மேகலா இராமமூர்த்தி

 

இடது பதம்தூக்கி ஆடியே என்னுளத்தில்

இன்பகீதம் இசைத்தா னடி!

விடமுண்ட கண்டனாம் விண்ணுலக வேந்தனாம்

விந்தையென்ன சொல்வே னடி!

 

நடராசன் என்றபெயர் கேட்டிட்ட நாள்முதலாய்

நங்கைஎன்பேர் மறந்தே னடி!

கடலளவு ஆசைதான் அவன்மீது பெருகுதே

கன்னியென்னைக் காண்பா னோடி!

 

உண்ணவும் மறந்தேனே உன்மத்தம் கொண்டேனே

உறக்கத்தைத் தொலைத்திட் டேனே

கண்காட்டும் பொருளெல்லாம் பரம்பொருளாய்த் தோன்றுதே

கண்கட்டு வித்தை என்பதோ?

 

தில்லையிலே கோயில்கொண்டு திருநடம் புரிபவன்என்

உள்ளமதில் உறைந்தா னடி!

வல்லிஎந்தன் நெஞ்சிலே நேற்றுவந்த கனவினில்என்

நாதனைக் கண்டே னடி!

 

புலியாடை தரித்தவனோ புன்னகைதான் சிந்திட்டான்

பேரின்பம் கொண்டே னடி!

சிலசொற்கள் அவனும்தான் செந்தமிழில் செப்பிட்டான்

செவியினிலே தேன்பாய்ந் ததே!

 

எத்தனை பிறவிகள்நான் எடுத்தாலும் பிறையணிந்த

மன்னனை மறவே னடி!

நித்தமும் ஐந்தெழுத்தை ஓதியே மகிழ்ந்திடுவேன்

சித்தம்களி கொள்ளு மடி!

பதிவாசிரியரைப் பற்றி

11 thoughts on “நாதனைக் கண்டேனடி!

  1. ஆகா, எப்படி இப்படி? நாவுக்கரசரின் தேவாரப் பதிகத்தில் வரும் தலைவி பாடுதாகவே அல்லாவா ஒரு பாடல் எழுதிவிட்டீர்கள் மேகலா. யாராவது இதற்கு இசையமைத்து, பாடி, அபிநயம் பிடித்து ஆடிவிடக் கூடாதா என்ற ஏக்கம் வருகிறது. அது போன்று காட்சி வடிவம் கொடுப்போர் கையில் இந்தப் பாடல் சென்று சேர்ந்திட விரும்புகிறேன். மிகவும் அருமை என்று சொல்வது எனக்கு பாராட்ட சரியான வார்த்தைகள் கிடைக்கவில்லை என்பதைத்தான் குறிக்கிறது.

    அன்புடன்

    ….. தேமொழி

  2. கவிதையை மிகவும் இரசித்துப் பாராட்டியுள்ள தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தேமொழி!

    –மேகலா

  3. ஒவ்வொரு வார்த்தையிலும் கவி நயம் மின்ன எழுதிய கவிதை அருமை. சிதம்பரம் நடராஜர் கோயில் என் சின்ன வயதில் பள்ளி நன்பர்களொடு அதிகம் சுற்றிய இடங்களில் இதுவும் ஒன்று.மீண்டும் பழைய நினைவுகளை கொண்டுவந்தது இந்த கவிதை. நன்றி.

  4. அருமை, மேகலா. வாழ்த்துகள்!!

  5. குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்
    பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும் இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே !
    இந்த தமிழ்ப் பாவிற்கு ஏற்ப ஒரு நாட்டியப் பாடலை எழுதிய மேகலாவுக்குப் பாராட்டுகள். பாட்டுக்குப் பரத நாட்டியம் ஆட வல்லமையில் நாட்டியப் பேரொளி கவிநயா இருக்கிறாரே ! பாடக் கனடா நண்பர் ஓவிய மணி, ஆர்.எஸ். மணி இருக்கிறாரே.

  6. தில்லையிலே கோயில்கொண்டு திருநடம் புரிபவன்என்

    உள்ளமதில் உறைந்தா னடி!

    வல்லிஎந்தன் நெஞ்சிலே நேற்றுவந்த கனவில்எனை

    வசீகரம் செய்தா னடி !

    இப்படி இருக்கலாமா மேகலா

  7. தாங்கள் குறிப்பிட்டபடி எழுதியிருந்தால் கவிதை இன்னும் நன்றாக இருந்திருக்கும் என எண்ணுகிறேன். தங்கள் எண்ணத்தை வண்ணமுறச் சொன்னதற்குப் பாராட்டுக்களும், நன்றிகளும் ஐயா.

    –மேகலா

  8. ‘நாயகி’ பாவம் அற்புதமாக வெளிப்படுகிறது. பிறையணிந்த நாயகனைக் கண்ட நாள் முதலாய் தன்னை மறந்து சிந்தை பறிகொடுத்த மங்கையவள் உள்ளக்கிடக்கை செந்தமிழ் சொற்களாய் தித்திக்க தித்திக்க வெளிப்பட்டிருக்கிறது. கவிதையின் நிறை வரிகள், பக்தியின் தத்துவம் சொல்கிறது. அற்புதம் மேகலா அவர்களே!!!. 

  9. பாராட்டுரை வழங்கிய திரு. தனுசு, திரு. மாதவன் இளங்கோ, திருமதி. பார்வதி இராமச்சந்திரன் ஆகியோர்க்கு என் நன்றிகள்.

    –மேகலா

  10. பக்தி சிருங்காரம் என்ற பிரிவில் பக்தியும் காதலும் கலந்து குழைந்து வரும் அற்புதமான வரிகள். நாட்டியத்திற்கு ஏற்ற வரிகள். சொல்லாட்சியும் வரிகள் அமைந்த விதமும் நாட்டிய குரு திரு. தண்டாயுதபாணிபிள்ளை அவர்களையும் மகாகவி பாரதியையும் நினைவூட்டுகின்றன. பாராட்டுகள். வாழ்த்துகள்.

  11. கவிதையைப் பாராட்டிய சசிரேகா பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ..மேகலா

Leave a Reply to சி. ஜெயபாரதன்

Your email address will not be published. Required fields are marked *