திவாகர்

மனித வாழ்க்கை மிகவும் பரபரப்பாக மாறிவிட்ட சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாருக்குமே நேரம் கிடைப்பது இல்லை. சில நல்ல விஷயங்கள் கேட்க நேரமே கிடைப்பதில்லை. சில நல்லவர்களைப் பார்க்கப் போகலாம் என்றாலும் நேரம் கிடைப்பதில்லை. கொஞ்சம் அப்படியே சாவகாசமாய் நல்ல விஷயங்களைப் படிக்கத்தான் செய்வோமே என்றால் நேரம் ’எங்க சார் இருக்கு.. எனக்கும் படிக்கணுமுனு ஆசைதான்.. ஆனா பாருங்க.. இந்த இருபத்தி நாலு மணிநேரமும் சரியா பொழுது போயிடுது.. தூங்கறதுக்கு கூட சரியா நேரம் கிடைக்க மாட்டேங்குதுங்க..’ என்றுதான் பதில் வரும்.   இந்த நேரம் கிடைப்பதற்காக. அவர்களுக்கு உதவ 24 மணி நேரத்தை யாராவது சித்தரோ மந்திரவாதியோ அல்லது சாட்சாத் கடவுளோ திடீரென கீழே தோன்றி சற்று நீட்டித்து விட்டால் பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது. பாருங்கள் அப்போது கிடைக்கும் எக்ஸ்ட்ரா நேரத்தை ஏதாவது ஒரு நல்ல விஷயத்துக்காக ஒதுக்கிக் கொள்ளலாமே..

ஆனால் உண்மையாகச் சொல்லப்போனால் நமக்கு நேரம் நிறைய இருக்கவே செய்கிறது. ‘டைம் மேனேஜ்மெண்ட்’ என்று வைத்துக்கொண்டு கொஞ்சம் நேர்த்தியாக திட்டமிட்டு நம் வழக்கமாக செய்யும் வேலைகளை பிரிவுபடுத்திக்கொண்டு இன்னின்ன வேலைகளுக்கு இன்னின்ன நேரம் ஒதுக்கி அதன்படி செய்வோம் என்று பார்த்தால் இன்றைய இந்த பரபரப்பான காலத்திலே நமக்கு நேரம் அதிகமாகவே மீதி இருக்கும். டைம் மேனேஜ்மெண்ட் என்பதெல்லாம் ஆகிற காரியமா.. என்றால் அதுவும் சரிதான்.. இதுக்கெல்லாம் நாம் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.. இப்படிப்பட்ட சமயத்தில்தான் நமக்கென்று இந்த விஷயங்களை ஒட்டிய ஒரு நல்ல கட்டுரையை வல்லமையில் வெளியிட்டிருக்கிறார் திரு பெருவை பார்த்தசாரதி.

ஒன்றே ஒன்றைத்தவிர, நாம் வாழ்ந்த காலத்தில்  சம்பாதித்தது எதுவுமே இறந்த  பிறகு நம்முடன் வராது என்கிறார் திருமூல நாயனார். நம்முடன் காலம் பூராவும் வாழ்ந்து, நம்மோடு ஒட்டி உறவாடிய மனைவி மற்றும் நாம் சம்பாதித்தையெல்லாம் அனுபவித்து வாழ்ந்த நம் மக்களும் கூட வரமாட்டார்கள்.  அப்படியென்றால் எதுதான் நம்முடன் கடைசி வரையில் வரும்?…என்ற வினாவுக்கு அருமையான பதிலை இங்கே நம் முன் வைக்கிறார் நாயனார். வாழ்க்கையின் அனுபவத்தில் நாம் பெறுகின்ற ஞானமும், நாம் கற்றுக்கொண்ட நல்லொழுக்கம் தவிர வேறொன்றும் கூட வராது என்பதை நான்கே வரிகளில் பின் வருமாறு விளக்குகிறார்:-

பண்டம்  பெய் கூரை பழவி விழுந்தக்கால்
உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அன்றி
மண்டி அவ்வழி நடவாதே.

நாயனாரை ஆழ்வாரோடு  ஒப்பிட்டு நோக்கையில், வாழ்க்கை அனைத்தையும் பெருமானிடத்தில்  சமர்ப்பித்து விட்டு, இப்பூவுலக  வாழ்க்கையில் கிடைக்கும் பணம், பதவி, புகழ் எதுவுமே  வேண்டாமென்கிறார் ஆழ்வார்களில் ஒருவரான விப்ர நாராயணர். வாழ்க்கையில் வழிதவறும் போது, உறவினர்கள் அல்லது நண்பர்கள் போன்றோர் நமக்குதவ முன்வருவார்கள். ஒரு பெண்ணிடம் மனதைப் பறிகொடுத்து, வாழ்க்கையில் அனைத்தையும் இழந்த ஆழ்வாருக்கு உதவ அரங்கனே வந்தான் என்கிறது வரலாறு. ஒவ்வொரு மனிதனும் நிம்மதி தேடி, அது எங்குமே கிடைக்காமல் கடைசியில் இறைவனைச் சரணடைவது இயற்கை. துன்பம் வரும்போது இறைவனை நினைந்து பிறகு மகிழ்ச்சியில் திளைக்கும்போது மறந்து விடுவது மனித இயல்பு. உலகத்திலேயே உயர்ந்த பதவியினால் கிடைக்கும் சுகத்தைவிட இறையுணர்வுதான் மிகப்பெரியது என்கிறார் ஆழ்வார். அடியார்களின் காலடி பட்ட மண்ணை தன் தலையில் சுமந்து தொண்டரடிப்பொடி என்ற பெயர் பெற்ற இவர் இறைவனிடம் பின்வருமாறு வேண்டுகிறார்.

பச்சைமா மலைபோல்  மேனி, பவளவாய்க் கமலச்  செங்கண்
அச்சுதா அமரர்  ஏறே, ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.

வாழ்க்கைப்  பயணத்தில் சாதாரண மனிதன் அனுபவிக்கின்ற இன்ப துன்பங்கள் அனைத்தையும் சமாளிக்கும் திறனையும், கடைபிடிக்க வேண்டிய அறநெறிகளையும் மேற்கூறிய ஒன்றிரண்டு பாடல்கள் மட்டுமல்ல, அரிய பெரிய பல்லாயிரம் பாடல்கள் (ப்ரபந்தம்-4000, திருமந்திரம்-3000) மூலம் நாம் எளிதில் அறிந்துகொள்ளுமாறு நம்மிடையே விட்டுச் சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள் https://www.vallamai.com/paragraphs/29506/

நல்ல விஷயங்களைப் படிக்க நாம் எப்படியாவது நேரம் ஒதுக்கியே ஆகவேண்டும் என நம் மனதுக்கு நாமே கட்டளையிட்டுக் கொள்ள வேண்டும் என்றே இக்கட்டுரையைப் படித்தபின் தோன்றுகிறது அல்லவா. இப்படி ஒரு நல்ல கட்டுரையைத் தந்த திரு பெருவை பார்த்தசாரதி அவர்களை இந்த வாரத்து வல்லமையாளராக வல்லமை குழு சார்பாக தெரிவிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. வல்லமையாளரான திரு பெருவை பார்த்தசாரதியிடம் மேலும் பல நல்ல விஷயங்களையும் கற்றுக் கொள்வோம். அவருக்கு நம் வாழ்த்துகள்.

கடைசி பாரா: பாகம் பிரியாள் அவர்களின் சில கவிதைத் துளிகள்.

இதோ

யவனக் கயிறை பலமாய் பிடித்தபடி
யுவனும், யுவதியும் தங்கள் பயணத்தை
ஆரம்பிக்கிறார்கள், காதல் என்னும்
வழுக்குப் பாறையின் மீது!

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. /////நல்ல விஷயங்கள் படிக்க நாம் நேரம் ஒதுக்கியே ஆகவேண்டும்.///// முத்தான வார்த்தைகள் . நன்றியும் வாழ்த்துக்களும்.

  2. வல்லமை வார விருதை வழங்கிய திரு திவாகர் அவர்களுக்கும், வல்லமை குழுவினருக்கும், பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, என் மனதில் எழுந்த எண்ணங்களையும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு வாரகாலம் திருமலை பாதயாத்திரை சென்றிருந்ததால் காலதாமதமாக பதில் எழுதுவதற்கு மன்னிக்கவும்.

    மதிப்பிற்குறிய திரு திவாகர் அவர்கள் சொன்னது போல் நமக்கு நேரம் கிடைக்கும் போது நாம் அதை சரியான முறையில் பயன் படுத்திக் கொள்வதில்லை என்பதே என்னுடைய கருத்துமாகும். நேரம் கிடைக்கவில்ல என்பவர்கள், அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடும் போது நல்ல விஷயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம். இதே போல சுபகாரியங்களில் பங்கெடுக்கும்போது நமக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்கள், சுற்றத்தார்கள் போன்றோருடன் அளவலாவும்போதும் பயனுள்ள விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளப் பழகவேண்டும். இது போக, படித்துத் தெரிந்து கொள்ள இப்போது இணையத்தின் உதவி மிக அதிகம். புகழுக்காகவும், நகைச்சுவைக்காகவும் எழுதுவதை விட சமூக நலனுக்காக எழுதுவதையே பெரிதும் விரும்புகிறேன் என்று முன்பு சொன்னதை பின்பற்றி தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் போது, இது போன்ற இணைய வழி ‘கெளரவ விருதுகள்’ எழுதுபவர்களுக்கு மேன்மேலும் ஊக்கமளிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். திரு திவாகர் அவர்கள் ஒவ்வொரு முறை விருது வழங்கும்போது, விருதைப் பெருபவருக்காக அவர் கூறும் விளக்கவுரையைத் தவறாமல் படிக்கும் பழக்கம் எனக்கு உண்டு. இது ஒன்றும் சாதாரண விஷயமில்லை, ஒவ்வொரு எழுத்தாளரின் படைப்புகளையும் முழுவதும் கவனத்துடன் படித்தால் மட்டுமே, விருது பெறுபவர்களைத் சரியான முறையில் தேர்ந்தெடுக்க முடியும். சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து, விருதுகளை வழங்கும் தன்னலமற்ற அவரது பணி தொடர இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றியுடன்

    பெருவை பார்த்தசாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *