நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’:: தொடர்-25

8

பெருவை பார்த்தசாரதி

நமது அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு மாற்றங்களை சந்திக்கின்றோம்?…….ஒன்றா இரண்டா எளிதில் எண்ணி விடமுடியுமா? வாழ்வில் நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு மாற்றங்களையும் நினைத்துப் பார்க்கக் கூட இங்கே நேரம் கிடைக்கவில்லை, ஒரு நொடி யோசிப்பதற்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்து விடுகிறது என்பதே உண்மை. அன்றாடப் பணிகளில், உணவில், உடையில், வீட்டில், அலுவலகத்தில் இன்னும் எவ்வளவோ நிகழ்ச்சிகளில் தினமும் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஆக மனிதன் விரும்புகின்ற ஒவ்வொரு விஷயத்திலும், ஒவ்வொரு நொடியிலும் ஏதாவதொரு மாற்றத்தை எதிர்நோக்கியே சென்றுகொண்டிருக்கிறான் என்று சொன்னால் யாரும் மறுக்க முடியாது.

நமது வீட்டில் இருக்கும் வயது முதிர்ந்த பெரியோர்களைக் கேளுங்கள், ஒரு காலத்தில் அவர்கள் தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதையே விரும்புவார்கள். உணவை இலையில் பரிமாரிய பிறகு, அவசரப்படாமல் நிம்மதியாக, மெதுவாக மென்று நிதானித்துச் சாப்பிடுவார்கள். ஆனால் இப்போது தரையில் உட்கார்ந்து சாப்பிட்ட காலமெல்லாம் மலையேறி, நேரமின்மை காரணமாக நின்று கொண்டே சாப்பிடும் மாறுதல். கால அவசரத்தின் கட்டாயத்தால், சாதாரண உணவகமெல்லாம் துரித உணவகமாக (Fast Food) மாறிவிட்டது, அங்கே உட்க்கார நினைத்தாலும் நாற்காலி கிடைக்காது. தோசை மாறி இப்போது பிசாவாகிவிட்டது(pizza), இட்லிக்கு பதில் பர்கர். நவீன உடைகள் நுழைந்து, பாரம்பரிய உடைகளான பாவாடைதாவணிகள், வேட்டிகள் எல்லாம் பரண் ஏறிவிட்டன. வீட்டில் உள்ள பொருட்களில்தான் எத்தனை மாற்றம், ஒரு காலத்தில் ரேடியோ, பிறகு இடத்தை அடைக்கக்கூடிய மிகப்பெரிய தொலைக்காட்சிப் பெட்டி, இவையெல்லாம் மாறி, காலண்டர் போல சுவற்றில் மாட்டகூடிய TV, கையடக்கக் கணிணி மற்றும் கைபேசி எல்லாம் வந்து விட்டது. இந்த மாற்றங்கள் பின்வரும் நட்களில் எப்படி இருக்கும் என்பதையும் நம்மால் ஊகிக்கமுடியாது. உதாரணமாக, 20 வருடங்களுக்கு முன்னால் கைபேசி மற்றும் SMS பற்றி பேசியிருந்தால் ‘முட்டாள்’ என்ற அடைமொழிதான் நமக்குக் கிடைத்திருக்கும்.

நியூமராலஜி என்ற ஒன்று நம்மை ஆட்கொண்டபிறகு மனிதர்களின் பெயரிலேதான் எவ்வளவு மாற்றங்கள். முன்பு ஒருவரது பெயரை கேட்டமாத்திரத்திலேயே எழுதிவிடலாம், தற்போது சரியான எழுத்துக்களைத் (spelling) தெரிந்துகொண்டபிறகுதான் எழுதமுடியும். இப்பொழுதெல்லாம் ‘அங்காடி’, ‘கடை’ என்ற பெயர்களெல்லாம் அநாகரீகமாகி, “அகம்” என்ற வார்த்தை அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். நூலகம், படிப்பகம் என்பதுபோல், அனைத்துப் பெயர்களையும் மாற்றி பாலகம், முடிதிருத்தகம், தேநீரகம், செய்தித்தாளகம், மருந்தகம், நகலகம், இப்படியெல்லாம் மாற்றம். நல்ல வேளையாக பஞ்சர் ஒட்டும் கடைக்கு “ஒட்டகம்’’ என்று பெயரிடாமல் இருப்பது சந்தோஷமளிக்கிறது. நல்லதோ, தீயதோ ஒரே அரசாங்கத்தை மக்கள் விரும்புவதில்லை, மக்கள் மனதில் மாற்றம் நிகழும்போது அரசியலையும் விட்டுவைப்பதில்லை, அவ்வப்போது அரசாங்கம் மக்களின் மனதுக்கு ஏற்ப மாற்றப்படுகிறது.

இயற்கை என்றுமே மாறுவதில்லை, நாம்தான் இயற்கையோடு மாறுபட்டு நிற்கிறோம். இயற்கையில் ஏற்படும் மாற்றத்தைத் வெளியுலகுக்கு கொண்டு வருபவர்தான் விஞ்ஞானி என்று புகழப்படுகிறார். சாதாரண மனிதரிலிருந்து சற்று வேறுபட்டு மாற்றுச் சிந்தனையோடு திகழ்பவர்களைத்தான் ‘ஞானி’, ‘மேதை’, ‘அறிஞன்’, ‘கவிஞன்’, ‘ஓவியன்’, ‘கலைச்சிற்பி’, ‘சிந்தனைச் சிற்பி’ என்றெல்லாம் வரலாறு போற்றுகின்றது. ஒவ்வொரு நொடிக்கும் இன்றைய உலகில் அறிவியலில் வியக்கத்தக்க மாற்றம் நிகழ்ந்து கொண்டேஇருக்கிறது. இங்கே நமக்குக் கிடைக்கின்ற பொன்னான நேரமெல்லாம், வீணே கழிந்து கொண்டிருக்கின்ற நிலையில், உலகின் ஒரு மூலையில் ஒருவர் செவ்வாய்க் கிரகத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறார். ஒரு நூற்றாண்டுக்கு முன் அங்கே புயல் அடித்தது என்றும் உயிரினங்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார். இதற்கு அடிப்படையாக அமைவது மனிதனுக்குக் கிடைத்த அற்புத “சிந்தனை”. இப்படிப்பட்ட மாற்றுச் சிந்தனை என்பது லட்சத்தில் ஒருவருக்கே உதிக்கின்றது. நாம் உபயோகப்படுத்தும் எத்துணையோ பொருட்கள் எளிதில் கெட்டுப் போகின்றன, ஏன் இவை கெட்டுப் போகின்றன என்று யாராவது சிந்தித்துப் பார்த்திருக்கிறார்களா?…இடைவிடாது இந்தச் சாதாரண கேள்வியைத் தனக்குள் கேட்டுக்கொண்டே இருந்த ஒருவன் உலக அளவில் அறியப்பட்டான். அவன்தான் லூயிஸ் பாஸ்டர். இதேபோல இயற்கையை ரசிப்பது கூட மற்ற யாவரும் போல் சாதாரணமாக சிந்திக்காமல், மாற்றுச் சிந்தனையோடு, ஏன்?..எதற்கு?…எப்படி?…என்ற வினாவோடு வானத்தில் தோன்றும் மாற்றங்களை ஒரு இளைஞன் சிந்திக்கிறான். பஞ்ச பூதங்களின் தோற்றங்கள் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிகின்றன. குறிப்பாக ஒளியைப் பற்றியே அவனது சிந்தனை வட்டமிட்டுக்கொண்டேயிருந்தது. சூரிய ஒளியில் ஏற்படும் மாற்றத்தை ஒவ்வொரு நொடியும் சிந்தித்துக் கொண்டே இருந்தான். மாற்றுச் சிந்தனை மூலம் ஏழு ஆண்டுகள் கடின ஆராய்ச்சி செய்து யாரும் அறிந்திராத புதிய கண்டுபிடிப்பின் மூலம் ‘நோபல் பரிசு’ பெறுகிறான். ஒவ்வொரு வருடமும் ஒரு வயது பூர்த்தியாவது போல், தம்முள், தம்மனதுள் வித்தியாசமாக எழும் கேள்விகளுக்கு விடையாக “இராமன் விளைவு” என்ற பதிலை உலகம் அறியச்செய்தான். ஒரு சாதாரண அரசாங்க ஊழியனாக இருந்த இராமன் என்வரை அறிவியல் விஞ்ஞானியாக உலகமறியச்செய்து, பாரதத்தின் மிக உயரிய விருதான ‘பாரத்ரத்னா’ விருதையும், ‘சர்’ பட்டத்தையும் பெற்றுத்தந்தது. இந்திய அரசின் முன்னாள் குடியரசுத்தலைவரும், விஞ்ஞானியுமான மேதகு அப்துல் கலாமின் “இந்தியா 2020” என்ற கனவை நனவாக்க, தற்போதிருக்கும் இந்தியாவின் சூழ்நிலையை ஒட்டுமத்தமாக மாற்றவேண்டும் என்று அனுதினமும் அறைகூவல் விடுக்கிறார். இத்தகய வலுவான மாற்றத்திற்கு, மாற்றுச் சிந்தனா சக்தி உள்ள இளைஞர்கள் முன் வரவேண்டும் என்கிறார்.

இப்படி ஒவ்வொன்றிலும் மாற்றத்தை விரும்புகின்ற மனிதர்கள் தம்முடைய வாழ்க்கையில் கடைபிடிக்கின்ற தவறுகளையோ, பிறருக்கு ஒவ்வாத பழக்கவழக்கத்தையோ மாற்றிக்கொள்ள மட்டும் விரும்புவதில்லை. அப்படி யாராவது ஒருவர் நம்முடைய குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் நட்பு முறிந்து போகுமே தவிர பழக்கம் மாறாது. தவறு என்று தெரியும் போது அதைத் திருத்திக்கொண்டால் வாழ்க்கை ஒளிமயமாகிறது என்பதற்கு இதிகாசத்திலிருந்து இதற்கு ஒரு உதாரணமொன்றைச் சொன்னால் பொருத்தமாக என்று நினைக்கிறேன்.

ஒரு இளைஞன் காலத்தின் கட்டாயத்தால், பிறரை இம்சித்து கொள்ளை அடித்து, அவர்களிடம் இருக்கும் பொருட்களை கவர்ந்து சென்று தனது குடும்பத்தை மகிழ்வித்து வாழ்ந்து வருகிறான். ஒரு நாள் கொள்ளை அடிப்பதற்கு ஒன்றும் கிடைக்காததால், வழியில் சன்னியாசைப்போல நடந்து வரும் ஒருவரை வழிமறித்து அதட்டலாக அவரிடம் ‘உபயோகமான பொருள் ஏதேனும் உன்னிடம் உள்ளதா?..’ என்று கேட்கிறான்.

அதற்கு அவர் நானோ சன்னியாசி, என்னிடம் எதுவும் இல்லை, ஆனால் ஒரு உபதேசம் ஒன்று இருக்கிறது, அதைத் தரட்டுமா?…என்று சொல்கிறார்.

கொள்ளையனும் ‘சரி சொல்லும்’ என்கிறான்

சன்னியாசி அவரிடம் “நீ கொள்ளை அடிக்கும் பொருட்களை உமது குடும்பத்தார் ஏற்றுக் கொள்கிறார்களா?..

மகிழ்ச்சியாக ஏற்கின்றனர்….என்கிறான் கொள்ளைக்காரன்.

இந்த மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும், உன்னோடு பங்கிட்டுக்கொள்ளும் உனது குடும்பத்தார், உனக்கு நேர்கின்ற துன்பத்திலும், பாபத்திலும் சரிபாதியை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?…என்று கேட்டு வந்து என்னிடம் சொல் என்கிறார் சன்னியாசி.

மறுநாள் சன்னியாசியைத் தேடிவந்த கொள்ளைக்காரன், ஒரு மாறுதலான முகத்துடன், முனிவரே நீங்கள் சொல்வது சரிதான், குடும்பத்தார் யாவரும் இதற்கு உடன்பாடில்லை. ஒருவரும் எனக்கு நேர்கின்ற துன்பத்திலோ, பாபத்திலோ பங்கெடுக்க விரும்பவில்லை என்று கூறுகிறான்.

பிறகு அந்த முனிவர் (நாரதமுனி) அவனுக்கு மந்திரோபதேசம் செய்து அவனை மாமுனிவராக்கிய கதை எல்லோருக்கும் தெரியும். கொள்ளைக்காரனாக இருந்த ரத்னாகரன், தன் மனதை மாற்றிக்கொண்டு, தவமகிமையால் வால்மீகி என்ற பெயர்பெற்று, ‘இராமாயணம்’ என்ற அழியாக் காப்பியத்தைப் படைத்தான்.

ஒவ்வொரு செயலிலும், நிகழ்ச்சியிலும் அவ்வப்போது மாற்றத்தை விரும்பும் சாதாரண மனிதர்கள், வாழ்க்கையில் கடைபிடிக்கும் ஒழுக்க நெறிகளில், பண்புகளில் தம்மை மாற்றிக் கொள்ள முன்வருவதில்லை. தற்கால சூழ்நிலைக்கேற்றவாறு, தமது பிள்ளைகளை வளர்க்கும் முறைகளிலும் பெரிய அளவில் மாற்றத்தையும் கொண்டுவர விரும்புவதில்லை. இன்றய வாலிபர்களிடம் காணும் தகாத பழக்கவழக்கங்களுக்கெல்லாம் முழு முதற்காரணம் அவர்கள் இளம்பிராயத்தில் வளர்க்கப்படுகின்ற முறைகளில் காணும் முரண்பாடுகள் என்பது பெரியோர்களின் வாதம். ஒரு மனிதனின் சுபாவத்தைத் தீர்மானிப்பது, அவனுடனை ஜீன் என்பது இப்போது பழய கதையாகிவிட்டது. மனிதனுடைய பிறப்பும், வளர்ப்பும் ஒன்றோடென்று பின்னிப் பிணைந்தது என்பது தற்போதைய கண்டுபிடிப்பு. நம் ஜீன்களில் சுவிட்ச் ஒன்று உள்ளது என்றும், அதனை ப்ரமோட்டர் என்று அழைக்கிறார்கள். இதனுடன் என்ஹான்சர் என்ற ஒன்றும் சேர்ந்தும் ஊக்கப்படுத்தப்படுகிறது. இந்த சுவிட்ச் எப்போது போடப்படுகிறது, அணைக்கப்படுகிறது என்பதைப் பொருத்தே பிறப்பின் ரகசியம் வெளிப்படுகிறது. வெறும் பிறப்பினால் மட்டும் மனிதன் உருவாவதில்லை, மற்ற விஷங்களை அனைத்தையும் தீர்மானிப்பது வளர்ப்பினால் ஏற்படும் சூழ்நிலையேதான் என்று ஒரு ஆய்வரிக்கை கூறுவதாக தினத்தந்தியில் வெளியாகியிருந்த செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது. நாகரீகம் என்ற பெயரில் மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருப்பது நல்வாழ்க்கைக்கு உதவாது. ஒரு காலத்தில் ஒற்றுமையுடனும், ஒழுக்கத்துடனும், மனித நேயத்துடனும் வாழ்ந்த கிராமிய வாழ்க்கை கூட இன்றைக்கு மாறி நாகரீகத்தால் சுற்றுப்புறச் சூழலும், மனதும் கூட மாசுபடத் தொடங்கிவிட்டது. அனைத்துத் துறைகளிலும் நிகழ்ந்த அபரிமிதமான வளர்ச்சியினால் குக்கிராமம் கூட காலமாற்றத்தில் சிக்கி உருக்குலைந்து வருகின்றன. குளங்கள், ஆலயங்கள், பூங்காக்கள், பசுமை நிறைந்த வயல் வெளிகள் இவைகள் தரும் சுகத்தினால் இன்புற்று இருந்த காலம் மாறி இயற்கை நமக்கு அளித்த கொடைகளை மற்ற உயிரிடத்திலிருந்து பிடுங்கி நாம் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தால் மனிதர்கள் மன அமைதியின்றி வாழ்கின்றனர் என்பதை சமூக ஆர்வலர்கள் அவ்வப்போது எடுத்துச் சொல்கிறார்கள். ஆன்றோர்களும், சான்றோர்களும், மாமனிதர்கள் என்று போற்றப்படுகின்ற மகான்களும், நல்வாழ்க்கைக்கு வேண்டிய மாற்றத்தையும், அவசியத்தையும் காலம் தவறாது நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.

காலச்சக்கரத்தோடு, வாழ்க்கைச் சக்கரமும் விடாமல் சுழன்று கொண்டிருக்கும் போது, அதனோடு மாற்றங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்ற உலக நியதியை, எல்லொரது வீட்டிலும் அழகுக்காக சுவற்றிலே தொங்கவிடப்பட்டிருக்கும் “கீதாச்சாரம்’’ தெளிவுபட ‘மாற்றத்தின் நியதியை’ என்றென்றும் நினைவு படுத்திக்கொண்டே இருக்கும். வாழ்க்கை முறையில் மாற்றம் என்பது வரவேற்கத்தக்கதே, ஆனால் அந்த மாற்றம் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் விதமாகமும், வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதாகவும் அமைந்திருக்க வேண்டும்.

தொடரும்…………

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’:: தொடர்-25

  1. #ஒரு காலத்தில் ஒற்றுமையுடனும், ஒழுக்கத்துடனும், மனித நேயத்துடனும் வாழ்ந்த கிராமிய வாழ்க்கை கூட இன்றைக்கு மாறி நாகரீகத்தால் சுற்றுப்புறச் சூழலும், மனதும் கூட மாசுபடத் தொடங்கிவிட்டது.# எத்தனை நிதர்சனமான உண்மை. இதுவும் நன்மைக்கே என்று மாறிக்கொள்ள வேனுமோ?

    *ஆனால் அந்த மாற்றம் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் விதமாகமும், வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதாகவும் அமைந்திருக்க வேண்டும்.*  அப்படி ஒரு சிந்தனை +கனவு வேண்டும் அதற்கு தங்களை போன்றவர்கள்  தினம் ஒரு குறளாய் நன்னூல்களை தர வேனும்.

    அருமையான கட்டுரை பாராட்டுக்கள்

  2. படித்தவுடன் கருத்துக்களை வழங்கிய அன்பர் முரளிதரனுக்கும், ரவிசாரங்கனுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  3. டாக்டர் சி.வி.ராமன் கண்டுபிடித்ததை விட, அவரை கண்டுபிடித்தது ஒரு விந்தை. கல்கத்தாவில், பிற்காலம் நான் சேர்ந்த, இந்திய தணிக்கைத்துறையில் அசிஸ்டெண்ட் அக்கவுண்டண்ட் ஜெனெரலால இருந்தார், அவர். சர். அஷுடோஷ் முக்கர்ஜி என்ற சான்றோன் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவர். அவர் தான் டாக்டர் சி.வி.ராமனை உயர்பதவியை ராஜிநாமா செய்யச்சொல்லி, ஆராய்ச்சியில் ஈடுபடித்தினார். அவருக்கு சூப்பர் நோபெல் கொடுத்திருக்கலாம்.!

  4. இன்னம்பூரான் அய்யாவின் நினைவுகள், வாசகர்களுக்குப் பயன்படும் தகவல் என்றே சொல்வேன், நன்றி அய்யா!…

  5. அத்துடன் விட்டேனா? டாக்டர் சி.வி.ராமனின் அண்ணா திரு.சி.எஸ்.ஐய்யர் அக்கவுண்டெண்ட் ஜெனெரலாக பணி செய்தவர். பெரிய இசை மேதை. அனாயச விடுதலை, அவருக்கு. மைலாப்பூர் கபாலீஸ்வர் கோயிலருகே, ரிக்‌ஷாவில் வந்து கொண்டிருந்ந்தார். இறங்கவில்லை. பறந்து விட்டார். அவருக்கும் எல்லாம் வல்ல ஆடிட்டர் ஜெனெரல் ஸர். காண்ட்லெட்டுக்கும் ஒரு அபிப்ராய பேதம் வந்தது. ஐய்யர்வாள் சொன்னார், ‘என் தம்பி ஒரு நோபல் பரிசுக்காரான். என் மகனோ உலகப்புகழ் விஞ்ஞானி. எனக்கு உன் வேலை வேண்டியதில்லை.’ அந்த திருமகனார் டாக்டர்.சந்திர சேகரும் நோபல் பரிசு வாங்கினார். நான் ஒரு முறை டாக்டர் சி.வி.ஆர், அவர்களிடம் பேசியதை பற்றி எழுதியிருக்கிறேன் என்று ஞாபகம்.

  6. நீங்கள் எழுதிய படைப்புகள் எல்லாம் தேன் துளிகள். ஒட்டகம் பற்றிய நகைச்சுவை 
    Highlight. Thanks

Leave a Reply to இன்னம்பூரான்

Your email address will not be published. Required fields are marked *