திவாகர்

ஆதி காலத்தில் எல்லாம் அதிவேக வாகனங்கங்கள் இல்லை.. குதிரை, யானை எல்லாம் கூட சாதாரண மக்களுக்கு, பொது மக்களுக்கு வசதிப்படாது. சற்று வசதிப்பட்ட மக்களுக்கென ஏற்பட்ட காளைமாட்டு வண்டி கூட உள்ளூர் வரைக்கும்தான் உதவும், அதுவும் மகளிருக்கும் குழந்தைகளுக்கும்தான், ஆகவே எங்கும் எல்லோருக்கும் நடையோ நடைதான்.. அதுவும் வெகுதூரம் செல்லவேண்டி இருந்தால் திரும்பி வர மாதக் கணக்கில் ஆகும்.. வாணிகம் செய்ய செல்லவேண்டி வந்தால் ஊர் மண்ணைத் திரும்பவும் காண வருடக் கணக்கில் கூட ஆகும், ஒருவேளை யுத்தத்துக்கு செல்ல வேண்டி வந்தால் கேட்கவே வேண்டாம், திரும்பி வருவதற்கு சந்தர்ப்பங்கள் அதிகுறைவு (அப்படியும் திரும்பி வந்தால் எங்கே விழுப்புண் பெற்றாய், மார்பிலா, முதுகிலா, என்று உணர்ச்சிகட்ட வசனங்கள் பேசுவார்களாம்).

இப்படித்தான் தலைவன் ஒருவன் தலைவியிடம் தான் வெகுதூரம் செல்லப்போவதாக பிரியா விடை கேட்பதாக ஒரு சங்கத் தமிழ்ப் பாடல் வரும். இந்தப் பாடல் பற்றி சற்று நகைச்சுவையாக எழுத்தாளர் தேவன் (புத்தகத்தின் பெயர் ‘கல்யாணி’) இப்படி எழுதினார் – தன்னை விட்டு தலைவன் பிரிய விடை கேட்கிறான் என நினைத்ததுமே தலைவி அந்த வார்த்தை தாளாமல் உடல் மெலிவாள், உடல் மெலிந்தால் கையும் மெலியும்தானே, கையில் போட்டிருந்த அழகு வளையல்கள் ஒவ்வொன்றாய் கழன்றுகொண்டே வர, அந்தக் காதலன் பயந்துபோய், அடடே, நான் உன் அன்பைப் பரீட்சித்துப் பார்த்தேன், மெய்யாகச் சொல்லவேண்டுமெனில் நான் அப்படியெல்லாம் வெகுதூரம் பயணப்படுவதாக இல்லவே இல்லை. நீ மெய் மெலிவதைக் கண்டு என் மனம் துன்புறுகிறது என்பானாம். இந்த சந்தோஷ வார்த்தையைக் கேட்டதும் காதலி உடனே உடல் பூரித்துப்போவாளாம். இதனால் அவள் கையும் சற்று அதிகமாக பூரித்துப் போய் மீதி அங்கே இருந்த ஒரே ஒரு வளையும் அளவு கொள்ளாமல் படா’ரென்று தெறித்து வெளியே  விழுகிறது.

காதலர் பிரிவு என்பதே ஒரு இன்பம்தான், பிரிவுக் காலத்தில் அன்பு மேலும் கெட்டிப்படுகின்றது. அது அந்த ஆதி காலமாக இருந்தாலும் சரி, இந்த அதி வேக இயந்திரமய காலமாக இருந்தாலும் சரி. மனிதனுக்கே இயல்பானஉணர்ச்சியுள்ள வரைக்கும் காதல் இருக்கவே செய்யும். காதல் இருக்கும் வரை நற்பண்புகளை வளர்க்கவே செய்யும். அப்படிப்பட்ட காதலில் பிரிவு என்பது தேவைதான். பிரிவு முதலில் கசக்கும், ஆனால் பிரிந்தவர் கூடும்போது அதற்கான இனிமைக்கு உவமையே இல்லை.. ஆகையினால்தான் உவமைக்கு பெயர் போன கம்பன் கூட ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ’ என்று ஒரே வரியில் பிரிவின் சக்தியையும் பிரிவின் பின் கூடும் இன்பத்தையும் விவரித்து விடுகிறான்.

காதலில் பிரிவு என்பது எல்லாக் கவிஞர்களுக்கும் தேனி ஊறிய பலாச்சுளை போல தித்திக்குமோ என்னவோ. திருக்குறளை வடித்த வள்ளுவன் முதல் இந்தக் காலக் கவிஞர் வரை இந்தக் காதல் பிரிவை ஒரு பிடி பிடித்துவிடுகின்றனர். இந்த வாரம் வல்லமைக்குள் இருந்த இந்தக் கவிதை ஒன்று இப்படித்தான் வர்ணிக்கின்றது.

அனுதினமும் வளர்ந்திடுமே
அளவிலா   காதலும் ….
பிரிவதுவும் ஏற்படுத்துமே
ஆழமான வலுவான
அன்பின்  அஸ்திவாரம் !!!

உந்தன் அன்பின் அருமையை
எனக்கும் ……எந்தன் –
காதலின் வலிமையை
உனக்கும் ……உணர்த்திடாதோ ???
இந்த தொலைதூரக் காதல் !!!

இந்தக் கவிதையை எழுதிய திருமதி தமிழ்முகில் நீலமேகம் மிக எளிமையான தமிழில் காதலர் பிரிவின் மகிமையைத் தெரியப்படுத்தி இருப்பது மிக அழகாக இருக்கிறது. திருமதி தமிழ்முகில் நீலமேகம் அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமைக் குழுவினர் தேர்ந்தெடுக்கிறார்கள். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள் உரித்தாகுக. சீக்கிரமே பிரிந்தவரை சேர்த்து வைக்கும் நற்பணியையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கடைசி பாரா: கவிஞர் தனுசுவின் ஒரு அழகான கவிதை வரிகள்

“நிலவோடு
நேசக்கலவையின்
இச்சை முடியாத போது
இரவுப்பொழுது முடிந்து விட்டதை எண்ணி
பச்சைப் புற்கள்
கண்ணீர் சிந்துகிறது”

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “இந்த வார வல்லமையாளர்

  1. தமிழ்முகில், தனுசு இருவருக்கும் அன்பான வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    …தேமொழி

  2. முகிலும்,    மேகமும்,        தமிழ் மழையெனப் பொழிந்த,    தமிழ்முகில்நீலமேகத்தின் காதல் கவிதைக்கும், வல்லமை விருது வழங்கிய திவாகரின் திரளான முன்னுரைக்கும், கடைசிப் பாரா  கவிஞர் தனுசுவுக்கும் எனது பாராட்டுக்கள்.

  3. வல்லமை விருது வழங்கிய மதிப்பிற்குரிய திவாகர் அவர்கட்கும், வல்லமை நிர்வாகத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.எனது இலக்கிய ஆர்வத்திற்கு தூண்டுகோலாய் வல்லமை இதழ் அமைந்துள்ளது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் பழமைபேசி,சகோதரி தேமொழி,அய்யா பெருவை பார்த்தசாரதி அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  4. கவிஞர் தனுசு அவர்களின் அழகான கவிதை வரிகளை மேற்கோளிட்டமைக்கு நன்றிகள் !!!

  5. வலமையாளர் தமிழ் முகில் அவர்களுக்கு வாழ்த்துக்கள். எனது கவிதையின் வரிகளை மேற்கோள் காட்டிய ஆசிரியருக்கு நன்றிகள்.

    தேமொழி wrote ; தமிழ்முகில், தனுசு இருவருக்கும் அன்பான வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    பெருவை பார்த்தசாரதி wrote ; கடைசிப் பாரா கவிஞர் தனுசுவுக்கும் எனது பாராட்டுக்கள்.

    பி.தமிழ்முகில் நீலமேகம் wroteகவிஞர் தனுசு அவர்களின் அழகான கவிதை வரிகளை மேற்கோளிட்டமைக்கு நன்றிகள் !!

    பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்.

  6. தங்களது வாழ்த்துகட்கு மிக்க நன்றி கவிஞர் தனுசு அவர்களே !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *