பர்வத வர்தினி

இரண்டு நாட்கள் கழித்து பூங்கொடியின் அரசாங்க ஆணைப் பத்திரத்துடனும் பொன்னுமலையான் போன்று வேடமிட்டிருந்த கிருஷ்ணசாமியுடனும் சாரு கோட்டைக்குள் புகுந்தாள். ஆணைப் பத்திரத்தைக் கண்டவுடன் இவர்கள் உள்ளே செல்ல தடையேதுமின்றி அனுமதிக்கப்பட்டது. 

அது மாலைப்பொழுது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக மல்லிகை வாசம் நாசியைத் துளைத்தது. இருவரும் மிகவும் ஜாக்கிரதையாக சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சென்றனர். கடம்பூரின் அரண்மனையும் அதன் பின்புறம் தோட்டமும் மாலை சூரியனின் சிவந்த ஒளியில் அழகுற காட்சியளித்தது. 

சாரு கிருஷ்ணசாமியிடம் மெல்லிய குரலில் “நான் படிச்சிருந்தபடி இந்த இரவிலே தான் அந்த சம்பவம் நடக்கப் போகுது. அதுக்கு முன்னாடி வந்தியத்தேவர் அரண்மனை தோட்டத்துக்கு வருவார். அங்கிருந்துதான் மணிமேகலை அவரை சுரங்க வழிக்கு அழைச்சுக்கிட்டு போவா. அவர் மணிமேகலையை பார்க்கறதுக்கு முன்னாடி நான் அவரை சந்திக்கணும். ஸோ நாம கொஞ்சம் இருட்டினதும் அந்த மதில் சுவர் மேலே ஏறி அந்தப்பக்கம் அரண்மனைத் தோட்டத்துக்குள்ளே குதிச்சுடணும். சரியா?” என்று கேட்டாள். 

“மதில் சுவர் மேலே ஏறி குதிக்கறது என்ன சாமானிய காரியமா?” என்று கேட்டார் கிருஷ்ணசாமி. 

“அங்கிள், அங்கேப் பாருங்க! ஒரு பெரிய மரம் சுவருக்குப் பக்கத்திலே இருக்கு. இந்த இடமும் ஆள் நடமாட்டம் கம்மியா இருக்கு. கண்டிப்பா முடியும்” என்று ஊக்குவித்தாள். 

“சரி ஆகட்டும்” என்றார் அவர். 

சற்று நேரம் அவர்கள் கடைவீதியில் உலாவிவிட்டு இருட்டியதும் அதே இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அவ்விடமே அமைதியாக நிச்சலனமாக இருந்தது.சாரு அங்கிருந்த பெரிய மரத்தின் மீது ஏறத் துவங்கினாள். மரம் ஏறி பழக்கம் இல்லாததால் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. ஆனாலும் வந்தியத்தேவனைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் அவளை மேலும் மேலும் ஏறச் செய்தது. பின்னாலேயே கிருஷ்ணசாமியும் மூச்சிரைக்க மரம் ஏறிக் கொண்டிருந்தார். மரத்தினை முக்கால்வாசி ஏறியதும் மதில் சுவருக்கு தாவி சில அடிகள் நடந்து அந்தப்பக்கம் இருந்த மற்றுமொரு மரத்தைப் பிடித்துக் கொண்டு இறங்கினாள் சாரு. கிருஷ்ணசாமியும் இவளைத் தொடர்ந்து வந்திறங்கினார். 

பதுங்கி பதுங்கி சென்று தோட்டத்தில் தாமரைக்குளத்தை இருவரும் கண்டுகொண்டனர். அப்போது யாரோ தோட்டத்திற்குள் வரும் சப்தம் கேட்டு இருவரும் ஒளிந்து கொண்டனர். வந்தது வந்தியத்தேவன் என்று தெரிந்ததும் இருவரும் வெளியில் வந்தார்கள். அவர்களைக் கண்டு வந்தியனுக்கு மிகுந்த வியப்பு ஏற்பட்டது. “இங்கே எப்படி வந்தீர்கள்?” என்று கேட்டான். 

“ஆழ்வார்க்கடியானின் உதவியுடன் வந்தோம். உங்களைப் பார்க்கவே சிரமப்பட்டு வந்தோம்” என்றாள் சாரு. 

“எதற்கு? என்ன விஷயம்? ஆழ்வார்க்கடியான் ஏதேனும் சேதி சொல்லி அனுப்பினானா?” என்று கேட்டான் வந்தியத்தேவன். 

“அவர் சேதி ஒன்றும் அனுப்பவில்லை. நாங்கள் திரும்பி செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. உங்களிடம் விடை பெற்று செல்ல வந்தோம். அத்துடன் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்யவும் வந்தோம். இன்று,இளவரசருக்கு ஆபத்து காத்திருக்கிறது. நீங்கள் அவருடன் இருந்தாலும் அவரை உங்களால் காப்பாற்ற முடியாது. ஆகையால் நீங்கள் எங்காவது சென்று விடுங்கள். அவருடன் நீங்கள் இருந்தால் ஒரு பெரும் பழிக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதைத் தெரிவிக்கவே வந்தேன்” என்று கண்களில் நீர்மல்க கூறினாள் சாரு. 

வந்தியத்தேவனுக்கு இவளது அன்பைக் கண்டு மனம் கனிந்தது. சூதும் சூழ்ச்சியும் நிறைந்த இந்த உலகத்தில் அன்புடன் தனது பாதுகாப்பை எண்ணி பேராபத்துக்கிடையில் இவள் கோட்டைக்குள் புகுந்திருக்கிறாளே என்று வியப்பு ஏற்பட்டது. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்பது தெய்வப்புலவரின் வாக்கல்லவா! காலங்கள் தாண்டி என்னைத் தேடி வந்திருக்கிறாள் என்று எண்ணினான். 

“சாரு உன்னு​டைய அன்பு என்னை பேச முடியாதபடி கட்டிப்போடுகிறது. இருந்தாலும் நான் என் கடமையை செய்யக் கடமைப்பட்டவன். எத்தகைய நிலையிலும் இளவரசரைப் பிரிய மாட்டேன் என்று எனது உயிருக்கும் மேல் நான் போற்றும் இளவரசி குந்தவையிடம் வாக்களித்திருக்கிறேன். ஆபத்துக​ளை சமாளித்துக் கொள்​வேன்! நீ கவலைப்படாதே! நீ பத்திரமாக உன் காலத்திற்கு செல்” என்றான் வந்தியத்தேவன். 

கொஞ்ச தூரத்தில் மணிமேகலையின் குரல் கேட்கவே வந்தியத்தேவன் அவசரமாக “சாரு நீ சென்று விடு. மணிமேகலை வருகிறாள். அவள் உங்கள் இருவரையும் பார்த்து விட்டால் குழப்பம் தான் அதிகரிக்கும்” என்றான். 

சூழ்நிலையை புரிந்து கொண்டு சாருவும் கிருஷ்ணசாமியும் அவசரமாக அகன்று சென்றனர். 

தோட்டத்தின் மறுபகுதிக்கு வந்தபின் சாரு நின்றாள். சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தாள். வந்தியத்தேவரை பின் தொடர்ந்து சென்றால் வேட்டைமண்டபத்தை அடையலாம். ஆனால் அங்கே சதிகாரர்களிடம் தானும் அகப்பட்டுக்கொள்ள நேரிடும். வேறெப்படி அந்தப்புரத்திற்குள், நந்தினியின் அறைக்குள் நுழைவது? அங்கு தான்ஆதித்தகரிகாலரின் மரணம் ஏற்படும் என்று படித்திருக்கிறோமே! 

தீவிரமாக யோசித்ததில் அவளுக்கு ஒரு யுக்தி தோன்றியது. 

“அங்கிள், எனக்கு ஒரு ஐடியா!” 

“என்ன சாரு? சொல்லு” என்றார் கிருஷ்ணசாமி. 

“என்னுடைய கணிப்பின்படி மேல்மாடத்துலே ஒரு துவாரத்தின் வழியா காபாலிக உருவத்துல பெரிய பழுவேட்lடரையர் நந்தினியைப் பார்க்கப் போவாரு. நான் ஒளிஞ்சிருந்து அவர் போகும் போது அவருக்குப் பின்னாலேயே போனேன்னா கொலை நடக்கபோற இடத்துக்கு ஈஸியா போய்டலாம்னு நினைக்கிறேன். ஆனா நீங்க இங்கேயே எனக்காக காத்திருக்கணும். நான் போய்ட்டு திரும்பினதும் நாம கால இயந்திரத்துலே கிளம்பிடலாம். ஒருவேளை நான் வர லேட்டானா, நீங்க கிளம்பிடுங்க. ஏன்னா அதுக்கும் மேல இங்கிருந்தா உங்களுக்கும் ஆபத்தா முடிஞ்சிடும்” என்றாள் சாரு. 

“இதெல்லாம் தேவையில்லாத விஷப் பரீட்சைம்மா. நாம இப்போவே கிளம்பலாம்னு நினைக்கறேன்.” 

“வந்த காரியத்தை அரைகுறையா விட்டுட்டு வர மனசில்லே  அங்கிள். ப்ளீஸ் இது தான் கடைசி முறை” என்றாள் கெஞ்சலாக. 

“சரி. ஆனா உன்னை நான் பத்திரமா கூட்டிட்டு போகாம தனியா திரும்பி போக மாட்டேன். நீ சொன்னபடி உனக்காக இங்கேயே காத்திருக்கேன்” என்றார். 

“நான் போய் தயாரா ஒளிஞ்சிக்கறேன் அங்கிள். நீங்களும் பத்திரமா இருங்க” என்று சொல்லி விட்டு சாரு மெல்ல நடந்து மேல்மாடத்திற்கு போகும் வழியைக் கண்டுபிடித்து சென்றாள். மேல் மாடத்தில் ஒரு பெரிய தூணின் பிரம்மாண்ட நிழலில் மறைந்துகொண்டாள். காபாலிகரின் வருகைக்காக காத்திருக்கலானாள். 

நேரம் கடந்துகொண்டே இருந்தது. காபாலிகர் வரும் வழியாகத் தெரியவில்லை. ஒருவேளை வேறேதேனும் வழியில் போயிருப்பாரோ என்று அவள் மனம் யோசிக்கத் துவங்கியபோது அங்கே ஆஜானுபாகுவான உடல்கட்டுடன் கழுத்தில் ஒரு மண்டை ஓட்டு மாலையுடன் காபாலிகர் ஒருவர் யாருக்கும் தெரியாதபடி மறைந்து மறைந்து வந்தார். சற்று தூரம் சென்று தரையில் ஓரிடத்தில் அமர்ந்து ஏதோ நெம்புவது போல் செய்யவும் கீழே ஒரு துவாரம் தோன்றியது. அது தான் களஞ்சிய அறைக்குச் செல்லும் வழியென சாரு புரிந்து கொண்டாள். அவர் உள்ளே சென்றதும் அவரைத் தொடரலாம் என்று எண்ணி எழுந்தவளுக்கு அதிர்ச்சி. அவருக்குப் பின்னே மற்றுமொரு மனிதன் அவர் சென்ற வழியிலேயே சென்று அதே துவாரத்திற்குள் இறங்கியதைக் கண்டாள். இவன் யார்? எதற்குப் பழுவேட்டரையரை பின்தொடர்கிறான்? என்று யோசித்தபடியே அவனை சாரு பின்தொடர்ந்தாள். 

திறந்திருந்த துவாரத்தின் வழியே மெல்ல எட்டிப் பார்த்தபோது உள்ளிருந்த தீபத்தின் மங்கலான ஒளியில் அந்த சிறிய களஞ்சிய அறை கண்ணுக்குப் புலனாகியது. அங்கே ஒருவரும் இருக்கவில்லை. எனவே அவளும் அந்த துவாரத்தின் வழியாக நுழைந்து கீழே இறங்கினாள். அவள் இறங்கவும் பக்கத்து அறையில் தடதட என சப்தம் கேட்டது. தன் மூச்சைப் பிடித்துக்கொண்டு அவள் கண்ட காட்சி அவளுக்கு மிகுந்த பயத்தை அளித்தது. தவறியும் தான் அலறிவிடக்கூடாது என்று தன் கைகளால் தன் வாயைப் பொத்திக்கொண்டாள். களஞ்சிய அறையின் வாயிலில் வந்தியத்தேவன் மயங்கிக் கிடந்தான். நந்தினி பழுவேட்டரையரைக் கண்ட பயத்தில் நிலைகுலைந்து நின்றிருந்தாள். வேட்டை மண்டபத்திலிருந்து வெளிப்பட்ட ரவிதாசனும் அவனது ஆட்களும் பழுவேட்டரையரைத் தாக்கி நினைவிழக்கச் செய்தனர். 

காபாலிக உருவத்தில் வந்த பழுவேட்டரையரின் கரத்தில் இருந்த ஒரு திருகுகத்தியைக் கொண்டு அவரைத் தொடர்ந்து வந்த மனிதன் ஆதித்தகரிகாலனை கொன்றிருந்தான். “கடைசியில் எனக்கே அந்த வாய்ப்பு கிடைத்தது. இடும்பன்காரியின் கையினால் உனக்கு மரணம் என எமதர்மன் விதித்திருக்கிறான், பார்த்தாயா? ஹாஹாஹாஹா” என்று கொக்கரித்தான் அவன். இனியும் இங்கு நிற்பது ஆபத்து என்று ரவிதாசன் அனைவரையும் கிளம்புமாறு ஆணையிட்டான். நந்தினியின் வேண்டுகோளின்படி பழுவேட்டரையரையும் அவர்கள் தூக்கிச் சென்றனர். அனைவரும் சுரங்கவழியே தப்பிச் சென்றனர். அடுத்த சில விநாடிகளில் அந்த அறையில் இறந்து போன இளவரசரையும் மயங்கிக் கிடந்த வந்தியத்தேவனையும் தவிர யாரும் இல்லை. 

சாருவின் மனம் பதைபதைத்தது. இந்தக்கட்டத்​தை பொன்னியின் செல்வன் புத்தகத்தில் படிக்கும்போது ஏற்பட்ட துயரமே மிக அதிகம். அந்தக் காட்சியை இப்போது நேரிலும் கண்டுவிட்ட பிறகு அவளது நிலையை என்னவென்றுசொல்ல! இருள் சூழ்ந்திருந்த அந்த அறையில் துவண்டு கிடந்த வந்தியத்தேவனைக் கண்டாள். தன் மனதில் முடிவு செய்துகொண்டாள். இவர் இங்கு இருந்தால்தானே இவர் மீது பழி சுமத்துவார்கள். இவரை உடனே இங்கிருந்து அப்புறப்படுத்தவேண்டும். ஆனாலும் மெல்லிய உடல்வாகு கொண்ட பெண்ணாகிய தான் அவரைத் தூக்கி நிறுத்தமுடியாது. அதற்குப் பதில் அவரை எழுப்பி கூட்டிச் செல்லலாம் என நினைத்தாள். 

“வந்தியத்தேவரே! எழுந்திருங்கள். நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. இனியும் நீங்கள் இங்கிருந்தால் ஆபத்து. எழுந்திருங்கள்! கிளம்புங்கள் என்னுடன்!” என்று அழுதுகொண்டே வந்தியத்தேவனை எழுப்பினாள். 

திடீ​ரென அவளது தோள்பட்டையில் ஒரு கரம். பயத்துடன் திரும்பிப் பார்த்தவள் அங்கிருந்தது கிருஷ்ணசாமி என்று கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டாள். “அங்கிள், அவரை எழுப்புங்க. இல்லாட்டி வீண் பழி அவர் மேலே விழும்” என்று கதறத் துவங்கினாள். 

அவளது வாயை பொத்தி கிருஷ்ணசாமி அவளது பேச்சை நிறுத்தினார். “சாரு, இனி ஒரு கணமும் நாம லேட்பண்ணக் கூடாது. அது பெரிய ஆபத்துல தான் கொண்டு போய்விடும். யாராவது நம்மை இங்கே பார்த்துட்டா அந்த கொலைப்பழி நம்ம மேலே கூட விழ வாய்ப்புண்டு.  இங்கிருந்து இப்போவே நாம கிளம்பணும். போகலாம் வா,எழுந்திருசாரு” என்றார். 

சாரு மறுத்தாள். “வந்தியத்தேவரை காப்பாத்தணும், அதை செய்யாம நான் வரமாட்டேன்” என்று அரற்றினாள். 

“எழுந்திரு சாரு நேரமாகுது. எழுந்திரும்மா” என்றார் கிருஷ்ணசாமி மீண்டும். 

“எழுந்திரு சாரு” 

“எழுந்திரு” 

“நேரமாகுது” 

“எழுந்திரு சாரு” 

திடீரென பெரும் அலை முகத்தில் அடித்தது போலிருந்தது சாருவிற்கு. விருட்டென எழுந்தாள். எழுந்ததும் ஒன்றும் விளங்கவில்லை. திருதிருவென விழித்தாள். 

“என்னடி இது? இவ்வளோ நேரம் தூங்கியிருக்கே! அதுக்கும் மேலே ‘காப்பாத்தணும் வரமாட்டேன்’னு ஒரே புலம்பல். நானும் எழுப்பிட்டே இருக்கேன். நீயும் தூக்கத்துலே உளறிட்டே இருந்தே! அதான் முகத்திலே தண்ணி ஊத்தி உன் தூக்கத்தைக் கலைச்சேன்” என்றாள் சாருவின் தாய். 

“நான் எங்கே இருக்கேன்? வந்தியத்தேவர் எங்கே? நீ எப்படிம்மா இங்கே வந்தே? கிருஷ்ணசாமி அங்கிள் எங்​கே போனார்?” என்று கேள்விகளை அடுக்கினாள் சாரு. 

“சரியாப் போச்சு போ. நீ நம்ம வீட்டுல தான் இருக்​கே. கனவு கண்டியா? பொன்னியின் செல்வன் புக்கை கையிலே வெச்சிண்டு தூங்கிட்டு கனவு வேற கண்டிருக்கே. எப்​போதான் இந்தப் பைத்தியம் உனக்கு தெளியு​மோ​தெரிய​லை! சரி சரி. சீக்கிரம் போய் முகம் கழுவு. சித்து கொஞ்ச நேரத்துல வரேன்னு ஃபோன் பண்ணினான்” என்று சொல்லிக்கொண்டே கிச்சனுக்கு சென்றாள் சாருவின் தாய். 

இன்னமும் கனவிலிருந்து விடுபட முடியாமல் முதல் நாள் நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்த்த சாருவிற்கு அப்போது தான் விளங்கியது. அட நேத்து தான் ஒரு இங்கிலீஷ் சினிமா பார்த்தோம்.  டைம் மெஷின் மூலமா கடந்த காலத்துக்குப் போற கதை. அதுவும் பொன்னியின் செல்வன் நிகழ்ச்சியும் கலந்து இப்படி ஒரு அற்புத கனவு வந்திருக்கும்போல. ஆஹா, இது நினைவாகவே இருந்திருக்கக் கூடாதா? என்று ஏக்கம் ஏற்பட்டது. 

சிறிது நேரத்திற்கு பின் சித்து வந்தான். சாரு அவனிடம் “சித்து, உங்க மாமா பேரு என்ன?” என்று ஆர்வத்துடன் கேட்டாள். 

ஏன் இப்படி இவள் கேட்க வேண்டும் எனப் புரியாமல் பார்த்தான் சித்து.. இருந்தும் சற்று நிதானமாகவே சொன்னான். 

“கிருஷ்ணஸ்வாமி”

 

பதிவாசிரியரைப் பற்றி

10 thoughts on “கால இயந்திரம்-(பாகம்-3)

  1. அப்போ ஆதித்தகரிகால சோழனை போட்டுத் தள்ளினது இடும்பன்காரின்னு சொல்றீங்க; ஹ்ம்ம் ….நீங்கள் சொல்வது தர்க்கப்படி, கதையின் போக்குப்படி ஓரளவு ஒத்துக்கொள்ள வேண்டியதாகவே இருக்கிறது. ஆனால் கதையை சட்டென முடித்துவிட்டீர்களோ! நன்றாக இருக்கிறது உங்கள் எழுத்து நடையும் கற்பனையும். வாழ்த்துக்கள்

    (அத்தியாயம்- பாயுதே தீ!) இறந்த இளவரசனை தோளில் தூக்கிக் கொண்டு தீப்பிடித்த அரண்மனையில் இருந்து தப்பிக்கும் வந்தியத்தேவன், வழியில் மீண்டும் இடும்பன்காரியை சந்திக்கும் பொழுது இடும்பன்காரிக்கு இது ஏதும் நினைவில் இல்லாமல் போனதன் காரணம், அவன் பொய் புரட்டுடன் ஒன்றும் அறியாதவன் போல நடிப்பதால் என வைத்துக்கொள்வோம், சரியா?

  2. நல்ல கற்பனை. அருமையான நடை. பொன்னியின் செல்வன் உங்களை எந்த அளவு பாதித்திருக்கிறது என்று நன்றாக புரிகிறது. மேலும் உங்கள் எழுத்தை படிக்க காத்திருக்கிறேன். மனோகர – விசாகை.

  3. பொன்னியின் செல்வனை ஐந்து முறை படித்துள்ளேன். இருபினும் உங்கள் பகிர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். யாரும் தீர்த்துவைக்காத இந்த சந்தேகத்தை தனி ஒருவராக வந்து தீர்த்தமைக்காக ஆயிரம் பொன் பரிசு தரலாம் சகோதரி. 🙂

  4. பொ.செ கதை தெரியாமல் உங்கள் கதையைப் புரிந்து கொள்வதும் முடியாத காரியம் 🙂
    எனினும், முடித்த விதம் நன்று.

  5. இக்க​தை​யை ​பொறு​மையுடன் படித்து தங்கள் ​மேலான கருத்துக​ளைப் பகிர்ந்து​கொண்ட அ​னைவருக்கும் மிக்க நன்றி 🙂

  6. பொ.செ படிக்கும்போது யாரெல்லாம் கொலை செய்யவில்லை என்று புரியும்… யார் கொலை செய்தது என்பது சஸ்பன்ஸ்தான். இந்த பகுதியை நாம் திருப்பி திருப்பி படிக்கும்படி எழுதியிருப்பார் கல்கி……உங்கள் நடையும் எழுத்தும் அருமை. வாழ்த்துக்கள்

  7. பர்வதவர்த்தனி அவர்களே,

    கிட்டத்தட்ட ஒண்ணரை ஆண்டுகளுக்குப்பிறகு உங்கள் தொடர்கதையைப் படித்தேன்.  மிகவும் நன்றாக இருந்தது.  தொடர்ந்து எழுதுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *