பசியும், சுவையும், வளர்ச்சியும்.

இன்னம்பூரான் & தேமொழி

விலங்கினங்களின் உணவுப் பழக்கத்தை வைத்து தாவரஉண்ணி, விலங்குண்ணி, அனைத்துண்ணி என்று அவற்றை மூன்று வகைகளாகப் பிரிக்கிறோம்.  நம் மனித இனம் அனைத்தையும் உண்ணும் வகைதான்.  எதையும் விட்டு வைப்பதில்லை. அசையாத் தாவரங்கள் முதற்கொண்டு நீந்துவன, ஊர்வன, பறப்பன, ஓடுவன என அகப்படும் விலங்கினங்கள் அனைத்தையும் கபளீகரம் செய்கிறது, மனித இனம்!

மனித இனம் கண்டுபிடித்த மிக அரிய கண்டுபிடிப்புக்களில், மிகவும் உதவும் கண்டுபிடிப்பாக  விளங்குவது சமையல் கலை. சமைப்பதால் உணவு செரிக்கப்பட்டு வெகு விரைவில் உடலுக்கு சக்தி கிடைக்கிறது.  எனினும் சில காய், கனி, மூலிகைகளை சமைத்தால், அவற்றின் பயன் குறைந்து போவதும் உண்மை.

சமைத்துண்ணும் உணவுப் பழக்கத்தால், பரிணாம வளர்ச்சியின் காரணமாக, காலப் போக்கில் மழுங்கிய கோரைப் பற்களையும், செயல் திறனற்ற சுருங்கிய குடல்வாலும் நமக்கு நிலைத்துவிட்டது.  காலப்போக்கில் மனித குடலின் அளவும் குறைந்து வருகிறது என்கிறார்கள்.

சொல்லப்போனால் நாம் இரண்டும் கெட்டான். நமக்கு பசுமாட்டின் அசை போட்டு அரைக்கும் பற்களும் கிடையாது. புலியின் கோரைப்பற்களும் கிடையாது.   அத்துடன், தாவரஉண்ணி போல தாவரங்களில் உள்ள செல்லுலோஸ் மூலக் கூறுகளை செரிக்க உதவும் பாக்டீரியாக்களைக் கொண்ட,  ‘செயல்படும் திறனுள்ள’ குடல்வால் (Vermiform appendix) உறுப்பும் மனித இனத்திற்கு இல்லை.

நாம் உணவை உண்டு, செரித்து அதன் சக்தியை பெற்றுக்கொள்வதில் உடலின் பல உறுப்புகள் பங்கு பெறுகின்றன.  நம் உடல் உணவின் மூலம் சக்தி பெறுவதில் உணவு மண்டல உறுப்புகளுடன் மூளையின் பங்கும்  இன்றியமையாததாக அமைகிறது. உணவு உட்கொள்வதைக் கண்காணிப்பதில், கட்டுப்படுத்துவதில் நம் மூளை அல்லது மனம் பங்கேற்கிறது. மனம் திருப்தி அடைவது போல சாப்பிடுவது மனித இயல்பு.

உணவு நமக்கு சக்தி கொடுக்கிறது என்று  உணர்ந்து நாம் சரியான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதில்லை.நம் உணர்வுகளுக்கு திருப்தி தரும் உணவுகளையே நாம் நாடுகிறோம். அவற்றை நமக்கு திருப்தி ஏற்படும் வரை சாப்பிடுகிறோம்.  இந்த திருப்தி அடையும் உணர்வினைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நம் மூளை, மற்றும் மூளையை உணவு மண்டலத்துடன் இணைக்கும் நரம்புகளின் செயல்.

சக்தி இழந்து உணவு தேவைப்படும் பொழுது,  இரைப்பையில் கெரிலின் (Ghrelin) என்ற சுரப்பிநீர் சுரக்கிறது. இதனால்  ‘உணவு தேவை’ என்ற சமிக்கை மூளைக்கு அனுப்பப்பட்டு ‘போய் சாப்பிடு’ என்ற பதில் கட்டளையையும் மூளை நமக்கு அனுப்புகிறது. அது போலவே திருப்தியாக வயிறு நிறைந்தால் மூளைக்கு ‘வயிறு நிறைந்தது’  பற்றி சமிக்கை அனுப்பப்படுகிறது.  மூளை ‘சாப்பிட்டது போதும் நிறுத்து’ என்று பதில் சமிக்கை அனுப்புகிறது. படிப்படியாக பல படிகளில் கட்டளைகள் அனுப்பப்பட்டு நிறைவேற்றப் படுகின்றன.

சக்தி இழப்பின் எச்சரிக்கை, சுவையான உணவின் நினைவு, பரிசாக கொடுக்கப்படும் உணவு, அதனால் ஏற்படும் திருப்தி, உணவு தேவை நிறைவேற்றப்பட்டது என்பது போன்று தொடர்ந்து தேவையானக் கட்டளைகளை மூளை நிலைமைக்குத் தக்கவாறு ஒன்றன் பின் ஒன்றாக அனுப்புகிறது.  ஒரு கட்டளை நிறைவேற்றப்பட்ட சமிக்கை சென்றதும், அதன் தன்மைக்கேற்ப அடுத்த கட்டளை மூளையினால் பிறப்பிக்கப்படும்.

மூளை தரும் இந்தக் கட்டளைகளை நாம் புறக்கணிப்பது நம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.  அதனால் அதிகம் உண்டு நோயை வரவழைத்துக் கொள்ளுதல், அல்லது பட்டினி கிடந்தது உயிரைவிடுதல் போன்றவை நிகழ்கிறது.  இவ்வாறு நாம் மூளையின் கட்டளைகளைப் புறக்கணித்து உணவில் கட்டுப்பாட்டை இழக்கும் பொழுது அந்தப் பழக்கம் மனநோயாக வகைப்படுத்தப் படும் ‘உண்ணும் கோளாறுகள்’ (eating disorders) என்ற நிலையை அடைகிறது.

உண்ணும் கோளாறுகள் மூன்று முக்கிய வகையாக; (1) அனோரெக்ஸ்யா, (2) புலுமியா, (3) பின்ஜ் ஈட்டிங் (Anorexia nervosa, Bulimia nervosa, and binge-eating disorders) என்று பெரும்பாலும் அறியப்படுகிறது. இக்கோளாறுகள் ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும்.  எந்த வயதினரும் பாதிக்கப் பட வாய்ப்பு இருந்தாலும், பதின்ம வயதினர், அதிலும் பெண்கள் மிகவும் பாதிக்கப் படுகிறார்கள்.  மெல்லிய தோற்றம் கொண்டிருப்பதே ‘உடல் அழகு’ என்ற கருத்து சமுதாயத்தினால் பெண்கள் மேல் நிர்பந்திக்கப்படும்போழுது அவர்கள்  உணவு உண்ணுதலில் கட்டுப்பாட்டினை இழந்து மிகவும் பாதிக்கபடுகிறார்கள்.

அனோரெக்ஸ்யாவால் பாதிக்கப் பட்டவர்கள் உணவை தவிர்த்து பஞ்சத்தில் அடிபட்டவர்கள் போல் எலும்பும் தோலுமாக மாறுவார்கள்.  இரத்த சோகை, உயிர்ச்சத்துகள் (vitamins) குறைவு போன்றவை தாக்கி, உருவம் மாற்றமடைந்து, எளிதில் நோய்களால் பாதிக்கபடுவார்கள்.

புலுமியாவால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகம் உண்பது, பிறகு வாந்தி எடுப்பது, மலமிலக்கி உபயோகப்படுத்துவது போன்றவற்றினால் உணவை உடலில் சேராமல் செய்யும் முறைகளைக் கையாள்வது, உணவைக் கட்டுப்படுத்துதல் (Dieting) போன்ற வழிகளைக் கையாண்டு சீரற்ற உடல் எடையை கொண்டிருப்பதை வழக்கமாக்கிக் கொள்வார்கள்.

பின்ஜ் ஈட்டிங் உணவுப் பழக்கமுள்ளவர்கள், கட்டுப்பாடின்றி சாப்பிட்டுக்கொண்டே இருப்பதால் உடல் பருமனால் (obesity) பாதிக்க்கப்படுவார்கள். இதனால் குற்றவுணர்வு, மனச்சோர்வு (Depression) போன்ற மேலும் மனநோய்களுக்கு ஆளாவதுடன், இரத்த அழுத்தம், இரத்தத்தில் கொலஸ்ட்ரால் கொழுப்பு அதிகரித்தல், அதனால் மாரடைப்பு, இதய நோய், நீரிழிவு நோய் (Diabetes)  போன்றவைகளினால் அதிகம் பாதிக்கப் படுவார்கள். விருச்சிக முனிவர் இட்ட சாபத்தால் யானைப்பசி என்னும் நோய்க்கு ஆளான காயசண்டிகையை இது நினைவு படுத்தினாலும், யானைக்கு அன்றாட உணவு, கண்ணுங்கருத்துமாக அளவிடப்பட்டுக் கொடுக்கப்படுகிறது என்று நாம் அறிவோம்.

இந்த உண்ணும் கோளாறுகளில் வகைப்படுத்தப் படாதவைகள் (eating disorders not otherwise specified – EDNOS) என மற்றொரு பிரிவின் கீழ் மேலும் பல தவறான உணவுப் பழக்கங்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.  இவையாவும் மனநோயாகக்  கருதப்பட்டே சிகிச்சை தரப்படுகிறது.

பசி இயல்பு. சுவை விருப்பம். வளர்ச்சி இயற்கையின் கொடை. தற்காலம், மேற்கத்திய நாடுகளில், பாட்டியின் கைவைத்தியத்துக்கும், இயற்கையின் அன்பளிப்புக்கும், மூலிகை வைத்தியத்துக்கும், ஆயுர் வேதத்துக்கும் மதிப்பு கூடி வருகிறது. உசாத்துணையில் இன்னம்பூரான் கூட்டியிருக்கும் நூலின் சாராம்சம்:

ஷேக்ஸ்பியர் மாக்பெத் நாடகத்தில் கூறியது போல, பசி வந்தால் நல்ல ஜீரணம். ஜீரணித்தால் ஆரோக்கியம். ஹிப்போக்ரட்டீஸ் சொன்னது போல வியாதிகளின் மூலஸ்தானம், குடல். அந்த அவஸ்தையை நாம் நாடுவதை பற்றி விலாவாரியாக விமரிசிக்கும்  திருமதி. ஜில் தாமஸ் சொல்வதைக் கேட்போம்,

1. வேண்டிய அளவு நார்ச்சத்து இல்லையேல், மலம் சிக்கும்;

2. நீரில்லையேல் ஜீரண அவயவங்கள் தவிக்கும்;

3. ஒவ்வாத வகையில் பதார்த்தங்களை முழுங்கிவிடுவதைப் போல பாவம் ஒன்றுமில்லை;

4. அவசரப்பட்டு, அடிச்சு பிடிச்சு சாப்பிட்டால், வயிறு அழும்;

5. உண்ணும் போது நிதானம் உதவும். மன அழுத்தம் நீங்காத போது உண்டால், வயிறு வலிக்கும்;

6. காலையில் எழுந்தவுடன் மலஜலம் கழிப்பது சாலத்தகும்; பொறுத்தார் வயிறாள்வார்!

7. செத்துப்போன உணவை விலக்கவும். கட்டித்தந்த மாமிசத்துகள்களை விட ஒரு கேரட்டை கடிப்பது, உத்தமம்;

8. லாஹிரி வஸ்துக்கள் வயிற்றின் பகை. அவற்றைக்கொண்டு வயிற்றை அடிக்காதே:

9. மருந்தானாலும் விருந்தோடு உண் என்பது சரி. விருந்தானாலும் கபளீகரம் தவிற்க. மருந்து அத்தருணம் உதவாது.

இவற்றின் அடிப்படையில் யான் கூறவருவது: பசிக்கு உணவு; சுவைக்கு பக்குவம்; வளர்ச்சிக்கு தராதரம்.

இருவர் இணைந்து வழங்கினால் பயன் அதிகரிக்கறது. அடுத்த இழையில் குடலுக்குள் புகுந்து பார்க்கலாமா? என்ன சொல்றேள்?

இன்னம்பூரான்

தேமொழி

கவனம்:
நாங்கள் டாக்டர்கள் அல்ல. நட்புரிமையுடன், பொறுப்புணர்ச்சியுடன்,ஆதாரங்களை தமிழில் விளக்கி, அவற்றை சுட்டிக்காண்பித்து அறிமுகம் தரும் சுகாதாரம் பற்றிய தொடர் இது, டாக்டரிடம் ஆலோசனை பெற இவை உதவலாம்.  இவற்றை படித்து உரிய நேரத்தில் டாக்டரிடம் போவதைத் தவிர்க்கக்கூடாது.  அவரவர் மருத்துவம், சிகிச்சை, நிவாரணம் ஆகியவற்றை நாடும் செயல்களுக்கு அவரவர்கள் தான் பொறுப்பு ஏற்கவேண்டும்.

— இன்னம்பூரான் & தேமொழி

உசாத்துணை:

http://www.nimh.nih.gov/health/publications/eating-disorders/complete-index.shtml

http://www.nationaleatingdisorders.org/information-resources/index.php

http://www.tamilvu.org/courses/diploma/a071/a0713/html/a0713166.htm

Jill Thomas (2007) Healthy Gut Guide: London: Penguin

சித்திரத்துக்கு நன்றி:

http://1.bp.blogspot.com/-reYJG0vTlfw/UBkOncA5ZfI/AAAAAAAABRo/5YCdGFlRSXU/s1600/maya14.jpg

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்: 5

  1. உடல் நலத்தைப்பற்றி ஒரு கட்டுரை. உடலுக்கு 9 வாசல். அந்த உடல் நலத்தைக் காக்க இந்த கட்டுரையில் படித்த 9 வழிகள் அதற்கு தலை வாசல். மேலும் தொடருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *