முகில் தினகரன்
கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட வீடியோக் காமிராக்கள் லென்ஸ் கண்களால் அந்த பெட்டியை விழுங்கிக் கொண்டிருக்க, பதினைந்திற்கும் மேற்பட்ட பத்திரிக்கை நிருபர்கள் அந்த ஆவேசப் பேச்சைக் குறிப்பெடுத்துக் கொண்டிருக்க, ஊழல்…லஞ்சம்….அதிகார துஷ்பிரயோகம் போன்ற சமூக அவலங்களைத் தன் வார்த்தைச் சாட்டையால் விளாசிக் கொண்டிருந்தார் ‘கூர் வாள்” பத்திரிக்கையின் ஆசிரியர் துரைஜீவானந்தம்.

‘சார் இந்த வருடத்தின் சிறந்த புலனாய்வுப் பத்திரிக்கையாக உங்கள் ‘கூர் வாள்” தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு காரணம் உங்களோட தைரியமான எழுத்துக்களா?…இல்லை உங்களோட சமூக கண்ணோட்டமா?” ஒரு பெண் நிருபர் தன் நீண்ட கேள்வியை வைக்க,சக நிருபர்கள் முகம் சுளித்தனர்.

‘ரெண்டுமேதாம்மா சமூக கண்ணோட்டம்தான் அவலங்களைக் கண்டு கொதிப்படைய வைக்குது எழுத வைக்குது அப்படி எழுதும் போது தைரியமும் தானாகவே வந்திடுது..”

‘உங்க எழுத்துக்கள் மூலம் இந்த சமூகத்தைத் திருத்திட முடியும்னு நெனைக்கறீங்களா சார்?,”

‘ம்ம் முற்றிலுமா திருத்த முடியாவிட்டாலும் ஓரளவுக்கு மாற்ற முடியும்னு நினைக்கறேன்ம்மா..உதாரணத்துக்கு என்னோட பத்திரிக்கையைப் படிக்கற பாமரன் தெரிஞ்சோ தெரியாமலோ தன் அளவுல செய்யற சின்னச் சின்ன தவறுகளைத் திருத்திக் கொள்வானல்லவா?”

‘அது போதுமா சார்?”

‘தாராளமா…ஒவ்வொரு மனுசனும் தான் செய்யற தவறுகளை உணர்ந்து தன்னைத் திருத்திக் கொண்டால் போதும் இந்தச் சமூகமே திருந்திடும் ஏன்னா சமூகம் என்பது என்ன?..தனி மனிதர்களின் கூட்டுதானே?”

‘சரி சார்..பெரிய பெரிய அரசியல் திமிங்கலங்களை என்ன செய்யப் போறீங்க?” ஒரு ஆண் நிருபர் தன் பங்குக்கு கேள்வி ஒன்றை வீச,

‘சமூகத்தைத் திருத்தி ஒரு சமூக விழிப்பணர்வை பரவலா ஏற்படுத்திட்டாப் போதும் .அந்த வேள்வித் தீயிலே அரசியல் திமிங்கலங்கள் எரிஞ்சு சாம்பலாயிடும்”

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அந்த பேட்டி முடிவடைய காரில் ஏறிப் பறந்தார் ‘கூர் வாள்” ஆசிரியர் துரைஜீவானந்தம்.

மறுநாள் காலை.

‘ஏங்க நீங்க குளிச்சிட்டிருந்தப்ப உங்க சப்-எடிட்டர் போன் பண்ணினார்” துரைஜீவானந்தத்தின் மனைவி சிவகாமி சொல்லியபடியே சமையலறையை நோக்கிச் சென்றாள்.

மொபைலை எடுத்து எண்களை நசுக்கினார்.

‘என்ன ராமு என்ன விஷயம்?”

‘சார்..அந்த லெதர் பேக்டரி மேட்டரை இந்த வார இஷ்யூல போட்டுடலாமா சார்?” சப்-எடிட்டர் ராமு கேட்க

‘ம்ம் அந்த லெதர் பேக்டரி முதலாளி அதுக்கப்புறம் கூப்பிடவேயில்லையா?” ‘இல்லை சார்”

‘ராஸ்கல் வெறும் அஞ்சு லட்சம்தான் கேட்டேன் அதைக் குடுக்கவே கஞ்சத்தனப்படறான் ..ஓ.கே ஓ.கே அவனோட லெதர் பேக்டரி கழிவுகள் எந்தெந்த எடத்துல ஆத்தோட கலக்குது அதனால என்னென்ன பாதிப்புக்கள் ஏற்படுதுங்கற ஆர்ட்டிக்கிளை இந்த வார இஷ்யூலேயே பொட்டுடு இதுக்கு மேல் வெய்ட் பண்ண முடியாது ஹூம்..அஞ்சு லட்சத்தை மிச்சம் பண்ணப் போய் மொத்த பாக்டரியையும் இழுத்து மூடப் போறான்” சிரித்தபடி போனை அணைத்தார்.

சமையலறையிலிருந்து கலவர முகத்துடன் கைகளைப் பிசைந்தபடி வந்த சிவகாமி ‘ஏங்க கேஸ் தீர்ந்து போச்சுங்க”

‘அதான் ரெண்டு சிலிண்டர் இருக்குதல்ல?”

‘இல்லை” கொஞ்சம் லேட்டா புக் பண்ணினதால வர லேட்டாகுதுங்க அப்பவும் புக் பண்ணும் போதே அவன் சொன்னான் ரொம்ப டிமாண்டா இருக்கறதினால இந்தத் தடவ லேட்டாத்தான் வரும்னு.”

‘சரி சரி அதுக்கு ஏன் இந்தப் பொலம்பு பொலம்பறே” என்றவர் சில விநாடிகள் யோசித்து விட்டு ‘சரி..நம்ம ஏரியாவுக்கு சிலிண்டர் போடறவனோட பேரையும் மொபைல்  நம்பரையும் குடு”

‘பேரு சந்திர சேகர். நெம்பரு.” என்று இழுத்தவள் காலண்டர் அருகே சென்று அதில் குறித்து வைத்திருந்த நம்பரைச் சொல்லச் சொல்ல,

துரைஜீவானந்தம் அழைத்தார்.

‘யாருப்பா,..சந்திரசேகரா?…நான் சாந்தி நகர்ல இருந்து பேசறேன் பத்திரிக்கைக்காரர்!…தெரியுதா? சரி..சரி.சிலிண்டர் ஒண்ணு உடனே வேணுமப்பா!…..என்னது புக் பண்ணனுமா?….அதெல்லாம் தெரியும்ப்பா நான் பண்ணிடறேன் நீ மொதல்ல ஒரு சிலிண்டரைக் கொண்டு வா!….யோவ் வேற யாருக்காவது வந்த சிலிண்டரை இங்க தள்ளிட்டு எங்களுக்கு வரும் போது அதை அங்க தள்ளிடு..இதெல்லாம் கூட சொல்லித் தரணுமா..என்ன?..,அது தப்பா?…அதெல்லாம் ஒண்ணும் தப்பில்லை ஒரு சின்ன அட்ஜஸ்ட்மெண்ட் என்ன செய்ய மாட்டியா?..” என்றவர் குரலை சற்றுத் தாழ்த்தி ‘ஒரு நூத்தம்பது ரூபா எக்ஸ்ட்ரா தர்றேன் வாங்கிக்க சரி..இருநூறே வாங்கிக்க! ஓ.கே இன்னிக்கே வந்திடுமல்ல?..சாரி..சாரி வெச்சிடு”

‘சிவகாமி இன்னும் அரை மணி நேரத்துல அவன் சிலிண்டர் கொண்டாந்திடுவான் அவனுக்கு எப்பவும் குடுக்கற பணத்தோட இருநூறு ரூபா சேர்த்துக் குடுத்துடு..என்ன?”

‘என்னங்க நீங்க?..யாருக்கோ வர்றதை நாம் இப்படி அதிகப் பணம் குடுத்து வாங்கிட்டா அவங்க என்னங்க பண்ணுவாங்க?…..பாவம் அவங்களும் நம்மை மாதிரிதானே?…சிரமப்படுவாங்கல்ல?”

‘ச்சீய் வாயை மூடிட்டு சொன்னதைச் செய்டி பெருசா பேச வந்திட்டா பொம்பளை காந்தி” திட்டியபடியே நகர்ந்தார்.

மாலை ஆறு மணியிருக்கும், போர்ட்டிகோவில் அமர்ந்து அடுத்த வார இதழின் ப்ரூப் திருத்திக் கொண்டிருந்தார் துரைஜீவானந்தம்.  தெருவில் யாரோ இரண்டு பேர் கையில் ஒரு ஃபைலோடு தன் வீட்டின் முன் நின்று பேசிக் கொண்டிருக்க யோசனையுடன் எழுந்து கேட்டைத் திறந்து வெளியே வந்து விசாரித்தார்.

‘நாங்க எலக்ட்ரிசிட்டி டிபார்ட்மெண்ட் இந்த தெருவிற்கு சோடியம் வேப்பர் விளக்கு போட அனுமதியாகியிருக்கு .அதான் எங்கெங்கே விளக்குக் கம்பம் வரும்னு அளந்திட்டிருக்கோம்”

தொடர்ந்து அவர்கள் பேசிய பேச்சிலிருந்து தன் வீட்டிற்கு மிகவும் தள்ளியே விளக்குக் கம்பம் அமைகின்றது என்பதைப் புரிந்து கொண்டவர் ‘என்ன சார் நீங்க பேசறதை வெச்சுப் பார்த்தா என் வீட்டுப் பக்கம் வெளிச்சமே வராது போலிருக்கே”

‘என்ன சார் பண்றது? ஒரு கம்பத்துக்கும் இன்னொரு கம்பத்துக்கும் இவ்வளவுதான் இடைவெளி விடணும்னு ரூல்ஸ் இருக்கே”

‘ரூல்ஸ் என்ன சார் ரூல்ஸ் உங்களை மாதிரி அதிகாரிங்க நெனச்சா அதை மாத்த முடியாதா என்ன?” சொல்லிவிட்டு அசிங்கமாய்ச் சிரித்தார் துரைஜீவானந்தம்.

அந்தச் சிரிப்பின் உள்ளர்த்தம் புரிந்து கொண்ட அந்த நபர்களும் ‘மாத்தலாம்தான் ஆனா அதுக்குக் கொஞ்சம் ஹிஹிஹிஹி”

வியாபாரம் பேசப்பட்டு பத்தே நிமிடத்தில் பேரம் படிய துரைஜீவானந்தத்தின் வீட்டு வாசலிலேயே ஒரு விளக்குக் கம்பம் வருவதற்கான ஏற்பாடு உடன்பாடானது.

இரவு

‘ஏய் சிவகாமி வா..வா டி.வி.லே என்னோட பேட்டி போட்டிருக்கான் வந்து பாரு” சமையலறையை நோக்கிக் கத்தினார் துரைஜீவானந்தம்.

சுவாரஸியமேயில்லாமல் நிதானமாய் வந்தாள் அவள்.

‘ஒவ்வொரு மனுசனும் தான் செய்யற தவறுகளை உணர்ந்து தன்னைத் திருத்திக் கொண்டால் போதும் இந்தச் சமூகமே திருந்திடும்”

சிவகாமி திரும்பி கணவனை முறைத்தாள்.

‘சமூகத்தைத் திருத்தி ஒரு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திட்டாப் போதும் .அந்த வேள்வித் தீயிலே அரசியல் திமிங்கலங்கள் எரிஞ்சு சாம்பலாயிடும்”

சிவகாமி சமையலறையை நோக்கித் திரும்பினாள்.

“என்னோட பத்திரிக்கையைப் படிக்கற பாமரன் தெரிஞ்சோ தெரியாமலோ தான் தன் அளவுல செய்யுற சின்னச் சின்ன தவறுகளைத் திருத்திக் கொள்வானல்லவா,”

சிவகாமி சமையலறையை நோக்கி நடந்தாள்.

பாதியிலேயே போகும் அவளை கோபத்துடன் பார்த்தார் துரைஜீவானந்தம்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கூர் வாள்

  1. சுவாரஸ்யமாக இருக்கிறது உண்மையின் முகமூடி கழண்டுவிட்டால், முகில். நானும் இந்த மாதிரி கழுதைகளை
    பலவருடங்களாக பார்த்திருக்கிறேன். ஒன்று தெரியுமா? போலிக்களை அவர்கள் முகத்தில் சொட்டும். அப்படிக்கொட்டாத அரசியலர்களில் பெரும்பாலோர் செத்துப்போய்விட்டனர்.

Leave a Reply to இன்னம்பூரான்

Your email address will not be published. Required fields are marked *