சக்தி சக்திதாசன்

   

 

 

 

அன்பினியவர்களே !

இங்கிலாந்திலிருந்து இனிய வணக்கங்கள் .

“அரசனுக்கொரு காலம் வந்தால் புருஷனுக்கொரு காலம் வரும் ” என்றொரு முதுமொழி உண்டு. அதே போல ஆங்கிலத்தில் உள்ள முதுமொழி ஒன்று “If the mountain will not come to Muhammad, then Muhammad will go to the mountain” அதாவது மலை முகமதுவிடம் வராவிட்டால், முகமது மலையிடம் போக வேண்டும். ஆமாம் காரியம் ஆக வேண்டுமானால் யார் பெரியவர் என்று பார்த்துக் கொண்டு இருக்காமல் யாருக்கு அந்தக் காரியம் முக்கியமானதாக இருக்கிறதோ அவர்கள் அக்காரியத்தின் நிறைவேற்றுதலுக்கு முதல் முயற்சியை எடுக்க வேண்டும் என்பதுவே உண்மை.

என்னடா சக்தி என்ன பிதற்றுகிறானோ ? என்று எண்ணுகிறீர்களா ? கவலையை விடுங்கள் .

அது சரி யார் அரசன் ? யார் புருஷன் ? . யார் மலை? யார் முகமது ?  யோசனையாக இருக்கிறது இல்லையா ? எனது இந்தக் கடிதத்தின் சாரமே பெப்பிரவரி மாதம் 17ம் திகதயளவில் நடைபெற்ற இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கமரன் அவர்களின் இந்திய விஜயத்தைப் பற்றியே ஆகும் ?

அது எல்லாம் இருக்கட்டும் அவரது விஜயத்திற்கும் நான் மேலே குறிப்பிட்ட முதுமொழிகளுக்கும் என்ன சம்மந்தம்? விளக்க வேண்டியது எனது கடமையல்லவா?

ஆனந்தமாக ஆடிக்கொண்டிருந்த இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு இப்போ அடங்கிப் போயிருக்கிறது.

எத்தனையோ விதமான பொருளாதாரக் கட்டுப்பாடுகளை விதித்து பல நடவடிக்கைகளை முடுக்கி விட்டும் கூட எதிர்பார்த்த அளவில் நாட்டின் பொருளாதாரம் அவர்கள் எதிர்பார்த்த திசையில் எதிர்பார்த்த அளவில் முன்னேறவில்லை.

பொருளாதாரத்தைச் சீர் செய்கிறோம் என்று சூளுரைத்து பதவியேற்ற கூட்டரசாங்கத்தின் ஜந்து வருட கால பதவிக் காலம் தனது மூன்றாவது ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. ஆயினும் பொருளாதாரம் சீரமைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் காணப்படவில்லை.

இன்னும் இரண்டே வருடங்களில் மற்றொரு தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலையிலிருக்கும் அரசாங்கம் ஏதாவது வகையில் நாட்டின் பொருளாஅதாரத்தை முன்னோக்கித் தள்ள வேண்டிய கட்டாயத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது.

அதிகமாகப் பேசப்பட்டு வரும் ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் அனைத்தும் இதேமாதிரியான பொருளாதாரச் சிக்கலுக்குள் தம்மைப் புதைத் துக் கொண்டு வெளிவரத் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையிது. ஜரோப்பிய ஒன்றியத்தினுள் ஓரளவு பொருளாதாரச் சிக்கலில் விடிகாணத் திடங்கிய ஜேர்மனிய தேசமும் மீண்டும் பிந்தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இங்கேதான் இங்கிலாந்துப் பிரதமரின் இந்திய நாட்டு வ்ஜயத்தின் முக்கியத்துவம் உணரப்பட வேண்டியிருக்கிறது.

மேலைத்தேச நாடுகள் விரும்பியோ விரும்பாமலோ எதிர்கால உலகப் பொருளாதார முன்னேற்றத்தில் இந்தியா எடுக்கப்போகும் பங்கு மிகவும் பிரதானமாகி விட்டது.

இந்தியாவை விட பொருளாதார முன்னேற்றம் அதிக அளவு காணப்படும் சீனாவை விட இந்தியாவில் முதலீடு செய்வதையே இம்மேலைத் தேசநாடுகள் அதிலும் குறிப்பாக இங்கிலாந்து முனைப்புக் காட்டி வருகிறது.

இங்கிலாந்தின் அரசாங்கத் திணைக்களங்கள் உட்பட பல முன்னனி கம்பெனிகள் தமது பிந்தள வேலைகளை இந்தியாவில் நிகழ்த்தும் வகையில் தமது கட்டமைப்புக்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நிலமை இவ்வாறிருக்க இங்கிலாந்தின் உள்நாட்டு அரசியல் நிலைமைகள் உலகப்பொருளாதாரச் சூழல்களை கணக்கிலெடுக்கத் தவரும் வகையில் தமது உள்நோக்கக் பார்வையைத் தீவிரப்படுத்தினார்கள்.

விளைவு ,

வெளிநாட்டிலிருந்து இங்கிலாந்துக்கு பணிபுரியவோ அன்றி கல்வி பயிலும் வசதிக்காகவோ வருபவர்கள் இந்நாட்டின் பொருளாதாரத்தைச் சுரண்டுபவர்களைப் போலக் காட்டுவதனால் அரசியல் கட்சிகள் சில தமது ஆத்ரவைப் பெருக்கிக் கொள்ளலாம் எனக் கண்டு கொண்டு தமது துவேஷ உணர்வை ஆசியாவிலிருந்து அதுவும் குறிப்பாக இந்தியாவிருந்து சமீபத்தில் வந்தவர்களை நோக்கிக் கக்கத் தொடங்கினார்கள்.

பொருளாதாரச் சிக்கலினால் தவித்துக் கொண்டிருந்த இங்கிலாந்து மக்கள் இவ்வுணர்வலைகளினால் தாக்கப்பட்டத்தைக் கண்ட அரசும் கல்விபயில வரும் இந்திய மாணவர்களின் விசா விடயத்தில் கெடுபிடியக் காட்டினார்கள்.

அப்போது இது பல பகுதிகளில் சர்ச்சைக்குரிய விடயமாகவிருந்தது. இத்தகைய கெடுபிடிகள் இங்கிலாந்துக்கு வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து இங்கிலாந்துக்கு வரும் அந்நியச் செலவாணி வரும்படியைத் தக்கி விடும் எனும் வாதம் பொருளாதார நிபுணர்கள் மத்தியில் நிலவியது.

இத்தகையதொரு நிலைமையில் தான் அடுத்தடுத்து வெளியிடப்பட்ட பொருளாதார அறிக்கைகள் இங்கிலாந்தின் பொருளாதாரம் வீழ்ழ்ச்சியிலிருந்து மீண்டு விட்டாலும் மறுபடி வளர்வதற்கு அதிக காலம் எடுக்கும் என்று சுட்டிக்காட்டின.

புரிந்தது இங்கிலாந்து அரசுக்கு இந்நிலையிலிருந்து தமது பொருளாதாரத்தை மீட்டெடுக்க தமது வியாபார நுணுக்கங்களை பொருளாரத்தில் ஓங்கி வளரும் இநியா போன்ற நாடுகளில் விச்தரிப்பது ஒன்றேதான் சிறந்தமுறை எனும் முடிவெடுத்தார்கள்.

இதோ அதன் விளைவாக 159 பேர் அடங்கிய குழுவுடன் இங்கிலாந்துப் பிரதமர் இந்தியாவிற்குப் படையெடுத்து விட்டார்.

இந்தியாவிற்கும், இங்கிலாந்திற்கும் இடையே உள்ள உறவின் பாரம்பரியத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பிரதமரின் பேச்சுக்கள் அடங்கியிருந்தன.

தமது நன்மைக்காக இதைச் செய்திருந்தாலும் உலகத்தில் முன்னனி நாடுகளில் இந்தியா வகிக்கும் கேந்திர ஸ்தானத்தை சுட்டிக் காட்டும் வகையில் இந்நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன.

அதுமட்டுமின்றி இங்கிலாந்தின் பல வங்கிகளின் பிற்தளச் செயற்பாடுகள் இந்தியாவில் நடைபெறுகின்றன. இங்கிலாந்து மக்களின் வங்கிக் கணக்குகளின் விபரங்கள் பல அவர்களின் பிரத்தியேக விபரங்கள் உட்பட இந்திய நாட்டுக் கிளைகளில் உள்ளன. இணையத்தளத்தில் நடைபெறும் சமூகவிரோத செயற்பாடுகளினால் இத்தனித்துவமான விபரங்கள் திருடர்கள் கைகளில் கிடைத்து விடக்கூடாது என்று பொதுமக்கள் மனதில் பீதி நிலவுகிறது.

தனது இந்த இந்திய விஜயத்தின் மூலம் இருநாடுகளுகிடையிலும் இணையத்தள மோசடிகளைத் தடுக்கும் வகையிலான ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தத்திலும் பிரதமர் கையொப்பமிட்டுள்ளார்.

இது இங்கிலாந்து மக்களுக்கு தமது வங்கிகளில் உள்ள நம்பிக்கையைக் கூட்டுவதோடு மேலும் பல நிதி நிறுவனங்கள் தமது நடவடிக்கைகளை இந்தியாவில் விஸ்தரிப்பதற்கு வழிவகுக்கும் என்று பிரதமர் நம்புகிறார் போலும்.

அது மட்டுமா?

எந்த இந்திய மாணவர்களின் வருகைக்கு சில மாதங்களின் முன்னால் கெடுபிடி விதித்தார்களோ அதே இந்திய மாணவர்களுக்கான விசா ஒரேநாளில் கிடைபதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும், இந்திய வியாபார முகவர்கள் தமது வியாபாரங்களை இங்கிலாந்திலும் நடத்துவதற்கு ஏதுவாக அவர்களுக்கான விசாவும் ஒரேநாளில் கிடைப்பதற்கு வழிவகுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார் நம்முடைய பிரதமர்.

இதற்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள் ?

அமரர் தமிழ்வாணன் அவர்களின் “துப்பறியும் சங்கர்லால்” எனும் மர்ம நாவல்களைப் படிக்காதவர்கள் மிகவும் சொற்பமானவர்களே ! அவரது கதையின் நாயகன் “சங்கர்லால்” பற்றி எழுதும் போது “சங்கர்லாலின் ஜாகுவார் சீறிக் கொண்டு கிளம்பியது” என்று எழுதுவார்.

இப்போது அமரர் தமிழ்வாணன் இருந்திருந்தால் அந்த ஜாகுவாரைத் தயாரிக்கும் நிறுவனன் ஒரு இந்தியருடைய கைகளிலே என்று கண்டு மிகவும் மகிழ்ந்திருப்பார்.

ஆமாம் இங்கிலாந்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வாகனங்களாக இருந்த “ஜாகுவார்” மற்றும் “லாண்ட்ரோவர்” என்பன மிகவும் மோசமான நிதிநிலைமையடைந்து அதை இந்திய நிறுவனமான “டாட்டா” கொள்வனவு செய்து அத்தொழிலாளர்களின் வாழ்வையும் அக்கார்களின் பெயரையும் காப்பாற்றியது. அதுமட்டுமின்றி இங்கிலாந்தில் அனைத்துப் பெரிய நிறுவனங்களும் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு பொருளாதாரச் சூழலில் இக்கார்களைத் தயாரிக்கும் நிறுவனம் மட்டும் தனது வியாபாரம் பெருகக் கண்டது.

இவ்வியாபாரப் பெருக்கத்தின் மூலம் மேலும் பலருக்கு வேலைவாய்ப்புக் கிட்டியது. இந்நிறுவனத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்பதை விளக்கிய ஒரு பொருளாதார நிபுணர் கொடுத்த விளக்கம் என்னை வியப்பிலாழ்த்தியது.

பிரித்தானிய பொரியிலளாரின் நிபுணத்துவத்தையும், ஜெர்மனிய நிர்வாகிகளின் நிர்வாகத் திறனையும் இந்திய முதலீட்டாளர்கள் நன்கு பயனுள்ல முறையில் உள்வாங்கி இந்நிறுவனத்தைத் தகுந்த முதலீட்டுடன் முன்னெடுத்துச் சென்றதே இந்நிறுவனத்தின் வியாபார வெற்றியின் இரகசியம் என்று சொன்னார்.

இவரது இக்கூற்று இந்தியர்களின் வியாபார நுணுக்கங்களையும், அவர்கள் வெற்றியடைய எடுக்கும் கூட்டு நடவடிக்கையின் திறனையும் நன்கு எடுத்துக்காட்டுகிறது.

இதன் அடிப்படையிலேயே இங்கிலாந்து அரசாங்கமும் மேலும் பல இந்திய முதலீட்டாளர்கள் இத்தகைய மென்னெடுப்புக்களை எடுப்பார்கள் என எண்ணி அதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முனைகிறார்கள் என்பது தெளிவாகிறது.

அத்தோடு மும்பாயிலிருந்து பெங்களூர் வரை ஒரு வியாபாரக் அதவொன்றை ஏற்படுத்தும் வகையில் ஒரு வழி சமைத்து பல புதிய மாதிரி நகரங்களை உருவாக்க பிரித்தானிய கட்டிட, நகர ஆராய்வாளர்களின் உதவியை அளிக்க இங்கிலாந்து ஏறந்தாழ 1 பில்லியன் இங்கிலாந்து பவுண்ஸை முதலீடு செய்வதாகவும் பிரதமர் கமரன் அறிவித்துள்ளார்.

அதுசரி இந்திய மக்களின் மனதில் இடம்பிடிக்க பிரதமர் கமரன் கையாண்ட யுத்தி என்ன தெரியுமா? இந்திய மக்களின் அது உன்னத விளையாட்டான கிரிக்கட் விளையாட்டை விளையாடியதன் மூலம் இந்திய மக்களின் கவனத்தைத் தன்பால் ஈர்த்து விட்டதாக எண்ணி விட்டார் கமரன் போங்கள் !

இதற்கு இந்தியாவின் நிலைப்பாடு என்ன ?

இங்கிலாந்து தனது நன்மைக்காக இத்தகிய ஒரு அதீத உறவைப் பெண முன்வந்தது எனினும் இந்தியா உலக பொருளாதார முன்னனி நாடுகளில் முன்வரிசையில் நிற்கும் காரண்த்தினால் இதனை தனக்குச் சாதகமான முறையில் உள்வாங்கிக் கொள்ல வேண்டும்.

பொருளார முன்னேற்றம் சமுதாயத்தில் அடிமட்டத்தில் அல்லலுறும் மக்களைச் சென்றடைவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

வடகிழக்கு ஆசியப் பிராந்தியத்தின்  அதிமுக்கிய நாடாக இந்தியா திகழ்கிறது. அதுமட்டுமின்றி பொருளாரத்தில் முன்னனியில் நிற்கும் நாடுகளைக் கொண்ட க்20 அமைப்பிலும் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கிறது.

2020 இல் இந்தியா உலகின் முன்னனி நாடாகத் திகழும் என்று வலியுறுத்திய இந்திய முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களிஉன் கனவு எமது கண்முன்னே நிஜமாவது போன்ற உணர்வு தோன்றவில்லையா?

காத்திருப்போம், களித்திருப்போம்

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *