திவாகர்

சில ஆண்டுகளுக்கு முன்பு அலிகாரில் இருந்த பத்திரிகை நண்பர் மூலம் ஒரு தொலைபேசி. ஒரு தெலுங்கு சிறுவன் ஒருவன் உத்திரப்பிரதேசத்தில் அடிமை முறையில் வேலை செய்வதாகவும் அங்கிருந்து தப்பித்து போலீஸில் சிக்கியதாகவும், அவனிடம் பேச்சுக் கொடுக்க முடியவில்லை, சரியாக பேசமுடியவில்லை, திகிலும், பயமும் அதிகமாக உளறிக்கொண்டே இருக்கிறான்.. தெலுங்கு பாஷையாகத்தான் இருக்கவேண்டும், பக்கத்தில் அனகாபள்ளி என்று ஏதாவது ஊர் இருக்கிறதா என்று விசாரியுங்கள், அங்கு போலீஸ்  ஸ்டேஷனில் விசாரிக்கவும் என்று கோரிக்கை வந்தது. இந்தப் பையனுக்கு ஆறு வயது இருக்கும். அனகாபள்ளியில் ஒரு டீக்கடை வைத்திருப்பவரின் மகன். வீட்டில் யாரோ அடிக்க, ஸ்டேஷன் வந்து ரயில் ஏறி சென்னை வந்து பிறகு அங்கிருந்து இன்னொரு டிரெயின், வடக்கே. அங்கே யார் மூலமோ அடிமை வேலை. இத்தனைக்கும் பையன் போனது குறித்து அவன் குடும்பத்தார் கூட கவலைப்படவில்லையாம்.

என் அலிகார் நண்பர் விகடன் செய்தியாளர் என்பதால் சென்னையில் சேவாலயா முரளி மூலம் சென்னை போலீஸைத் தொடர்பு கொண்டு அந்த உத்தரப்பிரதேச அடிமைத்தனத்திலிருந்து அந்த சிறுவனை மீட்டு வந்தார். சேவாலயா முரளி இதற்காக பிரத்யேகமாக அந்த ஊருக்கே சென்று ஆவன செய்து அந்தச் சிறுவனை மீட்டு வந்தது ஒரு சிறப்பான பணி. பிறகு அவனுக்குப் படிக்கவும் வகை செய்தார். இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் சமீபத்தில் ஈரோட்டுக் கதிர் அவர்களின் பதிவு ஒன்றினைக் கண்டந்தும் இத்தகைய மனிதர்கள் யாரோ ஓரிருவர் இருப்பதால் மட்டுமே மழையை பொய்க்க வேண்டிய நிலையில் இந்த உலகத்தார் வைத்திருந்தாலும், அந்த மழையானது இவர்களுக்காக பெய்கிறதோ என்று தோன்றியதுதான். இனி கதிர் அவர்களின் பதிவு

எப்போதும் எனக்கு ஒரு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு. எவரொருவர் தன்னலம் பாராது சேவையாற்றுகிறாரோ, அவருக்கான பலன், அவர் எதிர்பார்த்தாலும் எதிர்பார்க்காவிட்டாலும் சரியான நேரத்திலோ, காலம் தாழ்த்தியோ எப்படியேனும் வந்தடைந்தே விடுகின்றது என்பது. ஒருபோதும் அவர்களின் வாழ்க்கையில் நிம்மதி தொலைந்து போய்விடுவதில்லை. எப்போதும் தங்களைக் குறித்து மனதில் ஒரு திருப்தி இருந்து கொண்டேயிருக்கின்றது.

மூன்று வருடங்களுக்கு முன்பு நண்பர் ஆரூரன், ஈரோட்டில் இருக்கும் ஒரு மெஸ்ஸில் உடல் ஊனமுற்றோருக்குசலுகை விலையில் உணவளிப்பதாகவும், அரசு மருத்துவமனையில் ஏழ்மையாய் இருக்கும் 20 நோயாளிகளுக்கு 1ரூபாய் பெற்றுக்கொண்டு மதிய உணவு அளிப்பதாகவும் சொன்னார். அதன்பின் சில நாட்கள் அந்த மெஸ்ஸிற்குசாப்பிடச் சென்றேன். அவர்களின் சேவையில் ஒரு நேர்மைத்திறன் இருப்பதை உணர்ந்தேன். மதியம் உணவுவழங்குகையில் சில படங்களை எடுத்துவந்து அதுகுறித்து ஒரு வேளை சாப்பாடு ஒரு ரூபாய் கட்டுரையைஎன்னுடைய வலைப்பக்கத்தில் எழுதினேன்.
 

 
அந்தக் கட்டுரை இணையத்தில் பல்லாயிரக்கணக்கில் வாசிக்கப்பட்டது. புதியதலைமுறை இதழ் அதையொட்டிஒரு கட்டுரை எழுதியது. புதியதலைமுறை தொலைக்காட்சி தனது ”பதிவு” நிகழ்ச்சியில் மெஸ் உரிமையாளர் திரு.வெங்கட்ராமனை படம் பிடித்து ஒளிபரப்பி கௌரவப்படுத்தியது.

நல்ல விஷயங்கள் சரியான சமயத்தில் கொண்டு வரப்படுவதால் இவைகளைப் பார்த்து மேலும் பல நல்ல விஷயங்கள் நடக்க வேண்டிய சந்தர்ப்பத்தைத் தருகின்றோம். சேவாலயா முரளி போல, மதுரை அட்சயா கிருஷ்ணன் போல, இதோ ஈரோடு வெங்கட்ராமனைப் போல சமூகப் பணியாற்றும் மனிதர்கள் மேலும் மேலும் அதிகமாகவேண்டும் என்ற ஆவல் கதிருக்கு மட்டுமல்ல நம் எல்லோருக்கும் இருக்கிறது என்பதோடு தக்கதொரு சமயத்தில் வெளிக்கொணர்ந்த திரு கதிரை இந்த வார வல்லமையாளராக வல்லமை குழுவினர் தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சியும் கூடுகிறது. வல்லமையாளர் திரு கதிருக்கு நம் வாழ்த்துகள்

கடைசி பாரா: மேகலா ராமமூர்த்தி அவர்களின் பாடல் தேன்.

நடராசன் என்றபெயர் கேட்டிட்ட நாள்முதலாய்
நங்கைஎன்பேர் மறந்தே னடி!
கடலளவு ஆசைதான் அவன்மீது பெருகுதே
கன்னியென்னைக் காண்பா னோடி!
உண்ணவும் மறந்தேனே உன்மத்தம் கொண்டேனே
உறக்கத்தைத் தொலைத்திட் டேனே
கண்காட்டும் பொருளெல்லாம் பரம்பொருளாய்த் தோன்றுதே
கண்கட்டு வித்தை என்பதோ?

பதிவாசிரியரைப் பற்றி

17 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. மொதலாளி ஆரூரன், மாப்பு கதிர், எழுத்துத்தேனீ மேகலா ராமமூர்த்தி, திவாகர் ஐயா உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த வணக்கம், பாராட்டு, வாழ்த்துடன் கூடிய நன்றிகளும் உரித்தாகுக!!

  2. குடத்திலிட்ட விளக்காக இருந்த சேவையை குன்றிலிட்ட விளக்காக ஒளிரச் செய்து பெருமை படுத்திய இவ்வார வல்லமையாளர் ஈரோட்டுக் கதிர் அவர்களுக்கும், அழகிய பாடல் வரிகளைத் தந்த மேகலாவிற்கும் அன்பு நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    ….. தேமொழி

  3. ‘நல்ல விஷயங்கள் சரியான சமயத்தில் கொண்டு வரப்படுவதால் இவைகளைப் பார்த்து மேலும் பல நல்ல விஷயங்கள் நடக்க வேண்டிய சந்தர்ப்பத்தைத் தருகின்றோம்.’
    ̀ஆம். இது ஒரு தொடர் நிகழ்வு. ஈரோடு கதிர் அவருக்கு என் பாராட்டுகள். மேகலா ராமமூர்த்தியின் கவிதையும் அபாரம். அவருக்கும் என் பாராட்டுகள்.
    இன்னம்பூரான்

  4. கதிர் என்பதால் காட்ட வேண்டியவற்றை வெளிச்சம் போட்டு காட்டுகிறாரோ ?
    சேவாலயா முரளி , மதுரை அட்சயா கிருஷ்ணன் ,ஈரோடு வெங்கட்ராமனைப் போல எவரொருவர் தன்னலம் பாராது சேவையாற்றுகிறாரோ , சமூகப் பணியாற்றும் மனிதர்கள் தான் இந்தப்புவி நிற்காமல் சுழலச்செய்யும் மின்னேற்றிகள் ஊட்ட சத்துகள் . 
    அச்சாணிகள் ! ஆணிவேர்கள்.  வல்லமையாளர் திரு கதிருக்கு வாழ்த்துகள் . வல்லமைப்பணி தமிழோச்சி வாழியே!

  5. ‘வல்லமையாளர்’ ஈரோடு கதிர் அவர்களுக்கு என் வணக்கமும்  வாழ்த்துகளும்!!!

    கடைசி பாராவில் இடம்பிடித்த மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும் என் வாழ்த்துகள்!!! 

    எதிரில் வரும் மனிதனைக் கண்டு புன்னைகைக்க கூட நேரமில்லாமல் இயந்திர வாழ்க்கையில் உழன்று கிடக்கும் மனிதர்களுக்கு மத்தியில், வாரவாரம் வல்லமையாளர்களை பற்றியும், அவர்தம் படைப்புகளை பற்றியும் கருத்துரை வழங்கி வரும் திரு.திவாகர் ஐயா அவர்களுக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

    தொடரட்டும் நும் பணி! 

  6. இந்த வார வல்லமையாளர் திரு.கதிர் அவர்களுக்கு என் மனமார்ந்த ந‌ல்வாழ்த்துக்கள். 

    கடைசி பாரா கவிதை வரிகளுக்குச் சொந்தக்காரரான, திருமதி மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுதல்களும் வாழ்த்துக்களும்.

  7. நல்லது செய்பவர்கள்…பிரதிபலன் எதிர்பாராது செய்துகொண்டே இருக்கிறார்கள்.
    ஈரோடு கதிர், திரு வெங்கடராமன் மாதிரி நல்லவர்களே இதற்குச் சான்று.
    இவர்களைப்போல நாமும் ஏதாவது ஒரு நல்லவிஷயம்..செய்யவேண்டும் என்று நினைக்க வைப்பதே..இவர்களின் வெற்றி.

    வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் நற்பணி.

  8. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! தொடரட்டும் நற்பணி!

  9. வல்லமையாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரு. கதிர் அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
    என் கவிதைக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்த அனைத்துத் தோழர், தோழியர்க்கும், திரு. திவாகர் ஐயாவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    –மேகலா

  10. மிகச் சிறப்பாக எழுதிய திரு. திவாகர் அவர்களுக்கும்,

    வாழ்த்துகளால் மகிழ்வூட்டும் உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்

  11. கதிருக்கு வாழ்த்துக்கள்.

    கடுமையான உழைப்புக்கு ஒளிமயமான எதிர் காலம் உண்டு என்பதைப்போலவே, காட்டுரையின் கருத்தும். நல்ல விஷயத்தை வெளிக் கொண்டுவந்த திவாகர் அய்யா அவர்களுக்கும் நன்றிகள்.

  12. கட்டுரை நாயகன் ஈரோடு கதிர், கடைசிபாரா நாயகி மேகலா ராமமூர்த்தி, திறமைக்கு விருது வழங்கிய திவாகர் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

Leave a Reply to மேகலா இராமமூர்த்தி

Your email address will not be published. Required fields are marked *