நான் அறிந்த சிலம்பு – 68 (22.04.13)

மலர் சபா

புகார்க் காண்டம் – 07. கானல் வரி

(39)

புலால் நாற்றம்
தன் மீது பொருந்தியிருக்க
அதற்கென வருந்தி
அந்நாற்றம் நீக்க எண்ணி
பொழிற்சோலையது புகுந்து
ஆங்கே உதிர்ந்து நின்ற
பூந்தாதுகளின் கலவையை
மணம் கமழவெனத்
தன் மேல் பூசிக்கொண்டு நிற்கின்ற
அலைகள் உலாவிடும் கடலின் கரைகளையுடைய
நெய்தல் நிலத் தலைவனே!

பலவிதமான துன்பங்கள் உற்று வருந்துவதால்
இது இன்ன நோய் என்று அறியாமல்
எம் தலைவிதானும் தனித்துத் துன்புறுகிறாள்.
இவள் மெலிவதும் இரங்குவதும்
பிறர்க்குப் புலப்படவில்லை என்பதால்
எவரும் உண்மை அறிந்திலர்.
இதனைத் தாய் அவள் அறிந்திட்டால்
என்னதான் நான் செய்வேன்?!

“பொழுது கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்கு உரைத்தல்”

(40)

மெல்லிய இருள் படர்ந்ததுவே;
பகல் பொழுது தரும்
கதிரவன் அவனும் மறைந்தனனே;
நீக்கிட முடியாத தனிமைத் துன்பத்தால்
என் கண்கள்தானும் நீரைச் சொரிகின்றனவே;

மொட்டவிழ்ந்த மலர்கள் அணிந்த
கூந்தலை உடையவளே!
வளையல் கழன்று விழும்படி
காமம் எனும் தீ கொண்டுவந்த
இம்மாலைப் பொழுது
நம்மைப் பிரிந்து சென்ற
தலைவர் தம் நாட்டிலும் இருந்திடுமோ?!

அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram22.html

படத்துக்கு நன்றி:
http://arulalantamizh.blogspot.com/2012/07/4-971.html

 

About மலர் சபா

மதுரையைச் சேர்ந்த மலர் சபா, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம், கல்வியியலில் முதுகலைப்பட்டம் போன்ற பட்டங்கள் பெற்ற நிறை கல்வியாளர். மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக இருந்தவர் தற்போது ரியாத், சவுதி அரேபியாவில் வசிக்கிறார். பஹ்ரைன், ரியாத் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர். பாசமலர் என்ற பெயரில் பெட்டகம், சமையலும் கைப்பழக்கம் என்ற தமிழ் வலைப்பூக்களிலும். Malar’s Kitchen:, Rainbow Wings: என்ற ஆங்கில வலைப்பூக்களிலும் எழுதி வருகிறார் இந்த பன்முக நாயகி.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க