திவாகர்

’காட்ஸ் மஸ்ட் பி க்ரேஸி’ என்றொரு நகைச்சுவை நிறைந்த ஆங்கிலத் திரைப்படம், நிறைய பேர் பார்த்தே இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆதிவாசிகளின் இல்லற வாழ்வையும் அவர்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு சுமுகமாகவும் கவலையில்லாத வாழ்வையும் காலம் காலமாக அனுபவித்து வருபவர்கள். அப்படிப்பட்டோரில் இனிய வாழ்க்கையில் வானில் பறந்த ஒரு குட்டி விமானி தான் காலி செய்த கோகோ கோலா பாட்டில் வீசப்பட்டு அது உடையாமல் இவர்களுக்குக் கிடைப்பதன் மூலம் இந்த எளிய மக்கள் வாழ்வில் கலவரத்தை உண்டு பண்ணுவதையும், தங்கள் சண்டைகளுக்கெல்லாம் காரணம் இந்த பாட்டில் எனும் பிசாசுதான் என்று அவர்கள் தலைவர் அந்த காலி பாட்டிலை தொலைவில் உள்ள கடலில் எறிந்து வர முடிவு செய்வதும், அவர் அப்படி காட்டில் செல்லும்போது இந்த நாகரீக மக்கள் மூலம் ஏற்படும் கூத்துகளும்தான் படம்.

இந்தப் படம் பார்க்கிற (பகுதி 1,2) அத்தனை பேரும் அந்த காட்டுவாசிகள் வாழ்க்கையின் நேர்த்தியினைப் பார்த்து பொறாமைப் படுவார்கள். அத்தனை ஒற்றுமை. அதுவும் அந்தப் படத்தின் இரண்டாவது பகுதியில் (காட்ஸ் மஸ்ட் பி கிரேஸி -2) சிறு ஆதிவாசிக் குழந்தைகள் இருவர் ஒருவரை ஒருவர் ஒவ்வொருமுறையும் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும்போதும் சரி, முடிவில் பிரிந்த குடும்பத்தினர் ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து தங்கள் பாசத்தைக் காட்டும் விதத்திலும் சரி, அந்தக் கணங்கள் நம் கண்களை நனைக்கும்.

நாகரீகம் அடைந்து விட்டோம் என்று சொல்கிற நாம்தான் இன்னமும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டும், அடுத்தவர் பற்றி அக்கறை கொள்ளாமல் சுயநலமிக்கோராகவும் அன்பு, பண்பு,  பாசமிழந்து, நல்லுணர்ச்சிகள் ஒவ்வொன்றாக மறந்து கொண்டும் நம் நல் வாழ்க்கையை  வீணாக்கிக் கொள்கிறோம் என்றுதான் படுகிறது. நாம் தற்சமயம் வாழும் வாழ்க்கையால் யாருக்குதான் என்ன பயன் என்ற கேள்வியும் கேட்கத் தோன்றுகிறது.

இந்தக் கேள்வி திரு சத்தியமணிக்குத் தோன்றியிருக்க வேண்டும் என்றுதான் படுகிறது. இல்லாவிட்டால் இத்தகைய கேள்விகளை அவர் எழுப்பியிருப்பாரா..

பார்வை முன்னால் நடக்கும் கொடுமை
பாராதிருப்பதில் பயன் என்ன ?
சால்வை மூடிட வலம்வர கொடியோர்
சாடாதிருப்பதில் பயன் என்ன?
வேர்வை சிந்திட உழைத்தார் வறுமை
வீழாதிருப்பதில் பயன் என்ன?
போர்வை போர்த்திட ஒளிந்தார் கோழை
வாழ்க்கை நடத்திட பயன் என்ன?

படிப்பை கொடுத்தோ சொத்தை சேர்த்தோ
அடுத்த தலைமுறை வாழ்ந்திடவே
சிறப்பை காட்டும் பெற்றோர் முயற்சி
எடுத்த வழிமுறை வீணாமோ
பாதி வஞ்சம் மீதி இலஞ்சம்
வளர்ந்திட‌ சமைத்தார் தன்காலம் ?
நீதி நேயம் நியாயம் தர்மம்
அழித்திட கொடுத்தார் வருங்காலம் ??

இதில் வேடிக்கை என்னவென்றால் நாம் கெட்ட வார்த்தையாக ‘காட்டுமிராண்டித்தனம்’ என்று காட்டுவாசிகளின் வாழ்க்கையைப் பயன் படுத்துகிறோம். ஆனால் என்ன பயன்.. நாம்தான் உண்மையில் பயனில்லாத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?

சிந்தனையைத் தூண்டும் நல்ல கேள்விகளைத் தொகுத்து எழுப்பிய திரு சத்தியமணியை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து வல்லமை குழுவினர் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடைசி பாரா: வருணன் எழுதிய பூக்களுதிர்காலம்

உதிர்ந்து கருகிய பூக்களின் சாம்பலுக்கிடையே
முட்டித் துளிர்த்தது
நட்பெனும் ஒரு பூ
வையம் பூக்களின் காடானது
மீண்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “இந்தவார வல்லமையாளர்

  1. வாழ்க நின் எழுத்து பெருகவே!!

  2. பயன் என்ன?  பயன் என்ன? எனக் கேள்விகளால் துளைத்தெடுத்து சிந்திக்க வைத்ததனால் இந்த வார வல்லமையாளராகும் கவிஞர்  திரு சத்தியமணி அவர்களுக்கும், நட்பெனும் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே  என்று விரும்பி எழுதியதால் கடைசி பத்தியில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்ட  வருணன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ….. தேமொழி 

  3. சேருமிடமே சிறப்பு. 
    பூவாயினும், பூவையாயினும்,
     நதியாயினும், நட்பாயினும்
    சேருமிடமே சிறப்பு.
    பொழியும் இடமே சிறப்பு
    கவியாயினும் கார்முகிலாயினும்
    கலையாயினும் அன்பாயினும்
    பொழியும் இடமே சிறப்பு
    வல்லமை மின்னிதழின் நிர்வாகக் குழு உறுப்பினர்களின்
    அன்புக்கும் ஆதரவுக்கும் எம் பணிவான் நன்றிகள்
    இணயதள தோழமை மூலம் தரமான‌
    வல்லமை மையத்தை  கட்டிய காட்டிய திரு அண்ணாகண்ணன் அவர்களுக்கு
    நன்றி கலந்த வாழ்த்துக்கள்
    வாழியத் தமிழ் வாழிய வையகம்

  4. இந்த வார வல்லமையாளர் திரு.சத்தியமணி அவர்களுக்கும், வையகத்தையே பூக்களின் காடாகக் கண்ட திரு.வருணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  5. கேள்வியில் பதில் வைத்து

    கேட்டாய் நீ.

    பாசறையின் முத்திரையை

    பதித்தாய் நீ.

    “அறம் செய விரும்பு”

    உன் அவையின் வாசகம்.
    “நிதம் செய விரும்பு” உன் சொல்லின் விளக்கம்

  6. இந்த வார வல்லமையாளர் திரு. சத்தியமணி அவர்களுக்கு வாழ்த்துகள்! வாழ்த்துகளோடு நிறுத்திவிடாமல், உங்கள் அனுமதியின்றி சில மாற்றங்களுடன், உங்கள் வரிகளைக் கொண்டே உங்களுக்கு நன்றி தெரிவிக்க எண்ணினேன்: 

    “கவிதைக்கு நன்றி.. கவிதந்த கவிக்கு நன்றி
    கவிதந்த தமிழுக்கு நன்றி.. தமிழ் காக்கும் ‘கவி சத்தியமணிக்கு’ நன்றி”.

    கடைசி பாராவில் இடம்பிடித்த வரிகளின் சொந்தக்காரர் வருணன் அவர்களுக்கும் வாழ்த்துகள்!  

Leave a Reply to சச்சிதானந்தம்

Your email address will not be published. Required fields are marked *