இலக்கியம்கவிதைகள்

முதுமைப் பூங்காற்று

 

முதுமைப் பூங்காற்று

 

மெல்லிய ஒளியுடன் மெதுவாய்த் தோன்றும்,

மாலை வானின் மதியம் போல,

மேன்மை பொருந்திய எந்தை தாயிடம்,

முதுமை மெல்ல அரும்பி யதோ?

 

மழலை என்னும் வேடம் அணிந்து,

மானுட வாழ்வை மண்ணில் அடைந்து,

மார்போ டணைக்கும் பெற்றோ ரன்பால்,

மான் போல் துள்ளி மகிழ்ந்தீரே!

 

மிளிரும் இளமை வேடம் பூண்டு,

மணவாழ் வென்னும் வேதம் கண்டு,

மாயம் நிறைந்த உலகை வென்று,

மயக்கம் இன்றி வாழுகின் றீர்!

 

பெற்றோ ரென்னும் புதிய வேடத்தைப்,

பொறுப்புடன் ஏற்று மக்களைக் காத்து,

தங்களைப் பெற்றவர் பெருமிதம் கொள்ள,

பண்புடன் வாழ்க்கை நடத்து கின்றீர்!

 

தொழில் என்னும் தோணியில் ஏறி,

வாழ்வென்னும் கடலைக் கடந்தீரே அன்றிப்,

பொருள் சேர்க்கும் ஆசை வலையில்,

ஒருநாளும் வீழாமல் இருக்கின் றீர்!

 

தங்கள் பெற்றோர், தங்கள் கடமை,

தரணியில் முடித்துச் சென்ற பொழுது,

தேய்பிறைத் திங்கள் போல் துவண்டாலும்,

தெளிவுடன் நின்ற உங்களை அறிவேன்!

 

நிழலில் உலர்த்திய மாவிலை போல,

உங்கள் மேனியின் சுருக்கம் கண்டு,

தணலில் விழுந்த புழுவைப் போல,

எந்தன் இதயம் துடிக்கின் றேன்!

 

மெல்லிய ஒளியுடன் மெதுவாய்த் தோன்றும்,

மாலை வானின் மதியம் போல,

மேன்மை பொருந்திய எந்தை தாயிடம்,

முதுமை மெல்ல அரும்பி யதே!

 

சச்சிதானந்தம்

Print Friendly, PDF & Email
Share

Comments (7)

 1. Avatar

  பெற்றோர் நமக்காக பாடும் பாட்டு
  தாலாட்டு.
  பிள்ளைகள் பெற்றோருக்காக பாடும் பாட்டு
  இந்தப்பூங்காற்று.

  மெலிதாய் நெஞ்சை வருடியது. வாழ்த்துக்கள் கவிஞரே.

 2. Avatar

  முதுமை கண்ட போதும் நெஞ்சில் கனிவும் பாசமும் கொண்டு, தம் மக்கள், சுற்றம் தளர்வில்லாமல் பேணும் பெற்றோர்களின் அன்புக்கு நிகர் எது உண்டு?. மாலை வானின் மதியம் போல் முதுமை அரும்பும் உவமை அழகு. கவிதை படிக்கும் போது மனம் நெகிழ்ந்து, நிறைந்தது. மிக்க நன்றி.   

 3. Avatar

  @ திருமதி. பார்வதி இராமச்சந்திரன் அவர்களே,

  கவிதைகளைப் படித்துத் தொடர்ந்து தங்களது ஆக்கப் பூர்வமான கருத்துக்களைக் கூறிவரும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
  @ தனுசு அவர்களே,

  கவிதையைப் படித்து வாழ்த்துக்களைத் தெரிவித்த தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

 4. Avatar

  Kavithai pramatham thodarnthu eluthavum. Adutha kavithiyel santhippom

  Akka
  Geetha

 5. Avatar

  கவிதை அருமை…..வாழ்த்துகள் !!!!

 6. Avatar

  தாய்க்கு முதுமை வரலாம் ஆனால்
  தாய்மை முதுமை எய்தாது -சு
  வாசத்திற்கு மூப்பு வரலாம் ஆனால்
  பாசத்திற்கு  முடிவுகள் ஏது ?
  மகன் விளம்பிய தாலாட்டிற்கு
  தமிழ் இயம்பிய  பாராட்டு !!

 7. Avatar

  கவிதையைப் படித்து வாழ்த்துக்களைத் தெரிவித்த திருமதி. கீதா, திருமதி.தமிழ்முகில் நீலமேகம் மற்றும் திரு.சத்திய மணி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Leave a Reply to சச்சிதானந்தம் Cancel reply