சத்திய மணி

நங்கையாம் மீனாளின் சொக்கனாய் ஆள்பவன்
நம்பியாய்த் தருவாகி சதாசிவம் ஆனவன்
நந்தியும் துதிபாட நடராசன் ஆட அவன்
நகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க

மந்தாகினி கங்கை சடைமீது தரித்தவன்
மலைமகளை சரிபாதி தனதென்று வரித்தவன்
மறையோரின் ஓதுகுழாம் புடைசூழக் களித்தவன்
மகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க

சிறக்கின்ற பிறைசூடி சிவமென்று நிலைத்தவன்
சிரிக்கின்ற கயிலாயப் பனிப்பொழிய குளிர்ந்தவன்
சிங்கார அரவுதனை அணியாக்கி மகிழ்ந்தவன்
சிகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க

வானோரின் தலைவனாகி மகாதேவ மிறையவன்
வாசங்கள் வீசும்நல்ல திருநீற்றில் ஒளிர்பவன்
வாக்கோடு கணபதி வடிவேலன் பெற்றவன்
வாகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க

யமபயம் அழித்துடனே மரணத்தையே அழித்தவன்
யட்சரும் அரக்கருமே தவமியற்ற அருள்பவன்
யமுனைக் கரைதனிலே தனைக்காட்சி கொடுத்தவன்
யகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க

நமசிவாயமென இசையொழுக பாடினேன்
நமசிவாயமென மனமுருக ஓதினேன்
நமசிவாயமென குருமுகமே நாடினேன்
நமசிவாயமென அருளோச்சி காக்கவே!!

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “பஞ்சாட்சர கவசம் –

  1. ஆகா!!!! முதலெழுத்தெல்லாம் சேர்த்தால் “நமசிவாய” வருகிறதே!!!!!
    நமசிவாயமென இசையொழுக பாடியேவிட்டீர்களே. கவிதை வரிகள் மிக மிக அற்புதம் சத்திய மணி அவர்களே. பாராட்டுக்கள்.

    ….. தேமொழி

  2. ‘நமைக்காக்க நமசிவாயமெ’ன்னும் நலம் சூழும் கவிதை தந்த திரு.சத்தியமணி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. பஞ்சாட்சர கவசம் போல, நம் உடலின் ஒவ்வொரு உறுப்பையும் இறைவனார் காக்க வேண்டி கவசம் ஒன்று தர பணிவாக வேண்டுகிறேன்.

  3. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரத்தை சிறுவயதில் உருகி உருகி பாடியிருக்கிறோம். 
    அழகிய தமிழில் பஞ்சாட்சர கவசத்தை அருளியிருக்கும் சத்தியமணி ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்!

  4. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் சொற்சுவையும், பொருட்சுவையும் நிறைந்த அழகான கவிதை வரிகள். வாழ்த்துக்கள் திரு.சதியமணி.

  5. அன்பாலும்  பக்தியாலும் தந்த/தருகின்ற  அனைத்து வாழ்த்துகளும் பாராட்டுகளும்  தமிழூட்டி  பாட வைத்த எல்லா வல்லமைக்கும் உரித்தான அன்னை மீனாளுக்கும் எந்தை ஈசன் திருவடிக்களுக்கே  சமர்ப்பணம். 
    எல்லாம் நலமாக அருள்வாய் பராபரமே
    எவையும் வளமாக அருளாய் பராபரமே
    எங்கும் பரமனெனும்  சிவமே  பராபரமே
    என்றும் எப்போதும்  சிவமயமே பராபரமே !

Leave a Reply to சச்சிதானந்தம்

Your email address will not be published. Required fields are marked *