரித்தாள்.  

கமலா சுப்பிரமணியம் செய்திருக்கும் மொழிபெயர்ப்பு இது:

“…… When Duryodhana was walking about, he saw what looked like an expanse of water.  He went near and saw that it was just the floor which was inlaid with beautiful slabs of marble.  He smiled and walked across it.  Actually, it was a pond of marble filled with very clear water.  To the jealous eyes of Duryodhana this was not evident.  The poor prince fell inside and was drenched.  Even the many servants about were amused by this mishap to the Kuru prince. …..

“Bheema, Arjuna and the twins and their queen Draupadi laughed at his discomfiture.  Other happenings added to his pain.  Once he walked carefully across what he thought was an expanse of water.  Actually there was no water.  Duryodhana cut a sorry figure.  He once thought that there was a doorway and walked through it.  There was no door and he hit hs head against a blank wall and hurt himself.  Peals of laughter greeted him.  It was Draupadi who laughed at him and his humiliation.  This was just awful.  Duryodhana had to look unconcerned.  He walked out of the hall in great anger.”

அவ்வளவு பெரிய கூட்டத்தில், அத்தனை மன்னர்களும் மக்களும் திரண்டிருந்த மண்டபத்தில் இவன் ஒருவனுக்கு மட்டும்தானே இந்தத் தடுமாற்றம் இருந்தது!  மற்றவர்களால் தெளிவாகக் காண முடிந்த வேறுபாடுகளை இவனால் மட்டும் ஏன் காண முடியவில்லை?  தடுமாறியவன் இவன் ஒருவன்தானே!  மற்றவர்கள் சரியாகத்தானே பார்த்து நடமாடிக்கொண்டிருந்தார்கள்!உள்ளத்தைப் பொறாமைக் கனல் எரித்துக்கொண்டிருந்தது.  மற்ற பலவிதங்களில் மிகச் சிறந்தவனாக இருந்தவனின் கண்களைப் பொறாமைத் தீ அவித்துவிட்டது.  தடுமாறினான்.  

அவ்வளவு பெரிய கூட்டத்தில், சிரித்தவள் பாஞ்சாலி மட்டும்தானா? ஏதோ இவன் இயல்பாகத் தடுமாறியதைப் போலவும், அவள் ஒருத்தி மட்டும்தான் சிரித்ததைப் போலவும் காட்சிப்பட்டாலும், உண்மையில் வேலைக்காரர்கள் கூட நகைத்திருக்கிறார்கள்.  ஆனால் இவனுக்கோ அவள் சிரித்தது மட்டும்தான் கேட்டிருக்கிறது.  மற்ற எதுவும் அவன் கவனத்தில் படவே இல்லையே!

திரெளபதியின் மீது எப்போதுமே அவனுக்கு ஆசை இருந்தது என்பதுதான் இந்த நிலைக்கான விளக்கம்.  ‘வில்லை வளைத்து, நாண் ஏற்றி, சுழலும் இலச்சினையை அடிப்பவர் யாரோ அவருக்கே திரெளபதியைத் திருமணம் செய்து தருவோம்,’ என்ற அறிவிப்புக்கு இணங்கி அந்தப் போட்டியில் கலந்துகொண்டவர்களில் ஒருவன் துரியோதனன்.  

மற்றவர்களால் எடுத்து நிறுத்தவே முடியாத அந்த வில்லை எடுத்து நிறுத்தினான். கீழ்ப் பகுதியைக் காலால் மிதித்துக்கொண்டு, நாண் கட்டி, தலைக்கு மேல் உயரமான மேற் பகுதியைப் பற்றி வளைத்து, நாணை மேற்பகுதியில் கட்ட இன்னும் எள் அளவு மீதம் இருக்கும் நிலையில், வில்லைப் பற்றியிருந்த பிடி நழுவிவிட்டது.  வளைக்கப்பட்ட வில் என்ன செய்யும்?  நிமிரும்.  அப்படி நிமிர்கையில் துரியோதனைத் திருப்பி அடித்தது.  வில்லால் தள்ளப்பட்டு விழுந்தான் துரியோதனன்.  அப்போது ஏற்பட்ட அவமானம் இது.  அப்போது பட்ட புண்ணில் புரையோடிப் போய் இப்போது புழுத்த குருதி கொட்டுகிறது.  அவ்வளவுதான்.

அந்தப் போட்டியில் கலந்துகொண்டவர்களில் கர்ணனும் ஒருவன்.  வில்லை எடுக்க அவன் சென்ற போது, ‘இவன் வெல்வான்,’ என்று மக்கள் நினைத்தார்கள்.  திரெளபதி ‘நீ வென்றாலும் உன்னை நான் வரிக்க மாட்டேன்,’ என்று அவனைப் பார்த்துக் கூவினாள்.

“திரெளபதி அவனைப் பார்த்து, ‘நான் ஸூதனை வரிக்க மாட்டேன்,’ என்று உரக்கக் கூவினாள்.  கர்ணன் கோபத்துடன் சிரித்துக்கொண்டு சூரியனை உற்று நோக்கிவிட்டு, பூட்டிய வில்லை எறிந்துவிட்டான்.” (வியாச பாரதம், ஆதி பர்வம், திரெளபதி கல்யாணம், சுலோகம் 23)

பின்னால், சூதாட்டச் சருக்கத்தில் பாஞ்சாலியைத் துகில் உரியச் சொல்லிக் கர்ணன்தானே ஏவினான்!  

கர்ணன் ஒன்றை மறந்துவிட்டான்.  அது திரெளபதியின் ‘சுயம்வரம்.’  சுயம்-வரம் என்றால், மணப்பெண் யாரோ அவளுடைய விருப்பத்துக்கு உகந்தவனை வரித்தல்.  போட்டியில் வென்றவன் யாராயிருந்தாலும் அவனுக்கு இவளைத் தருவதாக அறிவிப்புச் செய்யப்பட்டாலும், அந்தச் ‘சுயம்வரம்,’ என்ற சொல் எதைக் குறிக்கிறது?  வென்றவன், பாஞ்சாலியால் ஏற்கப்பட்டால்தான் திருமணம்.  வில்லை வளைத்து, நாண் பூட்டி, இலச்சினையை அடிப்பது முதல் தகுதி.  பாஞ்சாலியின் விருப்பத்துக்கு இசைந்தவனாகவும் இருப்பது அடுத்த தகுதி.  இரண்டு கட்டங்களையும் கடந்த பிறகல்லவா திருமணம்.  கர்ணன் மறந்தது அந்த விதியை.  துரியோதனனை ஆட்டிப் படைத்தது அவன் ஆரம்பத்தில் பட்ட அவமானம்.  அதனால்தானே அவன் காதில் இவள் சிரிப்பு மட்டும் கேட்டிருக்கிறது!  அதனால்தானே மற்ற எல்லாச் சிரிப்புகளை விடவும் இவள் சிரிப்பு மட்டும் அவனைப் புண்படுத்தியிருக்கிறது!

சகுனியின் சதி

வேறு

என்று சுயோதனன் கூறியே – நெஞ்சம்
    ஈர்ந்திடக் கண்ட சகுனிதான் – அட!
இன்று தருகுவன் வெற்றியே – இதற்(கு)
    இத்தனை வீண்சொல் வளர்ப்பதேன்? – இனி
ஒன்றுரைப்பேன் நல்லுபாயந்தான் – அதை
    ஊன்றிக் கருத்தொடு கேட்பையால் – ஒரு
மன்று புனைந்திடச் செய்திநீ – தெய்வ
    மண்டபம் ஒத்த நலங்கொண்டே. (53)

பதம் பிரித்து: தேவை இல்லை.

அ. சொற் பொருள்: ஈர்ந்திடல்: ஈர்தல்: வாள் கொண்டு அறுத்தல்.  

நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின். (குறள் 334)

எப்படி மரத்தை வாள் (அரம்) அறுத்துக்கொண்டே வருகிறதோ, அப்படியே காலச் செலவும் உயிரை ஈர்ந்துகொண்டே இருக்கிறது.  

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

இனி, இது தொடங்கி பாடல் 83 வரை நாலடி எண்சீர்ச் சிந்து.  

ஈ. பாடல் சொல்வது

என்று துரியோதனன் சொல்லி, தன் உள்ளம் வாள்கொண்டு அறுக்கப்பட்டதைப் போல் துடிப்பதைப் பார்த்த சகுனி, ‘அட! எதற்கு இத்தனை வீண் பேச்சுப் பேசுகிறாய்!  இதோ, இப்ப ஜெயித்துத் தருகிறேன் அத்தனையும் உனக்கு.  இங்கே வா!  ஒரு உபாயம் சொல்கிறேன்.  அதைக் கருத்தூன்றிக் கேள்.  ஒரு மண்டபம் கட்ட ஏற்பாடு செய்.  நல்ல அருமையான மண்டபமாக இருக்க வேண்டும் அது.  தேவலோகத்தில் இந்திரன் வீற்றிருப்பது போன்றதாக இருக்க வேண்டும்.

தருமர் மயனைக் கொண்டு கட்டிய மாளிகையும், நாரதர் ஆலோசனைப்படி இந்திர சபையைப் போல் அமைந்ததுதான்.  அதை விடச் சிறப்பாக ஒரு மண்டபம் கட்டு என்கிறான் மாமன்.

மண்டபம் காண வருவிரென் – றந்த
    மன்னவர் தம்மை வரவழைத் – தங்கு
கொண்ட கருத்தை முடிப்பவே – மெல்லக்
    கூட்டிவன் சூது பொரச்செய்வோம் – அந்த
வண்டரை நாழிகை யொன்றிலே – தங்கள்
    வான்பொருள் யாவையுந் தோற்றுனைப் – பணி
தொண்டரெனச் செய்திடு வன்யான் – என்றன்
    சூதின் வலிமை அறிவைநீ. (54)

பதம் பிரித்து:

அ. சொற் பொருள்: வன் சூது: கடுமையான சூது என்றும் சொல்லலாம்.  வற்புறுத்திச் சூதாட இணங்க வைத்த காரணத்தால், ‘வன்புணர்ச்சி’ என்பதைப் போல், விருப்பத்துக்கு மாறாகச் சூதாட வைத்தல் என்றும் கொள்ளலாம்.  பொர: போரிட.  சூதுப் போராம்.  சூதாட்டத்துக்கு நல்ல பெயர் சூட்டியிருக்கிறான் சகுனி.

வண்டரை: ஒரே ஒரு பதிப்பு கூட வேறுபடாமல், எல்லாப் பதிப்புகளிலும் வண்டரை என்றே இடையின ரகரத்துடன் காணப்படுகிறது.  உண்மையில் வண்டு அரை என்ற பாடம் இங்கே பொருத்தமாகவே இல்லை.  இங்கே இருக்க வேண்டிய பாடம் ‘வண்டறை’.  வண்டு சிறகை அறையும் செய்கை.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கில வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.

மொய்க்கின்ற, சிறகை மிக விரைவாக அசைக்கும் வண்டுகள் ஒலிக்கின்ற பொய்கை என்று இந்த இடத்தில் வருவதைப் போல் வல்லின றகரம் வரவேண்டிய இடம் இது.  பேரறிஞர்கள் பார்த்துப் பதிப்பித்த பதிப்புகளில் கூட இன்னும் இந்தப் பிழை நேர்செய்யப்படாமல் இருப்பது வருந்தத்தக்கது.  

அச்சுப் பிரதிகளை – அதுவும் அண்மையில் வெளிவந்த அச்சுப் பிரதிகளை – ஆய்ந்துவிட்டு (எத்தனை ஒற்றுப் பிழைகளுக்கு அச்சுப் பிழை காரணம் என்பதைக் கணக்கில் கொள்ளாமல்) பாரதிக்கு ஒற்று விதிகளைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்பது போன்ற தோற்றத்தை நுஃமான் ஏற்படுத்துவது போல், நாளைக்கு இன்னொருவர் கிளம்பி, பாரதிக்கு ரகர றகர வேறுபாடே தெரியாது என்று இன்னொரு கண்டுபிடிப்பைச் செய்வதன் முன் இது திருத்தப்பட வேண்டும்.

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நாலடி எண்சீர்ச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

அப்படி ஒரு மண்டபம் கட்டுவோம்.  அதற்குப் பின், ‘நாங்க கட்டியிருக்கும் மண்டபத்தை வந்து பாருங்கள்,’ என்று கூப்பிட்டு அனுப்புவோம்.  அவங்க வருவாங்க.  அப்போது நாம் கொண்ட கருத்தை முடிக்கும் வகையில் வன் சூது பொரச் செய்வோம்.  Let us force them into a game of dice.  இந்த வண்டு சிறகடிக்கும் வேகத்தைப் பார்திருக்கிறாய் அல்லவா?  எவ்வளவு வேகமாக அடிக்கும் அது?  அது ஒரு முறை சிறகை அடிக்க எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளுமோ, அவ்வளவு நேரத்தில் அவர்கள் தங்களுடைய பெரும்பொருள் எல்லாவற்றையும் இழந்து, உனக்கு ஏவல் செய்கின்ற வேலைக்காரர்களாக்கித் தருகிறேன்.  நான் சூதில் எவ்வளவு கெட்டிக்காரன் என்பது உனக்கே தெரியும்.  

வெஞ்சமர் செய்திடுவோம் எனில் – அதில்
    வெற்றியும் தோல்வியும் யார்கண்டார்? – அந்தப்
பஞ்சவர் வீரம் பெரிதுகாண் – ஒரு
    பார்த்தன்கை வில்லுக்கு எதிருண்டோ? – உன்றன்
நெஞ்சத்தில் சூதை இகழ்ச்சியாக் – கொள்ள
    நீதமில்லை முன்னைப் பார்த்திவர் – தொகை
கொஞ்ச மிலைப் பெருஞ்சூதினால் – வெற்றி
    கொண்டு பகையை யழித்துளோர். (55)

பதம் பிரித்து: தேவை இல்லை

அ. சொற் பொருள்: சமர்: போர்.  

பஞ்சவர்: பாண்டவர் ஐவர்கள். ‘மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை…. படர்ந்து ஆரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே…’ (சிலம்பு, ஆய்ச்சியர் குரவை)

நீதம்: தகுதி, நீதி, தானியம்.  இந்த இடத்தில் நீதி, நியாயம் என்ற பொருள்.  இந்தச் சொல்லை ஏற்கெனவே விளக்கியிருக்கிறோம். காண்க பாடல் 8

பார்த்திவர்: மன்னர்.  பாடல் எண் 11, 21 ஆகியவற்றில் இந்தச் சொல்லைப் பார்க்கலாம்.

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி எண்சீர்ச் சிந்து.

‘லாலல லாலல லாலலா – லல
    லாலல லாலல லாலலா என்ற மெட்டு.

சம்பாஷணைகள் முதலியவற்றைத் திறமையுடனும் உண்மையுடனும் காட்டுதற்கு இப்பாட்டின் நடை மிகவும் சவுகரியமாதலைப் பாடிப் பார்த்துணர்ந்து கொள்க.’ – பாரதியின் குறிப்பு.

ஈ. பாடல் சொல்வது

பாண்டவர்களோடு போர் செய்யலாம் என்றால், அப்படிப் போர் செய்வதில் யார் வெற்றி பெறுவார், யார் தோல்லி அடைவார் என்று யாருக்குத் தெரியும்?  (அதை விட முக்கியமான ஒன்று.  போர் செய்தால் ஒரு வேளை நாம் தோற்றாலும் தோற்றுவிடுவோம்.)  அந்தப் பாண்டவர்களின் வீரம் கொஞ்சம் பெரிதுதான்.  வேறு ஒருவரும் வேண்டாம்.  பார்த்தன் ஒருத்தன் போதும்.  அவன் கையில் வில்லை எடுத்தானென்றால் வேற எவனாவது அங்கே நிற்க முடியுமோ?  (என்ன யோசிக்கிறே?  போயும் போயும் சூதாடுவதா, சூதாடி அவர்களை வெல்வதா என்று நினைக்கிறாய், இல்லையா?  எனக்குத் தெரியும்.)  உன் மனத்தில் நீ சூதை இகழ்ச்சியாக எண்ணுவது நியாயமே இல்லை.  பெரிய அளவில் சூதாட்டத்தை நடத்தி, தன்னுடைய பகைவர்களை அழிப்பதும் ஒரு சரியான வழிதான்.  இதற்கு முன்னால் இந்த வழியை மேற்கொண்ட மன்னர்கள் எத்தனை தெரியுமா?  எதிரியைச் சூதாடியே தோற்கடித்திருக்கிறார்கள்.

துரியோதனன் என்னவோ, ‘சூதாடி அவர் செல்வம் பறிப்பதா!  நாம் அவர்களோடு மோது போர் தொடங்க எண்ணினால்,  மாமா என்னவோ சூது போருக்கு வழிசொல்கிறாரே,’ என்று நினைப்பது போலவும், மாமா அவன் மனத்தை மாற்றுவது போலவும் பேச்சு அமைகிறது.  துரியோதனன் அவ்வாறு எதுவும் நினைக்கவில்லை.  அவன்தான்

தீச்செயல் நற்செயல் ஏதெனினும் ஒன்று செய்துநாம் – அவர்
செல்வங் கவர்ந்து அவரை விட வேண்டும் தெருவிலே.

என்று அப்போதே சொல்லிவிட்டானே!

இது சகுனியின் பாணி.  எதிராளியை மிக உயர்ந்த இடத்தில் கொண்டுபோய் வைப்பான்.  அடுத்த வினாடி அங்கிருந்து உருட்டிவிடுவான்.  ‘வானளவு தூக்கியுடன் வலிக்கும்வரை தாக்குவதில் மனிதரில் நான் தெய்வமிருகம்,’ என்று கண்ணதாசன் பாடியது போல்.  பின்னால் தரும புத்திரனைச் சூதாடத்தில் இறக்கிவிடும் போதும், சூதாட்டம் நின்று போகாமல் கடைசி வரை தொடரச் செய்ய வேண்டுமென்பதற்காகவும் அவன் பேசுகின்ற பேச்சுகளைக் காணத்தானே போகிறோம்.  

நாடுங் குடிகளும் செல்வமும் – எண்ணி
    நானிலத்தோர் கொடும் போர்செய்வார் – அன்றி
ஓடுங் குருதியைத் தேக்கவோ? – தமர்
    ஊன்குவை கண்டு களிக்கவோ? – அந்த
நாடுங் குடிகளும் செல்வமும் – ஒரு
    நாழிகைப் போதினில் சூதினால் – வெல்லக்
கூடும் எனில் பிறிதெண்ணலேன்? – என்றன்
    கொள்கை யிதுஎனக் கூறினான். (56)

பதம் பிரித்து: தேவை இல்லை.

அ. சொற் பொருள்: தேக்கு: நீர் முதலியவற்றை ஓரிடத்தில் தேங்குமாறு கட்டுதல் என்றொரு பொருள். இந்தப் பொருளிலும், ‘தடுத்தல்’ என்ற பொருளிலும் மட்டும்தான் பெரும்பாலானோர் இந்தச் சொல்லை அறிவோம்.  பாரதி எத்தனை விதமான பொருளில் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறான்?  இன்னும் இரண்டு இடங்களைக் காண்போம்,

சொல்ல ஒண்ணாத, திகட்டக் கூடிய சுவையை உடையது என்றொரு பொருள்.  துகிலுரியப்படும் சமயத்தில் கண்ணனைக் குறித்து திரெளபதி துதியாகச் சொல்லும்போது,

தேக்குநல் வான்அமுதே –
    இங்கு சிற்றிடை ஆய்ச்சியில் வெண்ணெய் உண்டாய்

என்பாள்.  ‘நீயே தெவிட்டாத அமுதாக இருந்தபோதிலும், இங்கே இவ்வளவு சிறிய ஆய்ப்பாடியில் வந்து, வெண்ணெயைத் திருடி உண்டவனே’

‘நிரம்பப் பருகுதல்,’ முழுக்கக் குடித்தல் என்றொரு பொருள் உண்டு, ‘தேக்கு,’ என்ற சொல்லுக்கு.

தீஞ்சொற் கவிதையஞ் சோலை – தனில்
    தெய்விக நன்மணம் வீசும்
தேஞ்சொரி மாமலர் சூடி – மதுத்
    தேக்கி நடிப்பளெம் அன்னை.

(பேயவள் காணெங்கள் அன்னை)

சுவை மிகுந்த சொற்கள் பூத்த கவிதை என்னும் சோலையில், தெய்விக நன்மணம் வீசக் கூடிய தேன் சொரியும் பெரியதொரு கவிதையாகிய மலர் சூடுவாள். அந்தக் கவிதையின் தேனை முற்றிலும் பருகி, வெறி கொண்டு ஆடுவாள்.  

மேலே பாடல் 56ல் காண்பதும் இந்தப் பொருள்தான்.  முற்றக் குடித்தல்.  

பாரதி கவிதை என்னவோ எளிமையானதுதான்.  அதில் பயில்பவை என்னவோ எளிய சொற்கள்தாம்.  எவ்வளவு புரிந்துகொண்டோம்?  ‘ஆழ்ந்திருக்கும் கவிமனம்’ காண வேண்டின், அந்தக் கவிதையில் பயிலும் சொல்லைச் சரியாக விளங்கிக் கொள்ளுதல் அல்லவோ முதற்படி?

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி எண்சீர்ச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

நாடு, குடிமக்கள், செல்வம் என்று இவையெல்லாம் மேலும் மேலும் பெருகவேண்டும் என்ற எண்ணத்தோடு, உலகத்தில் மன்னர்கள் போர் செய்வார்கள்.  போர் எவ்வளவு கொடிதானது துரியோதனா!  எத்தனைப் பேரைக் கொல்ல வேண்டும்!  எவ்வளவு குருதி ஓடும்!  என்ன செய்வது அந்தக் குருதியை?  ‘ஓடுங் குருதியைத் தேக்கவோ?’ முற்றக் குடிப்பதா?  யாருடைய குருதி துரியோதனா அது?  நம்முடைய உறவினர்களுடையதல்லவா?  அல்லது, ‘தமர் ஊன்குவை கண்டு களிப்பதோ?’  போர்க்களமெங்கிலும் வெட்டுப்பட்டு வீழ்ந்து கிடக்குமே மாமிசத் துணுக்குகளும், அங்கங்களும், அவற்றைப் பார்த்து, ‘இது என் அண்ணனின் வெட்டுப்பட்ட கை,’ ‘இது என் மாமனின் துண்டான கால்,’ ‘இங்கே உருண்டு கிடக்கும் தலை என் பாட்டனுடையது,’ என்றெல்லாம் சொல்லிச் சொல்லிக் களிக்க முடியுமா?  

அதை விட்றா.  என்ன வேண்டும்?  நாடு, குடிகள், தேசம்.  அவ்வளவுதானே?  அவ்வளவு போரும், உயிர்ச் சேதமும், பொருட் சேதமும் ஆன பிறகுதான் அவற்றை அடைய முடியுமா என்ன?  ஒரு நாழிகைப் போதில் அத்தனையையும் அப்படியே சிந்தாமல் சிதறாமல், யார் உயிருக்கும் ஒரு சேதமும் இல்லாமல் சூதினால் கொள்ள முடியும் என்றால் அந்த வழியெல்லாம் நமக்கெதுக்கு?  இது என் கொள்கைடா மருமகனே!

சாத்தான் வேதம் ஓதுகிறது.  சகுனி போரெதிர்ப்புப் பிரசாரம் செய்கிறான்!

இங்கிது கேட்ட சுயோதனன் – மிக
    இங்கிதஞ் சொல்லினை மாமனே! – என்று
சங்கிலிப் பொன்னின் மணியிட்ட – ஒளித்
    தாமஞ் சகுனிக்குப் பூட்டினான் – பின்னர்
எங்கும் புவிமிசை உன்னைப்போல் – எனக்
    கில்லை யினியது சொல்லுவோர் – என்று
பொங்கும் உவகையில் மார்புறக் – கட்டிப்
    பூரித்து விம்மித் தழுவினான். (57)

தாமம் – மணிவடம், மாலை

பதம் பிரித்து: தேவை இல்லை.

அ. சொற் பொருள்: இங்கிதம்: 1) குறிப்பு (Hint, sign, indication of feeling by gesture) 2)  கருத்து (purpose, object) 3) இனிமை, 4) சமயோசிதம் உடைமை (good manners).

இந்த இடத்தில் கொள்ளவேண்டிய பொருள் 3.

தாமம்: கயிறு, சங்கிலி.  தாமோதரன் என்றால் (தாம உதரன்) கயிற்றால் (யசோதையால்) கட்டப்பட்ட வயிற்றை உடையவன் என்று பொருள்.

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி எண்சீர்ச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

சகுனி இவ்வாறு சொன்னதைக் கேட்ட துரியோதனன் உள்ளம் பூரித்தான்.  ‘எனக்கு எது இனிமையானதோ அதைச் சொன்னாய் மாமா!  உன்னைப் போல் எனக்கு இனியதைச் சொல்பவர்கள் இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள்!’ என்றவாறு, நல்ல பொன்னால் ஆன, ஒளி சுடர்கின்ற சங்கிலி ஒன்றை மாமனுக்குத் தன் கைகளாலேயே அணிவித்தான்.  அவனை மார்புற இறுகத் தழுவிக் கொண்டு, உவகையால் உடலும் உள்ளமும் பூரித்து வீங்கினான்.

சகுனி திருதிராட்டிரனிடம் சொல்லுதல்

மற்றதன் பின்னர் இருவரும் – அரு
    மந்திரக் கேள்வி உடையவன் – பெரும்
கொற்றவர் கோன்திரி தாட்டிரன் – சபை
    கூடி வணங்கி இருந்தனர் – அருள்
அற்ற சகுனியும் சொல்லுவான் – ஐய
    ஆண்டகை நின்மகன் செய்திகேள் – உடல்
வற்றித் துரும்பொத் திருக்கிறான் – உயிர்
    வாழ்வை முழுதும் வெறுக்கின்றான். (58)

பதம் பிரித்து:

அ. சொற் பொருள்:

மந்திரக் கேள்வி உடையவன்.  பார்வையற்றவன், சுவடியைப் பார்த்துப் படித்துப் பயிற்சி செய்திருக்க முடியாது.  இவன் மந்திரக் கேள்வி உடையவன்.  பிறர் ஓத, அதைக் கேட்டுக் கேட்டுப் பயின்றவன்.

ஆண்டகை: ஆண் தகை.  ஆண் தன்மை.  Manliness

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி எண்சீர்ச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

அதன் பின்னர் சகுனியும் துரியோதனனும், உரிய மந்திரங்களையும் சாத்திரங்களையும் கேட்டு உணர்ந்தவனான, மன்னர் மன்னான திருதிராட்டிரன் சபைக்குச் சென்று அவனை வணங்கினர்.  அருளற்றவனான சகுனி மெல்ல, திருதிராட்டிரனுக்குச் சொல்லலானான்.  ‘ஐயா!  ஆண்மை ததும்பும் உன் மகனைப் பற்றிய செய்தி ஒன்று உன்னிடம் சொல்கிறேன்.  கேள்.  அவன் இப்போது எப்படி இருக்கிறான் தெரியுமா?  உடல் வற்றியிருக்கிறான்.  துரும்பாய் இளைத்திருக்கிறான்.  உயிர் வாழ்க்கையையே வெறுத்திருக்கிறான்.

கண்ணில்லாத தந்தைக்கு எப்படி அதிர்ச்சி ஏற்படுத்துவது?  ‘உன் பிள்ளை இளைத்துவிட்டான்யா!  வருத்தத்தில் இருக்கிறான்!  கொஞ்சம் என்னா ஏதுன்னு விசாரி…’

உண்ப சுவையின்றி உண்கின்றான் – பின்
    உடுப்ப(து) இகழ உடுக்கின்றான் – பழ
நண்பர்க ளோடுஉற வெய்திடான் – இள
    நாரியரைச் சிந்தை செய்திடான் – பிள்ளை
கண்பசலை கொண்டுபோயினான் – இதன்
    காரணம் யாதென்று கேட்பையால் – உயர்
திண்பருமத் தடந் தோளினாய் – என்று
    தீய சகுனியும் செப்பினான். (59)

பதம் பிரித்து:

அ. சொற் பொருள்:

கண்பசலை: கண்பசத்தல் – கண் தன் நிறத்தையும் ஒளியையும் இழத்தல்.  Lack lustre.  

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி எண்சீர்ச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

‘பையன் சாப்பிடுகிறான்தான்.  ஆனால் உண்பதன் சுவை உணராமல், ஏதோ உண்கிறான்.  போட்டுக்கொள்ளும்  ஆடையாவது ஓர் அரசகுமாரனுக்கு உரியமாதிரியா இருக்கிறது?  பிச்சைக்காரனை மாதிரி, நாலு பேர் பார்த்தால் இகழும்படி, உடுத்துகிறான்.  இப்போதெல்லாம் பழைய நண்பர்களோடு காலம் கழிப்பதில்லை.  ஏதாவது காதல் நோயா என்று பார்த்தால் அதுவும் இல்லை.  இள மங்கையரைப் பற்றி அவன் சிந்தை செய்வதே இல்லை.  நல்ல பருத்த தோளுடைய மன்னா!  உன் பிள்ளை இப்படி இளைத்துக் கிடக்க என்ன காரணம் என்று கொஞ்சம் விசாரி,’ என்று தீயவனான சகுனி சொன்னான்.

பிள்ளை இப்படி இளைத்துக் கிடக்கும் போது, நீ பருமனான திண் தோள் உடையவனாய் இருக்கிறாய் என்பது இலேசான இடிப்பு.  உள்ளத்தைக் கொஞ்சம் துணுக்குற வைப்பதற்கான உத்தி.

தந்தையும் இவ்வுரை கேட்டதால் – உளம்
    சாலவும் குன்றி வருந்தியே – என்றன்
மைந்த நினக்கு வருத்தமேன்? – இவன்
    வார்த்தையில் ஏதும் பொருளுண்டோ – நினக்
கெந்த விதத்தும் குறையுண்டோ – நினை
    யாரும் எதிர்த்திடு வார்உண்டோ? – நின்றன்
சிந்தையில் விரும்பும் பொருளெலாம் – கணம்
    தேடிக்கொடுப்பவர் இல்லையோ? (60)

பதம் பிரித்து: தேவை இல்லை

அ. சொற் பொருள்: –

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி எண்சீர்ச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

திருதிராட்டிரன் இதைக் கேட்டான்.  அவனுடைய உள்ளம் மிக வருத்தமடைந்தது.  ‘என் மைந்த, உனக்கு என்ன வருத்தமடா கண்ணா நேர்ந்தது?  இவன் சொல்வது சரிதானா?  இவன் வார்த்தைக்குப் பொருள் உண்டா?  உண்மையில் நீ அப்படித்தான் இருக்கிறாயா?  என்ன குறையடா உனக்கு?  எந்த விதத்திலாவது உனக்குக் குறை இருக்குமானால் எனக்குச் சொல்.  உன்னை யாராவது எதிர்க்கிறார்களா?  நீ எதை விரும்புகிறாயோ, அதை உடனே, எங்கிருந்தாலும் தேடிக் கொண்டுவந்து கொடுப்பவர்கள் யாரும் இல்லையா?

இன்னமு தொத்த உணவுகள் – அந்த
    இந்திரன் வெஃகுறும் ஆடைகள் – பலர்
சொன்ன பணிசெயு மன்னவர் – வருந்
    துன்பம் தவிர்க்கும் அமைச்சர்கள் – மிக
நன்னலம் கொண்ட குடிபடை – இந்த
    நானில மெங்கும் பெரும்புகழ் – மிஞ்சி
மன்னும் அப்பாண்டவச் சோதரர் – இவை
    வாய்ந்தும் உனக்குத் துயருண்டோ? (61)

பதம் பிரித்து: தேவை இல்லை.

அ. சொற் பொருள்: வெஃகுறு.  வெஃகுதல்: விரும்புதல்.  ஆழமான விருப்பதை ஏற்படுத்தக் கூடிய
மன்னும்: மன்னுதல்: 1) நிலைபெறுதல், 2) நீண்டகாலம் தங்கியிருத்தல் (கருப்பையில் கரு தங்குவதைப் போல்) 3. பொருந்துதல், ஒத்துப் போதல், 4) விடா முயற்சி உடைமை 5) உறுதியாய் நிற்றல் 6) மிகுதல்.

‘மன்னும் இமய மலை எங்கள் மலையே’ என்னும் போது பொருள் 1, 5 இரண்டும் பொருந்தும்.  இங்கே பொருள் 3.  உன்னோடு பொருந்திய, உன்னோடு ஒத்துப் போகக் கூடிய.  People who are in agreement with you.

ஆ. இலக்கணம்

இ. யாப்பு

நான்கடி எண்சீர்ச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

உனக்கு என்ன குறை?  என்ன குறை இருக்க முடியும்?  இனிய அமுதத்தை ஒத்த உணவு வகைகள் இருக்கின்றன.  அந்த இந்திரனே விருப்பப்படும்படியான ஆடைகளுக்குக் குறைவில்லை.  நீ சொன்ன பணியை உடனே செய்து நிற்க, பல மன்னர்கள் கை கட்டி நிற்கி¡றர்கள்.  வரக்கூடிய துன்பங்களைத் தவிர்க்கும் மதியாலோசனை சொல்லக் கூடிய அமைச்சர்கள் இருக்கிறார்கள்.  நல்ல, முழு நலத்துடன் திகழ்கின்ற குடி மக்கள்; அவர்களைக் காப்பதற்கு வலிமையான படை எல்லாம் இருக்கிறது.  இந்த உலகம் முழுவதும் பரவிய (நம் குலப்) புகழ் இருக்கிறது.  இவை எல்லாவற்றுக்கும் மேலாக, உன்னோடு ஒத்துப் போகக் கூடிய அந்தப் பாண்டவர்கள் உனக்குச் சகோதரர்களாக இருக்கிறார்கள்.  இத்தனை இருந்தும் உனக்கு என்ன குறை?  ஏன் நீ இளைத்திருக்க வேண்டும்?

ஆறுதல் சொல்கிறேன் பேர்வழி என்று, நலம் விசாரிக்கிறேன் பேர்வழி என்று, எங்கே தொட்டால் வலிக்குமோ அங்கே அன்பாகத் தட்டுவதாய் நினைத்துக்கொண்டு அடிக்கவே அடித்துவிட்டான் திருதிராட்டிரன்.  

தந்தை வசனம் செவியுற்றே – கொடி
    சர்ப்பத்தைக் கொண்டதொர் கோமகன்
வெந்தழல் போலச் சினங் கொண்டே – தன்னை
    மீறிப் பலசொல் விளம்பினான் – இவன்
மந்தமதி கொண்டு சொல்வதை – அந்த
    மாமன் மறித்துரை செய்குவான் – ஐய,
சிந்தை வெதுப்பத்தினால் இவன் – சொலும்
    சீற்ற மொழிகள் பொறுப்பையால். (62)

பதம் பிரித்து: தேவை இல்லை

அ. சொற் பொருள்: வெதுப்பம்: இளஞ்சூடு என்றொரு பொருள் உண்டு.  இது பற்றியே, ‘வெதுவெதுப்பான நீர்,’ என்று இளஞ்சூடான நீரைச் சொல்கிறோம்.  வெதும்புதல் என்ற சொல்லிலிருந்து பிறந்த சொல்.  பழுக்கக் காய்ச்சுதல் என்று இன்னொரு பொருள் உண்டு.  துரியோதனனுடைய மனம் பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்பைப் போல் கொதித்துக்கொண்டிருந்தது.

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி எண்சீர்ச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

திருதிராட்டிரன் அவ்வாறு கேட்டதும், உள்ளம் கொதித்த துரியோதனன் (துரியோதனனுடைய கொடி பாம்பு – பாடல் 15 காண்க) எரிகின்ற நெருப்பைப் போல் கோபம் கொண்டு, தந்தையிடம் பேசுகின்றோம் என்ற நினைப்பின்றி, தன் கட்டுப்பாட்டை இழந்தவனாகி, தன்னை மீறிப் பல சொற்களைச் சொன்னான்.  அறிவின் கூர்மை இழந்தவனாகி இவன் இப்படிப் பேசுவதைக் கேட்ட மாமன் சகுனி அவனை இடை மறித்தான்; அவன் பேச்சை அடக்கினான்.  ‘ஐயா!  இவன் மனம் அவமானத்தால் ஏற்பட்ட சீற்றத்தால் கொதித்துப் போயிருக்கிறது.  ஆகையினாலே உன்னிடம் பேசக் கூடாத வார்த்தைகளைப் பேசிவிட்டான்.  இவனுடைய கோபமான மொழிகளை நீ பொறுத்துக்கொள்ள வேண்டும்.’

இவ்வளவு அழகாகத் தான் தொடங்கி வைத்த காரியத்தின் நோக்கமே கெட்டுப் போய்விடும்படியாகத் துரியோதனன் கடுஞ்சொல் பேசுவதைக் கேட்டான்.  கடுஞ்சொல், கடுஞ்சொல்லையே பிறப்பிக்கும்.  வாதப் பிரதிவாதங்கள் வளருமே தவிர, நினைத்திருக்கும் காரியம் கைகூடாது.  எனவே, சகுனி இடைமறித்தான்.  

தன்னுளத் துள்ள குறையெலாம் – நின்றன்
    சந்நிதியிற் சென்று சொல்லிட – முதல்
என்னைப் பணித்தனன் யானிவன் – தனை
    இங்கு வலியக் கொணர்ந்திட்டேன் – பிள்ளை
நன்னயமே சிந்தை செய்கின்றான் – எனில்
    நன்கு மொழிவ தறிந்திலன் – நெஞ்சைத்
தின்னும் கொடுந்தழல் கொண்டவர் – சொல்லும்
    செய்தி தெளிய உரைப்பரோ? (63)

பதம் பிரித்து: தேவை இல்லை

அ. சொற் பொருள்: நன்னயம்: இனிமையான சொற்களும்; நல்ல செயல்களும்.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி எண்சீர்ச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

தன் உள்ளத்தில் உள்ள குறையை எல்லாம் தேவரீருடைய சந்நிதானத்தில் வந்து எடுத்துரைக்குமாறு முதலில் இவன் என்னிடம்தான் சொன்னான்.  நான்தான் இவனை இங்கே வற்புறுத்தி அழைத்து வந்தேன்.  குழந்தை நல்லதையே நினைக்கிறான்.  ஆனால் தான் நினைப்பதை எப்படிச் சொல்வது என்பதனை அறியாதவனாக இருக்கிறான்.  அதற்கு மேல் இன்னொன்று.  இப்போது இவன் அவமானத்தால் கோபம் கொண்டவனாக இருக்கிறான்.  இப்படிப்பட்ட மனநிலையில் இருப்பர்கள் யாராலாவது தன் உள்ளத்தில் நினைத்த கருத்தைத் தெளிவாக எடுத்துச் சொல்ல முடியுமோ?

‘நீங்க தவறாக எண்ணக் கூடாது.  உங்க குழந்தைதான் இது.  எப்போதும் நல்லதையே நினைப்பவன்தானே உங்க பிள்ளை!  ஆனா பாருங்க, மற்றவர்களைப் போல் வாய்ச்சாலம் பண்ணத் தெரியாது.  தன் கருத்தை யாரிடம் எப்படி எடுத்துரைப்பது என்பது தெரியாத அப்பாவி.  அது போதாது என்று இப்போது மன வருத்தம் வேறு சேர்ந்துகொண்டது.  ஆகவே இவனால் தன் கருத்தைத் தெளிவாக எடுத்துச் சொல்ல முடியவில்லை.  இந்தக் காரணத்தால்தான், உங்களுடைய சந்நிதிக்கு முன்னால் வந்து நிற்கத் தயங்கினான்.  என்னிடம்தான் தன் கருத்தைச் சொன்னான்.  அதனை உங்களிடம் எடுத்துச் சொல்லச் சொல்லி என்னிடம்தான் சொன்னான்.  தான் ஒன்று கிடக்க ஒன்று பேசிவிடப் போகிறோம் என்ற அச்சம் இவனுக்கு.  நான்தான் இவனை வற்புறுத்தி இங்கே அழைத்து வந்தேன்.  அவன் மீது எந்தத் தவறும் இல்லை.

நீபெற்ற புத்திரனே அன்றோ – மன்னர்
    நீதி இயல்பில் அறிகின்றான் – ஒரு
தீபத்தில் சென்று கொளுத்திய – பந்தம்
    தேசு குறைய எரியுமோ? – செல்வத்
தாபத்தை நெஞ்சில் வளர்த்திடல் – மன்னர்
    சாத்திரத்தே முதற் சூத்திரம் – பின்னர்
ஆபத்(து) அரசர்க்கு வேறுண்டோ – தம்மில்
    அன்னியர் செல்வ மிகுதல்போல்? (64)

பதம் பிரித்து: தேவை இல்லை

அ. சொற் பொருள்: தேசு – ஒளி.  தேஜஸ்.  

“தேசுடைய பரிதிஉரு கிணற்றி னுள்ளே
    தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்”
(பாரதி அறுபத்தாறு – உபதேசம்)

சூத்திரம்: சாத்திரங்களில் தரப்பட்டுள்ள சுருக்கமான நெறி முறைகள்.

“சில்வகை எழுத்தின் செய்யுட் டாகிச்
சொல்லுங்காலை உரை அகத்து அடக்கி
நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத் தாகித்
துளக்கல ஆகாத் துணைமை எய்தி
அளக்கல் ஆகா அரும்பொருட் டாகி
பல்வகையானும் பயன் தெரிவுடையது
சூத்திரத்து இயல்பென யாத்தனர் புலவர்.”
(தொல்காப்பியம், பொருளதிகாரம்)

சுருக்கமாக, சில எழுத்துகளால் (சில சொற்களை மட்டுமே பயன்படுத்தி) இயற்றப்பட்டு, பல வகையான பொருளை உணர்த்தும் தன்மை உடையது சூத்திரம்.  Aphorism.

ஆ. இலக்கணம்

முன்னால் குறித்த சிலவற்றை விட்டுவிடுகிறேன்.  என்றாலும் ஒரு நினைவூட்டலுக்காக, ‘செல்வ மிகுதல் போல்,’ என்ற இடத்தில் ம் விடுபட்டிருப்பதைக் காணவும்.  ஏதோ ஓரிரண்டு இடங்களில் அல்ல.  நெடுகிலும் இலக்கண விதிகளைப் போற்றிக் கடைப்பிடித்தவன் பாரதி என்பதைச் சுட்டிக் காட்டவே இதனைச் சொல்கிறேன்.  

இ. யாப்பு

நான்கடி எண்சீர்ச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

‘இவன் யார்?  உன் பிள்ளை இல்லையா?   மன்னர்களுக்கான நீதி என்ன என்பது அவனுக்கு இயற்கையாகவே தெரிகிறது.  (உன்னைப் போன்ற பெரிய மகராஜனுக்குப் பிறந்தவனுக்கு யாராவது சொல்லிக் கொடுக்க வேண்டுமா?) ஒரு தீபம் இருக்கிறது.  அதில் சென்று கொளுத்திய பந்தத்திலிருந்து ஒளி குறைவாக ச் சிந்துமோ?  செல்வம் சேர்க்க வேண்டிய ஆவலை, அடங்காத தாகத்தை, வளர்த்தல் அல்லவோ மன்னர்களுக்கு விதிக்கப்பட்ட நெறியில் முதன்மையானது?  அது மட்டுமில்லை.  தன்னுடைய எதிரிகள் தன்னை விடவும் அதிக அளவு செல்வச் செழிப்போடு விளங்குவதைக் காட்டிலும் ஒரு அரசனுக்கு ஆபத்து உண்டோ?

வலிக்காமல் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது சகுனிக்குக் கைவந்த கலை.  ‘உன் பிள்ளையாச்சே!  உன்னைப் போலவே கெட்டிக்காரனாய் இருப்பதில் என்ன ஆச்சரியம்!’ என்று தொடங்கி, ‘தீபத்தில் சென்று கொளுத்திய பந்தம் தேசு குறைய எரியுமோ?’ என்று நாசூக்காக என்ன குறிப்பிடுகிறான்?  மேம்போக்காகப் பார்த்தால், ‘உன்னுடைய அறிவு விசாலமானது.  உன் பிள்ளை அறிவு அதிலிருந்து குறைவுபடுமோ?’ என்று சொல்வது போல் தோன்றுகிறது.  ஆனால் என்ன சொல்கிறான்? ‘நீ சிறிய அளவில் ஒளிவிடும் தீபம்.  உன்னுடைய அறிவு இந்த அளவுக்குத்தான் ஒளிவிடும்.  இவனோ, உன்னிலிருந்து கொளுத்தப்பட்ட தீப்பந்தம்.  கொழுந்துவிட்டு எரிகிறான்.  மிக அதிகமான அறிவொளி இந்தத் தீப்பந்தத்திலிருந்து வெளிப்படுகிறது,’ என்று.  அதுவும் திருதிராட்டிரனுக்குச் சம்மதம்தானே!  

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

இந்த உளப்பாங்கு தெரிந்தவன் சகுனி.  மெல்ல இறுக்குகிறான்.  சந்தடி சாக்கில், ‘மன்னும் அப் பாண்டவச் சோதரர்,’ என்று யாரை திருதிராட்டிரன் குறித்தானோ அதே பாண்டவர்களை எதிரிகளாகச் சித்திரிக்கிறான்.

வேள்வியில் அன்றந்தப் பாண்டவர் – நமை
    வேண்டுமட்டுங் குறை செய்தனர் – ஒரு
கேள்வி யிலாதுன் மகன்தனைப் – பலர்
    கேலி செய்தே நகைத்தார் கண்டாய் – புவி
ஆள்வினை முன்னவர்க் கின்றியே – புகழ்
    ஆர்ந்திளை யோர்அது கொள்வதைப் – பற்றி
வாள்விழி மாதரு நம்மையே – கய
    மக்கள் என்றெண்ணி நகைத்திட்டார். (65)

பதம் பிரித்து: தேவை இல்லை.

அ. சொற் பொருள்: கய மக்கள் – கீழ் மக்கள்

ஆ. இலக்கணம்

இன்னொரு நினைவூட்டல்.  ‘மாதரு நம்மையே’.  வருமொழி முதலில் ந-கரம் வரின், நிலைமொழி ஈற்று மகரம் கெடும்.  (பாடல் 3ன் இலக்கணப் பகுதியைப் பார்க்க.)

இ. யாப்பு

நான்கடி எண்சீர்ச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

இராஜ சூய யாகம் நடத்தினார்களே, அன்று அந்தப் பாண்டவர்கள் நம்மை எவ்வளவு தூரம் இழிவாக நடத்தினார்கள் தெரியுமா?  வேண்டிய அளவு நம்மை மட்டம் தட்டியாயிற்று.  (இனிமேல் என்ன பாக்கி இருக்கிறது?)  கேள்வி கேட்க நாதி இல்லை.  உன் பிள்ளையை அந்தச் சமயத்தில் கேலி செய்தார்கள்.  ஏன்?  இந்தத் துணிச்சல் அவர்களுக்கு எப்படி வந்தது?  நீ இல்லையா பெரியவன்?  பெரியவனுடைய பிள்ளை அல்லவா துரியோதனன்?  அவனுக்குத்தானே ஆட்சி உரிமை முழுவதும்?  அவர்கள் உன் தம்பியின் மக்கள்தானே!   (வழக்கமில்லாத வழக்கமாக) பெரியவர்கள் இருக்கும்போது, சிறியவர்கள் – ஆட்சி உரிமையில் மூத்தோர் (senior) இருக்கும்போது இளையவர்கள் – ஆட்சி செய்வதும், அதில் சிறந்து விளங்குவதையும் பார்த்து, உன் மகன் மற்றவர் பார்வையில் இளக்காரமாகப் படுகிறான்.  மற்றவர்களுக்கு இந்தக் காரணத்தால் உன் மகனிடத்தில் மதிப்பில்லை.  பெண்கள் கூட நம்மை மதிப்பதில்லை.  நாம் ஏதோ, ‘கீழ் மக்கள்’ என்பதைப் போல் எண்ணி அன்று எல்லோரும் நம்மைப் பார்த்துச் சிரித்தார்கள்.

ஆயிரம் யானை வலிகொண்டான் – உன்றன்
    ஆண்டகை மைந்தன்இவன் கண்டாய் – இந்த
மாயிரு ஞாலத் துயர்ந்ததா – மதி
    வான்குலத்திற்கு முதல்வனாம் – ஒளி
ஞாயிறு நிற்பவு மின்மினி – தனை
    நாடித் தொழுதிடுந் தன்மைபோல்
வேயிருந்து ஊதுமொர் கண்ணனை – அந்த
    வேள்வியில் சால உயர்த்தினார். (66)

பதம் பிரித்து: தேவை இல்லை

அ. சொற் பொருள்: மதி (இரண்டாம் அடியின் தனிச்சொல்) மதிக்கப்படும்.
மாயிரு: ஒருபொருட் பன்மொழி.  (பார்க்க: பாடல் எண் 22 சொற்பொருள் மற்றும் இலக்கணம்)

வேய்: மூங்கில்.  இந்த இடத்தில் மூங்கிலால் ஆன குழலுக்கு ஆகி வந்தது.  வேய்ங்குழல்: புல்லாங்குழல்.

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி எண்சீர்ச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

உன் பிள்ளை எவ்வளவு வலியவன்!  ஆயிரம் யானை பலம் கொண்டவன்.  விண்ணில் உள்ள கோள்களுக்கெல்லாம் முதல்வனாகப் பரந்து விரிந்த உலகம் மதிப்பதாகிய சூரியன் இருக்கையில், அந்த இடத்தில் போய் மின்மினியைத் தொழுவதைப் போல், (உன் பிள்ளை அங்கே சூரியனைப் போல் நிற்கவும்) அவர்கள்  போயும் போயும் புல்லாங்குழல் ஊதித் திரியும் கண்ணனை அந்த வேள்வியில் முதல் மரியாதைக்கு உரியவனாக்கினார்கள்.

ஐயநின் மைந்தனுக்கு இல்லைகாண் – அவர்
    அர்க்கிய முற்படத் தந்ததே – இந்த
வையகத் தார்வியப்பு எய்தவே – புவி
    மன்னவர் சேர்ந்த சபைதனில் – மிக
நொய்யதொர் கண்ணனுக்(கு) ஆற்றினார் – மன்னர்
    நொந்து மனங்குன்றிப் போயினர் – பணி
செய்யவும் கேலிகள் கேட்கவும் – உன்றன்
    சேயினை வைத்தனர் பாண்டவர். (67)

பதம் பிரித்து: தேவை இல்லை.

அ. சொற் பொருள்: அர்க்கியம்: தேவர்களுக்கும், விருந்தினருக்கும், நீரினால் செய்யும் உபசாரம்.

நொய்ய: வலிமையற்ற

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி எண்சீர்ச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

ஐயா! அவர்கள் முதல் மரியாதைக்கு உகந்தவனாகத் தேர்ந்தெடுத்தது உன் மகனை இல்லை.  உலகின் பல பாகங்களிலிருந்தும் வந்திருந்த மன்னவர்கள் முன்னிலையில், மக்கள் எல்லோரும் வியப்பெய்துமாறு, கொஞ்சம் கூட வலிமையற்ற – ஆயிரம் யானை வலிமை கொண்ட உன் மகன் இருக்கும் போது – கண்ணனுக்குப் போய் அந்த முதல் மரியாதையைச் செய்தனர்.  அங்கே கூடியிருந்த மன்னர்கள் அனைவரும் இந்தச் செய்கையால் மனம் நொந்து போனார்கள்.  சரி.  அதுதான் இருக்கட்டும்.  உன் பிள்ளையை என்ன செய்தனர்?  அங்கே இருப்பவர்களுக்கு வேலை செய்வதற்கும், அவர்கள் வாயால் கேலி மொழிகளைக் கேட்டுக்கொள்ளவும் பயன்படுத்தினர்.  வேறு என்ன மரியாதை கிடைத்தது உன் பிள்ளைக்கு?

ஒவ்வொரு முறையும் ‘உன் மகன்,’ ‘உன் மைந்தன்,’ ‘உன் பிள்ளை,’ என்று தவறாமல் குறிப்பிடுவதைக் காணலாம்.  ‘துரியோதனன்’ என்ற பெயரையே முற்றிலும் தவிர்த்து, ‘உன்,’ என்று திருதிராட்டிரனையே பிரதானப்படுத்துகிறான்.  உணர்வுகளோடு விளையாடும் விளையாட்டு.  

பாண்டவர் செல்வம் விழைகின்றான் – புவிப்
    பாரத்தை வேண்டிக் குழைகின்றான் – மிக
நீண்ட மகிதலம் முற்றிலும் – உங்கள்
    நேமி செலும்புகழ் கேட்கின்றான் – குலம்
பூண்ட பெருமை கெடாதவாறு – எண்ணிப்
    பொங்கு கின்றான்நலம் வேட்கின்றான் – மைந்தன்
ஆண்டகைக் கிஃது தகுமன்றோ? – இல்லை
    யாமெனில் வைய நகுமன்றோ? (68)

பதம் பிரித்து:

அ. சொற் பொருள்: மகிதலம்: உலகம்.  மகீபன்: மகிதலத்தை ஆள்பவன்; அரசன்.
நேமி: சக்கரம்.  ஆணைச் சக்கரம்.
வேட்கிறான்: வேட்டல்; விரும்புதல்.  விரும்புகிறான்.

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி எண்சீர்ச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

உன் பிள்ளை என்ன தவறான காரியத்தையா எண்ணியிருக்கிறான்?  அவனுக்கு வேண்டியது எல்லாம் பாண்டவர்களுடைய செல்வம்.  அவ்வளவுதான்.  அதுவும் எதற்காக?  பூமியைத் தாங்கும் அரச பாரத்தைத் தான் சுமக்க வேண்டிக் கேட்கிறான்.  பொறுப்பேற்க விரும்புகிறான்.  இந்த நீண்ட உலகம் முழுவதிலும் உங்கள் குலத்தின் (அதாவது, பாண்டவர்கள் வேறு குலம்; அவர்கள் குரு வம்சத்தில் வந்தவர்கள் இல்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறான்.) ஆணைச் சக்கரம் செல்வதை விரும்புகிறான்.  உங்கள் குலம் இது வரையில் அடைந்திருக்கும் பெருமை கெடலாகாது என்று எண்ணி எண்ணி மனம் பொங்குகிறான்.  உங்கள் குலத்தின் நலத்தையே நாடுகின்றான்.  ஆண்களுக்குள் சிறந்தவனான உன் மகனுக்கு இந்த எண்ணம் தகுமில்லையா?  அப்படித் தகாது என்று யாராவது சொன்னால் உலகம் சிரிக்காதா?

நித்தம் கடலினில் கொண்டு போய் – நல்ல
    நீரை அளவின்றிக் கொட்டுமாம் – உயர்
வித்தகர் போற்றிடும் கங்கையாறு – அது
    வீணில் பொருளை அழிப்பதோ – ஒரு
சத்த மிலாநெடுங்காட்டினில் – புனல்
    தங்கி நிற்குங்குளம் ஒன்றுண்டாம் – அது
வைத்த தன்னீரைப் பிறர்கொளா – வகை
    வாரடைப் பாசியில் மூடியே (69)

பதம் பிரித்து: தேவை இல்லை

அ. சொற் பொருள்: வாரடை: தோலால் ஆன வார்.  வரடை, வாரடை இரண்டும் ஒரே பொருளுள்ள சொற்கள்.  தோலால் ஆன பட்டையைப் போல தடித்துப் போன, எடுத்தால் பலகை பலகையாக வரக்கூடிய பாசி.

வித்தகர்: பேரறிவாளர்.

ஆ. இலக்கணம்

இ. யாப்பு

நான்கடி எண்சீர்ச் சிந்து.  பாடலின் பொருள் முற்றுப் பெறவில்லை.  அடுத்த தரவுக்குச் செல்கிறது.  ஆகவே குளகச் செய்யுள்.

ஈ. பாடல் சொல்வது

தினமும் அளவில்லாத நல்ல நீரைக் கொண்டு போய் கடலில் கொட்டுகிறதே, பெரிய பெரிய அறிவாளிகளெல்லாம் போற்றுகிற கங்கை ஆறு, அது என்ன தன்னுடைய பொருளை (தண்ணீரை) வீணில் அழிக்கிறதா?  அதற்கு மாறாகா, ஆட்களோ, விலங்குகளோ யாரும் நடமாடாத காரணத்தால் எந்தவிதமான ஒலியும் இல்லாத அமைதியான காட்டுக்குள்ளே, தண்ணீர் தேங்கி நிற்கின்ற குளம் ஒன்று இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம்.  அந்தக் குளத்தின் நீரை கனமான பாசி அடை அடையாகப் படர்ந்து மூடிக்கொண்டிருக்கும்.

சூரியன் வெப்பம் படாமலே – மரஞ்
    சூழ்ந்த மலையடிக் கீழ்ப்பட்டே – முடை
நீரினை நித்தலும் காக்குமாம் – இந்த
    நீள்சுனை போல்பவர் பலருண்டே – எனில்
ஆரியர் செல்வம் வளர்தற்கே – நெறி
    ஆயிர நித்தம் புதியன – கண்டு
வாரிப் பழம்பொருள் எற்றுவார் – இந்த
    வண்மையு நீயறி யாததோ? (70)

பதம் பிரித்து: தேவை இல்லை

அ. சொற் பொருள்: முடை: முடை என்ற பெயர்ச்சொல்லுக்குப் புலால் என்பது ஒரு பொருள்.  எனவே, கெட்டுப்போன மாமிசத்திலிருந்து வீசும் நாற்றம் என்ற பொருளும் இயல்பாகவே வந்தது.  முடை நாற்றம்.  முடை என்றால் புளித்த தயிர், மோரிலிருந்து வீசும் நாற்றம் என்றும் பொருள்.  

இனி, முடை என்ற வினைச் சொல்லுக்கு ‘முடைதல்,’ என்ற பொருளும், அப்படி முடையப்பட்ட காரணத்தால் ‘ஓலைக் குடை,’ என்ற பொருளும் உண்டு.  ஓலைக் குடை முதலியவற்றைக் குறிக்கும்போது அது ஆகு பெயர் ஆகிறது.

ஆரியர்: இந்தச் சொல்லுக்கான விளக்கத்துக்குப் பதினொன்றாவது பாடலைப் பார்க்கவும்.

வண்மை: வள்ளல் தன்மை.  வன்மை: வல்லவனாக விளங்கும் தன்மை.  வலிமை.

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி எண்சீர்ச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

அப்படிப் பாசி படர்ந்திருக்கும் காரணத்தால், மரங்கள் சூழ்ந்த மலையடிவாரத்தில் இருக்கின்ற அந்தக் குளம் தனது நீரைச் சூரியனுடைய வெப்பம் கூடப் படாமல் காக்கும்.  யாரும் பயன்படுத்தாத காரணத்தாலும், ஒரே இடத்தில் தேங்கி நிற்கும் காரணத்தாலும், சூரிய ஒளி கூடப் படாத காரணத்தாலும் அந்தக் குளத்தின் நீர் கெட்ட நாற்றம் வீசுவதாக மாறிப் போகும்.

இந்தக் குளத்தைப் போல் தன் செல்வத்தை எங்கேயும் செல்லவிடாமல், பிறர் பார்வை கூடப் படாமல் பதுக்கிப் பதுக்கி வைக்கும் மக்கள் பலர் இருக்கிறார்கள்.  ஆனால், விரும்பத்தக்க மேன்மக்கள் தங்கள் செல்லவம் வளர்வதற்கான ஆயிரமாயிரம் புதுப்புது வழிகளை அன்றாடம் கண்டு, அந்த வகையில் புதுச் செல்வத்தைச் சேர்த்து, கையில் இருக்கும் பழஞ்செல்வத்தை எவ்வகையிலாவது செலவிடுவார்கள்.  இப்படிப்பட்ட வள்ளன்மை என்ன நீ அறியாத ஒன்றா?

‘நம்மிடம்தான் ஏற்கெனவே ஏராளமான செல்வம் இருக்கிறதே!  அப்படி இருக்கும்போது இவன் எதற்காகப் மேலும் மேலும் செல்வம் சேர்க்க வேண்டும் என்றெண்ணுகிறான் என்று ஒரு வேளை நீ நினைக்கலாம்.  செல்வம் ஓரிடத்திலலேயே எப்போதும் தங்கியிருத்தல் ஆகாது.  ஓரிடத்தில் தங்கிப் போன செல்வம் குளத்து நீரைப் போல் பாசி மூடி நாற்றமடிக்கும்.  கங்கையாற்று நீரோ, என்றென்றும் தன் நீரைக் கடலில் கொண்டுபோயேனும் கொட்டிக் கொண்டிருப்பதால்தான் அந்த ஆற்றில் புது நீர் எப்போதும் இருக்கிறது.

பாரதி 69, 70 ஆகிய இரு பாக்களுக்கும் குறிப்புரை எழுதியிருக்கிறான்.  அதிலிருந்து ஒரு பகுதி:

‘…நித்தம் ஏராளமான செல்வத்தைத் தான முதலியவற்றால் ஒரு பக்கத்திலே செலவிட்டு, மற்றொரு பக்கத்திலே போர் முதலியவற்றால் மிக்க பொருள் சேகரித்துக்கொண்டிருப்பதாகிய இரட்டைத் தொழில் ஆரிய மன்னர்களால் அனுசரிக்கப்படுவது.  இருப்பதை மூடி வைக்க விரும்புவோன் அரசனல்லன், மூடச் செட்டி.  எதுபோலெனில், கங்கை நதி நாள்தோறும் அளவில்லாத ஜலத்தைக் கடலிலே கொண்டுபோய்க் கொட்டுகிறது.   என்ன வீண் செலவு!  இந்த ‘வீண் செலவு’ செய்யாவிட்டால் ஜீவனின்றி அழுகிப் போய்விடும்.  மலை மீதிருந்து அதற்கு ஓயாத ஊற்று வரவிருக்கிறது.  அதனை உலகிற்கெல்லாம் வழங்குவதுமன்றிக் கடலிலும் கொண்டு பொழிகிறது.  ஆம்!  ‘மேலே’ செல்வரிடமுள்ள பொருளைக் கவர்ந்து ‘கீழே’ ஸாமான்ய ஜனங்களுக்குப் பல வகைகளிலே பயன்படுத்த வேண்டும்.  அப்போதுதான் ராஜா கங்கை நதியைப் போலே ‘ஜீவ நதி’யாக இருக்கலாம்.’

கள்ளச் சகுனியும் இங்கனே – பல
    கற்பனை சொல்லித்தன் உள்ளத்தின் – பொருள்
கொள்ளப் பகட்டுதல் கேட்டபின் – பெரும்
    கோபத் தொடேதிரிதாட்டிரன் – அட
பிள்ளையை நாசம் புரியவே – ஒரு
    பேயென நீவந்து தோன்றினாய் – பெரு
வெள்ளத்தைப் புல்லொன் றெதிர்க்குமோ – இள
    வேந்தரை நாம்வெல்ல லாகுமோ? (71)

பதம் பிரித்து: தேவை இல்லை

அ. சொற் பொருள்: பகட்டுதல்: அலட்டுதல்; ஆடம்பரம் காட்டுதல் என்று பேச்சு வழக்கில் பொருளிருந்தாலும், ‘வஞ்சித்தல்,’ என்றொரு பொருள் உண்டு இந்தச் சொல்லுக்கு.  To deceive, circumvent, misrepresent.  

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி எண்சீர்ச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

தன்னுடைய உள்ளத்தில் ஆழப் பொருள்கொள்ளுமாறு, பலவிதமான கற்பனையான சொற்களைக் கூறி, சகுனி வஞ்சனையாகப் பேசுவதைக் கேட்ட திரிதிராட்டிரனுக்குக் கோபம் வந்தது.  ‘பிள்ளையைக் கெடுப்பதற்காகவே ஒரு பேயைப் போல நீ வந்திருக்கிறாய்.  பாண்டவர்களை எதிர்த்து வெல்லலாம் என்கிறாய்.  எங்கேயாவது ஒரு புல், வெள்ளத்தை எதிர்த்து வெல்லுமோ?  பாண்டவர்கள் என்ன நாம் வெல்லக் கூடியவர்களோ?

இந்தக் காட்சியை வில்லி அமைத்திருக்கும் விதம் வேறு.  இங்கே துரியோதனன், சகுனி, திருதிராட்டிரன் ஆகிய மூன்றே பாத்திரங்களுக்கு நடுவில், தனிமையில், இந்த உரையாடல்கள் நடக்கின்றன.  எல்லோரும் கூடியிருக்கும் ச¨பியல் நடக்கிறது வில்லி பாரதத்தில், இந்தக் காட்சி.

தமையனும் தம்பி சொன்ன தன்மையை உணர்ந்து நீதி
அமைதரு தந்தை கேட்ப அவன்பெரும் தாதை கேட்பக்
கமைபெறு விதுரன் கேட்பக் கார்முகக் கன்னன் கேட்ப
இமையவன் துரோணன் கேட்ப யாவரும் கேட்பச் சொன்னான்.  

‘துச்சாதனன் பேசக் கேட்ட (‘துரியோதனன் பொறாமை’ என்ற பகுதியில் இங்கே துரியோதனன் பேசுவதில் ஒரு பகுதி துச்சாதனனால் பேசப்படுகிறது) துரியோதனன், திருதிராட்டிரன், பீஷ்மன், விதுரன், கர்ணன், துரோணன், மற்றும் சபையிலே வீற்றிருந்தோர் அனைவரும் கேட்குமாறு சொன்னான்’ என்று வில்லி தன் காட்சியைத் தொடங்குகிறார்.  இந்தப் பேச்சு வார்த்தைகளில் துரியோதனனுக்கும், விதுரனுக்கும் நேரடி வாதங்கள் நடக்கின்றன.  

பாரதியின் விவரிப்பு அப்படியே வியாசரை ஒட்டியது.  ஆனால், இங்கே திருதிராட்டிரன் பேசும் பேச்சு முழுக்க முழுக்க பாரதியின் சொந்தப் படைப்பு.  வியாச பாரதத்தில் திருதிராட்டிரன் இவ்வளவு நல்லவனாகச் சித்திரிக்கப்படவில்லை.  பாரதிக்கு இந்தப் பாத்திரத்திடம் ஏதோ ஒரு காரணத்தால் ஈடுபாடு ஏற்பட்டிருக்கிறது.  வேறொரு கட்டுரையில் கூட திருதிராட்டிரனை உயர்வு செய்து எழுதியிருக்கிறான்.

சோதரர் தம்முள் பகையுண்டோ – ஒரு
    சுற்றத்திலே பெருஞ் செற்றமோ – நம்மில்
ஆதரங் கொண்டவர் அல்லரோ – முன்னர்
    ஆயிரஞ் சூழ்ச்சி இவன்செய்தும் – அந்தச்
சீதரன் தண்ணருளாலும்ஓர் – பெரும்
    சீலத்தினாலும் புயவலி – கொண்டும்
யாதொரு தீங்கும் இலாமலே – பிழைத்
    தெண்ணரும் கீர்த்தி பெற்றாரன்றோ? (72)

பதம் பிரித்து: பிழைத் தெண்ணரும்: பிழைத்து, எண்அரும்.  

அ. சொற் பொருள்: செற்றம்: தீராத கோபம்; மனம் வைரம் கொள்ளுதல்; பகைமை.  செறுநர்: செற்றம் உடையவர் செறுநர்.  பகைவர்.

செய்க பொருளை. செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனின் கூரியது இல். (குறள்)

ஆதரம்: அன்பு, ஆசை, உபசாரம்.

ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
    சேர்தல் கொண்டவ ரோடேமு னாளினில்
    ஆடல் வெம்பரி மீதேறி மாகயி லையிலேகி….
(நாதவிந்து கலாதி நமோ நம… – திருப்புகழ்)

சீதரன்: ஸ்ரீதரன்

எண்ணரும்: எண்ண அரிய.  countless என்றும் கொள்ளலாம்; நினைத்துப் பார்க்க முடியாத அளவு என்றும் கொள்ளலாம்.  எண்ணரும் கீர்த்தி என்பதனால், நினைத்துப் பார்க்க முடியாத அளவு புகழ் என்று கொள்கிறோம்.

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி எண்சீர்ச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

‘என்னடா!  சகோதரர்களுக்குள்ளே பகையுண்டோ!  சுற்றத்தாரிடம் யாராவது தீராக் கோபமும் பகையும் கொள்வார்களோ?  அவர்கள் நம்மிடம் அன்பு பூண்டவர்கள் அல்லரா!  அந்த நாளில் இவன் அவர்களுக்கு எதிராக எத்தனையோ சூழ்ச்சிகள் செய்தான்.  அப்படிச் செய்த போதிலும், கண்ணபிரான் அருளாலும், அவர்களுடைய நல்லொழுக்கத்தினாலும், அவர்களுடைய தோள் வலிமையினாலும் அவர்கள் பிழைத்தார்கள்; மனத்தாலும் நினைக்க முடியாத அளவு பெரிய புகழையும் அடைந்தார்கள் அல்லவா?

பிள்ளைப் பருவந் தொடங்கியே – இந்தப்
    பிச்சன் அவர்க்குப் பெரும்பகை – செய்து
கொள்ளப் படாத பெரும்பழி – அன்றிக்
    கொண்டதொர் நன்மை சிறிதுண்டோ – நெஞ்சில்
எள்ளத் தகுந்த பகைமையோ? – அவர்
    யார்க்கும் இளைத்த வகையுண்டோ – வெறும்
நொள்ளைக் கதைகள் கதைக்கிறாய் – பழ
    நூலின் பொருளைச் சிதைக்கிறாய். (73)

பதம் பிரித்து:

அ. சொற் பொருள்: பிச்சன்: பித்தன்.

…. …. …. …. …. …. …. …. …. …. …. …. …. …. வெங்கரியின்
உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சன் நஞ்சூண் பிச்சன் ஊர்ச்சுடுகாட்டு
எரிப்பிச்சன் என்னையும் ஆளுடைப் பிச்சன் ஏன்றுஏசுவனே!
(திருவாசகம் – நீத்தல் விண்ணப்பம்)

நொள்ளை: பார்வையற்ற.  பார்க்க இயலாத.  புற விழியால் பார்க்கும் ஆற்றல் அற்றவனைப் போல், அக விழியால் எண்ணிப் பார்க்க முடியாத காரணத்தால், ‘அற்பன்,’ என்ற பொருளிலும் வரும்.

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி எண்சீர்ச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

சிறு வயது முதல் இந்தப் பைத்தியக்காரன் அவர்கள் மீது பெரும்பகை பாரட்டி என்ன கண்டான்!  யாராலும் கொள்ள முடியாத அளவு பெரிய பழி விளைந்ததே அன்றி, சிறிதேனும் நன்மை விளைந்ததுண்டோ?  அதென்ன அப்படி எளிமையாக நினைத்துவிடக் கூடிய பகைமையா?  அவர்களைப் பகைத்து, வெல்லவும் முடியுமோ?  அவர்கள் யாருக்காவது இளைத்ததாகவோ, தோற்றதாகவோ வரலாறு உண்டா?  யாரிடம் வந்து இப்படிப்பட்ட பார்வையும், கருத்துமில்லாத கதைகளைச் சொல்கிறாய்?  நீ வெறும் கதை மட்டுமா சொல்கிறாய்?  ‘அறமே வெல்லும்,’ என்று பழைய நூல்கள் சொல்கின்றனவே, அந்தப் பொருளைச் சிதைக்கிறாய்.  மாற்றிச் சொல்கிறாய்.  

மன்னவர் நீதி சொலவந்தாய் – பகை
    மாமலையைச் சிறு மட்குடம் – கொள்ளச்
சொன்னதொர் நூல்சற்றுக் காட்டுவாய் – விண்ணில்
    சூரியன் போல்நிகரின்றியே – புகழ்
துன்னப் புவிச்சக்க ராதிபம் – உடற்
    சோதரர் தாம்கொண்டிருப்பவும் – தந்தை
என்னக் கருதி அவரென்னைப் – பணிந்
    தென்சொற் கடங்கி நடப்பவும் (74)

பதம் பிரித்து:

அ. சொற் பொருள்:

துன்ன: துன்னல்: 1) நெருங்கி இருத்தல்; அருகில் இருத்தல்; அடைதல்.  2) சிறு துளி; திவலை. (பாடல் எண் 15: ‘துன்னற் கினியதுவாய்’)

சக்கராதிபம்: சக்கர ஆதிபம்: ஆணைச் சக்கரம் செலுத்தக் கூடிய தலைமை.  ஆதிபன், அதிபன்: இறைவன், தலைவன்.

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி எண்சீர்ச் சிந்து.  பொருள் முற்றுப் பெறாமல் அடுத்த பாடலுக்குப் போவதால் குளகச் செய்யுள்.

ஈ. பாடல் சொல்வது

மன்னவர்களுக்கான நீதி என்று என்னிடம் கதையளந்தாய்.  எங்கே, எந்தச் சாத்திரத்தில் ஒரு மண் பானை மலையோடு மோதலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது என்பதனை எனக்குக் காட்டு, பார்க்கலாம்.  (இவன் என்ன பெரிய வலியன்?  அவர்களுக்கு முன் இவன் எம்மாத்திரம்?  அவர்கள் மலையென்றால், இவன் வெறும் மண்பானை.  மோதினால், மோதிய மாத்திரத்தில் சிதறுபடுவான்.)  ஆகாயத்தில் விளங்கும் சூரியனுடைய ஒளி எப்படி எல்லா இடத்தையும் அடைகிறதோ, அப்படி அவர்களின் ஆணைச் சக்கரம் எல்லா இடங்களிலும் செயல்கிறது.  அப்படி, தன்னுடன் பிறந்தோராகிய சகோதரர்கள் வலியர்களாய் இருந்தும்; அவர்கள் என்னையே தங்களின் தந்தையாகக் கருதி, என்னிடம் அடங்கி, நான் சொன்னபடியெல்லாம் கேட்டு நடந்து (என்ன செய்ய! என் பிள்ளைதான் என் பேச்சைக் கேட்பதில்லை!) இருக்கவும்….

முன்னை இவன்செய்த தீதெலாம் – அவர்
    முற்று மறந்தவ ராகியே – தன்னைத்
தின்ன வருமொர் தவளையைக் – கண்டு
    சிங்கஞ் சிரித்தருள் செய்தல்போல் – துணை
என்ன இவனை மதிப்பவும் – அவர்
    ஏற்றத்தைக் கண்டும் அஞ்சாமலே – (நின்றன்
சின்ன மதியினை என்சொல்வேன்) – பகை
    செய்திட எண்ணிப் பிதற்றினாய். (75)

பதம் பிரித்து: தேவை இல்லை

அ. சொற் பொருள்: –

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி எண்சீர்ச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

அது மட்டுமா, தமக்கு இவன் முன்னால் செய்த எல்லாக் கொடுமைகளையும் முற்ற முழுக்க மறந்தவர்களாக அவர்கள், எப்படித் தன்னை விழுங்கப் போவதாகச் சொல்லி ஆரவாரித்து அதற்கான முயற்சியிலும் ஈடுபடும் தவளையைப் பார்த்து, சிங்கம் தனக்குள்ளே சிரித்துக்கொண்டு, எதிர்த்து ஒன்றும் செய்யாமல் இருக்குமோ அவ்வாறு இருக்கிறார்கள்.  அத்தோடு நில்லாமல் இவனை அவர்களுடைய துணைவனாகவும கருதுகிறார்கள்.  அவர்களுடைய மேன்மையைக் கண்டு அஞ்சாமல், உன் சிறு மதியை என்னென்று சொல்வேன் – இவனுக்கும் அவர்களுக்கும் பகைமையை உண்டுபண்ண எண்ணி என்னென்னவோ பிதற்றினாய்.

‘நின்றன் சின்ன மதியினை என்சொல்வேன்,’ என்ற தொடரை நகவளைவுக்குள் பிரசுரித்திருப்பது ஏனென்று விளங்கவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.  நமக்குக் கிடைத்துள்ள அச்சுப் படியிலேயே அப்படித்தான் இருக்கிறது.  (பாஞ்சாலி சபதத்தின் முதல் பாகம் அச்சுப்படியாகத்தான் கிடைத்திருக்கிறது.  கையெழுத்துப் படி கிட்டவில்லை.)

ஒப்பில் வலிமை உடையதாம் – துணை
    யோடு பகைத்தல் உறுதியோ? – நமைத்
தப்பிழைத் தாரந்த வேள்வியில் – என்று
    சாலம் எவரிடம் செய்கிறாய்? – மயல்
அப்பி விழிதடுமாறியே – இவன்
    அங்குமிங் கும்விழுந் தாடல்கண் – டந்தத்
துப்பிதழ் மைத்துனி தான்சிரித் – திடில்
    தோம் இதில்மிக வந்ததோ? (76)

பதம் பிரித்து: தேவை இல்லை

அ. சொற் பொருள்: மயல்: மயக்கம்.  
துப்பிதழ்: துப்பு – பவளம்.  

தோம்: குற்றம்

…….. …….. …….. …….. ……..
நாட்டுநற் சீர்த்தி நலனுயர் பெருமான்
தோமறு சுப்ப ராமனற் பெயரோன்…
(ஸ்ரீ சுப்பராம தீக்ஷிதர் காலஞ்சென்றதைப் பற்றிய இரங்கற் பாக்கள் – பாரதி)

பூமியினும் பொறை மிக்குடையாள் பெரும்
    புண்ணியமாம் எங்கள் தாய் – எனில்
தோமிழைப்பார் முன் நின்றிடுங்காற் கொடும்
    துர்க்கை யனையவள் தாய்
(தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடும் – பாரதி)

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

ஈ. பாடல் சொல்வது

இணையற்ற வலிமை உடையவர்கள் அல்லரா பாண்டவர்!  அவர் நமக்கு உகந்த துணைவர்களாக அல்லவா கொள்ளத் தக்கவர்!  அவரிடம் பகை கொள்வது நமக்கு நன்மையைத் தருவதோ?  என்னவோ அந்த வேள்வியில் நம்மை அவமானம் செய்தார்கள் என்கிறாய்.  யாரிடத்தில் கதையளக்கிறாய்!  இவன் கண்ணில் மயக்கம் நிறைந்திருந்தது.  ஒன்றை மற்றொன்றாகக் கண்டு இவன் அங்கும் இங்கும் விழுந்து எழுந்து ஆடிக்கொண்டிருந்தான்.  அதைக் கண்டு அந்தப் பாஞ்சாலி சிரித்தால், அதில் பெரிய குற்றம் வந்துவிட்டதோ!  அவள் யார்?  மைத்துனிதானே.

பகை கொள்ள வேண்டாம்; அதுவும் பாண்டவரோடு பகை கொள்ள வேண்டாம் என்றுதான் வியாச பாரதத்திலும் திருதிராட்டிரன் இந்தக் கட்டத்தில் சொல்கிறான்.  (திருதிராட்டிரன் பாத்திரத்தில் பாரதி மாறுதல்கள் செய்திருந்தாலும், ‘பகை வேண்டாம்,’ என்று வியாச பாரதத்திலும் திருதிராட்டிரன் சொல்கிறான்.)

ஸர்வதா புத்ர பலிர்பிர்விக்ரஹோ மே ந ரோசதே
வைரம் விகாரம் ஸ்ருஜதி தத்வை ஷகமனாயஸம்

(வியாச பாரதம், ஸபா பர்வம், த்யூத வ்ருத்தாந்தம், ஸ்லோகம் 11)

மகனே! பலவான்களோடு பகை எனக்குப் பிடிக்கவில்லை.  பகை துன்பத்தை விளைவிக்கிறது.  அதுதான் இரும்பில்லாமல் செய்த ஆயுதம்.  [மகாபாரதக் காலத்தில் இரும்பின் பயன்பாடு அறியப்படவில்லை என்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். :-)]
 
தவறி விழுந்தவர் தம்மையே – பெற்ற
    தாயுஞ் சிரித்தல் மரபன்றோ – எனில்
இவனைத் துணைவர் சிரித்ததோர் – செயல்
    எண்ணரும் பாதக மாகுமோ? – மனக்
கவலை வளர்த்திடல் வேண்டுவோர் – ஒரு
    காரணம் காணுதல் கஷ்டமோ? – வெறும்
அவல மொழிகள் அளப்பதேன் – தொழில்
    ஆயிரம் உண்டவை செய்குவீர். (77)

பதம் பிரித்து: தேவை இல்லை

அ. சொற் பொருள்: –

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி எண்சீர்ச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

தவறி விழுகின்ற போது, தாயாயிருந்தாலும் சிரிக்கத்தான் செய்வார்கள்.  அப்படி இருக்கும்போது, இவன் தவறி விழுகையில் இவனுடைய துணைவர்கள் சிரித்தார்கள் என்றால் அதென்ன அப்படி எண்ணிப்பார்க்க முடியாத குற்றமா?  மனக் கவலையை வளர்க்க வேண்டும் என்று தீர்மானித்த பின்னால், கவலைப் படுவதற்கு ஒரு காரணம் கண்டுபிடிப்பதுதானா கஷ்டம்?  இதோ பாருங்கள்.  வெட்டிப் பேச்சு பேசாதீர்கள்.  செய்வதற்குப் பயனுள்ள காரியங்கள் ஆயிரம் கிடக்கின்றன.  அவற்றைச் செய்யுங்கள்.  போய் வேலையைப் பாருங்கள்.  

சின்னஞ் சிறிய வயதிலே – இவன்
    தீமை அவர்க்குத் தொடங்கினான் – அவர்
என்னரும் புத்திரர் என்றெண்ணித் – தங்கள்
    யாகத் திவனைத் தலைக்கொண்டு – பசும்
பொன்னை நிறைத்ததொர் பையினை – மனம்
    போலச் செவவிடு வாயென்றே – தந்து
மன்னவர் காண இவனுக்கே – தம்முள்
    மாண்பு கொடுத்தனர் அல்லரோ? (78)

பதம் பிரித்து: தேவை இல்லை

அ. சொற் பொருள்: –

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி எண்சீர்ச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

சிறுவர்களாக இருந்த காலத்திலிருந்தே இவன் அவர்கள் மீது பகை கொண்டு, அவர்களுக்குத் தீங்கு செய்யத் தொடங்கினான்.  (இருந்த போதிலும் அவர்கள் இவனுடைய தீச்செயல்களுக்குப் பதிலடியாக இவனுக்கு ஏதும் செய்ததில்லை.  மாறாக,) தங்களுடைய ராஜ சூய வேள்வியின் போது, இவனைத் தலையாய பொறுப்பில் நியமித்து, இவனிடத்தில் ஒரு பை நிறையப் பொற்காசுகளை அளித்து, ‘மனம் போலச் செலவிடுக,’ என்று கொடுத்தார்கள் அல்லரா?  ஏன்?  (இவன் தம்மிடம் அன்பு பாராட்டுபவன் என்பதனாலா?  இல்லை.  அவர்களுக்கு என்னிடம் அளவிறந்த மரியாதையும் அன்பும் இருக்கிறது.  அந்தக் காரணத்தால்,) ‘இவன் என்னுடைய அரும் புத்திரன்,’ என்பதை எண்ணியன்றோ அவர்கள் இவனுக்கு முதன்மை தந்தார்கள்.

கண்ணனுக் கேமுதல் அர்க்கியம் – அவர்
    காட்டினர் என்று பழித்தனை – எனில்
நண்ணும் விருந்தினர்க் கன்றியே – நம்முள்
    நாமுப சாரங்கள் செய்வதோ – உறவு
அண்ணனும் தம்பியும் ஆதலால் – அவர்
    அன்னிய மாநமைக் கொண்டிலர் – முகில்
வண்ணன் அதிதியர் தம்முளே – முதல்
    மாண்புடை யானெனக் கொண்டனர் (79)

பதம் பிரித்து: தேவை இல்லை

அ. சொற் பொருள்: அர்க்கியம்: நீரால் செய்யும் உபசாரம்.  (சொற் பொருள் இதற்கு முன்னர் பாடல் 67ல் சொல்லப்பட்டது.  அர்க்க பூசை பற்றிய விவரம் பாடல் 47ல் தரப்பட்டிருக்கிறது.)

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி எண்சீர்ச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

‘சகுனி!  கண்ணனுக்கே முதல் மரியாதை செய்தார்கள்; நமக்குச் செய்யவில்லை,’ என்று பழி சொன்னாய்.  ஏண்டா, வந்திருக்கும் விருந்தினர்களுக்கு இல்லாமல், நமக்கு நாமே உபசாரம் செய்துகொள்வது முறையா?  அண்ணன் வீட்டில் தம்பிக்கு என்ன உபசாரம் வேண்டியிருக்கிறது?  அண்ணன்-தம்பி உறவானபடியால், அவர்கள் நம்மை விருந்தினர் வரிசையில் வைக்கவில்லை.  வந்திருக்கும் விருந்தினர்களுக்கு நடுவில் கண்ணனே முதல் மரியாதைக்கு உரியவன் என்று கொண்டனர்.

கண்ணனுக் கேஅது சாலும்என்று – உயர்
    கங்கை மைந்தன்சொலச் செய்தனர் – இதைப்
பண்ணரும் பாவமென் றெண்ணினால் – அதன்
    பாரம் அவர்தமைச் சாருமோ? – பின்னும்
கண்ணனை யாரெனக் கொண்டனை – அவன்
    காலிற் சிறுதுகள் ஒப்பவர் – நிலத்(து)
எண்ணரு மன்னவர் தம்முளே – பிறர்
    யாரும் இலையெனல் காணுவாய். (80)

பதம் பிரித்து: பண்ணரும்: பண்ண அரும்.  எண்ணரும்: எண்ண அரும்.

அ. சொற் பொருள்: சாலும்: சால் என்ற வினைச் சொல்லிலிருந்து பிறந்த சொல்.  சால்தல் என்றும், சாலுதல் என்றும் வழங்கும்.  இந்தச் சொல்,

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.

என்ற குறளில், ‘பொருத்தமானவன்’ என்ற பொருளில் பயில்கிறது.  

சாலுதல்: பொருந்துதல், நிறைதல் (to be abundant), மாட்சி பெறுதல், முற்றுதல் (to be exhausted).

கண்ணனுக்கே அது சாலும்: கண்ணனுக்கே அது பொருந்தும்.

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி எண்சீர்ச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

(மேலும், அவர்களொன்றும் தாமாக முதல் மரியாதைக்கு உகந்தவனாகக் கண்ணனைத் தேர்வு செய்யவில்லையே!)  ‘கண்ணனுக்கே அவ்விதமான மரியாதை பொருந்தும் என்று வீடுமன் சொன்னான்.  அதைக் கேட்டு அவர்கள் அவ்விதமே செய்தார்கள.  நீங்களானால் இந்தச் செயலை ஏதோ செய்யக் கூடாத பாவம் என்று எண்ணுகிறீர்கள்.  அது உங்கள் பார்வை.  அதன் சுமை அவர்களைச் சாராது.  அது இருக்கட்டும்.  கண்ணனை யார் என்று நினைத்தாய்?  இந்த உலகத்தை ஆளும் எண்ணில்லாத மன்னர்களில் யாராவது ஒருவர் அவனுடைய கால் தூசிக்குச் சமமாவார்களோ?  அப்படி ஒருவருமே இல்லை என்பதை நீ காண வேண்டும்.

ஆதிப் பரம்பொருள் நாரணன் – தெளி
    வாகிய பாற்கடல் மீதிலே – நல்ல
சோதிப் பணாமுடி ஆயிரம் – கொண்ட
    தொல்லறி வென்னுமோர் பாம்பின்மேல் – ஒரு
போதத் துயில்கொளு நாயகன் – கலை
    போந்து புவிமிசை தோன்றினான் – இந்தச்
சீதக் குவளை விழியினான் – என்று
    செப்புவர் உண்மை தெரிந்தவர். (81)

பதம் பிரித்து: பணாமுடி: பணம் முடி.  

அ. சொற் பொருள்: பணம்: (ஐந்து வேறுபட்ட பொருளை உடைய பெயர்ச்சொல்.)  இந்த இடத்தில், பாம்பின் படம்; பாம்பு என்ற பொருள்.  பணாமுடி: பாம்பின் தலை.  சோதிப் பணாமுடி ஆயிரம்:  மாணிக்கம் கொண்டதாகிய படத்தை உடைய ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேடன்.

கனலெரி கணபண குணமணி யணிபணி
    கனவளை மரகத
        காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள்

என்று தேவியைப் பாடுவார் அருணகிரி நாதர்.  நெருப்பைப் போல் ஒளிவிடும் (கனல் எரி) பாம்புக் கூட்டங்களின் (கணபண) மணிகள் பதிக்கப்பட்ட ஆபரணமான (மணியணி பணி) வளையலை அணிந்தவள்….. (தேவேந்திர சங்க வகுப்பு)

போதம்: ஞானம், அறிவு.  மேலும் விளக்கத்துக்குப் பாடல் எண் 4 (‘போதமென் நாசியினாள்’) காண்க.

கலை: பாரதியின் ஆட்சியில், கேட்பதற்கு எளிதாகவும், பொருள் சொல்லச் சிக்கலாகவும் தோன்றும்  சொற்களில் ஒன்று.  கலை, இலக்கியம் என்ற பிரிவுகளில், நடனம், ஒவியம், சிற்பம் போன்ற கலைகளைக் குறிக்க மட்டுமே இன்று இந்தப் பெயர்ச் சொல் பயன்படுகிறது.  கலை(தல்), கலை(த்தல்) என்ற வினைச் சொற்கள் நீங்கலாகவும், ஆடல் முதலான கலைகள் நீங்கலாகவும், ‘கலைமான்,’ என்ற சொல்லில் ‘கலை’ என்ற பெயர் இன்று நிலவி வருகிறது.  இங்கே என்ன பொருள் காண்பது?

‘கலை போந்து புவிமிசை தோன்றினான்,’ என்றால் என்ன பொருள் கொள்வது? கலை என்ற சொல் ஒரு புறமிருக்க, ‘போந்து’ என்றால் என்ன சொல்வது?  ‘போந்து’ என்ற சொல், ‘புகுந்து,’ என்ற பொருளில் இன்று பெரும்பாலும் பயன்படுகிறது.  ‘சொல்லப் போந்தேன்,’ என்றால், சொல்லப் புகுந்தேன், சொல்ல வந்தேன் என்று பொருள் கொள்கிறோம்.   ‘போந்தேன்,’ என்றால் ‘வந்தேன்’ என்றும் பொருள்.  ‘என்னுடன் வருவாயா?’ என்பதற்கு Would you go with me? என்று கேட்பதைப் போல்.  ‘போதருதல்’ என்ற சொல்லின் அடிப்படையில் பிறந்த சொல் இது. ‘என்னுடன் அருள் கூர்ந்து வரவேண்டும்,’ என்று தேர்ப்பாகன் பாஞ்சாலியிடம் கேட்டதாகச் சொல்லும் போது ‘யான்அப் பொன்னரசி தாள் பணிந்து போதருவீர் என்றிட்டேன்,’ என்று பாஞ்சாலி சபதத்தின் இரண்டாம் பாகத்தில் ‘போதருதல்’ என்ற வடிவத்தை பாரதி பயன்படுத்துகிறான்.  போந்து என்றால், இங்கே கொள்ள வேண்டிய பொருள், ‘சென்று,’ விட்டு அகன்று.  ஏதோ ஒன்றை விட்டுவிட்டு நீங்கி.  

ஏராளமான பொருள் தரும் சொல், ‘கலை.’  பேரகராதி ஏழு தனித்தனித் தலைச்சொற்களாகப் பகுத்து, ‘கலை’ என்ற சொல்லுக்கு விளக்கம் தந்திருக்கிறது.  இவற்றில் நான்காவது தலைச்சொல்லுக்கு மட்டும் பதினாறு வேறு வேறு பொருள் தரப்பட்டிருக்கிறது.  இவற்றில் ஒன்று, ‘இடது, வலது நாசிகளின் மூலமாகச் செல்லும் மூச்சான இடகலை, பிங்கலை,’ என்பது.  யோகத்தில் இருப்பவர்கள், மூச்சை ஒரு பக்கத்தில் வாங்கி, இன்னொரு பக்கமாக ஒழுங்காகச் செலுத்துவார்கள்.  யோகத் துயில் (அறி துயில்) மேற்கொண்டவனான திருமால், அந்தக் ‘கலையை’ (மூச்சை இடகலை, பிங்கலையாய்ச் செலுத்தும் யோகத்தை) விடுத்து (போந்து) மண்ணுலகத்துக்கு வந்திருக்கிறான் என்பது கொள்ள வேண்டிய பொருள்.  

‘கலை போந்து.’  இரண்டே சொற்கள்.  ‘ஆழ்ந்திருக்கும் கவி உள்ளம் காண்பது’ எவ்வளவு முயற்சியை மேற்கொள்ள வேண்டிய செயல் என்பதற்கு எடுத்துக்காட்டு.  

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி எண்சீர்ச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

முழு முதற்பொருளான நாராயணன், தெளிவு என்கின்ற பாற்கடலில் கிடக்கும் (‘தெளிவாகிய பாற்கடல் மீதிலே), ஒளி சுடரும் மாணிக்கங்கள்  ஆயிரமாயிரம் கொண்டதாகிய தலையை உடைய அறிவு (தொல்லறிவு என்னுமொர் பாம்பின்மேல்) என்கின்ற ஆதிசேடனின் மீது போதத் துயில் கொண்ட நாயகன்.   அத்தகைய யோகத் துயிலை விட்டுவிட்டு, பூமியின் மேல் வந்து தோன்றியவன்தான் இந்தக் குளிர்ந்த குவளை இதழ் போன்ற கண்களை உடைய கண்ணன் என்று உண்மை தெரிந்தவர்கள் சொல்வார்கள்.

நானெனும் ஆணவம் தள்ளலும் – இந்த
    ஞாலத்தைத் தானெனக் கொள்ளலும் – பர
மோன நிலையில் நடத்தலும் – ஒரு
    மூவகைக் காலம் கடத்தலும் – நடு
வான கருமங்கள் செய்தலும் – உயிர்
    யாவிற்கு நல்லருள் பெய்தலும் – பிறர்
ஊனைச் சிதைத்திடு போதிலும் – தன
    துள்ளம் அருளின் நெகுதலும் (82)

பதம் பிரித்து:

அ. சொற் பொருள்: மோனம்: மெளனம்.  மோன நிலை: பேச்சற்ற நிலை.  எண்ணங்களையெல்லாம் நிறுத்திய நிலை.  மோனத்தில் தன்னை நிறுத்தி, பரத்தில் சிந்தையைச் செலுத்தும் நிலை.  எனவே பரமோன நிலை.

ஞானத்திலே பர மோனத்திலே – உயர்
    மானத்திலே அன்ன தானத்திலே
கானத்திலே அமு தாக நிறைந்த
    கவிதையிலே உயர் நாடு

(பாருக்குள்ளே நல்ல நாடு – பாரதி)

நடுவான கருமங்கள்: நடு நிலைமையில் நின்று, நியாயமான காரியங்களை மட்டுமே செய்வது என்பதொரு பொருள்.  என்றாலும், இறைவனின் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூவகைச் செயல்களில் காத்தல் என்னும் நடுவான கருமம் என்றும் பொருள் கொள்பவர் உண்டு.  இரண்டாவது பொருள் உள்ளுறையாகவே விளங்குகிறது.  இடம் கருதி, பொருத்தமாகிறது.  

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி எண்சீர்ச் சிந்து.  பொருள் இன்னும் முற்றுப் பெறவில்லை.  அடுத்த பாடலின் ‘பெறலாவர் இப்பேறுகள் ஞானியர்,’ என்ற இடத்தில் முற்றுப் பெறுகிறது.  ஆகவே இப்பாடல் குளகச் செய்யுள்.  

ஈ. பாடல் சொல்வது

‘நான்’ என்று (மற்றவரைத் தாழ்வாக எண்ணி, தம்மை உயர்வாக) நினைக்கும் ஆணவத்தை விடுவதும், இந்த உலகமே நான் என்ற பரந்துபட்ட பாவனையை மேற்கொள்வதும், பல திக்குகளில் பாயும் எண்ணங்களை (சித்த விருத்தி) அடக்கி, முதற் பொருளில் சிந்தையை நிறுத்தும் மெளன நிலையில் எப்போதும் இருத்தலும், கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்ற பிரிவுகளை உடைய காலத்தைக் கடந்து நிற்பதாகிய தன்மையும், நடுநிலைமை பிறழாத, சரியான காரியங்களை மட்டுமே செய்வதும், (நடுவினது ஆகிய காத்தல் தொழிலை மேற்கொள்வதும்) எல்லா உயிர்களுக்கும் ஒன்றேபோல் அருள் செய்வதும், தன் ஊனையே மற்றவர் சிதைத்திடும் போதிலும், அவரிடத்தில் சினமேதும் கொள்ளாமல், மாறாக அருளால் உள்ளம் நெகுவதும்…..

‘பிறர், ஊனைச் சிதைத்திடு போதிலும் தனதுள்ளம் அருளி நெகுதலும்,’ என்ற இடத்தில் பயிலும் கருத்து, பாரதியின் உள்ளத்தில் வேரூன்றி நின்ற ஆதாரக் கருத்துகளில் ஒன்று.  

‘தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
    சிந்தையிற் போற்றிடுவாய் – நன்னெஞ்சே
அன்னை பராசக்தி அவ்வுருவாயினள்
    அவளைக் கும்பிடுவாய் – நன்னெஞ்சே’

(‘பகைவனுக் கருள்வாய் நன்னெஞ்சே’ – பாரதி)

என்ற பாடல் உட்பட, பல்வேறு இடங்களில் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறான் மகாகவி.  இந்த இடத்தின் விளக்கத்தை விரிவாக – பாரதி கண்ட விதத்தில் – காண வேண்டுவோர், பாரதியின் பகவத் கீதை முன்னுரையைப் படிக்க வேண்டும்.  

‘பிதாவே இவர்களை மன்னியும்.  தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்,’ என்று சென்ன ஏசு நாதரும்,  ‘இட்ட பணியைச் செய்ததல்லால், இவர்கள் எனக்குச் செய்த தீங்கு என்ன?  ஆகவே இவர்களைக் கொல்ல நினைக்கும் காரியத்தை ஒழி,’ என்று தன்னைச் சுற்றியிருந்த காவலரக்கிகள் ஆயிரம் விதமான கொடுமைகளைத் தனக்குச் செய்திருந்த போதும், அவர்களிடத்தில் அருள் கொண்டு, அவர்களைக் கொல்ல விரும்பிய அனுமனிடத்தில் சொன்ன சீதாப் பிராட்டியும் இங்கே எண்ணத் தக்கவர்கள்.  

ஆயிரங் கால முயற்சியால் – பெறல்
    ஆவர்இப் பேறுகள் ஞானியர் – இவை
தாயின் வயிற்றிற் பிறந்தன்றே – தமைச்
    சார்ந்து விளங்கப் பெறுவரேல் – இந்த
மாயிரு ஞாலம் அவர்தமைத் – தெய்வ
    மாண்புடை யாரென்று போற்றுங்காண் – ஒரு
பேயினை வேதம் உணர்த்தல்போல் – கண்ணன்
    பெற்றி உனக்கெவர் பேசுவார்? (83)

பதம் பிரித்து: மாயிரு: மா இரு

அ. சொற் பொருள்: மாஇரு: மிகப் பெரிய.  (பாடல் எண் 22 மற்றும் 66ல் இச்சொல்லைப் பார்த்தோம்.  சொல்விளக்கத்துக்குப் பாடல் எண் 22 பார்க்கவும்.)

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி எண்சீர்ச் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

ஆணவம் விடுத்தல், ஞாலத்தைத் தான் என்று கொள்ளுதல், பர மோன நிலையில் நிற்றல், தன் உடலையே வெட்டிச் சிதைத்த போதும் அப்படிச் செய்தவர்கள்பால் அன்பு காட்டுதல் போன்ற மனப் பாங்குகளை அடைவது அவ்வளவு எளிதான ஒன்றன்று.  ஆயிரமாயிர கால முயற்சியால் இத்தகைய பேறுகளை ஞானியர் பெறுவர்.  ஆனால், தாயின் வயிற்றிலிருந்து வந்து தோன்றிய அந்தச் சமயத்திலேயே ஒருவரிடம் இத்தகைய மனப் பாங்குகள், பக்குவம் காணப்படுமாயின், அப்படிப்பட்டவர்களையே இந்த உலகம் தெய்வத் தன்மை உடையவர்கள் என்று போற்றும்.  கண்ணனிடத்தில் அத்தனை வகையான தன்மைகளும் காணப்படுவதால்தான் அவன் தெய்வமாகப் போற்றப்படுகின்றான்.  உன்னிடம் யார் இவற்றையெல்லாம் சொல்லி விளங்க வைக்க முடியும்?  பேய்க்கு வேதம் புரியாது.  உனக்குக் கண்ணன் பெருமை விளங்காது.  

‘ஒருவனைப் பரமாத்மாவின் அவதாரம் என்று கூறுவதன் பொருள் 81, 82, 83 இம்மூன்று பாடல்களிலும் விளக்கப்பட்டிருக்கிறது,’ என்று பாரதி குறிப்பெழுதுகிறான்.

வேறு

வெற்றி வேற்கைப் பரதர்தம் கோமான்
    மேன்மை கொண்ட விழிஅகத்துள்ளோன்
பெற்றி மிக்க விதுரன் அறிவைப்
    பின்னு மற்றொரு விழியெனக் கொண்டோன்
முற்றுணர் திரி தாட்டிரன் என்போன்
    மூடப் பிள்ளைக்கு மாமன்சொல் வார்த்தை
எற்றி நல்ல வழக்குரை செய்தே
    ஏன்ற வாறு நயங்கள் புகட்ட (84)

பதம் பிரித்து:

அ. சொற் பொருள்: பரதர்: பாரதர். பாரத நாட்டினர்.

பெற்றி: 1. இயல்பு; சுபாவம். 2. தன்மை.  3. விதம். (இப்படியாக, அப்படியாக, இவ்விதத்தில்…) 4. ஒரு காரியத்தைச் செய்வதற்கான வழி முறை.  methodology.* 5. பெருமை.  6. நிகழ்ச்சி.  7. பேறு. 8. விரதம்.

*’மற்று இனி உரைப்பது என்னோ? மாருதி வடித்துச் சொன்ன
பெற்றியே பெற்றி;’ கம்ப இராமாயணம்.  வீடணன் அடைக்கலப் படலம்

‘இனிமேல் சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது?  மாருதி சொன்ன வழி முறையே சிறந்தது.’ (வீடணனுக்கு அடைக்கலம் தர வேண்டும் என்று சொன்ன மாருதியின் கருத்தைக் குறித்து இராமன் சொல்வது.)

இந்த இடத்தில், பெருமை என்றும், ஒரு காரியத்தைச் செய்யுவதற்கான வழிமுறை அறிந்தவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

பாடல் 83ல்

பேயினை வேதம் உணர்த்தல்போல் – கண்ணன்
    பெற்றி உனக்கெவர் பேசுவார்?

என்ற இடத்தில் பெற்றி என்பதற்குப் பெருமை என்று பொருள்.

ஆ. இலக்கணம்

இ. யாப்பு

கட்டளைக் கலிப்பா – ஓரடிக்கு இருபது எழுத்துக்கள் – நேர் இருபது, நிரை இருபத்தொன்று. இந்தப் பாடல் நேரசையில் தொடங்கியிருப்பதால் ஒற்று நீக்கி இருபது எழுத்துகள் ஒவ்வொரு அடியிலும் பயிலக் காணலாம்.  (விரிவான விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

இந்தப் பாடலின் பொருள்  அடுத்த பாடலின் கடைசி அடியோடு முற்றுப் பெறுகிறது.  பாடலின் பொருள் முற்றுப் பெறாத காரணத்தால் இது குளகச் செய்யுள்.

ஈ. பாடல் சொல்வது

திரிதிராட்டிரன் பகை வென்றதாகிய வேலைக் கையில் பிடித்தவன். பாரத நாட்டவரின் அரசன்.  (புறக் காட்சிகளைக் காணக் கூடிய விழிகள் அற்றவன் என்றாலும் அதைவிடவும்) மேன்மையான அகக் காட்சிகளைக் காணக் கூடியதும், நிகழ்வுகளை ஆழ்ந்துணரக் கூடியதுமான (கல்வியாகிய) அக விழியைக் கொண்டவன்.  தன்னுடைய அகவிழிக்குத் துணையாக, கூடுதலாக, எதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை அறிந்த விதுரனுடைய அறிவை இன்னொரு விழியாகப் பெற்றவன்.  எல்லாவற்றையும் நன்குணர்ந்தவன்.  முழு மூடனான துரியோதனனுக்குச் சகுனி சொன்ன வார்த்தைகளை எல்லாம் உதைத்துத் தள்ளி, அவனுக்கு எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சொன்ன போது,  

நாம் பாடல் எண் 71ல் சொன்னது போல், வியாசர் திருதிராட்டிரனை இவ்வளவு நல்லவனாகச் சித்திரிக்கவில்லை.  ‘மேன்மை கொண்ட விழியகத்துள்ளோன்’ என்ற புகழுரை, முற்றிலும் பாரதியின் கருத்து.  

இன்னொன்று.  ‘திருதிராட்டிரன் பார்வை அற்றவன்,’ என்று நேரடியாகச் சொல்வதைத் தவிர்ப்பான் பாரதி. ‘விழி அகத்து உள்ளோன்,’ என்று சொல்லி, எந்த விழி இல்லை என்பதைச் சொல்லாமல் உணர்த்துவதைப் பார்க்கவும்.

பின்னால், சூதாடும் நேரத்தில் திருதிராட்டிரனிடத்தில் விதுரன் பேசும்போது, ‘கேட்கும் காதும் இழந்து விட்டாயோ,’ என்று கேட்பான்.  ‘காதும்,’ என்று ஒரு உம்மை போடும்போது, ‘கண்ணுதான் இல்லை என்றால் காதும் கேட்காதோ?’ என்ற பொருள் மறைவாக நின்று எட்டிப் பார்க்கும்.  

கொல்லு நோய்க்கு மருந்துகள் புகட்ட
    கூடும் வெம்மைய தாய்ப்பிணக் குற்றே
தொல்லுணர்வின் மருத்துவன் தன்னைச்
    சோர்வு றுத்துதல் போலொரு தந்தை
சொல்லும் வார்த்தையி லேதெரு ளாதான்
    தோமிழைப் பதில் ஓர்மதி உள்ளான்
கல்லும் ஒப்பிடத் தந்தை விளக்கும்
    கட்டு ரைக்கும் கடுஞ்சினம் உற்றான். (85)

தெருள் – தெளிவு, அறிவு. தோம் – குற்றம், பொல்லாங்கு, தீமை, துன்பம்

பதம் பிரித்து: தேவை இல்லை

அ. சொற் பொருள்: தெருள்: தெளிவு, அறிவு.  தோம்: குற்றம், பொல்லாங்கு, தீமை, துன்பம்.

ஆ. இலக்கணம்
கொல்லு நோய்: கொல்லும் நோய் என்பதில் உள்ள மகரம் கெட்டதற்கான விதி பாடல் எண் 3-ல் சொல்லப்பட்டது.

இ. யாப்பு

கட்டளைக் கலிப்பா – ஓரடிக்கு இருபது எழுத்துக்கள் – நேர் இருபது, நிரை இருபத்தொன்று. இந்தப் பாடல் நேரசையில் தொடங்கியிருப்பதால் ஒற்று நீக்கி இருபது எழுத்துகள் ஒவ்வொரு அடியிலும் பயிலக் காணலாம்.

ஈ. பாடல் சொல்வது

தன்னைக் கொல்லும்படியாக வந்திருக்கும் நோய்க்கு மருந்து தரும் போதில், மருத்தவனிடம் சினமும், மன வேற்றுமையும் கொண்டு, மருத்துவனுக்குச் சோர்வு ஏற்படும் வண்ணம் அவனிடத்தில் குற்றம் காண்பதுபோல், தந்தை சொல்கின்ற அறிவுரையை மனத்தில் கொண்டு தெளிவடையாமல் நின்றான் துரியோதனன்.  அவன் புத்தி எப்போதும் (பாண்டவர்க்குத்) தீங்கு செய்வதையே பற்றி நின்ற காரணத்தால் தந்தை விளக்கிச் சொல்லும் மொழியைக் கேட்டுக் கடுஞ்சினம் எய்தினான்.

வேறு

பாம்பைக் கொடியென் றுயர்த்தவன் – அந்தப்
    பாம்பெனச் சீறி மொழிகுவான் – அட!
தாம்பெற்ற மைந்தர்க்குத் தீதுசெய் – திடும்
    தந்தையர் பார்மிசை உண்டுகொல்! – கெட்ட
வேம்பு நிகர் இவனுக்கு நான் – சுவை
    மிக்க சருக்கரை பாண்டவர் – அவர்
தீம்பு செய்தாலும் புகழ்கிறான் – திருத்
    தேடினும் என்னை இகழ்கிறான். (86)

பதம் பிரித்து: தேவை இல்லை

அ. சொற் பொருள்: –

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி எண்சீர் சிந்து,

ஈ. பாடல் சொல்வது

பாம்புக் கொடியை உடையவனான துரியோதனன், அந்தப் பாம்பைப் போலவே சீறி மொழிந்தான்.  ‘அடடா! தான் பெற்ற பிள்ளைக்குத் தீங்கு செய்கின்ற அப்பனும் உலகத்தில் உண்டோ!  இவனுக்கு நான் என்றால் என்றைக்கும் வேப்பங்காய்.  பாண்டவர் என்றால் அப்படியே இனித்து வழியும் சருக்கரை.  அவர்கள் நமக்குத் தீங்கு செய்தாலும் அவர்களைப் புகழ்கிறான்.  நான் செல்வம் தேடுகிறேன்.  என்னைத் திட்டுகிறான்.

மன்னர்க்கு நீதி ஒருவகை – பிற
    மாந்தர்க்கு நீதிமற் றோர்வகை – என்று
சொன்ன வியாழ முனிவனை – இவன்
    சுத்த மடையன் என்றெண்ணியே – மற்றும்
என்னென்ன வோகதை சொல்கிறான் – உற
    வென்று நட்பென்று கதைக்கிறான் – அவர்
சின்னமுறச் செயவே திறம் – கெட்ட
    செத்தை என்றென்னை நினைக்கிறான். (87)

பதம் பிரித்து: தேவை இல்லை

அ. சொற் பொருள்: வியாழன்: பிரகஸ்பதி; தேவகுரு.  பிரகற்பதி என்பது பதினெட்டு தரும நூல்களுள் ஒன்று.
சின்னம்: சிறிய துண்டுகள்.  பின்னம்: பெரிய துண்டு.  சின்னாபின்னம்: சிறியதும் பெரியதுமான துண்டுகள்.
செத்தை: இலை முதலியவை உலர்ந்து சருகாகிய குப்பை.

ஆ. இலக்கணம்

இ. யாப்பு

நான்கடி எண்சீர் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

‘மற்ற மாந்தர்களுக்குப் பொருந்தக் கூடிய நீதி மன்னருக்குப் பொருந்தாது.  மன்னருக்கான நீதி வேறு வகையானது,’ என்று சொன்ன தேவ குருவை இவன் என்னவோ சுத்த மடையன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறான்.  பலவிதமான கதைகளைச் சொல்கிறான்.  உறவாம், நட்பாம்.  (அவர் யாராயிருந்தால் நமக்கென்ன?)  அவர்களை வலுமிக்கவர்களாகச் சொல்கிறான்.  அவர்களைத் துண்டு துண்டாகக் கூறுபோடும் திறனற்ற வெறும் குப்பை என்று என்னை நினைக்கிறான்.

இந்திர போகங்கள் என்கிறான் – உண
    வின்பமும் மாதர் இன்பமும் – இவன்
மந்திரமும் படை மாட்சியும் – கொண்டு
    வாழ்வதை விட்டிங்கு வீணிலே – பிறர்
செந்திருவைக் கண்டு வெம்பியே – உளந்
    தேம்புதல் பேதமை என்கிறான் – மன்னர்
தந்திரம் தேர்ந்தவர் தம்மிலே – எங்கள்
    தந்தையை ஒப்பவர் இல்லைகாண். (88)

பதம் பிரித்து:

அ. சொற் பொருள்: தேம்புதல்: வாடுதல்; மெலிதல்; விம்மியழுதல்; வருந்துதல்; அழிதல்.
மனம் வாடுதல் என்ற பொருள் இங்கே கொள்ளத் தக்கது.  

ஆ. இலக்கணம்

இ. யாப்பு

நான்கடி எண்சீர் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

என்னவோ இந்திரனும் விரும்பிடும் போகங்கள் இங்கே இருக்கின்றனவாம்!  நன்றாக உண்பதற்கு உணவும், துய்ப்பதற்குப் பெண்டிரும் இருக்கிறார்களாம்!  இவற்றையெல்லாம் அனுபவித்தபடி, இவனுடைய ஆலோசனையைக் கேட்டுக் கொண்டு, இருக்கின்ற படைப் பெருமையை நினைத்தவாறு இங்கே வாழ்ந்திருக்க வேண்டுமாம்!  அப்படி வாழாமல், அடுத்த அரசனுடைய செல்வப் பெருக்கத்தைக் கண்டு மனம் புழுங்கி, அதை அடைய வேண்டும் என்று (அரசர்க்குரிய தாகத்தோடு) மனம் வெதும்புவதும், வாடுவதும் முட்டாள்தனம் என்கிறான்.  அடடா!  மன்னர்கள் செய்ய வேண்டிய காரியங்களை அறிந்தவர்களுக்குள்ளே, எங்க அப்பனை ஒத்தவர் யாருமே இல்லை.

மாதர்தம் இன்பம் எனக்கென்றான் – புவி
    மண்டலத் தாட்சி அவர்க்கென்றான் – நல்ல
சாதமும் நெய்யும் எனக்கென்றான் – எங்கும்
    சார்ந்திடும் கீர்த்தி அவர்க்கென்றான் – அட!
ஆதர விங்ஙனம் பிள்ளைமேல் – வைக்கும்
    அப்பன் உலகினில் பிறிதுண்டோ! – உயிர்ச்
சோதரர் பாண்டவர், தந்தைநீ – குறை
    சொல்ல இனிஇடம் ஏதையா! (89)

பதம் பிரித்து: தேவை இல்லை

அ. சொற் பொருள்: –

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி எண்சீர் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

அடடா!  அடடா!  என் அப்பன் சொல்வதைக் கேட்டாயா!  பெண்களைத் துய்க்கும் இன்பம் எனக்காம்.  உலகத்தை ஆளும் உரிமை அவர்க்காம்.  நல்லா சாதமும் நெய்யும் போட்டுத் தின்பது நானாம்.  எல்லா இடங்களிலும் பரவிக் கிடக்கும் புகழ் கொள்வது அவராம்!  உலகத்தில் வேற எந்த ஒரு அப்பனாவது இவ்வளவு அன்பு தன் பிள்ளை மீது வைப்பானோ!  ஹக்!  எனக்கென்ன குறை!  உயிருக்குயிரான சகோதரராகப் பாண்டவரும், தந்தையாக நீயும் இருக்கும்போது எனக்கென்ன குறை உண்டாகும்!

சொல்லின் நயங்கள் அறிந்திலேன் – உனைச்
    சொல்லினில் வெல்ல விரும்பிலேன் – கருங்
கல்லிடை நாருரிப்பா ருண்டோ – நினைக்
    காரணம் காட்டுதல் ஆகுமோ? – என்னைக்
கொல்லினும் வேறெது செய்யினும் – நெஞ்சில்
    கொண்ட கருத்தை விடுகிலேன் – அந்தப்
புல்லிய பாண்டவர் மேம்படக் – கண்டு
    போற்றி உயிர் கொண்டு வாழ்கிலேன். (90)

பதம் பிரித்து: தேவை இல்லை

அ. சொற் பொருள்: புல்லிய: வலிமையற்ற

ஆ. இலக்கணம்

இ. யாப்பு

நான்கடி எண்சீர் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

இதோ பார்!  எனக்குச் சொல்லை நயம்படப் பேசத் தெரியாது.  (எதையும் போட்டு உடைத்தாற் போல் பேசித்தான் எனக்குப் பழக்கம்.)  உன்னோடு வாதங்கள் புரிந்து, உன்னை வெல்லும் விருப்பமும் எனக்கில்லை.  உன்னிடம் போய் வாதம் செய்வதாவது!  எவனாவது கருங்கல்லில் இருந்து நார் உரிக்க எண்ணுவானோ?  அதை விடவும் கடினமான செயலன்றோ உனக்குக் காரண காரியங்களை விளங்க வைப்பது!  (நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்.)  என்னைக் கொல்லவே கொன்றாலும் சரி; இல்லாவிட்டால் வேறென்ன செய்ய நினைத்தாலும் சரி.  என் மனத்தில் கொண்ட கருத்து மாறாது.  நான் அதை விடப்போவதில்லை.  வலிமை இல்லாத அந்தப் பாண்டவர் மேம்பட்டுக் கொண்டே போவதைப் பார்த்து, அவர்களைப் போற்றி உயிர் வாழ்பவன் அல்லன் நான்.

வாது நின்னோடு தொடுக்கிலேன் – ஒரு
    வார்த்தை மட்டும் சொல்லக் கேட்பையால்
தீது நமக்கு வராமலே – வெற்றி
    சேர்வதற் கோர்வழி உண்டுகாண் – களிச்
சூதுக் கவரை அழைத்(து)எல்லாம் – அதில்
    தோற்றிடு மாறு புரியலாம் – இதற்
கேதும் தடைகள் சொல்லாமலே – என
    தெண்ணத்தை நீகொளல் வேண்டுமால். (91)

பதம் பிரித்து: தேவை இல்லை

அ. சொற் பொருள்: –

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி எண்சீர் சிந்து.

ஈ. பாடல் சொல்வது

உன்னோடு வாதம் செய்யத் தயாரில்லை நான்.  ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்கிறேன்.  அதைக் கேள்.  நமக்கு எந்த வகையிலும் தீமை ஏற்படாமல், நமக்கு வெற்றி ஏற்பட ஒரு வழி இருக்கிறது.  அவர்களைச் சூதாடுவதற்கு அழைப்போம்.  அப்படிச் சூதாடும்போது அவர்களை எல்லாப் பொருளையும் இழக்குமாறு செய்வோம்.  அனைத்தையும் தோற்குமாறு செய்ய முடியும்.  (எனக்குத் தெரியும்.  நீ இதற்குத் தடைதான் சொல்லப் போகிறாய்.  ஆனால்,) இதற்கு எந்தத் தடையும் சொல்லாமல், என்னுடைய எண்ணத்தை நீ கொண்டே ஆக வேண்டும்.

வேறு

திரித ராட்டிரன் செவியில் – இந்தத்
    தீமொழி புகுதலும் திகைத்து விட்டான்
பெரிதாத் துயர்கொணர்ந்தாய் – கொடும்
    பேயெனப் பிள்ளைகள் பெற்று விட்டேன்
அரிதாக்குதல் போலே – அமர்
    ஆங்கவ ரொடும்பொரல் அவலம் என்றேன்
நரிதாக்குதல் போலாம் – இந்த
    நாணமில் செயலினை நாடுவனோ? (92)

பதம் பிரித்து: தேவை இல்லை.

அ. சொற் பொருள்: அவலம்: துன்பம், அழுகை என்ற பொருளில் அதிகம் பயன்பட்டாலும், இச்சொல்லுக்குக் குற்றம், தீயது என்றொரு பொருள் உண்டு.  இங்கே அந்தப் பொருளில்தான் பயன்பட்டிருக்கிறது.  

‘அஃதுஅவலம் அன்று மன,
ஆயர் எமரானால் ஆய்த்தியேம் யாம் மிகக்
காயம்பூங் கண்ணி கருந்துவர் ஆடையை
மேயும் நிரை முன்னர்க் கோலூன்றி நின்றாய்…’
(கலித் தொகை, முல்லைக் கலி – 108)

அவ்வாறு சொல்லக் கேட்ட தலைவி, ‘அது எம் குலத்துக்குத் தீமை விளைவிப்பது அன்று,’ என உரைத்தாள்….

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி அறுசீர்ச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

‘சூதாடுவதற்குப் பாண்டவரை அழைப்பாய்,’ என்று துரியோதனன் சொன்ன தீமொழிகள் திரிதிராட்டிரனுடைய செவியில் புகுந்ததும் இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராத அவன் திகைத்துவிட்டான்.  ‘ஐயோ! எவ்வளவு பெரிய துன்பத்தைக் கொண்டுவந்துவிட்டாய்!  பேய்களைப் போன்ற பிள்ளைகளை அல்லவா பெற்றிருக்கிறேன்!  என்னடா, சிங்கம் எதிர்ப்பது போல நேருக்கு நேர் நின்று அவர்களோடு மோதுவதே குற்றம்; குலத்துக்குத் தீமை என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.  நீயானால், நரி தாக்குவது போல், தந்திரமாக, வஞ்சனையாக, கபடமாக அவர்களோடு சூதாடி வெல்ல எண்ணுகிறாய்.  இந்த வெட்கங் கெட்ட செயலை நான் எண்ணியும் பார்ப்பேனோ?

இந்தக் கட்டத்தில் மூல நூலில் திருதராட்டிரன், ‘விதுரனுடைய ஆலோசனையைக் கேட்டு அதன் பிறகு அவன் சொல்லும்படியே நடப்பேன்,’ என்று மட்டும்தான் சொல்கிறான்.  முன்னரே குறிப்பிட்டபடி, இந்தப் பகுதியில் இருக்கும் திருதிராஷ்டிரன் உரை, பாரதி உருவாக்கியது.  What we see here is a santized Dhrtharashtra!

ஆரியர் செய்வாரோ? – இந்த
    ஆண்மை இலாச்செயல் எண்ணுவரோ?
பாரினில் பிறருடைமை – வெஃகும்
    பதரினைப் போலொரு பதருண்டோ?
பேரியற் செல்வங்களும் – இசைப்
    பெருமையும் எய்திட விரும்புதியேல்
காரியம் இதுவாமோ – என்றன்
    காளை யன்றோஇது கருதலடா! (93)

பதம் பிரித்து: பேரியற்: பேர் இயல்

அ. சொற் பொருள்: வெஃகுதல்: மிகு விருப்பம்.  குறிப்பாக, அடுத்தவர் பொருளின் மீது ஏற்படும் பெரு விருப்பு.  இது பற்றியே, வெஃகாமை என்றொரு அதிகாரமே படைத்தார் வள்ளுவர்.  

அஃகாமை செல்வத்திற்கி யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

தன்னிடம் உள்ள செல்வம் குறையாமல் இருப்பதற்கு வழி என்ன என்றால், (முதலில்) அடுத்தவன் கைப் பொருள் மீது ஏற்படும் மிகு விருப்பதைக் கைவிட வேண்டும்.

பதர்: உள்ளே மணி பிடிக்காத, வெறும் மேல் தோலான நெல்.  chaff.

பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்;
மக்கட் பதடி எனல்.

பதடி: பதர்.

ஆரியர்: இந்தச் சொல்லுக்கான குறிப்பைப் பாடல் எண் 11ல் காண்க.

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி அறுசீர்ச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

உயர்ந்தவர்கள் செய்யக் கூடிய காரியமா இது?  இது ஆண்மையில்லாத செயலல்லவா?  ஏண்டா, அடுத்தவன் பொருளைச் சூதாடி வெல்லும் காரியத்தை மனிதன் செய்வானா?  அப்படிச் செய்பவன் பதர் அல்லவா?  அவனை விடவும் கீழான பதர் ஒருவன் உண்டா?  என்னடா, பெருமை இயைந்த செல்லவங்கைளயும், புகழையும், பெருமையையும் அடைய விரும்புவாயேயானால், அதற்கு மேற்கொள்ள வேண்டிய காரியம் இதுவா?  என் மகனல்லவா நீ!  இப்படி நினைகாதே அப்பா!

வீரனுக் கேஇசைவார் – திரு
    மேதினி எனும்இரு மனைவியர்தாம்
ஆரமர் தமரல்லார் – மிசை
    ஆற்றி வெற்றியில் ஓங்குதியேல்
பாரத நாட்டினிலே – அந்தப்
    பாண்டவர் எனப்புகழ் படைத்திடுவாய்.
சோரர்தம் மகனோநீ? – உயர்
    சோமன்தன் ஒருகுலத் தோன்றலன்றோ? (94)

பதம் பிரித்து: ஆரமர்: ஆர் அமர்

அ. சொற் பொருள்: ஆரமர்: ஆர்க்கும் அமர்.  ஒலி மிக நிறைந்த போர்க்களம்.  
சோரர்: திருடர்.  சோமன்: சந்திரன்.

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி அறுசீர்ச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

ஆமாம்.  நீ சொல்வது போலவே, வீரர்களுக்கே செல்வம், நிலம் என்ற இரு மனைவியர் வாய்ப்பர்.  ஆனால் யாரோடு சண்டை போடுவது?  தன்னுடைய சுற்றத்தாரோடா?  தமர் அல்லாதவரோடு போர் புரிந்து, அந்தப் போரில் வெற்றி பெறுவாயேயானால், நீயும் அந்தப் பாண்டவர்களைப் போலவே புகழ் அடையலாம்.  அதைவிட்டு, இப்படி ஒரு நயவஞ்சகமான வழியை மேற்கொள்வதற்கு நீ என்ன திருடனுக்குப் பிறந்தவனா?  சந்திர வம்சமில்லையா நாம்?

தம்மொரு கருமத்திலே – நித்தம்
    தளர்வறு முயற்சி மற்றோர் பொருளை
இம்மியுங் கருதாமை – சார்ந்
    திருப்பவர் தமைநன்கு காத்திடுதல்
இம்மையில் இவற்றினையே – செல்வத்(து)
    இலக்கணம் என்றனர் மூதறிஞர்
அம்மஇங் கிதனையெலாம் – நீ
    அறிந்திலையோ பிழை ஆற்றல் நன்றோ? (95)

பதம் பிரித்து: தேவை இல்லை

அ. சொற் பொருள்: –

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி அறுசீர்ச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

இம்மைச் செல்வத்தை ஈட்டும் வழி என்ன என்றால், ‘தாம் மேற்கொண்ட முயற்சியில் கொஞ்சமும் தளர்ச்சி அடையாமல் இருப்பதும்; அடுத்தவன் பொருளின் மீது ஆசைப்படாமல் இருப்பதும்,’ என்று பெரிய அறிஞர்களெல்லாம் இலக்கணம் சொல்லி வைத்திருக்கிறார்களே! அதையெல்லாம் நீ அறியாயா?  உனக்குத் தெரியாததா?  இத்தனையையும் அறிந்த நீ இப்படி ஒரு தவறான வழியைத் தேர்ந்தெடுத்திருப்பது நல்லதா?

நின்னுடைத் தோளனையார் – இள
    நிருபரைச் சிதைத்திட நினைப்பாயோ?
என்னுடை உயிரன்றோ – என்னை
    எண்ணிஇக் கொள்கையை நீக்குதியால்.
பொன்னுடை மார்பகத்தார் – இளம்
    பொற்கொடி மாதரைக் களிப்பதிலும்
இன்னும் பல் இன்பத்திலும் – உளம்
    இசைய விட்டேஇதை மறந்திடடா. (96)

பதம் பிரித்து:

அ. சொற் பொருள்: நிருபர்: அரசர்.

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி அறுசீர்ச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

உன்னுடைய தோளை நீயே வெட்டிக்கொள்வதைப் போல, பாண்டவர்களை (பாண்டவர்களாகிய இளைய மன்னர்களை) சிதைக்க எண்ணலாமோ?  என் உயிரல்லவா நீ? என்னை நினைத்து இந்தக் கொள்கையை மாற்றிக் கொள்ளப்பா!  பொன்னாபரணங்களை அணிந்த மார்பகங்களை உடைய மாதரின்பத்திலும், இன்னும் பலவகையான வேறு இன்பங்களிலும் மனத்தைச் செலுத்தி, உன்னை (இப்போது) வருத்தும் துன்பத்திலிருந்து மீள்வாயாக.  இதை மறப்பாயாக.  

‘உன் தோளை நீயே வெட்டிக்கொள்வது போல் இதென்ன காரியம்!’ என்பது வியாசருடைய வாக்கு.  பாண்டவர்கள் உன்னுடைய தோள் போன்றவர்கள் அல்லரா, உன் வலிமைக்குத் துணையிருப்பவர்களாயிற்றே, அவர்களை அழிக்க நினைப்பது உன் தோளை நீயே வெட்டிக் கொள்வதற்குச் சமமில்லையா!

வேறு

தந்தை இஃது மொழிந்திடல் கேட்டே
    தாரிசைந்த நெடுவரைத் தோளான்
‘எந்தை! நின்னொடு வாதிடல் வேண்டேன்
    என்று பலமுறை கூறியும் கேளாய்
வந்த காரியம் கேட்டி மற்றாங்குன்
    வார்த்தை களின்றிஅப் பாண்டவர் வாரார்.
இந்த வார்த்தை உரைத்து விடாயேல்
    இங்கு நின்முன் என்ஆவி இறுப்பேன். (97)

பதம் பிரித்து: தாரிசைந்த – தார் இசைந்த.  

அ. சொற் பொருள்: –

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

கட்டளைக் கலிப்பா.  மேற்படிப் பாடல் நேரசையில் தொடங்குவதால் ஒவ்வோர் அடியிலும் (ஒற்றொழித்து) பத்துப் பத்து எழுத்துகள் இருப்பதைக் காணலாம்.  (கட்டளைக் கலிப்பா பற்றிய விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

ஈ. பாடல் சொல்வது

திருதிராட்டிரன் மேற்கண்டவாறு சொன்னதைக் கேட்ட, மாலைகள் அணிந்த மலை போன்ற தோள்களை உடையவனான துரியோதனன் சொன்னான்: ‘அப்பா!  உன்னோடு வாதம் புரிவதை நான் விரும்பவில்லை என்று உனக்கு ஆயிரம் முறை சொல்லியாகவிட்டது.  இருந்தாலும் கேட்கமாட்டேன் என்கிறாய்.  (நீ என்ன சொன்னாலும் சரி. உன்னை வாதிட்டு வெல்வதோ, நான் நினைத்திருக்கும் காரியத்தின் மேன்மையை நீ உணருமாறு செய்வதோ என் நோக்கமன்று.)  என்ன காரியமாக இங்கே வந்திருக்கிறேன் என்பதைக் கேள்.  நீ அழைக்காவிட்டால் அந்தப் பாண்டவர்கள் வரமாட்டார்கள்.  நீ இப்போது அவர்களை, ‘மண்டபம் காண்பதற்கும், அதைத் தொடர்ந்து சூதாடுவதற்கும் வா,’ எனச் சொல்லி வார்த்தை அனுப்ப வேண்டும்.  இந்த வார்த்தையைச் சொல்லி அனுப்பாவிட்டால், இதோ இங்கே உனக்கு முன்னே, நீ அறியும் விதமாக என் உயிரை விடுவேன்.  நான் செத்துப் போவேன்.

திருதிராட்டிரன் சக்ரவர்த்தியாக விளங்கிய போதிலும், எல்லா அதிகாரங்களும் துரியோதனனிடத்திலே இருந்தது.  அப்படி இருக்கும் பட்சத்தில் அவன் தன் தந்தையிடத்தில் போய் ‘மண்டபம் கட்டுவதற்கும், அதைக் காணப் பாண்டவர்களை அழைப்பதற்கும், பின்னர் சூதாடுவதற்கும்,’ அனுமதி வேண்டி நிற்க வேண்டியதில்லை.  துரியோதனன் தானாகவே செய்திருப்பான்.  ஆனால் அப்படிச் செய்வதில் பயன் இராது என்பதும் அவனுக்கு நன்றாகவே தெரியும்.  தருமன் இப்படிப்பட்ட ஒரு செயலுக்குச் சம்மதிக்கவே மாட்டான்.  வரவே மாட்டான்.

ராஜசூய யாகம் முடிந்த தருணத்தில் வியாசர் தருமரைப் பார்க்க வந்தார்.  ‘எல்லாம் நல்லபடியாக முடிந்ததில்லையா,’ என்று கேட்டு, வியாசரை வணங்கினான் தருமன்.  ‘ஆமாமப்பா.  நல்லபடியாகத்தான் முடிந்தது.  ஆனால் ஒன்று சொல்கிறேன்.  குறித்து வைத்துக்கொள்.  இன்னும் பதின்மூன்று வருட காலத்தில் உன் காரணத்தால் இந்தக் குலம் நாசமடையப் போகிறது,’ என்றார் வியாசர்.  திடுக்கிட்டுப் போனான் யுதிட்டிரன்.  நாசம் என்பது எப்போது நேரும்?  பகையாலும், போர்களாலும்தானே!  பகையை எப்படித் தடுப்பது?  பெரியவர்கள் சொல்லும் வார்த்தைகளைத் தட்டாமல் ஏற்றுக்கொள்வது அதற்கோர் உபாயமன்றோ!  உடனே ஒரு பிரதிக்ஞை செய்தான்.  ‘இனி நான் செய்யும் சபதத்தைக் கேட்டுக் கொள்ளுங்கள்.  இன்று முதல் பதின்மூன்று ஆண்டுகள் வரையில் என் தம்பியரையும், மற்ற அரசர்களையும் நான் கடிந்து பேச மாட்டேன்.  என் குலத்தவரின் விருப்பப்படியே நடப்பேன்.  உலகத்தில் கலகம், மன வேறுபாட்டினால்தான்; உண்டாகிறது.  இனிய காரியங்களையே செய்வேன்.  சண்டையைத் தூரத்திலேயே தடுத்து உலகத்தின் நிந்தனைக்கு ஆளாகாமல் இருப்பேன்.’

தருமன் செய்த இந்தச் சபதமே குல நாசத்துக்கு அடிகோலியது.  ‘என் குலத்தவர் விருப்பப்படியே நடப்பேன்; பெரியவர்கள் எது சொன்னாலும் தட்ட மாட்டேன்,’ என்று தருமன் மேற்கொண்ட சபதத்தையே ஆயுதமாகப் பயன்படுத்தினான் துரியோதனன்.  இயல்பாகவே யுதிட்டிரன் பெரியோர் சொல் தட்ட மாட்டான் என்ற போதிலும், அவனுக்குக் கூடுதல் பளுவாக இப்போது மேற்கொண்டிருக்கும் சபதம் வேறு நிற்கிறது என்பதை துரியோதனன் அறிவான்.  எனவேதான் சொல்கிறான்:

… … … … … … … மற்று ஆங்கு உன்
    வார்த்தை களின்றிஅப் பாண்டவர் வாரார்

மதி தமக்கென்றிலாதவர் கோடி
    வகையுறு சாத்திரக் கேள்விகள் கேட்டும்
பதியுறும் சாத்திரத் துள்ளுறை காணார்
    பானைத் தேனில் அகப்பை போல்வார்.
துதிகள் சொல்லும் விதுரன் மொழியைச்
    சுருதியாம் எனக் கொண்டனை நீதான்.
அதிக மோகம் அவன்உளங் கொண்டான்
    ஐவர் மீதிலிங்கெம்மை வெறுப்பான். (98)

பதம் பிரித்து: தேவை இல்லை

அ. சொற் பொருள்: –

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

கட்டளைக் கலிப்பா.  மேற்படிப் பாடலில் தொடங்கும் நிரையசையில் தொடங்கும் முதல் அரையடியில் (ஒற்றொழித்துப்) பதினோரு எழுத்தும், நேரசையில் தொடங்கும் பின் அரை அடியில் (ஒற்றொழித்து) பத்து எழுத்துகள் இருப்பதைக் காணலாம்.  (கட்டளைக் கலிப்பா பற்றிய விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

ஈ. பாடல் சொல்வது

தனக்கென்று சுய புத்தி இல்லாதவர்கள் ஆயிரம் விதமான சாத்திரங்களைக் கற்றால்தான் என்ன?  அவற்றின் உட்பொருளை அறியக் கூடிய அறிவுத் திறன் இல்லாவிட்டால் கற்ற கல்வியால் அவர்களுக்கு என்ன பயன்?  ஒரு பானைத் தேனில் முழுகிக் கிடக்கும் அகப்பையைப் போலத்தான் அவர்கள்.  மற்றவர்களுக்கு எடுத்து வழங்கப் பயன்படும் என்றாலும், நாளெல்லாம் தேனில் மூழ்கிக் கிடந்தாலும் ஒரே ஒரு சொட்டுத் தேனின் சுவையாது அந்த அகப்பைக்குத் தெரிய வருமோ?  (நீ படித்து என்ன புண்ணியம்?  பானைத் தேனில் கிடக்கும் அகப்பையல்லவா நீ!)  உனக்கு என்றைக்கு சுயபுத்தி இருந்திருக்கிறது!  அந்த விதுரன் வந்து நான்கு துதிமொழிகள் சொல்லிவிட்டு பிறகு என்ன சொல்கிறானோ அதையே வேதம் என்று கொள்பவன் அல்லனா நீ!  அந்த விதுரனுக்குத்தான் எப்போது எம்மிடத்தில் அன்பிருந்திருக்கிறது?  அவன் பாண்டவர்களையே மோகிக்கிறான்!  எங்களை அடியோடு வெறுக்கிறான்.

நட்ட கல்லை தெய்வ மென்று நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணுமொ ணென்று சொல்லும் மந்திரங்க ளேதடா!
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளி ருக்கையில்?
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

என்ற சிவவாக்கியரின் உவமையான, ‘கறி சமைத்த சட்டிக்கும் சட்டுவத்துக்கும் கறியின் சுவை தெரியுமா,’ என்பதை மேற்படி ‘பானைத் தேனில் அகப்பை போல்வார்,’ அடியொற்றி நிற்கிறது.

தலைவன் ஆங்கு பிறர்கையில் பொம்மை.
    சார்ந்து நிற்பவர் உய்ந்நெறி உண்டோ?
உலைவலால் திரிதிராட்டிர வர்க்கத்
    துள்ளவர்க்கு நலமென்ப தில்லை.
நிலையிலாதன செல்வமும் மாண்பும்
    நித்தம் தேடி வருந்துதல் இலாமே
விலையிலா நிதி கொண்டனம் என்றே
    மெய்குழைந்து துயில்பவர் மூடர். (99)

பதம் பிரித்து: உலைவலால்: உலைவு அலால்.

அ. சொற் பொருள்: உலைவு: சஞ்சலம்.  ஒரு நிலையில் நிற்காமல் இங்கும் அங்குமாக அலைகளைப் போல் திரியும் தன்மை.

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

கட்டளைக் கலிப்பா.  மேற்படிப் பாடலில் தொடங்கும் நிரையசையில் தொடங்கும் முதல் அரையடியில் (ஒற்றொழித்துப்) பதினோரு எழுத்தும், நேரசையில் தொடங்கும் பின் அரை அடியில் (ஒற்றொழித்து) பத்து எழுத்துகள் இருப்பதைக் காணலாம்.  (கட்டளைக் கலிப்பா பற்றிய விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

ஈ. பாடல் சொல்வது

இங்கே என்னடாவென்றால் தலைவன் பிறன்கையில் (சாவி கொடுத்தால் ஆடுகின்ற) பொம்மையைப் போல் நிற்கிறான்.  (விதுரன் இயக்குகின்ற வெற்றுப் பதுமையல்லவா நீ!)  உன்னைப் போன்ற பொம்மை அரசர்களைச் சார்ந்து நிற்கும் எம்மைப் போன்றவர்களுக்கு விடிவு என்பது எக்காலத்தும் உண்டோ?  இங்கும் அங்குமாக மனம் பேயாட்டம் ஆட, வருந்திக் குலைவுறுதைத் தவிர, திருதிராட்டிரனுக்குப் பிள்ளையாய்ப் பிறந்தவர்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட வழியுண்டோ?  ‘செல்வமும் பெருமையும் நிலையற்றவை.  ஆகவே நிலையற்ற செல்வத்தைத் தேடி அலைந்து நித்த நித்தம் வருந்துதல் இன்றி, நிலையான இன்பமான வீடு பேற்றைத் தேடுவோம்’ என்று, உடல் இளைத்து, நல்லாத் தூங்கி வழியறாங்க பாரு, அவங்க எல்லாம் முட்டாப் பசங்க.

பழைய வானிதி போதுமென் றெண்ணிப்
    பாங்கு காத்திடு மன்னவர் வாழ்வை
விழையும் அன்னியர் ஓர்கணத்துற்றே
    வென்றழிக்கும் விதி அறியாயோ?
குழைதல் என்பது மன்னர்க் கில்லை.
    கூடக் கூடப்பின் கூட்டுதல் வேண்டும்.
பிழைஒன்றே அரசர்க்குண்டு கண்டாய்
    பிறரைத் தாழ்த்துவதில் சலிப்பெய்தல். (100)

பதம் பிரித்து: வானிதி: வான் நிதி.  பெரிய செல்வம்.  (வானதி என்பது வேறு.)

அ. சொற் பொருள்: –

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

கட்டளைக் கலிப்பா.  மேற்படிப் பாடலில் தொடங்கும் நிரையசையில் தொடங்கும் முதல் அரையடியில் (ஒற்றொழித்துப்) பதினோரு எழுத்தும், நேரசையில் தொடங்கும் பின் அரை அடியில் (ஒற்றொழித்து) பத்து எழுத்துகள் இருப்பதைக் காணலாம்.  (கட்டளைக் கலிப்பா பற்றிய விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

ஈ. பாடல் சொல்வது

யாரோ எப்போதோ சேர்த்து வைத்த பெருஞ்செல்வம் போதும் என்று எண்ணி அதனைக் காத்து நிற்கும் மன்னவர்களுடைய வாழ்வை விரும்பி நிற்கும் அன்னியர்கள் அவர் மேல் படையெடுத்து வந்து ஒரே கணத்தில் (அப்படி, ‘போதும் என்ற மனத்தோடு நின்ற மன்னர்களை’) அழிப்பது இயற்கையின் விதி.  இதை நீ அறியமாட்டாயோ?  தளர்ச்சி என்பது ஒரு நாளும் அரசர்களுக்கு ஏற்படக் கூடாது.  செல்வம் எவ்வளவுக்கெவ்வளவு ஏறுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு மேலும் மேலும் பெருக்க வேண்டும்.  அரசர்கள் செய்வது எதுவும் பிழையாகாது.  அப்படி அவர்கள் பிழை செய்வார்கள் என்றால், அது ஒன்றே ஒன்றாகத்தான் இருக்க முடியும்.  ‘அடுத்தவர்களைத் தாழ்த்துவதில் சலிப்பு எய்தி, அந்தச் செயலை நிறுத்திக்கொள்ளுதல்.’

வேறு

வெல்வதெம் குலத்தொழிலாம் – எந்த
    விதத்தினில் இசையினும் தவறிலைகாண்
நல்வழி தீயவழி – என
    நாமதில் சோதனை செயத்தகுமோ?
செல்வழி யாவினுமே – பகை
    தீர்த்திடல் சாலுமென் றனர்பெரியோர்
கொல்வது தான்படையோ – பகை
    குமைப்பன யாவுநற் படையலவோ? (101)

பதம் பிரித்து: –

அ. சொற் பொருள்: குமைப்பன – குமைத்தலுக்கு உதவுவன.  குமைதல்/குமைத்தல் என்றால் குழையும்படியாச் சோற்றை வேகவைத்தல்.  ஆகவே நெஞ்சத்தின் உறுதித் தன்மை அழிந்து, வெந்து, குழைந்த தன்மையைக் குறிக்க ‘மனம் குமைந்து போனேன்,’ என்று சொல்கிறோம்.  ஆனால் இங்கே வேறொரு பொருளில் பயன்பட்டிருக்கிறது இந்தச் சொல்.  இந்த இடத்தில் ‘குமைத்தல்’ என்ற சொல்லுக்கு ‘அடியோடு அழித்தல்’ என்பது பொருள்.  

சாலும்: தகும்.  (பாடல் 48: ‘தரணி மன்னருள் முற்பட வைத்திடல் சாலுமோ?’ கண்ணனை எல்லா மன்னருக்கும் மேலானவனாக வைத்திடுதல் தகுமோ?)

சுக்ரீவன் சீதையைத் தேடப் படை திரட்டாமல் தாமதம் செய்யவும், இலக்குவன் வாயிலில் வந்து சீற்றத்தோடு நிற்கவும், தாரை வாய்மொழியாகச் சொல்லும் கம்பன் பாடலில் இந்தச் சொல்லைக் காண்கிறோம்:

வாலியார் உயிர் காலனும் வாங்க விற்
கோலி வாலிய செல்வம் கொடுத்தவர்
போலுமால் உம் புறத்து இருப்பார்; இது
சாலுமால் உங்கள் தன்மையினோர்க்கு எல்லாம்.
(விளக்கத்துக்கு அனுமன் தொடரில் ‘வெடித்தது ககனமுட்டை’ [அனுமன் 21] காணவும்.)

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி அறுசீர்ச்சிந்து

ஈ. பாடல் சொல்வது

துரியோதனன் தொடர்கிறான்.  ‘வெற்றி பெற வேண்டும்.  அதுதான் அரசர்களின் குலத்தொழில்.  அந்த வெற்றியை எந்த வழியில் வேண்டுமானாலும் அடையலாம்.  எடுத்திருப்பது நல்ல வழியா அல்லது தீய வழியா என்றெல்லாம் சோதித்துப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.  ‘எந்த வழியில் போனாலும் சரியே.  பகையை அழிப்பது ஒன்றே குறிக்கோள்; எனவே, மேற்கொள்வதற்கு எந்த வழியானாலும் தகும்,’ என்று பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.  ஆயுதம் என்றால் கொல்லத்தான் பயன்பட வேண்டுமா என்ன!  பகைவனுடைய ஆற்றலை அழிக்க உதவுவது எல்லாம் ஆயுதம்தான்!

இதுவும் போர்தானே!  மோது போர் என்பது ஆயுதம் ஏந்தும் போர் என்று சொல்கிறாய்.  இந்தச் சூது போரும் அப்படித்தான்.  சூதும் ஓர் ஆயுதம்தான்.  ஆயுதம் என்றால் உலோகத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்; குத்திக் கொல்வதற்கு ஏதுவாய் இருக்க வேண்டும் என்றெல்லாம் யார் சொன்னார்கள்?  பகைவனுடைய ஆற்றலை அழிக்க எதுவெல்லாம் உதவுகிறதோ, அதுவெல்லாம் ஆயுதந்தான்!

வேறு

சுற்றத் தார்இவர் என்றனை ஐயா!
    தோற்றத் தாலும் பிறவியினாலும்
பற்ற லாரென்று நண்பர்க ளென்றும்
    பார்ப்ப தில்லை உலகினில் யாரும்.
மற்றெத் தாலும் பகையுற லில்லை –
    வடிவினில் இல்லை அளவினில் இல்லை –
உற்றதுன் பத்தி னால்பகை உண்டாம்
    ஓர்தொழில் பயில்வார் தமக்குள்ளே. (102)

பதம் பிரித்து: தேவை இல்லை

அ. சொற் பொருள்: பற்றலார்: பற்று அலார் – பகைவர்கள்.

ஆ. இலக்கணம்: பற்றலாரென்று நண்பர்களென்றும் – ‘பற்றலார் என்றும்’ என்பதில் உள்ள மகரம் (ம்) கெட்டதன் காரணத்தைப் பாடல் எண் 3ல் கண்டோம்.

இ. யாப்பு

கட்டளைக் கலிப்பா.  (நேர் பத்து; நிரை பதினொன்று என்று பாரதி கையாண்டிருக்கும் வகை.)  மேற்படிப் பாடலில் ஒவ்வோர் அரையடியும் நேரசையில் தொடங்குவதால், ஒவ்வோர் அரையடியிலும் ஒற்றொழித்துப் பத்து எழுத்துகள் இருப்பதைக் காணலாம்.  கட்டளைக் கலிப்பா விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

ஈ. பாடல் சொல்வது

பாண்டவர்கள் நம்முடைய சுற்றத்தார்கள் என்று சொன்னாய்.  உனக்கு உலக வழக்கம் தெரியவில்லை.  உறவுக்காரர்கள் என்றால் எந்த வகையில்?  பிறப்பினாலும், உருவத்தினாலும் ஒத்து இருப்பவர்கள் எல்லாம் உறவினர் ஆகிவிட முடியுமா?  (பொதுவாக அப்படித்தான் கொள்ளவேண்டும் என்றாலும்) உலகத்தார் தம்முடைய நண்பர்கள் இன்னார், பகைவர்கள் இன்னார் என்று, பிறப்பின் அடிப்படையிலோ, ஒத்த தோற்றத்தை உடையவர்கள் என்ற அடிப்படையிலோ கருதுவதில்லை.  ஒரே தொழிலில் ஈடுபட்டிருக்கும் இரண்டு பேர்களுக்கு இடையிலே, ஒருவர் மற்றவருக்கு விளைவிக்கும் துன்பத்தின் அளவே உறவையோ, பகையையோ நிர்ணயிக்கும்.  

அப்பா, உறவு என்பதும், பகை என்பதும் என்ன?  கூடப் பிறந்தவர்கள் எல்லோரும் சோதரர் ஆகிவிட முடியுமா?  அதுவும் இவர்கள் உன் கூடப் பிறந்தவனுக்குப் பிறந்தவர்கள்.  உறவு என்பது உடலால் நிகழ்வது.  பிறப்பால் வருவது.  பகை என்பது உள்ளத்தால் நிகழ்வது.  ஒத்த தொழில் புரிகின்ற இரண்டு பேர்களுக்குள்ளே (among competitors) பகை உருவாக என்ன காரணம்?  ஒருவன் தன்னுடைய வளர்ச்சியினாலோ, மற்ற மற்ற காரணங்களாலோ மற்றவனுக்குத் துன்பத்தை விளைக்கிறான்.  அப்போது பகை இயற்கையாகவே உருவாகிறது.  நானும் அரசன்; பாண்டவர்களும் அரசன்.  அவர்களுடைய வளர்ச்சி என்னைத் துன்பப்படுத்துகிறதே!  இந்த ஒரு காரணம் போதாதா அவர்கள் மீது பகை கொள்வதற்கு!

பூமித் தெய்வம் விழுங்கிடும் கண்டாய்
    புரவலர் பகை காய்கிலர் தம்மை.
நாமிப் பூதலத்தே குறைவெய்த
    நாளும் பாண்டவர் ஏறுகினறாரால்
நேமி மன்னர் பகை சிறிதென்றே
    நினைவயர்ந் திருப்பாரெனில் நோய்போல்
சாமி அந்தப் பகைமிக லுற்றே
    சடிதி மாய்த்திடும் என்பதும் கண்டாய். (103)

பதம் பிரித்து: –

அ. சொற் பொருள்: நேமி: சக்கரம்; ஆணைச் சக்கரம்.
சடிதி: சடிதி, சடுதி இரண்டும் ‘விரைவில்’ என்ற பொருள் தரும் ‘ஜடிதி’ என்ற உருதுச் சொல்லின் தமிழ் வடிவங்கள்.  

‘ஜடிதி! பெயரென்! சாற்றுதி தக்ஷணம்!’ – மனோன்மணீயம் (குடிலனிடம் புருடோத்தமன் கேட்பது, ஐந்தாம் அங்கம், முதற் களம்)  

(பாரதி முஸ்லிம் பெருமக்களைப் போலவே, அதே உச்சரிப்பில் உருது பேசுவான் என்பது வ. ரா. சொல்வது.  “எனக்கு ஹிந்துஸ்தானி அல்லது உருது பாஷை நன்றாகத் தெரியும்.” இது பாரதியே சொல்வது.  ‘ரெயில்வே ஸ்தானம்’ என்ற தலைப்பிட்ட கட்டுரை)

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

கட்டளைக் கலிப்பா.  (நேர் பத்து; நிரை பதினொன்று என்று பாரதி கையாண்டிருக்கும் வகை.)  மேற்படிப் பாடலில் ஒவ்வோர் அரையடியும் நேரசையில் தொடங்குவதால், ஒவ்வோர் அரையடியிலும் ஒற்றொழித்துப் பத்து எழுத்துகள் இருக்கின்றன.  நிரையசையில் ‘நினைவயர்ந்’ மற்றும் ‘சடிதி’ என்று தொடங்கும் இரண்டு அரையடிகளிலும் ஒற்றொழித்துப் பதினோரு எழுத்துகள் இருப்பதைக் காணலாம்.  கட்டளைக் கலிப்பா விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

ஈ. பாடல் சொல்வது

(எதிரியாகிய) மன்னர்களின் பகைமையக் காய்ந்து, எதிர்க்காதவர்களை (எதிரிகளை அழிக்காத மன்னர்களை) (வேறு யாரும் வேண்டாம்), பூமா தேவியே விழுங்கிவிடுவாள்.  கெளரவர்களாகிய நம்முடைய செல்வாக்கு இந்த உலகத்தில் குறைந்துகொண்டே போகிறது.  பாண்டவர்களின் செல்வாக்கோ அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  ஆணைச் சக்கரத்தை உடைய (மற்ற, எதிரி) மன்னர்களிடம் காணப்படும் பகை ‘சிறியது’ என்று எண்ணி அலட்சியமாக இருந்துவிடக் கூடாது.  அப்படி இருந்தால், ஐயோ! அந்தப் பகையானது நோய்கள் எவ்வளவு விரைவில் பெருகிப் பரவுமோ, அவ்வளவு விரைவில் பெருகும்; பரவும்.  விரைவில் அழிக்கவும் அழித்துவிடும் என்பதைக் காண மறுக்கிறாய் நீ.  

போர்செய் வோம் எனில் நீதடுக்கின்றாய்
    புவியினோரும் பழிபல சொல்வார்.
தார்செய் தோளிளம் பாண்டவர் தம்மைச்
    சமரில் வெல்வதும் ஆங்கெளி தன்றாம்
யார்செய் புண்ணியத்தோ நமக் குற்றான்
    எங்க ளாருயிர் போன்றஇம் மாமன்.
நேர்செய் சூதினில் வென்று தருவான்
    நீதித் தருமனும் சூதில் அன்புள்ளோன். (104)

பதம் பிரித்து: –

அ. சொற் பொருள்: நேர் செய் சூது: சமமற்ற செல்வம், அதிகாரம் எல்லாவற்றையும் சமம் செய்து தரப்போகிற சூது.  This is not just a game of dice.  This is an instrument to correct all imbalances.  

ஆ. இலக்கணம்

இ. யாப்பு

கட்டளைக் கலிப்பா.  (நேர் பத்து; நிரை பதினொன்று என்று பாரதி கையாண்டிருக்கும் வகை.)  மேற்படிப் பாடலில் ஒவ்வோர் அரையடியும் நேரசையில் தொடங்குவதால், ஒவ்வோர் அரையடியிலும் ஒற்றொழித்துப் பத்து எழுத்துகள் இருக்கின்றன.   கட்டளைக் கலிப்பா விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

ஈ. பாடல் சொல்வது

அட! போர்தான் செய்து பார்த்துவிடுவோமென்றால், நீ குறுக்கே விழுந்து மறிக்கின்றாய்.  (சூதாட்டத்துக்கே இத்தனை யோசிப்பவன், பாண்டவர்களுடன் போர் செய்யவா எங்களை விடுவாய்!  அது ஒரு பக்கம் இருக்கட்டும்.  நானே அவர்களோடு யுத்தம் செய்ய விரும்பவில்லை, ஏனென்றால்) மாலைகளை அணிந்த தோள்களை உடைய பாண்டவர்களோடு யுத்தம் செய்து வெல்வது ஒன்றும் எளிதான செயல் அன்று.  யார் செய்த புண்ணியமோ, எங்கள் மாமன் சகுனி நமக்குக் கிடைத்திருக்கிறான்.  எங்கள் ஆருயிர் போன்றவன் அல்லனா அவன்!  ஏற்றத் தாழ்வுகள் எல்லாவற்றையும் போக்கடிக்கக் கூடிய, தகர்க்கக் கூடிய, சமம் செய்யக் கூடிய சூதாட்டத்தில் எல்லாவற்றையும் சரிசெய்து தருவான்.  அது ஒரு பக்கம் இருக்கட்டும். உனக்குத் தெரியுமோ தெரியாதோ, சூதாடுவதில் யுதிஷ்டிரனுக்கும் பிரியம் உண்டு.  (நீ என்னவோ அவனை நீதிமான் என்று அலட்டிக்கொள்கிறாய்!)

இங்கே துரியோதனன் வாய்மொழியாக இப்படிச் சொல்லப்பட்டாலும், மூல நூலில் சகுனி சொல்லும் வார்த்தை இது.  ‘உடனே சகுனி, ‘துரியோதனா! யுதிஷ்டிரன் சூதாட்டத்தில் விருப்பம் உள்ளவன்; ஆனாலும் அவனுக்கு ஆடத் தெரியாது.’ – வியாச பாரதம், சபா பருவம், தியுத பருவம் – வர்த்தமானன் பதிப்பு, முதல் தொகுதி, பக்கம் 547)

“நீதித் தர்மனுஞ் சூதிலன்புள்ளோன்.” தர்மன் சூதாட்டத்திலே பிரியமுடையவனென்றும், அழைத்தால் எளிதில் இணங்கிவிடுவான் என்றும் சகுனி கருதுவதாக முதனூலிலேயே காணப்படுகிறது.” – இது பாரதியின் குறிப்பு.

பகைவர் வாழ்வினில் இன்புறுவாயோ
    பார தர்க்கு முடிமணி அன்னாய்?
புகையும் என்றன் உளத்தினை வீறில்
    புன்சொல் கூறி அவித்திடலாமோ?
நகைசெய் தார்தமை நாளை நகைப்போம்.
    நமர்இப் பாண்டவர் என்னில் இஃதாலே
மிகையுறும் துன்பம் ஏது? நம்மோடு
    வேறுறாது எமைச் சார்ந்து நன்குய்வார். (105)

பதம் பிரித்து: வீறில்: வீறு இல்

அ. சொற் பொருள்: வீறு இல் – ஒளியற்ற, பெருமையற்ற

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

கட்டளைக் கலிப்பா.  (நேர் பத்து; நிரை பதினொன்று என்று பாரதி கையாண்டிருக்கும் வகை.)  மேற்படிப் பாடலில் ஒவ்வோர் முதல் அரையடி நிரையசையிலும், அடுத்த அரையடி நேரசையிலும் தொடங்குவதால், முறையே பதினொன்றும், பத்துமாக எழுத்துக் கணக்கு இருப்பதை (ஒற்றொழித்து) எண்ணிப் பார்க்கலாம்.  கட்டளைக் கலிப்பா விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

ஈ. பாடல் சொல்வது

பாரத மன்னர்களுள் எல்லாம் தலை சிறந்த மணிபோன்றவனே!  பகைவர் வாழ்வதில் அப்படி என்ன இன்பம் உனக்கு?  இங்கே அடக்க முடியாத சினத்தால் புகைந்து கொண்டிருக்கும் என் உள்ளத்தை, ஒளியற்ற வெற்றுச் சொற்களைச் சொல்லி அமைதிப்படுத்தவோ, அடக்கவோ நினைக்க வேண்டாம்.  இந்த நெருப்பு உன் புன் சொற்களால் அவிக்க முடியாத நெருப்பு. நம்மைப் பார்த்துச் சிரித்தவர்களை நாளை நாம் பார்த்துச் சிரிப்போம்.  அவ்வாறில்லாமல், ‘பாண்டவர்கள் நம்மவர்,’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் இதைக் காட்டிலும் அதிகமான துன்பத்தைத் தரக் கூடியது எது?  (அப்படி அவர்களை ‘நம்மவர்கள்’ என்று சொல்வதனாலே) அவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் போல் இருந்து, (நம்மை உறிஞ்சி, ஒட்டுண்ணியைப் போலே) அவர்கள் நன்றாக வளர்வார்கள்.  

ஐய சூதிற்கவரை அழைத்தால்
    ஆடி உய்குதும் அஃதியற்றாயேல்
(பொய்யென் றென்னுரை – என்னியல் போர்வாய் –
    பொய்ம்மை வீறுஎன்றும் சொல்லிய துண்டோ?)
நையநின் முன்என் சிரங் கொய்தே
    நானிங் காவி இறுத்திடுவேனால்.
செய்யலாவது செய்குதி என்றான்
    திரித ராட்டிரன் நெஞ்சம் உடைந்தான். (106)

பதம் பிரித்து: நானிங் காவி: நானிங்கு ஆவி

அ. சொற் பொருள்: பொய்ம்மை வீறு: பொய்ப் பெருமை

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

கட்டளைக் கலிப்பா.  (நேர் பத்து; நிரை பதினொன்று என்று பாரதி கையாண்டிருக்கும் வகை.)  மேற்படிப் பாடலில் ஒவ்வோர் அரையடியும் நேரசையில் தொடங்குவதால், ஒவ்வோர் அரையடியிலும் ஒற்றொழித்துப் பத்து எழுத்துகள் இருக்கின்றன.  நிரையசையில் ‘திரித ராட்டிரன்’ என்று தொடங்கும் இரண்டு அரையடிகளிலும் ஒற்றொழித்துப் பதினோரு எழுத்துகள் இருப்பதைக் காணலாம்.  கட்டளைக் கலிப்பா விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

ஈ. பாடல் சொல்வது

‘அப்பா!  அவர்களைச் சூதிற்கு அழைத்தாய் என்றால், ஆடி (அதனால் நாங்கள்) வாழ்வடைவோம்.  அப்படிச் செய்யவில்லை என்றால், நான் சொல்வது பொய்யில்லை; பொய்ப் பெருமைக்காகப் போலியாகச் சொல்பவன் அல்லன் நான் என்பதனையும் நீ அறிவாய்.  இங்கே, உன் உள்ளம் நைந்து போகுமாறு, இதே இடத்தில் என் தலையை அறுத்துக் கொள்வேன்.  இறப்பேன்.  இனிமேல் உன் விருப்பம்.  நீ செய்வதுபோல் செய்து கொள்க’ என்று துரியோதனன் முடித்தான்.  இதைக் கேட்ட திரிதராட்டிரன் மனமுடைந்தான்.  

விதிசெய் விளைவினுக்கே – இங்கு
    வேறுசெய்வார் புவிமீதுளரோ
மதிசெறி விதுரன்அன்றே – இது
    வருந்திறன் அறிந்துமுன் எனக்குரைத்தான்
அதிசயக் கொடுங்கோலம் – விளைந்
    தரசர்தம் குலத்தினை அழிக்கும் என்றான்.
சதிசெயத் தொடங்கி விட்டாய் – நின்றன்
    சதியினில் தானது விளையும் என்றான். (107)

பதம் பிரித்து: தேவை இல்லை

அ. சொற் பொருள்: –

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி அறுசீர்ச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

‘உன் முன்னாலே என் தலையை அறுத்துக்கொண்டு மாய்வேன்,’ என்று துரியோதனன் சொல்லக் கேட்ட திரிதிராட்டிரன் மனம் உடைந்தான்.  ‘இப்படியும் நடந்தாக வேண்டும் என்று விதி இருந்தால், அதை மாற்ற யாரால் முடியும்?  செறிவான மதியை உடைய விதுரன் இது இப்படித்தான் நடக்கப்போகிறது என்று பல நாளுக்கு முன்னரே உணர்ந்து என்னிடத்தில் சொன்னான்.  ‘முன்னெப்போதும் நடந்திராத கொடிய செயல்கள் நடக்கும்.  அரசர் குலம் முழுவதையும் அந்தச் செயல்களின் விளைவுகள் அழிக்கும்,’ என்று சொன்னான்.  ‘அத்தனைக் கொடிய செயல்களும், நீ செய்யப்போகும் சதியிலிருந்துதான் தொடங்கும்,’ என்றான்.  அதற்கேற்றாற்போல் நீயும் சதி செய்யத் தொடங்கிவிட்டாய்.

விதிவிதி விதிமகனே – இனி
    வேறெது சொல்லுவன் அடமகனே!
கதியுறும் காலனன்றோ – இந்தக்
    கயமகன் எனநினைச் சார்ந்துவிட்டான்?
கொதியுறும் உளம்வேண்டா – நின்றன்
    கொள்கையின் படிஅவர் தமையழைப்பேன்
வதியுறு மனைசெல்வாய் – என்று
    வழியுங்கண் ணீரொடு விடைகொடுத்தான். (108)

பதம் பிரித்து: தேவை இல்னை.

அ. சொற் பொருள்: வதியுறு: வசிக்கின்ற.

ஆ. இலக்கணம் –

இ. யாப்பு

நான்கடி அறுசீர்ச் சிந்து

ஈ. பாடல் சொல்வது

‘விதி! எல்லாம் விதி! மகனே, இனி இதைத் தவிர நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது!  அந்த எமனே இந்தக் கேடுகெட்ட சகுனியின் வடிவத்தில் உன்னிடத்தில் வந்து சேர்ந்திருக்கிறான்.  உள்ளம் கொதித்தல் வேண்டாம்.  (எப்படி நடந்தாலும் இனி என்னால் ஆவது ஒன்றும் இல்லை.)  நீ நினைத்திருப்பது போலவே அவர்களை அழைப்பேன்.  இப்போது உன் அரண்மன¨க்குத் திரும்பிச் செல்,’ என்று திரிதிராட்டிரன், கண்களில் நீர் வழிய மகனுக்கு விடை கொடுத்தான்.

வேறு

மஞ்சனு மாமனு போயினபின்னர்
    மன்னன் இளைஞர் பலரை அழைத்தே
பஞ்சவர் வேள்வியிற் கண்டது போல
    பாங்கின் உயர்ந்ததொர் மண்டபஞ் செய்வீர்
மிஞ்சு பொருள்அதற் காற்றுவன் என்றான்
    மிக்க உவகையொ டாங்கவர் சென்றே
கஞ்ச மலரிற் கடவுள் வியப்பக்
    கட்டி நிறுத்தினார் பொற்சபை ஒன்றே. (109)

பதம் பிரித்து: தேவை இல்லை.

அ. சொற் பொருள்: மஞ்சன்: மைந்தன், ஆண்மகன்.  (பாடல் 39 மற்றும் 44-ல் இந்தச் சொல் பயின்றிருப்பதைக் காணவும்)

பாங்கின் உயர்ந்தது.  ‘பாங்கு’ என்ற சொல் பெரும்பாலும் ‘தன்மை’ (மனப்பாங்கு) என்ற பொருளிலும், ‘அண்டை, அயல்’ என்ற பொருளிலும் இக்காலத்தில் ஆளப்படுகிறது.  இந்தச் சொல்லுக்குப் பதினான்கு வேறுபட்ட பொருள் உண்டு.  இந்த இடத்தில், ‘ஒப்பு, இணை’ என்று பொருள்படும்.

பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே. (தொல் காப்பியம், பொருளதிகாரம், சூத்திரம் 23)

பாங்கு அரும் சிறப்பு: இணையாக வேறொன்றைப் பார்ப்பதற்கு அரிதான சிறப்பு.  

பாங்கின் உயர்ந்தது ஓர் மண்டபம்: ஒப்பிட்டுப் பார்க்கையில், மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் உயர்ந்ததான மண்டபம்.

மேற் பக்கம், கீழ்ப் பக்கம், நடுப்பக்கம் என்பன போன்று ‘இடம்’ குறிக்கும் சொல்லாகவும் ‘பாங்கு’ பயன்படும்.  

தொடரும்

 

 

பதிவாசிரியரைப் பற்றி