திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-17)

1

 

விஜய குமார்

சிங்கை

பொதுவாக சிங்கப்பூர் என்றவுடனே வானுயர கட்டிடங்கள், பரபரப்பான மக்கள் கூட்டம் – அப்படி இருந்தும் குப்பை கூளம் இல்லாத,  மேடு பள்ளம் கூட இல்லாத அழகிய சாலைகள், எங்கும் எதற்கும் ஒரு நெறிமுறையுடன் இருக்கும் மனிதர்கள் – ஏன் பஸ்ஸில் ஏறக் கூட வரிசையில் நிற்கும் காட்சிகளையே  பலரும் பார்த்திருக்க  கூடும்  – அதையே ரஜினி கமல் முதல் இன்றைய ஹிந்தி  படங்களும் எடுத்துள்ளார்கள்.

 இந்த அளவிற்கு சிங்கை மென்மேலும் முன்னேறி வருவதற்கு காரணம் என்ன – இங்கே இருக்கும்  ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் – சிங்கைக்கு ஃபைன் சிட்டி ( ஆங்கில fine – என்ற இரட்டை அர்த்தமுள்ள வாக்கியம் ) டி  ஷர்ட்டுகள் கூட விற்பனையில் உண்டு. அதில் நோ ஸ்மோக்கிங்  முதல் ஒரு பெரிய நோ பட்டியலே இருக்கும். ஆனால் உண்மையில் இவை – ஆங்கிலத்தில் காரட் அண்ட் ஸ்டிக் என்பார்கள் – பொதுவாக காரட் வேலை செய்வதில்லை -அப்போது ஸ்டிக் ரொம்ப தேவை. ஒரு தலைமுறையில் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த சமுதாயமே இப்படி மாற அதுவே காரணம். இப்படி ஒரு ரிசல்ட் வரும் என்றால் அந்த கடுமையான விதிகள் நன்மைக்கே – தி  என்ட்ஸ் டூ ஜஸ்டிஃபை தி மீன்ஸ் !

இங்கே கரண்ட் கட் பொதுவாக ஆகாது. நான் இங்கு வந்த ஏழு  ஆண்டுகளில்  ஒரே ஒரு முறை சில நிமிஷங்கள் ஒரு பகுதியில் மட்டும் ஆனது என்று படித்தேன். அதற்கும் அந்த மின்சார வாரிய கம்பெனிக்கு மில்லியன் கணக்கில் அரசாங்கம் அபராதம் போட்டது. அதே போலத்தான் ரயில் சேவையும். தடைப்பட்டால் நடத்தும் நிறுவனத்திற்கு பெரிய அபராதம். ஒரு முறை பெரிய ஃபிளைஓவர் ஒன்று கட்டும் போதே இடிந்து விழுந்தது. அதற்கு அதைக் கட்டிய நிறுவனத்தின் மீது அபராதம் போட்டது அரசாங்கம் – அத்துடன் நிறுத்தவில்லை – அந்த நிறுவனத்தின் சி  இ ஓ சிறை செல்ல நேரிட்டது. ஏன்? தி பக் ஸ்டாப்ஸ் அட் தி வெரி டாப் !!

விமான நிலையத்தில் இறங்கும் போதே நம்மை மயக்குகிறது சிங்கை. நம்ம மீனம்பாக்கம் – அழுது வடியும் முகங்கள், எச்சில் துப்பி எங்கும் கரைகள், உடைந்த நாற்காலிகள், இயங்காத மின்தூக்கிகள், கவுண்ட்டரில் பாதி தான் இயங்கும், அதிலும் கடமைக்கே என்று ” அசுர ” வேகத்தில் செயல்படும் அப்பிசர் , பிறகு நல்ல நாளாக இருந்தால் ஒரு மணி நேரம் – சுற்றிச் சுற்றி பொறுமையை சோதிக்கும் வரவே வராத பெட்டிகள்  ! பராசக்தி பாணியில் இதை எல்லாம் தாண்டி வெளியில் வந்தால்  டாக்ஸி ( அய்யோ டாக்ஸி !) – அதையும் மீறி வெளியில் வந்தால் மெயின் ரோட்டில் பிளைஒவர்  வேலைக்காகத் தடுப்புகள் !!!

சிங்கையில் விமானத்தில் இருந்து  இறங்கி பத்தே நிமிடத்தில் வெளியில் ! அது மட்டும் இல்லை – சிரித்த முகத்துடன் நம்மை வரவேற்கும் முகங்கள் – ஆம் பத்து நிமிடத்தில் வெளியில் வந்து விடலாம் – லக்கஜ் உட்பட ! எங்கே போகிறாய் என்றே கேட்காமல் சவாரி ஏற்றும் டாக்ஸி டிரைவர் – அய்யோ, அங்கேயா ! திரும்பி காலியா தான் வரணும் என்றே பேச்சே இல்லை.  இல்லாத மீட்டர்க்கு மேல் காசு – இல்லை சென்னை சம்மர் சூட்டை தோற்கடிக்கும் மீட்டர் சூடு – என்றெல்லாம் பயப்படாமல்  – குளிர் சாதன பெட்டியும்  இயங்கும் டாக்ஸி !!  வெளியில் எங்கும் பச்சை பசேல் என்று செடி -கொடிகள்  சாலை ஓரம் என்றும் பூங்காக்கள்  !!!

ஒரு முறை அப்படி வரும்போது எக்ஸ்பிரஸ்வேயில் எக்சிட் தவறி விட்டது – நாங்கள் எடுக்க வேண்டிய டர்ன் தாண்டி போனதை உணர்த்த ஓட்டுனர் ( அப்போது எனக்கு வழி தெரியாது !) – தானே சாரி – இப்போது நான் மீட்டரை நிறுத்தி விடுகிறேன் – இதற்கு மேலே நீங்கள் காசு கொடுக்கத் தேவை இல்லை என்று நான் ஒன்றுமே கேட்காமல் தானே செயல்பட்ட அவரை – பார்த்து ஒருமுறை என்னை நானே கிள்ளிப் பார்த்தேன். !!!

இன்னொரு முறை குடும்பத்துடன் கடற்கரைக்குச் சென்றபோது மறதியில் விலை உயர்ந்த கைபேசியை டாக்சியில் மறந்து வைத்து  விட்டேன். இறங்கி சில நிமிடங்களில் தான் விட்டதை உணர்ந்தேன் . உடனே மனைவியின் கைபேசி மூலம் டாக்ஸி கம்பெனி புக்கிங்  செய்யும் எண்ணுக்கு அடித்துப் பேசினேன் – அவர் – எந்த நிற டாக்ஸி – அது எங்கள் நிறுவனத்து டாக்ஸி இல்லை – இருந்தாலும் நானே இந்தச் செய்தியை பதிவு செய்கிறேன் – எங்கே ஏறினீர்கள், எங்கே இறங்கினீர்கள் , சுமார் எத்தனை மணி இருக்கும் என்று கேட்டுக் கொண்டு – இதுதான் கம்ப்ளைன்ட் நம்பர் என்று சொல்லி வைத்தார். பத்தே நிமிடத்தில் மீண்டும் போன் – அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் இருந்து – இறக்கிவிட்ட டாக்ஸி ஓட்டுனர் மீண்டும் எங்களை விட்ட இடத்திற்கு வந்ததாகவும் அங்கே கூட்ட  நெரிசல் அதிகமாக இருந்ததால் நேரே காவல் நிலையத்திற்கு  சென்று கைபேசியை ஒப்படைத்து விட்டாராம். !! உடனே அங்கு சென்றேன். வணக்கம் சொல்லி அங்கே இருந்த காவலர் – இது உங்கள் கைபேசியா ? உங்கள் அடையாள அட்டை எங்கே ? என்று வாங்கி சரி பார்த்து – கைபேசி  சரியாக உள்ளதா ? சரி நீங்கள் எடுத்துப் போகலாம் என்றதும் …..ஆஹா , என்ன ஒரு சிஸ்டம் – அந்த டிரைவர் சன்மானத்துக்கு எதிர்பார்க்கவில்லை – அவன் அடுத்த சவாரி ஏற்றிக்கொண்டு போய்விட்டான் , காவலர் டீ காசுக்கு தலையை சொரிய  வில்லை !!! இதை எதற்காக பதிவு செய்கிறேன் என்றால் இவை ஏதோ இங்கும் அங்கும் அரிதாக நடக்கும் செயல் இல்லை – இந்த ஏழு வருட சிங்கை வாசத்தில் ஒரு பைசா – சென்ட் ! யாருக்கும் கிம்பளம் கொடுக்கவில்லை – யாரும் கேட்கவும் இல்லை – கரண்ட் கனெக்ஷன்  முதல் எங்குமே எவருமே தங்கள் வேலையை செய்ய எதையுமே எதிர்பார்க்கவில்லை  ! அவர்கள் வாழ்வியலில் நேர்மை கலந்து விட்டதன் உன்னதத்தை உணர்ந்தேன்.

சரி இப்படி ஒரு அற்புத நகரில் எனக்கு பிடித்த இடம் என்ன. சென்தோசா , மிருகக்காட்சி சாலை , பறவைகள்  பூங்கா என்று பல இருந்தும், எனக்கு மிகவும் பிடித்த இடம் – மக்ரிட்சி என்ற ஒரு இடம். சிங்கையின் பிரதான  நீர் தேக்கப் பகுதி இது. இதில் இயற்கையை ரசிப்பவர்களுக்கு  சுமார் பதினைந்து கிலோமீட்டர் ட்ரெக்கிங் செய்ய பிரத்யேக பாதை அமைக்கப்பட்டு – அதில் சிலை நீர்த்தேக்கத்தை ஒட்டி – நீரின் மீதே பலகைகளைக் கொண்டு பரோட் வாக் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே சென்றால் மூன்று நான்கு மணிநேரம் அடர்ந்த காட்டிற்குள் போவது போல இருக்கும். சிங்கையின் நடுவில் இப்படி ஒரு இடமா என்று நண்பர்கள் பலரும் அசந்துபோய் விடுவார்கள். எங்கும் பச்சை பசேல் என்று நீண்டு நிற்கும் மரங்கள் – எட்டிப் பார்த்தாலும் கட்டிடங்களைப் பார்க்க முடியாது !!  அதுவும் நடுவில் இரண்டு குன்றுகளுக்கு நடுவில் கயிர் பாலம் ஒன்றை அமைத்து அதன் மேலே நின்று அந்த இயற்கைக் காட்சிகளை ரசிப்பது மிகவும் அருமை . நம்ம ஊரில் இப்படி ஒரு இடம் இருந்தால் குடிமகன்கள் என்ன செய்வார்கள் என்று இங்கே சொல்ல முடியாது!!

அப்படி ஒரு முறை நண்பர் ஒருவரை கூட்டிச் செல்லும்போது – ஒரு வினோத நிகழ்வு !! பொதுவாக சிறு வயது முதலே  எனக்கு மிருகங்கள் அதுவும் பாம்பு , ஓநாய் , உடும்பு , முதலை என்றால் கொள்ளைப் பிரியம் ! அப்பா அம்மா சனிக்கிழமை தோறும் ஸ்நேக் பார்க் கூட்டிச் செல்ல வேண்டும்  என்று அடம் பிடிப்பேன், சற்று பெரியவன்  ஆனதும் அவர்களுக்கு தெரியாமல்  முதலைகள் பிடிக்க விட்டேக்கர் முதலைப் பண்ணை போவது உண்டு . ஒரு முறை வீட்டிற்கு வெளியில் வேலியில்   இருந்த பச்சைப் பாம்பை கையில் பிடித்து எடுத்து வர – அதை பார்த்து எங்கள்  பாட்டி பிடித்த ஓட்டம் !! அப்பப்பா !

அப்படி இருக்க நாங்கள் எல்லோரும் பன்னிரண்டு கிலோ மீட்டர் ட்ரெக்கிங் முடித்து விட்டு கடைசி சிறு தொலைவு கார்  நிறுத்தும் இடம் செல்லும் வழியில் இங்கும் அங்கும் இருக்கும் இயற்க்கை காட்சிகளை – காய்ந்த இலை நடுவில் நிற்கும் செடி ஒன்றின் அழகு , இறந்த மரத்தின் மீது முளைக்கும் ஒரு வித அழகிய காளான் – என்று படம் பிடித்துக்கொண்டே வரும் போது – முதலில் சென்று கொண்டிருந்த ஜூனியர் திடீர் என்று ” அப்பா , பாம்பு பாம்பு என்று பாதையில் எதையோ கை காட்டினான் !!! அவன் காட்டிய இடத்தில நல்ல  நீல நிறத்தில் பைப் போல ஏதோ இருந்தது. அருகில் சென்று பார்த்தால் – இரு பக்கமும் ஆரஞ்சு நிறம் கொண்ட பாம்பு !!!!

கொள்ளை அழகு அருகில் சென்று கைபேசி காமெராவில் படம் பிடித்தேன்.  ஆஹா என்று ஒரு கலர் – அதுவும் அந்த நீல நிறம் – என் டி  ராமாராவ் கிருஷணர் வேஷம் போடுவாரே அதே கலர் !!! தலை மற்றும் வால்  …மக்கள் திலகம் லிப்ஸ்டிக் வண்ணம் . இன்னும் அருகில் சென்று மீண்டும் படம் பிடித்தேன். அது எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஆவல் அதிகமாக, அதைப் பிடிக்க கையை நீட்டினேன்.. அப்போது எனது அருமை மகன் – ” அப்பா வேண்டாம் அப்பா, நான் படித்து இருக்கிறேன் – மோர் கலர்புல் தி சினேக் மோர் வேநோமொஸ்  இட் இஸ் ! ” என்றான் .நான் அதிகம் டிவி பார்ப்பது ( கிரிக்கெட் இல்லாதபோது ) டிஸ்கவரி / நேஷனல் ஜியோகரபிக் …   ஜூனியர் என்னுடன் சேர்ந்து ஆர்வத்துடன் பார்ப்பார் !! அதனால் அவனுக்கும் இதில் மிகுந்த ஆர்வம் ஆனால் கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவன்

ஒரு பக்கம் மகனுக்கு முன் பாம்பை கையில் எடுத்து கொஞ்சம் பந்தா  காட்ட ஆசை , அதுவும் இந்த  பொடியன் சொல்லி நமக்கு அறிவா ? என்ற எண்ணம் வேறு – அப்போது தந்தைக்கு உபதேசம் செய்த குமரன் புண்ணியத்தில் – வேண்டாம் என்று ஏதோ சொல்ல – அப்படியே படம் மட்டும் எடுத்துக் கொண்டு நகர்ந்தோம் !! படத்தை கைதொலைபேசி கொண்டே முகநூலில் பகிர்ந்தேன் – உடனே நபர் ஒருவர் கூகிள் உதவியுடன் – அது மிகக் கொடிய மலையன் கோரல் பாம்பு என்றும் – அதன் விஷத்துக்கு மருந்தே கிடையாது என்றும் பின்னூட்டம்  போட்டார் !!  தலை அன்று தப்பியது பொடியன் புண்ணியத்தில்…..

தொடரும்

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-17)

  1. ஒரு நீல மலேசிய பவள பாம்பு (Blue Malasian Coral Snake) போன்று தோன்றுகிறது (Calliophis bivirgatus). இது கொடிய விஷம் கொண்ட பயங்கரமான ஒன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *