Advertisements
இலக்கியம்கட்டுரைகள்வல்லமையாளர் விருது!

இந்த வார வல்லமையாளர்

 

திவாகர்

ஒரு சில திரைப்படங்களில் கடைசிக் காட்சியில் ‘ஆகையினால் சாட்சிகளின் விவரங்களினால் சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஹீரோதான் கொலையாளி’ என்று நீதிபதி தீர்ப்பு சொல்ல ஆரம்பிக்குமுன் திடீரென ஒரு சாட்சி வந்து ‘இல்லை யுவர் ஹானர், நான் பார்த்தேன் இவர் கொலையாளி அல்ல’ என்று சொல்லி என்ன நடந்தது என்பதை ‘ஃப்ளாஷ்பேக்’ மூலம் தெரிவித்து, கொலை செய்த வில்லனை சரியாகக் கண்டுபிடித்து கடைசியில் ஹீரோவைக் காப்பாற்றி படத்தின் கதையையும் சுபமாக முடிப்பதை நாம் எல்லோருமே ரசித்திருக்கிறோம்.. என்ன இது பீடிகை என்று பார்க்காமல் கீழே படியுங்கள்.

சென்ற நூற்றாண்டின் மத்திய காலத்தில் நமக்குக் கிடைத்த மாபெரும் எழுத்தாளர் கல்கி அவர்கள். தமிழில் கதைகளுக்கென எனப் பார்க்கும்போது கல்கிக்கு தலைமைப் பீடம் கொடுத்தே ஆகவேண்டும் எனவும் சொல்லலாம். அவரது எழுத்து நடை எல்லோராலும் விரும்பப்பட்டது. எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு முன்னோடியாகவும் கூட இருந்தது. இப்படிப்பட்டவர் ஒரு மாபெரும் கதை இலக்கியத்தைப் படைத்தார். தமிழ் வாசகர்கள் என்றும் போற்றும் விதத்தில் அவர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக அதை வழங்கினார். அவர்கள் மனதில் நிரந்தரமாகப் பதித்தார். அதுதான் பொன்னியின் செல்வன்.

பொன்னியின் செல்வன் வரலாற்றுக் குழுமம் (ஆங்கிலம்) என்றொரு யாஹூ குழுமம் நம்மிடையே உள்ளது. இக்குழுமத்தில் பொன்னியின் செல்வனை விரும்பிப்பபடித்து அந்தக் கதையைப் பற்றிய விவாதங்கள் அடிக்கடி பலரால் எழுதப்படும். ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் தன்மையையும் தீர ஆராய்ச்சி செய்து எழுதுவார்கள். இந்தக் குழுமத்தைக் கேள்விப்பட்டு புதியதாய் சேரும் அனைவரும் கேட்கும் ஒரு பொதுவான கேள்வி என்ன தெரியுமா?

“அன்புள்ள ஐயா, நான் இந்தக் குழுமத்துக்குப் புதியவன்(ள்), ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்பதைத் தெரிவிக்க முடியுமா?”

இந்தக் கேள்விக்குப் பதிலாக எத்தனையோ இழைகள் அந்தக் குழுமத்தில் உள்ளன என்றாலும் இங்கு புதிதாக வருவோர் மட்டும் ஒவ்வொரு முறையும் இதை மறக்காமல் கேட்டு விடுவர். ஆதித்த கரிகாலன் என்கிற சோழ இளவரசனைப் போல முந்தைய காலத்தில் எத்தனையோ ராஜாக்கள், இளவரசர்கள் கொலை செய்யப்பட்டிருந்தாலும், இந்த ஆதித்த கரிகாலன் சோழன் கொலையை மட்டும் மிகப் பரவலாக தெரியப்படுத்திய பெருமையும், இந்தக் கொலைக்கு மட்டும் ஒரு முக்கியத்துவத்தைக் கொடுத்த புகழும் கல்கியைத்தான் சாரும். வாசகர்களை கொக்கிப் போட்டு இழுத்து அவர்களின் மூளையின் முக்கியமான செல் ஒன்றினைத் தேடி, அதனுள் இந்தக் கேள்வியைப் பதிவு செய்துவிட்டு, அந்தப் பதிலுக்காக எந்தவித உறுதியான சாட்சியத்தையும் தராமல் சென்றுவிட்டார் கல்கி. இத்தனைக்கும் இதே ஆதித்தன் பெயரில் இவனுடைய பாட்டன் ஒருவன் மிகவும் புகழோடு மிக அதிகமான அளவில் கோயில்களைக் கட்டியதோடு மட்டுமல்லாமல், கல்கியால் பேசப்பட்ட ஆதித்தகரிகாலனை விட, வீராதி வீரனாக, சோழகுலத்தையே மீட்டெடுத்த நாயகனாக சரித்திரக் கல்வெட்டில் புகழ்பாடப்பட்டவன், அவனும் பேச்சு வார்த்தைக்காக சென்றபோது எதிரிகளால் நயவஞ்சகமாகக் குத்திக் கொலை செய்யப்பட்டவன், ஆனால் இப்படிப்பட்டவனுக்குக் கிடைக்காத ஒரு புகழை இந்த இளவரசன் ஆதித்தகரிகாலனுக்கு வழங்கிவிட்டார் கல்கி.

அவனைக் கொலை செய்தது யாராக இருக்கும்? இது எல்லா வாசகர்களையும் சிந்திக்க வைத்த கேள்விதான். பலர் பலவிதமாக ஆராய்ந்து சரித்திரக் கல்வெட்டுகளோடு இணைத்து பொன்னியின் செல்வன் குழுமத்தில் எழுதினாலும், கல்கி எவ்வாறு உண்மையுடன் சற்று கற்பனையும் கலந்து மிகப் பெரிய விருந்து படைத்தாரோ, அதே கோணத்தில் இந்தக் கொலையைப் பற்றி சிந்தித்து, இந்த காலத்துக்கேற்றவாறு அதன் நடையை மாற்றி, இதற்கான விடையை தன் பாணியில் சொல்லியிருக்கிறார் திருமதி பர்வதவர்தினி.

ஒரு கதையை பழைய நிகழ்வுகளோடு ஒப்பிடும்போது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வாசகரை நம்பவைக்கவேண்டியது ஒரு எழுத்தாளரின் திறமை. கொலை நடந்த இடத்தே நான்கு பேர் இருந்திருக்கின்றனர். அவர்களில் ஒருவரை நாம் கொலையாளி என்று சான்றுகளுடன் காண்பிக்கவேண்டும் என்று தானே நேரில் சென்று பார்த்துச் சொல்வது போன்ற ஒரு சாட்சியத்தை தகுந்த பாத்திரத்தின் மூலமாக (சாரு)  மிகவும் ருசிகரமான பாணியில் தெரிவித்திருக்கிறார் பர்வதவர்தினி.

மேலே முதலில் கண்ட வரிகளுக்கு வருவோம். பொன்னியின் செல்வனில் நாயகர்களில் ஒருவனாகப் படைக்கப்பட்டிருந்த வந்தியத்தேவனைக் குற்றவாளியாக காண்பித்து விடுவித்திருந்தாலும் கொலையை இன்னமும் மர்மமாகவே வைத்த வாசக நீதிபதிகளுக்கு விடை சொல்லும் வகையில் பர்வத வர்தினி நேரே கண்ட சாட்சியமாகத்  தன் கால இயந்திரம் கதையைத் தந்திருக்கிறார் (http://www.vallamai.com/literature/serial/28213/) இடும்பன்காரியைக் காட்டிக் கொடுத்து கொலைக்கு சுப முடிவாகக் காட்டியிருந்த இந்தப் பாணி மிக நன்றாக இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். இப்படிப்பட்ட ருசிகரமான கதையை வல்லமையில் வழங்கிய் திருமதி பர்வதவர்தினியை வல்லமை குழுவினர் இந்த வார வல்லமையாளராக தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம் என்று சொல்லவும் வேண்டுமோ..

க்டைசி பாரா: திரு சம்பத் அவர்களின் பின்னூட்டம் ஒன்று:

”சாதாரணமாக ஒரு சீருந்து நம்மைத் தாண்டி செல்லும்போது நாம் அந்த காரின் பின் இருக்கையில் யார் அமர்ந்திருக்கிறார் என்றுதான் பார்ப்போம். ஆனால் அர்ஜுனன் அமர்ந்த ரதம் ஓடும்போது எல்லோர் பார்வையும் அவன் தேரோட்டிமீதுதான் பட்டது. கண்ணன் பார்த்தசாரதி மட்டும் அல்ல. எல்லோரும் ’பார்த்த’ சாரதி கூட!”


Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comments (6)

 1. Avatar

  பர்வதவர்தினி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
  ஸம்பத் ஐயாவிற்கு பணிவன்பான வனக்கங்கள். அவருடைய அடுத்த தொடருக்காக வெயிட்டிங்… 🙂

 2. தேமொழி

  இந்த வார வல்லமையாளர் விருது பெற்ற பர்வத வர்தினிக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன், உங்கள் அடுத்த படைப்புக்கும் காத்திருக்கிறேன்.

 3. Avatar

  ஒரு நான்கு வாரம், இந்த தேர்வு செய்யும் வரம் எனக்குக்கிட்டியது. நானும் இதே தேர்வை செய்திருப்பேன். இதே மாதிரி சம்பத் மொழியை பாராட்டியிருப்பேன்.
   இருவருக்கும், திவாகருக்கும் என் வாழ்த்துக்கள்.

 4. Avatar

  வல்லமை வார விருது பெற்ற பர்வதவர்தினிக்கும், தேர்வு செய்த வல்லமை குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

 5. Avatar

  ‘இந்த வார வல்ல​மையாளர்’ என ​கெளரவித்து எனக்கு ஊக்கமளித்திருக்கும் வல்ல​​மை குழுவினருக்கும், திவாகர் ஐயா அவர்களுக்கும், வாழ்த்துகள் ​தெரிவித்துள்ள நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி  🙂

 6. Avatar

  Congratsss PV..:):)

Leave a Reply to lalitha Cancel reply