நிலவொளியில் ஒரு குளியல் – 27

4

ஸ்ரீஜா வெங்கடேஷ்

Srija venkateshமுதுவேனில் தொடங்கிவிட்டது. கூடவே ஐஸ்கிரீம்ஸ், சர்பத் போன்றவை உட்கொள்ளும் காலமும் தொடங்கிவிட்டது. பல ஐஸ்கிரீம் கம்பெனிகள் போட்டி போட்டுக்கொண்டு என்னென்னவோ புது வகையான ஐஸ்கிரீம்களை எல்லாம் கொண்டு வந்துள்ளன. அவற்றின் பெயர்கள் எல்லாம் வாயிலேயே நுழையவில்லை. கேட்டால் ஐஸ்கிரீம் வாயில் நுழைந்தால் போதாதா? பெயர் நுழையவில்லை என்றால் என்ன? என்று கேட்பார்கள். சாக்லேட் ஐஸ்கிரீம், கேக்குள்ளே பொதிந்துள்ள ஐஸ்கிரீம், இரண்டு மூன்று வாசனையுள்ள வகைகள் கலந்த ஐஸ்கிரீம் என்று இருந்தாலும் எனக்கு அவை எல்லாவற்றின் சுவையும் ஒன்று போல இருப்பதாகவே படுகிறது.

இவை தவிர பானங்கள். கோடைக் காலம் தோன்றிய நாள் முதலாக இருந்து வரும் பானங்களைப் புறந்தள்ளி “என் அன்பே! இந்த மாம்பழச் சாறை ருசித்துப் பார்” என்றும், அந்த பானத்தைக் குடித்தவுடன் ப்ர்ர்ர்… என்று சத்தம் போட்டு உடம்பைக் குலுக்கச் சொல்லும் பானங்களும் சந்தையில் மலிந்துவிட்டன. மேற்சொன்ன பானங்கள் அனைத்துமே இரசாயனப் பொருட்கள், செயற்கை நிறமூட்டிகள் கொண்டு தயாரிக்கப் படுகின்றனவே அல்லாது, உடலைக் குளிர்விக்கும் எந்தப் பொருளும் அதில் கிடையாது.

என்னுடைய நினைவுப் பெட்டகத்தைத் திறந்தால் ஆழ்வார்குறிச்சியில் நான் கழித்த கோடைக் காலங்களின் நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. அப்போது இவை போன்ற பானங்களோ, பல்வேறு விதமான ஐஸ்கிரீம்களோ கிடையாது. நாங்கள் குடித்தவை எல்லாம் கம்மங்கூழ், அதற்குத் தொட்டுக்கொள்ள ஏதாவது ஒரு துவையல். அவ்வளவுதான். அது இல்லையென்றால் பழைய சாதத்தில் நிறைய மோரூற்றி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, மாங்காய்களைச் சிறு துண்டுகளாக நறுக்கி அதில் போட்டிருப்பார்கள். கடுகும் பெருங்காயமும் தாளித்திருப்பார்கள். அது தான் எங்களுக்குக் காபி, டீக்குப் பதில் பருகக் கிடைக்கும். அதன் அதன் சுவையும் குளுமையும் நெஞ்சை விட்டு நீங்காதவை.

அவை போதாதென்று நன்னாரி என்றோரு மூலிகை இருக்கிறது. கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதன் வேர் மிகவும் குளிர்ச்சி வாய்ந்தது. அதை எடுத்து, காய்ச்சி, மஞ்சள் நிறத்தில் (செயற்கைக் நிறமேற்றம் இல்லாமல்) ஒரு குப்பியில் அடைத்து விற்பார்கள். அதை வாங்கி வந்து வைத்துக் கொள்வார்கள். மிகவும் நாக்கு உலர்ந்து போகும் சமயங்களில் எலுமிச்சம் பழச் சாற்றைப் பிழிந்து, சிறிது நன்னாரி சாறும் சேர்த்து சீனி போட்டுக் கலக்கிக் கொடுப்பார்கள். சிறு பானைகளில் அவற்றை ஊற்றி வைத்து குளிர்ந்தபின் அருந்துவதும் உண்டு.

இன்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நீங்கள் சிறு கடைகளில் சென்று சர்பத் என்று கேட்டால் எலுமிச்சை, நன்னாரி சர்பத் தான் தருவார்கள். ஏனோ அந்தப் பானம், அந்த எல்லைத் தாண்டி பிரபலம் அடையவில்லை. உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரும் நன்னாரி இரத்த சுத்திக்கும் நல்லது என்று எங்கள் ஊரில் கூறுவார்கள்.

எங்கள் ஊரில் கோடைக் காலத்தை “வேனக் காலம்” என்றே சொல்வார்கள். வேனில் காலம் என்ற சங்க காலத் தமிழ்ச் சொல்லின் திரிபு அது. மேற்கூறிய சர்பத்துகள் தவிர வாசலில் ஐஸ்கிரீம் வண்டி வரும். வண்டி என்றவுடன் பெரிதாகக் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். ஒரு சைக்கிளில் ஒரு பெரிய மரப் பெட்டி கட்டப்பட்டிருக்கும். அதுதான் எங்கள் ஊர் ஐஸ்கிரீம் வண்டி. அந்தப் பெட்டியின் மேல் மூடியை சப்தப்படுத்திக்கொண்டே அந்தச் சிறு வியாபாரிகள் தெருக்களில் நுழைவார்கள்.

ice cream cycle

அந்தச் சத்தம் எங்களுக்கு ஓர் அழைப்பைப் போல் ஒலிக்கும். அன்று ஐஸ்கிரீம் சாப்பிடக் கொடுத்து வைத்தவர்கள் யார் யார் என்று பார்க்கத் தெருவுக்கு வருவோம். ஐஸ் ஒன்றும் அப்படி பிரமாத விலையிருக்காது. 10 பைசா, 15 பைசா அதிக பட்சமாக 25 பைசா. இப்போது உள்ளது போல் வித விதமான ஃப்ளேவர்களில் கிடைக்காது. 10 பைசா குச்சி ஐஸ், ஆரஞ்சு, பச்சை, மஞ்சள் என்ற மூன்று நிறங்களில் பெரும்பாலும் கிடைக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் நம் உதடுகளுக்கும் அந்த நிறம் வந்திருக்கும். குளிர்ச்சியையும் இனிப்பையும் தவிர வேறு எதையும் அந்த ஐஸிலிருந்து எதிர்பார்க்க முடியாது.

15 பைசா குச்சி ஐஸ் என்பது பால் ஐஸ் என்று மரியாதையாக அழைக்கப்படும். நல்ல வெள்ளை வெளேரென்று இருக்கும் அந்த ஐஸ் மட்டும் உடலுக்கு நல்லது என்று எங்கள் அம்மாமார்கள் நம்பினார்கள். மிக உயர்ந்ததான 25 பைசா ஐஸ் தான் கிரேப் ஐஸ் எனப்படும் திராட்சை ஐஸ். ஒரு மாதிரி ஊதா நிறத்தில் இருக்கும். அந்த ஐஸ்கிரீம் எல்லாம் சாப்பிடுவது மிகப் பெரிய கனவு எங்களுக்கு.

வாசலில் வண்டி வந்தவுடன் அம்மாவிடம் கெஞ்ச ஆரம்பிப்போம். பெரும்பாலான நாட்கள் நிர்தாட்சண்யமாக மறுத்து விடுவார்கள். என்றைக்காவது அவர்கள் நல்ல மூடில் இருந்து, அவர்கள் கையில் காசுப் புழக்கமும் இருந்தால், பத்து பைசா குச்சி ஐஸ் வாங்கிக்கொள்ளக் காசு கிடைக்கும். அன்று நாங்கள் அடையும் சந்தோஷம், பின்னாட்களில் பலவிதமான் ஐஸ்கிரீம்கள் சுவைத்துப் பார்த்த போதும் ஏற்பட்டதில்லை.

காசு கையில் கிடைத்ததும் உடனே ஓடிப்போய் வாங்கி விட மாட்டோம். நாங்கள் வாங்கப் போவதை உலகுக்கு அறிவிக்க வேண்டாமா? பிறருக்குத் தெரியாமல் வாங்கித் தின்பதில் என்ன ஆனந்தம் இருக்கிறது? அதனால் வீட்டு வாசலில் வந்து நின்றுகொண்டு ஐஸ்கிரீம் வண்டிக்காரரைக் குரலெடுத்துக் கூப்பிடுவோம். அவர் வீட்டுக்கு அருகிலேயே நின்றிருந்தாலும் கூட நாங்கள் கூப்பிடும் சப்தம் தெருக் கடைசி வரை கேட்குமாறு பார்த்துக்கொள்வோம். அவரும் வந்து விடுவார். இப்போது அடுத்த சோதனை, எந்த நிறமுள்ள ஐஸைத் தேர்ந்தெடுப்பது?

ஒரு வழியாக ஏதாவது ஒரு நிறம் தேர்ந்தெடுத்து விட்டு (பெரும்பாலும் பச்சை ஏனென்றால் அதன் நிறம் தான் உதடுகளில் ரொம்ப நேரம் நிற்கும்) எங்கள் தோழியர் அனைவரும் அவரவர் வீட்டிலிருந்து பார்க்கிறார்களா என்று ஓரப் பார்வை பார்த்து, ஏதோ நாம் ராணி போலவும் அவர்கள் அடிமைகள் போலவும் போன்ற ஒரு பாவத்தோடு ஒய்யாரமாகச் சாப்பிட ஆரம்பிப்போம். சரி! அவர்களுக்கும் காலம் வரும், அப்போது அவர்கள் என்னைப் பார்க்க வைத்து அதே பாவத்தோடு சாப்பிடுவார்கள்.

உண்மையான திரு நாள் எங்களுக்கு என்றைக்குத் தெரியுமா? அம்மா கிரேப் ஐஸ் வாங்கக் காசு கொடுக்கும் அன்று தான். அது என்றோ நிகழும் ஒன்று. அந்த கிரேப் ஐஸை வாங்கி, அதைச் சுற்றியிருக்கும் வெள்ளைக் காகிதத்தை அகற்றும் போதே நாக்கு ஊறி, கண்கள் வெளிச்சம் போட ஆரம்பித்துவிடும். கன்றைப் பரிவோடு நக்கிக் கொடுக்கும் தாய்ப் பசுபோல அதைச் சீக்கிரமே கரைந்து விடாத வண்ணம் மெதுவாக நக்குவோம். ரொம்ப மெதுவாகச் சாப்பிட்டால் ஐஸ் உருகி கீழே சொட்டி வீணாகி விடும். வேகமாகச் சாப்பிட்டாலோ, வேகமாகக் காலியாகி எங்கள் பெருமை, உயர்வு இவை சீக்கிரமே கரைந்து விடும்.

ice cream children

இப்படி ஐஸை உருகவும் விடாமல், மெதுவாகவும் சாப்பிடும் பரீட்சையில் நாங்கள் அனைவருமே உயர்ந்த மதிப்பெண் வாங்கித் தேர்ச்சி பெற்றிருந்தோம். எங்களுக்குக் கிடைக்கும் பரிசு என்ன தெரியுமா? அந்தக் குச்சி ஐஸில் எப்போதாவது கிடைக்கும் ஒரு துண்டு திராட்சை. அது நாங்கள் வாங்கிய ஐஸில் இருந்துவிட்டால் நாங்கள் மிகவும் அதிருஷ்டசாலிகள்.

இந்த அனுபவங்களையெல்லாம் நம் இளைய தலைமுறையிடம் சொன்னால் அவர்களால் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாது. “என்ன இது ஜஸ்ட் ஒரு பத்து ரூபா கூட ஐஸ்கிரீமுக்காகச் செலவழிக்க மாட்டீங்களா?” என்று எளிதாகக் கேட்டு விடுவார்கள். அவர்களிடம் 10 பைசாவுக்கும் 15 பைசாவுக்கும் நாம் நம் அம்மாமார்களிடம் கெஞ்சியதைச் சொன்னால் மிகைப்படுத்துவதாகவே நினைப்பார்கள். பணத்தின் மதிப்பு அவர்களுக்குத் தெரியவில்லை.

அதற்குக் காரணம் நாம்தானே அன்றி, அவர்களில்லை. நாம் சிறு வயதில் பட்ட கஷ்டங்களையெல்லாம் நம் குழந்தைகள் படக் கூடாது என்ற எண்ணம் ஒரு புறம், பெற்றோர் இருவரும் சம்பாதிப்பதனால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி ஒரு புறம், திறந்து விடப்பட்ட சந்தையினால் எளிதில் கிடைக்கும் பொருட்கள் ஒரு புறம் என நம்முடைய வாழ்க்கை முறை மாறிவிட்டது.

சேமித்து வைப்பதை விட, ஏதோ நன்றாகச் சம்பாதித்தோம், நன்றாகச் செலவு செய்வோம் என்ற மனோபாவம் நம்மிடையே அதிகரித்துவிட்டது. சிக்கனம் என்பது கஞ்சத்தனம் என்று வேறு பெயர் கொண்டுவிட்டது. இவை எல்லாம் போதாதென்று தனியார் வங்கிகளின் தனி நபர்க் கடன் நம் அனைவரையும் கடனாளியாக்கி விட்டது. எல்லாவற்றிற்கும் மாதத் தவணைத் திட்டம். விடுமுறை நாட்களைக் கழிக்கக் கூட மாதத் தவணைத் திட்டங்கள் வந்துவிட்டன. இதனால் நம்மை மீறிச் செலவழித்துக்கொண்டிருக்கிறோம்.

இதன் காரணமாக நம் இளைய தலைமுறைக்குப் பணத்தின் அருமையை எடுத்துச் சொல்ல நாம் தவறிவிட்டோம். இன்று செய்தித் தாளில் ஒரு செய்தி. நாடு தழுவிய பொறியியல் தேர்வுக்கான கேள்வித்தாள்கள் ரூபாய் 6 லட்சத்துக்கு விற்பனை என்று. நம் நாட்டின் ஆகச் சிறந்த படிப்பாகக் கருதப்படும் பொறியியல் படிப்பின் லட்சணம் இது. எத்தனை மாணவர்கள் தன்னுடைய பெற்றோரை இந்தக் கேள்வித்தாள் வாங்கித் தரும்படி கேட்டனரோ? கடவுளுக்கே வெளிச்சம். கொடுக்க ஆட்கள் இருப்பதனால் தானே அவர்கள் விலை வைக்கிறார்கள்.

விஷயம் எங்கோ ஆரம்பித்து எங்கோ போய்விட்டது. என்ன சொல்ல வருகிறேன் என்றால், நம் இளைய தலைமுறைக்குப் பணத்தின் அருமையையும் உழைப்பின் பெருமையையும் நாம்தான் புரிய வைக்க வேண்டும். இளம் வயதில் விதைத்தது மனத்தில் எப்போதும் நிற்கும்.

பொறுப்புள்ள ஒரு இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்று உறுதி எடுத்துக்கொண்டு, வரும் கடுங்கோடையை நல்ல நிலவொளியில் ஒரு குளியல் போட்டு, சந்தோஷமாக எதிர்கொள்வோம்.

(மேலும் நனைவோம்…..

============================================

படங்களுக்கு நன்றி: http://girlgonegoa.wordpress.com, http://cdn.wn.com

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “நிலவொளியில் ஒரு குளியல் – 27

  1. Very nice article. The descriptions about enjoying the ice creams was quite artistic. Good work.

  2. எனது சிறு வயதில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட நினைவுகளைக் கிளறியதற்கு நன்றி. பத்தி மிகவும் அருமை. நிழற்படங்களும் மிக அருமை. வாழ்த்துகள்.

  3. Well done madam. This article is really good. We have to teach youngsters to save money and to eat which is really a good for our health. Photography is very good.

    Thank you

    Trichy Sridharan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *