தேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் 9

2

திவாகர்

தமிழிலே பல நகைச்சுவை கதைகள் ஆதியிலிருந்தே உண்டு. மகாகவி பாரதி நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்பது அவர் கவிதைகளிலே மிகச் சிறந்த இடத்தைப் பெற்ற குயில் பாட்டு ஒன்றினைப் படித்தாலே போதும். மனிதன் ஒருவனே நகைச்சுவையை ரசிக்கத் தெரிந்தவன், அதை உணர்ந்து வெளிக்காட்டி சிரிக்கத் தெரிந்தவன். காந்தியடிகள் வாழ்க்கையில் நகைச்சுவைக்கு மிகப் பிரதானம் உள்ளது. கடுமையான எண்ணம் கொண்ட எதிரிகளைக் கூட உண்மையான புன்னகையோடு எதிர்கொண்டால் அவனை இம்சிக்காமலே வெற்றி கொள்ளமுடியும் என்பார்.. அஹிம்சாவாதியல்லவா.. அதே போல பக்தியால் நாம் மனமுருகிப்பாடும் தேவாரத்தில் கூட அப்பர் பெருமான்  ”வெள்கினேன் வெள்கி நானும் விலாவிறச் சிரித்திட்டேனே (உள்ளத்திலேயே நீ இருக்க வெளியே எல்லாம் உன்னைத் தேடுவது கண்டு எனக்குள்ளே வெட்கப்பட்டு விலா எலும்பு விரிய சிரித்தேன்) என்று  கூட சிரிப்பதில் உள்ள சுகத்தைப் பாடுவார். எத்தனை சீரியஸான ஆசாமியையும் நல்லதொரு நகைச்சுவை கொண்டு சிரிக்க வைக்கமுடியும் அப்படி சிரிக்கவில்லையென்றால் அவன் மனிதப் பிறவியே அல்ல. சிரிப்பினால் ஆயுள் பெருகும். மனம் விட்டு சிரிக்க சிரிக்க உடலிலிருந்து கெட்ட வாயுக்கள் வெளியே வருகின்றன.

எல்லா எழுத்தாளர்களுமே முடிந்தவரை நகைச்சுவையை தம் எழுத்தில் காண்பிக்கதான் வேண்டும். அப்படிக் காண்பிக்கத்தான் செய்கிறார்கள். எளிய நகைச்சுவையின் ருசியே ஒரு தனி விருந்து. அதை அனுபவித்துப் படிப்பதே ஒரு சுகம்.

கல்கியின் கதைகளில் மிகப் பெரிய புகழ் பெற்ற பொன்னியின் செல்வனில் கூட அந்தக் கதாநாயகனான அருள்மொழிவர்மனை விட வந்தியத் தேவனும், ஆழ்வார்க்கடியானும் அதிகம் பேசப்படுகிறார்கள். காரணம் நகைச்சுவையோடு அந்தப் பாத்திரங்களை வாசகர் நெஞ்சங்களை நிரப்பியதுதான். அப்படித்தான் சுஜாதாவின் புகழ்பெற்ற ‘கணேஷ்-வசந்தில்’ வசந்த் மூலம் படைக்கபபட்டிருக்கும் நகைச்சுவை மட்டும் இல்லாவிட்டால் இரு பாத்திரங்களுக்குமே ஒரு மிகப் பெரிய ரசனை கிடைத்திருக்காதுதான். ஆனால் சென்ற நூற்றாண்டின் இணையற்ற நகைச்சுவை நாயகன் யாரென்றால் அது நிச்சயமாக தேவனின் ‘சாம்பு’தான்.

சாம்பு பாத்திரம் படைக்கப்பட்ட காலத்தைப் பற்றி முதலில் சொல்லவேண்டும். இரண்டாம் உலகப்போர் மும்முரமாக நடைபெற்ற 1942 ஆம் ஆண்டில் தேவன் ‘துப்பறியும் சாம்பு’ எழுதினார். அந்தக் கால கட்டத்தில் தேசத்தில் உலக மகா யுத்த பயமும், பிரிட்டிஷாரின் மீதான கோபமும், யுத்தகாலமாதலால் அத்தியாவசியப் பொருட்கள் பஞ்சமும், இந்த யுத்தத்தைக் காரணம் காட்டி அரசாங்கத்தின் அச்சுறுத்தலும் இதற்கும் மேல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உச்சகட்டமான ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற கோஷத்துடன் விதேசப் பொருட்களையும் பகிஷ்கரித்த நாட்கள் அவை. நிச்சயமாக சாதாரண பொதுமக்கள் நிம்மதியில்லாமல் வாழ்ந்த நாட்களாக அந்தக் கால கட்டத்தை நாம் காட்டலாம். இரண்டாம் உலக யுத்தத்தில் இங்கிலாந்து பல தோல்விகளை சந்தித்த காலமாதலாலும், உலகத்தின் தலைநகரமாகக் கருதப்பட்ட லண்டன் மாநகரமே அபாயக் கட்டத்தில் இருந்ததாலும் பிரிட்டிஷார் பாரதமக்கள் மீது எவ்வித தயாதாட்சண்ணியமும் காண்பிக்காத சிரமமான நாட்கள் என்றே சொல்லவேண்டும். யுத்தத்தில் பாரதம் நேரடியாக அவ்வளவாக பாதிக்கப் படவில்லையே தவிர, யுத்தகால கஷ்டங்கள் என்னென்ன உண்டோ அனைத்திலும் தேசம் முழுவதும் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்தது என்றுதான் தெரியவருகிறது. இப்படிப்பட்ட விசித்திரமான சூழ்நிலையில்தான் தேவனின் மூளையில் சாம்பு தோன்றினான். துப்பறியும் சாம்பு எனும் பெயரில் ஆனந்த விகடனில் தொடராக எழுதவும் ஆரம்பித்தார். பின்னாளில் அந்த கதை பெரும் புகழ் அடையப் போகிறது. அந்த சாம்பு தமிழர்களின் ஹாஸ்ய உணர்ச்சியில் திக்கு முக்காடி மிகப் பெரிய நாயகனாய் வலம் வரப் போகிறான் என்பதை தேவன் அன்று உணர்ந்திருப்பாரோ என்னவோ..

இதில் விசேஷம் என்னவென்றால் தேவனால் தோற்றுவிக்கப்பட்ட தலைசிறந்த நகைச்சுவைக் கதையின் நாயகனான ‘துப்பறியும் சாம்புவுக்கு’ தெரியாத கலை ஒன்று உண்டு என்றால் அது ‘துப்பறிவதுதான்’. தேவன் துப்பறியும் சாம்புவை எப்படி அறிமுகம் செய்கிறார் – சற்று படியுங்களேன்.

‘நாற்பதாவது வயதில் எவனொருவன் முட்டாளாகவே இருக்கிறானோ அவன் ஆயுள் முழுதும் முட்டாளாகவே இருப்பான்’ என்று யாரோ -முட்டாள்தனமாக அல்ல- சொல்லிவைத்தார். சாம்புவுக்கு நாற்பது வயது சரியாக ஆகி இருந்தது. அவனை எல்லோரும் பார்த்த மாத்திரத்தில் ‘முட்டாள்’ என்றார்கள்.

‘விளாம்பழம்’ பார்த்திருக்கிறீர்களா? கொஞ்சம் பெரிய விளாம்பழத்தை நினைத்துக்கொள்ளுங்கள்; அதுதான் சாம்புவின் தலை. கன்றுக் குட்டிகள் அழகாக காதுகளை முன்புறம் வளைத்துக்கொண்டு பார்க்கும் அல்லவா? அந்த மாதிரி காதுகள்… கண்கள் ஒருமாதிரி அரைத்தூக்கத்தைத் தேக்கிகொண்டிருக்கும். இந்த லட்சணங்களுடன் ஒரு பித்தானில்லாத சட்டை.. ஒரு பழைய கோட்டு, கிழிசல் குடை இவைகளை சேர்த்துகொள்ளுங்கள்.. இதோ சாம்பு பிரத்தியட்சமாகிவிட்டான்..”

தேவன் இப்படித்தான் ஒரு கதாநாயகனை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.. பின்னாளில் இதே தொடரில் போகப் போக மிகப் பிரபலமாகி தன் ஆடை அலங்காரங்களை சற்று மாடர்னாக சாம்பு மாற்றிகொண்டாலும் அவன் முட்டாள்தனம் மட்டும் அவனோடு அப்படியே ஒட்டிகொண்டுவிட்டதை தேவன் அழகாக விவரிப்பார் கதை முழுதும். ஏனெனில் சாம்புவின் முட்டாள்தனம்தான் அவன் பலம். அவன் புத்திசாலியாக செயல்படுவதாக நினைத்துக் கொண்டு அவன் ஈடுபடும் காரியங்கள் அனைத்தும் அவனுக்கு மாபெரும் தோல்வியை – அவன் ஒருவன் மட்டுமே அறியும் விதத்தில் – அடைவதையும் ஆனால் அதிர்ஷ்ட தேவதை அவனை அணைத்துக் கொண்டு வெற்றியின் உச்சியை அடைவதையும் மிக அழகாக விவரித்திருப்பார் தேவன்.

துப்பறியும் சாம்பு வின் சித்திரமே விசித்திரம். தேவனின் பல கதை, கட்டுரைத் தொடர்களுக்குச் சித்திரங்கள் வரைந்தவர் ராஜு. ‘துப்பறியும் சாம்பு’வின் சித்திரத்துக்கு உயிரூட்டியவர் அவரே. பிறகு, விகடனில், தேவனின் மறைவுக்குப் பின், 1958 ஆம் ஆண்டில்‘சாம்பு’ ஒரு சித்திரத் தொடராக வந்தபோது ‘கோபுலு’ படங்கள் வரைந்தார் (நன்றி, பேராசிரியர் பசுபதியின் வலைப்பூ).மேலும் திரு பசுபதி எழுதுகையில் இப்படிச் சொல்கிறார்.

தேவனின் ’துப்பறியும் சாம்பு’ தமிழ் நகைச்சுவை இலக்கியத்தில் தனித்தன்மையுடன் விளங்கும் ஒரு சிறுகதைத் தொடர். ஆகஸ்ட், 30, 1942 -இல் “ஆனந்த விகடனில்” தொடங்கிய அந்தத் தொடரைப் பற்றிய சில சுவையான தகவல்களைத் ‘தம்பி’ ஸ்ரீநிவாசன் தருகிறார்:

“ சாம்புவை வைத்து முதலில் ஒன்பதே கதைகளை ‘தேவன்’ எழுதினார். பின்பு வாசகர்களின் விருப்பத்திற்கிணங்க, மேலும் ஒன்பது கதைகளை எழுதினார். ஆனால், பொதுமக்கள் சாம்புவை அதிகமாக எதிர்பார்க்கவே திரும்பவும் இருமுறை சாம்பு கதைகளைத் தொடர்ந்தார். மொத்தம் 50 சாம்பு கதைகள் வெளிவந்துள்ளன. சாம்பு கதைகள் எழுது முன்பு “கோபாலன் கவனிக்கிறார்’ என்ற ஒரு சிறு துப்பறியும் தொடரையும் எழுதினார்” (https://groups.google.com/forum/?fromgroups=#!topic/yappulagam/Dqqb2UWCkag)

பின்னாட்களில் எஸ்.எஸ். வாசனின் ஜெமினி நிறுவனம் எடுத்த  ’மோட்டார் சுந்தரம் பிள்ளை’ எனும் திரைப்படத்தில் சாம்புவின் ஆக்கம் பயன்படுத்தப்பட்டது. சாம்பு கதைகளில் வந்த நிகழ்ச்சிகளைப் பயன்படுத்தாமல் சாம்புவின் டெக்னிக் மட்டும், (அதாவது சாம்புவின் முட்டாள்தனம், அப்பாவித்தனம், அதிர்ஷ்டம் இந்த மூன்றும் கலந்த கலவை) பயன்படுத்தப்பட்டது. படத்தில் கதாநாயகனாக நடித்த சிவாஜியின் மருமானாக வரும் நாகேஷ் அந்தப் பாத்திரத்தில் மிக இயற்கையாக நடித்தார். அதற்கு அவர் உடல் வாகு கூட பயன்பட்டது என்றே நினைக்கிறேன். தேவன் தன் கடைமூச்சு வரை விகடனில் பணியாற்றியதால் அவருடன் அவர் பாத்திரப்படைப்புகளும் சேர்ந்து ஜெமினி நிறுவனத்தாருக்கு சொந்தமாகப் பட்டதோ என்னவோ தேவன் கதையோ சாம்புவோ இந்தப் படத்தில் சம்பந்தப்பட்டதாக டைட்டிலில் காண்பிக்கவில்லை. (கோமதியின் காதலன்’ படத்தில் மிக அழகாக ‘கதை – தேவன் – ஆனந்தவிகடன்’ என்று பிராண்ட் கொடுத்து டி.ஆர். ராமச்சந்திரன் டைட்டில் போட்டிருந்தார் என்பதையும் நினைவில் கொள்க.) ஆனால் மோட்டார் சுந்தரம் பிள்ளையில் தேவன் பெயர் இல்லாவிட்டால் என்ன, அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளிவந்த அத்தனை பேரும் நாகேஷ் வடிவில் மறுபடியும் தேவனின் ‘சாம்பு’ வைப் பார்த்த திருப்தியை அடைந்தார்கள் என்றே பேசப்பட்டதும் உண்டு.

தேவன் உயிருடன் இருக்கும் காலத்திலேயே அவரே சாம்பு நாடகத்துக்கான வசனத்தையும் எழுதி இருக்கிறார். அவர் காலத்திலேயே சாம்பு நாடகமும் பலமுறை மேடையேற்றப்பட்டது. என்.எஸ் நடராஜன் என்கிற தேவனின் நண்பர் சாம்பு வேஷம் போட்டதாலேயே சாம்பு என்.எஸ். நடராஜன் என்று அறியப்பட்டதாக பேராசிரியர் பசுபதி எழுதியிருக்கிறார். (இவருடைய நாடக போஸ்டர் ஒன்று 1962 இல் வெளியானது, படமாகக் காண்பிக்கப்பட்டுள்ளது). தேவன் கைப்பட எழுதிய  நாடகமாக்கப்பட்ட ஆக்கத்தைக் கூட பேராசிரியர் பசுபதி தன் வலைப்பூவில் பதிப்பித்துள்ளார். சாம்பு பின்னாளில் தூரதர்ஷனில் தொடராக வந்தது. காத்தாடி ராமமூர்த்தி சாம்புவாக நடித்தார். மேலும் பல நாடகக்குழுக்கள் சாம்புவைப் பயன்படுத்திக் கொண்டன.

துப்பறியும் சாம்புவில் சென்னையின் முக்கியமான இடமான மாம்பலம் வெகுவாகப் பேசப்பட்டது. திருநீர்மலை, பாரீஸ்கார்னர், (டவுன்) எழும்பூர், செண்ட்ரல் போன்ற இடங்களைப் பற்றிய வர்ணனை அவ்வப்போது வரும். கும்பகோணம் சற்று பிராபல்யம் பெற்றது என்றும் சொல்லலாம். சாம்புவின் கீர்த்தி மேலும் பெருக பெருக பெங்களூர், பம்பாய், லண்டன் போன்ற நகரங்களுக்கும் சாம்புவை அனுப்பி அந்தந்த நகரங்களின் அப்போதைய நிலையையும் நமக்கு அறிமுகம் செய்தார். 1940 களில் இந்த இடங்கள் எப்படி இருந்தன என்பதும் நாம் அறிய உதவுகின்றன.

சாம்புவின் கதைகள் மூலம் மிக வேகமாக மக்கள் மனதில் பதிந்த இன்னொரு பாத்திரம் இன்ஸ்பெக்டர் கோபாலன். பாவம்! இவரைப் பொருத்தமட்டில், பார்வைக்கு முட்டாள் போல தெரிந்தாலும் சாம்புவைப் போல ஒரு உயர்ந்த, திறமை மிக்க துப்பறிபவர் இந்த உலகத்துலேயே கிடையாது என்ற எண்ணம் உண்டு என்பதால் அதிகாரபூர்வ மற்றும் அதிகாரபூர்வமில்லாத ரகசிய வழக்குகளிலெல்லாம் சாம்புவை சிக்க வைத்து சாம்பு ஒன்றும் புரியாமல் வேடிக்கைப் பார்த்து ஏதோ செய்து தொலைக்க அதுவே கடைசியில் வெற்றியில் கொண்டுவிட, ஒவ்வொரு நிகழ்ச்சியும் அலுப்பு தட்டாமல் கொண்டு செல்லும் தேவனின் எழுத்துத் திறமையை எவ்வளவுதான் மெச்சினாலும் தகும்.

தேவன் எப்படி சாம்பு பாத்திரத்தைப் படைத்தாரோ அதற்கு நேர் மாறாக கும்பகோணத்து வேம்புவை சிருஷ்டி செய்து, அவளை சாம்புவின் மனைவியாக்கி, அந்த மனைவிக்கு உண்மையான முட்டாள் சாம்புவை புரிய வைத்து அவள் மூலம் ஏகப்பட்ட கிண்டல்களும் அதே சமயம் சிருங்காரக் கொஞ்சல்களுக்கும் குறையில்லாமல், பஞ்சமில்லாமல் வாசகர்களுக்கு விருந்து படைத்தார். பின்னர் சாம்புவுடன் அவனுக்குப் பிறந்த சுந்துவும் சேர்ந்துகொண்டு அவனறியாமல் அவன் வழக்குக்கு உதவுவதையும் தேவன் விவரிப்பார். அதே சமயம் சமூகத்தின் பல அங்கங்களில் கதையை நகர்த்தி, சமூகங்களில் பரவலாகத் தெரிகின்ற அந்தக் கால நிக்ழ்வுகளை ஒவ்வொரு கதையிலும் வாசகருக்கு தன் பாணியில் தேவன் அறிமுகப்படுத்துவார். ஒவ்வொருவரின் உண்மை சுபாவம் அல்லது இயல்பினை அவர் வெளிச்சம் போட்டுக் காட்டும்போது நகைச்சுவையை அவர் எந்த அளவுக்கு வெற்றிகரமாக பயன்படுத்தி உள்ளார் என்கிற விவரம் புரியும்.

இந்த சாம்பு-வேம்பு கலாட்டா இருக்கும் ஒரு கதையைத்தான் பார்ப்போமே

‘படங்களுக்கு நன்றி: பேராசிரியர் பசுபதி”, கனடா.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “தேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் 9

  1. அடி, வேம்பு, அடி வேம்பு, அடி வேம்பு!  சுடச் சுட வெண்பொங்கலைச் செய்து கொண்டு வந்து வேம்பு ஊட்டிவிடும் அழகை சாம்பு நினைப்பதுவும், வெங்காய சாம்பாரில் இட்லியைத் தோய்த்துத் தோய்த்து வேம்புவின் மடியில் படுத்துக்கொண்டு விழுங்குவதும், அதை சுந்து வழியில் கண்ட கோபாலனிடம் போட்டு உடைப்பதும், கோபாலன் சாம்புவைக் கிண்டல் செய்ய வேண்டிக் கிள்ளிவிடுவதும்.

    ஆஹா, ஆஹா, ஆஹா!  சாம்புவின் மகிமையே மகிமை!  முதலில் சாம்பு கதை தொடராக வந்ததே எனக்குத் தெரியாது.  நான் முதலில் படித்தது சாம்பு சித்திரத்தொடராகவே.  அப்போவெல்லாம் எங்க வீட்டில் விகடன் வாங்கிட்டு இருந்தாங்க.  விகடன் வந்ததும் சாம்புவைப் படிக்க எனக்கும் அண்ணாவுக்கும் ஒரு போட்டியே நடக்கும்.  கடையில் இருந்து வாங்கி வரும்போதே அண்ணா படிச்சுட்டு வந்து கதையைச் சொல்ல, அண்ணாவிடம் சண்டை போட்டுக் கொண்டு சாம்புவைப் படித்த நாட்கள் மலரும் நினைவுகள்!   பின்னர் 15 வயதில் சித்தப்பா வீட்டில் தி.நகரில் தங்கி இருந்த காலத்தில் தான் தேவனின் கதைக்களஞ்சியம் முழுதும் அறிமுகம் ஆனது.   துப்பறியும் சாம்புவைத் தொடராகப் படித்ததும் அப்போது தான்.  முந்திரிப்பருப்புப் பருப்புத் தேங்காய் கதை சித்திரத் தொடரில் இல்லை என்றும் அப்போதே கண்டு கொண்டேன்.

  2. >> துப்பறியும் சாம்புவைத் தொடராகப் படித்ததும் அப்போது தான். முந்திரிப்பருப்புப் பருப்புத் தேங்காய் கதை சித்திரத் தொடரில் இல்லை என்றும் அப்போதே கண்டு கொண்டேன்.>>

    அட! எனக்கு அது நினைவு இல்லையே! உங்களுக்கு அபார ஞாபகசக்தி தான்! என்னிடம் அன்று இருந்த சித்திரத் தொடர் இன்றில்லை:-(( மேலும் அதைப் படிக்கும்போது ( 58-இல்) என்னிடம் ‘சாம்பு’ நாவலும் கையில் இல்லை… இப்போது சித்திரத் தொடர் கிடைத்தால், எந்தெந்த கதைகள் அதில் இல்லை என்று பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *