அமெரிக்காவில் வசந்த காலம்

0

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

Nageswari_Annamalaiசிறு பிள்ளையாகப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது வசந்த காலம் பற்றிப் படித்திருக்கிறேன். ஆனால் நிஜ வாழ்க்கையில் வசந்த காலம் என்ற ஒன்றை அனுபவித்ததில்லை. தமிழ்நாட்டின் தென்பகுதியில் வளர்ந்து வந்தபோது அனுபவித்ததாக இப்போது நினைவிற்கு வருவதெல்லாம் கொளுத்தும் கோடை காலமும் மழைத் தண்ணீர் தேங்கி நிற்கும் தெருவில் நடப்பதற்கே பயந்த மழைக் காலமும்தான். வசந்த காலம் என்பதெல்லாம் புத்தகத்தில் படித்ததோடு சரி.

வசந்த காலம் மட்டுமல்ல, மற்ற எந்தப் பருவ காலத்தையும் இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில், அனுபவித்ததில்லை. அமெரிக்கா வந்த பிறகுதான் காலங்கள் மாறும் என்பது புரிந்தது. குளிர்காலத்தில் அதிகக் குளிர் இருக்கும். எங்கு செல்ல வேண்டியிருந்தாலும் கம்பளி உடைகளை அணிந்துகொண்டு, உடம்பை முழுவதுமாக மூடிக்கொண்டு செல்ல வேண்டும். எப்போது குளிர் குறையும், வெளியில் உடுத்திய உடையோடு போய்வரலாம் என்று ஏக்கமாக இருக்கும். குளிர்காலம் வந்துவிட்டால் வசந்த காலம் தூரத்தில் இல்லை என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதை நினைத்துக்கொண்டு காலத்தைக் கழித்துக்கொண்டிருப்போம்.

Chicago-River-Tour

மார்ச் மாத இறுதியில் வசந்த காலத்திற்குரிய அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். ஒரு சில நாட்களாவது குளிர் குறைந்த நாட்களாக இருக்கும்.  அதுவே எல்லோர் முகத்திலும் புன்னகையை வரவழைக்கப் போதுமானதாக இருக்கும். மார்ச் 21ஆம் தேதி அதிகார பூர்வமான வசந்த காலம் ஆரம்பிக்கும் நாள். அன்றிலிருந்து பூமி தன்னுடைய சுழற்சியைக் கொஞ்சம் மாற்றிக்கொள்ளும். சூரிய கிரணங்கள் பூமியின்மீது அதிகமாக விழ ஆரம்பிக்கும். சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக வேகமாகத் தோன்ற ஆரம்பிப்பான். அதே மாதிரி சாயங்காலம் மறையும் போதும் பூமியின் மீது அதிக நேரம் வெளிச்சத்தை வீசுவான். இவை எல்லாமே மனத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் வசந்த காலத்தின் அறிகுறிகள். பறவைகளும் ஆனந்தமாகக் கூக்குரல் கொடுக்கும்.

Chicago-River-Tour

ஏப்ரல் மாதம் பிறந்துவிட்டால் இன்னும் கொஞ்சம் குளிர் குறையும். ஒன்றிரண்டு நாட்களாவது எந்தக் கம்பளி உடையும் இல்லாமல் வெளியில் போவதற்கு ஏதுவாக அமையும். குளிர் குறைவதை விட ஏப்ரல் மாதத்தில் மரங்களும் செடிகளும் தளிர்ப்பதைப் பார்க்கும்போது மனத்திற்கு மனோரஞ்சிதமாக இருக்கும். இடத்தைப் பொறுத்து ஏப்ரல் மாத மத்தியிலிருந்து கடைசி வரைக்குள் எல்லாத் தோட்டங்களிலும் பூங்காக்களிலும் தாவர இனங்கள் தளிர்க்கத் தொடங்கிவிடும்.

Chicago-River-Tour

சில கொடி, மர வகைகள் முதலில் தளிர் விடும்போது பூக்கள் மாதிரி ஆரம்பித்து, இரண்டு வாரங்கள் கழித்து அந்தப் பூக்கள் இலைகளாக மாறும். அந்த இரண்டு வாரங்களில் அந்தப் பூக்களின் அழகே தனி. இடையில் சில நாட்கள் அவற்றைக் கவனிக்கத் தவறிவிட்டாலும் அந்தக் கொள்ளை அழகை இழந்துவிடுவோம். இலையுதிர் காலத்தில் இலைகளை உதிர்க்க ஆரம்பித்து குளிர் காலத்தில் மொட்டையாக நிற்கும் மரங்கள் எல்லாம் வசந்த காலத்தில் துளிர்த்து இலைகளால் நிரம்பி, பச்சைப் பசேலென்று காட்சி அளிக்கும். அது மட்டுமல்ல எங்கு பார்த்தாலும் பூக்கள் பூத்துக் குலுங்கும்.

Chicago-River-Tour

அமெரிக்காவில் தனிப்பட்ட குடும்பங்கள் வாழும் வீடானாலும் சரி, பல குடித்தனங்கள் வாழும் பெரிய அப்பார்ட்மெண்ட் கட்டடங்களானாலும் சரி எல்லோருடைய தோட்டங்களிலும் பூக்கள் நிரம்பி, கண்ணுக்கு விருந்தாக அமையும். எங்கு நடந்து சென்றாலும் சாலையோரங்களில் பூக்களைப் பார்க்கலாம். இப்படிப் பூக்கள் பூத்துக் குலுங்கினாலும் யாரும் அவற்றைப் பறிப்பதில்லை.

இந்தியாவில் ஏற்பட்ட ஒரு அனுபவம் இப்போது ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு பெண் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் இருந்த ஒரு சில பூக்களில் சிலவற்றைப் பறித்துக்கொண்டிருந்தாள். ‘ஏன் பூக்களைப் பறிக்கிறாய்?’ என்று கேட்டதற்கு ‘இறைவனை அலங்கரிக்க’ என்றாள். இறைவனுக்காக என்றால் அது திருட்டாகாது என்பது அவள் எண்ணம். இங்கு யாரும் இறைவனுக்குப் பிறர் தோட்டங்களிலிருந்து பூக்களைத் திருடித் தங்கள் வீட்டில் இருக்கும் இறைவனுக்குச் சமர்ப்பிப்பதில்லை.

Chicago-River-Tour

சாலையோரங்களிலும் சாலையை இரண்டாகப் பிரிக்கும் இடங்களிலும் செடிகள் பூத்துக் குலுங்கும். பொது இடத்துப் பொருள்கள் எல்லோருக்கும் சொந்தம் என்று எண்ணிப் பூக்களைப் பறிப்பவர்கள் இங்கு இல்லை. மாடுகளும் தெருக்களில் மேய்வதுமில்லை, பூக்களைத் தின்பதும் இல்லை.  பூக்களைத் தலையில் சூடிக்கொள்ளும் பழக்கமும் இங்கு யாருக்கும் கிடையாது.

Chicago-River-Tour

பிறர் வீடுகளுக்கு – முன்னாலேயே அவர்களோடு பேசி நேரத்தை முடிவு செய்த பிறகுதான் – சென்றால் பூச்செண்டு கொண்டுபோவது இங்கு ஒரு பழக்கம். இந்தப் பூச்செண்டுகளுக்கு குளிர் காலத்தில் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். அந்தப் பூங்கொத்தைப் பிரித்துப் பூச்சாடிகளில் வைத்துப் பல நாட்கள் ரசிக்கலாம். அந்தப் பூங்கொத்தோடு அந்தப் பூக்களுக்கு வேண்டிய மருந்தும் சேர்ந்தே விற்பார்கள். அதையும் தண்ணீரில் கலந்துவிட்டால் அதிக நாட்கள் அவை வாடாமல் இருக்கும்.

Chicago-River-Tour

புல்வெளிகளும் பச்சைப் பசேலென்று காட்சி அளிக்கும். சில குடியிருப்புகளில் சரியாகப் பராமரிக்காமல் புல்வெளியை வைத்திருக்கும் வீட்டுச் சொந்தக்கார்களுக்கு அபராதம் விதிப்பார்கள் என்பது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஆனால் அந்தப் பகுதி வீடுகளின் விலை கொஞ்சம் குறைந்துவிடும் என்று கூறுகிறார்கள். எல்லா வீட்டுத் தோட்டங்களும் நன்றாகப் பராமரிக்கப்பட்டு அழகாக விளங்கினால் அந்தத் தெருவிற்கே ஒரு அழகு என்று நினைக்கிறார்கள்.

Chicago-River-Tour

வசந்த காலம் ஆரம்பித்ததுமே செடி கொடிகள் பூத்துக் குலுங்குவதற்கும் மரங்கள் இலைகளோடு பச்சை பசேலென்று காட்சி தருவதற்கும் அமெரிக்கர்கள் நிறைய உரங்கள் உபயோகிப்பதும், பூச்சிகள் வராமல் தடுக்க இராசயனங்கள் தெளிப்பதும் ஒரு முக்கிய காரணம். வெயில் காலம் வந்துவிட்டால் பூச்சிகள் வராமல் தடுக்க நிறைய இரசாயனங்களை உபயோகிக்கிறார்கள். சுற்றுச் சூழலிலும் வீடுகளிலும் நிறைய இரசாயனங்கள் இருப்பது முன்னை விட இப்போது நிறையக் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குன்றுதல் (autism) போன்ற வியாதிகள் வருவதற்கு ஒரு காரணமாக அமைவதாகச் சமீபத்திய ஆராய்ச்சி அறிக்கை ஒன்று கூறுகிறது.

மனிதன் எல்லாவற்றிற்கும் ஒரு விலை கொடுத்தாக வேண்டும் போலும்.

================================
படங்கள் – மெல்லியல், அமெரிக்கா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *