‘கிளிஞ்சல்கள் பறக்கின்றன’ கவிதை நூல் விமர்சனம்

0

மோகன் குமார்

Mohan kumar‘கிளிஞ்சல்கள் பறக்கின்றன’ என்கிற கவிதைத் தொகுப்பு வித்தியாசமான ஒன்று. இணையத்தில் எழுதி வரும் ஐம்பது கவிஞர்களின் கவிதைகளை ஜே. மாதவராஜ் தொகுக்க, வம்சி பதிப்பக வெளியீடாக வெளி வந்திருக்கிறது. இப்புத்தகத்தின் அட்டையில் வலைப்பூக்களிலிருந்து நூறு கவிதைகள் என சொல்லப்பட்டிருந்தாலும், உள்ளே இருப்பவை ஐம்பது கவிதைகள்தான். (சிறு தவறு.. ஆயினும் தவிர்த்திருக்கலாம்).

இந்த தொகுப்பில் உள்ள சில கவிதைகள் பற்றிய பார்வை இந்தப் பதிவில்..

நாம் படித்த தொடக்கப் பள்ளி ஒவ்வொருவர் மனத்திலும் ஆழ பதிந்து விடுகிறது போலும். நீண்ட காலம் கழித்து அங்கே சென்று சில துளி கண்ணீர் விட்ட அனுபவத்தைப் பாலாஜி மற்றும் ஹேமா என இருவர் கவிதையாக்கியிருக்கிறார்கள்.

மழை பற்றிய பொன். வாசுதேவன் கவிதை அழகு. மழையைச் சிறுவர், பெண்கள், வாகன ஓட்டிகள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று சொல்லிச் சென்று கடைசியில் ஒரு புன்னகையுடன் முடிக்கிறார்.

நிறைய வித்தியாசமான பார்வையும் அனுபவங்களும் கவிதையாகியிருக்கின்றன.

“காளை”கள் பற்றிய வடகரை வேலன் கவிதை

நகர வாழ்வும் மேலாளர் மனமும் பேசும் செல்வேந்திரன் கவிதை

“திண்ணை” குறித்த அமுதாவின் கவிதை

“காலை நேரச் சத்தங்கள்” பற்றிய அமிர்தவர்ஷிணி அம்மா கவிதை

இப்படி கவிதைகள் பல தளத்தில் இயங்குகின்றன.

வீட்டை விட்டு ஓடிப் போன நண்பன் திரும்ப வந்ததும் குடும்பம் மகிழ்கிறது. கவிதை எழுதும் நண்பரோ (விநாயக பெருமாள்) குறும்புடன் “நிதானமாக விசாரிக்க வேண்டும் பாதி புத்தனை” என்கிறார்.

kilinjalgal+parakindrana

ரயில் பயணம் குறித்தே இரு கவிதைகள்! ரயிலின் கூட்ட நெரிசலில் வரும் வியர்வை நாற்றம், பாலமுருகன் கவிதையில் தெரிகிறது. நந்தாவின் கவிதை, வார இறுதியில் வெளியூர் சென்று விட்டு, திங்கள் காலை வேலைக்கு வரும் இளைஞன், ரயில் சத்தத்துடன் அலாரம் வைத்து எழுகிற அலுப்பைச் சொல்கிறது.

கம்ப்யூட்டர் இஞ்சினியர்களின் தனிமை மற்றும் வெறுமை உணர்வை எளிமையாய்ப் பதிவு செய்கிறது ஜோ ஆனந்தின் “குகைகளில் முடியும் கனவுகள்”

ராஜாராமின் மாஜி காதலி பற்றிய “மூன்று காலங்கள்” கவிதை, தொடக்கத்தில் புன்னகையும் முடிவில் பெருமூச்சும் வர வைக்கிறது.

இலங்கைத் தமிழர் படுகொலை குறித்த ஜே. மாதவராஜ் மற்றும் தண்டோராவின் கவிதைகள் மனத்தைக் கனக்கச் செய்கின்றன.

தொகுப்பில் என்னைப் பெரிதும் கவர்ந்த கவிதைகளுள் ஒன்று யாத்ராவின் “திருவினை”. தற்கொலை செய்துகொள்ளத் துணிந்தவனின் மன நிலையையும் அவனது அந்த நேரத்துப் பார்வையையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. கவிதையின் இறுதியில் அந்த முடிவை அவன் தொடரவில்லை என்று உணர்கிறோம்.

சில கவிதைகள் புரிபடச் சற்று சிரமமாகவே உள்ளது. “நினைவின் அடுக்கு”, “ஓல ரீங்காரம்”, “உடையும் குமிழ்கள்” போன்ற வார்த்தைகளால் ஜல்லி அடிக்காமல் அனுபத்தை நேரே பகிர்ந்தாலே கவிஞர்களுக்குப் புண்ணியமாய் போகும்!!

நிச்சயம் இந்தத் தொகுப்பு, ஒரு வித்தியாசமான அனுபவத்தை நமக்குத் தருகிறது. ஒரு கவிஞரின் புத்தகம் எனில் அதில் அவரது பார்வையில் குறிப்பிட்ட அளவு விஷயங்களும் பாடுபொருள்களும்தான் இருக்க முடியும். ஐம்பது கவிஞர்கள் எனும்போது, பல விஷயங்களை வெவ்வேறு பாணியில் நாம் வாசிக்க / ரசிக்க முடிகிறது. தொகுப்பிற்கு ஒப்புக்கொண்ட கவிஞர்களும் தொகுத்து வெளியிட்ட ஜே. மாதவராஜும், வம்சி பதிப்பகத்தாரும் அவசியம் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

=======================================================

படங்களுக்கு நன்றி: http://veeduthirumbal.blogspot.com, http://karthigavasudev.blogspot.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *