கார்கில் ஜெய்

“பான் ஸ்டார் வால் நட்சத்திரம் (பவர் ஸ்டார் அல்ல : http://www.space.com/20147-comet-pan-starrs-sunset-viewing.html), அந்தி நேரத்தில் அடிவானத்தில் தென்மேற்கு திசையில் தோன்றும்” என விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது.  அதைப் போட்டோ எடுத்தே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு கேமரா, ட்ரைபாட், டார்ச் லைட்(இது வால் நட்சத்திரத்தை தேட அல்ல இருட்டில் நெப்பு தெரிய),  எடுத்து வைத்துகொண்டு ஆயத்தமானேன். ஐந்தரை சுமாருக்கு அந்தி சாயும் என்பதால், நாலரைக்கே கிளம்பினேன். காரை கிளப்பும்போது வீட்டு சொந்தக்காரரின் நாய் ஒடி வந்து காரில் ஏறியது. சரி நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வருகிறதே என்று அதையும் வால்  நட்சத்திரம் பார்க்க ஏற்றிக் கொள்ளுகையில் எனக்குத் தெரியாது நானே திரும்பி வரும்போது நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வரவேண்டி இருக்கும் என்பது.

பல விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மேற்குப்பக்கம் தாழ்வான கடற்கரைக்குப் போனால் நன்றாகத் தெரியும் என்று சொன்னதால் டேரியன் டவுன்ஷிப் – இல் உள்ள ‘நியர் வாட்டர்’ அவின்யூவிற்கு காரை ஓட்டினேன். அது பெரும் பணக்காரர்கள் வசிக்கும் இடம், தூய்மையான கடற்கரையும், படகுத்துறையும், ஒவ்வொரு பணக்காரருக்கும் சொந்தமான மொத்தம் 80 படகுகளும் மிக அழகாக இருக்கும். படகுத் துரையின் முனையில் சென்றால், வால் நட்சத்திரம் பார்க்க நல்ல வாகான இடம் கிடைக்கக் கூடும்.

கடற்கரை ஓரத்திலேயே காரைப் பார்க் செய்வதில் எந்தவித அசௌகரியமும் இருக்கவில்லை. தோளில் கேமிரா, ட்ரைபாட் சகிதம்  நாயைக் கூட்டிக்கொண்டு காலாற நடந்தேன். நாய் சந்தோஷமாக துள்ளிக்கொண்டு ஓடியது. நீந்திகொண்டிருந்த சில வாத்துக்களை துரத்தியும், கிளிஞ்சல் பொறுக்கிக் கொண்டிருந்த குழந்தைகளை, குறைத்து பயமுறுத்தியும் குதித்துக்கொண்டு திரிந்தது. மரியாதை நிமித்தமாக நான் குழந்தைகளுக்கு வருத்தம் தெரிவித்து சில அழகான கிளிஞ்சல்களைப் பரிசளித்தேன். திடீரென  பைரவருக்கு கும்ப மேளா நியாபகம் வந்தோ என்னவோ தெரியவில்லை, ஆவேசம் வந்தவராய் தண்ணீரில் இறங்கி ஸ்நானம் பண்ணினார்,

இந்த பைரவருக்குப் பிடித்த விளையாட்டு ஏதாவது உடைந்த, ஓரடி  நீளமுள்ள மரக்கிளையை கொண்டுவந்து கொடுப்பது. அதை வீசி எறிந்தால் மீண்டும் ஓடிச்சென்று எடுத்து வந்து கொடுப்பது. இவ்வாறாக விளையாட்டிலும் வேடிக்கையிலும் ஒரு மணி நேரம்  போன பின்பும் சூரியன் அஸ்தமிப்பதாகத் தெரியவில்லை. அப்போதுதான் புரிந்தது, மார்ச் இரண்டாம் ஞாயிறு ஆதலால் நேரத்தை ஒரு மணி நேரம் முன்பாகவே மாற்றி  வைத்துவிட்டார்கள் என்று. சரி என்று பொழுதைக் கழிக்க படகுத் துறைக்கு எதிர்ப்பக்கம் இருந்த பாலத்தை போட்டோ எடுக்க ஆரம்பித்தேன்.


பாலத்தை போட்டோ எடுத்தபின் பாலத்தின் அடியிலும் சென்று போட்டோ எடுத்தேன். பாலத்தை தங்கியிருந்த பலகைகள் குறுக்கு நெடுக்காக அழகாக இருந்தன. பாசிகளும் குட்டி சங்கு போன்ற சிப்பிகளும் அடியில் ஒட்டிகொண்டிருந்தன :

இருந்தாலும் சூரியன் அஸ்தமிப்பதாய் தெரியவில்லை, ஆதலால் ரெண்டு  தெருக்களில் சுற்றி நடந்து திரும்பி அதே பாலத்துக்கு வந்து சேர்ந்தேன். இப்போது சூரியன் பொற்கிரணங்களை அணிந்துகொண்டு அஸ்தமிக்க ஆரம்பித்திருந்தான். அப்போது சில சீகல் பறவைகள் இறை தேடித் பறப்பதும் மேலே போய் கீழிறங்குவதுமாக இருந்தன:

கேமிராவை பேன்னிங் மோடில் வைத்து தொலை தூரத்தில் இருந்த சீகலைப் படம் பிடித்தேன் . படத்தை உற்றுக் கவனித்ததில் அவை மூடியிருக்கும் சிப்பிக்களை பொறுக்கிக் கொண்டு பறப்பது அரைகுறையாகத் தெரிந்தது. அந்த சிப்பிகளை உயரத்தில் பறந்து பின்பு பாறைகளின் மேல் எறிகின்றன இந்த சீகல் பறவைகள். இதனால்  சிப்பி உடைந்த பின் உள்ளிருக்கும் பூச்சியை எளிதாக உண்கின்றன, என்பது தொலைதூர போட்டோக்களை ஸூம் செய்து பார்த்தபோது தெரிந்தது.

இதை அதிசயமாக வேடிக்கை பார்த்துகொண்டிருக்கையில் கடகடவென சூரியன் மறைந்து கீழ்வானம் சிவந்தது. தூரத்தில் எதிர்க்கரையில் சில வாத்துக்கள் கத்தியபடியே வந்திறங்கின

சற்றும் தாமதிக்காமல் பாலத்தை நோக்கி நடந்தேன். தாமிர நிறமாக நீரெல்லாம் தகதககக்க அற்புதமாக இருந்தது அந்தப் பாலம் :

பாலத்தின் முனையில் சென்றால் எல்லையில்லா கடல் பரப்பின் எதோ ஒரு மூலையில் வால் நட்சத்திரம் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை, பனி மூட்டமும், மேகமும் இருந்ததால், குறைய ஆரம்பித்திருந்தது. பாலத்தின் மேல் ஏறி முனையில் சென்று நின்று கொண்டேன்:

பாலத்தின் மேல் பகுதிக்கு வராமல் நாய் ஏனோ அடம்பிடித்தது. பிரயோஜனமில்லை என்று அதற்குத் தெரிந்தது போலும். சூரியன் மறைய கடும் குளிர்காற்றும் வீசத் தொடங்கியது, வாழ் நட்சத்திரம்தான் தெரியவில்லை . பற்கள் கிட்டித்துக்கொள்ள கைகளும் உறைந்து போக, தென்மேற்குத் திசையை வெறித்துப் பார்த்துக் காத்திருந்தேன். மேகமூட்டம் இருந்ததனாலோ என்னவோ, பேன் ஸ்டார் வால் நட்சத்ரம் கண்ணுக்குத் தென்படவேயில்லை. தயக்கத்துடன்  திரும்பி நடக்கையில், பசி வயிற்றைக் கவ்வ, வானத்தை இருள் கவ்வ ஆரம்பித்திருந்தது. வெயிலிலும் அந்தியிலும் போட்டோ எடுத்த அதே பாலத்தை இரவிலும் போட்டோ எடுத்துவிடலாம் என்றெண்ணி மறுபடியும் டிரைபாடை பொருத்தினேன். 15 நொடி ஸ்லோ  ஷட்டர் ஸ்பீட் வைத்து இரவு போட்டோக்களை எடுத்தேன். முழு இருட்டில் எடுத்த கடைசி போட்டோ,  நீல நிறத்தில் வானவில்லைப் பார்க்காத மனதுக்குத் திருப்தி அளித்தது.

திரும்பி வருகையில், எதோ ஒன்றுக்காக காத்திருப்பதுதான் வாழ்க்கையோ என்று தோன்றியது.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வால் நட்சத்திரமும் ஒரு சீகல் பறவையும்

  1. Kargil jai-ku kathai sollum laavakam  mika iyalbaka amainthirukirathu. oru nalla thiraipada iyakunarukku eppadi siru thunai katha pathirangalai kooda kathayin pokkuku yetpa  kayyaala therinthirukka vendumo, athe thiramayai naan  Kargil idamum kaankiren. kathayil varum naai pathiram oru utharanam. Iyalbaana nakaichuvai innumoru  thiramai. kathyudan inaintha padangal  director-in parvayil kathai sollum camera man-in  thiramaikku sandru. 
    Mothathil Vaal natsathirathai paarkalaam endru Londonin oru iniya maalai pozhuthin mayakathil ennai kanavu kaana vaithu vitaar Kargil. 

  2. அழகிய அனுபவம். அந்தந்தத் தருணங்களை அசல் படங்களுடன் விளக்கியதால், கார்கில் ஜெய் கூடவே பயணித்த உணர்வு எழுகிறது. இந்தக் காட்சிகளுக்குள் கவிதை ஒளிந்திருக்கிறது. 

Leave a Reply to jay

Your email address will not be published. Required fields are marked *