தமிழ்த்தேனீ

இன்னிக்கு வைகுண்ட ஏகாதசி, நாங்க எல்லாரும் கோயிலுக்குப் போயி சொர்க்கவாசல் திறந்தவுடனே சுவாமியை நமஸ்காரம் செஞ்சிட்டு வரோம். வீட்டிலேயே இருங்க, கதவைத் தாப்பாள் போட்டுக்குங்க, போயிட்டு வந்துடறோம் என்றபடி கிளம்பினர் வீட்டிலுள்ள அனைவரும்.

பெரியவர் ராமசாமிக்கு 88 வயசு காது கேக்கலை, கண்ணும் சரியாத் தெரியலை அவஸ்தைப் படறாரு. காலாகாலத்திலே மனுஷன் சீக்கிரமா போய்ச் சேர்ந்தா நல்லா இருக்கும் பாவம் என்று அங்கலாய்த்தாள் பக்கத்து வீட்டு பர்வதம்.

அவருக்கு சொர்க்க வாசலை அடையும் நேரம் வந்து விட்டது. இவர்களுக்கு தெரியவில்லை என்று எண்ணமிட்டார் பெரியவர் ராமசாமி. அனுதாபச் சொற்கள் காதிலே விழவில்லை. அவர் மனம் பரபரத்துக் கொண்டிருந்தது.

ஆயிற்று பொழுது விடிந்து ஆறு மணி ஆகிவிட்டது. திறந்திருப்பான் சொர்க்க வாசலை. கிளம்ப வேண்டியதுதான். நேத்து இராத்திரிலேருந்து தூக்கமே வரலை. புரண்டு புரண்டு படுத்து எப்போ விடியும்ன்னு காத்திட்டே இருந்து ஒவ்வொரு நிமிஷமும் ஒரு யுகமாகக் கழிச்சு தூங்காமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறார் .

இன்னும் நுண்ணிய உணர்வு ஒட்டிக் கொண்டிருக்கிறதே, அதை வைத்து ஒரு துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு சந்தடி இல்லாத நேரமாய்ப் பார்த்து கிளம்பினார். தட்டுத் தடுமாறி மாடிப்படியில் இறங்கி வாயிலைக் கடந்து தெருவில் இறங்கி ஓரமாகவே நடந்து போய் அவருடைய சொர்க்கவாசலில் நின்றார்.

அவருடைய சொர்க்க வாசல் திறந்திருப்பானா? சரியாக நேற்று ராத்திரி படுக்கப் போகும்போது கடைசீ துளியும் தீர்ந்து விட்டது.இன்னிக்கு விட்டா ஒரு நாள் வீணாயிடுமே, இதயம் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது .நல்ல வேளை! ஆஹா திறந்திருக்கிறது. எதிரே போய் நின்று கையை நீட்டினார்.

ஐயா வாங்க வாங்க காணுமேன்னு பாத்துகிட்டே இருக்கேன் இந்தாங்க கட்டி வெச்சிருக்கேன் என்றபடி கடைக்காரர் ராயர் நீட்டிய பொட்டலத்தை வாங்கி பிரித்து ஒரு சிட்டிகை மூக்குப் பொடியை கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே எடுத்து அப்படியே உல்லாசமாய் காற்றில் இரண்டு முறை உதறி ஆனந்தமாக மூக்கில் வைத்து உறிஞ்சிவிட்டு கையை துண்டால் துடைத்தார்.

அந்தப் பொடி கொடுத்த கிறக்கத்திலும் தள்ளாடாமல் மீண்டும் நிதானமாக ஒரு குத்து மதிப்பாக நடந்து வீட்டிற்கு வந்து மாடிப்படி ஏறி அவர் படுக்கையில் உட்கார்ந்து மிக கவனத்துடன் அந்த மூக்குப் பொடி பொட்டலத்தை பிரித்து, எப்போதும் பத்திரமாக வைத்திருக்கும் ஹார்மோனியப் பொட்டி போல் திறந்து மூடுகின்ற மாட்டுக் கொம்பினால் ஆன, அந்தச் சின்னப் பெட்டியில், சிந்தாமல் சிதறாமல் போட்டு அதைப் பத்திரமாக மூடி தலைகாணிக்கு அடியில் வைத்துவிட்டு நிமிர்ந்தார்.

அவரையே குற்றப் பார்வையுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் மருமகள் மீனாக்ஷி. அந்தப் பார்வைக்கு பொருள் அவருக்கு தெரியும். “எத்தனை தடவை சொல்றது, ஏதாவது வேணும்னா எங்க கிட்ட சொல்லுங்களேன் நீங்க எங்கேயாவது போயி விழுந்து வெச்சா யாரு அவஸ்தைப் படறது, சொன்னா ஏன் கேக்க மாட்டேங்கறீங்க”, என்றாள் அவள்.

அதற்கு பதில் சொல்லாமல் ஒரு அசட்டுச் சிரிப்புடன் தலைகாணியில் தலை வைத்து நிம்மதியாகத் தூங்கத் தொடங்கினார் ராமசாமி. குறட்டை எட்டு ஊருக்கு கேட்கத் தொடங்கியது.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சொர்க்க வாசல்

  1. ‘இன்னும் நுண்ணிய உணர்வு ஒட்டிக் கொண்டிருக்கிறதே’ அது இங்கும் செல்லும் ஸ்னஃப் நாடி, அங்கும் செல்லும் ஸ்வர்க்கம் நாடி. அந்த அசட்டுச்சிரிப்பு பொது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *