நாராயண் சுவாமிநாதன்

“என்ன போட்டிருக்கு பேப்பர்ல ” என்றான் கோபாலன்.

“சேலத்துல எண்பது வயசுக் கிழவன்  எட்டு வயசுப் பெண்ணைக் கற்பழிச்சிட்டானாம்” என்றான் ரகுபதி.

” நாட்ல சட்டம் சரியில்ல. மைனர், மேஜர், மனித உரிமைன்னு தண்டிக்கத் தடை வருது. பெண்கள் கவர்ச்சி உடை, சினிமா குத்தாட்டம், கவர் ஸ்டோரி எல்லாம் காரணம். இவனுகளை தூக்ல போடணும். இல்லாட்டி வேதியியல்  முறையில வலிக்காம ஆண்மை நீக்கம் கூட..”

“ஆமாண்டா. இவனுக கதறக் கதற கற்பழிப்பானுக..இவனுகளைப் பிடிச்சு தண்டனை கொடுக்கறச்சே மட்டும் நோவாம நுங்கெடுக்கணுமா. ஒரு அருவாளால..”

“வெறிபிடிச்ச வெளி ஆளுகள் செய்யறதவிட,  வீட்லேயே சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க கூட தப்பு செய்யறாங்க. நம்ம வீட்டு வாசல்லயே நடக்கற ந்யூஸ் தெரியுமா உனக்கு ?”

“இந்த வீட்டுலயா ? என்ன நடக்கறது ?”

” வாசல் திண்ணையில இருக்காறே கிழவரு…அவர் ஒரு ஜொள்ளுப் பேர்வழி. தெரியுமா”

அவர்கள் குடியிருந்த அந்த வீட்டு  முன்னறையின் சன்னல் வழியாகப்  பார்த்தால்  வாசல் திண்ணையில ஒரு கிழவர் அமர்ந்திருப்பது தெரியும். அந்த  வீட்டு சொந்தக்காரரின் தகப்பனார் அவர். தினமும்  காலையிலும் மாலையிலும் தெருவில் வருவோர் போவோரைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார் அவர்.

ரகுபதியால் நம்ப முடியவில்லை.

“பாவம் அவரைப் போயா ஜொள்ளு பேர்வழிங்கறே ?
பேத்தாத. அவர் வயசென்ன..எழுவது எழுவத்தஞ்சுக்கு மேல இருக்காது ? தப்பாப் பேசாத…” என்று பொரிந்தான்.

“பார்க்காம சொல்வனா..  மூணு நாளா வாட்ச் பண்றேன்”

“என்ன பண்ணினாரு அப்படி ?”

“ஒரு ஸ்கூல் பெண்ணுக்கு தூண்டில் போட்டு பிடிச்சிட்டாரு”

“யார் அந்தப் பெண் ?”

“இதே தெருல ரேவதின்னு ஹைஸ்கூல் பெண்ணு. பார்க்கத் தளதளன்னு இருக்கு.  இவரு கூப்பிட்டுப் பேசறாரு.  குழையறாரு. நான் கண்ணால பார்த்தேன்.
அதுவும் விவரம் புரியாம இருக்கு”

அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே கிழவர் தெருவை நோக்கி  “ரேவதி..ரேவதி இங்க வா” என்று அழைத்தார்.

மினுக்கி குலுக்கி அந்தப் பெண் அவர் அருகில் வந்தாள்.

”கிட்ட வா” என்றழைத்து, அவள் கழுத்தை அணைத்தவாறே காதில் மெதுவாக  ஏதோ சொன்னார். ரகுபதிக்கு சரியாகப் புரியவில்லை. “மறக்காதே, அது ரொம்ப அவசியம் ” என்று சொன்னது கேட்டது.

அவள் தலையசைத்து,  “சாயங்காலம் ஸ்கூல் விட்டவுடனே வந்திடவா ? ” என்றாள்.

“வந்தா ஆறுமணிக்கு மேல வா. என் பிள்ளையும் மருமகளும் வெளிய போனப்பறமா வா. அவங்க  அஞ்சு  அஞ்சரைக்கு ஏதோ கல்யாண ரிசப்ஷன் போறாங்களாம். முன் ரூமில குடியிருக்கறவங்க ஏழு மணிக்கு மேலதான் வருவாங்க. நாம தனியா இருந்தா நமக்கு ஒரு தொந்திரவும் இருக்காது” என்று சொல்லி

 ” சொக்கும் விழிக்காரி  சொப்னசுந்தரி
  சொன்னது  தப்பாமல் வந்திரி “ என்று பாடினார்.

ரேவதி வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

அறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கோபாலன் தணிந்த குரலில் “பாத்தியா உன் கண்ணால. கிழத்துக்கு ஹார்மோன் பிரச்னை. அதான் அலையுது. ”அது” அவசியமா வேணுமாமே. எது ?ஆணுறையா? வெவரமான ஆளாத்தான் இருக்கு. தடயம் இல்லாம தப்பு செய்யப் பாக்குது”

ரகுபதிக்கு கோபம் பற்றிக் கொண்டு வந்தது.

“இதைத் தொடர்ந்து கண்காணிக்கணும் கோபாலா..  இந்த மாதிரி ஜொள்ளு கிழத்தை எல்லாம் கேஸ்ட்ரேஷன்  பண்ணணும். என்ன  நடக்குதுன்னு இதை ரூம்லயே இருந்து கவனிக்கப்போறேன்.  நமக்கு என்னனு இல்லாம ஒரு சமூகப் பொறுப்போட நாம செயல்படணும்”
என்று சூளுரைத்து சன்னல் கதவை லேசாக சார்த்தி வைத்தான்.

“வம்புல மாட்டிக்காத. வாடகைக்கு வீடு கிடைக்கிறது கஷ்டமா இருக்கு. எனக்கு  ஆபீஸ்ல வேலை இருக்கு. என்ன நடக்கறதுன்னு பார்த்துச் சொல்லு” என்றான் கோபால்.

சாயங்காலம் அஞ்சுமணி.

“மாமா நாங்க திரும்பி வர ரெண்டு மணி ஆகும்.  மேஜையில அடை வார்த்து வெச்சிருக்கேன். சாப்பிடுங்கோ. கதவை சாத்தி வெச்சுங்கோ” என்று சொல்லிவிட்டு  கிழவரின் மருமகள் தன் கணவனோடு ஆட்டோவில்  ஏறிப் போனாள்.

அவர்கள் போனதும் குஷியான கிழவர் ஒரு பாடலை  முணுமுணுத்தார்.

“எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே
என்னையறியாமல் உள்ளம் துள்ளி விளையாடுதே “

துள்ளுதோ ? வெட்டிப்போடறேன் என்று நினைத்துக் கொண்டான் அறையில் இருந்த ரகுபதி.

சற்று நேரத்தில் ரேவதி வந்தாள்.

மருளும் விழிகளால் சுற்று முற்றும் பார்த்தாள்.

” வா ரேவதி ,வா,  லைன் கிளியர்….. அவாள்ளாம் வெளிய போயாச்சு ” என்றார் கிழவர் பரபரப்புடன்.

ரேவதி ஜாக்கெட்டில் கைவிட்டு ஒரு சிறு சதுரமான பாக்கெட்டை எடுத்துக் கொடுக்க கிழவர் அதை மகிழ்வோடு வாங்கிக் கொண்டார்.

அது என்ன என்று ரகுபதிக்கு அறையிலிருந்து தெளிவாகத் தெரியவில்லை.

பார்க்க ஆணுறை போலன்னா இருக்கு. அந்தப் பெண்ணே இதை எடுத்திட்டு வரதா. சே கேவலம்.  நாடு எங்க போயிட்டிருக்கு ? அந்த சின்னப் பொண்ணுதான் ஏதோ வயசுக் கோளாறு ஆர்வத்தில  வந்துட்டாலும், தாத்தன் வயசான இந்தக் கிழம் நல்ல வார்த்தை சொல்லி அவளை வீட்டுக்கு அனுப்ப வேணாம் ? வேலியே பயிரை மேஞ்சா…வெட்கக்கேடு.

அந்தப் பெண்ணுக்கு ஏதாவது ஏற்படுமுன் நிறுத்திடணும்.  நாக்கைப் புடுங்கிக்கிறா மாதிரி கிழவரை நறுக்குனு நாலு வார்த்தை கேட்டுடணும் என்று  அறையிலிருந்து வெளியே வந்தான்.

அவனைப் பார்த்ததுமே ரேவதி தெருவில் இறங்கி ஓடிவிட்டாள்.

கிழவர் நடுங்கும் கரங்களால் அந்தப் பொட்டலத்தைப் பிரித்தார். கட்டைவிரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்து அதில் ஏதோ எடுத்தார்…பின்னர்…
சர்..சர்.. என்று  தன் மூக்கில்  இழுத்தவுடன்  அருகே வந்த   ரகுபதியைப் பார்த்தார்.

ஒரு அசட்டு சிரிப்புடன் ” ஆபீஸ்லேருந்து சீக்கிரமா வந்துட்டீங்களா? இந்த மூக்குப் பொடிப்பழக்கம் என்னால விட முடியல. என் மகனும் மருமகளும்  வாங்கித் தர மாட்டேங்கறா.. நான் பொடி போடறது அவங்களுக்குப் பிடிக்கல. நல்ல வேளையா மூணாம் வீட்டுப்பெண்  ரேவதிதான் வாங்கிட்டு வந்து
கொடுத்துது. காசு கூட வாங்கிக்காம ஓடிப்போயிட்டுது.  இதை நீங்க எங்க வீட்ல யார் கிட்டயும் சொல்லிட வேண்டாம்” என்று சொல்லி, பொடிப் பாக்கெட்டை வேட்டியில் பத்திரமாய் முடிந்து கொண்டார்.

பிறகு, மிகுந்த மனநிறைவுடன், ”மூக்குப்பொடிக்கும்  ஸ்லோகம் இருக்கு, தெரியுமா ரகுபதி ?” என்று கேட்டுவிட்டு,

” பஸ்ம ரூபிணி பரிமள கந்தினி  மனோரஞ்சினி  ஜலதோஷ நாசினி
  நித்ய சுககாரிணி நமஸ்தே நமஸ்தே நாசிகாசூரணி “

என்று பாடிக் கொண்டே உள்ளே எழுந்து போனார்.

=========

என். சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “வயோதிகருக்குமுண்டு வெறி

  1. இந்த நாசிகாசூரணிக்காக நெப்போலியன் பட்ட பாடு தெரியுமா? நம்ம எல்லே சுவாமி நன்னாத்தான் கதை விடறார். நாமொன்று நினைக்க மத்தவா அவா நினைக்கறதை நாம் நினைக்கிறதா சொல்லிட்றா! ஹூம்!

  2. கதையின் தலைப்பு பலவகைக் கருத்தை மனதில் ஓட்டியது. எல்லேயிலிருந்து வரும் கதை என்பதனால் என் எதிர்பார்ப்பு வேறாக இருந்தது. படித்தபோது, ‘சப்’ என்று கதை முடிந்துவிட்ட மாதிரி இருக்கு. ஒரு வேளை … தமிழக நேயர்களுக்காக அமைத்த முடிவோ என்று தோன்றுகிறது. 

    இந்தத் தலைப்பில் ஒரு பெரிய கட்டுரையே எழுதலாம். ஆனால் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தமிழகத்துக்கு இல்லை என்று நினைக்கிறேன். 

    சில குறிப்புகள்:

    1. காதலுக்கும் காமத்துக்கும் வயதில்லை. இதை மறுப்பவர் வெளிப்படையாக மறுத்து எழுதட்டும் பார்க்கலாம். 

    2. நம் ஊரில்தான் பிரமசரியம், க்ருஹஸ்தம், வானப்ரஸ்தம், சன்யாசம் என்ற பகுப்புகளை வைத்திருப்பதால் … சிலர் ‘நான் ideal, அந்த மாதிரி நிலைகளைப் பின்பற்றுகிறேன்’ என்று சொல்லவேண்டிய கட்டாயம் அமைந்துவிட்டது; சொன்னாலும் எல்லாரும் அதைப் பின்பற்றுவதில்லை. எனவே செயல்படாத சொல்லெல்லாம் வெறும் புரட்டு. 

    3. ஒரு வயதுக்குமேல் “ஆண்மை நீக்கம் (castrate)” என்பதை வலிந்து செய்ய வேண்டாமென்றும் … இயற்கையே அதைச் செய்துவிடும் என்றும் … அதாவது ஆணுறுப்பை ஒன்றுக்கும் உதவாமல் செய்துவிடுமென்றும் … கணவனுடன் வாழும் தோழியர் சொன்னார்கள். அதனால்தான் … பல இடங்களில் இந்த ஹி ஹி ஆஹா ஆஹா ஜொள்ளு. 

    4. அறுபதுக்கு மேற்பட்ட ஆண் இளைய பெண்ணை விரும்பியது என் குடும்பத்திலேயே நடந்திருக்கிறது. இதையெல்லாம் பூசி மெழுகத் தேவையில்லை.

    5. ஒருவேளை, கதையில் ஒரு புதுமை புகுத்தவேண்டுமானால் … இளய பெண்ணை ரிஷ்யசிருங்கருக்கு counterpart ஆக அமைக்கலாம். 

  3. அன்புள்ள திரு. ‘இ’சார், திருமதி ராஜம்: உங்கள் பின்னூட்டுகளுக்கு நன்றி.

    உங்கள் பின்னூட்டங்கள் நன்றாகவே இருந்தன. நடுநிலையாகவும் நல்ல கருத்துடனும் புதிய கோணத்திலும் மிளிர்கின்றன..

    காமம் மட்டுமின்றி வயோதிகர்க்குப் பல வெறிகள் உண்டு. வெத்திலை, பாக்கு, புகையிலை, மூக்குப் பொடி என்று பலவுண்டு.

    வயோதிகர் தனக்கு வேண்டிய மூக்குப்பொடி மறுக்கப்பட்டதால் பக்கத்துவீட்டுப் பெண் மூலம் பெற விரும்பினார்.
    கிடைத்ததும் மகிழ்ந்தார். மத்தபடி மற்றவர் கண்களில் காமம், கற்பழிப்பு, ஆணுறை போன்ற சொற்கள், அவர் வாயில் வரும் செல்லப் பாட்டுகள், யாரும் இல்லாதபோது வரச்சொல்வது எல்லாம் அவர் பெண்ணுக்கு அலைகிறார் என்ற தவறான ஊகத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்த திணிக்கப்பட்டவையே.

    என் நண்பர் ஒருவர் இந்தியாவிலிருந்து தனிமடல் போட்டார், “ நீ சொன்னது சரி. நாடே கெட்டுவிட்டது. வயசானவர்கள் எல்லாம் பெண்ணுக்கு அலைகிறார்கள்” என்று.

    இனிமேல் கதையோடு கோனார் நோட்சும் போடுவது நல்லதோ ? (;-)

    அன்புடன்,
    என். சுவாமிநாதன்
    லாஸ் ஏஞ்சலஸ்

  4. I see! 😉  

    1. முதலில், கதைத் தலைப்பில் உள்ள “வெறி” என்பதுக்கு நோட்ஸ் வேணும். அது desire? craving? passion? … etc.

    2. எது ஆனாலும் சரி, கதையில் sexual connotation இல்லை என்று யாராவது சொன்னால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது! தகுந்த ஆதாரங்களுடன் வாதிடவும்! ஏன் அந்தக் கிழவர் அசடு வழிகிறார்; கெக்கெ பிக்கெ என்று நடந்துகொள்கிறார்; வயதுக்கேற்ற கம்பீரம் இல்லை. ஏன் அந்தத் “தள தள” என்று இருக்கும் இளம்பெண்ணின் கழுத்தை வளைத்துப் பிடித்துக்கொள்கிறார்? அவளைத் தொடாமல், மெல்லிய குரலில் பேசியிருக்கலாமே. நம்ம ஊரில் அந்த மாதிரித் தொடும் பழக்கம் உண்டா? மிகவும் அருவருப்பான செய்தி. ஆதாரம் காட்டவும். எனக்கு ஆதாரம் தெரியும், ஆனால் வெளியே சொல்ல முடியாது — எங்க வீட்டுப் ப்ரச்னை என்பதால். 

    3. எல்லாக் காலத்து இளைஞருக்கும் மது, வெற்றிலை, பாக்கு, மூக்குப் பொடி … போன்ற பழக்கம் உண்டு. எங்கள் குடும்பங்களில் எல்லாத்தெயும் பாத்திருக்கேன். அதுவும் குறிப்பாக … எங்கள் எல்லாருக்கும் sinus problem. அமெரிக்கா வந்த பிறகுதான் எனக்கு வளைந்த மூக்குத்தண்டு (deviated septum) என்று கண்டுபிடித்தார்கள். அதனால்தான், மூக்கு அடைப்பைச் சரி செய்ய என் சொந்தக்கார ஆண்கள் மூக்குப்பொடி போட்டார்கள் என்று தோன்றுகிறது. வெற்றிலை பாக்கு சுவைக்காத கிராமத்துச் சித்தப்பாக்கள் இல்லை. இதையெல்லாம் சரியானபடிக் கண்டுகொள்ளாத தமிழ் உலகம் … மிகவும் puritan மனநிலையில் … எல்லாரையும் முற்றும் துறந்த முனிவர்களப் போல நடக்கும்படி எதிர்பார்ப்பது சுத்த அபத்தம். முற்றும் துறந்த முனிவர்களும் சோமபானம் உண்டதாகக் கேள்வி! 
    4. ஓ, இது உங்களுக்குப் பிடிக்குமோ என்னவோ தெரியாது, முதிர்ந்தோரின் காமம் பற்றிய குறிப்பு, குறுந்தொகையில் 2 பாடல்கள் உண்டு. 
    குறுந்தொகை 204—————————காமம் காமம் என்ப, காமம்அணங்கும் பிணியும் அன்றே;முதைச் சுவல் கலித்த முற்றா இளம்புல்மூதா தைவந்தாங்கு,விருந்தே காமம் பெருந்தோளோயே

    சுருக்கமாச் சொல்லப்போனா … ‘காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் நுழைந்தாற்போல்.’ இந்தக் கருத்தைத்தான் உங்கள் கதை எனக்குச்சொன்னது. Maybe it’s my naive judgement.  

Leave a Reply to ராஜம்

Your email address will not be published. Required fields are marked *