மேகலா இராமமூர்த்தி

”யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்

 வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்

 பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” என வாயூறிப் பேசுகின்றான் மகாகவி பாரதி. இந்த வரிசையிலே காலத்தால் மூத்தவர் வள்ளுவப் பேராசான். அவரை அடுத்து வருபவர் சேரமன்னனின் இளவலான இளங்கோ. இவ்விருவரின் அறக்கருத்துக்களில் சிலவற்றை ஒப்பு நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

“சான்றோர் சான்றோர் பாலராவர்”(great minds think alike) என்பது பெரியோர் வாக்கு. இக்கருத்தை மெய்ப்பிப்பது போலவே குறளின் கருத்துக்களைப் பலவிடங்களில் எடுத்தியம்புகின்றார் சிலப்பதிகார ஆசிரியர். உதாரணங்கள் சிலவற்றை இங்குக் காண்போம்.

சிலம்பின், மதுரைக் காண்டம் விறுவிறுப்பிற்குப் பஞ்சமில்லாப் பகுதியாகும். அதில் வருகின்ற அடைக்கலக் காதையில் சமணத் துறவியான, கவுந்தியடிகள் பத்தினிப் பெண்டிரின் சிறப்பைப் பற்றி இடைக்குல முதுமகள், மாதரியிடம் கூறும்போது,

”வானம் பொய்யாது; வளம் பிழைப் பறியாது

நீணீல வேந்தர் கொற்றம் சிதையாது

பத்தினிப் பெண்டிர் இருந்த நாடெனும்

அத்தகு நல்லுரை அறியாயோ நீ?” என வினவுகின்றார், இஃது,

”தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை” (குறள்: 55) என்னும் திருக்குறளை நினைவுக்குக் கொண்டுவருகின்றதல்லவா?

அதுபோலவே, சிலம்பில் மற்றுமோர் காட்சி, வழக்குரை காதையில்….

ஆவேசத்தோடு தன் கணவன் கோவலன் கொலையுண்டதைப் பற்றித் தன்முன்னே சொல்லிக்கொண்டிருந்த கண்ணகியைப் பார்த்துப் பாண்டிய மன்னன் புன்சிரிப்பைச் சிந்திவிட்டு, பெண்ணே…!

“கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று!

வெள்வேற் கொற்றம்- காண்!” என்றல்லவா கூறுகின்றான். இவ்வரிகள்,

”குடிப்புறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

வடுவன்று வேந்தன் தொழில்”(குறள்: 549)  என்னும் குறட்கருத்தின் பிரதிபலிப்பாகவே தோன்றுகின்றது.

அடுத்து, சிலப்பதிகாரத்தின், ’வஞ்சின மாலை’யில் மாபத்தினி கண்ணகி, பாண்டியன் தேவியைப் பார்த்துக் கூறும் வரிகள் இவை:

“முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு

பிற்பகல் காண்குறூம் பெற்றியகாண்!”

என்ன விந்தை!! தெய்வப் புலவரின் தமிழ்மறையும் இதேகருத்தை “இன்னா செய்யாமை” என்னும் அதிகாரத்தில் பறைசாற்றியுள்ளது. இதோ அக்குறள் வரிகள்..

“பிறர்க் கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

பிற்பகல் தாமே வரும்.” (குறள்: 319)

சிலம்பின் ”வஞ்சிக் காண்டம்” சேரன் செங்குட்டுவன் கண்ணகித் தெய்வத்திற்குச் சிலை எடுத்த வரலாற்றை விரித்துரைக்கின்றது. அதில், மாடல மறையோன் ’யாக்கை நிலையாமையைப் பற்றியும், ’அறக்கள வேள்வி’ செய்யவேண்டியதன் அவசியத்தையும் செங்குட்டுவனுக்கு எடுத்துரைக்கும்போது…..

“நாளைச் செய்குவம் அறமெனின் இன்றே

கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்” என்று செப்புகின்றான்.

இதே பொருளில் பல குறட்பாக்களை நாம் “நிலையாமை” எனும் அதிகாரத்தில் காண்கிறோமே…

அவற்றுள் ஒன்று, நம் பார்வைக்கு…..

“நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யப் படும்.” (குறள்: 335)

இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தது போல் அமைந்துள்ளது சிலப்பதிகாரத்தின் இறுதிப் பகுதியான ”வரந்தரு காதை”. குறளும், சிலம்பும் கைகோர்த்துக்கொண்டு ஒத்த அறக்கருத்துக்களை ஓங்கி ஒலிக்கின்ற அழகை என்னவென்பது..? தமிழன்பர்கள் அனைவரும் படித்து மகிழவேண்டிய பகுதியிது!

 “தெய்வம் தெளிமின்: தெளிந்தோர்ப் பேணுமின்!

ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;

தானம் செய்ம்மின்; தவம் பல தாங்குமின்;

செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட்பு இகழ்மின்;

———————————————————————————

கள்ளும் களவும் காமமும் பொய்யும்

வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்

இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா இவை வரந்தரு காதையின் வைர வரிகள்…!

இவ்வரிகளுக்கு இணையான குறட் கருத்துக்களை இனிக் காண்போம்.

வள்ளுவத்தின், “கடவுள் வாழ்த்து” தெய்வம் தெளிவதற்கு நமக்குப் பேருதவி செய்கின்றது. “நீத்தார் பெருமை” என்ற அதிகாரம், பற்றற்ற உயர்ந்தோரின்-தெளிந்தோரின் சிறப்பை வகைப்படுத்துகின்றது.

அதுபோன்று,

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா வுயிரும் தொழும்” (குறள்: 260) என ஊனூண் துறப்பதின் அவசியத்தை குறள் கூறுகின்றது. உயிர்க்கொலை அதைவிடக் கொடியது என்பதனை,

”அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாம் தரும்” (குறள்: 321) என்ற குறளமுதம் “உயிர்க் கொலை நீங்குமின்” என்பதன் விளக்கம் தானே?

தானம் செய்வதின் சிறப்பை “ஈகை”யும், தவத்தின் பெருமையை “தவம்” என்ற அதிகாரமும் தெளிவாய்ச் சொல்லவில்லையா?

”செய்ந்நன்றி அறிதலை”யும், ”தீநட்பின்” தன்மையையும் அறிதற்குத் திருக்குறளினும் விஞ்சிய

வழிகாட்டி உண்டோ?

”உண்ணற்க கள்ளை” எனவும், ”கள்ளாமை காக்க” எனவும் வள்ளுவப் பேராசான் நமக்கு அறிவுறுத்த வில்லையா?

“காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்

நாமம் கெடக்கெடும் நோய்” (குறள்: 360) என்பதும்,

“பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று” (குறள்: 297) என்பதும் வள்ளுவரின் வாய்மொழிகளே!

”பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்

மக்கட் பதடி யெனல்”(குறள்: 196) என்று பயனில சொல்லும் “வெள்ளைக்கோட்டி”யைக் கடுமையாய்ச் சாடுகின்றார் வள்ளுவர்.

அதுபோல்,

”நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும்

பெருமை யுடைத்திவ் வுலகு” (குறள்: 336) என்று ”நிலையாமை” குறித்த உண்மைகளையும் நெகிழ்ச்சியாய் வெளியிடுகின்றார்.

இவ்வொப்பீடுகள் வாயிலாய் நாம் அறிவது என்ன? சிலம்பில் எங்கு நோக்கினும் குறட் கருத்துக்கள் குவிந்து கிடக்கின்றன என்பது தானே!

இவ்வுயரிய கருத்துக்கள் படிப்போருள்ளங்களைப் பரவசப்படுத்துவதோடல்லாமல், வள்ளுவரின் வழித்தோன்றலாகவே இளங்கோவடிகளை எண்ணி மகிழச்செய்கின்றது!!

சான்றோரின் சிந்தனைகள் ஒத்திருப்பது உண்மையே அல்லவா!

 படங்களுக்கு நன்றி:

 http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Puhar-ILango.jpg

பதிவாசிரியரைப் பற்றி

14 thoughts on “வள்ளுவர் வழியில் இளங்கோ!!

  1. ஆட்சி செய்வதில் தவறிழைத்தவர்களை அறம் தண்டிக்கும்;
    ஊழ்வினை, விடாது பற்றித் தொடரும்;
    கற்புடைப் பெண்டிரை உயர்ந்தவர்கள் போற்றுவார்கள் என்னும் மூன்று பெரும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது சிலப்பதிகாரம்.
    சமண சமயதைச் சார்ந்த இளங்கோவடிகளின் இயற்றிய சிலப்பதிகாரத்தில் சமணக் கோட்பாட்டு விளக்கங்களும் அதிகம் என்பதும் தமிழ் அறிஞர்களின் கருத்து.

    வள்ளுவர் பொது மறையாக குறளை வழங்கி இருந்தாலும் அவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்ற ஆதாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
    உதாரணமாக சமணத்தின் முதல் தீர்த்தங்கரரான “ஆதிபகவன்” கொண்டே முதல் குறள் தொடங்குகிறது.

    வள்ளுவர் சமண சமயத்தை சேர்ந்தவர் என்று கருதும் கோட்பாட்டிற்கு ஆதாரமாக விளங்குகிறது மேகலா ராமமூர்த்தியின் ஒப்பீட்டுக் கட்டுரையின் கருத்துக்கள்.

    …தேமொழி

  2. திரு. தேமொழி மற்றும் திரு. பானுகுமார் ஆகியோரின் பின்னூட்டத்திற்கு என் நன்றிகள். ஆம், வள்ளுவரும், இளங்கோவும் சமணக்கோட்பாடுகளை அதிகம் மொழிவதாகவே எண்ண இடமளிக்கின்றது அவர்தம் கருத்துக்கள்.

    நாலடியார் பாடல்களை நாம் காணும்போது, இதே கருத்துக்கள் அங்கேயும் வலியுறுத்தப் படுவதை உணரலாம். மக்களைப் பண்படுத்தும், உயர்த்தும் பல உயரிய கருத்துக்களைச் சமணம் தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  3. அன்புக்குரிய மேகலா,
    நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள்.
    சிலம்பையும் குரலையும் ஆழ்ந்து படித்துள்ளீர்கள். மகிழ்கிறேன்.

    புவனேஷ்வர்

  4. அன்புக்குரிய மேகலா,
    நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள்.
    சிலம்பையும் குரளையும் ஆழ்ந்து படித்துள்ளீர்கள். மகிழ்கிறேன்.

    புவனேஷ்வர்

  5. சமணத்தை விட காலத்தால் முந்திய ஹிந்து (வேத மத) நன்னெறிகளை உபதேசங்களை இக்காலத்தவர் படிக்காமலேயே சமணம் மற்றும் பௌத்தம் தழுவிய நூற்களை ஊன்றிப் படிப்பதால் வரும் விபரீதமாகும் வள்ளுவரை சமணர் என்று ஆக்க முயல்வதும் வேத மதத்துக்குப் புறம்பான “தமிழ் நாகரீகம்” என்று ஒன்று இருந்து அத சேர சோழ பாண்டியர்கள் வளர்த்ததாகவும் கூர முனைவது.
    இளங்கோ தம்மை சமணர் என்று வெளிப்படையாகக் கூரிக்கொண்டடால் தான் அவர் சமணர் என்று நமக்குத் தெரியும். இல்லாவிடில் அவர் அருகரை விட ஹிந்து தெய்வங்களைத்தான் அதிகம் போற்றி உள்ளார். குரவைக்கூத்து ஆகட்டும், நாராயணனைப் போற்றும் பாடல்கள் ஆகட்டும், பாலை மறவர் கலையை ஊர்தியாகக் கொண்ட கொற்றவையை சாலினி என்னும் சிறு பெண் மீது ஏறியதாக போற்றியதும் ஆகட்டும், சேரநாட்டின் பாசண்டச்சாத்தன் (சாஸ்தா/ஐயப்பன்) பற்றிய பாடல்கள் ஆகட்டும், “ஆடக மாடத்து அறிதுயில் புரிவோன்” ஆகிய பத்மநாபஸ்வாமி பற்றிய தகவல்கள் ஆகட்டும், மாடல மறையோன் ஆகிய வைதீகன் ஆகட்டும்……. கவுந்தி அடிகள், கண்ணகி மற்றும் சாரணர் மூலம் மட்டுமே அவர் சமண சமயத்தை போற்றுகிறார். கண்ணகி எங்கே சமணத்தை குறிக்கிறாள் என்றால் கோவலனை திரும்பப்பெற தீர்த்தத்தில் மூழ்கி வழிபடலாம் என்று தேவந்தி சொல்லும் பொது “பீடு அன்று” என்று அதை மறுக்கிறாள் கண்ணகி. இது சமணக் கொள்கை. (தீர்த்த மூடம் தெய்வ மூடம் என்று இதை விளக்கும் சமணம்).

    ஆக, ஹிந்து கொள்கைகளை இவ்வளவு கூறுவதால் இளங்கோவை சமணர் இல்லை என்று சொல்லலாமா?

    திருக்குறளில் வள்ளுவர் கூறிய அனைத்துமே வைதீகமானவை. ஆறம் பொருள் இன்பம் என்று வகைப்படுத்தியது அநாதி காலம் தொட்டே ஹிந்து மதம் – வைதீகம் – பாரதம் முழுவதும் தர்மம் அர்த்தம் காமம் என்று சொல்லுவதை தழுவியே. இரண்டுமே வீடு அதாவது மோக்ஷத்தை வெளிப்படையாக சொல்லாமல் அரதிலேயே சொல்லிவிடுவது வழக்கம்.

    அநாதி காலமாக வைதீகம் சொன்னதைத்தான் கிளை மதமான சமணமும் எடுத்துக்கொண்டது. வள்ளுவர், வேதா மதத்தில் இருந்து சமணம் எடுத்துக்கொண்ட கருத்துக்களை சொல்வதாலேயே அவர் சமணர் ஆகிவிட மாட்டார். சமணரின் லக்ஷணம் வேத மதத்தை கண்டிப்பது. வள்ளுவர் எங்கே வேத நெறியை கண்டித்தார்? ஒரு குரள் காட்ட முடியுமா? முடியாது.

    கொல்லாமையை அவர் சொல்லுவது துறவின் பெருமையை கூறும் இடத்தில். சன்யாசிக்கு அஹிம்சை விதிக்கப்பெற்ற தருமம். அதில் வியப்பென்ன?

    அகர முதல என்று அவர் ஆரம்பிப்பது வாஸ்தவத்தில் சைவத்தை சார்ந்தது. நடராஜரின் உடுக்கிளுந்து அ, இ, உண், ருலுக் என்ற அக்ஷரங்கள் உதிர்ந்து படைப்புக்கு ஆதாரம் ஆயின என்பது எனது வைதீகனுக்கும் தெரியும். முதலில் வருவது அகரம். அம்பாளை ஐம்பத்து நாலு அக்ஷரங்களால் ஆன சரீரத்தை உடையவள் என்று சாக்தம் சிலாகிக்கும். அங்கும் பொருந்துகிறது.

    வேத மதத்தை கண்டித்த மதம் சமணம். அதை சார்ந்தவர் வேத மதத்தை கண்டித்து இருப்பார். அல்லது வேத மதத்தின் கொள்கைகளை தழுவி பாடாமலாவது இருந்திருப்பார். இது இரண்டுமே செய்யாத வள்ளுவரை சமணர் என்பது நகைப்பிற்குரியது.

    இது பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரையே உண்டு என்னிடம். இப்போது அதை பிரசுரிப்பதற்கு இல்லை. சில நாள் ஆகட்டும். முதலில் நமது பாரதத்தின் நூல்களை பாரபக்ஷம் இன்றி படித்தாலே தெரிந்து விடும். எது எந்த மதத்தின் கருத்து என. மகாபாரதத்தின் சாந்தி பர்வம், அனுசாசன பவம் இதில் அடங்காத கருத்து திருக்குறளின் ஆறம், பொருளில் இல்லை. வைதீக கருத்துகளைத்தான் தமிழில் பாகாக தந்தார் வள்ளுவர். அந்தக் காலத்து சமூகத்தை சரியாக புரிந்து கொள்ளாமையால் வந்த குழப்பம் + தனிப்பட்ட (பிரசாரம் செய்யப்பட்ட) விருப்பு வெறுப்புகள் தான் இப்போது தமிழ் சரித்திரத்தை நாம் தவறாக சித்தரிக்கும் சோகத்தின் மூலம்.

    அன்புடன்,
    புவனேஷ்வர்

  6. சமணத்தை விட காலத்தால் முந்திய ஹிந்து (வேத மத) நன்னெறிகளை உபதேசங்களை இக்காலத்தவர் படிக்காமலேயே சமணம் மற்றும் பௌத்தம் தழுவிய நூற்களை ஊன்றிப் படிப்பதால் வரும் விபரீதமாகும் வள்ளுவரை சமணர் என்று ஆக்க முயல்வதும் வேத மதத்துக்குப் புறம்பான “தமிழ் நாகரீகம்” என்று ஒன்று இருந்து அத சேர சோழ பாண்டியர்கள் வளர்த்ததாகவும் கூற முனைவது.

    இளங்கோ தம்மை சமணர் என்று வெளிப்படையாகக் கூறிக்கொண்டடால் தான் அவர் சமணர் என்று நமக்குத் தெரியும். இல்லாவிடில் அவர் அருகரை விட ஹிந்து தெய்வங்களைத்தான் அதிகம் போற்றி உள்ளார். குரவைக்கூத்து ஆகட்டும், நாராயணனைப் போற்றும் பாடல்கள் ஆகட்டும், பாலை மறவர் கலையை ஊர்தியாகக் கொண்ட கொற்றவையை சாலினி என்னும் சிறு பெண் மீது ஏறியதாக போற்றியதும் ஆகட்டும், சேரநாட்டின் பாசண்டச்சாத்தன் (சாஸ்தா/ஐயப்பன்) பற்றிய பாடல்கள் ஆகட்டும், “ஆடக மாடத்து அறிதுயில் புரிவோன்” ஆகிய பத்மநாபஸ்வாமி பற்றிய தகவல்கள் ஆகட்டும், மாடல மறையோன் ஆகிய வைதீகன் ஆகட்டும்……. கவுந்தி அடிகள், கண்ணகி மற்றும் சாரணர் மூலம் மட்டுமே அவர் சமண சமயத்தை போற்றுகிறார். கண்ணகி எங்கே சமணத்தை குறிக்கிறாள் என்றால் கோவலனை திரும்பப்பெற தீர்த்தத்தில் மூழ்கி வழிபடலாம் என்று தேவந்தி சொல்லும் பொது “பீடு அன்று” என்று அதை மறுக்கிறாள் கண்ணகி. இது சமணக் கொள்கை. (தீர்த்த மூடம் தெய்வ மூடம் என்று இதை விளக்கும் சமணம்).

    ஆக, ஹிந்து கொள்கைகளை இவ்வளவு கூறுவதால் இளங்கோவை சமணர் இல்லை என்று சொல்லலாமா?

    திருக்குறளில் வள்ளுவர் கூறிய அனைத்துமே வைதீகமானவை. ஆறம் பொருள் இன்பம் என்று வகைப்படுத்தியது அநாதி காலம் தொட்டே ஹிந்து மதம் – வைதீகம் – பாரதம் முழுவதும் தர்மம் அர்த்தம் காமம் என்று சொல்லுவதை தழுவியே. இரண்டுமே வீடு அதாவது மோக்ஷத்தை வெளிப்படையாக சொல்லாமல் அறத்திலேயே சொல்லிவிடுவது வழக்கம்.

    அநாதி காலமாக வைதீகம் சொன்னதைத்தான் கிளை மதமான சமணமும் எடுத்துக்கொண்டது. வள்ளுவர், வேத மதத்தில் இருந்து சமணம் எடுத்துக்கொண்ட கருத்துக்களை சொல்வதாலேயே அவர் சமணர் ஆகிவிட மாட்டார். சமணரின் லக்ஷணம் வேத மதத்தை கண்டிப்பது. வள்ளுவர் எங்கே வேத நெறியை கண்டித்தார்? ஒரு குறள் காட்ட முடியுமா? முடியாது.

    கொல்லாமையை அவர் சொல்லுவது துறவின் பெருமையை கூறும் இடத்தில். சன்யாசிக்கு அஹிம்சை விதிக்கப்பெற்ற தருமம். அதில் வியப்பென்ன?

    அகர முதல என்று அவர் ஆரம்பிப்பது வாஸ்தவத்தில் சைவத்தை சார்ந்தது. நடராஜரின் உடுக்கில் இருந்து அ, இ, உண், ருலுக் என்ற அக்ஷரங்கள் உதிர்ந்து படைப்புக்கு ஆதாரம் ஆயின என்பது எனது வைதீகனுக்கும் தெரியும். முதலில் வருவது அகரம். அம்பாளை ஐம்பத்து நாலு அக்ஷரங்களால் ஆன சரீரத்தை உடையவள் என்று சாக்தம் சிலாகிக்கும். அங்கும் பொருந்துகிறது.

    வேத மதத்தை கண்டித்த மதம் சமணம். அதை சார்ந்தவர் வேத மதத்தை கண்டித்து இருப்பார். அல்லது வேத மதத்தின் கொள்கைகளை தழுவி பாடாமலாவது இருந்திருப்பார். இது இரண்டுமே செய்யாத வள்ளுவரை சமணர் என்பது நகைப்பிற்குரியது.

    இது பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரையே உண்டு என்னிடம். இப்போது அதை பிரசுரிப்பதற்கு இல்லை. சில நாள் ஆகட்டும். முதலில் நமது பாரதத்தின் நூல்களை பாரபக்ஷம் இன்றி படித்தாலே தெரிந்து விடும். எது எந்த மதத்தின் கருத்து என. மகாபாரதத்தின் சாந்தி பர்வம், அனுசாசன பவம் இதில் அடங்காத கருத்து திருக்குறளின் அறம், பொருளில் இல்லை. வைதீக கருத்துகளைத்தான் தமிழில் பாகாக தந்தார் வள்ளுவர். அந்தக் காலத்து சமூகத்தை சரியாக புரிந்து கொள்ளாமையால் வந்த குழப்பம் + தனிப்பட்ட (பிரசாரம் செய்யப்பட்ட) விருப்பு வெறுப்புகள் தான் இப்போது தமிழ் சரித்திரத்தை நாம் தவறாக சித்தரிக்கும் சோகத்தின் மூலம்.

    அன்புடன்,
    புவனேஷ்வர்

  7. மதிப்பிற்குரிய திரு.புவனேஷ்வர்,

    பொதுவாக நம் மக்களிடம் உள்ள தவறான பழக்கம், யாரவது ஏதாவது சாதனை புரிந்து விட்டால், அவரை தம் மதத்தைச் சேர்ந்தவர், சாதியைச் சேர்ந்தவர், தெருவைச் சேர்ந்தவர், ஊரைச் சேர்ந்தவர், மாநிலத்தைச் சேர்ந்தவர், நாட்டைச் சேர்ந்தவர் என்று குறுகிய நோக்கத்துடன் சொந்தம் கொண்டாடுவர். அப்படி சொந்தம் கொண்டாடுவதால் தமக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்கும் என்ற ஆசையிலோ அல்லது அந்தச் சாதனை செய்தவரின் இனத்தைச் சேர்ந்தவன் நான் என்று சொல்லிக் கொள்வதில் கிடைக்கும் அற்ப இன்பத்துக்காகவோ அவ்வாறு சொல்லிக் கொள்வர். நான்கு அல்லது ஐந்து தலைமுறைக்கு முன்பு வெளிநாட்டில் குடியேறியவர்களின் வம்சாவழியினர் எதாவது சாதனை புரிந்தால், அவர்களது சாதனைக்கு நம் நாடு எந்தவிதப் பங்கும் ஆற்றி இருக்காத நிலையில், தனிப்பட்ட முறையில் தாமும் எந்தவித உதவியும் செய்திருக்காத நிலையில், அவர்கள் இந்திய வம்சாவழியினர் என்று சொல்லி நாம் பெருமைப் பட்டுக் கொள்ளும் வழக்கம் இன்றும் நம்மிடையே இருக்கிறது.

    சாதி/சமய அரசியல்வாதிகளைப் போல வள்ளுவரையும் சமண/இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று அந்த அந்த மதத்தினர் சொந்தம் கொண்டாடுவது ஏதோ ஒரு குறுகிய நோக்கத்திற்காகத்தான் என்பது மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளது. திருக்குறள் என்பது சமண நூலாகவோ, இந்து நூலாகவோ அறியப்படவில்லை. அது ஒப்பற்ற உலகப் பொதுமறையாகப் போற்றப் படுகிறது. அதுபோலவே வள்ளுவரும் சமய அடையாளங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு மாமனிதர்.

    வேத மதத்திற்குப் புறம்பான “தமிழ் நாகரீகம்” என்று ஒன்று இருந்தது பற்றித் தெரியவில்லை. ஆனால் வேதம் என்பது மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவில் படிப்படியாகக் குடியேறிய ஆரியர்களால் படைக்கப்பட்ட ஒன்று என்பது அனைத்து வரலாற்று ஆசிரியர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்று உண்மை. ஆரியர்கள் இந்தியாவில் குடியேறுவதற்கு முன்பு இங்கு வாழ்ந்து வந்த மக்கள் அந்த அந்தப் பகுதிகளின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளிலும் ஆரியப் பழக்க வழக்கங்களுக்கு முற்பட்ட தத்தம் கலாச்சாரத்தைப் பின்பற்றி வாழ்ந்து இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழகம் பூகோள ரீதியாக இந்தியாவின் கடைக்கோடியில் இருப்பதால், ஆரியக் குடியேற்றத்தின் கடைசிக் கட்டத்தில் தான் தமிழகத்தில் ஆரிய கலாச்சாரம் பரவி இருக்க வேண்டும். எனவே வேத மதத்திற்குப் புறம்பான என்று சொல்வதைவிட, வேத மதத்திற்கு முற்பட்ட தமிழ் கலாச்சாரம்/நாகரீகம் தமிழகத்தில் இருந்திருக்க வேண்டும்.

  8. மதிப்பிற்குரிய திரு சச்சிதானந்தம் அவர்களே,

    தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

    முதல் இரண்டு பத்திகளில் நான் ஆட்சேபிக்க பெரிதாக ஒன்றும் இல்லை.
    வள்ளுவர் தனது மதத்தை அறிவிக்காத காரணம் அக்காலத்தில் by default வேத மதம் தான் பின்பற்றப் பட்டது. கிளை மதங்களான சமணமும் பௌத்தமும் சார்ந்தவர்கள் தங்கள் மத அபிமானத்தை சொல்லி அறிவிக்க வேண்டியதை இருந்தது.

    நிற்க.

    ஆரியப் படை எடுப்பு எனபது நமது நாட்டின் ஒருமைப்பாட்டை குலைக்க வெள்ளையர்கள் உள்நோக்கத்துடன் கட்டி விட்ட கதை எனபது இன்று பாரதத்தில் பெரும்பான்மையினருக்கும் தெளிந்து வரும் வேளையில் தாங்கள் அன்னியர் பேச்சைக் கேட்டுக்கொண்டுசொல்வோர் பேச்சை கூறுவது வருத்தத்துக்கு உரியது.
    திராவிடன் எனபது இனம் சார்ந்த பெயர் அல்ல. விந்திய மலைக்கு தெற்கே உள்ள அனைத்து பிராந்தியங்களும் திராவிட தேசம். விந்திய மலைக்கு வடக்கே உள்ளவர்கள் கௌடர்கள். தெற்கே உள்ளவர்கள் திராவிடர்கள். இதில் இனம் குறித்த சண்டையே இல்லை. பூகோள அடிப்படையில் இந்த பெயர்கள்.

    ஆரியன் என்றால் நன்னடத்தை உடையவன் என்று பொருள். இதன் பெண்பால் ஆரியை. (ஆர்யா). இதுவே தமிழில் ஐயை (சிலப்பதிகாரத்தில் மாதரி மகள் பெயரும் ஐயை). இதன் எதிர்ச்சொல் த்ராவிடன் அல்ல. உண்மையான எதிர்ச்சொல் எதுவோ அதை இங்கே பிரஸ்தாபிக்க வேண்டாம் என்று விட்டு விடுகிறேன்.

    த்ரவிட என்னும் வடமொழி சொல்லும் தமிழ் என்னும் நம் மொழிப்பெயரும் ஒன்றே. ட சப்தம் எப்படி ழ ஆனது? இது வேத சம்பந்தம் உடையது. சோழ தேசம் என்பதே பெயர்க்காரணம் பார்த்தால் வேத சம்பந்தம் உடையது. (சாம வேத பூமியான தமிழகத்தில் யஜூர் வேதத்தின் டகாரம் சிக்ஷா விதிப்படி ளகாரம் ஆகும். பிராந்திய சிறப்பின் வழக்கில் ழகாரம் ழகாரம் ஆகும். ஆந்திரத்தில் யஜூர் வேதம். அவர்கள் நம் திருப்பாவையை பாடும் பொது மார்கழி என்பதற்கு பதில் மார்கடி என்று பாடுவார்கள். அவர்கள் வாயில் ழகாரம் நுழையாது. தெலுங்கில் டகாரம், தான் வரும் இதற்கு மூலம் எங்கே என்று தேடி பாரபக்ஷம் இன்றி, வெறுப்புகள் இன்றி பார்த்தால் வேத வழக்கு என்று தான் வரும்.)

    வடமொழியும் வேதமும் யாரோ தந்ததல்ல. சோழர்களும் பாண்டியர்களும் சேரர்களும் பல்லவர்களும் வடமொழியையும் தமிழையும் இரு கண்களாக பாவித்து வந்தனர். சமய சித்தாந்த வழக்கில் கூட “சிவாத் பரதரம் நாஸ்தி” என்று குலோத்துங்கன் வடமொழியில் தானே ஓலை எழுதி ராமானுஜருக்கு அனுப்பினான்? அதற்கு கூரத்தாழ்வார் “அசதி த்ரோணம் தத:பரம்” என்று வடமொழியில் தானே மறுமொழி சொன்னார்? அவரை விடுவோம். இவன் சோகன் தானே? இவன் உண்மையிலேயே தமிழை மட்டும் தான் ஆதரித்தான், ஆரியப் படைஎடுப்பினால் வந்த வடமொழியை இவன் சேர்க்கவில்லை என்றால் ஏன் இவன் வடமொழியில் எழுத வேண்டும்? செப்பேடுகளை ஏன் வடமொழியில் பண்ண வேண்டும்? வேதம் படித்து ஒதுவோருக்கு ஏன் இறையிலி நிலங்கள் வழங்க வேண்டும்?

    வெள்ளையர்கள் சொல்லிக் கொள்ளட்டும்.அவர்கள் உள்நோக்கம் நாம் அறிவோம். நம்மவர்களே பல தலைமுறைகளாக அதற்கு தாளம் போட்டது வேதனை. இனியாவது மாறுவோமே? நாம் ஒரு தாய்ப் பிள்ளைகள்.

    இரண்டு பக்கமும் உள்ள நியாயம் அறிந்து கொள்ளாமல் (அறிந்து கொள்ள விருப்பம் இல்லாமல்) முடிவு கட்டுவோருக்கு என்ன சொல்ல? உரிமை கொண்டாடுவதைப் பற்றி சொன்னீர்கள். உண்மையில் வைதீகமான வள்ளுவரை நீங்கள் சொன்னது போல தமிழுக்கு மட்டும் என்று உரிமை கொண்டாடுவோர் அவர்களே.

    தமிழையும் வடமொழி நூல்களையும் படித்தோர் திருக்குறளை ஊன்றி படித்தால், அதில் உள்ளவை அனைத்தும் வைதீகமானவை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கும். வடமொழி தேவையில்லை, அது வேறு என்று தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருப்போருக்கு இவற்றை சொல்லுதல் கடலிற்கரைத்த காயம் என்பது மெத்த வருத்தத்திற்கு உரியது.

    அன்புடன்
    புவனேஷ்வர்

  9. கருத்துரைகள் கட்டுரையினைச் சார்ந்திருப்பது கட்டுரையாளருக்கு பயன்தரும் வகையில் அமையும். 
    நன்றி 

  10. வள்ளுவரின் சமயத்தை மேதகு கட்டுரையாளர் மேகலா அவர்கள், கட்டுரையின் எந்த இடத்திலும் கூற முயலாத போதும் முதல் பின்னூட்டமாக சமயத்தைக் கொண்டு வந்தவரே, பின் வரும் கருத்துரைகள் கட்டுரையினை சார்ந்திருப்பது கட்டுரையாளருக்கும் பயன் தரும் வகையில் அமையும் என அறிவுறுத்தும் மேன்மைக்கு எனது வந்தனங்கள்.

    இந்த தலைப்பில் கால விளம்பம் செய்ய அடியேனுக்கு விருப்பமில்லை. அவரவருக்கும் அவரவர் கருத்து என்ற அளவில் விட்டு விடுகிறேன்.

    புவனேஷ்வர்

  11. திரு. புவனேஷ்வர்,

    தங்களது விளக்கங்களுக்கு எனது நன்றிகள். தங்கள் வாயிலாகப் பல புதிய செய்திகளைத் தெரிந்து கொண்டேன். நன்றி. ஆரியர்கள் என்றால் தமிழர்களுக்கு ஆகாதவர்கள் என்ற எண்ணத்திலோ அல்லது வடமொழியின் மீது உள்ள வெறுப்புணர்விலோ நான் எனது கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை. வடமொழியில் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் மேல் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளேன். ஆரியக் குடியேற்றம் என்று ஒன்று நடந்ததோ இல்லையோ, இன்று நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வுடனேயே சகோதர உணர்வுடன் வாழுகின்றோம்.

    அனால் பள்ளி நாட்களில் இருந்து நான் படித்த அனைத்து நூல்களும் ஆரியக் குடியேற்றம் என்ற ஒன்று நடந்ததாகவே கூறுகின்றன. இந்திய அரசின் அதிகாரப்பூர்வ The Gazetteer of India விலும் ஆரியக் குடியேற்றம் என்பது எப்போது ஆரம்பித்தது என்பதை மிகச் சரியாக அறிய முடியாவிட்டாலும் அது கிமு. 2500 ல் ஆரம்பித்துப் படிப்படியாக இந்தியாவின் வடமேற்கு, வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் ஆரியக் குடியேற்றம் கிமு.1000 ல் குடியேற்றம் முழுமை அடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் வர்ணாசிரம முறைகள் படிப்படியாகப் புகுத்தப்பட்டதைப் பற்றியும் அந்த நூல் விரிகாக விளக்குகிறது. இதன் அடிப்படையிலேயே ஆரியக் குடியேற்றத்திற்கு முந்தைய தமிழ் கலாச்சாரம்/நாகரீகம் இருந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டேன்.

    மேலும் ஆரியக் குடியேற்றம் என்பது இந்தியாவில் மட்டும் நடைபெறவில்லை. மத்திய ஆசியாவில் இருந்து அவர்கள் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு நோக்கி நகர்ந்ததாகவும், அப்படித் தெற்கு நோக்கி வந்தவர்களில் ஒரு பகுதியினரே இந்தியாவில் நுழைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் தாங்கள் ஆரியக் குடியேற்றம் என்பது ஆங்கிலேயர்களால் அவிழ்த்து விடப்பட்ட ஒரு கட்டுக்கதை என்று கூறியுள்ளீர்கள். அதற்கான ஆதார நூல்கள் பற்றிக் கூறினால் அதைப் பற்றிப் படித்து மேலும் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

    நன்றி!

  12. மதிப்பிற்குரிய திரு. சச்சிதானந்தம் அவர்களே,
    நான் குறிப்பாக தங்களை சுட்டவில்லை. அங்ஙனம் தங்களுக்குப் பட்டிருப்பின் மன்னிப்பீராக.
    பள்ளி நாட்களில் ஆரிய குடியேற்றம் என்று நீங்களும் நானும் படித்த படிக்கும் விஷயங்கள் முற்றிலும் பொய்யே. அது இந்திய அரசே செய்வது தான் வருந்தத் தக்கது. மகாபாரதம் நடந்ததே கி மு 3000 சொச்சம் என்கிற பொழுது எப்படி “ஆரியக் குடியேற்றம்” அதற்குப்பின் நடந்திருக்க முடியும்? ஆதி சங்கர பகவத் பாதர் காலம் கி மு ஐநூற்றி சொச்சம். அவர் புனருத்தாரணம் செய்த வேத மதம் அவருக்கும் மிக முன்சியது. கி பி எழுநூறு சொச்சத்தில் வாழ்ந்ததாக இன்று கூறுகிறார்களே அது தவறு. அவர் காஞ்சி சங்கர மடத்தின் ஆசாரிய பீடத்தை அலங்கரித்த முப்பத்து எட்டாவது பீடாதிபதியான அபிநவ சங்கரர் ஆவார்.
    இந்திய அரசு வெளியிடும் நூல்களை விடுத்து, எந்த கலாசாரத்தை பற்றி அறிய நினைக்கிறோமோ அந்த கலாசாரத்திலேயே நம்பிக்கையோடு பின்பற்றி இன்றும் இருப்பவர்களை கேட்க வேண்டும். உண்மையான வைதீகர்களை (வேதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் வைதீகர்கள். பிராம்மணர் மட்டும் அல்ல) கேட்க வேண்டும்.

    ஆரிய குடியேற்றம் அரசியல் மற்றும் இன்னும் ஆழமான உள்நோக்கங்களுடன் மேலை நாடுகள் செய்த மூளைச் சலவை. அட்சி நம்மவர்களும் நம்பி புத்தகங்களில் போடுவது இன்னும் வேதனை.

    தாராளமாக தனிப்பட்ட மின்னஞ்சல் அனுப்புங்கள். பேசலாம். இதை இப்போது இங்கே பின்னூட்டங்களில் விவாத மேடை ஏற்றுவது உசிதம் அன்று என அபிப்ராயப் படுகிறேன்.

    பணிவன்புடன்,
    புவனேஷ்வர்

  13. அபிநவ சங்கரர் வாழ்ந்த காலம் கி பி ஏழாம் நூற்றாண்டு. அதாவது கி பி அறுநூற்று சொச்சம். கி மு, கி பி ஆகிய காலப் புள்ளிகள் நமக்கு தேவை அற்றவை. நமது தேசத்தின் வரலாறு அதற்கும் மிக முந்தியது.

    தங்களால் ஆளப்பட்ட தேச மக்கள் தங்களை விட நாகரிகத்தில் மிக தொன்மையானவர்களாக இருந்ததை மேலை நாட்டாரால் போருக்க முடியவில்லை. வேதம் இருந்தது என்பதை மறுக்கத் தான் இயலவில்லை, அதை வேற்று இனம் என்று சொல்லுவோம், அதையும் நமது கிறிஸ்து காலத்துக்கு ரொம்ப கிட்டக்க இழுத்து விட்டு கதை கட்டி விடுவோம், அப்போது இனி வரும் இந்தியர்கள் தங்கள் தொன்மையை, பெருமையை தாங்களே மறுதலித்து தங்களுக்குள் சண்டையிடுவர், தங்கள் மதாபிமானம் போன பின்னால் அவர்களை நம் பக்கம் இழுப்பது சுலபம் என்ற எண்ணம் அவர்களுக்கு. அதனால் ரொம்ப நடுவு நிலைமையோடு சொல்லுவது போல காட்டிக்கொண்டு அவர்களின் vested interests காக இப்படி சொன்னார்கள்.

    நம்மவர்களும் அதையே வேதவாக்காக எண்ணிக்கொண்டு சொல்லுகிறார்கள்.

    புவனேஷ்வர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *