வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (4)

3

பவள சங்கரி

எல்லோரும் நல்லவரே!

சக மனிதர்களை பாரபட்சமின்றி நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். எவரையும், எக்காரணம் கொண்டும் வெறுத்தல் ஆகாது. அடிப்படையில் காழ்ப்புணர்ச்சியும், தோல்வி அச்சமும் கொண்டவர்களே அடுத்தவரை வெறுத்துப் புறக்கணிக்க எண்ணுகின்றனர். ஒருவரை வெறுக்கும்போது, நம் மனதில் அவரைப் பற்றி அடிக்கடி சிந்திக்க வேண்டிய தேவை ஏற்படுவதோடு, அவரால் நமக்கு பெரும் தீங்கு விளையப் போவதாகவும், அவர் நமக்கு பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும் எண்ணி தேவையில்லாமல் சுய பச்சாதாபம் கொள்ள வேண்டிய சூழலுக்கு ஆளாகிறோம். இந்த சுய பச்சாதாபம் என்பது நம் வெற்றியின் முக்கியமான ஒரு எதிரி எனலாம். தன்னம்பிக்கையை முற்றிலும் குலைக்கக்கூடியது. அது  மட்டுமல்லாமல் இந்த வெறுப்புணர்ச்சி, அதிகம் கோபம் கொள்ளுதல், பழி வாங்குதல், போன்ற செயல்களில் ஈடுபட்டு கால விரயம் ஏற்படச்செய்கிறது. அத்துடன் மனக்கவ்லை கொள்ளச்செய்து ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டுவிடும்.

நம்மை அடுத்தவர் வெறுக்கிறார் என்ற ஐயமும் கூட பலவிதமான கற்பனைக் குழப்பத்தை ஏற்படுத்தி நம்மைச் செயலிழக்கக் செய்யக்கூடும். பலர் தங்கள் மனதில் உள்ள வெறுப்பைக் காட்டாமலே சம்பந்தப்பட்டவரிடம் நைச்சியமாகப் பேசி தங்கள் காரியத்தை சாதித்துக்கொள்ள முற்படுவார்கள். ஆயினும் ஏதோ ஒரு சிறு செயலில் தன்னையறியாமல் அது வெளிப்பட்டுவிடும். அப்படி ஒருவரை கண்டுகொள்ள நேர்ந்தால் இயன்றவரை அவர் மனம் புண்படாதவாறு அவரைவிட்டு விலகிவிடுதலே சிறந்த தீர்வாகும். இப்படிச் செய்வதால் தேவையற்ற மன உளைச்சலிலிருந்து தப்பிக்கலாம்.

மறதி என்பது மனப்புண் ஆற்றுமோர்  சிறந்த மருந்து!

நம் மனதைப் பாதித்த சம்பவங்களை முற்றிலும் மறக்க முயற்சிப்பதே அதன் தொல்லையிலிருந்து விடுபடும் உபாயம். இது சற்று கடினமான செயல்தான் என்றாலும் சில அற்ப விசயங்களுக்காக நம் பொன்னான நேரத்தை விரயமாக்குவது தேவையற்றது. சில ஆண்டுகளுக்கு முன் நமக்கு நடந்த ஒருசில சம்பவங்கள் அன்று நம்மை பெரிதும் பாதித்திருக்கக்கூடும். வாழ்நாளில் என்றுமே அதை மறக்க முடியாத ஒன்று என்றுகூட எண்ணியிருப்போம். ஆனால் இன்று அதை நினைக்கும் போது அது திரை மறைவில் நிழலாடும் ஓவியம் போன்றே தோன்றும். அதையும் கட்டாயமாக நினைவில் கொண்டு வந்தால்தான் பிடிபடும். எப்படியும் காலம் ஒரு நாள் அதை மறக்கச் செய்யப்போகிறது என்று உறுதியாக தெரியும் போது அப்படிப்பட்ட ஒன்றிற்காக மனதை வருத்திக் கொள்வதைவிட அதிலிருந்து விடுபட்டு அதனை முற்றிலும் மறக்க முயற்சிப்பதே சிறந்தது அல்லவா.. நல்ல ஆக்கப்பூர்வமான சிந்தைகளை உரமிட்டு வளர்ப்பது போல தேவையற்ற நினைவுகளை புறந்தள்ளி அதனை முற்றிலும் நம் நினைவுகளிலிருந்து அகற்றி விடுதலே வெற்றிக்கான அடுத்தபடியை நெருங்கும் வழி அல்லவா.

தொடருவோம்

படத்திற்கு நன்றி:

http://inspirational-images.tumblr.com/

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (4)

  1. பவள சங்கரியின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். நாம் ஒவ்வொருவரும்

    இதனை முயற்சித்தால் வாழ்க்கையின் வெற்றிக் கனியை சுவைக்கலாம்.

  2. அன்பின் உமா சங்கரி,

    வாழ்த்திற்கு மிக்க நன்றி. சரியாகச் சொன்னீர்கள்.

    அன்புடன்
    பவள சங்கரி

  3. அற்புதமான கருத்துக்கள். ‘இதுவும் கடந்து போகும்’ என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால், வெறுப்புகளைக் கடப்பது எளிதாகும், வெற்றிக்கனி நம் வசமாகும் என்பதை அற்புதமாக விளக்கும் வைர வரிகள். பகிர்விற்கு மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *