மறவன்புலவு க. சச்சிதானந்தன்

நாட்டிய நிகழச்சிக்கு வருமாறு திரு. முரளி மற்றும் திருமதி பிரியா முரளி அழைத்தார்கள். சென்னை, நாரத கான சபாவில் முன்வரிசைகளுள் முக்கியமானவருக்கான இருக்கை ஒன்றை எனக்குத் தந்தார்கள்.

25.11.2012 மாலை 1645க்கே இருக்கையில் அமர்க, 1700 மணிக்கு நிகழ்ச்சி. இடைவேளை இல்லா இரண்டரை மணிநேரம்.

1630 மணிக்கே ஆள்வார்பேட்டை, நாரத கான சபா சென்றேன். வண்டி நிறுத்திடம் நிரம்பியிருந்தது. அரங்கமும் நிறைந்துகொண்டிருந்தது. ஏறத்தாழ 2000 பேர் வரை கூடினர். அவர்களுள் பாதிக்குமேல் கலை வல்லுநர்கள்.

இக்காலத் தொழினுட்பக் கருவிகள் ஆங்காங்கே. அரங்கின் இரு மருங்கும் இரு திரைகளுக்கு இரு ஒளிப்படக்காட்டிகள். வண்ணங்களைச் சிதற, பாய்ச்ச, சுழற்ற எனக் கருவிகள் அரங்கை வளைத்தன. பல்வேறு சூழல்களைக் காட்சியாக்கி அரங்கில் வியப்பு நிறைக்கும் முயற்சி எனத் தோன்றியது.

இரசோகம் www.rasoham.in வழங்கிய நாட்டிய நாடகம். தலைப்பு ஐந்திணை.

சங்கத் தமிழ் தந்த சொல், தந்த பொருள், அகத்தின் ஐந்திணை, அன்பின் ஐந்திணை. புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் ஆகிய உரிப்பொருள் காட்டும் ஐந்திணை.

சங்கத் தமிழ்ச் சொல்லைப் பலமுறை கட்டியமாகக் கூறித் தேன் தமிழுக்குத் தெவிட்டாத சுவையுண்டு எனப் பாடிய நரசிமாமாச்சாரியாரின் கணீர் குரலிசைக்குப் பிரியா முரளியும் மற்றும் நால்வரும் அறிமுக வரவேற்பு நடனத்தில் பரதத்தின் அடவுகள், காத்திரம் மிகாமல் சிறுமருவும் மாத்திரையும் காட்டியன நெகிழாத நெஞ்சையும் நெகிழ்வித்துத் தமிழைப் புகழாதை நாவையும் புகழ்விப்பன.

செவ்வியல் குன்றாச் செழுமைப் பரத நடன அசைவுகளுள்ளும் குச்சுப்பிடிப் பாங்குடனும் இவ் ஐந்திணைக் கூறுகளைத் தந்தனர் இரசோசம் அமைப்பினர்.

நறிய நல்லோன் மேனி முறியினும் வாயது முயங்குதற்கும் இனிதே எனப் புணர்தல் (குறுந்தொகை, 62) சேயோன் மேய மைவரை உலகமாகிய மலையும் மலை சார்ந்த குறிஞ்சிக்கு உரிப்பொருள்.

குறிஞ்சி நில விலங்கு யானையின் பிளிறலைப் பின்னணி இசை தர, பரதத்துள் வெளிக்காட்டிய உடலசைவுகளாயினென், பறவையாகிய மயிலாய் வந்த ஒயிலாளின் அடவுகளாயிலென், குறிஞ்சிக் கடவுள் முருகனாய், அவன் புகழ் பாடும் குன்றுவரான குறவரின் கூத்தாயினென், கண்ணொடு கண் நோக்கிக் காதலுற்ற காளையும் கன்னியுமாயினென், திருச்செங்கோட்டுக் குறவஞ்சியில் குறத்தியாக வந்து அசத்திய ரோஜா கண்ணன் இங்கும் குறத்தியாக வந்து குறிசொன்னவாறெனின், திருமண நிகழ்வின் மதுசூதனின் தவிலாகிலென், புணர்தலைப் பூடகமாகக் காட்டிய பெற்றியாயினென், நாட்டிய வண்ணம் தந்த நவையறு காட்சிகள் நயந்து நயந்து இன்புறுமாறமைந்தன.

வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும் பொருளே காதலர் (அகநானூறு, 53) கூறும் பிரிதலை உரிப்பொருளாகக் கொண்ட மாயோன் மேய காடுறை உலகமே, காடும் காடு சார்ந்த முல்லை.

முல்லை நில விலங்கு ஆநிரை. பசுக் கூட்டம் நிரையாக, ஓட்டும் கோவலர் தொகையாக, கவின்மிகு கன்னடத்து வரிகள் துணையாக, காதலியிடம் பிரியாது பிரிந்து விடைபெற நீளும் காதலின் காட்சிகளாக, கோபியரும் கண்ணனும் இடையர் ஆடலாக, நடனத்துடன் பிணைத்து நம்மைக் காட்சிகளுடன் அழைத்து, நம் கண்களை அரங்கோடு கட்டி, உள்ளத்தை ஒடுக்கிப் பிழியுமாறமைந்தன.

கடற்சிறு காக்கை காமர் பெடையொடு கோடிடுமீன் வழங்கும் (அகநானூறு, 170) ஏங்கி இரங்கலை உரிப்பொருளாக்கிய கடலும் கடல் சார்ந்த மணல்பரப்புமே வருணன் மேய பெருமணலுமாகிய நெய்தல்.

 கடல் அலைகள் பின்னணியாக, பாதங்கள் படகுகளாக, ஏலேலோப் பாடல் இசையாக, மீனவராய், மீன்பிடித்தும், காற்றலையில் தத்தளித்தும் கரைவலை இழுத்தும், நுளைத்தியர் மீன் விற்றும் வரத் தலைவியை நெஞ்சில் நிறைத்த தலைவன் இரங்குமாறு நவில்தொறும் நயக்கும் மென் மலையாளத்தில் மொழிந்து, வண்ண உடலசைவுகளின் செவ்வியல் போக்கும், செம்மாந்த அரங்கமைப்பும் நினைவலைகளில் நினைந்து நினைந்து மீட்டுமாறமைந்தன.

பனிபடுநாளே பிரிந்தனர் பிரியுநாளும் பலவாகவ்வே (குறுந்தொகை, 104) எனப் பிரிவாற்றமையால் இருத்தலையும் திணை மயங்கலையும் உரிப்பொருளாகக் கொண்ட முறைமையிற் திரிந்து நல்லியல்பு அழிந்தது பாலை.

சிந்துபைரவியில் தொடங்கித் தேஷ் பண்ணுள் புகுந்து சந்ததமாய் இந்தியினைப் பரதத்துக்கு மொழியாக்கிய பாங்கு, காளிக்கு விழாவெடுத்த காட்சியுடன் மீராவின் மீட்டுவிரல்களைக் காட்டிய பாங்கு, காட்டுக்குள் குதிரை வண்டியாகி, வழிப்பறிக் கயவரின் கம்பத்தின் கொடுமை போக்கி, விரலசைவுகளின் விரைவும் கால்களின் அடிகள் அசைந்த அழகும் தந்த பாங்கு, பார்வையாளர் பலர் எழுந்து நின்று ஆரவாரித்துக் கைதட்டிப் பாராட்டிய பாங்கு யாவும் உள்ளத்தை வயப்படுத்திய உவகைப் பெருக்கெடுப்பில் உடலெங்கும் சிலிர்ப்புற அமைந்தன.

கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன் தொண்ணுன்முகனே (குறுந்தொகை, 167) என ஊடல் போக்கிய கூடலைக் கருப்பொருளாக்கிய வேந்தனாகிய இந்திரன் மேய தீம்புனல் உலகமே மருதம்.

ஊடலுடன் காட்சி தொடங்கி, வேளாண் மக்களின் வாழ்வியல் கூறுகளை அரங்கேற்றி, உழவு, விதைப்பு, நீர்ப்பாசனம், அறுவடை, பொலிகாணல், முறங்களால் புடைத்தெடுத்தல் யாவையும் உரிய இசைப் பின்னணியில் சுந்தரத் தெலுங்குப் பண் தொகுப்பில் பிண்டியும் பிணையலுமகிய கை முத்திரைகள் வழி கண் செல்ல, கண்கள் செல்லும் வழி மனம் செல்ல, மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும் குச்சுப்பிடி உடலசைவுகளையும் காட்டித் தலைவனும் தலைவியும் கூடும் நிலைக்கு அழைத்துச் சென்று இன்பியல் முடிவுடன் ஆடல் அரங்கத்தை நிறைவு செய்தனர்.

காதல், வீரம், அருள், வியப்பு, சிரிப்பு, அச்சம், வெறுப்பு, சினம், அமைதி ஆகிய ஒண்பான் சுவைகளை வெளிக்கொணருமாறு, சிலப்பதிகாரம் கூறிய நாட்டிய நன்னூல் கற்றனரோ, அரங்க அமைப்பைக் கற்றனரோ, கணிணிக் கால அரங்க நுணுக்கம் கற்றனரோ எனுமாறு பல நூற்றாண்டு கால மரபுகளை, நாட்டிய மரபுகளை, செவ்வியல் தன்மைகளை, இசைப் பராம்பரியத்தை, அரங்க அமைப்புகளை இக்காலத்துடன் இசைத்துத் தந்தனரே இரசோகம் நிறுவனத்தார்.

ஏறத்தாழ 100 கலைஞர்கள் மேடைக்கு வந்து சென்றனர், இரண்டரை மணி நேர இடைவெளிக்குள். குரு நிலைப் பிரியா முரளி தொடக்கம் அரங்கை ஆட்கொண்ட மதுசூதனன் ஊடாக, தொடக்க நிலைச் சிறார்கள் வரை, அத்தனை கலைஞர்களையும் ஒருங்கிணைத்துச் செய்தி சொல்லும் இடையீடற்ற உடல் அசைவுகளளை மேடையாக்கியவர் கலாச்சேத்திரா தந்த கலைப்பேராசான் நரசிம்மாச்சாரியார், அவர் துணைவியார் வசந்தலட்சுமியார்.  இந்தக் கலை இணையரின் கலைமக்கள் இலாவண்யா, இலசியா. நால்வரையும் சுவைஞர்கள் பாராட்டுவர், வாழ்த்துவர், வணங்குவர்.

தமிழ் தந்த திணைகள், எல்லைகள் தாண்டி, ஏனைய மொழிகளையும் தமதாக்கி, மனிதத்துக்கு மாண்பமைக்க, பல்மொழிப் பேராசிரியர்கள் கவிஞர்கள் துணைநின்றுளர். அவர்கள் இந்தியா பெற்றெடுத்த பெருமக்கள்.

ஐந்து அன்பின் திணைகளையும் அள்ளித் தந்தவர்கள் ஐந்து கலை இணையர். வாழ்வில் தம்பதியரான அவர்கள் மேடையிலும் உணர்வுகளின் சங்கமமாயினர்.

பாட்டிசை, குழல் இசை, யாழ் இசை, மத்தள இசை, கைத்தாள இசையுடன் இக்கால மின்னிசைக் கருவிகளும் கலந்து கொளிக்க, தவில், நாகசுரம் உள்ளிட்டவை காதுகளுக்கு விருந்தாக்கத் துணைநின்றோர் பட்டியலில் இக்கால வல்லுநர் பலர் உளர்.

ஆண்கள் இத்தனை பேர் பரதம் கற்று வருகிறார்களா என மூக்கின் மேல் விரலை வைத்து வியக்குமாறு இருபதுக்கும் கூடுதலான ஆண்கள் பரதமும் குச்சுப்பிடியும் கைவரலாயினர், சுவைப்போரைத் திகைப்பில் ஆழ்த்தித் திகட்டினர்.

கைவலோர் என்பார் சேக்கிழார். நூற்றுக்கும் கூடுதலான கலைஞர்களின் முகங்கள் பளிச்சிடக் கைவலோர், உடைகள் பொருந்திடத் தையலோர் என முக ஒப்பனை, உடை, அணி அலங்காரம், மேடை அமைப்புப் போன்ற பல்வேறு துறைகளிலும் நூற்றுக்கும் கூடுதலான கைவினைஞர், பொறிஞர், ஒலி ஒளி நுட்பினர், படப்பிடிப்பாளர் பணியாற்றி ஐந்திணையை அரங்கேற்றினர்.

இந்தியாவுக்கு நவீன முகம் கொடுக்கும் ஐந்திணை. உலகெங்கும் இந்திய அரசு எடுத்துச் சென்று இதுவே இந்தியக் கலைமுகம் என்னுமாறு காட்டும் வகையது ஐந்திணை.

செந்தமிழ்த் தேனைச் சொரிந்து, கவின் கன்னடத் தீம்பாலை ஊற்றி, கங்கைப்புலத்தின் குங்குமப்பூப் பிசைந்து, களி தெலுங்கின் கன்னலைக் கலக்கி, மலையாளத்தின் நேந்திரம் பழத்தைக் குழைத்துத் தந்தால் வரும் சுவையோ! குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை, மருதம் எனப் புணர்தல், பிரிதல், இரங்கல், இருத்தல், ஊடல் திணைகளை ஆடலாகத் தொகுத்தோர் தந்த சுவையோ!

இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்த முரளி இணையருக்கு நன்றி கூறுகிறேன்.  

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *