தமிழ்த்தேனீ-

 

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் சரவணபவன் ஹோட்டலில் எதிர் மேஜையில் உட்கார்ந்து   மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல்   எதிரொலி கேட்கும் அளவுக்கு உரக்க சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர் அந்த நான்கு பெண்மணிகளும். அவர்கள் உட்கார்ந்திருந்த மேஜையில்  பலவிதமான அறுசுவை உணவுகள் பரப்பி வைக்கப் பட்டிருந்தன. 

ஹோட்டல் பணியாளர் பவ்வியமாய் குனிந்து அவர்களுக்கு வேறெதுவும் வேணுமா என்று கேட்டுவிட்டு நகர்ந்தார். அது எப்பிடி இவங்க மட்டும் மட்டும் எந்த நாட்டிலே சாப்பிட்டாலும் ஒரே விதமான தரமான சுவையான உணவு வகைகளை கொடுக்கிறாங்க  என்று பேசிக்கொண்டே  அனுபவித்து சாப்பிட்டுக்கொண்டே ஆரவாரமாய்  நகைச்சுவையாகப் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர் அந்த நால்வரும். திடீர் திடீரென்று சுழன்று அடிக்கும் கடற்காற்றைப் போல அவ்வப்போது  அவர்களின் சிரிப்பொலி அந்த இடத்தையே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. 

அவர்கள் பின்னால்  அமைதியாய் உட்கார்ந்திருந்த  ஒரு அமெரிக்கக் குடும்பம் இவர்கள் பேசுவது புரியாவிட்டாலும் இவர்களின் ஆரவாரமான கலகலப்பான சிரிப்பால் கவரப்பட்டு  அவர்களும் இவர்களை ரசித்து  மென்மையாக புனிசிரிப்புடன் இவர்களையே பார்த்துக்கொண்டிருந்தனர். 

பக்கத்து மேஜையில் இருந்து சாரதா வெகுநேரமாக இவர்களையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஒரு நிமிஷம் இருங்க இதோ வரேன் ,  அவங்ககிட்ட     கேட்டுட்டு வரேன் என்று கணவர் சதாசிவத்திடம் சொல்லிவிட்டுக் கிளம்பினாள். 

சதாசிவம்  வேணாம்மா  நமக்கெதுக்கு,  அவங்க ஏதோ ஜாலியா இருக்காங்க. அதிலே தலையிட நாம யாரு , வேணாம் போகாதே என்று  சொல்லிக் கொண்டே இருந்தார் . சாரதா அதையெல்லாம் காதிலேயே போட்டுக்கொள்ளாமல் அந்த மேஜையின் முன் போய் நின்றாள். 

சதாசிவம்  பயந்த பார்வையுடன் பதைபதைப்புடன் உட்கார்ந்திருந்தார்.  யாரா இருந்தாலும் அதைப் பத்திக் கவலைப்படாமல்  மனசிலே என்ன கேக்கணும்னு  தோணுதோ அதைக் கேட்டுவிடும் குணம் அவளுக்கு.  அதைப் பற்றி சதாசிவத்துக்குத் தெரியும் , சொன்னாலும்  கேட்க மாட்டாள். என்ன நடக்கப் போகிறதோ என்று பயந்துபோய் அவர்களையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்  அவர். 

வெளிநாட்டுக்கு வந்திருக்கோம் ,இங்க வந்தும் இதெல்லாம் தேவையா என்று அவருக்கு கோவமாய் வந்தாலும் , ஓரளவுக்கு மேல் அடக்கினால் உணர்ச்சி வசப்பட்டு நீங்க  சும்மா இருங்க  என்று ஒரு சொல்லில் அடக்கிவிடுவாள். இங்கே எல்லார் முன்னிலையிலும் மானம் போகும். அதற்கு பயந்து  வெற்றுப் பார்வையுடன் உட்கார்ந்திருந்தார் அவர். 

சாரதா அவர்கள் மேஜையின் முன்னால் சென்று அவர்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிரித்துக் கொண்டே இருந்தவர்கள் சாரதாவின் அருகாமையை உணர்ந்து அவளை ஏறிட்டனர். 

சாரதா ஏதோ கேட்பதும் அவர்கள் அதற்கு பதில் சொல்வதும் சுற்றி இருந்தவர்கள் பேசும் சத்தத்தில் சதாசிவத்துக்கு காதில் விழவில்லை. 

திடீரென்று அந்த நான்கு பெண்மணிகளில் ஒருவர் இவரை நோக்கி ஒரு நிமிடம் இங்கே வர முடியுமா என்று அழைப்பது தெரிந்தது.  சரி நாம் எதிர் பார்த்தது நடந்து போச்சு என்று உணர்ந்து பலி ஆடு போல் அவர்கள் மேஜையை நோக்கி நகர்ந்து அவர்கள் அருகே சென்றார் , இங்க உக்காருங்க  என்று  பக்கத்தில் காலியாய் இருந்த நாற்காலியை காட்டி அவரையும் உட்காரச் சொன்னாள் சாரதா. அவள். உட்கார்ந்தார் சதாசிவம். 

அந்த நான்கு பெண்மணிகளில் மூத்தவளாகத் தெரிந்த பெண்மணி நீங்க இந்தியாவிலேருந்து வந்திருக்கீங்களா நெனைச்சோம்  இவங்க இங்கே வந்து எங்களைக் கேக்கும் போதே நெனைச்சோம் என்றாள். அந்தக் குரலில் இருப்பது இளக்காரமா,ஏளனமா இல்லை கோபமா என்று புரியாமல் மன்னிக்கணும் நான் அப்பவே சொன்னேன், இதெல்லாம் கேக்காதே அதெல்லாம் அவங்க தனி விஷயம்னு இவ கேக்கலை என்றார் பரிதாபமாய். 

அது எப்பிடி முடியும், நம்ம கண்ணுலே படும்போது கேட்டுத்தானே ஆகணும் இதிலென்ன தப்பு ஒருத்தருக்கு  ஒருத்தர் கேட்டுக்கறதுதானே , நாமெல்லாம் ஒரே நாடு.  என்ன இருந்தாலும்  வெளிநாட்டுலே இருக்கும்போது நம்ம நாட்டு மக்களைப் பார்த்தா  ஒரு சந்தோஷம் என்றாள்  சாரதா . 

ஆமாம் நாங்களும்  இந்தியாவிலேருந்துதான் வந்திருக்கோம்,  சென்னையிலே எங்க வீடு என்று பதில் கூறினாலும் மனதுக்குள் போச்சு எல்லாம் போச்சு நம்ப நட்டோட மானத்தையே வாங்கிட்டா இவ என்னும் எரிச்சல் மனதுக்குள் மண்டினாலும் வெளியே அதைக் காண்பித்துக் கொள்ளாமல் லேசான புன்னகையுடன் ,  நீங்க இதெல்லாம் ஒண்ணும் பெரிசா எடுத்துக்காதீங்க இவ என்னோட வொய்ஃப். மனசிலே எதையும் வெச்சிக்க மாட்டா என்றார்  சாரதாவை விட்டுக்கொடுக்காத பாணியில். 

சார் நாங்க நாங்களும்  இந்தியாவிலேருந்துதான் வந்திருக்கோம், நம்ம கல்ச்சர் இருக்கே அதை யாராலேயும்  மாத்த முடியாது. எந்த நாட்டுக்கு போனாலும் நாம மட்டும் நம்ம பழக்க வழக்கத்தை மாத்திக்காம அப்பிடியே இருப்போம். 

சதாசிவம் ஒரு அசட்டுப் புன்னகையுடன்  ஆமா  என்றார் பலகீனமான குரலில்.   உங்க வொய்ஃப் என்ன கேட்டாங்க தெரியுமோ என்று கேட்டுவிட்டு நிறுத்தினாள் அந்தப் பெண்மணி ,  சதாசிவம் இல்லே அங்கே தூரத்தில  இருந்தேனா காதுலே விழலே என்றார் பரிதாபமாய். 

கடல் கடந்து இவ்ளோ தூரம் வந்தும் உங்க வொய்ஃப் அப்பிடியே இருக்காங்க, ஒரு வகையிலே பாத்தா அது நல்லதுதான்னு தோணறது என்றாள்.   

இந்தப் பட்டுப் புடவை இந்த நாட்டிலே கிடைக்கறதான்னு கேக்கறாங்க.? 

இல்லே இந்தியாவிலே சென்னையிலே  நல்லி சில்க்கிலே எடுத்தேன்னு சொன்னேன், அதிலே ஒரு விஷயம் ரொம்ப முக்கியம். நல்லி சில்க்லே இந்த டிசைன் புடவையை எடுக்கும் போதே அந்தக் கடைக்காரர் சொன்னார் ,இந்தப் புடவையைக் கட்டுங்க பாக்கறவங்க எல்லாரும் எங்கே எடுத்தீங்கன்னு கேப்பாங்க, அப்பிடிக் கேக்கலேன்னா அவர் பேரையே மாத்தி வெச்சிக்கறேன்னு சொன்னார். நல்ல வேளை அவர் பேரை மாத்தி வெச்சிக்க அவசியமில்லாம செஞ்சிட்டாங்க உங்க வொய்ஃப் சாரதா . 

நல்ல ரசனையான  பார்வைங்க உங்க வொய்ஃபுக்கு !அதெப்பிடிங்க  இவங்க இதைக் கவனிச்சிட்டு அதே மாதிரி வந்து கேக்கறாங்க. எனக்கு பெருமையா இருக்கு என்றாள் அந்தப் பெண்மணி. என்ன இருந்தாலும் நாம உடுத்தற ஆடையை ,அல்லது நகையைப் பாத்துட்டு அடுத்தவங்க வந்து பாராட்டினாத்தானே நாம் இவ்ளோ வெலை குடுத்து வாங்கினதுக்கு பலன் கிடைக்கும். உங்க வொய்ஃபுக்கு  தேங்க்ஸ் சொல்லணும் என்றாள் அந்தப் பெண்மணி. 

சதாசிவத்துக்கு ஒரு நொடியில் உலகமே தலைகீழாய் மாறியது போன்ற ஒரு திகைப்பு. ஆமாம் ஆமாம் எங்கிட்டே சொல்லிகிட்டே இருந்தா, உங்க புடவையைக் காட்டி எவ்லோ நல்லா இருக்கு பாருங்க ன்னு. 

அப்போ இந்தப் புடவை நல்லா இருக்குன்னு சொல்லுங்க என்றாள் அந்தப் பெண்மணி பெருமையுடன். சதாசிவம் ரொம்ப நல்லா இருக்கு அதுவும் உங்களுக்கு பொருத்தமாய் இருக்கு என்றார். சாரதா கண்களாலேயே  போதும் அசடு வழியாதீங்க  என்று உணர்த்தினாள். 

அதுக்குதான் உங்களைக் கூப்பிட்டோம், முதல்லே இந்தியா போனவுடனே உங்க வொய்ஃபுக்கு இந்தப் புடவையை வாங்கிக் குடுங்க. அவங்களுக்கு  ரொம்ப பிடிக்கும்  இந்தப் புடவை, புடவை மட்டுமில்லேங்க உங்களையும்தான்  என்று கூறிவிட்டு அந்தப் பெண்மணியுடன் வந்திருந்த மற்ற பெண்களைப் பார்த்து கண்சிமிட்டிவிட்டு உரக்க சிரித்தனர் மீண்டும் சரவணபவனே அதிர்ந்தது. சதாசிவமும் உரக்கச் சிரித்தார். 

அந்த அமெரிக்கக் குடும்பம் ஹாய் ,ஹலோ  வீ  எஞ்சாய்ட் யுவர் ஹாப்பினஸ், .ஆல்தி பெஸ்ட் பை  என்று கூறிவிட்டு புன்சிரிப்புடன் இவர்களைக் கடந்து வெளியே சென்றனர். 

சதாசிவமும் ஹாய் ஹலோ,  யெஸ் அஃப்கோர்ஸ்  ஐ யேம் ஆல்ஸோ எஞ்சாயிங்   பை பை  என்றார் நிம்மதியுடன். 

                                                                                             சுபம்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ரிஷி கர்பம்

  1. ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு உரையாடல். 
    டி.ஆர். மஹாலிங்கம் ‘தேன் வந்து பாயுது காதினிலே’ என்ற மாதிரி குழலிசை.

    ஜானகி மாமி: உங்க வைரத்தோடு என்னம்மா டால் அடிக்கிறது. பாபாலாலா?

    பர்வதம் மாமி: இல்லை ஸுரஜ்மல்.

    டி.ஆர்.மஹாலிங்கம்: இவா பேசறமாதிரி குழலிசைத்து விட்டு: வைரத்தோடு எல்லாரும் வெளிலெ போகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *