வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (9)

3

பவள சங்கரி

புன்னகைக் கவசமிடுவோம்!

ஒவ்வொரு முறையும் யாரையாவது பார்த்து நீங்கள் புன்னகைக்கும்போது அது அவருக்கு நீங்கள் அளிக்கும் ஒரு ஒரு அழகான அன்புப் பரிசாகிறது ..

 தொடுதலின் சக்தி, ஒரு புன்னகை, அன்பான ஒரு சொல், கேட்கும் ஓர் செவி, நேர்மையான ஒரு பாராட்டு, அல்லது அக்கறையான ஒரு சிறிய செயல், இவையனைத்தும் நம் வாழ்க்கையையே புரட்டிப்போடும் வல்லமை கொண்டது என்பதை அடிக்கடி நாம் குறைத்து மதிப்பிட்டுவிடுகிறோம்.
அன்னை தெரெசா

ஒரு சாதாரண புன்னகை எத்துனை மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தவல்லது என்பதை சிந்தித்துப் பார்ப்போம். புன்னகையை எந்த இடத்தில் நாம் தொலைக்கிறோம் என்பதை முதலில் சிந்திப்போம்.

1. கோபம் எட்டிப்பார்த்தால் புன்னகை ஓடி ஒளிந்து கொள்கிறது.
2. அன்பு குறைய ஆரம்பித்தால் புன்னகை மறைந்து சிடுமூஞ்சித்தனம் தலைகாட்ட ஆரம்பித்துவிடுகிறது.
3. உடலில் ஆரோக்கியம் குன்றினால் வேதனையில் புன்னகை தொலைந்து விடுகிறது.
4. வேதனையான சம்பவங்கள் ஏதும் நடந்துவிட்டால் புன்னகை காணாமல் போகிறது.
5. நாம் நினைத்தது நடக்கவில்லையென்றால் திரை போட்டு மறைத்துக் கொள்கிறது புன்னகை.
6. தேவையற்ற வெறுப்பு புன்னகையை உண்டுவிடுகிறது.

இப்படி பல்வேறு காரணங்களால் புன்னகை நம்மைவிட்டு விலக்கப்படுகிறது. இதில் வேதனையான சம்பவங்கள் போன்ற சிலவற்றைத் தவிர மற்ற எதுவாயினும் வலுக்கட்டாய்மாகவாவது புன்னகையை வரவழைத்துப் பாருங்கள். அப்போதுதான் அதன் வலிமை நம்க்குப் புரியும். ஆம் அந்தப் புன்னகை நம்க்குள்ளும், நம்முடன் இருப்பவர்களுக்குள்ளும் நம்ம முடியாத பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் அடுத்தவர் மனநிலையையும் சற்றே உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். அவர் வேதனையான மன நிலையில் இருக்கும் போது நம் புன்னகையை வீசாமல் அன்பான பார்வையால் அவரை அமைதிப்படுத்திவிட்டு பின்பு நம் புன்னகையை வெளிப்படுத்தி அவரையும் அமைதி கொள்ளச் செய்வது உத்தமம். இந்த ஒரு சிறு புன்னகை மந்திரம் நம்மையும் அமைதிப்படுத்தி ஆக்கப்பூர்வமாகச் செயல்படச் செய்வதோடு, அடுத்தவரையும் அமைதியாக்கி நமக்கு ஆதரவாக செயல்படவும் செய்துவிடும்.

யாரையும் மாற்ற முயற்சி செய்ய வேண்டியதில்லை!

ஆம், யாரையும் மாற்றுவது என்பது தேவையற்ற கால விரயம் செய்யக்கூடிய ஒரு செயல். காரணம் ஒருவரை அவருடைய இயல்பான தன்மையிலிருந்து மாற்றுவது சாத்தியமில்லாத காரியம், அது என்றுமே நடக்க முடியாத ஒரு வெட்டி வேலையாகக்கூடும். ஆனால் பல நேரங்களில் நாம் நம்மை அறியாமலே இதைச் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். நாம் எந்த வழியில் சென்று மாற்ற முயன்றாலும் அது வீண் வேலை மட்டுமே.தொடர்ந்த சமாதான வார்த்தைகளாலோ, மகிழ்ச்சியற்ற அமைதியான சைகைகளாலோ, அவரிடம் நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை வெளிப்படையாகச் சொல்லியோ அல்லது ஒரு வார்த்தையும் சொல்லாமல் புரிய வைக்க முயன்றாலோ என இப்படி எதுவும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்பதுதான் நிச்சயம். நம்முடைய நெருங்கிய உறவாகவோ, இரத்த சம்பந்தம் உள்ளவரோ அல்லது நெருங்கிய நண்பரோ இப்படி யாராக இருந்தாலும் இதே நிலைதான். உண்மையில் எவ்வளவு அதிகமாக நாம் அவர் மாற்றம் வேண்டி அழுத்தம் கொடுக்கிறோமோ அதைவிட ஒரு படி மேலாக திரும்ப அந்த அழுத்தம் நமக்கே வந்து சேரும். ஒரு புள்ளியில் அது ஒரு சச்சரவாகக்கூட மாறும் வாய்ப்பாகிவிடும். மாற்றத்தை ஏற்றுக் கொள்வது அவரவர் விருப்பம். அது அவருடைய உரிமையும் கூட. அதனால் நாம் எதையும் மாற்ற முயற்சித்து காலத்தையும் விரயம் செய்து, மன அமைதியும் கெடுத்துக்கொண்டு, எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வதைக் காட்டிலும், உள்ளதை உள்ளவாறு அப்படியே ஏற்றுக் கொண்டு அதற்கேற்றார்போல் நம் பாதையையும் அமைத்துக்கொண்டால் அவருக்கும் சுதந்திரம் கிடைப்பது போல வெற்றிகரமாக நமக்கும் விடுதலை கிடைத்துவிடுகிறது.

வாழு! பிறரையும் வாழவிடு!

தொடர்வோம்

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (9)

  1. புன்னகை மலர்கள் மலர்ந்தால் வெற்றிகள் கனியும் என்பதை விளக்கும் தொடர். ஆசிரியருக்கு என் நன்றிகள்.

  2. வெற்றி பெற்றவர்கள் பயன்படுத்திய ஈரெழுத்து மந்திரம். “சிரி” .சிரித்தால் சரித்திரம் நம்மை தேடி ஓடிவரும்

    மாற்ற நினைப்பது ஒரு வகையில் புத்தி மதி சொல்வது தான். இலவசமாக எது கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளும் நாம் தடுக்கி விழுந்தால் கிடைக்கும் இந்த இலவசத்தை மட்டும் வாங்கிகிக்கொள்வது இல்லை. ஆகையால் யாரும் விரும்பாத இந்த இலவசத்தை ஏன் தினிக்கவேண்டும்

    நல்ல கருத்துகளை தொடர்ந்து எழுதி வரும் பவள சங்கரி அவர்களுக்கு நன்றிகள்.

  3. ‘யாரையும் மாற்ற வேண்டியதில்லை. நம்மை நாம் மாற்றிக் கொண்டால் வெற்றிக் கனியை எட்டிப் பறிக்கலாம்’.  அருமையான கருத்துக்களை அனைவரும் ஏற்றுக் கொண்டு பயன்படுத்தும் விதத்தில் கூறி வரும் அருமையான தொடர். தொடர்ந்து படிக்கக் காத்திருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *