‘தேர்தலும் தேடுதலும்’ கவி யரங்கம் – 29-03-09 தமிழ் சங்கம் – தில்லி

3

 

சத்திய மணி

 

தமிழ் வணக்கம்

குமரியாய் சிறக்கும் உன்னை யமுனையில் குளிக்கவைத்து

அழகியாய் அலங்கரித்து சங்க அரியணை அமர வைத்தோம்

கவிஞர்கள் கவரி வீசும் சபையினர் மகிழ்ந்து சேர்க்கும்

கரவொலி வாழ்க சொல்லும் தமிழுந்தன் ஆட்சி வெல்லும்

என்றும் எங்களுக்கு உன்னருள் ஆட்சிதானே

அவை வணக்கம்

பாலருந்த மொழி பேசும் தன் குழந்தைக் கண்டவள் போல்

பாசமுடன் பரவசமாய் கவி காணும் சபையோரே !

நேசமிகு நம்முறவு நெடிது வளர்கவென நிறை

வாசமிகு செந்தமிழால் வணங்கியான் வேண்டுகிறேன்

வாய்ப்பும் தந்தமைக்கு நன்றியுடன் தொடருகிறேன்

தொடக்கம்

கவிதைத் திருவிழா…கவி தைக்கு திருவிழா

உங்களுக்கு கவிதைத் திருவிழா…

எங்கள் கவிதைக்கு திருவிழா….

திருவிழாக் காணும் தெய்வம் தமிழ் அன்றோ

தேரெடுத்து வந்தாள் பக்தருக்கு படையலிட்டாள்..கவியமுதிற்கு

தேர்ந்தெடுத்தாள் ‘தேர்தலும் தேடுதலும்’ எனும் தலைப்பு..இனிப்பு

அதில் வாக்காளராய் எமைத் தேடச் சொன்னாள்

தேடியதைப் பாடச் சொன்னாள் பாடுகிறேன்.

உங்களுக்குத் தெரியுமா  ஓருண்மை புரியுமா

கூட்டணியாய் இருந்தாலும் குணத்தாலே வாக்காளர்

வேற்றணியாய் கலந்தாலும் விதத்தாலே வாக்காளர்

வேட்பாளர் ஆயினும்தான் வேடத்தால் வாக்காளர்

கேட்பாளராய் இங்கு இருப்போரும் வாக்காளர்

தலைவர்கள் ஆனாலும் தகுதியால் வாக்காளர் – அரசு

அதிகாரி யெனும்போதும் அவரும் தான் வாக்காளர் – ஆக

ஏக மனதாக எல்லோரும் வாக்காளர் – என்பதனால்

எமக்காகத் தேடவில்லை ..நமக்காகத் தேடுகிறேன் – முன்

எல்லோரும் முன் மொழிந்தார் .யாம் மீதி பொழிந்தோம்

தேவைகள் தானே தேடவும் தூண்டும்…

தேடலும் பட்டியல் ஆனது மீண்டும்.

இதுவும் வாக்காளர் பட்டியல் தான்…

வாக்களிக்க தகுதி ( அரசு ) தரும் வாக்காளர் பட்டியல் அல்ல – வரும்

தேர்தலுக்கு வாக்காளர் தேடலுடன் தரும் வாக்காளர் பட்டியல்.

வாக்காளர்

தேடுவது முதலில் “தகுதிக்கான வாக்காளர் அட்டை”

தேடுவது அடுத்து “தொகுதிக்கான வாக்காளர் பட்டியல்”

தேடுவது தொடரும் “ஓட்டளிக்கும் வாய்ப்பை”

தேடுவது பிறகு ” தன் அணியின் ஆட்சி”……

சிரிப்பாக இருக்கிறது… சிந்திக்கவும் வைக்கிறது …என்றதனால்

வழிகாட்ட வணங்கினேன் தமிழ்ப் பெற்ற தாயை…

 

சூரிய விழிகள் ஈர்க்கும் ..தாமரை யிதழ்கள் பூக்கும்

காவிய இலைகள் சேர்க்கும் …கையினில் ஊன்றுகோலை

வீசிய படி நடந்தால்….யானையும் நின்று பார்க்கும் –

நொய்யையில் சீராட்டும் அவையிலே பாராட்டும்

பாட்டியே..தமிழ் மூதாட்டியே .அவ்வையே வந்தருள்க என்றபோது ..

இறைஞ்சினேன்…இறைச்சலெனக் கேட்டதுபோல் எதிரே

” நன்று நன்று என் பேரா….சத்தியா…உன் பேரா

இன்று சின்னங்களாய் எனைத் துதித்தாய்..எதர்க்கழைத்தாய் ? ”

“முழுதும் அறிந்தவளே மூதுரை மொழிந்தவளே – ஏதோ

கவியெழுத வாக்களித்தாய்…கருவேற்ற நோக்களித்தாய்

வாக்காளராக்கி தேடுவதால் ..இந்நிலமை..என் செய.

காண்பதெல்லாம் சின்னங்கள்…கேட்பதெல்லாம் வாக்குறுதி.

கருத்தாய்வு தேடுகிறேன்….தருவீரே.சிறப்பாக !”

என்றதுமே சிரித்தார்… இடைப்பட்டு உரைத்தார்

“அக்காலப் பாட்டிக்கு …இக்காலப் பேட்டிகள் ஏனப்பா?

வம்புக்கிழுக்காதே….போட்டிக்கு வயதில்லை..குடியரசில்

தேடுகின்ற மூவரைக் கேள்…முடிவிலே நீயும் சேர்…

தேவைகளைத் தீர்ப்போரின் ஆட்சிக்கு ஆதரவாய்”

என்றே இயம்பி விட்டு ஏட்டில் கலந்துவிட்டர்.

ஆசியுடன் ஆசையுடன் தேடப் புறப்பட்டேன்.

 

தில்லி நகர் வீதியிலே

ராஜபாதையிலே……ராஜபாத்திலே ….சாலைப் புழுதியிலே

வேதனையால் தேடிடுவாரிடம் தேடுகிறீர் யாது ?” என்றேன்

“தம்பி சாலைகளைத் தேடுகிறேன்……சரியாக்கி செல்லும்…”

“இருமருங்கும் சாலைகள் தானே”

“தேடுகிறேன் படிப்புக்கு வணிகம் செய்யாக் கல்விச் சாலைகளை

தேடுகிறேன் துடிப்புடனே உழைப்பு நல்கும் தொழிற்சாலைகளை

தேடுகிறேன் எதிர்காலம் வளர்க்கின்ற திட்டச்சாலைகளை

தேடுகிறேன் எப்போதும் நியாயம் தரும் நீதிச் சாலைகளை”

என் தேடுதலும் ஓயவில்லை…..தேர்தலும் ஓயவில்லை…..என்றார் நகர்ந்தபடி

 

ஜனப்பாதையிலே…ஜன்பாத்திலே… நெரிசலில் தள்ளாடும் மூதாட்டி

தனைப்பார்த்து தேடலுக்கு உதவிடவே துணை வரவா நான் என்றேன்.

பதிலாய்…”அகத்தைத் தேடுகிறேன் அறுபது வருடங்களாய்..

…அகத்தில் அல்லவா சுகம் தெரியும்……”

“அகம் என்றால்…..பிறந்தகமா புகுந்தகமா மகன் அகமா மகள் அகமா”

“ராசா….

தேடுகிறேன் இலவசமாய் சிகைச்சைத் தரும் மருந்தகம்

தேடுகிறேன் உரம் கொடுத்து ஊட்டம் தரும் விருந்தகம்

தேடுகிறேன் கற்றோர் சிறப்பு தரும் கருத்தகம் –

தேடுகிறேன் இந்நாட்டைப் பெற்றோர் யெனக்காக்கும் வித்தகம் ..

( தேடுகிறேன் பெற்றோர் தமைக் காக்கும் பிறந்தகம் )…

என் தேடுதலும் முடியவில்லை…..தேர்தலும் ஓயவில்லை…..என்றார் தளர்ந்தபடி

———-

“இந்தியா கேட்டதிலே ..இந்தியா கேட்டதிலே ….கேட்காமல் நான் நுழைந்தேன்….(ஆங்கில நுழைவுக்கு மன்னிக்கவும்)

படகோடும் நீரோடை…..தியாகவொளிப் பெருஞ்சுடர்

பசுஞ்சோலை காணாது …தேடலென்ன இளையவரே”

“தாரம் தேடுகிறேன்” என்றார் குனிந்தபடி

“முத்தாரமா…முதல் தாரமா…அன்றி….? நல்லிக்கோ…..அன்றி..பாளிகாவிற்கோ…நகர்ந்திருப்பாள்”

“நண்பா…..நான்

தேடுகிறேன் நாட்டினை வளரவைக்கும் பொருளாதாரம்

தேடுகிறேன் சுற்றுபுறம் பொளிரவைக்கும் சுகாதாரம்

தேடுகிறேன் கலாச்சாரம் ( அன்பைக்) கற்றுதரும் அருளாதாரம்

தேடுகிறேன் இல்லங்கள் களிக்கும் அன்பாதாரம்

என் தேடுதலும் தீரவில்லை…..தேர்தலும் ஓய்வதில்லை…..என்றார் விரைந்தபடி

நான்காவதாக நமது பங்குக்கு யாம்..

நெல்லைக் கொடுத்து ஜயத்தை நல்கும் காவிரி நீர்வரத் தேடுகிறோம்

எல்லை சேது பாலம் ஆகியோர் இணைக்கும் நட்பைத் தேடுகிறோம்

புதியவன் வந்தாரிணி ஆங்கே புலரும் நாளைத் தேடுகிறோம்

விதியெனக் கோரும் பசிப்பேய் வீழ்த்தும் சத்திய சோதியை தேடுகிறோம்

பகைவரெல்லாம் நண்பரென்றாக்கும் பக்குவ பாரதம் தேடுகிறோம்

பத்திரமாக நம்முயிர் காக்கும் பாதுகாவலரைத் தேடுகிறோம்

சக்தியெல்லாம் பெரும் சிக்கனப் படுத்திடும் யுக்த்தியாளனைத் தேடுகிறோம்

இந்திய நாட்டை ஏய்த்திடுவார் தமை பணிய வைப்பவரை தேடுகிறோம்

வறுமை நீக்கி பெருமைச் சேர்க்கும் வள்ளல் தம்மைத் தேடுகிறோம்

வலிமை யெல்லாம் வல்லமை ஆக்கும் இளையபாரதம் தேடுகிறோம்

கற்க கசடற குறள் நெறியின் வழி வள்ளுவன் தன்னைத் தேடுகிறோம்

கங்கைக்காவிரி இணைக்கும் பாரதி கனவு மெய்ப்படத் தேடுகிறோம்

தேடும் ஆட்சி நமக்கு கிடைப்பின் அது போல் ஏது மகிழ்ச்சியடி – தமிழே

தேர்தல் ஏமாற்றிவிட்டால் அதுவும் அனுபவ முதிர்ச்சியடி.

உனக்கும் தானிது புரியாதோ தேர்தலும் தேடலும் சுழற்சியடி – அதனால்

உனக்கு ஜயகோ ஜயகோ என்றே முடித்தேன் ! இதுவும்வோர் சிறு முயற்ச்சியடி.

பிழைப் பொறுத்து வாழ்த்தருள வணங்குகிறேன்…வாழியத் தமிழ்

வணங்குகிறேன் உங்களின் அன்புடன் சத்தியமணி ….

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “‘தேர்தலும் தேடுதலும்’ கவி யரங்கம் – 29-03-09 தமிழ் சங்கம் – தில்லி

  1. தில்லியில் அடுத்த ஆட்சிக்கு  ‘தேர்தலும் தேடுதலும்’  முயற்சி  ஆயத்தமாகிவிட்டது.  பிரதம மந்திரிக்கு தேட மந்திரிக்க ஆரம்பித்து விட்டுது ஒருசாரார். பிரிவோர் பிரிதலும் பின் உரிமையோடு ஆட்சிக்கு சேர்வோர் சேர்தலும் என ஒருசாரார்.  பரிசுகளாகப் பெற்றதை வாரிசுகளுக்கு கொடுக்க ஒருசாரார். எல்லாரும் அனுபவித்துவிட்டனர், நமக்கும் வாய்ப்பு வருமோ என ஒருசாரார். வாக்களார்களாக நாம் தான் பணவீக்கங்களோடு , வ்ரிசுமைகளோடு வெறும் உரிமை அட்டை வத்து கொண்டு உரும்பிகொண்டிருக்கிறோம்….கவிதை போல் மாற்றமா ? மீண்டும் ஏமாற்றமா? வல்லமையே முடிவு சொல்லேன் ?

  2. இந்தக் கவியரங்கம் திரு நெல்லை ஜெயந்தா த‌லைமையில் தில்லி தமிழ்சங்கத்தில் நடந்தது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *