மரபுவழி அறிதலில் தாய்க்குலத்தின் பங்கு

8

தேமொழி

உலக வரலாற்றில் பெண்களின் பங்களிப்பு; அவர்கள் தாங்கள் வாழும் சமுதாயத்திற்கு ஆற்றும் பணிகள் சரியான முறையில் மதிக்கப்படுவதில்லை என்றும், அவர்களது திறமைகள் அங்கீகரிக்கப் படுவதில்லை என்ற குறைபாடும் காலம் காலமாகப் பெண்களாலும், அவர்கள் நலம் விரும்பும் ஆண்கள் சிலராலும் எடுத்துரைக்கப்படுகிறது. எனினும் பெண்களின் பங்களிப்பு எந்த அளவு இன்றியமையாததாக இருக்கிறது என்பதினை மறுக்க முடியாத அறிவியல் ஆதாரங்கள் உண்டு. புவியில் தோன்றி, அதனை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருப்பதன் காரணமாக மற்ற உயிரினங்களை விட மேம்பாடு அடைந்த வாழ்வினை வாழ்வது மனித இனம். சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தங்களது வாழ்க்கை முறையை மாற்றி வாழும் பிற உயிரினங்கள் போல அல்லாது, சூழ்நிலையை ஒரளவுக்கு தங்கள் வாழ்விற்கு ஏற்றவாறு மாற்றும் திறன் கொண்டது மனித இனம்.

இந்த மனித இனம் தங்கள் வரலாற்றை, பரிணாம வளர்ச்சியைப் பற்றி ஆராய விரும்பும் பொழுதோ பெரிதும் உதவுவது பெண்கள்தான். பெண்களின் மரபணுவின் அடிப்படையிலான பரம்பரை ஆராய்ச்சியே மனித குலத்தின் ஆரம்பக் கால வாழ்க்கையையும், உலகம் முழுவதும் அவர்கள் பரவிய வரலாற்றையும் அறிய விரும்பும் பொழுது உபயோகப் படுத்தப் படுகிறது. ஆண்களின் மரபணு வழி ஆராய்ச்சியைவிட, ‘ஆணித்தரமான அறுதியிட்டுக் கூற உதவுவது’ பெண்களின் மரபணு வழி ஆராய்ச்சி முடிவுகளே. இதற்கு உதவுவது பெண்களின் உடல் செல்களில் உள்ள மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ (mtDNA) ஆகும். மைட்டோகாண்ட்ரியாவினை ஆண் பெண் இருபாலரும் கொண்டிருகிறார்கள். இருந்தாலும் ஏன் பெண்களின் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ மட்டுமே பரம்பரை வழி ஆராய்சிகளில் அதிகம் பயன் படுத்தப் படுகிறது என்பதனையும், செல்லில் உள்ள நியூகிலியஸின் டி.என்.ஏ வைவிட, மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ எந்த அடிப்படையில் பரம்பரை வழி ஆராய்ச்சிக்கு உதவுகிறது என்பதையும் விளக்க முற்படுகிறது இக்கட்டுரை.
[மைட்டோகாண்ட்ரியா (mitochondria) தமிழில் “இழைமணி” அல்லது “இழைத்தணுக்கு” என குறிப்பிடப்பட்டாலும், பரவலாக மைட்டோகாண்ட்ரியா என்றே அறியப்பட்டுள்ளதால் இக்கட்டுரையில் மைட்டோகாண்ட்ரியா என்றே குறிப்பிடப்படுகிறது. அவ்வாறே தமிழில் ‘ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்’ என வழங்கப்படும் (Deoxyribonucleic acid – DNA) டி.என்.ஏ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இதே காரணத்தின் அடிப்படையில் மற்றும் சில அறிவியல் பதங்களும் தமிழ்ப் பதங்களாகக்  கொடுக்கப்படுவது தவிர்க்கப் பட்டுள்ளது, எனவே வாசகர்கள் மன்னிக்கவும்.]

மனித குல வரலாறு:
பரிணாம வளர்ச்சி (evolution) ஆராய்ச்சிகளும், படிம (fossil) ஆராய்ச்சிகளும் உலகின் முதல் நாகரீக வளர்ச்சி அடைந்த ‘ஹோமோ சாப்பியன்ஸ்’ (Homo sapiens) என்னும் மனித இனம் தோன்றியது ஆஃப்ரிக்காவின் ‘எதியோப்பியா’ (Ethiopia) பகுதியில் சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன்பு எனத் தெரிவிக்கிறது. பிறகு, அங்கேயே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த மனித இனம், சுமார் 60,000 இல் இருந்து 70,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஃப்ரிக்காவை விட்டு வெளியேறி உலகம் முழுவதும் பரவ எத்தனித்தது. இந்த வெளியேற்றத்திற்குக் காரணம் சுற்றுப் புறச் சூழலில் ஏற்பட்ட வாழ முடியாத சில மாறுதல்களாக இருக்கலாம் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள். அக்காலத்தில் மக்கட் தொகை 10,000 ஆகவும் குறைத்திருக்கலாம் என்றும் கணக்கிடப் பட்டுள்ளது. உலகில் ஏற்பட்டக் கடுங் குளிர் காலமும், உறைபனி காலமும் (ice age) மனித குலத்தின் இந்தப் பரவலுக்குக் காரணமாகக் கருதப்பட்டு, இந்தப் பரவல் ‘ஆஃப்ரிக்காவில் இருந்து வெளியற்றம்’ (‘Out-of-Africa’ theory) என்ற கோட்பாடாக விளக்கப் படுகிறது. இது நிகழ்ந்தது ‘ப்ளிஸ்டோஸின்’ காலத்தின் இறுதியில் (Late Pleistocene Era). இந்த மனிதகுலப் பரவலை மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. (mtDNA)வின் உதவியுடன், மனிதர்களின் தாய்வழிப் பாரம்பரியத்தை (Maternal Ancestry) ஆராய்வதன் வழியாக அறியப்பட்டுள்ளது.

மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. (mtDNA) என்பது என்ன?
செல்களில் உள்ள மைட்டோகாண்ட்ரியாவின் பங்கு, வளர்சிதை மாற்றத்தில் (metabolism) உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுப்பதாகும். ஆண், பெண் இருவர் உடலில் உள்ள செல்களிலும் மரபுவழிக் கட்டளைகளைக் கொண்ட மரபணு மூலக்கூறு டி.என்.ஏ. உள்ளது. பெரும்பான்மையான டி.என்.ஏ. செல்லில் உள்ள ‘நியூகிலியஸ்’ (nucleus) இல் இருந்தாலும், செல்லின் உட்காருவான நியூகிலியசைச் சூழ்ந்துள்ள சைட்டோபிளாசத்தில் (cytoplasm) உள்ள நுண்மமான மைட்டோகாண்ட்ரியாவிலும் அவை உள்ளது. இது ‘மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ.’ (mtDNA) என அழைக்கப் படுகிறது.

ஒவ்வொரு மைட்டோகாண்ட்ரியாவிலும் பல மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. நகல்கள் உள்ளன. அத்துடன், ஒவ்வொரு செல்லிலும் பல மைட்டோகாண்ட்ரியாக்கள் உள்ளன. எனவே செல்லின் நியூகிலியஸில் உள்ள ஒரே ஒரு இழையான டி.என்.ஏ. அளவைவிட, மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வின் அளவு செல்லில்அதிகம். அளவில் அதிகமாக இருப்பதாலும், அத்துடன் அது நியூகிலியஸின் டி.என்.ஏ. போல எளிதில் சேதமடையாப் பண்பினைப் பெற்றிருப்பதாலும் பெரும்பான்மையான அகழ்வாராய்ச்சிகள் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வை ஆதாரமாகக் கொண்டுள்ளன.

ஆண், பெண் இருவர் உடலிலும் உள்ள மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வானது அவர்களது தாயிடம் இருந்து பெறப்பட்டது. அத்தாய்க்கு கிடைத்த மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. அவளது தாயிடம் இருந்து வந்தது. இவ்வாறு தாய் வழியாகாவேப் பெறப்படுவதன் காரணம் இனப்பெருக்க நிகழ்வு அமைந்துள்ள முறையினால் ஆகும்.

இனப்பெருக்கத்தின் பொழுது, ஆண்விந்துவும் (sperm), பெண் முட்டையும் (egg), இணைந்து கருமுட்டை (zygote) உருவாகிறது. தலைப்பிரட்டை (tadpole) வடிவில் உள்ள ஆண் விந்து முட்டையை நோக்கி நீந்துவதற்கு அதன் வால் உதவுகிறது. விந்துவின் இந்த வால் பகுதி, நீந்த சக்தியைக் கொடுக்கும் மைட்டோகாண்ட்ரியாவைக் கொண்டிருக்கிறது. முட்டையை அடைந்து விந்துவின் நியூகிலியசைக் கொண்ட தலைப்பாகம் உள் நுழைகிறது. காரியம் முடிந்தவுடன் தேவையட்ற விந்துவின் வால் பகுதி கழற்றி விடப் படுகிறது. அத்துடன் வால் பகுதியில் இருந்த (தந்தை வழியாகப் பெறப் பட வேண்டிய) மைட்டோகாண்ட்ரியாவும், அதிலுள்ள மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வும் கரு முட்டையில் இடம் பெறாமல் போய் விடுகிறது. இதனால் ஆணின் சைடோப்லாஸத்தில் இருக்கும் மைட்டோகாண்ட்ரியாவின் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வானது சந்ததியின் செல்களில் இடம் பெறுவதில்லை. சந்ததிகளில் செல்களில் தாயின் வழி வந்த மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. மட்டுமே இருக்கும்.



நியூகிலியஸின் டி.என்.ஏ. போல அல்லாது மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. தாய்வழி மரபு மட்டும் என மாறுபட்டிருப்பதன் காரணம் இதுதான். மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. தாயிடம் இருந்து சந்ததிகளுக்குச் செல்கிறது, ஆண் பெறுவது தாயின் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ., ஆனால் இதனை ஆணால் தனது சந்ததிகளுக்குத் தர இயலாது. மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. பெண்களின் வழியாகவே ஒவ்வொரு சந்ததியையும் சென்றடைகிறது.

தாய்வழிப் பாரம்பரியத்தை அறிதலில் “மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ.” வின் பங்கு:
பொதுவாக இனப்பெருக்கத்தின் பொழுது தாயின் பாதி மரபணுக்களும், தந்தையின் பாதி மரபணுக்களும் ஒன்றாகக் கலப்படையும். ‘ஜான் கிரிகர் மெண்டல்’ (Johann Gregor Mendel) இதனை விளக்கியதால் இந்தக் கலப்பு முறை ‘மெண்டலியன் கலப்பு’ என விளக்கப் படுகிறது. ஆனால் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. இது போன்ற எந்த ஒரு மாற்றமும் இன்றி பரம்பரைப் பரம்பரையாக அப்படியே தாயிடமிருந்து சந்ததிகளின் வழி தொடரும். அதனால் நம் உடலில் இருக்கும் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வானது, நம் கொள்ளுப்பாட்டிக்கும், கொள்ளுப்பாட்டிக்கும், கொள்ளுப்பாட்டியான பெண்ணிடமிருந்த மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வின் நகலே ஆகும். இவ்வாறு பல 100 அல்லது பல 1000 தலைமுறைகளுக்கும் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. மாறாமலே இருக்க வாய்ப்புள்ளது. இதனால் நமது மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வை நாம் அறிந்து கொண்டால், அது பல ஆயிரம் தலைமுறைகளுக்கு முன்பிருந்த நமது பாட்டி ஒருவரின் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வினை அறிந்து கொள்வதற்கு ஒப்பாகும். இவ்வாறு மரபு வழியை அறிந்துணர்வது ‘மனித மைட்டோகாண்ட்ரிய மரபியல்’ (human mitochondrial genetics) என மரபியல் துறையில் வகைப் படுத்தப் படுகிறது.

காலப்போக்கில் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வில் ஏற்படும் ‘மரபணு திடீர்மாற்றங்கள்’ (genetic mutation) சந்ததிகளுக்குத் தொடரும் பொழுது, அந்த மனிதக் கூட்டம் வேறு ஒரு இனமாக அல்லது குழுவாகப் பிரியத் தொடங்குகிறது. ஒரு மனித குழுவுக்கும் மற்றொரு மனித குழுவுக்கும் உள்ள மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வின் வேறுபாடுகளின் தொகுப்பு, மனித மரபியலில் “மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. ஹாப்லோக்ரூப்”(mitochondrial DNA haplogroup) என வரையறுக்கப் படுகிறது. இவ்வாறு மனித இனப் பரிமாண வளர்ச்சியில் கிளைகளாகப் பிரிவது ‘இனவரலாறு /இனவளர்ச்சி’ (phylogeny) என அறியப்படுகிறது. இவ்வாறு மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வின் உதவியுடன் தாய்வழி மரபின் பாரம்பரியத்தை (matrilineal inheritance) அறிந்து கொள்வதால், மனித இனம் ஃ ஆப்ரிக்காவில் தோன்றி எவ்வாறு உலகம் முழுவதும் பரவியது என்பது தெரிய வருகிறது.

மனிதனின் பரிணாம வளர்ச்சியை அறிந்துகொள்ள தாய்வழி மரபு முறை ஆராய்ச்சி மிகவும் உதவியுள்ளது. இவ்வாறு கண்டறியப்பட்ட முதுதாய் ‘மைட்டோகாண்ட்ரியல் ஏவாள்’ (Mitochondrial Eve) எனப் பெயரிடப்பட்டுள்ளாள். இந்த ஏவாள் இப்பொழுது வாழும் மனிதர்களுக்கான தாயாகக் கண்டறியப்பட்டவள் (most recent common ancestor – MRCA). இது போலவே ஆணின் Y- குரோமோசோம் (chromosome) டி.என்.ஏ. வழியாகக் கண்டறியப்படுவது ‘தந்தை வழி மரபு’ (patrilineal line studied by Y – DNA) என அறியப்படுபிறது. அவ்வாறு கண்டறியப்பட்ட முது தந்தை ‘ஒய் குரோமொசோமல் ஆதாம்’ ( Y-chromosomal Adam) எனவும் குறிப்பிடப்படுகிறான். இவர்கள் முன்னொரு காலத்தில் ஃஆப்ரிக்காவில் வாழ்ந்த நமது பொது மூதாதையர்கள் (common ancestor) ஆவார்கள்.

இந்த மரபியல் துறை ஆராய்ச்சியில், ஆங்கில எழுத்துக்களான A முதல் Z வரையான எழுத்துக்கள், ஒவ்வொரு மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. ஹாப்லோக்ரூப்பிற்கும் அடையாளமாகக் கொடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு பெயரிடப் பட்டதற்கு உயர்வு தாழ்வோ, தரவரிசை முறையோ, குழுக்களுக்கிடையே ஆன மரபணுத் தொடர்போ அடிப்படை அல்ல. எந்த வரிசைமுறையில் ஹாப்லோக்ரூப்கள் கண்டுபிடிக்கப்பட்டனவோ அந்த வரிசைமுறையிலேயே A – Z எனப் பெயரிடப் பட்டுள்ளது. நமது முது பெற்றோர்களின் ஹாப்லோக்ரூப் L. இந்த ஆதிகால மனிதர்களில் இருந்து மாறுபாடுகள் ஏற்பட்டு L0, L1, L2, L3, M, N, R எனப் பல குலங்கள் தோன்றி உலகம் முழுவதும் மனித இனத்தினர் பரவினர். இந்தக் குலப் பிரிவுகளையும் அவர்கள் பரவிய விதத்தையும் கொடுக்கப் பட்டுள்ள படங்களின் மூலம் அறியலாம். பெரிய ஹாப்லோக்ரூப் (macro-haplogroup) என இப்பிரிவுகள் அழைக்கப் பகுகின்ற. இப்ரிவுகளில் ஏற்படும் உப பிரிவுகள் ‘உப ஹாப்லோக்ரூப்’ (sub haplogroup) என அழைக்கப் படுகின்றன.

இந்தியாவின் மனித குலப்பிரிவுகள்:

இந்தியாவில் அல்லது தெற்காசியப் பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலும், அதாவது 60% த்தினர் M ஹாப்லோக்ரூப் வகையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் “ஏவாள்” > L1/L0 > L2 > L3 > M என்ற முறையில் வழித் தோன்றல்களாக உதித்தவர்கள். L3 ஹாப்லோக்ரூப் பிரிவிலிருந்து தோன்றியவர்கள் ஹாப்லோக்ரூப் M மற்றும் N குழுக்கள். M ஹாப்லோக்ரூப் பிரிவினத்தவரைத் தவிர N ஹாப்லோக்ரூப், மற்றும் அந்த N ஹாப்லோக்ரூப் வழித் தோன்றல்களாகிய R ஹாப்லோக்ரூப் பிரிவினரும் இந்தியப் பகுதியில் உள்ளனர். M ஹாப்லோக்ரூப் குலத்தினர் முதன் முதலில் ஆப்ரிக்காவை விட்டு வெளியேறி யவர்கள். கடலோரப் பகுதி வழியாக பயணம் செய்து இன்றைய இந்தியாவை அடைந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

ஆங்கிலேய மன்னன் மூன்றாம் ரிச்சர்ட் (English king Richard III) உடலின் எலும்புகளை மரபணு பரிசோதனையின் மூலம் அடையாளம் கண்டு தகுந்த முறையில் அடக்கம் செய்யவும், மறைந்த ரஷ்ய அரசப் பரம்பரையினரை  (Russian royal family) அவர்களது எலும்புகளின் மூலம் அவர்கள்தான் என உறுதிப் படுத்தவும் தாய்வழி மரபு மரபணுச் சோதனையே பயன்படுத்தப் பட்டது.

இந்த அறிவியல் தகவல்கள் உறுதிப் படுத்துவது யாதெனில், வரலாற்றினைத் திரும்பிப் பார்க்கும் பொழுது, மனித குலத்தின் வரலாற்றையே உணர பெண்ணகளின் பங்குதான் பெரிதும் உதவி புரிந்துள்ளது என்பதும், வரலாற்றில் அவர்களுக்கு அசைக்க முடியாத இடமும் முக்கியத்துவமும் உள்ளது என்பதும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.


உயிரைக் காக்கும்,உயரினைச் சேர்த்திடும்;
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;
உயிரு னும்இந்தப் பெண்மை இனிதடா!
ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே.
-பெண்மை, பாரதியார்

பெண்ணின் பெருமையை உணர்ந்து கொள்வோம்….
மகளிர் தின வாழ்த்துக்கள்……

தங்களது தாய்வழி மரபினை அறிய விரும்புவோருக்கானத் திட்டம்:
TO PARTICIPATE IN A GENOGRAPHIC PROJECT:
Geno 2.0 – Genographic Project
https://genographic.nationalgeographic.com/
Geno 2.0 – Genographic Project Participation and DNA Ancestry Kit
http://shop.nationalgeographic.com/ngs/browse/productDetail.jsp?productId=2001246&gsk&code=MR20944

______________________________________________

தகவல் ஆதாரங்கள்:
CONTENT SOURCES:
Human mitochondrial genetics –
http://en.wikipedia.org/wiki/Human_mitochondrial_genetics

Human mitochondrial DNA haplogroup –
http://en.wikipedia.org/wiki/Human_mitochondrial_DNA_haplogroups

mtDNA and its role in ancestry –
http://www.genebase.com/learning/article/17

Haplogroup M –
http://www.openthemagazine.com/article/living/haplogroup-m

More than a hunch: identifying Richard III with DNA –
http://theconversation.edu.au/more-than-a-hunch-identifying-richard-iii-with-dna-11999

மேலதிகத் தகவலுக்காக பரிந்துரை செய்யப்படும் ஆய்வு அறிக்கைகள்:
RESEARCH ARTICLES:
Deep Rooting In-Situ Expansion of mtDNA Haplogroup R8 in South Asia.
Thangaraj et al; PLoS ONE;2009, Vol. 4 Issue 8, p1
http://www.plosone.org/article/info:doi/10.1371/journal.pone.0006545

Phylogeography of mtDNA haplogroup R7 in the Indian peninsula.
Chaubey et al; BMC Evolutionary Biology 2008
http://www.biomedcentral.com/1471-2148/8/227

Phylogeny of Mitochondrial DNA Macrohaplogroup N in India, Based on Complete Sequencing: Implications for the Peopling of South Asia
Palanichamy et al; Am J Hum Genet. 2004 December; 75(6): 966–978.
http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1182158/

Mother’s curse: the effect of mtDNA on individual fitness and population viability.
Gemmell NJ, Metcalf VJ, Allendorf FW. Trends Ecol Evol. 2004 May;19(5):238-44
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/16701262

பட உதவி:
http://3.bp.blogspot.com/-kQRXiQhc_J0/ToN6yifvb_I/AAAAAAAABWI/UFJYPXs-P70/s1600/mDNA+migration+map+-+small.jpg
https://genographic.nationalgeographic.com/wp-content/uploads/2012/09/human-journey_940.jpg
http://64.40.115.138/file/lu/6/52235/NTIyMzV9K3szNDA1MDI=.jpg?download=1
http://64.40.115.138/file/lu/6/52235/NTIyMzV9K3szNDA1MTA=.jpg?download=1
http://leavingbio.net/HUMAN%20REPRODUCTION-WEB_files/image004.gif
http://katiephd.com/wp-content/uploads/2011/02/humanlifecyc.jpg
http://www.starchildproject.com/images/dna2011mtdnadiagram1.jpg
http://64.40.115.138/file/lu/6/52235/NTIyMzV9K3szNDA1Mzc=.jpg?download=1
http://jonciwolff.com/wp-content/uploads/2012/12/mitochondrialdna22.gif
http://upload.wikimedia.org/wikipedia/commons/c/c4/Peopling_of_eurasia.jpg
http://www.openthemagazine.com/sites/default/files/imagecache/435by290/article_images/8308.haima.jpg

 

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “மரபுவழி அறிதலில் தாய்க்குலத்தின் பங்கு

  1. தாய்வழிச் சமூகமே, மாந்த குலத்தை இனம் காணும் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ-வைத் (mtDNA) தன் உடல் செல்களில் கொண்டுள்ளது என்பதன் வாயிலாக, ’பெண்ணே மனிதகுலத்தின் மூலத்தை அறிய உதவுபவள்’ என்பது தெளிவாய்ப் புலப்படுகின்றது. அறிவியல் ஆதாரங்களுடன் இக்கருத்தை அருமையாய் நிறுவியுள்ள தேமொழிக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்!

    ஆதிகாலத்தில் நம் சமூகமே தாய்வழிச் சமூகமாகத்தான் (Matriarchy) இருந்துள்ளது. ‘கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை’ அவர்கள் தன்னுடைய ‘மருமக்கள் வழி மான்மியம்’ என்ற நூலில் நாஞ்சில் நாட்டில் முன்பு வழக்கத்தில் இருந்த மருமக்கள் வழிச் சொத்துரிமை பற்றிக் குறிப்பிடுகின்றார். இஃது தாய்வழிச் சமூக அமைப்பு முன்பு இருந்ததையே உறுதிப்படுத்துகின்றது. இடையில் பறிபோயிருந்த பெண்களின் சொத்துரிமை இப்போது மீண்டும் கிடைத்துள்ளது ‘பெண்ணுரிமை’ நிலைநாட்டப்பட்டு வருகின்றது என்பதன் அடையாளமே எனலாம்.

    -மேகலா

  2. கட்டுரையைப் படித்துப் பாராட்டியதுடன், உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி மேகலா.

    ….. தேமொழி

  3. தேமொழியின் மொழியறிவும் ஆராய்ச்சி அறிவும் அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. அட்டகாசம்!!. மேகலா அவர்கள் கூறியது போல், ‘மருமக்கள் தாயம்’ சென்ற நூற்றாண்டின் ஆரம்பம் வரை கேரளாவில் நிலவியிருந்தது. கேரள அரச மரபும் இதையொட்டியே அமைந்திருந்தது. ஒரு அரசருக்குப் பின் அவரது சகோதரி மகனே அரசுரிமை பெறுவார். வாழ்த்துக்கள் தேமொழி.

  4. உங்கள் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி பார்வதி.  

    ….. தேமொழி 

  5. I’m really impressed with your writing skills and also with the layout on your weblog. Is this a paid theme or did you customize it yourself? Either way keep up the nice quality writing, it’s rare to see a great blog like this one today..

  6. நான் கொஞ்சம் சோம்பேறி. இப்போது தான் படித்தேன். நல்லதொரு ஆய்வு, முனைவர் தேமொழி. வாழ்த்துக்கள்.
    இன்னம்பூரான்

  7. தங்கள் பாராட்டிற்கு நன்றி அன்பு adwokat pszczyna  அவர்களே. 
    தொழில்முறை எழுத்தாளர்களுக்கிடையே தன்னார்வத்துடன் எழுத்துலகில் பங்கு பெறும் என்போன்றோருக்கு, உங்களைப்போன்று கருத்துரைப்பதற்கெனத் தங்களது நேரத்தினை ஒதுக்கி ஊக்கப்படுதுபவர்களின் முயற்சி மிகவும் உற்சாகமூட்டுகிறது. மிக்க நன்றி.
    அன்புடன் 
    ….. தேமொழி 
      

  8. தொடர்ந்து எனது கட்டுரைகளைப் படித்து, கருத்துக்களைப் பகிர்ந்து ஊக்கமூட்டும் அன்பு இன்னம்பூரான் ஐயாவிற்கு மனமார்ந்த நன்றி.
    அன்புடன்
    ….. தேமொழி

      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *