மேகலா இராமமூர்த்தி

 

(எழுது)கோலைக் கையில் பற்றிய படியே

கவிபாடு பொருள்தனைச் சிந்தித் திருந்தேன்!

காலைக் கதிரோன் ஒளிமுகம் காட்டி

ஏந்திழையே எனைப் பாடுக என்றான்!

 

காலை ஆட்டித் தூங்கும் குழந்தையோ

நானே கவிதை அறிகிலை நீஎன,

கோலம் போட்டு நிமிர்ந்த அன்னையின்

முறுவல் கூடக் கவிதையாய்த் தோன்றச்

சாலை யோரம் நின்ற மரங்கள்

மங்கையே என்னைப் பாடுவாய் என்றன!

 

சேலை அணிந்து சென்ற பெண்ணோ

நடக்கும் கவிதை(நான்) எனைப் பாடென்றாள்!

வாலை ஆட்டியே சென்ற நாயும் – என்

நன்றி குணத்தைப் போற்றிப்பா டென்றது!

 

வேலையில் மூழ்கிப் போனத னாலே

கவியெழு திடநான் மறந்தஅவ் வேளையில்

மாலை மங்கி இருளும் வந்தது

கோலநிலவும் குளிர்முகம் காட்டியே

வாலைக் குமரியே எனை மறந்தனையே….

வடித்திடு கவியொன்று என்மேல் என்றது!

 

இயற்கை அன்னையின் இனிய அழகில்

பாடு பொருளுக்கோர் பஞ்சமு மில்லை!

வியக்க வைத்திடும் அவளின் படைப்பில்

ஒவ்வொரு பொருளும் கவிதையே அன்றோ!

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “பாடுபொருள்!

  1. எதுவும் பிடி பட மறுக்குது
    சில நாளாய்.
    எதுவும் அடி தர மறுக்குது
    சில நாளாய்.

    தட்டாமல் திறந்த கதவுகள்
    இப்போது
    தட்டினாலும் திறப்பதில்லை….
    என்று
    என் கற்பனையை புலம்பி
    கவிதை எழுத
    கரு கிடைக்காமல் தவித்தேன்.

    உன் சுற்றம் பார்
    உன்னை சுற்றிப் பார்
    கவிதை உன் நாவினில்
    சுழலும் பார்
    என்றொரு கவிதை
    என் முன்னே.

    அதைத் தந்த பெண்ணே
    அத்தனையும் அற்புதம்
    இனி அசத்திடும்
    என் கவிதைகள் கருவோடு நிதம்.

  2. பாடுபொருள் பலகோடி பாரினிலே இருந்தாலும்,

    பாவலரின் மனமேடை ஏறாமல் சிலநேரம்,

    பரிதவிக்க வைத்தாலும், புதியதொரு பொருள்பற்றிப்,

    பெருமையுடன் பாடவைத்துப் பரவசத்தில் ஆழ்த்தும்!

    பாடுபொருள் பற்றிய தங்கள் கவிதை அருமை. வாழ்த்துக்கள் திருமதி.மேகலா இராமமூர்த்தி அவர்களே!

  3. அசத்தல்!!. பிரமித்துப் போனேன்.  மென்மை நெய்தது கவியின் மனசு. பார்க்கும் ஒரு பொருளெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பாடுபொருள் கண்ட தங்களை எவ்விதம் பாராட்டுவதெனத் தெரியவில்லை. படிக்கப் படிக்கத் தோன்றும் உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளில்லை. இன்னும்…இன்னும்… நிறையப் படைப்புகள் தர வேண்டும் தாங்கள். வானம் ஒரு எல்லை இல்லை. சிரம் தாழ்ந்த நன்றிகள் மேகலா அவர்களே!!

  4. என் கவிதையைப் பாராட்டிப் புதுக்கவிதை புனைந்திட்ட திரு. தனுசு, நித்தம் ஓர் கவிபாடப் எனைப் பணித்த திரு. பெருவை பார்த்தசாரதி, பாடுபொருள் குறித்த தம் சிந்தனைகளைப் பாமாலையாக்கி, பாராட்டும் எனக்களித்த திரு. சச்சிதானந்தம், கவிதையை மிகவும் ரசித்துத் தன் உளமார்ந்த பாராட்டுக்களை வழங்கிய திருமதி. பார்வதி இராமச்சந்திரன் ஆகிய அனைத்து நண்பர்கட்கும் என் உளம்நிறை நன்றிகளைக் காணிக்கையாக்குகின்றேன்.

    அன்புடன்
    மேகலா

  5. பொருளறிந்துப் பாடும் பொருள்நிறைந்துப் பாடும் 
    பொருட்செறிந்துப் பாடுவது கவியா ? மொழியா? 
    பொருட்குறித்துப் பாடும் பொருளாக்கிப் பாடும் 
    பொருட்களித்து ஆடுவது இசையா? வரியா? 
    பொருளெழுந்துப் பாடும் பொருளமர்ந்துப் பாடும் 
    பொருட்சுவைக்கும் அரங்கம் புவியா? மனமா? 
    பொருளுணரப் பாடும் பொழுதினிக்கப் பாடும் 
    பொருந்திடு’மே கலைக்கு’ச் சிறப்பா?சிரிப்பா?.

  6. அன்பிற்குரிய மேகலா,
    அழகிய கவிதை. வாழ்த்துக்கள்.
    எதையுமே கவிக்கண்ணோடு கண்டால் பாடிவிடலாம் தான்.
    அடியேனது சொந்த அனுபவத்தில், கவிதை என்பது ஒரு க்ஷண நேர உந்துதலில் (inspration) பொங்கிக்கொண்டு வருவது. ஆழ்மனம் இறைவன் கருணையோடு கொடுத்த வாக்வன்மை உதவியுடன் பொழிந்து தள்ளிவிடும். அப்போது கவிஞனே ஒரு பார்வையாளர் போல இருப்பது அசாதாரணம் அல்ல. பிறர் உணர்வுகளை உள்வாங்கி பாடும் கவிதைகளில் சில சமயம் ஒரு கவிதைக்கரு மனசிலே சூல் கொண்டிருக்கும்…… பிள்ளை பெறுவது போலத்தான்……..உருவமற்ற அந்த உணர்ச்சிப் பிண்டம் சொல்லுறுப்புகளை மெல்ல சேர்த்துக்கொண்டு ஒரு நாள் வாய்வழி (பேனா வழி???) பிரசவித்து விடும்.
    சரி. நைநை என்று இழுக்காமல் விடைபெறுகிறேன்……… அசத்தல் 🙂

    +++++
    புவனேஷ்வர்

Leave a Reply to மேகலா இராமமூர்த்தி

Your email address will not be published. Required fields are marked *