திரு நு த லோகசுந்தரம் 

 

நமசிவய

 

பொருள்முறைத் திருமுறை ©

இதனில்

திருஆதிரை திருமுறை ©

 

தமிழகத்து சித்தாந்த சைவநெறியின்

பன்னிரு திருமுறை  18000+ பாடல்களில்

திருஆதிரை நாள் சிறப்பு வைகும்

37 பாடல்களின் தொகுப்பு

 

தொகுப்பாசிரியன்

நூ. த. முத்துமுதலி-மயிலை

 

ஞானசம்பந்தர் தேவாரம்

திருமுறை 1

1 ஆரூர்-வியாழக் குறிஞ்சி

பாடலன் நான்மறையன் படிபட்ட கோலத்தன் திங்கள்

சூடலன் மூவிலைய சூலம் வலன் ஏந்திக்

கூடலர் மூ எயிலும் எரி உண்ணக் கூர் எரி கொண்டு எல்லி

ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே  1.105.1

 

திருமுறை 2

2 ஆமாத்தூர்-சீகாமரம்

தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன்தன்

நாள் ஆதிரை என்றே நம்பன்தன் நாமத்தால்

ஆளானார் சென்(று)ஏத்தும் ஆமாத்தூர் அம்மானைக்

கேளாச் செவி எல்லாம் கேளாச் செவிகளே  2.44.8

 

3 மயிலை-கபாலீச்சரம்-சீகாமரம்

ஊர்திரை வேலை உலாவும் உயர்மயிலைக்

கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரிதனில்

கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்

ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்  2.47.4

 

திருமுறை 3

4 திருக்காட்டுப்பள்ளி(மேலை)-கொல்லி

ஞாலத்தார் ஆதிரை நாளினான் நாள்தொறும்

சீலத்தான் மேவிய திருமழ பாடியை

ஞாலத்தான் மிக்கசீர் ஞானசம்பந்தன் சொல்

கோலத்தால் பாடுவார் குற்றமற் றார்களே  3.29.11

 

5 வெண்டுறை-பஞ்சமம்

ஆதியன் ஆதிரையன் அனல் ஆடிய ஆரழகன்

பாதியோர் மாதினொடும் பயிலும் பரமாபரமன்

போதியலும் முடிமேல் புனலோ(டு) அரவம் புனைந்த

வேதியன் மாதிமையால் விரும்பும் இடம் வெண்டுறையே

3.61.1

நாவுக்கரசர் தேவாரம்

திருமுறை 4

6 ஆரூர்-காந்தாரம்

ஊர்திரை வேலை உள்ளானும் உலகு இறந்த ஒண்பொருளானும்

சீர்தரு பாடல் உள்ளானும் செங்கண் விடைக் கொடியானும்

வார்தரு பூங்குழலாளை மருவி உடன் வைத்தானும்

ஆதிரைநாள் உகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே

4.4.6

திருமுறை 5

7 திருவாரூர் திருஆதிரைப் பதிகம்-குறிஞ்சி

முத்து விதான மணிப்பொன் கவரி முறையாலே

பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப் பின்னே

வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள்

அத்தன் ஆரூர் ஆதிரைநாளால் அதுவண்ணம்  4.21.1

8

நணியார் சேயார் நல்லார் தீயார் நாள்தோறும்

பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்

மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்(கு)

அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்  4.21.2

9

வீதிகள் தோறும் வெண்கொடியோடு விதானங்கள்

சோதிகள் விட்டுச் சுடர்மா மணிகள் ஒளி தோன்றச்

சாதிகளாய பவளமும் முத்துத் தாமங்கள்

ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்  4.21.3

10

குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள்

பிணங்கித் தம்மில் பித்தரைப் போலப் பிதற்றுவார்

வணங்க ¢நின்று வானவர் வந்து வைகலும்

அணங்கும் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்  4.21.4

11

நிலவெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்

பலரும் இட்ட கல்லவடங்கள் பரந்(து) எங்கும்

கலவ மஞ்ஞை கார் என்(று) எண்ணிக் களித்துவந்(து)

அலமர் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்  4.21.5

12

விம்மா வெருவா விழியாத்தெழியா வெருட்டுவார்

தம் மாண்பிலராய்த் தரியார் தலையால் முட்டுவார்

எம்மான் ஈசன் எந்தை எனப்பன் என்பார்கட்(கு)

அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்  4.21.6

13

செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார்

மைந்தர்களோடு மங்கையர் கூடி மயங்குவார்

இந்திரன்ஆதி வானவர் சித்தர் எடுத்(து)ஏத்தும்

தந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்  4.21.7

14

முடிகள் வணங்கி மூவாதார் கண்முன் செல்ல

வடிகொள் வேய்த்தோள் வான்அர மங்கையர் பின்செல்லப்

பொடிகள் பூசிப்பாடும் தொண்டர் புடை சூழ

அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்  4.21.8

15

துன்பம் நும்மைத் தொழாத நாள்கள் என்பாரும்

இன்பம் நும்மை ஏத்தும் நாள்கள் என்பாரும்

நும்பின் எம்மை நுழையப் பணியே என்பாரும்

அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்  4.21.9

16

பார் ஊர் பௌவத்தானைப் பத்தர் பணிந்(து) ஏத்தச்

சீர் ஊர்  பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்(து)

ஓரூர் ஒழியா(து) உலகம் எங்கும் எடுத்(து) ஏத்தும்

ஆரூரன்தன் ஆதிரை நாளால் அதுவண்ணம்  4.21.10

 

17 பயற்றூர்-திருநேரிசை

மூ வகை மூவர் போலும் முற்றுமா நெற்றிக்கண்ணர்

நாவகை நாவர் போலும் நான்மறை ஞானம் எல்லாம்

ஆ வகை ஆவர்போலும் ஆதிரை நாளர் போலும்

தேவர்கள் தேவர் போலும் திருப்பயற் றூரனாரே  4.32.5

 

திருமுறை 5

18 வீழிமிழலை-குறுந்தொகை

ஏற்று வெல்கொடி ஈசன் தன் ஆதிரை

நாற்றம் சூடுவர் நல்நறும் திங்களார்

நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார்

வேற்றுக் கோலம் கொள் வீழி மிழலையே  5.12.2

 

19 ஆதிபுராணம்-குறுந்தொகை

வேத நாயகன் வேதியர் நாயகன்

மாதின் நாயகன் மாதவர் நாயகன்

ஆதி நாயகன் ஆதிரை  நாயகன்

பூத நாயகன் புண்ணிய  மூர்த்தியே   5.100.1

 

திருமுறை 6

20 கழிப்பாலை-தாண்டகம்

பொடிநாறு மேனியர் பூதிப் பையர் புலித் தோலர் பொங்(கு)அரவர் பூண நூலர்

அடிநாறு கமலத்தர் ஆரூர் ஆதி ஆன் அஞ்சும் ஆடும் ஆதிரையினார் தாம்

கடிநாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய கபாலப்பனார்

மடிநாறு மேனி இம்மாயம் நீங்க வழி வைத்தார்க்(கு) அவ்வழியே போதும் நாமே

6.12.4

21 கருகாவூர்-தாண்டகம்

அரை சேர் அரவனாம் ஆலத்தானாம் ஆதிரை நாளானாம் அண்ட வானோர்

திரைசேர் திருமுடித் திங்களானாம் தீ வினை நாசன் என் சிந்தையானாம்

உரை சேர் உகத்தார் உள்ளானுமாம் உமையாள் ஓர் பாகனாம் ஓத வேலிக்

கரை சேர் கடல் நஞ்சை உண்டானாம் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே

6.15.7

22 ஆக்கூர்-தாண்டகம்

மாதூரும் வாள் நெடும்கண் செவ்வாய் மலைமகளை மார்பகத்(து) அணைத்தார் போலும்

மூதூர் முது திரைகள் ஆனார் போலும் முதலும் இறுதியும் இல்லார் போலும்

தீதூர நல்வினையாய் நின்றார் போலும் திசை எட்டும் தாமே ஆகும் செல்வர் போலும்

ஆதிரை நாளாய் அமர்ந்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே

6.21.6

23 பள்ளியில் முக்கூடல்-தாண்டகம்

பூதியனைப் பொன்வரையே போல்வானைப் புரிசடைமேல் புனல் கரந்த புனிதன் தன்னை

வேதியனை வெண்காடு மேயானை வெள்ஏற்றின் மேலானை விண்ணோர்க்(கு) எல்லாம்

ஆதியனை ஆதிரை நன்னாளான் தன்னை அம்மானை மைம்மேவு கண்ணியாள் ஓர்

பாதியனைப் பள்ளியில் முக்கூடலானைப் பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே

6.69.3

24 தலையாலங்காடு-தாண்டகம்

தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைச் சூழ்நரகில் வீழாமே காப்பான் தன்னை

அண்டத்துக் கப்பாலைக்(கு) அப்பாலானை ஆதிரை நாள் ஆதரித்த அம்மான் தன்னை

முண்டத்தின் முளைத்தெழுந்த தீஆனானை மூஉருவத்து ஓருருவாய் முதலாய் நின்ற

தண்டத்தில் தலையாலங்காடன் தன்னைச் சாராதே சாலநாள் போக்கினேனே

6.79.1

25 புகலூர்-தாண்டகம்

அங்கமே பூண்டாய் அனலாடினாய் ஆதிரையாய் ஆலநிழலாய் ஆனேறு ஊர்ந்தாய்

பங்கம் ஒன்றில்லாத படர் சடையினாய் பாம்பொடு திங்கள் பகைதீர்த்து ஆண்டாய்

சங்கை ஒன்றின்றியே தேவர் வேண்டச் சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச்

சிங்கமே உன்னடிக்கே போதுகின்றேன் திருப்புகலூர் மேவிய தேவதேவே

6.99.2

சுந்தரர் தேவாரம்

திருமுறை 7

26 இடையாற்றுத்தொகை-கொல்லி

திங்களூர் திருஆதிரையான் பட்டினமூர்

நங்களூர் நறையூர் நனிநாலிசை நாலூர்

தங்களூர் தமிழான் என்று பாவிக்க வல்ல

எங்களூர் எய்தமான் இடையாறு இடைமருதே    7.31.6

 

27 நனிபள்ளி-பஞ்சமம்

ஆதியன் ஆதிரையன் அயன் மால் அறிதற்கு அரிய

சோதியன் சொல் பொருளாய்ச் சுருங்காமறை நான்கினையும்

ஓதியன் உம்பர் தங்கோன் உலகத்தினுள் எவ்வுயிர்க்கும்

நாதியன் நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளியதே   7.97.1

 

சேந்தனார்

திருமுறை 9

28 திருப்பல்லாண்டு-பஞ்சமம்

ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரை நாள்

நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்

தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசை அனைத்தும் நிறைந்து

பாரார்  தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே  9.300

 

காரைக்கால்அம்மையார்

திருமுறை 11

29 இரட்டைமணிமாலை

வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்(கு)

ஆதியனை ஆதிரை நன்னாளானைச்-சோதிப்பான்

வல் ஏனமாய்ப் புக்கு மாலவனும் மாட்டாது

கில்லேனமா என்றான் கீழ்      11.31

30

தலையாய ஐந்தினையும் சாதித்துத் தாழ்ந்து

தலையாயின உணர்ந்தோர் காண்பர்-தலையாய

அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்(டு)இருண்ட

கண்டத்தான் செம்பொன் கழல்      11.33

 

சேக்கிழார்

திருமுறை 12

31 திருத்தொண்டர் புராணம்

மேவு திருஆதிரைநாள் வீதி விடங்கப் பெருமாள் பவனி தன்னில்

தேவருடன் முனிவர்கள் முன் சேவிக்கும் அடியார்களுடன் சேவித்து

மூவுலகும் களிகூரவரும் பெருமைமுறைமை எல்லாம் கண்டு போற்றி

நாவினுக்குத் தனிஅரசர் நயக்குநாள் நம்பர் திருஅருளினாலே

32        12.1495

சித்தம் நிலாவும் தென்திருஆரூர் நகர் ஆளும்

மைத்தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ்செல்வம்

இத்தகைமைத்து என்று என்மொழிகேன் என்று அருள் செய்தார்

முத்து விதானமணிப் பொன்கவரி மொழி மாலை   12.1501

33

ஆய செய்கையில் அமரும் நாள்ஆதிரை நாளில்

மேய பூசனை நியதியை விதியினால் முடித்துத்

தூய தொண்டனார் தொல்லை நீடு அயவந்தி அமர்ந்த

நாயனாரையும் அருச்சனை புரிந்திட நயந்தார்    12.1839

34

அருக்கன் முதல் கோன் அனைத்தும் அழகிய உச்சங்களிலே

பெருக்க வலியுடன் நிற்கப் பேணிய நல்லோரை எழத்

திருக்கிளரும் ஆதிரைநாள் திசை விளங்கப் பரசமயத்

தருக்கொழியச் சைவம் முதல் வைதிகமும் தழைத்(து) ஓங்க 12.1920

35

மெய்த்திரு ஞானசம்பந்தர் வாக்கின் வேந்தரை விருப்பினாலே

அப்பரை இங்கு அணையப் பெறும் பேர் அருள் உடையோம் அந்தண் ஆரூர்

எப்பரிசால் தொழுது உய்ந்தது என்று வினவிட ஈறில் பெரும் தவத்தோர்

செப்பிய வண்தமிழ் மாலையாலே திருஆதிரை நிகழ்செல்வம் சொன்னார்

36        12.2393

ஆறு அணிந்த சடைமுடியார்க்கு ஆதிரை நாள்தொறும் என்றும்

வேறுநிறை வழிபாடு விளக்கிய பூசனை மேவி

நீறு அணியும் தொண்டர் அணைந்தார்க்கு எல்லாம் நிகழ் பசும்பொன்

நூறு குறையாமல் அளித்து இன்அமுது நுகர்விப்பார்   12.3986

37

ஆன செயல் முறை புரிவார் ஒரு திருஆதிரை நாளில்

மேன்மை நெறித்தொண்டர்க்கு விளங்கிய பொன் இடும் பொழுதில்

மான நிலைஅழி தன்மை வரும் காமக்குறி மலர்ந்த

ஊனம் திகழ் மேனியராய் ஒருவர் நீறு அணிந்து அணைந்தார்  12.3987

 

திருச்சிற்றம்பலம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *