தமிழ்த்தேனீ

மகாராஜா சுரதா,  ராஜ குரு சுமதாஅவர்கள் கூறிய  ஆலோசனையின்படி  “பஞ்சபூதங்களில்  ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை  பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்…’ என்று, தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளபடி,  மகாராஜா சுரதா தூய்மையான ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு, காளி ரூபத்தைச் செய்து, அதை ஆவாஹனம் செய்து, உண்ணாவிரதம் இருந்து, காளி தேவியை வேண்டினார். அந்த வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து,  அவர்களின் இன்னல்களிலிருந்து விடுதலை பெற்றார். எனவே, அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து வழிபாடு செய்வது, நவராத்திரியில், குறிப்பாக சரஸ்வதி பூஜை வழிபாட்டின் முக்கிய அங்கம் பெறுகிறது. மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஒன்பது படிகள் அமைப்பதுபொதுவான  மரபு.

புரட்டாசி மாதம் 29ம் தேதி, அக்டோபர் 15ம் தேதி திங்கட்கிழமை சித்தயோகம், அமாவாசை அன்று நவராத்திரி விழா தொடங்குகிறது .இந்த நவராத்திரி விழாவை சிறப்பாகக் கொண்டாட அவரவர்கள் சக்திக்கும், இருக்கும் இடத்துக்கும் ஏற்ப  மூன்று படிகள். ஐந்து படிகள், ஏழு படிகள், ,ஒன்பது படிகள் என்று அமைத்து அந்தப் படிகளில் பலவிதமான தெய்வங்களின் உருவ பொம்மைகளை, மற்றும் நமக்கு மனதுக்கு உகந்த நடைமுறை வாழ்க்கையில் இருக்கும் மக்களில் நம்மைக் கவர்ந்த 12 ஆழ்வார்களின் பொம்மைகள், 63 நாயன்மார்களின் பொம்மைகள். மஹாத்மாகாந்தி, சுபாஷ் சந்திரபோஸ், வாஞ்சிநாதன், கப்பலோட்டிய தமிழன் வ.உ .சிதம்பரம்பிள்ளை, ஜவஹர்லால்நேரு, இந்திராகாந்தி, காமராசர், பாரதியார் ,பாரதிதாசன் ,வியாபாரச் செட்டியார் பொம்மை, குறவன் குறத்தி பொம்மைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, போன்ற நம் தேசத்தில் நினைவு கூரவேண்டியவர்களின், தலைவர்களின் உருவ பொம்மைகள்  போன்றவற்றை வைக்கிறோம், அதையும் தவிர நாம் அன்றாடம் பார்க்கும் விலங்குகள் பசு ,ஏரில் பூட்டிய காளைகள், நிலத்தை உழும்  உழவன்,  போன்றவர்களின் பொம்மைகள் எல்லாவற்றையும் அவைகளை வைக்கவேண்டிய  தகுந்த இடங்களில் வைத்து மகிழ்வது நம் வழக்கம்.

அதே போல் பக்கத்திலே  மண் கொட்டி பூங்கா அமைத்து, அதன் பக்கத்திலே கோயில் அமைத்து, அந்தக் கோயிலுக்கு எதிரே நம் வீட்டில் உள்ள தாம்பாளத்தில் படிக்கட்டுகள் அமைத்து நடுவிலே நீர் ஊற்றி குளம்போல் தோற்றம் ஏற்படுத்தி அதில் நீர்வாழ் மீன்கள், தவளை கொக்கு போன்ற பொம்மைகளை  வைத்து, அலங்கார விளக்குகள் அமைத்து அழகுக்கு அழகு சேர்த்து கலைநயத்துடன் நவராத்திரியைக் கொண்டாடுகிறோம்.

இப்படி எல்லாப் பொம்மைகளையும் வைத்துவிட்டு, நம் சுற்றத்தார், அண்டை அயலார் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் இந்த விழாவிலே கலந்துகொள்ள அவர்கள் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு  தாம்பாளத்தில் வெற்றிலைபாக்கு,மஞ்சள், குங்குமம், பலவிதமான பழங்கள் போன்றவைகளை வைத்து அழைத்துவிட்டு, தினமும் அன்றிலிருந்து தொடங்கி விசேஷமான பூஜைகள் செய்து  பலவிதமான  உகந்த தின்பண்டங்களை , சமைத்து  நிவேதனம் செய்து   அவைகளை வீட்டிற்கு வரும் அனைவருக்கும் பகிர்ந்தளித்து  மகிழும் பண்டிகை நவராத்திரி ஆகும். இந்த ஒன்பது நாட்களிலும் வீட்டிற்கு வரும் குழந்தைகள், மற்றும் பெரியவர்கள் அனைவரும் மகிழும்படி வரவேற்று , நம் இதிகாச, புராணங்களில் இருந்து நம் மனதைக் கவர்ந்த  ஶ்ரீராமன், ஶ்ரீ கிருஷ்ணன், ராதை, பக்த மீரா போன்ற பலவேடங்களை குழந்தைகளுக்கு  அணிவித்து எல்லோரும் மகிழும்படியாக ஆடிப் பாடி மகிழ்ந்து  ஒன்பதாம் நாள் நவமி அன்று  சரஸ்வதிக்கு பூஜை செய்து பத்தாம்   நாளாகிய தசமிஅன்று ஆயுத பூஜை என்றும்  விஜய தசமி என்றும் கொண்டாடுகிறோம்.  அன்று நாம் அன்றாடம் உபயோகிக்கும் நம் வாகனங்கள், ஆயுதங்கள், எல்லாவற்றிர்க்கும் முறையே குங்குமம் இட்டு பூஜைகள் செய்து கொண்டாடி  நிறைவு செய்வோம் நவராத்திரி விழாவை.

ஆட்சி, அதிகாரம், நாடு உள்பட சகலமானதையும் இழந்த பாண்டவர்கள் 12 ஆண்டு வனவாசம், ஓராண்டு அக்ஞாத வாசம் முடிந்து, விஜயதசமியன்றே மீண்டும் அனைத்து ஆயுதங்களையும் தாங்கள் இழந்த பலம் ஆகியவற்றையும் பெற்றனர் .இந்த விஜயதசமி நன்நாளில்தான் துர்க்கா வெற்றி பெற்றாள் ,ஆகவே இந்த நாளில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்தால் சகலவிதமான வித்தைகளிலும் வெற்றி பெறுவார்கள் என்பது ஐதீகம்.

 

வீரத்தின் தெய்வமான சிவப்பிரியையான, இச்சா சக்தியான  துர்க்கை  அல்லது காளி என்னும் சக்தியானவள் துர்க்கை. இந்த துர்க்காதேவி  மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டு  அவனை வதம் செய்தாள் அதாவது தீமை என்னும் அரக்கனை அழித்து  மக்களுக்கு  நன்மையாகிய வெற்றியை அருளினாள். அதனால் மகிஷசுரமர்த்தனி என்று பெயர்கொண்டாள்.    ” விஜய ” என்றால்   வெற்றி   . தசம் என்றால் பத்து வெற்றியை பெற்ற நாள்  பத்தாம் நாள். இப்படி மகிஷனை துர்க்கை வதம் செய்த பத்தாம் நாளே விஜயதசமி என்று அழைக்கப்பட்டது.

இந்த துர்க்கா தேவி மகி‌ஷனுடன் போர் புரியத் தொடங்கிய நாளே நவராத்திரி விழாவின்  தொடக்க நாள்.  நவராத்திரி விரதம் புரட்டாசி  மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை  குறித்து நோற்கப்படும்  நோன்பாகும். இது தக்ஷிணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்திராயண காலம் தேவர்களுக்கு பகல் காலம் ஆகும்.  

நவராத்திரி பூஜை புரட்டாசி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்ய வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது ஆகவே புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் கைக்கொள்ளப்படும் நோன்பு  சாரதா நவராத்திரி நோன்பாகும்.

உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தக்ஷினாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாசி மாதத்தில் நோற்கப்படும்  சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக் கொள்ளுகின்றோம்.

பிரளயம் என்னும் அழிவுக்  காலத்தின் முடிவில் இறைவன் மீண்டும் உலகத்தை உண்டாக்க விரும்புகின்றான் ஆகவே இறைவன் விரும்பத் தொடங்கும் அந்தக் கணமே   இச்சை என்ற சக்தி தோன்றுகின்றது. அந்த இச்சை சக்தியினால்  எவ்வாறு உலகை உண்டாக்குவது என்று இறைவன் அறிகின்றான். எவ்வாறு என்று யோசிக்கும் போதே ஞான சக்தி தோன்றுகிறது . அதன்பின் தன்னுடைய கிரியை என்னும் சக்தியினால் கிரியா சக்தியைத் தோற்றுவித்து  உலகைப் படைக்கின்றான்.
 
நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.
 
நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்
 
இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான்
 
சாந்தி துர்க்கை ,சபரிதுர்க்கை, ஶ்ரீ ஜ்வாலாதுர்க்கை, ஶ்ரீ ஜெயதுர்க்கை,ஶ்ரீ ஆசூரி துர்க்கை, ஶ்ரீ மூலதுர்க்கை, ஶ்ரீ வன துர்க்கை, ஶ்ரீ சூலினி துர்க்கை, ஶ்ரீஜாதவேதா துர்க்கை. ஆகியோர் நவதுர்க்கைகள்.

முதல் நாளில் 2 வயதுக் குழந்தை – குமாரி அதாவது ஷைலபுத்ரி யாகவும்,
இரண்டாம் நாள் 3 வயதுக் குழந்தை – திரிமூர்த்தி அதாவது பிரம்மசாரிணி யாகவும்,
மூன்றாம் நாள் – 4 வயதுக் குழந்தை – கல்யாணி  அதாவது சந்தரகாந்தா ஆகவும்,
நான்காம் நாள் – 5வயதுக் குழந்தை – ரோகிணி  அதாவது  கூஷ்மாண்டா ஆகவும்,
ஐந்தாம் நாள் – 6 வயதுக் குழந்தை – காளிகா  அதாவது  ஸ்கந்த மாதா ஆகவும்,
ஆறாம் நாள் – 7 வயதுக் குழந்தை – சண்டிகா  அதாவது காத்யாயனி  ஆகவும்,
ஏழாம் நாள் – 8 வயதுக் குழந்தை – சாம்பவி  அதாவது  காலராத்ரி ஆகவும்,
எட்டாம் நாள் – 9 வயதுக் குழந்தை – துர்க்கா   அதாவது மஹா கௌரி ஆகவும்,
ஒன்பதாம் நாள் – 10 வயதுக் குழந்தை – சுபத்ரா  அதாவது  சித்திதாத்ரி ஆகவும்
கொண்டாடுகிறோம்.
 
அஷ்ட சரஸ்வதி: வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி ஒன்பது சக்திகள்: முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் சிறப்பாக உள்ளன.
 
துர்க்கை: 1. மகேசுவரி, 2. கெளமாரி , 3. வராகி. இலட்சுமி: 4. மகாலக்ஷ்மி 5. வைஷ்ணவி 6. இந்திராணி. 7. சரஸ்வதி
8. நாரசிம்மி , 9. சாமுண்டி.
 
நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும். நவராத்திரியில் கன்னி வழிபாடு என்பது ஒரு வகை. நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாக பாவனை செய்து வழிபடுவது ஒரு முறை.

 
ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும்.
 1வது படி – ஓரறிவு உயிரினம் (மரம், செடி, கொடி, மர பொம்மைகள்)
 2வது படி – இரண்டறிவு உயிரினம் (நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள்)
 3வது படி – மூன்றறிவு உயிரினம் (எறும்பு, கரையான் பொம்மைகள்)
 4வது படி – நான்கறிவு உயிரினம் (நண்டு, வண்டு, பறவை பொம்மைகள்)
 5வது படி – ஐந்தறிவு உயிரினம் (ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள்)
 6வது படி – ஆறறிவு உயிரினம் (மனித பொம்மைகள்)
 7வது படி – மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள்.
 8வது படி – தேவர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத தெய்வங்கள்.
 9வது படி – பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், விநாயகக் கடவுளர்.
 இம்முறைப்படி கொலு வைத்து, முப்பெரும் தேவியரை வணங்கி வரும் போது கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் நம்மிடம் செழித்தோங்கும்.

நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது.  கன்னி ராசிக்கு அதிபதியானவன் புதன். வித்யாகாரகன் எனப்படுபவன். கல்வி, புத்தி, தொழில் ஸ்தானம் சரியாக அமைய புதனின் பார்வை முக்கியமானது என்பார். இந்தக் காலத்தில் நவராத்திரி கொண்டாடுவது சாலச்சிறந்தது என்று கருதி வந்துள்ளனர்.
 
நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பதுதான் அர்த்தம். உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம். பராசக்தியே சர்வ வல்லமை படைத்தவர் ஆவார். அந்த அம்பிகையின் மகிமைகளை ‘தேவி பாகவதம்’ விரிவாகப் பேசுகிறது.  நவம் என்றால் ஒன்பது என்று ஒரு பொருள் உண்டு. நவம் என்றால் புதிய, புதுமை, என்றொரு பொருளும் உண்டு! சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கும் புரட்டாசி மாதம் வளர் பிறை பிரதமை முதல் 9 நாள் நவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.

இதில் முதல் 3 நாள் துர்க்கை அன்னையையும், அடுத்த மூன்று நாள் திருமகளையும், அதற்கு அடுத்த மூன்று நாள் கலைமகளையும் வழிபடுவார்கள்.  துர்க்கை என்ற பெயருக்கு கோட்டை என்ற பொருளும், துன்பத்தை அழிப்பவள் என்ற பொருளும் உண்டு. இந்தப் பெயரைச் சொன்னாலே மனிதன் தன்னைத் துன்பங்களை அணுக விடாமல் காத்துக்கொள்ள முடியும். அத்துடன் தீய சக்திகள் மற்றும் தீய எண்ணங்களையும் அழித்தால்தான் உலகில் நல்லவை நிலைபெறும். அதனால்தான் மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் பல தீயவற்றை அழித்து நல்லவற்றை நிலை நிறுத்தி வெற்றி பெற உதவும் அன்னையை முதல் மூன்று நாள் வழிபடுகிறோம்.

அடுத்த மூன்று நாள் செல்வ வளத்தை அளிக்கும் திருமகளை வழிபடுகிறோம். மனிதன் வாழ்வில் சிறப்பான நிலையை அடைய உதவுவது செல்வம்.  அடுத்த மூன்று நாள் கல்விச் செல்வத்தை அளிக்கும் கலைமகளுக்கு உரியவை. காலத்தால் அழியாத செல்வம் கல்வி. இந்தச் செல்வம் வேண்டி கலைமகளைத் துதிக்கிறோம். நவம் என்றால் புதிய என்று பார்த்தோம். துன்பங்கள் தீர்ந்து, பொருள் வளம், கல்வி வளம் இரண்டும் பெற்றால் மனிதனுக்கு வாழ்க்கை தினம் புதியதுதான்!

அதுமட்டுமல்ல; இந்த மூன்றும் சேர்ந்தால் வெற்றிதான் என்பதைக் குறிக்கும் விதமாக பத்தாம் நாள் விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது. துன்பத்தை அழித்து நன்மையை நிலைநாட்டி, பொருள் செல்வம் மற்றும் அறிவுச் செல்வம் பெற உதவும் மூவரையும் நவராத்திரியில் முறைப்படி துதிப்போம். வளம் பெறுவோம்! வெற்றி பெறுவோம்!
 
ஒரு மனிதனிற்கு உடல்வலிமை, பராக்கிரம், மனோதிடம், புத்திபலம், தீர்க்காயுள், ஞானம, தேவைகளிற்கு பணம் போன்ற அனைத்து அம்சமும் நிறைந்திருந்தால் தான் அவன் சிறந்த வெற்றியாளனாக திகழ முடியும். அதாவது வீரம், செல்வம், கல்வி ஆகியவை அனைத்தும் நிறைந்திருக்க வேண்டும். இவற்றை பெறுவதற்காகவே நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வாழ்க்கையில் நமக்கு செல்வம் ,வீரம் ,ஞானம் மூன்றும் இருந்தால்தான் நாம் வெற்றி பெற முடியும்.  இதற்காக மகாலட்சுமி தேவியை,  துர்க்கா தேவியை வழிபடுகிறோம்.   சரசுவதிதேவியை வணங்குகிறோம்.

——————————————————————————————————————————————————————————————
 நவராத்திரி விழா காணும் ஆலயங்கள் :-

ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோயில், திருவானைக்காவல் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனாய ஐம்புகேஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில்,நாகை நீலாயதாட்சி கோயில், கன்யாகுமரி ஸ்ரீ பகவதி அம்மன் கோயில், புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயில்,திருவண்ணாமலை ஸ்ரீ உண்ணாமுலை உடனாய அண்ணாமலையார் கோயில், நெல்லை ஸ்ரீ காந்திமதி அம்மன் கோயில், திருவேற்காடு ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோயில்,மாங்காடு அம்மன் ஆலயம்,சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ கற்பகாம்பாள் கோயில்,காளிகாம்பாள் கோயில்,திருவையாறு அறம் வளர்த்த நாயகி கோயில்,திருமெய்யம் ஸ்ரீ வேணுவனேஸ்வரி அம்பாள் கோயில்,சமயபுரம், பண்ணாரி,பொள்ளாச்சி,திண்டுக்கல்,தஞ்சை,திருச்சி மாரியம்மன் கோயில்கள்,படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் கோயில்,மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில்,மேல் மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயில்,காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் கோயில், திருக்கடையூர் அபிராமி கோயில்  ஆகிய  ஆலயங்களில் நவராத்திரி விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடுவார்கள்

அம்பத்தூரை அடுத்த வட திருமுல்லை வாயிலில் வைஷ்ணவி ஆலயத்தில் ஒன்பது நாளும் ஒவ்வொரு அலங்காரம் செய்து  வைஷ்ணவியை வழிபடுவார்கள். மிகவும் விசேஷமாக  இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படும்

படத்திற்கு நன்றி :

http://www.desicomments.com/desi/kali-puja/

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *