திவாகர்

வாள்முனைக் குளே இருந்து நூல் முனைக்கு
வித்தெடுத்த மன்னந்தனைப் பாடு மனமே
கோகுலத்தில் லீலை செய்து போர்முகத்தில்
கீதை சொன்ன கோகுலனைப் பாடு மனமே
வேத ஞான மாம்பழத்தில் கீதை என்ற சாறு
பெய்த வித்தகத்தைப் பாடு உள்ளமே
விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் பண்ணளந்து
கீதை சொன்ன வித்தகனைப்பாடு மனமே
ஆதிமூலம் வேதமூலம் நாதமூலம்
கீதமூலம் அந்தமூலம் பாடு உள்ளமே!

கண்ணதாசனின் வைரவரிகள் இத்தனையும்.

 பஜகோவிந்தம் தமிழாக்கத்தில் தன் மனதில் கீதை பற்றி தோன்றியபோதெல்லாம் அந்தப் பாடலுக்கு தோதாக கீதையைத்தான் முன்வைப்பான் இந்த தமிழ்த்தாயின் தவப்புதல்வன்.

கீதை உலகத் தத்துவத்துக்கெல்லாம் மூல தத்துவம்தான். எந்த மதத்தின் தத்துவத்துள்ளும் கீதையின் ஆதாரத்தைப் பெறலாம். அதுதான் கீதையின் தனித்துவம். கீதையில் இல்லாதது இவ்வுலகில் இல்லை. இவ்வுலகில் இருப்பதெல்லாம் இருந்ததெல்லாம் இருக்கப்போவதெல்லாம் கூட கீதையில் ஏற்கனவே கொடுக்கப்பட்டதுதான்.

கண்ணன் இந்த உலகில் அவதாரம் செய்ததற்கு எத்தனையோ காரணங்கள நம் பெரியவர்கள் சொல்லிக்கொண்டிருந்தாலும் முக்கியமான காரணம் இவ்வுலகுக்கு நல்வாழ்வு கொடுக்க கீதை எனும் கொடை கொடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் அவன் அவதாரம் செய்தான் என்றும் சொல்லலாம்.

அப்படிப்பட்ட கீதையை எல்லோருக்கும் புரியும் வண்ணம் சொல்லிவரும் சிரிப்பானந்தாவான ஹாஹோ எனும் திரு சம்பத் அவர்கள் பாராட்டப்படவேண்டியவர். கீதை நகைச்சுவையாக சொல்லக்கூட நம் பயன்பாட்டுக்கு வருகிறது என்பதே கீதையின் பெருமை என்பதற்கு சம்பத் அவர்கள் எழுத்துக்களே உதாரணம்..
https://www.vallamai.com/paragraphs/26798/

”அட! கீதையானது போர் ஆரம்பமான அன்றே அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்டு விட்டது. ஆனால் திருதராஷ்ட்டிரர் சஞ்சயனிடத்து கேட்பது பத்து நாள் போர் முடிவிலேதான். அதாவது பத்தாம் நாள் போரிலே பீஷ்மர் அர்ஜுனனால் அம்புப் படுக்கையில் கிடத்தப் படுகிறார். அது தீராத சோகத்தைத் திருதராஷ்ட்டிரருக்கு ஏற்படுத்தி விடுகிறது. ‘போர் ஆரம்பம் முதல் என்ன நடந்தது என்பதை உனது விசேஷ சக்தியைப் பயன்படுத்தி எனக்குச் சொல்’, என சஞ்சயனிடத்தில் கேட்கிறார் . அதனால்தான் திருதராஷ்டிரர், ‘தர்மபூமியாகிய குருசேத்திரத்தில் கூடி நின்ற என்னவர்களும், பாண்டவர்களும் (பத்து நாட்கள் முன்பு) என்ன செய்தார்கள் சஞ்சயா?’, எனக் கேட்கிறார். இப்போது புரிகிறதா சாதாரணீ?”, என்று கேட்டார் ஹாஹோ.

“நல்ல வேளை, அவர் அப்படித் திரும்பக் கேட்காமல் போயிருந்தால் நமக்கு இந்தஅற்புதக் கீதையே கிடைக்காமல் போயிருக்கும் அல்லவா?”, என்றார் சமூகன்.

“ஆமாம் .. ஆமாம்..கிடைக்காமலே போயிருக்கும்!”, என்றார் ஆமாம்பிரபு.

“அதான் கெடைச்சுடிச்சில்ல, சட்டுனு அடுத்த ஸ்லோகத்துக்கு போங்களேன்!”, என்று அவசரப் படுத்தினார் அவசரகுமார்.

“பாண்டவர்களுடைய படையைப் பார்த்து விட்டு படைத்தளபதி துரோணாச்சாரியாரிடம் ராஜா துரியோதனன் இப்படிக் கூறலானான், இது இரண்டாவது ஸ்லோகம். துரியோதனனின் குரு துரோணர், ஆனால் இப்போது அவர்கள் குரு சிஷ்யராக இருக்கவில்லை. துரியோதனன் ராஜா, துரோணர் படைத் தளபதி அவ்வளவே! அதாவது இங்கு படையை நடத்திச் செல்ல, போர்த்திட்டங்கள் வகுக்க அதைச் செயல்படுத்த துரோணனருக்கு அதிகாரம் உண்டே தவிர இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் துரியோதனனுக்கே, என்று வலியுறுத்தவே ராஜா துரியோதனன் என்கிறார்”, இப்படிச் சொன்னார் ஹாஹோ.

“அப்புடின்னா சிஷ்யனா இருந்தப்ப எடுத்த ட்ரில்லுக்கெல்லாம், வட்டியும் முதலுமாச் சேர்த்து துரோணரை இப்போ ட்ரில் எடுக்கலாம் துரியோதனன்!”, என்று சொல்லிவிட்டு உரத்த குரலில் சிரித்தது தமாசு.

“துரோணர் தன்னோட பெரிய தாடியோட போர்க்களத்துல தோப்புக் கரணம் போட்டா தமாஷா இருக்குமில்ல?”, என்றான் மக்கான்.

“நம்ம ஹாஹோ கூட பெரிய தாடியோட இருகார், உனக்கு ஆசையா இருந்தா அவரை தோப்புக் கரணம் போடச்சொல்லேன்”, என்றது தமாசு மக்கானைப் பார்த்து.

பாமரரும் புரியும் வண்ணம் கீதை எடுத்துச் சொல்லப்படவேண்டும், சிரிக்க சிரிக்கச் சொன்னாலும் கடைசியில் கீதை பற்றிய சிந்தனை மட்டுமே அங்கே மூளையில் பதிவாகும் வண்ணம் எழுதிவரும் ‘சிரிப்பானந்தா’ என்கிற ஹாஹோ சம்பத் அவர்களை இவ்வார வல்லமையாளராக தேர்ந்தெடுப்பதில் வல்லமை குழு பெருமையடைகிறது. அவருக்கு நம் நல்வாழ்த்துகள்.”

கடைசி பாரா:

இவ்வாரக் கடைசி பாராவில் வருபவர் திரு தி.ந. இளங்கோவன். மனதில் தேடி வந்து தைத்து விட்டுப் போன கவிதை இது. திரு இளங்கோவுக்கு நம் வாழ்த்துகள்.

காதலில் அலையும் மனம் போல்
உன்னுடன் எங்கும் திரிந்தேன் நான்.
பிறிதொரு நாள் எனக்கென்று ஒரு பார்வை, ரசனை.
வேறுபட்டதாய், உன்னில் முற்றிலும் மாறுபட்டதாய்…
உன்னில் ஒரு அங்கமாய் நானிருந்த நாட்கள் போய்
நான் என்னைப் பெற்ற வலி மிகுந்த காலமது…

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “வல்லமையாளர்!

  1. பெரிய தாடி, மீசையுடன் சிரித்துக் கொண்டே தோற்றமளிக்கும் சிரிப்பானந்தா, வித்தியாசமான முறையில் கீதையை நகைச்சுவை கலந்து படிப்பவர் அனைவரையும் சிரிக்க வைக்கிறார். விருது வழங்கிய திரு திவாகர் அவர்களுக்கும், விருது பெற்ற திரு சம்பத் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  2. நன்றி. பேருந்தில் பயணச்சீட்டு எடுக்க உதவுபவருக்கும் இதே வார்த்தைதான். தன் உயிரைப் பணயம் வைத்து நம் உயிரைக் காப்பாற்றுபவர்க்கும் இதே வார்த்தைதான்! ஆனால் இது மிக அருமையான வார்த்தை. குறுகிய காலத்தில் இப்படி இந்த வல்லமையாளர் விருதை பெருவதில் உள்ளபடியே நான் மிகவும் மகிழ்வுறுகிறேன். எனது எழுத்தை இன்னும் மெருகேற்றிக் கொள்ளவும் உற்சாகத்துடன் தொடரவும் இவ்விருது எனக்கு ஊக்கமளிக்கிறது. என்னை நானே செதுக்கிக் கொள்ளவே இதை நான் எழுத ஆரம்பித்து உள்ளேன், மற்றபடி யாராவது ஒருவருக்காவது இந்த என் தொடர் பயனளித்துவிட்டாலே அது எனக்கு அதிகப் படிதான்! வல்லமை ஆசிரியர் பவள சங்கரி அவர்களுக்கும், எப்போதும் எனக்கு உற்சாகமளித்து நல்ல நண்பராய் செயலாற்றி, அடிக்கடி பல ஆலோசனைகளை கூறி நல்வழிப்படுத்திவரும் அண்ணா கண்ணன் அவர்களுக்கும், திரு.இன்னம்பூரான் அவர்களுக்கும், பகவத் கீதையை விவாதித்து பல விஷயங்களை எனக்கு எடுத்துக்காட்டித் தரும் அண்ணன் ரவிக்கும், வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்த திரு திவாகர் அவர்களுக்கும், பொறுமையாகப் படித்துவரும் உங்கள் அனைவருக்கும் அதே வார்த்தையையே திரும்பச் சொல்கிறேன். நன்றி!

  3. மிக்க மகிழ்ச்சி திரு.பெருவை பார்த்தசாரதி.

  4. திரு திவாகர் அவர்களின் கடைக்கண் பார்வை பட்டு கடைசிப்பாராவில் இடம் பிடிக்கும் அளவுக்கு ஒரு கவிதையைப் படைத்தது மிக்க மகிழ்வளிக்கிறது. நன்றி தங்கள் பாராட்டுரைக்கு!

  5. “செய்தி”களை பாமரமக்களும் படிக்கும் வண்ணம் உருவான “தினத்தந்தி”நாளிதிழை போல… குறிப்பிட்டவர்கள் மட்டுமே புரிந்துபடிக்க முடியும் என்ற நிலையிலிருந்த கீதையை அனைவரும் படிக்கவேண்டும் என்ற ஆவலில் அனைத்து தரப்பு மக்களும் படிக்கும் வகையில் எளிய நடையில் கீதையின் பெருமை குறையாமல் தகுந்த முறையில் வடிவமைத்து “புதிய கீதை” படைத்துவரும் சிரிப்பானந்தா அவர்களுக்கு வார “வல்லமையாளர் விருது” வழங்கபடுவது சரியான தேர்வே …! தேர்ந்தெடுத்த திரு.திவாகர் மற்றும் வல்லமை குழுவினருக்கும்… அந்த விருதை பெறுவதன் மூலம் அந்த விருதுக்கே பெருமை சேர்த்திருக்கும் திரு. ஹாஹோ(சிரிப்பானந்தா) அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்…!

  6. நன்றி திரு.சித்திரை சிங்கர். ஆனால் விருதுக்கே பெருமை என்று சொல்வதெல்லாம் உண்மையல்ல, அது என்மீதான தங்கள் அன்பைக் காட்டுவதே. விருது என்னை பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *