சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

மனிதன் தோன்றிய காலம் முதல் இன்றுவரை அவனுடைய சரித்திரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் எண்ணிலடங்காதவை. கலாச்சாரம், மொழி, வாழ்க்கைமுறை என்று பலதரபட்ட மாற்றங்களுக்குள்ளாகிய சரித்திரம் மனித சரித்திரம் என்பதுவே உண்மையாகும்.

அத்தகைய மாற்றங்களுக்குட்பட்டதொன்றே தற்கால போக்குவரத்து முறைகளாகும். இத்தகைய முன்னேற்றங்களில் முன்னிடம் வகித்தது மேலைத்தேசங்களில் இங்கிலாந்து என்று சொன்னால் மிகையாகாது.

2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி இங்கிலாந்து தேசத்தின் போக்குவரத்து முன்னேற்றம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும்.

என்ன அது ? அப்படி அது என்ன பெரிய சாதனை ? உங்கள் கேள்வி புரிகிறது.

“London Underground ” இலண்டன் நிலத்துக்குக் கீழான சுரங்க இரயில் சேவை ஆரம்பித்து அன்று 150வது வருடமாகும். ஆமாம் லண்டனின் முதலாவது சுரங்க ரயில் ஓடத் தொடங்கியது 1863ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதியாகும்.

இன்றைய லண்டன் “சுரங்க இரயில் ” இன்றி இயங்க முடியாது எனும் நிலையை எட்டியுள்ளது. இச்சுரங்க இரயில் மூலம் தமது அன்றாடப் பய்ணங்களை தமது வேலைத்தளங்களுக்கு மேற்கொள்ளும் பிரயாணிகளின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

நான் இங்கிலாந்தில் காலடி வைத்து இப்போ 37 வருடங்கள் ஓடி விட்டன. நான் மாணவனாக லண்டனில் வலம் வந்த நேரம் இரவு நேரங்களில் பகுதி நேர காவலாளியாகப் பணிபுரிந்து விட்டு பகல் பொழுதுகளில் கல்லூரி செல்ல வேண்டிய நிலை அப்போது.

18/19 வயதுகளில் மிதந்த நான் அன்று எனது வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ள உதவியது இந்த இலண்டன் சுரங்க ரயில் சேவையே. ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு விரைவாகப் பயணம் மேற்கொள்ள வேண்டிய தேவை இருந்த நேரத்தில் இந்த ரயில் சேவையின் மகத்துவம் புரிந்தது.

லண்டனில் வாழ்ந்த சார்ள்ஸ் பியர்சன் என்பவரின் வாழ்க்கைக் காலம் 1793 தொடக்கம் 1862 வரையுமாகும். இல்ண்டனில் ஒரு நிலத்துக்குக்கீழான சுரங்க இரயில் சேவை அமைப்பதை கற்பனையில் உருவாக்கியவர் இவரேயாகும்.

இவரது கனவுக்கு செயலாக்கம் கொடுக்கும் பணி 1817 தொடக்கம் 1898 வரை வாழ்ந்த ஜான் வவுலர் என்பவருக்கு அளிக்கப்பட்டது.

இத்திட்டம் செயல்வடிவம் கொடுக்கப்பட்டது 1860ம் ஆண்டு  பெப்பிரவரி மாதம் ஆகும். ஜான் வவுலர் இத்திட்டத்தை செயல் வடிவப் படுத்தத் தொடங்கினார். ஆனால் இது முழு வடிவம் பெற்ற போது இதக் கற்பனையில் தீட்டிய சார்ல்ஸ் பியர்சன் உயிருடன் இருக்கவில்லை.

மெட்ரோபொலிட்டன் சேவை என அழைக்கப்பட்ட முதலாவது லண்டன் சுரங்க இரயில் சேவை படிங்டன் Padington)  எனும் இடத்திற்கும் பரிங்டன் (Farringdon) எனும் இடத்திற்கும் இடையில் முதன் முதலாக 1863ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதன் நீளம் நான்கு மைல்களாகும்.

இச்சேவையின் பரீட்சார்த்த ஓட்டம் அன்று முடிவுற்றதும் அடுத்த நாளே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இச்சேவை ஆரம்பித்து சில மாதங்களில் நாளொன்றிற்கு சுமார் 26000 பயணிகள் இச்சேவையை உபயோகித்தார்கள்.

இச்ச்சேவை பிரத்தியேக கம்பெனியின் நிதி உதவியுடனேயே முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது.

1884ம் ஆண்டு உள்ளடங்கிய வட்டத்தில் சுமார் 800 சுரங்க இரயில்கள் ஓடின என்று கூறப்படுகிறது. இச்சுரங்க இரயில்களுக்கான நிலத்துக்குக் கீழான சுரங்கமைப்புக்கான யோசனை 1840ம் ஆண்டளவில் தேம்ஸ் நதிக்குக்கீழாக சுரங்கப்பாதை அமைத்த பொறியியலாளர் ப்ரூனல் என்பவரின் செலாக்கத்தினாலேயே உருவானது எனப்து குறிப்பிடத்தக்கது.

முதலாவது இலவச சுரங்க இரயில் பாதைக்கான வரைபடம் 1908ம் ஆண்டே வழங்கப்பட்டதாம். முதலாவது உலக மகாயுத்தத்தின் போது ஆண்கள் ஆனைவரும் இராணுவத்தில் இணைந்ததினால் ஏற்பட்ட ஊழியர் பஞ்சத்தைத் தீர்க்கவே இச்சுரங்க இரயில் சேவையில் முதன்முதலாக பெண்கள் இணைக்கப்பட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

இச்சேவையின் முக்கியத்துவத்தை அதை உபயோகித்து அனுகூலத்தை அனுபவித்தவன் எனும் வகையில் நான் பெருமையுடன் நினைவு கூறுகிறேன். இத்தகைய கண்டுபிடிப்புகள் மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு ஈடர்ன வகையில் சேவையாற்றியிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *