பர்வத வர்தினி

ஒரு சில நிமிடங்களிலேயே கால இயந்திரம் அமைதியடைந்தது போல் தோன்றியது. மெல்ல கண்களைத் திறந்து பார்த்தாள் சாரு. கிருஷ்ணசாமி அவளைக் கண்டு “நாம வந்து சேர்ந்துட்டோம் சாரு” என்றார். பிறகு கதவைத் திறக்க ஒரு பொத்தானை அழுத்தினார். கதவு சத்தமின்றி மெல்லத் திறந்தது. இருவரும் கால இயந்திரத்தை விட்டு இறங்கினார்கள். அவர்கள் இருந்த இடத்தை சுற்று முற்றும் பார்த்தார்கள். அது இரவு நேரம். வானில் வெண்ணிலா பால்மழை பொழிந்து கொண்டிருந்தது. அந்த இடம் நிறைய மரம் செடிகளுடன் ஏதோ காடு போல் தோன்றியது. 

சாரு மெல்ல நடக்கத் துவங்கினாள். கிருஷ்ணசாமி அவளிடம் சற்று பொறுமையுடன் இருக்கும்படி கூறிவிட்டு அந்த இடத்தை ஆராயத் துவங்கினார். அவர் ஏதோ தேடுவது போல் தோன்றியது. சற்று நேரத் தேடுதலுக்குப் பிறகு அவர் சாருவை அழைத்தார். “இங்கே பாரு சாரு” என்று ஓரிடத்தைக் காண்பித்தார். அங்கே செடிகளும் புதர்களும் மிகவும் அடர்த்தியாக இருந்தன. “நம்மோட கால இயந்திரத்தை இந்த இடத்திலே மறைச்சு வெச்சுட்டு கிளம்புவோம்” என்றார். பிறகு மெல்ல கால இயந்திரத்தை புதர்களுக்கு நடுவில் மறைத்து வைத்தார். 

“நாம போயிட்டு சீக்கிரம் வந்துடணும். நாம சரியான காலத்துக்கும் இடத்துக்கும் வந்திருக்கோமான்னு பார்த்துட்டு,நீ தெரிஞ்சிக்க விரும்பினதையும் தெரிஞ்சிக்கிட்டு கூடிய சீக்கிரம் வரணும். இது யார் கண்ணிலேயும் பட்டுடக்கூடாது” என்று கூறினார் கிருஷ்ணசாமி. 

“நிச்சயமா அங்கிள்! இப்போ நாம போகலாம்” என்றாள் சாரு. 

அவர்கள் இருவரும் அந்தக் காட்டில் வழி தேடி நடந்து சென்றார்கள். 

சற்று தூரம் சென்ற போது காட்டில் ஏதோ வினோதமான சத்தம் கேட்டது. மிகவும் எச்சரிக்கையாக இருவரும் தொடர்ந்து முன்னேறினார்கள். சற்று தொலைவில் மங்கலான வெளிச்சத்தில் மிகவும் வியப்பிற்குரிய காட்சி தெரிந்தது. அங்கே மரங்களின் ஓரத்தில் ஒரு கோட்டை மதில் சுவரும் அதன் மீதிருந்து இறங்க யத்தனிக்கும் ஒரு வாலிபனும் தெரிந்தார்கள். அவனது கையில் ஒரு வாள் இருந்தது. அவனது உடை பழங்கால வீரர்களின் உடையைப் போன்று தோன்றியது. கீழே ஒரு நாய் ஓயாமல் குரைத்துக் கொண்டிருந்தது, அருகில் ஒருவன் சிரித்துக் கொண்டிருந்தான். எதற்கும் முன் ஜாக்கிரதையாக இருவரும் மெல்ல நடந்து சென்று ஒரு மரத்தின் பின் மறைந்து கொண்டார்கள். கீழேயிருந்தவன் மேலிருந்தவனோடு ஏதோ பேசினான். பிறகு மேலிருந்தவன் கீழிருந்தவன் மீதே குதித்தான். இருவரும் சண்டையிட்டனர். இடையில் தடிமனான மற்றொருவன் ஒரு மரத்தின் பின்னிருந்து வந்து நாயின் மீது ஒரு கயிற்றையிட்டு மரத்தில் கட்டினான். பிறகு மேலிருந்து குதித்தவனுக்கு உதவியாக கீழே நின்றிருந்தவனோடு சண்டையிட்டான். கீழேயிருந்தவன் மயங்கி விழுந்தான். 

இவையெல்லாம் ஏதோ ஊமைப்படம் போலே சாருவுக்கும் கிருஷ்ணசாமிக்கும் தெரிந்தது. அவர்கள் பேசியது ஏதும் காதில் விழவில்லை. ஆனால் நடந்த நிகழ்வுகளைக் கொண்டு சாரு மேலிருந்து குதித்தவன் வந்தியத்தேவன் என்றும் உதவி செய்த  குண்டு மனிதன் ஆழ்வார்க்கடியான் என்றும் நாயுடன் வந்து சண்டையிட்டவன் தேவராளன் என்றும் தெரிந்துகொண்டாள். அவளுக்கு உற்சாகம் கரைபுரண்டோடியது. அதை வெளியில் சொல்ல வாயெடுத்தவளை கிருஷ்ணசாமி தடுத்து தாழ்ந்த குரலில் கூறும்படி சைகை செய்தார். அவளும் இவர்கள் யாராக இருக்கக்கூடும் என்று கிருஷ்ணசாமிக்குக் கூறினாள். “நாம சரியான இடத்துக்கு சரியான காலத்திற்கு வந்துட்டோம்” என்று அவரும் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார். 

“நீ வந்தியத்தேவனைத் தானே பார்க்கணும்னு சொன்னே? இப்போதான் பார்த்தாச்சே? நாம போகலாமா?” என்று கேட்டார். 

“அங்கிள் ப்ளீஸ்… இவ்வளோ தூரம் வந்துட்டோம். அவர்கிட்ட கொஞ்சம் பேசிட்டு போகலாமே. அதோட ஆதித்தகரிகாலனைக் கொன்னது யாருன்னும் தெரிஞ்சிக்கலாம்னு ஆசைப்பட்டேன்” என்றாள் கெஞ்சும் பாவனையில். 

“சரி சாரு. ஆனா ஒரு விஷயம் நினைவுல வெச்சுக்க. நாம கடந்த காலத்துக்கு வந்திருக்கோம். நம்முடைய செயல் எதுவும் வரலாற்றை பாதிக்காதபடி பார்த்துக்கணும்.  இல்லைன்னா அதன் பின்விளைவுகள் ரொம்ப பயங்கரமா போயிடும். ஜாக்கிரதையா நடந்துக்கோ. அதேபோல இந்த காலத்துல வாழற இவங்களுக்கு தன்னுடைய எதிர்காலம் பத்தி முழுமையா தெரியக்கூடாது. அதுவும் பிரச்சினையா ஆகிடும். ஜோசியர்கள் சொல்ற மாதிரி பட்டும் படாமயும் தெரிஞ்சா பரவாயில்லை. ஆனா முழுசா தெரியக்கூடாது. இதெல்லாம் நீ மறக்கவே கூடாது. புரிஞ்சுதா? இனி நாம தொடர்ந்து போகலாம் வா” என்று கூறிவிட்டு கிருஷ்ணசாமி முன்னேறினார். 

மயங்கியிருந்த தேவராளனைத் தாண்டி வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் சென்றனர். அவர்களுக்கு பின் சிறிது இடைவெளி விட்டு சாருவும் கிருஷ்ணசாமியும் தொடர்ந்தார்கள். வனாந்தரத்தின் இருள் கரியதாக இருந்தாலும் நிலவு போதிய வெளிச்சத்தைத் தந்திருந்தது. சற்று தூரம் சென்றதும் சட்டென்று வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் கண்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் எங்கே சென்றிருப்பார்கள் என்று தேடியபடியே சாருவும் கிருஷ்ணசாமியும் சுற்றும் முற்றும் பார்த்தார்கள். அப்போது சடாரென பக்கத்திலிருந்த பெரிய மரத்தின் பின்புறமிருந்து வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் இவர்களை சூழ்ந்து கொண்டனர். 

“யார் நீங்கள்? எதற்காக எங்களைத் தொடர்ந்து வருகிறீர்கள்?” என வந்தியத்தேவன் கோபத்துடன் கேட்டான். 

வந்தியத்தேவனையும் ஆழ்வார்க்கடியானையும் அத்தனை அருகில் பார்த்து சாருவும் கிருஷ்ணசாமியும் பேசத் திராணியற்று பிரமிப்புடன் நின்றனர். அந்த நேரத்தில் தான் வந்தியனும் நம்பியும் அவர்களை ஆராய்ந்தார்கள். சுடிதார் அணிந்திருந்த சாருவும் பேண்ட் சட்டை சகிதம் இருந்த கிருஷ்ணசாமியும் அவர்களுக்கு விந்தையாகத் தோன்றியதில் ஆச்சரியம் ஏதும் இருக்க முடியாதல்லவா? வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானை பார்த்து, “வீர வைஷ்ணவரே, இவர்களைப் பாரும்! இவர்கள் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் போன்று தெரியவில்லையே. ஏதோ அயல்தேசத்திலிருந்து வந்திருப்பார்கள் போலும். அயல் நாட்டவர் இங்கெ எப்படி ஊடுருவியிருக்க முடியும்? மேலும் இவர்களுக்கு நாம் பேசுவது விளங்குமோ என்னமோ தெரியவில்லை. நான் கேள்வி கேட்டும் இவர்கள் திருதிருவென முழிக்கிறார்களே! நாம் அவசரமாக செல்லும் இவ்வேளையில் இவர்களை என்ன செய்வது?” என்று கேட்டான். 

ஆழ்வார்க்கடியானும் “சற்று பொறு தம்பி! ஏதேனும் கேட்டுப் பார்ப்போம். அல்லது சைகையினாலே கேட்போம்” என்றான். 

“சரியாகச் சொன்னீர்கள் வைஷ்ணவரே! ஆனால் எனக்கு சைகை மொழியெல்லாம் தெரியாது. நீங்களே முயன்று பாருங்கள்” என்று கூறினான் வந்தியத்தேவன். 

இவர்களது சம்பாஷணையின்போதே தனது ஆச்சரியம் நீங்கப் பெற்ற சாரு மெலிதாக புன்னகைத்தாள். 

“நாங்கள் அயல் தேசத்தை சேர்ந்தவர்கள் இல்லை. நாங்களும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான்” என்று தன்னால் இயன்ற அளவிற்குத் தூய தமிழில் பேசினாள் சாரு. 

“நல்ல வேளை! நீங்கள் தமிழில் பேசி நாங்கள் சைகை புரிய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் நீங்கள் யார் என்று இன்னும் கூறவில்லையே. இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்கிறீர்கள், ஆனால் உங்கள் நடை,உடை, பாவனை அனைத்தும் மிகவும் வேறுபட்டு உள்ளதே” என்றான் வந்தியத்தேவன். 

“என் பேரு கிருஷ்ணசாமி, இவ பேரு சாருலதா. நாங்க உங்களையெல்லாம் பாக்கலாம்னு தான் எதிர்காலத்துலேர்ந்து வர்றோம்” என்றார் கிருஷ்ணசாமி. 

வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் ஒருவரை  ஒருவர் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டனர். வந்திருந்த இருவரையும் சந்தேகக்கண்ணுடன் நோக்கி “என்ன எதிர்காலத்திலிருந்து வருகிறீர்களா? நீங்கள் என்ன மாயாவிகளா? இது எப்படி சாத்தியம்? மேலும் செந்தமிழ் ஏன் உங்கள் நாவில் இப்படி அவஸ்தைக்குள்ளாகிறது?”என்று கேள்விகளை அடுக்கினான் ஆழ்வார்க்கடியான். 

“சார், இதைப் பத்தி விரிவா சொல்றது கஷ்டம். ஆனால் ஒரு இயந்திரத்தை உருவாக்கி 1043 வருஷங்கள் தாண்டி உங்களைப் பாக்க வந்திருக்கோம். அதுலேயும் சாருவுக்கு வந்தியத்தேவரைப் பாக்க அவ்வளோ ஆசை. அதனாலே தான் வந்தோம்” என்று பதில் கூறினார் கிருஷ்ணசாமி. “உங்களோட சில தினங்கள் இருந்துட்டு போகலாம்னு எங்க விருப்பம்” என்றும் கூறினார். 

“சார் – அப்படியென்றால்?” என்று கேட்டான் ஆழ்வார்க்கடியான். சாரு முந்திக் கொண்டு “சார் என்றால் ஐயா என்று அர்த்தம்” என்றாள். “ஓ அப்படியா சேதி!” என்று வந்தியத்தேவனைப் பார்த்தான் ஆழ்வார்க்கடியான். 

வந்தியனோ சந்தோஷத்தில் திளைத்தான். பிறகென்ன 1000 ஆண்டுகள் கடந்தும் தன் புகழ் பரவியிருக்கிறதே!தன்னைப் பார்க்க ஒரு பெண் காலங்களைத் தாண்டி வந்திருக்கிறாள் என்றால் கேட்கவா வேண்டும்! பெருமையுடன் ஆழ்வார்க்கடியானைப் பார்த்தான். அவனுக்கோ அவன் பார்வையின் பொருள் விளங்கியது. “1000ஆண்டுகள் கழித்தும் வந்தியனின் புகழ் பரவியிருக்கிறதா என்ன?” என்றான் சந்தேகத்துடன். 

உடனே சாரு, “ஐயா! இவரது புகழ் மட்டுமல்ல. தங்கள் புகழும் பரவியிருக்கிறது. மேலும் இளவரசர் அருள்மொழிவர்மர், இளவரசர் ஆதித்தகரிகாலர், இளவரசி குந்தவைதேவியார் என அனைவரின் புகழும் பரவியிருக்கிறது. உங்களைப் பற்றியெல்லாம் நாங்கள் அறிந்துகொள்ள முக்கிய காரணமாயிருந்தவர் திரு. கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள். உங்களையெல்லாம் நாங்கள் அறியும் வண்ணம் அற்புத காவியம் படைத்திருக்கிறார்” என்று கூறினாள். 

ஆழ்வார்க்கடியான், “அம்மா நீ சொல்வது எவ்வளவு தூரம் உண்மையோ எமக்குத் தெரியாது. ஆனால் நீ சொல்வதைக் கேட்டு எங்கள் மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. 

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று 

என்று வள்ளுவப் பெருமான் கூறியிருப்பதற்கிணங்க எங்கள் புகழ் நாங்கள் மறைந்த பின்பும் இருப்பதைக் காட்டிலும் வேறென்ன வேண்டும். கல்கி​யெனும் அந்தப் பெருந்த​கைக்கு நன்றிக் கடன்பட்டிருக்கி​றோம்” என்று கூறி ஆனந்தித்தார். 

சட்டென்று ஏதோ நினைவிற்கு வந்தவராக “உங்கள் இருவரையும் சந்தித்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. ஆனால் நாங்கள் இப்போது அவசர வேலையாகச் செல்கிறோம். எங்களுக்கு விடை கொடுங்கள்” என்றான். 

“ஆதித்தகரிகாலரை கடம்பூருக்கு வரவிடாமல் தடுக்கத்தானே போகிறீர்கள்?  நாங்களும் உங்களுடன் வருகிறோம்” என்றாள் சாரு. 

கிருஷ்ணசாமி உடனே “சாரு நாம இங்கே வந்திருக்கறது யாருக்கும் தெரியக்கூடாது. இவங்களை நீ பாக்கணும்னு சொன்னதாலே இவங்களை சந்திக்க அனுமதிச்சேன். மத்தபடி நாம இவங்களோட போறது சரியில்லை என்று இடைமறித்தார் கிருஷ்ணசாமி. 

சாருவின் முகம் வாட்டமடைந்தது. “அப்படின்னா அட்லீஸ்ட் நாம இங்கே எங்கேயாவது தங்கலாம் அங்கிள். நான் பாக்க வந்த விஷயம் என்னன்னு உங்களுக்குத்தான் தெரியுமே” என்றாள். 

வந்தியத்தேவன் அவர்களிடம் “உங்களை எங்களுடன் அழைத்துச் செல்வது இயலாத காரியம். வேறேதும் உதவி தேவையென்றால் கூறுங்கள். முடிந்ததை செய்கிறோம்” என்றான். 

“நாங்க சில நாளு தங்க ஏற்பாடு செஞ்சு தர முடியுமா?” என்று கிருஷ்ணசாமி கேட்டார். 

ஆழ்வார்க்கடியான் சற்று யோசித்து “எனக்குத் தெரிந்த ஒரு விவசாயி​கோட்டைக்கு வெளி​யே குடிசை அ​மைத்துக்​கொண்டு தன் பேத்தியுடன் வாழ்ந்து வருகிறார். நீங்கள் அவர்களுடன் சில காலம் தங்கியிருங்கள். உங்களுக்கு சம்மதமா?” என்று கேட்டான். 

இருவரும் அதற்கு சம்மதம் தெரிவிக்க​வே, நால்வரும் காட்​டை விட்டு மெல்ல​வெளி​யேறினர். சிறிது தூரத்தி​லே​யே ஏகாந்தமான ஓரிடத்தில் ஒரு குடி​சை அமைந்திருந்தது. நால்வரும் அங்​கே​ சென்றனர். ஆழ்வார்க்கடியான் மெல்ல கதவைத் தட்டினார். சில விநாடிகளில் குடி​சையின் கத​வைத் திறந்து கொண்டு ஒரு முதியவர் வெளி​யே வந்தார். ஆழ்வார்க்கடியா​னைக் கண்டதும் “திரும​லை நீங்களா? வாருங்கள் வாருங்கள்” என்று முகம் மலர வர​வேற்றார். 

அ​னைவரும்  உள்​ளே நு​ழைந்ததும் ஆழ்வார்க்கடியான்​”பொன்னும​லையா​னே! இவர்கள் இருவரும் நம் ஊ​ரைப் பார்க்க வெளி​தேசத்திலிருந்து வந்திருக்கிறார்கள். இவர்க​ளை சில நாட்கள் உனது விருந்தாளிகளாக வைத்திருக்க வேண்டும். மேலும் நம் தேசத்தின் மக்கள் உடுத்தும் உ​டைக​ளையும்​ கொடுத்து உதவ​வேண்டும். நான் அவசர காரியமாக சென்று கொண்டிருப்பதால் உன்னிடம் இந்தப் பொறுப்​பைத் தருகி​றேன். செய்வாயா?” என்று கேட்டான். 

“அதற்​கென்ன திரும​லை, நிச்சயம் ​செய்கி​றேன்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் பொன்னும​லையான் எனும் அந்த முதியவர். “உன் பேத்தி பூங்​கொடி எங்​கே?” என்று ஆழ்வார்க்கடியான் விசாரிக்கவும், “அவள் பின்புறம் வே​லை செய்து​கொண்டிருக்கிறாள். இ​தோ அ​ழைக்கி​றேன்” என்று​ சொல்லி “பூங்​கொடி பூங்​கொடி” என்று அ​ழைத்தார். 

பூங்​கொடி பின்புற கத​வைத் திறந்து கொண்டு வந்தாள். அவ​ளைப் பார்த்த மாத்திரத்தி​லே​யே சாருவிற்கு பிடித்துவிட்டது. பூங்​கொடி ஆழ்வார்க்கடியானுக்கு வணக்கம் செலுத்திவிட்டு புதிதாக வந்திருந்த மூவ​ரையும் பார்த்தாள். முக்கியமாக சாரு மற்றும் கிருஷ்ணசாமியின் உ​டைக​ளையும் வியப்புடன் பார்த்துக்​கொண்டிருந்தாள்.“என்ன பார்க்கிறாய் அம்மா? இவர்கள் நம் விருந்தாளிகள். சில காலம் நம்முட​னே இருப்பார்கள். இவர்களுக்கு வேண்டிய மாற்று​டைக்கும் உணவிற்கும் ஏற்பாடு செய்” என்றார் பொன்னும​லையான். 

ஆழ்வார்க்கடியான் கிருஷ்ணசாமியிடம் “நாங்கள் சென்று வருகி​றோம். விரைவிலே​யே தங்க​ளை திரும்பவும் சந்திக்கி​றேன்” என்று கூறி வி​டை ​பெற்றான். வந்தியத்​தேவனும் வணக்கம் கூறி விட்டு ​வெளி​யே ​சென்றான். 

ஏ​னோ சாருவிற்கு மிகுந்த வருத்தமாக இருந்தது. தான் வந்தது வந்தியத்​தேவனுடன் அளவளாவுவதற்கும் அவனது வீரப்பயணத்தில் பங்கு​கொண்டு மகிழ்ச்சிய​டையவும் அல்லவா? ஆனால் அதற்கு வாய்ப்பின்றி பிரிந்து ​செல்கிறானே என்று​ தோன்றியது. இருப்பினும் அவள் தனது நிலை​யையும் மறக்கவில்​லை. எதிர்காலத்​தை​சேர்ந்த நாம் கடந்த காலத்திற்கு வர முடிந்த​தே பெரிய விஷயம். இதற்கும் மேல் ஆ​சைப்படக்கூடாது என்று தன்​னைத் தா​னே சமாதானம் செய்து​கொண்டாள். 

அதற்குள் பூங்கொடி அவர்களுக்கு மாற்றுடைகளைக் கொண்டு வந்து கொடுத்தாள். இரவு உணவருந்தி விட்டு சாருவும் பூங்கொடியும் இரவெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள். சாரு வித்தியாசமான தமிழில் பேசுவதாக பூங்கொடிக்குத் தோன்றியது. நிறைய பேசிய போதும் தான் கால இயந்திரம் கொண்டு கடந்த காலத்திற்கு வந்ததை மட்டும் சாரு தெரிவிக்கவில்லை. 

பொன்னுமலையானும் கிருஷ்ணசாமியும் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசிக் கொண்டனர். பொன்னுமலையானுக்கு தன் விருந்தாளி பேசுவது சரிவர புரியவில்லை. இவர் வேறேதோ மொழியை கலந்து வேறு பேசுகிறார். அதனால் சீக்கிரமே ஓய்வெடுக்கச் சென்று விட்டார். 

மறுநாள் காலை பொன்னுமலையான் தன் வயலில் வேலை செய்ய கிளம்பினார். பூங்கொடி வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். சாரு அவளிடம் ஊரைச் சுற்றிப் பார்க்க தன்னை அழைத்துச் செல்லும்படி கேட்கவும் தன் வேலைகளை சீக்கிரம்முடித்துக் கொண்டு இருவரும் கிளம்பினார்கள். 

அழகிய தோட்டங்கள், வயல்வெளி, எங்கு பார்த்தாலும் பச்சைபசேல் என்று இருந்தது. விதவிதமான மலர்களும் பழங்களும் நிறைந்து அற்புதக் காட்சியாக இருந்தது. ஊருக்குள்சென்றால் சில மாட்டு வண்டிகள் காணப்பட்டன.சென்னையில் மிகுந்த போக்குவரத்து நெரிசலுக்கு இடையில் வளர்ந்திருந்த சாருவிற்கு இந்த இடம் சொர்க்கம் போல் தோன்றியது. ஊருக்கு நடுவில் ஒரு சிறிய சிவன் கோயிலும் வெளியில் ஒரு ஐயனார் கோயிலும் இருந்தன. தெருக்கள் சுத்தமாக காணப்பட்டன. ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் சாணமிட்டு மெழுகி கோலம் போட்டிருந்தனர். கோலத்தின் நடுவில் பூ வைத்து அழகுபடுத்தியிருந்தார்கள். 

மாலை வேளையில் கோயிலில் தேவாரப்பாடல் ஒலித்தது. ரம்மியமான இந்த சூழலைப் பற்றியே சாரு பூங்கொடியிடம் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தாள். சொர்க்கமயமான இந்த வாழ்வு சாருவிற்கு மிகவும் பிடித்துப் போனது. 

கிருஷ்ணசாமியோ தன் கால இயந்திரத்திற்கு ஏதும் ஆபத்து நேராதிருக்க அவ்வப்போது யாரும் பார்க்காத தருணத்தில் காட்டிற்கு சென்று பார்த்து விட்டு வந்தார். 

இப்படியாக இரண்டு நாட்கள் நகர்ந்தன. மறுநாள் காலை ஊரே உற்சாகத்தில் காணப்பட்டது. மக்கள் அனைவரும் தத்தம் வேலைகளை விட்டுவிட்டு எங்கோ விரைந்து கொண்டிருந்தனர். சாரு பூங்கொடியிடம் அது பற்றி கேட்கவும் “இன்றைக்கு சோழநாட்டின் நிகரில்லா வீரரும் நமது இளவரசருமாகிய வீரபாண்டியன் தலைகொண்ட ஆதித்தகரிகாலர் கடம்பூருக்கு விஜயம்செய்கிறார். அவரது  திருமண ஏற்பாடு நடக்குமென தெரிகிறது. அவரைக் காணத் தான் எல்லோரும் செல்கிறார்கள். நாமும் அங்கே செல்லலாம் சாரு” என்றாள். 

சாருவின் மனம் சட்டென தான் வந்த நோக்கத்தை நினைவுபடுத்தியது. ஆதித்தகரிகாலரின் ஆயுள் முடியும் தருணம் வரப்போகிறது.  அவரைக் கொலை செய்யப் போவது யாராக இருக்கும்? யாருடைய கரத்தின் வாள் அவரது உயிரை மாய்க்கப்போகிறது? இதை அறியத் தானே நாம் இங்கு வந்திருக்கிறோம். ஆனால் அதை அறிய கோட்டைக்கு வெளியில் இருந்து கொண்டு என்னசெய்வது? எப்படி கோட்டைக்குள் செல்வது? இளவரசர் வருவதால் கோட்டையில் பலத்த பாதுகாப்பு இருக்குமே என்று தீவிரமாக யோசித்தாள். 

பூங்கொடி, பொன்னுமலையான், சாரு மற்றும் கிருஷ்ணசாமி ஆகிய நால்வரும் மக்களுடன் மக்களாக காத்திருந்து இளவரசர் வருகையைக் கண்டனர். கட்டியக்காரன் வருவோரின் கீர்த்தியையும் பெயரையும் அறிவிக்கலானான். உயரமாக கம்பீரமாக தனது குதிரையை லாவகமாக செலுத்திக்கொண்டு ஆதித்தகரிகாலர் கடம்பூர் கோட்டை வாயிலை அடைந்தார். அவருடன் கூடவே வந்தியத்தேவன் மற்றுமொரு குதிரையில் வந்தான். அவர்களுக்குப் பின் மேலும் ஒருவர் வந்தார். கட்டியக்காரன் அவரை பார்த்திபேந்திர பல்லவன் என்று அறிமுகம் செய்தான். அவருக்குப் பின் படை வீரர்கள் வந்து சேர்ந்தார்கள். 

இளவரசருக்கு தடபுடலான வரவேற்பு அளிக்கப்பட்டது. இத்தனைக்கும் நடுவில் வந்தியத்தேவன் சாருவைக் கண்டுகொண்டு கண்களினாலே தெரியப்படுத்தினான். சாருவிற்கு பெருமகிழ்ச்சி ஏற்பட்டது. விழிபிதுங்கும் கூட்டத்திற்கு நடுவிலும் வந்தியத்தேவன் தன்னைக் கண்டது பேரானந்தமாக இருந்தது. 

இளவரசர் ஆதித்தகரிகாலர் உள்ளே சென்றதும் கோட்டைக்கதவுகள் தாளிடப்பட்டன. இனி தான் எப்படி உள்ளே செல்வது என்ற யோசனையுடனேயே பூங்கொடியின் வீட்டிற்கு திரும்பி சென்றாள் சாரு. 

அன்று மாலை கிருஷ்ணசாமி தனித்திருக்கும்போது தன் சந்தேகத்தைக் கேட்டாள் சாரு. “அங்கிள், இப்போ என்ன பண்றது? ஆதித்தகரிகாலருடைய கொலை நடக்கும் சமயம் நான் அங்கே இருந்தா தானே யாரு கொலை செய்தாங்கன்னு கண்டுபிடிக்கமுடியும்? அதுக்கு கோட்டைக்குள்ளே போகணும். எப்படி போறது? ஒண்ணுமே புரியலையே” என்றாள். 

கிருஷ்ணசாமியோ, “எனக்கென்னமோ நாம இப்போ திரும்பி போயிடலாம்னு தோணுது சாரு. வீணா வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாம்” என்று அவர் கூறிக்கொண்டிருக்கையிலேயே யாரோ வருவது போல் தோன்றியது. திரும்பிப் பார்த்தால், அங்கே ஆழ்வார்க்கடியான் வந்துகொண்டிருந்தான். “இதோ இவரிடமே கேட்போம்” என்று சாரு உற்சாகமடைந்தாள். 

“நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இருவரையும் கண்டு விடைபெறவே நான் வந்தேன். நான் இப்போது நெடுந்தூரம் செல்ல வேண்டியிருக்கிறது” என்றான் ஆழ்வார்க்கடியான். 

உடனே சாரு, “எங்களுக்கு நீங்கள் மற்றுமொரு உதவி செய்ய வேண்டும். நான் ஒரு முறை வந்தியத்தேவரை சந்திக்க வேண்டும். அதன் பின் நாங்கள் திரும்பவும் எங்களுடைய காலத்திற்கே சென்று விடுவோம். அவரோ கோட்டைக்குள் இருக்கிறார். தாங்கள் தான் உதவ வேண்டும்” என்று கெஞ்சும் பாவனையில் கேட்டுக்கொண்டாள். 

“அம்மா, இப்போது இளவரசர் கடம்பூருக்கு வந்திருக்கிறார். மேலும் அவரது உயிருக்கு ஆபத்து நேருமென நிமித்தங்கள் கூறுகின்றன. இந்நேரத்தில் நீ கோட்டைக்குள் செல்வது கடினம். அதிக அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடக்கின்றன” என்றான் அவன். 

“ஐயா, அதை அறிந்திருக்கிறேன். அதனாலேயே நான் வந்தியத்தேவரை சந்திக்க வேண்டியது அவசியமாகிறது. வந்தியத்தேவர் வீண் பழியில் மாட்டிக் கொள்ளும் அபாய நிலை ஏற்படக்கூடும். அதிலிருந்து அவரை காக்க விரும்புகிறேன். இதற்கு மேல் கூறுவதற்கு எனக்கு உரிமையில்லை. தயவு செய்து என் விருப்பத்தை நிறைவேற்ற உதவி செய்யுங்கள்” என்றாள். 

ஆழ்வார்க்கடியான் யோசித்தான். பிறகு “சரி. இன்னும் இரண்டு நாட்கள் கழித்து அரசாங்க வேலைக்காக பூங்கொடி கோட்டைக்குள் செல்ல வேண்டியுள்ளது. நான் அவளிடம் கூறி விடுகிறேன். அரசாங்க வேலைக்கான ஆணைப் பத்திரம் அவளிடம் உள்ளது. அதை நான் உனக்குப் பெற்றுத் தருகிறேன். அவளுக்கு பதில் நீ உள்ளே சென்று விடு. சாமர்த்தியமாக நடந்து கொள். ஜாக்கிரதை. பத்திரமாக நீ உன் காலத்திற்கு திரும்பி செல்ல வேண்டும், நினைவு கொள்!” என்று கூறினான். 

“ஐயா! இந்த உதவியை என் ஆயுள் உள்ளவரை நான் மறக்கமாட்டேன்” என்று சாரு கூறினாள். 

அவர்களிடம் விடை பெற்று கொண்டு ஆழ்வார்க்கடியான் புறப்பட்டான். போவதற்கு முன் தான் வாக்களித்தப்படி அரசாங்க ஆணைப்பத்திரத்தை சாருவிடம் சேர்ப்பித்தான். 

கிருஷ்ணசாமி சாருவிடம் “இதனாலே உனக்கு ஏதாவது ஆபத்து வருமோன்னு பயமா இருக்கும்மா” என்றார். 

“ஒண்ணு பண்ணலாம் அங்கிள். பூங்கொடி தன் தாத்தா பொன்னுமலையானோடதான் கோட்டைக்குள்ளே போறதா இருந்தது. நீங்க வேண்ணா அவருக்கு பதில் என் கூட கோட்டைக்குள்ளே வந்துடுங்க. நம்மோட காரியம் முடிஞ்சதும் சீக்கிரமே இங்கிருந்து கிளம்பிடலாம். சரியா?” என்று கேட்டாள். 

இந்த யோசனை கிருஷ்ணசாமிக்கும் பிடித்திருந்தது. அவர் அதற்கு சம்மதித்தார். 

(அடுத்து வரும்)

படங்களுக்கு நன்றி –

http://zaraahatke.blogspot.in/2008/02/ponniyin-selvan.html

பதிவாசிரியரைப் பற்றி

11 thoughts on “கால இயந்திரம்-(பாகம்-2)

  1. எனக்கும் ஆசை ஆசையாய் இருக்கிறது உங்களுடன் சேர்ந்து காலப் பயணம் செய்திருக்கலாமே என்று சாரு ..ஐ மீன் ..பர்வத வர்தினி.
    பொன்னியின் செல்வன் படித்திராதவர்களை அந்தப் புத்தகங்களை நோக்கி ஓட வைத்து விடுவீர்கள் போலிருக்கிறது.

  2. அன்பின் பர்வத வர்தினி,

    அழகான நடையில், அதீதமான கற்பனையில், அற்புதமான புனைவு! வாழ்த்துக்கள். தொடர்ந்து படிக்கும் ஆவலை ஏற்படுத்துகிறது.

    அன்புடன்
    பவள சங்கரி

  3. Madam Charu vardhini,

    Excellant to read.  I remember you telling me umpteen times about Ponniyin Selvan and still I was not that interested to read that novel.  But looks like your story will give a brief about PS and will make me anxious to read it.
    Exceptionally good attempt.  All the best for a fantastic end.

    Sridhar a Venkat

  4. அருமையான ஓட்டம் பர்வதா. எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் வரிசையில் சேர்ந்துவிட்டீர்கள். அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்று ஆவலோடு பகுதி முடித்திருக்கிறீர்கள். மிக அருமை.                                                                                மனோகரன் விசாகை

  5. just now finished reading the second part. Opened the book, and read that chapter one more time. (started from vandhiya devan jumping )…
    i would like to travel in this time machine. Take me also….(to Mr. Krishnamoorthy&Charu @ vardhini)

  6. kaala iyandhiram nam kaivarapetraal….idhu mattum unmaiyaanaal….!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    kadhaasiriyarukku kodaanu kodi nanrigalai therivikkirom…

  7. karpanai yendralum very interesting. Keep going. Eager to read
    the next part

    SRIDHARAN G , TRICHY

  8. பொன்னியின் செல்வன் படித்ததில்லை – அதனால் சாருவின் தேடலை ஈடுபாட்டோடு அனுபவிக்க முடியவில்லை. காலயந்திரத்தால் ஈர்க்கப்பட்டு வந்தேன்.  சுவாரசியமான தளம், நடை. தொடர வாழ்த்துக்கள்.

Leave a Reply to Venkat

Your email address will not be published. Required fields are marked *