ஹேமா

“வரணும்! வரணும்!” என்று இவனுக்கு பின்னால் நின்றிருந்த யாரையோ மிக பவ்யமாய் வரவேற்றார் அப்பா. தளர்ந்த உடலை லேசாக முன்புறம் வளைத்து, கண்களில் கனிவைத் தேக்கி, கணீரென்ற குரலில் அதைச் சொன்ன போது ‘ஓம்! ஓம்!’ என்று மணியின் ஓசையைப் போல ஒலித்தது. அவரது முகத்தின் தசைகள் ஒவ்வொன்றும் புன்சிரிப்பை எதி’ரொளி’த்தன. கண்களின் வெளிச்சம் வதனத்தின் கவர்ச்சியை உயர்த்திக் காட்டுவதாய் இருந்தது.

அதன் வசீகரத்தில் லயித்துக் கொண்டிருந்த போதே அந்த முகம் கொஞ்சம் கொஞ்சமாய் இவனை நோக்கி நகர்ந்தது. இப்போது அந்தக் கண்களின் கவர்ச்சி மறைந்து பரிதாபமாய் கெஞ்சுவது போல மாறியது. “வரணும்! வரணும்!” என்று இப்போது முணுமுணுப்பாய் வெளிப்பட்ட வார்த்தைகள் வரவேற்பில்லாத வேறு தொனியில், மிக அவசரமாய் ஏதோ ஒன்றை சொல்ல விரும்புவதாய், அடிவயிற்றைக் கலங்க வைப்பதாய் இருந்தது.

சட்டென்று பின்னே திரும்பிப் பார்க்க, அங்கே யாருமற்று வெறிச்சோடியிருந்தது.  பெருகிய வியர்வையில் திடீரென்று விழிப்பு தட்ட, மனைவி ஆழ்ந்த நித்திரையிலிருந்தாள். மனம் திடுக்கிட்ட நிலையிலிருந்து வெளியேறாமல் திகைத்து போயிருந்தது. இந்த வாரத்தில் மட்டும் இது போன்ற கனவு வருவது இன்று மூன்றாவது முறை. நேற்றைக்கு முன்தினம் கனவில், அப்பா தெருவில் இவனை பின் தொடர்ந்து வந்தபடியே இருந்தார். அவர் எதையோ சொல்ல நினைப்பதாக இவனுக்கு தோன்றியது. ஆனால் நின்று திரும்பி பார்க்கும் போதெல்லாம் மறைந்து போனார். இன்று மறுபடியும் . . .

இப்படி திரும்ப திரும்ப கனவில் அவர் வர ஏதோவொரு காரணம் இருக்க வேண்டும் என்று அவன் மனம் அழுத்தமாய் நம்பத் தொடங்கியது. பொதுவாய், தான் இது போன்ற விஷயங்களை நம்ப மறுப்பவன் என்பதை அந்த நிலையில் மறந்து போனான். எப்படியாவது விஷயத்தை அறிந்து அப்பாவின் கவலையைத் தீர்க்க வேண்டும் என்ற தவிப்பு மட்டும் மேலோங்கி இருந்தது. மாரடைப்பு வரும் நேரம் எதையாவது சொல்ல வேண்டும் என்று நினைத்து, முடியாமல் இறந்துபோனாரா அல்லது எதையாவது சொல்லி எச்சரிக்க விரும்புகிறாரா . . . புதிர் விளையாட்டில் ஒளிந்துக் கொண்டிருக்கும் வார்த்தைகளைத்  தேடுபவனாய் மனதில் தோன்றிய சாத்தியக் கூறுகளை சலித்துக் கொண்டிருந்தான்.

நெடுநேரம் கடந்தும் மனம் கனவை நோக்கி சென்றபடியே இருந்தது. அப்பாவின் நினைவுகளும் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்தன. தோள்களின் மேல் அமர்த்திக் கொண்டு வீட்டைச் சுற்றி வந்த அப்பா . . . தோட்டத்தில் தன்னோடு அமர்ந்து ரயில் பூச்சியின் கால்களை கணக்கிட்ட அப்பா . . . நூலகத்திற்கு அழைத்துச் சென்று புத்தகத்தின் ருசியை உணரச் செய்த அப்பா . . . அம்மா ஊருக்குச் சென்றிருந்த போது மீ கோரீங் செய்து கொடுத்த அப்பா . . . பரீட்சையில் குறைந்த மதிப்பெண் எடுத்த போது, உன்னால் முடியும் என்று தட்டிக் கொடுத்த அப்பா . . . அம்மா இறந்த போது அழுதுக் கொண்டிருந்தவனை இறுக்க அணைத்துக் கொண்ட அப்பா . . . விழிகளில் அனிச்சையாய் கண்ணீர் வழிந்தது.

அப்பாவிற்கு இவன் வெளிநாடு செல்வதில் என்றும் விருப்பம் இருந்தது இல்லை. ஆனாலும்,

“நம்ம நாட்டு வசதிய பயன்படுத்தி படிச்சிட்டு, வெளிநாட்டுக்குப் போயி வேலை செய்யறது என் மனசுக்கு என்னவோ சரியாப் படலப்பா!”

என்று லேசான மறுப்புக் குரல் எழுப்பியதோடு நிறுத்திக் கொண்டார். இவன் யு.எஸ் போவதைத் தடுக்கவில்லை.

அங்கு நன்கு காலூன்றிய பின் தன்னுடன் வருமாறு அழைத்த போது, வந்த அப்பாவால் அங்கு ஒருமாதம் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. கோப்பிக் கடையையும் அதன் உணவையும், சலசலவென்று பேசிக் கொண்டிருக்கும் மக்களையும் விட்டுவிட்டு அவரால் இருக்க முடியவில்லை. வெண்டைக்காயை மெல்வது போல் வழவழவென்றிருந்த ஆங்கிலம் இவருக்கு மிக அன்னியமாய் இருந்தது. வருடக் கணக்காய் தூரங்களை கால்களால் கடந்தே பழக்கப் பட்டவருக்கு, வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு அடுத்தவரின் துணையை எதிர்பார்க்கும் நிலை கால்களை இழந்த உணர்வைக் கொடுத்திருக்கவேண்டும். வெளியே போகாமல் தொலைக்காட்சியின் தலையைப் பார்த்துக் கொண்டிருக்கவும் விரும்பாமல், வந்த இருபது நாட்களில்

“அறையை சேவாக்கு விட்டுட்டு அப்படியே வந்திட்டேம்ப்பா, அவங்க சிங்கப்பூருக்கு புதுசு வேற, என்ன செய்யறதுன்னு புரியாது. நான் இப்போ கிளம்பறேன், முடிஞ்சா பெறகு ஒரு முறை வறேன்” என்றார்.

“ஏம்ப்பா! அவங்க தான் குடும்பத்தோட இருக்காங்களே! பிறகென்ன? அப்படியும் ஏதாவது பிரச்சனைன்னா சித்தப்பா வீட்டுல பார்த்துக்க போறாங்க . . . நீங்க ஏம்ப்பா அநாவசியமா கவலைப்படறீங்க!” என்றதும் அவர் முகம் தொங்கிப் போய் விட்டது.

அதன் பிறகு செடிகளுக்கு அவர்கள் சரியாக தண்ணீர் ஊற்றுவார்களா . . . அடுப்பை சரியாக மூடுவார்களா . . . வெளியேறும் போது கதவை சரியாக பூட்டுவார்களா . . . வெளியில் விட்டு வந்த செருப்பு மழையில் நனைந்திருக்குமா என்பது போன்ற உப்பு சப்பற்ற கவலைகளை அவ்வப்போது வெளியிடத் தொடங்கினார். பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கும் வீட்டை எப்போதும் முதுகிலேயே சுமந்து திரிபவராக மாறினார்.

எதையோ யோசித்தபடியே அமர்ந்திருந்த போதும், இரவில் தூங்க இயலாமல் அலைந்துக் கொண்டிருந்த போதும், அங்கிருந்து வெளியேறுவதற்கு பொருத்தமான காரணத்தை அவர் மனம் துழாவிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

அடுத்த வாரத்தில்,

“ஏம்ப்பா, அம்மாவுக்கு திதி வருது. நான் சிவன் கோயிலுக்கு போய் ஏதாவது செய்யணும், என்னைய ஃப்ளைட் ஏத்தி விட்டுடு! உனக்கு எப்ப முடியுதோ வந்து பார்த்துட்டு போப்பா!” என்று கண்கள் மிக லேசாய் கலங்க, கெஞ்சும் தொனியில் கேட்ட போது இவனால் மறுக்க முடியவில்லை.

அதன் பின் அவன் சிங்கப்பூருக்கு வரவேண்டும் என்ற ஆவலை அவர் தொலைபேசியில் வெளிப்படுத்துவது ஏனோ குறைந்து போனது. இவனும் கிளம்பலாம் என்று அவ்வப்போது திட்டம் தீட்டி, இதோ அதோ என்று தள்ளிச்சென்று, அப்பாவின் இறப்பிற்கு தான் கடைசியாய் வந்து சேர்ந்திருக்கிறான்.

பதினாறாம் நாள் காரியம் முடிந்த பின்னும் அவனால் அப்பா இறந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சந்தன சோப்பும் விபூதியும் மணக்க, எந்நேரமும் அப்பா தனது அறையிலிருந்து வெளியே வந்து, ‘எழுந்துட்டயா, சாப்பிட வாப்பா!’ என சொல்லக் கூடும், என்று தோன்றிய படியே இருந்தது.

இரவெல்லாம் யோசித்துக் கொண்டிருந்ததில், காலை கண்விழிக்க நேரமாகிவிட்டது.  அன்றைய பொழுது முழுவதும் விடியற்காலைக்  கனவு அவனைச் சுற்றியபடியே இருந்தது. அப்பாவின் கண்களில் தோன்றிய பரிதாபம் நினைவில் சுழன்று, இவன் தொண்டையை அடைக்கச் செய்து, கண்களில் நீரை வரவழைத்தது. எதையாவது செய்து அவரது வருத்தத்தை உடனே துடைத்துவிட வேண்டும் என்று பரபரத்தது. அப்படி செய்யமுடியாமல் இருக்கும் நிலை துக்கத்தை மேலும் அதிகரிக்கச் செய்வதாய் இருந்தது.

“அப்பா ஆசைப்படி சிங்கப்பூருக்கே வந்துடு சரியாகிப் போகும்” என்றான் நண்பன். மனைவிக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. அடங்கிய புன்னகையில் அதைப் புறந்தள்ளினாள். வேறு சூழ்நிலையில் அவனும் இதே போல செய்திருக்கக் கூடியவன் தான். ஆனால் அவ்வப்போது கனவுகளில் தொடர்ச்சியாய் அப்பா வருவதும், அதிலும் ஏதோவொரு துக்கத்தை சுமந்து வருவதும், மனதில் சுமையை ஏற்றியது. அப்பாவின் ஆவி ஏதோவொரு சங்கடத்தில் இருப்பதாய் நம்பி தவித்தான். அதை சாந்தப்படுத்தும் சாத்தியக்கூறுகளை யோசிக்கத் தொடங்கினான். ஆத்மாக்களுடன் பேசுவதற்கான வழிமுறைகளை ஆராய்ச்சி செய்தான். மொத்தத்தில், உடல் புறவேலைகளைச் செய்தாலும் மனதின் ஒரு மூலை இதைப் பற்றி ஓயாமல் சிந்தித்தபடியே இருந்தது. சில மாதங்களில் இதற்கான விடை அவனுக்கு கிடைக்கத் தான் செய்தது.

சரியாய் அப்பா இறந்த மறுமாதம் மனைவிக்கு நாட்கள் தள்ளிப் போனதையும், ஒன்பது மாதத்தில் பிறந்த குழந்தையின் முதுகில் அப்பாவிற்கு இருந்ததைப் போலவே கூட்டு மச்சம் இருந்ததையும் பார்த்தபின், மரபணு என்று மனைவி சொன்னதையும் மீறி, கனவில் அப்பா ‘வரணும்’ என்று சொன்னதற்கான விளக்கமாக அதை எடுத்துக் கொண்டான்.

அதன் பிறகு அவனுக்கு அது போன்ற கனவுகள் வருவதே இல்லை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *