மயிலுக்கு ஆட்டத்தையும் மானுக்கு துள்ளலையும்…

2

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

ஒருவரை ஒருவர் விரும்பும் தலைவனும் தலைவியும் சந்திக்கும் நேரம். தலைவியைத் தலைவன் தொடுவான்.

தலைவி கழுத்தை வளைப்பாள், தலை குனிவாள், முகம் சிவப்பாள், கொடுப்புக்குள் சிரிப்பாள், உடல் நெளிவாள், கால் விரல்களால் நிலத்தில் கோடிடுவாள், மேனி சிலிர்ப்பாள். காதுகளைக் கூர்மையாக்கிக் கொள்வாள்.

கண்களின் கடைக்கோடிக்கு விழிகள் போவதும் வருவதுமாய்… அடுத்துத் தலைவன் என் செய்வானோ என்ற ஏக்கம் ஒருபுறம்.. ஏதும் செய்யாமலிருக்கும் தலைவனின் தேக்கத்தால் வரும் ஏக்கம் மறுபுறம்..

இவ்வளவு நீண்ட விளக்கத்துக்குத் தமிழில் ஒரே சொல் நாணம்…. தலைவியின் நாணம்.

இறியூனியன் தீவில் பரத நாட்டியப் பள்ளி. கலாச்சேத்திராவில் பயின்ற ஆசிரியை சொல்லிக் கொடுக்கிறார். நாணத்துக்குரிய அடவுகளைக் கூறுகிறார். பிரஞ்சு மொழியில் விளக்குகிறார். பதம் பிடித்துக் காட்டுகிறார்.

மாணவிகளுள் ஒருத்தி. 18 வயதுப் பெண். தமிழ் மொழி தெரியாத தமிழ்ப் பெண். பிரஞ்சு மொழியில் கேட்கிறாள். நாணம் என்றால் என்ன? பிரஞ்சு மொழியிலோ ஆங்கில மொழியிலோ அதற்கான சொல்லை ஆசிரியையால் கூற முடியவில்லை. தலைவன் தொட்டால் ஏன் நாண வேண்டும்? இது அடுத்த வினா.

அந்த மாணவி மட்டுமன்று, அங்கிருந்த மாணவிகளுள் பெரும்பாலோரின் உள்ளத்தில் எழுந்த வினாக்கள் அவை.

250 ஆண்டு காலமாகத் தமிழர் இறியூனியனில் வாழ்கின்றனர். பிரஞ்சுக்காரர், ஆபிரிக்கர், கலப்பினத்தார் நடுவே இன்றைய (2013) மதிப்பீட்டில் ஐந்து இலட்சம் தமிழர்.

தமிழ் மரபுகளை மழுங்கடிப்பதையே தலைமுறைகள் பலவூடாக ஊக்குவிக்கும் பிரஞ்சு மேலாதிக்கச் சூழல்.  வெங்கானத்தில் காணற்கரிய நீரூற்றையும் சுற்றிய நிழல்தரு மரங்களையும் போல, அங்கங்கே தமிழ் ஆர்வலர்கள், கோயில்கள், ஊடகங்கள், நூல்கள், சைவ சமயச் சடங்குகள், இசை நாட்டியப் பள்ளிகள், தமிழ் வகுப்புகள். இவையே தமிழ் மரபுகளுக்கு நங்கூரங்கள்.

நாணம் என்ற தமிழ் மரபின் பொருளை அறியாமலே பேதையாகிப் பெதும்பையாகி நங்கையாவோர்.

இறியூனியனுக்கு மட்டுமன்று, புலம்பெயர்ந்து உலகெங்கும் பல நாடுகளில் பரந்து வாழும் தமிழர், அங்கங்கே பெற்று வளர்க்கும் தமிழ்த் தலைமுறைக் கொடுப்பனவுகள் இவை.

30 ஆண்டுகளுக்கு முன் புலம்பெயர்ந்த தமிழர் ஆத்திரேலியாவில் பெற்றெடுக்கும் தமிழ்க் குழந்தைகள் விதிவிலக்காவாரா? அவர்களுள் பெரும்பாலோர் கொண்ட கோலம் அதுவே. ஆனாலும் விதிவிலக்காக வாழ்கிறோம் என்கின்றனர் மெல்போணில் வாழும் வாசன் இல்லத்தவர்.

வாசனும் மங்களமும் பெற்றெடுத்த மக்கள்,  18 வயதான இலட்சணியா, 14 வயதான வசீசர்.

மயிலாப்பூரின் கிழக்கு மாட வீதியில், பாரதப் பண்பாட்டுப் பேழை போற்றும் பாரதீய வித்தியா பவன அரங்கில், 2013 மார்கழி இசை விழாவிற்குப் பங்களிப்பாக, 06. 01. 2013 அன்று சென்னையின் விற்பன்னர் நடுவே, தெரிந்து சுவைக்கும் சுவைஞர் குழாம் சூழ இலட்சணியாவும் வசீசும்  ஆடிய பரத நாட்டிய நிகழ்ச்சி.

அலாரிப்பில் கணேச  கவுத்துவம். சிறீகாந்தரின் செழுமைக் குரலில் கஜானனம். எடுத்த எடுப்பிலேயே வசீசரின் கால் அடிகளின் கட்டுக்கோப்பும் இலட்சணியாவின் முக பாவங்களும் மேடையைக் கொள்ளைகொண்டன. இருவரா? மேடையில் ஒருவரா? அதே பதங்களை ஒரே நேரத்தில் இருவரும் இரு பாவைகளாக, பதம் பிடித்தனரே, இம்மியும் பிறழாது ஒத்திசைந்து நடனமாடினரே.

அடியார் மேல் பரிவு கொண்டார்.  காலனைக் காலால் உதைத்தார். மார்க்கண்டேயருக்கு வாழ்வளித்தார். நம்மை ஆட்கொண்டவர். மௌவலும் மாதவியும் புன்னையும் வேங்கையும் செருந்தியும் செண்பகமும் குருந்தும் முல்லையும் வளரும் சோலை சூழ்ந்த திருக்கோணமலை இறைவன் எனத் திருஞானசம்பந்தர் 1400 ஆண்டுகளுக்கு முன் பாடிய தேவாரப் பாடல். மூன்றாம் திருமுறை 123ஆம் பதிகம் 6ஆவது பாடல். பரிந்து நன் மனத்தால் எனத் தொடங்கும் அப்பாடல் வரிகளுக்குப் பதம் பிடித்தனர் இலட்சணியாவும் வசீசரும். இருவரின் தாய்வழிப் பாட்டனார் யாழ்ப்பாணத்து மாவிட்டபுரத்தார். எனவே இலங்கையர்கோன் வழிபட்ட ஈசருக்கு அஞ்சலி!

அடுத்துத் தோடி இராகம், ஆதி தாளம், ஆதிசிவனைக் காணவே  எனத் தொடங்கும் பாடல். தண்டாயுதபாணிப்பிள்ளை ஈந்த பாடல் வர்ணமாக. ஒன்பான் சுவைகள், ஒன்பதுக்கும் முக பாவங்கள் முன்னெடுத்த பதங்கள். நரேந்திராவின் சொற்கட்டுகளுக்கு நடனமணிகள் இருவர் ஈந்த அசைவுகள். ஒருவர் அசைந்த வழி ஒத்திசைந்த மற்றவரின் அசைவு. குழலிசைத்தார் அதுல் குமார். மத்தளம் ஒலித்தார் அரிபாபு. கலையரசன் இராமநாதன் வயலின் இசைத்தார். இலட்சணியா முக பாவங்களில் மிளிர்ந்தார், வசீசர் காலடிக் கட்டமைப்பு முதலாகக் கழுத்தசைவு வரையாக இயைந்து அசைந்து பரந்து ஒளிர்ந்தார்.

இருவரும் ஒரே நேரத்தில் மேடையிலாயின் மேடை பொலியுமா? அல்ல அல்ல, ஒவ்வொருவரும் தனித் தனியே திறமையாளர். அவரவர் பாணி அவரவருக்கு. இருவரையும் தனித தனியாகப் பார்க்கலாமா என்ற குரு நரேந்திரனாரின் ஆவலுக்கு விடை தந்தனர் வசீசரும் இலட்சணியாவும்.

கருணைரஞ்சனி இராகத்தில், கண்ட தாளத்தில் அம்புசம் கிருட்டினா இசையில், திருமால் பூவுலகிற்குக் குருவாயூரப்பனாக வந்து அருளுவதை வியக்கும் அடியாராக, ஓம் நமோ நாராயணா எனத் தொடங்கும் பாடலுக்குத் தனியாகவே வந்து நடனமாடி அசத்தினார் இலட்சணியா.

செஞ்சுருட்டி இராகத்தில் ஆதி தாளத்தில் காவடிச் சிந்துக்கு ஆடி அசத்தினார் வசீசர். பழனி மலையையும் காவடி ஆட்டத்தையும் மெல்போணில் இருந்தவாறே கண்டவரோ கேட்டவரோ வசீசர்? காவடிக்காக அவர் தோள்கள் வளைந்த அழகும் கால்கள் வைத்த அடி ஒழுங்கும் வியப்பில் என்னை ஆழ்த்தின.

அடுத்துக் காம்போதி இராகம், ஆதி தாளம், குழலூதி மனமெல்லாம் எனத் தொடங்கும் பாடல். ஊத்துக்காடு வேங்கட சுப்பிரமணியனாரின் பாடல். மயிலே வசீசரைப் பார்த்துப் போலச்செய்யுமோ என்ற மயிலாட்டம் இடையில் வந்தபோது என் கைகள் தாமே சேர்ந்தன, தட்டின. உள்ளமோ ஆர்ப்பரித்தது.

நாட்டிய இணையர் தனஞ்செயனும் சாந்தா தனஞ்செயனும் கற்பித்து ஆளாக்கிய நரேந்திராவின் மாணாக்கர் இலட்சணியாவும் வசீசரும் மேடையில் ஆடுந்தொறும் நரேந்திராவின் முகத்தில் பூரிப்பு. தன் முயற்சிக்கு முழு வடிவம் கொடுத்தனரே இருவரும் என்ற மன நிறைவு.

சிறப்பு விருந்தினரான சாந்தா தனஞ்செயன் மேடைக்கு வந்து இலட்சணியாவையும் வசீசையும் பாராட்டி மகிழ்ந்தார்.

திருமந்திரப் பாடலான அன்பு சிவம் இரண்டென்பர் எனத் தொடங்கும் பாடலுக்கும் அதையொத்த இரு பாடல்களுக்கும் இலட்சணியாவும் வசீசரும் ஆடி மகிழ்வித்தனர்.

பிருந்தாவன சாசங்க இராகத்  தில்லானாவுடன் நிகழ்ச்சி நிறைவெய்திய பின்னரும், பாட்டியார் பாலம் இலட்சுமணனின் இராமகிருட்டிண மிசன் சார்ந்த மங்களப் பாடலை நினைவூட்டிச் சுவாமி அரங்கானந்தாவின் பாடலுக்கு நடனமாடி மங்களம் சேர்த்தனர் இருவரும்.

கொல்லன் தெருவில் ஊசி விற்கலாமா? மயிலாப்பூரில் பரத நாட்டிய மரபுகளைக் காட்டிப் பிழைக்கலாமா?

அருள்மிகு கபாலீச்சரர் கோயிலின் மாட வீதியில் தொடங்கி தெற்கே திருவான்மியூர் வரை, மேற்கே மாம்பலம் வரை, வடக்கே திருவல்லிக்கேணி வரை படைப்பாற்றலின் மேதைகள், இசையில் நுண்மா  நுழைபுலத்தார், நடனத்தின் துல்லிய மரபுகளைத் துலக்குவோர் குவிந்து வாழ்கின்றனர் . அவர்களின் ஆற்றல், திறன், புலமை யாவுக்குமான அரங்குகள் தெருவுக்குத் தெருவாய், சந்து பொந்தெங்கும் விரவியுள.

மெல்போணில் பிறந்து, வெள்ளையர் நடுவே வளர்ந்து, ஆங்கில மொழி மூலம் கற்று, தமிழ்க் கலைகளோ, விளையாட்டுகளோ, பண்பாட்டுக் கூறுகளோ இல்லாத வெங்கானத்தில் நீரூற்றான பரத நாட்டியப் பள்ளி ஒன்றில் பயின்ற இருவர், மயிலாப்பூரின் பாரதீய வித்தியா பவன அரங்கில் நாணத்துக்கு இலக்கணம் வகுத்தனராயின், மயிலுக்கு ஆட்டத்தையும் மானுக்கு துள்ளலையும் கற்பித்தனராயின் அந்த நிகழ்ச்சியைக் கண்ணாரக் கண்டு களிகொண்டு என் உள்ளம் சிலிர்த்ததை, யான் பெற்ற இன்பத்தை என் தமிழில் பகிரவேண்டாமா?

என் தமிழ் எழுத்தை ஊக்குவித்தவர் இலட்சுமண ஐயர். என் தொண்டை ஊக்குவிப்பவர் அவரின் அருமைத் துணைவியார் பாலம் இலட்சுமணன். இருவரும் ஈந்த இளைய மகள் பெருமாட்டி மங்களம். அவர் கணவர் திருவுடையார் சீனிவாசன். இருவரும் இடையறாது உழைத்தனர்.  தம்மக்கள் இலட்சணியாவையும் வசீசைரையும் பரத நாட்டிய விற்பன்னராக்கினர். ஆத்திரேலியாவில் தமிழ் மரபு பேணுகின்றனர். அவர்களின் முயற்சிக்குத் தமிழுலகம் கடப்பாடுடையது.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “மயிலுக்கு ஆட்டத்தையும் மானுக்கு துள்ளலையும்…

  1. புலம்பெயர்ந்த தமிழ்க்குடும்பங்களின் வாரிசுகள் தமிழறியாத் தமிழராகவே பெரும்பாலும் இருக்கின்றனர். அவர்களுக்குத் தமிழ்மொழியில் பேசவோ, எழுதவோ, தமிழைப் புரிந்துகொள்ளவோ கூட இயலவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. அதற்கு முதற்காரணம் அவர்தம் பெற்றோர். தம் பிள்ளைகளுடன் தமிழில் (மறந்தும்) பேசுவதில்லை என்பதனை ஓர் கொள்கையாகவே வைத்திருக்கின்றனர். வலுக்கட்டாயமாக ஆங்கிலத்தை வீட்டிலும் குழந்தைகளிடம் திணிக்கின்றனர். அதனால் அயலகங்கங்களில் தமிழறியா, தமிழ்ப்பண்பாடறியாத் தமிழ்ச் சமுதாயம் உருவாகி வருகின்றது. அவர்களுக்கு அச்சம் என்றாலோ, நாணம் என்றாலோ என்னவென்றே தெரியாதுதான்.

    தாய்மொழியை அடுத்த தலைமுறையிடம் கொண்டுசேர்க்கும் மிகப் பெரிய பொறுப்பு பெற்றோர்களைச் சார்ந்ததுதான். அதனை அவர்கள் செய்யத் தவறும் பட்சத்தில் ‘தமிழ் இனி மெல்லச் சாகாமல்’ விரைவாகவே செத்துவிடுமோ என்ற அச்சமும், கவலையும் தாய்மொழிப் பற்று மிகுந்தோரிடம் ஏற்பட்டுவருகின்றது.

    நிலைமை இவ்வாறிருக்க, ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவருகின்ற போதிலும் தமிழின் சிறந்த கலைவடிவமான பரதத்தை அதன் சுவை(கள்) குன்றாமல் வழங்கி வரும் செல்வி இலட்சணியா, செல்வன் வசீசர் இருவரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். வளர்க அவர்தம் கலைத்தொண்டு!

    -மேகலா

  2. TAMIL VAZHGA, BHARATHANATYAM KALAI VAZHGA – FEELING SO PROUD THAT OUR THAI MOZHI HAS BEEN WONDERFULLY CARRIED AND EXHIBITED BY SUCH a LOVELY performance by Lakshanya & vasish.  HATS OFF TO THEIR PARENTS. REGARDLESS TO MENTION THAT  WE (Shekar & Bharathi) are exceptionally happy  & proud about the fact that these children have done so much of  homework and put enormous effort to carry out such a wonderful, heart warming performance. 

    Congratulations and best wishes.

    Bharathi

Leave a Reply to மேகலா இராமமூர்த்தி

Your email address will not be published. Required fields are marked *