ஜெயஸ்ரீ ஷங்கர்

நிமிர்ந்த உன்னிடம் சரண் அடைந்து
சொல்கிறேன் சக்தியும் சிவனும் நீ..!

அழிக்காது உயிரைக் காப்போம் அன்பில்
நீர் ஊற்றுவோம் வா..!

பிறந்தது ஓரிடம் வளர்ந்தது வேறிடம்
இறந்திடும் ஒன்று கூடி..!

தலை நீயும் கால் நானுமாய்
உலகை அளப்போம் சேர் !

நித்தம் ஜெபிக்கும் எந்தன் மனம்
நிந்தன் நாம மந்திரம்..!

லட்சம் உருவைப் போற்றும் போதும்
குறைந்த பட்சம் இது..!

முன்னம் யாரோ…பின்னம் யாரோ…?
இருப்பதில் மகிழ்ந்து விடு..!

தயா…காருண்யம் சித்தம் கருணை
பூரணம் பரி வாரணம்..!

ஆனந்தம் ஆடும் மனது நோக்கினால்
அழிவின்றி தொடரும் உடல்.

அஞ்சும் உன்னோடு கரைந்து போகட்டும்
நெஞ்சே நிமிர்ந்து நில்..!

தீயாக என்னுள் நீயே தீயாக ஜோதி
பொய்யென கரைத்தது காற்று..!

வெட்டி மறையும் ஒளிக்கீற்று மின்னலாய்
நமக்குள் அவனிட்ட  அன்பு..!

பாராது பார்க்கும் பார்வை துரத்த
வாராதது வந்தது பார்..!

கதிரொளி ஈதென்று மனம் உரைத்திட
அறிவொளி நீ யென்  கண் ..!

வாழா திருந்த உடலே மனமே..
சாகாது ஏகாந்தமாக இரு..!

செல்லல், நிகழல், வகுதல் மூன்றினையும்
கடக்கும் நமது மௌனம்..!

சிறுபொறி பட்ட பஞ்சாக கனன்று
சுடர் எழுவாய்த் தூயவளே…!

உருமாறி  உடம்புமாறி மனதளவில் ஒற்று
வருமாரி பருவமாறிப் பற்று..!

நெற்றிக்கு நேரே நெற்றி முட்டி
மூனக்கனல் முழுதும் ஏற்று..!

ஸ ….நீ , ப…நீ..,ச….நீ..!
என்னுள் ஸ்வர சங்கமம்…!

கண்ணாடி முன்னில் நானின்று காணின்
கண்டேன் உன்னாடும்  முகம்..!

பஞ்சு மனம் பிஞ்சு மனம் பார்த்ததும்
துஞ்சுவ தில்லை ஜெயம்..!

தோன்றாத மலர்கள் தோன்றியதால் உன்னைச்
சேராமலே வாடி விடும்..!

விண்ணிறைத்த ஒளியே நின் கண்முன்
திறந்ததோ என்னுள் விழி..!

ஆதி ஜோதி நீ என்னுள் பாதி நீ
சாரதியா யானேன் உனக்கு..

உன்பால் அறியாத பந்தம் நெஞ்சத்தைத்
தாகுவ தாகும் தவம்..!

பற்றில்லை பற்றில்லை பற்றில்லை  என்றே
பற்றினேன்  நின் பதத்தை..!

அங்கி தரும் உடல் காப்பு போல்
நெஞ்சம் காப்பதுன் நினைவு..!

ஒன்றுள் ஒன்றாகி ஒடுங்கி விட்டால்
வேறாகுமா ஒன்றும் பூஜ்ஜியமே..!

அறிந்து கொண்டேன் நாட்டம் நட்டம்
வருமா எழுந்து செல்..!

மூலமும் முடிவும் ஒன்றான போது
தேவை யொன்றும் இல..!

வேறாகி நின்றாய் நேற்றில் என்னுள்
வேராகிப் போனதுன் மனம்..!

வாயுவாய்  வேகமாய் ஒளிக்குள் விழியாய்
தேடுவாய் சேருவாய் செல்..!

சிந்தை தெளிந்தும் விகாரம் அடங்கியும்
தன்னைத் தெளிந்தோம் யாம்..!

அடக்கத்தின் அரியணையில் அமர்ந்தாளும்  ஆறறிவே..
எதுவும் தேவையில்லை உனக்கு.

தன்னையே உணர்ந்து நான் காணும்
மோஹனம்  நீயன்றி யாரிங்கு சொல்..!

பெண்ணிவள் பெற்ற பயன் நோக்குங்கால்
விண்ணாகி விரிந்தாய் வியப்பு..!

சித்தம் கலங்கிட விரிந்தாய் என்னுள்
மனக் குளத்தின் தாமரை நீ..!

பாலுக்குள் மறைந்து காத்து நிற்கும்
நெய் போல் ஆனதடி நம்முறவு..!

எண்ணெய்  தீர்ந்தேன் உள்ளத்தின் எண்ணத்தில்
தீயிட்டு எரித்தாய்த்  திரி..!

பாரிதில் பரிதியைப் பார்த்ததால் இந்தப்
பாரிஜாதம் பூத்தது பார்..!

பெண்ணல்ல ஆணல்ல  திருநங்கையல்ல பேருமல்ல ..
எனக்குள் யார் புகுந்தார் வியப்பே..!

அனைத்துமாய் அனைத்திலும் அதிகமாய் அகத்தினை
ஆழச்  சொரிந்தாய் ஆள் ..!

உள்ளத்தின் ஓசைக்கு இசை சேர்த்த
பாசக்கார பவித்ரமோ அன்பு..!

நெஞ்சத்து நினைவுக்கு வாசமலர் போலானாய்
மலராது வாடாது உதிராது நீ..!

வீரிய விதையாய் விழுந்த நிலமாக
மனத்துள் ஆணிவேராகக்  காலூன்றியாய்..!

அகடம் விகடமாகி ஊடகச் காந்தமே
பகடம் தகடாமுகோ சொல்..!

சத்தியம் நித்தியம் சுகம்தரும் சுகந்தமாய்
சாத்தியம் நீயும்  சத்தியம்..!

இளைத்துவிட்ட ஜீவனுக்கு சாபல்ய வரமானாய்..
மீண்டும் எதற்குப் பவம்..?

இருசுடர் சிந்தித்தேன் இராப்பகல் ஒன்றாய்
உட்புகுந்து ஜீவன் தந்தாய்..!

கடலலை உள்ளத்தின் கலங்கரை விளக்கு நீ
கலங்காத சிந்தையின்  பாவை விளக்கு..!

வா…வா…என்றென்னை மனம் விரித்தழைத்த
உந்தன் கருணையே பாயுமொளி..!

மதிமுகம் மதியகம் மதியை மயக்கும்
விதியிது வழியிது ஈசன் செயல் ..!

தேடியே உள்ளே ஆதியின் அறிவாய்
ஓடியே ஒளிந்து கொள்வாய்..!

களைந்த பிறவிகள் பண்ணிய பயனாய்
வந்திங்கு சேர்ந்து விட்டாய்..!

கலையா தவத்தால் கலைந்தது  மோட்சம்
உன்னைப் பெற்றது உணர்வு..!

வீடெது வீடது விடாது வேண்டினேன்…
வீடகம் உன்னுள்  கலந்து..!

சப்த நாடிகள் சப்தம் அடங்க
பூரகம் பொங்கிய உயிரே..!

சுழுமுனையுள் தாமரை நூலாம் நாடியது
என்னுயிரில்  உன் நினைவாம்..!

ஆதித்தன் சிரிக்க இதழ் விரியும் மாமலராய்
எனக்குள்  சிரிக்கும் முகம்..!

நரம்போடு எலும்புமஜ்ஜை  தசையோடு பிசைந்து
பொய்யில்லை நீ  நிஜம்..!

வாயு ஓடும் வரையிலா நீளும் வாழ்வு
அதையும் தாண்டி ஆயுமா சொல்..?

நாடிகள் ஆயிரமாயிரம் ஒடுங்கால்  நம்மிடத்துள்
நீ பத்துக்குள் சுழுமுனை எனக்கு.

உச்சி முகர்ந்தென்னை பரிந்து கட்டு
புதிதல்லவே நம்முள் உறவு..!

பெற்றதும் உற்றதும் சுற்றதும் சூழ்ந்திங்கு
கற்றுத் தந்தது காடு.

படத்துக்கு நன்றி

http://www.tumblr.com/tagged/7%20chakras

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *