மாதவன் இளங்கோ 

அன்று காலை ப்ருசெல்ஸ் (Brussels) விமான நிலையத்தில் நான் சென்ற விமானம் தரையிறங்கி சில நிமிடங்கள்தான் ஆகி இருந்தது.

என் வேலையே ஊர் ஊராகச் சுற்றுவதுதான். ஆரம்பத்தில் என்னவோ அது கவர்ச்சியாகவும், சுவாரசியமாகவும்தான் இருந்தது. இப்போதெல்லாம் விமானப் பயணத்தையும், விமான நிலையங்களையும் நினைத்தாலே எரிச்சலும், தலைவலியும் வந்து விடுகிறது. இன்னும் சொல்லப்போனால், சென்னையில் வீட்டிலிருந்து கிளம்பி, வெளிநாடு வந்து சேர்ந்து, விடுதி அறைக்குள் நுழைவதற்குள் (door-to-door) நடப்பவைகள் எல்லாமே ஒரு கெட்டகனவு போலவே தோன்றுகிறது. ஏன்தான் இந்த ‘உலகம் சுற்றும் வாலிபப் பணியை தேர்ந்தெடுத்துத் தொலைத்தோமோ?’ என்று என்னையே நான்  அறைந்துகொள்ளவேண்டும் என்று பலசமயம் தோன்றும்.

ஆனால் அந்தமுறை அப்படியெல்லாம் தோன்றவில்லை. ஏனென்றால், நீண்ட நாளைக்குப் பிறகு என் கல்லூரித் தோழன் கிருஷ்ணமூர்த்தியை சந்திக்கப் போகிறோம் என்கிற சந்தோஷத்தில் இருந்தேன். அவனை அதற்கு முன்பு கடைசியாகக் கோயமுத்தூரில் நண்பன் ஒருவனின் திருமணத்தில் சந்தித்தது என்று நினைக்கிறேன். அவனும் பெல்ஜியம் சென்று நான்கைந்து வருடங்கள் ஆகிவிட்டன.

ப்ருசெல்ஸ் நகரம் எனக்கு ஒன்றும் புதியது அல்ல; ஆறு வருடங்களுக்கு முன்பு வந்திருக்கிறேன். அப்போதெல்லாம், சென்னையிலிருந்து ப்ருசெல்சிற்கு நேரடி விமானம் கிடையாது; பிராங்க்பர்ட் (Frankfurt) நகரம் சென்று, மாற்றுப்பயணியர் ஓய்வறையில் நான்கு மணிநேரம் காத்திருந்து விட்டு, வேறு விமானம் மாறிச் செல்ல வேண்டும். நல்ல வேளை – அந்தமுறை அந்தத் தொல்லை இல்லை. நான் சென்றது ஒரு நேரடி விமானம்.

பத்து மணிநேர விமான பயணத்தில் சரியாகத் தூக்கமே வரவில்லை. ஒரு தமிழ், ஒரு ஆங்கிலம், ஒரு இந்தி என தலா மூன்று திரைப்படங்களைப் பார்த்துவிட்டேன். மூன்றரை என்று கூடச் சொல்லலாம். ஏனென்றால், அந்த இந்திப்படத்தை ஏன்தான் பார்த்தோம் என்றாகி, பாதியில் நிறுத்திவிட்டுத் தூங்கிவிட்டேன்.

குடியுரிமை மற்றும் சுங்க சோதனைகளை எல்லாம் விரைவாக முடித்துவிட்டு, என் மூட்டை முடிச்சுகளைத் தூக்கி தள்ளுவண்டியில் வைத்துக்கொண்டு, வருகைக்கூடத்திற்குள் நுழைந்தேன்.

“கார்த்திக் ….” என்று சற்று உரக்கவே ஒலித்தது கிருஷ்ணமூர்த்தியின் குரல். இடது புறம் திரும்பிப் பார்த்தால், வெள்ளைக்காரர்களுக்கு நடுவே ஒரு மாநிற முகம் புன்னகையுடன் கையசைத்துக்கொண்டிருந்தது. நிச்சயம் அவனேதான்.

ஓடிச்சென்று கைகுலுக்கினேன்.

“ஹே கிருஷ்ணா! எப்படிடா இருக்கே?”

‘என்னடா மச்சான் எப்படி இருக்கே’ என்று கேட்டுவிட்டு அணைக்கலாம் என்றுதான் முதலில் தோன்றியது. ஆனால், இந்தப் பன்னிரண்டு வருட இடைவெளியும், முன்தலை வழுக்கை விழுந்து முற்றிலும் மாறிப்போயிருந்த அவன் தோற்றமும் ஏனோ தடுத்துவிட்டது.

“என்னடா கார்த்திக், ஆளே மாறிப்போயிட்டே?” என்று கேட்டான்.

“நானும் அதத்தான் கேட்கணும்னு நெனெச்சேன். நீ முந்திகிட்ட! ஆள் அடையாளமே தெரியலடா. நீமட்டும் என்ன கூப்பிடாம இருந்தா உன்ன கண்டே பிடிச்சிருக்க மாட்டேன்.”

“என்னடா பண்றது. இங்க வாட்டர் ஹார்ட்னெஸ்  சித்த அதிகம். அதனால முடியெல்லாம் கொட்டிப்போயிடுத்து. பத்தாக்குறைக்கு இந்த ஊரு பட்டரும், பீரும் கொஞ்சம் உடம்ப கூட்டிடுத்து!!”

“பீர் வேறையா? இது எப்போ இருந்து?”

“அப்கோர்ஸ்! பெல்ஜியம் வந்துட்டு யாராச்சும் பீர் குடிக்காம இருப்பாளா? சரி வா போயிண்டே பேசலாம்.”

வருகைக்கூடத்தை விட்டு வெளியே வந்த அடுத்த நொடி, சில்லென்று குளிர்காற்று வந்து மோதி என் உடம்பை சிலிர்க்கச் செய்தது.

“ஊ………. ஐ கேன் பீல் ஈரோப் நவ்!” என்று சொன்னேன்.

“ஹலோ, இப்போ இங்க சம்மர் தெரியுமோ? இதுக்கே சிலுத்துண்டா, வின்டர்லல்லாம் வந்தா நீ என்னடா பண்ணுவ?”

“சம்மரா? சென்னைல வின்டர்கூட இவ்ளோ குளிராது மச்சி!”

“ஐயையோ! சென்னைய பத்தி மட்டும் பேசாதடாப்பா சாமி! கேட்டாலே பயமா இருக்கு.”

அவன் கூறியதைக்கேட்டுச் சிரித்தாலும், எனக்கு உள்ளுக்குள் சற்று எரிச்சல் உண்டாகியது.

வெளிநாட்டவர்கள் கூட இப்படி பேசமாட்டார்கள். ஆனால், ஒரு மூன்று, நான்கு வருடம் வெளிநாடுகளில் வாழ்ந்து விட்டு, விடுமுறைக்கு வரும் நம் மக்கள் அடிக்கும் கூத்து இருக்கிறதே? என்னவோ, இந்தியாவிற்கும் அவர்களுக்கும் சம்மந்தமே இல்லாதது போலவும், நாமெல்லாம் இங்கு ஏதோ பரிதாபமானதொரு வாழ்க்கையை   வாழ்ந்து கொண்டிருப்பது போலவும் பேசுவார்கள். இது போன்ற மனிதர்களைக் கண்டாலே எனக்கு எரிச்சல் வந்து விடுவது உண்டு.

இப்படி ஏதேதோ உரையாடிக்கொண்டே அவனது காரை வந்தடைந்தோம்.

“ஹே, ஆடி ஏ சிக்ஸ் (Audi A6)! கலக்கு மச்சி. யு நெவெர் மெயில்ட் மீ அபௌட் திஸ்!”

“ஆமாண்டா. வந்த புதிசுல வோல்க்ஸ் வேகன் பசாட் வாங்கினேன். ஆடி மேல ரொம்ப நாளா ஒரு கண்ணு. வாங்கி எயிட் மந்த்ஸ் தான் ஆகுது.”

‘மோட்டார் வே’ எனப்படும் குறுக்கு சாலைகளற்ற, அதிவேக போக்குவரத்திற்காக வடிவமைக்கப்பட்ட நெடுஞ்சாலையில் சீறிப்பாய்ந்தது கிருஷ்ணாவின் ஆடி.

யாரோ பெருக்கிவிட்டுப் பின்  தண்ணீரால் துடைத்தெடுத்தது போல் காணப்படும் அந்த ரப்பர் சாலைகளையும், அதன் தரத்தையும், நெடுஞ்சாலையின் இரண்டு புறங்களிலும் விரிந்துகிடந்த பச்சைப் புல்வெளிகளையும், விதிகளை மதித்துச் செல்லும் வாகனங்களையும்  பார்க்கும் போது அவர்கள் அப்படி கர்வப்பட்டுக் கொள்வதிலும், நம்மை பரிதாபமாகப் பார்ப்பதிலும்கூட ஒரு நியாயம் இருக்கிறது என்று எனக்குத் தோன்றியது.

“கார்த்தி, பர்ஸ்ட் என் வீட்டுக்கு போயிட்டு, ப்ரேக்பாஸ்ட், லஞ்செல்லாம், முடிச்சிட்டு, கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு, அப்புறம் ஈவினிங்கா லூவன்ல (Leuven) இருக்கற உன் ஹோட்டல் ரூமுக்கு போகலாம்!”

“ஒகே டா. யு ஆர் மை பாஸ் டுடே!  ஆமா , உன் வீடு எங்க இருக்கு?”

“என் வீடு ப்ருசெல்சுக்கும், லூவனுக்கும் நடுவுல டெர்வூரன்-ங்கிற  (tervuren) ஒரு ஸ்மால் டவுன்ல இருக்கு. மொதல்ல லூவன்ல தான் இருந்தேன். என்னோட பையன ஒரு பிரிட்டிஷ் ஸ்கூல்ல சேர்க்கறதுக்காக இங்க வந்துட்டேன். எக்ஸ்பென்சிவ் தான் – பத்தாயிரம் ஈரோஸ் பெர் இயர்! பரவால.  ஐ டோன்ட் மைண்ட் த்ரோவிங் மனி பார் மை சன்!”

“வாட்ட்ட்ட்??? பத்தாயிரம் ஈரோஸா? அப்ராக்சிமேட்லி, ஒரு வருஷத்துக்கு ஏழு லட்சம் ரூபா!!!! அம்மாடி!!!”

“காச சேர்த்து என்னடா பண்ண போறோம். எல்லாம் என் பையனுக்காகத் தானே!”

“அது கரெக்ட். எஜுகேஷன் ஒரு நல்ல இன்வெஸ்ட்மென்ட் பார் தி கிட்ஸ்!”

காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தோம். அது ஒரு அழகான வீடு. மூன்று பேருக்கு கொஞ்சம் பெரிய வீடு என்று கூடச் சொல்லலாம். கிருஷ்ணாவின் மனைவி வித்யா  மிக நேர்த்தியாக வீட்டை பராமரித்து வைத்திருந்தாள். அது அவளுடைய பொழுதுபோக்கு என்று கிருஷ்ணா கூறினான்.

கிருஷ்ணாவின் குழந்தை சிரேஷின் அறிவு என்னை பிரமிக்கச் செய்தது. மூன்றரை வயதேயான அவன் அவ்வளவு செம்மையாக ஐபாடை (iPad) உபயோகித்த விதம் என்னை பிரம்மிக்கச் செய்தது. ஆனால் ஒன்று, அவனுக்குத் தமிழே பேசத் தெரியவில்லை.

அவனுக்காகவே ஒரு பெரிய டாய் ரூம் (Toy Room) ஒன்றை செய்து கொடுத்திருந்தான் கிருஷ்ணா. அவ்வளவு பொம்மைகள் நம் ஊரில் ஒரு கடையில் கூட இருக்காது.

அவன் வீட்டில் இதற்கு மேல் வாங்குவதற்கென்று ஒன்றும் இல்லை என்றுகூடச்  சொல்லலாம். அந்த அளவிற்கு ஆடம்பரமான வாழ்க்கையாக எனக்குப்பட்டாலும், தஞ்சாவூருக்கு அருகே ஒரு கிராமத்தில் பிறந்த  என் நண்பன் இந்த அளவிற்கு வளர்ந்திருப்பதை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டேன்.

“வீடு நல்லாயிருக்குடா கிருஷ்ணா” என்று கூறிக்கொண்டிருந்தபோதே அவன் மனைவி, “க்ரிஸ் (Kris), பிரான்சிஸ் ஆன் தி லைன்” என்று கூறி கைப்பேசியை அவனிடம் கொடுத்தாள்.

“க்ரிஸ் ஹியர்…” என்று யாரிடமோ சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தான். கிருஷ்ணமூர்த்தி – க்ரிஸ் ஆக மாறி இருந்தது. பரவாயில்லை, உடம்பு பெருத்துவிட்டிருந்தாலும் பெயராவது குறுகியிருக்கிறதே என்று நினைத்தபோது சிரிப்பு வந்தது.

“சாரிடா கார்த்திக். ரியல் எஸ்டேட் ஏஜென்ட் போன் பண்ணினான். ஒரு வீடு ஒன்னு இந்த ஏரியால பாத்துண்டு இருக்கேன்”

“இந்த வீடே சூபெர்பா  இருக்கேடா!”

“இல்லடா, கொஞ்சம் பிக்கர் ஹவுஸ் வித் கார்டனோட வாங்கணுங்கறது எங்க ரெண்டு பேரோட ரொம்ப நாள் ட்ரீம். வித்யா கூட இப்போ கார்டன் ஆர்கிடெக்ட் கோர்ஸ் பண்ணிண்டு இருக்கா.”

“சூப்பெர்டா! ஆல் த பெஸ்ட்!”

பகல் நேரங்களில் என்னுடைய வேலை, மாலை நேரங்களில் கிருஷ்ணா – மன்னிக்கவும் – க்ரிஸ் வீட்டிலும் என்று இரண்டு வாரங்கள் ஓடியதே தெரியவில்லை. இதற்கு நடுவே, க்ரிஸ் ஒரு மூன்று நான்கு வீடுகளைப் பார்த்துவிட்டு, காற்றோற்றம் இல்லை, தோட்டம் பெரிதாக இல்லை என்று மறுத்து விட்டான்.

நான் புறப்படுவதற்கு முந்தைய இரவு, நீண்ட நேரம் அவன் வீட்டில்  அளவளாவிக்கொண்டிருந்தோம்.

“அடுத்த மாசம் கண்டிப்பா திரும்பவும் வர்ற மாதிரி இருக்குடா..”

“தட்ஸ் க்ரேட்! அப்போ உங்களுக்கு ஒரு பெரிய லிஸ்ட் கொடுக்கறேன்.” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் வித்யா.

” கண்டிப்பா வித்யா. இட்ஸ் மை ப்ளஷர். ஹே கிருஷ்ணா, கேக்கணும்னு நெனெச்சேன். அம்மா இப்போ தஞ்சாவூர்லையா இருக்காங்க?”

“இல்லடா, சென்னைல தான்! நான் கூட உன்கிட்ட சாக்லேட்ஸ் வாங்கித் தரணும்னு நெனெச்சேன் மறந்தே போயிடுத்து. டேம்!!! போயி குயிக்கா வாங்கிண்டு வந்துடவா?”

“இப்போ டைம் நைன் ஆயிடுத்து. ஷாப்ஸ் எல்லாம் க்ளோஸ் பண்ணி இருப்பா. மே பி, கார்திக்க ஏர்போர்ட்-ல வாங்கிண்டு போகச் சொல்லலாம்” என்றாள் வித்யா.

“ஆமான்டா. நான் ஏர்போர்ட்ல வாங்கிக்கிறேன். நீ அட்ரச மட்டும் கொடு” என்றேன்.

“நாங்க இங்க வரும்போது அவ மந்தவெளிலதான் இருந்தா. இப்போதான் மயிலாப்பூர்ல வேற வீட்டுக்கு ஜாகை போயிட்டா. ஒன் செகண்ட், அட்ரெஸ் தரேன்.”.

“அவங்க இங்க வரலையா?”

“பெரியவாளுக்கெல்லாம் இந்த ஊரு சரிப்படாது டா. எங்கம்மா கோயில் கொளம்னு சுத்திண்டே இருப்பா. அவாளுக்கெல்லாம் இந்தியாதான் சரிப்படும். அடுத்த சம்மருக்கு  சும்மா கூட்டிண்டு வரலாமான்னு திங்க் பண்ணிண்டு இருக்கேன்.”

அவன் சொல்வதிலும் ஒரு நியாயம் தெரிந்தது. என்னதான் சுத்தமாகவும், கண்ணுக்கு அழகாகவும் தெரிந்தாலும், எப்போது பார்த்தாலும் எதோ ஊரடங்கு உத்தரவு போட்டது போலிருக்கும் அந்த அமைதி எனக்கே அச்சமூட்டியது. அங்கெல்லாம் ஒரு சுற்றுலா பயணியைப் போல பார்வையிடச் செல்லலாம், ரசிக்கலாம் – அவ்வளவுதான். ஆனால், அங்கேயே வாழ்வதை என்னாலெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

கிருஷ்ணாவின் மனைவி தந்த  பட்டியலையும், அம்மாவின் முகவரியையும் பெற்றுக்கொண்டு விடைபெற்றேன்.

மறுநாள் மறக்காமல் ப்ரெசெல்ஸ் ஏர்போர்ட்டில் அவனுடைய அம்மாவிற்கும் மட்டுமல்ல; என் குடும்பத்தினருக்கும் நிறைய சாக்கலேட்டுகளை வாங்கிக்கொண்டேன். உலகிலேயே அதிக அளவில் சாக்கலேட்டுகளை விற்கும் இடமாயிற்றே. விடுவேனா?

இந்தியாவிற்கு வந்து ஆறு நாட்களாகி விட்டது. கிருஷ்ணாவின் தாயாரின் நினைவு வந்தது. சென்னை வெயிலுக்கு பெல்ஜியம் சாக்கலேட்டுகள் நீண்ட நாளைக்குத் தாங்காது – உருகி ஓடி விடும். பத்தாக்குறைக்கு மின்சாரப் பிரச்சினை வேறு. அதனால், காரை எடுத்துக்கொண்டு மயிலாப்பூருக்குக் கிளம்பினேன்.

ஆர்.கே மட் சாலை வழியாக சென்று, தெப்பக்குளம் கடந்து வலது புறம் திரும்பி, காரை நிறுத்திவிட்டு, அங்கே இருக்கும் கடையில் முகவரியை காண்பித்தேன்.

“சார், இதுக்கு சித்திரக்குளம் எல்லாம் தாண்டி போகனும் சார். கார்லல்லாம் போக முடியாது. நீங்க ஒன்னு பண்ணுங்க. சன்னதி தெருவுக்கா போயி கார நிப்பாட்டிட்டு, நடந்து போயிருங்க.”

“ரொம்ப தேங்க்ஸ்!”

காரை ஒட்டிக்கொண்டு போய், கோயிலுக்கு எதிரேயுள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு, சித்திரக்குளம் நோக்கி நடந்தேன்.

ஒரு சில மணித்துளிகளில் அவன் தாயார் இருக்கும் தெருவை வந்தடைந்தேன். மிகமிகக் குறுகிய தெரு. காற்றோட்டமோ, வெளிச்சமோ வருவதற்கான வாய்ப்பே இல்லாமல் தோன்றியது. மேலும், அந்தத் தெருவில் இருந்த அத்தனை வீடுகளுமே ஏதோ போன நூற்றாண்டின் பாதியில் கட்டிய வீடுகளைப் போல் அழுக்குடனும், பராமரிப்பில்லாமலும் காட்சியளித்தன.

நிஜமாகவே அந்தத் தெருதானா என்று எனக்குச் சந்தேகமே வந்துவிட்டது. சைக்கிளைத் தள்ளிக்கொண்டு சென்ற ஒருவரிடம் முகவரியைக் காண்பித்துக் கேட்டேன்.

“இந்த தெருவே தான்!”

“பாலம்பாள் வீடு எதுன்னு தெரியுங்களா?” என்று கேட்டேன்.

“பாலா மாமிய சொல்ரேள்னு நெனைக்கிறேன். அதோ அந்த கடைசி வீட்டுக்கு முந்தன வீடு” என்று வீட்டை காண்பித்தார்.

நான் அவர் காட்டிய அந்த வீட்டிற்கு அருகே சென்றேன். அந்தத் தெருவிலேயே மிகவும் சிதிலமடைந்த வீடு அதுவாகத்தான் இருக்கும். வீடு பூட்டி இருந்தது. எனக்கு நிஜமாகவே அவர் அங்குதான் இருப்பார் என்று தோன்றவில்லை.

என்னைக்கடந்து போன பெண்மணி, “ஆர பாக்க வந்தேள்?” என்று கேட்டார்.

“பாலா மாமி”

“இன்னைக்கு பிரதோஷம். மாமி அநேகமா கோயிலுக்குத்தான்  போயிருப்பா. சித்த நாழி இங்கேயே இருங்கோ. இல்லேனா கோயிலுக்கு போயி பாருங்கோளேன்.”

“இல்ல.. இல்ல.. நான் இங்கயே வெயிட் பண்றேன்.”

அந்தத் தெருவில் நின்றிருந்த ஒரு பழைய சைக்கிள் மேல் ஏறி அமர்ந்தேன். என் மனதில் பெல்ஜியமும், கிருஷ்ணாவின் வீடும், அவன் பேச்சுக்களும்  ஒன்றடுத்தொன்றாக நினைவுக்கு வந்தன. அந்தத் இருட்டுத் தெருவை திரும்பவும் வலதும், இடதுமாய்த் திரும்பிப் பார்த்தேன்.

தெரு மூலையில் ஒரு வயதான பெண்மணி நுழைவது தெரிந்தது. இது அவராக இருக்குமோ? இருக்காது. அவரை ஓரிரண்டு முறை  கல்லூரி நாட்களில் பார்த்திருக்கிறேன். கல்லூரி விடுதியில் தங்கி இருந்த நாட்களில், கிருஷ்ணா தஞ்சாவூருக்கு சென்றுவிட்டு வந்தாலே எங்களுக்குக் குதூகலம் தான். அவ்வளவு இனிப்புகளும், கார வகைகளும் கொண்டு வருவான். அவ்வளவும் அவன் அம்மா வீட்டிலேயே செய்து கொடுத்தது. அவரை வைத்து ஒரு பலகாரக்கடையே ஆரம்பிக்கலாமென்று அவனை கிண்டல் செய்வோம். அதுவும் அவரின் தேன்குழல் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும்.

அவரா இவர்? இருக்கலாம். அவர் என்னை நோக்கி நடந்து வர, நான் அவரைக் கூர்ந்து கவனித்தேன். அவரது மேனி ஒடுங்கிப் போயிருந்தது. கடைசியாகக் கல்லூரி விடுதியில் அவரைப் பார்த்தது இன்னமும் நினைவிலிருந்தது. ஒளிபொருந்திய அந்த முகம் ஏனோ அன்று வாடிக் கறுத்துப்போயிருந்தது.

அவர் என்னைப் பார்த்துவிட்டு கண்டுகொள்ளாமல் பூட்டிய கதவைத் திறக்க முற்பட்டார். அவர் என்னை மறந்திருக்கலாம் என்று தோன்றியது.

“அம்மா”

“ஆரு?”

நிச்சயமாய் அவரே தான்! ஆனால் அந்தக் குரல் சிறிது ஈனஸ்வரத்தில் ஒலித்து என் நெஞ்சுக்குள் ஏதோ செய்தது.

“நான்தாம்மா. கார்த்திக். கிருஷ்ணாவோட காலேஜ் பிரண்ட்.”

“அடடே.. வாங்கோ வாங்கோ! கிச்சா மூணுநா முன்னா தான் சொன்னான். நேக்குதான் அடையாளமே தெரியல”

விரைவாகக் கதவைத் திறந்து என்னை உள்ளே அழைத்தார். திடீரென புதுவலுப்பெற்றவராய் ஓடிச்சென்று ஒரு நாற்காலியை எடுத்துவந்து போட்டார்.

“காபி சாப்டுறியா பா?”

முதலில் எனக்கு வேண்டாமென்று சொல்லத் தோன்றினாலும், அவர் நிலையை பார்த்தவுடன் சிறிது நேரம் அங்கு இருக்கவேண்டும் என்றும் தோன்றியது.

“சரிம்மா! இந்தாங்க மா சாக்கலேட்ஸ்.”

“கிச்சா சொன்னான். நோக்கு எதுக்குப்பா சிரமம்?” என்று கேட்டுவிட்டு, அதனைப் பெற்றுக்கொண்டு, “தோ வரேன்.” என்று சொல்லிவிட்டு காபி போட சென்று விட்டார்.

அந்த வீட்டை சுற்றி பார்த்தேன். சுற்றிப்பார்க்கும் அளவிற்கு அது ஒரு பெரிய வீடில்லை. ஒரு பார்வையின் எல்லைக்குள்ளேயே ஒட்டுமொத்த வீடும் வந்து விழுந்துவிடும். ஆனால் அந்த இருட்டும், மக்கிய வாசமும் ஏதோ செய்தது. அவ்வளவு பழைய வீடு.

“வேற வீடு கெடைக்கலையாம்மா?” என்று காபி கொண்டு வந்து கொடுத்தவரிடம் கேட்டேன்.

“என்னப்பா பண்றது? கொஞ்ச நன்னாயிருந்தா பத்தாயிரம் கேக்கறா. மின்னமே இருந்த ஆத்துல பன்னெண்டாயிரம் கேட்டாளேனுதான் இங்க ஜாகை வந்துட்டேன். கிச்சா தோப்பனார் பென்ஷன் எட்டாயிரம் வர்றது. அத வச்சிண்டு அவ்ளோல்லாம் முடியாது பா. அவர் போறதுக்கு முன்னே வீடு வாங்கிவெச்சிருந்தா நேக்கு ஏன் இவ்ளோ பிரச்சினை வரப் போறது! எல்லாம் கர்ம வினை.” என்றார்.

இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கையில், என் இதயம்  உலைக்களமாய் மாறி அந்த உஷ்ணத்தில் தகதகவெனக் கொதித்துச் சூடேறிய புதிய இரத்தம் என் நரம்புகளினூடே சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.

“கிச்சா நன்னா இருக்கானா?”

அவர் கேட்டது என் காதில் விழுந்தும் என்னால் பதில் சொல்லமுடியவில்லை.

“கிச்சா நன்னா இருக்கானா பா?” என்று மீண்டும் கேட்டார்.

“ஒ.. நல்லா இருக்கான் மா.”

“வீடு வாங்கப்போரேனு சொல்லிண்டு இருக்கான். அவ அப்பாவோட ஆசை. எல்லாம் நன்னா முடிஞ்சா விநாயகருக்குச் சிதறுக்கா போடறேன்னு வேண்டிண்டு இருக்கேன். அவ அப்பா போனப்புறம் என்னோட சேர்ந்து ரொம்ப ஸ்ரமப்பட்டுட்டான். இதுக்கு மேல அவன் ஸ்ரமப்படவேணாம்!”

எனக்கு அழுகையே வந்து விடும் போல இருந்தது.

“கொழந்த எப்படி இருக்கான்? அதுக்கு நம்ம பேச்சே வர்ற மாட்டேன்றதே? எதாச்சும் டாக்டர் கிட்ட காட்ட சொன்னேன், செஞ்சானான்னு தெரியல.  இந்தியாவுக்கு வர்றத பத்தி ஏதாச்சும் சொன்னானா பா? பாத்தே நாலஞ்சு வருஷமாயிடுத்து. வேணாம். அவாளுக்கு எதுக்கு செரமம். வந்து போனா நெறைய செலவு ஆகும்னு எல்லாரும் சொல்றா. பாவம் அவாளே கஷ்டப்பட்டுண்டு இருக்கா!”

அவருக்கு நிறைய பேசவேண்டும் போலிருக்கிறது என்று தெரிந்தது. எனவே, அவரைப் பேசவிட்டுவிட்டு, அமைதியாய் கவனித்துக் கொண்டிருந்தேன்.

“எனக்கு ஒன்னும் இல்லப்பா. ஆனா…. இப்போல்லாம் அடிக்கடி கரண்ட் போய்டறதால ராத்திரியில தான் கொஞ்சம் பயமா இருக்கு! அதுவும் மழ வந்து, இடி இடிக்கரச்ச, கரண்டில்லாம, …. ரொம்ப பயமா… இருக்கு பா…. ” என்று கதறி அழத்தொடங்கிய போது, என் நெஞ்சம் படபடத்து, என் உடலின் ஒட்டுமொத்த சக்தியையும் யாரோ உறிஞ்சி விட்டாற்போல செயலிழந்து போய்விட்டேன்.  எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவரது கைகளை இறுகப் பற்றிக்கொண்டு ஆறுதல் சொன்னேன்.

“கவலைப்  படாதீங்க மா. கிருஷ்ணாவுக்கு அங்க இருக்கவே பிடிக்கலையாம். சும்மா டாக்ஸ் சேவ் பண்ணத்தான் வீடு கூட வாங்கறான். ஒரு வருஷம், இல்லைனா இரண்டு வருஷத்துக்குள் வந்துடுவேன்னு சொன்னான். நீங்க தான் தேன்குழல் செய்வீங்களாமே, உங்க பேர்ல ஒரு தேன்குழல் கடையெல்லாம் வைக்கலாம்னு பேசிட்டு இருக்கோம்.” என்று நான் சொன்னவை எல்லாமே பொய்கள்! ஆனால், அந்த உன்னதமான தாயின் கண்ணீரை அடக்குவதற்கு எனக்கு வேறு வழி தெரியவில்லை.

“நல்லவேளை. மறந்தே போயிடுத்து. கிச்சா நீ திரும்பவும் அங்க போறதா சொன்னானேன்னு சீடை, தேன்குழல் எல்லாம் பண்ணி இருக்கேன். கொஞ்சம் எடுத்துண்டு போயி கொடுக்கறையா?”

“கண்டிப்பா மா” என்று அவற்றையெல்லாம் பெற்றுக்கொண்டு, அவரிடமிருந்து விடைபெற மனமில்லாமல் கிளம்பினேன்.

“அடிக்கடி ஆத்துக்கு வாப்பா” என்றவரிடம் புன்னகையை பதிலாகக் கொடுத்துவிட்டு நடக்க ஆரம்பித்தேன். தெருமுனைக்குச் சென்று திரும்பிப் பார்த்தேன். என்னையே ஒருவித சோகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவருக்குக் கையசைத்துவிட்டு இன்னும் வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

வீட்டிற்குச் செல்லவே பிடிக்காத அளவிற்கு அந்த நிஜங்களின் பாரம் என் நெஞ்சை அழுத்தியது. நேராகக் கோயிலுக்குச் சென்று, என்னால் முடிந்த அளவிற்கு அந்தக் கடவுளைத் திட்டிவிட்டு, வெளியே வந்து பிரகாரத்தில் அமர்ந்தேன். எனது கையிலிருந்த அம்மாவின் தேன்குழல்கள் கண்களில் பட, கிருஷ்ணாவின் ஆடம்பர வாழ்க்கையும், அவன் பகட்டுப் பேச்சுக்களெல்லாமும் என் மனதில் வேகவேகமாய் ஓடின.

கோயிலைவிட்டு வெளியே வந்த போது, தன் குருட்டுத்தாயை மூன்று சக்கர வண்டியில் தன்னருகே அமர்த்தியிருந்த மாற்றுத்திறனாளி இளைஞன் ஒருவன், “சார், சார்” என்று கையை நீட்டினான். அவன் குரலைக் கேட்ட அந்த வயதானப் பெண்மணியும், “ஐயா ரொம்ப பசிக்கிதுய்யா ராசா! எதாச்சி வாங்கி குடுய்யா…” என்று தன் கையை நீட்டினார்.

வாழ்க்கையில் முதல்முறையாக அன்றுதான் எனக்கு ஒரு பிச்சைக்காரனின் கால்களில் வீழ்ந்து வணங்கவேண்டும் என்று தோன்றியது. ஒரு கையும் இரண்டு கால்களுமற்று அமர்ந்திருந்த அவனது கையில் இருபது ரூபாய் நோட்டையும், அவனது தாயின் கைகளில் அம்மாவின் தேன்குழல்களையும் வைத்துவிட்டு நடக்க ஆரம்பித்தபோது ஒரு முடிவெடுத்தேன். இனி அந்த முடவன் கிருஷ்ணாவைச் சந்திக்கவே போவதில்லை என்று.

பதிவாசிரியரைப் பற்றி

13 thoughts on “அம்மாவின் தேன்குழல்

  1. A must read story for all indians living abroad. This is not the case of one or two but for many who live a happy & luxury life leaving their parents suffer. Some live within India and ignore their parents. As a parent we spend lot of money for our kids. We should remember that our parents during our childhood spent all their hard earned money for us. We fail to see our future as well. if we dont treat our parents well, we will meet with same treatment by our son/daughter.
    Madhavan – gr8 content, excellent narration & sequence… keep going..

  2. உண்மையும் இருக்கு. மிகையும் இருக்கு. அதைப்பத்தி நான் பேசப்போவதில்லை. அந்த சித்திரக்குளம் பிராந்தியம் எனக்கு அத்துப்படி. இன்று லண்டனில் இருந்தாலும், சென்னை போனால், அங்கு போய் வருவேன். அருமையான பேட்டை. காளத்திக்கடையில் ஒரு பீடா வாங்கிப்போட்டுக்கலாம்

  3. ///வாழ்க்கையில் முதல்முறையாக அன்றுதான் எனக்கு ஒரு பிச்சைக்காரனின் கால்களில் வீழ்ந்து வணங்கவேண்டும் என்று தோன்றியது.///

    கதையின் சிகரம் இந்த வரிகள்.. எனக்கும் அப்படி செய்யலாம் போலத் தோன்றியது.

    ….. தேமொழி

  4. இது கதையல்ல , நாகரீக சமூகத்திற்க்கான சட்டை அடி!! இந்த கிருஷ்ணா நம்மோடு நிறைய இருக்கிறார்கள் . ஏன் , அது நானாக கூட இருக்கலாம் . அம்மாவின் தேன் குழல் , கதை சொல்லும் படிப்பினை.. சிறப்பு !! தொடருங்கள்

  5. மிகவும் நன்றாக உள்ளது…..மேலும் தொடர வாழ்த்துக்கள்……

  6. Really nice and good one……. “every one has to realize mother is the first God in their life. If they forget everything will lost in their life even though they are in good position”. Expecting more from you… Maddy

  7. Madhavan, 

    First of all, I would like to thank you for your story. 
    I felt as if I have seen a movie ( may be because I know all the places which you have mentioned in the story) 
    The true reason is you have written is so well that I could recollect  everything.  

    It is a pity now-a-days that we need to be remembered every now and then about our responsibilities. 
    I think it is high time that people start taking care of their parents wherever they are. 
    Do you think time/distance matters when you think of your lover ? 
    Parents are lot more worth. 

    I think making parents suffer is the biggest sin that would nullify all other good deeds done 
    like visiting Tirupathi,Kasi, donatiing in Charity etc.,, 

    People can start saving a little for their parents once they begin to earn (like we plan for pension) … 
    People are proactive for various reasons….  They can also think in these ways… 

    Where there is a will, there is a way !!!! 

    Only thing is Children need to be sincere and think of various methods by which they can take care of their parents. This holds good for the people living abroad as they can afford financially. 

    We have copied various things from foreigners. 
    Let’s be a role model at least in this (Family Bonding, taking care of parents etc)   

    Thank you for reminding us about our responsibilities. 

  8. Excellent Narration Maddy and Good touching topic…. Mother is only the living god other than the people who project themselves as living god… Nothing to say more or less…

  9. I was moved by the narration. With my limited knowledge of Tamil, I was still able to go through the whole blog and enjoyed reading it. Would like to read more such blogs.

  10. Awesome. Very good one Madhavan.
    It was close to me. “Vergalai Marandha Kilagalai –
    Eeram illadha ilaadha illaaadha illagalai udhirgindrana…” – Ivaigal sezhikka Valardhaalum yaarukkum ubayogam illai…uyirilladha plastic ilaaigal.- Dhana

  11. மாதவன் , இந்த சிறுகதை மிகவும் அருமையாக இருந்தது . நடைமுறை நாகரீக  வாழ்கையில் நடக்கும் ஆடம்பர விஷியங்களையும், அதற்கு பின்னால் ஒலிந்து கொண்டிருக்கும் அழுக்கு கறைகளையும் மிகவும் தெளிவாக எடுத்துரைத்தது. இது  ஒரு நாகரீக சமுதாயத்திற்கு சொல்லும் முக்கியமான கூற்றாகும். தங்களது பயணம் மேலும் சிறப்பாக தொடர எனது வாழ்த்துக்கள் 🙂 

  12. தங்களின் எழுத்து அற்புதம்,
    அனேகமாக பெற்றோர்களை இந்த அளவிற்காவது பார்த்துக்கொள்ளும் கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம்.
    நம்மை பார்த்துகொள்ள யாரும் இருக்கமாட்டார்கள என எண்ணுகிறேன்.

Leave a Reply to Dhana

Your email address will not be published. Required fields are marked *