திவாகர்

1980 களின் ஆரம்பங்களில் எனக்கு ஒரு ஆருயிர்த்தோழி இருந்தாள். வீடு எதிர் வீடுதான். சாலை சற்று அகலமானது என்பதால் நாங்கள் இருவரும் ஏதாவது இருக்கும் இடத்திலிருந்தே பேசவேண்டுமானாலும் சைகை மொழிதான்.. எப்போதாவதுதான் என் வீட்டுக்கு வருவாள்.. ஏனெனில் வச வசவென நண்பர்கள் கூட்டத்துக்கு குறைவே கிடையாத நாட்கள் அவை. அவளுக்கு கூட்டம் பிடிக்காது, கூச்சப்படுவாள். நான் அவள் வீட்டுக்குப் போவதுண்டு.. அவ்வப்போது பலகாரம், சாப்பாடு கூட உண்டு. ஐயப்ப பூஜை சமயங்களில் மட்டும் தன் அப்பாவுடன் சாயங்காலம் பூராவும் எங்களுடனே அவள் ஆஜர்தாம்..

இரவு எந்நேரம் படுக்கப் போனாலும் நான் கண்டிப்பாக காலை எழுந்தே ஆகவேண்டும்தான்.. காரணம் அவள் அங்கேயிருந்து என்னைக் கண்டதும் குட்மார்னிங் திவாம்மா.. (திவா மாமா) என்று கூவுவதைக் கேட்டே ஆகவேண்டும். ஆமாம்.. எதிர்வீட்டு நண்பர் திரு சுப்பாராவ் அவர்களின் குழந்தை சுசீலாவுக்கு அத்தனை பிரேமை என் மீது.. மழை நாளானாலும் பனியானாலும் அந்தக் குழந்தை ஜன்னலருகே இந்தக் கூவலுக்காக காத்துக் கிடக்கும் . அவள் தந்தையும் தாயும் என்னுடைய இனிய நண்பர்கள் ஆதலால் ஒரு செல்ல கோபத்துடன் என்னைக் கண்டிப்பார்கள்.. ‘எங்களுக்குக் கூட அவள் குட்மார்னிங் சொல்வதில்லை’ என்று குறை வேறு சொல்வார்கள்.. நாள் தவறினாலும் அவள் கூவும் குட் மார்னிங் மட்டும் தவறவே தவறாது (நாங்கள் எங்காவது வெளியூர் பயணத்தில் இருந்தால் தவிர)..

அவள் இதை விளையாட்டாகவோ அல்லது அன்பால் ஏற்பட்ட கடமையாகவோ, இப்படி தினம் செய்யலாம். ஆனால் எனக்கு அப்போதெல்லாம் சுசீலா மிகப் பெரிய டானிக்.. ஒரு சுறுசுறுப்பும் பரபரப்பும் என்னையறியாமல் தொற்றிக்கொள்ளும். . குட் மார்னிங் சொல்வதெல்லாம் எப்படி டானிக் ஆகும் என்று கேள்வி வரும்.. அதை அந்தக் கணங்களில் அனுபவித்தவர்தாம் அதன் மகிமையையும் உணரமுடியும். நல்ல வார்த்தை நாலு சொல்லும்போது அந்த நல்லதின் விளைவும் அலைகளும் நம்மையும் தொற்றி பற்றிக் கொள்ளும். உற்சாகம் கூடவே தோன்றும். அந்த நாள் இனிய நாள்தான். இப்போதும் கூட சில நண்பர்களிடமிருந்து நல் வணக்கமும் வாழ்த்தும் எஸ் எம் எஸ் மூலமாக வந்து கொண்டிருக்கிறது. இங்குள்ள (மிகப் பெரிய பதவியில் இருந்தாலும்) தமிழ் நண்பர் திரு முத்துசாமி அவர்கள் ’இந்த நாள் இனிய நாளாகட்டும்’ என்று செய்தி அனுப்பிக் கொண்டே இருப்பார். அதைப் பார்த்ததும் நமக்குள்ளே ஒரு புது உற்சாகம் தோன்றி மறைவதை மறுக்கவே முடியாது.

இனிய நாள் என்றதும் இந்த நாள் இனிய நாள் என்று தினம் குழுமங்களில் கூவும் நண்பர் ஜோ’வை இணைய நண்பர்களுக்கு நினைவு வந்துவிடும். ஜோ’வும் நாள் தவறாமல் இந்த நாள் இனிமையாக இருக்கட்டும் என்று எல்லோருக்கும் சொல்லி வருகிறார். விடா முயற்சியாக நாளும் அலுக்காமல் அவர் இந்த நல்ல வார்த்தைப் பதிவிடும் போதெல்லாம் பார்க்கும், படிக்கும் எல்லோருக்குமே உற்சாகம் வரத்தான் செய்யும்.

இதோ புது வருடம் வந்துகொண்டே இருக்கிறது. சற்று திரும்பிப் பார்த்து நடந்து போன நிகழ்ச்சிகளை சற்று நினைவு கூர்ந்தால் சென்று போன வருடம் நல்லதை விட கெட்டதுகளை அதிகம் உண்டாக்கிச் சென்ற வருடமாகிவிட்டதோ எனக் கூட தோன்றலாம். இருந்தும் நாம் நல்லவைகளையே இனி எதிர்பார்ப்போம்.. நல்லவைகளையே நினைப்போம். ஜோ’வைப் போலவே அவர் தரும் இனிய செய்திகளைப் போலவே இந்த நாள் என்றல்ல, இந்தப் புதிய வருடத்தில் வரும் ஒவ்வொரு நாளும் இனிய நாளாக அமைந்திட பிரார்த்திப்போம்.

ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு நாளும் புதுப்புது உற்சாகத்தை உண்டாக்கி, இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என நினைக்க வைத்து இந்த நாள் இனிய நாளென்று நல்லதையே நாளும் நினைக்க வைத்து வரும் இனிய தோழர் ஜோ எனும் ஜோசப் அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமையாளர் குழுவினர் சார்பில் அறிவிப்பது இந்த வருடத்தில் கடைசியாக நான் செய்துகொண்டிருக்கும் செயல்களில் ஒரு மிக நல்ல செயலாகக் கருதுகிறேன். ஜோ’வுக்கு ஜே போட்டு அவருக்குப் பொது வாழ்த்தோடு புது வருட வாழ்த்தையும் சொல்லிக் கொள்கிறேன்.

கடைசி பாரா:

உற்றார்கள் எமக்கில்லை யாரும் என்னும்
உற்றார்கள் எமக்கிங்கே எல்லாரும் என்னும்

என்ற நம்மாழ்வாரின் தீர்க்கதரிசன வார்த்தைகளை, அதன் சத்தியத்தை எண்ணி எண்ணி அனுக்கணமும் வியந்து கொண்டே, உங்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகளை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. வல்லமையாளருக்கு வணக்கமும் வாழ்த்தும்!!

  2. ‘வல்லமை விருது’ பெற்ற தோழர் ஜோசப் அவர்களுக்கு அவர் பாணியிலேயே, விருது பெற்ற  நாளை ‘இந்த நாள் இனிய நாள்’ என்றும், இனிவரப்போகும் புதிய நாளும் (புத்தாண்டு) இனிய நாளாக அமையட்டும் என்று வாழ்த்துச் சொல்கிறேன். 

  3. வல்லமையாளர் விருது பெற்ற ஜோசப் அவர்களுக்கு வாழ்த்துகள்!!!!

  4. .வாழ்த்துக்கள் என் அன்பு நண்பர் ஜோசப் ஜி அவர்களுக்கு .. மேலும் எனது அன்பு நன்ன்பர் சிறப்படைய அன்புடன் வாழ்த்துகிறேன் இறைவனிடம் வேண்டுகிறேன் ..

Leave a Reply to பெருவை பார்ததசாரதி

Your email address will not be published. Required fields are marked *