திவாகர்

இந்த வார வல்லமையாளர் என்ற பகுதி வல்லமையில் ஆரம்பித்து சரியாக ஒரு வருடம் ஆகின்றது. முனைவர் அண்ணா கண்ணன் இந்தப் பணியைக் கொடுக்கும்போது விளையாட்டாக ஏதோ சொல்கிறார்.. சரி, நாமும்தான் விளையாடிப் பார்ப்போமே என்றுதான் ஒப்புக்கொண்டேன். ஏனெனில் இப்படியெல்லாம் இன்னொருவர் எழுத்துக்களைப் பற்றி எழுதும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிதானவனோ, அறிவாழம் மிக்கவனோ இல்லை என்ற அடிப்படை உண்மை எனக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் நம்மைக் கூட நம்பி ஒருவர் இப்பணியை ஒப்படைக்கிறார், அவருடைய மனதை நாம் சங்கடப்படுத்துவானேன் என்ற எண்ணத்தில் எழுத ஒப்புக்கொண்டேன். நடுவில் ஒரு நான்கு வாரம் பணி நிமித்தம் வெளியூர் சென்றபோது பெரியவர் இன்னம்பூரார் மிகச் செவ்வனே செய்தார்.

இன்னம்பூராராகட்டும் நானாகட்டும், நிச்சயமாக மூன்றாவது மனிதராக இருந்து, ஒரு நடுநிலை வாசகனாக மாறித்தான் இந்தப் பணியைச் செய்தோம் என்று இந்த நிமிடத்தில் எம்மால் நிச்சயமாக சொல்லமுடியும். ஆகையினால் ஒரு சிறிய மனத் திருப்தி கூட..

இந்த இனிய கட்டத்தில் இந்த வருடத்து 52 ஆவது வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்க அடியேனும் திரு அண்ணா கண்ணனும் திருமதி பவளசங்கரியும் சேர்ந்து ஆலோசித்ததில் மூவரும் சட்டென சொன்னது கம்பராமாயண வகுப்பை ஆரம்பித்திருக்கும் திரு ஹரிகி அவர்களுக்குத்தான் என்று. மூவரும் ஒரே மனதோடு ஒரே கணத்தில் திரு ஹரிகியைப் பாராட்டுவதில் மகிழ்ச்சியாக இருப்பது தெரியவேண்டும் என்பதற்காக இதை வெளியிடுகிறேன்.

தித்திப்பான பால்சமுத்திரத்திலிருந்து பாலைக் கொஞ்சம் குடித்துவிட்டு அதன் ருசியில் மயங்கி, திருப்தியடையாமல் அப்படியே அள்ளி விழுங்க ஆசைப்படும் பூனையாக வால்மீகியின் ராமாயணத்தைப் பற்றி எழுதும்போது, கம்பன் தன்னை வர்ணித்துக் கொள்வார். ஆனால் அதே திருப்பாற்கடலை செந்தமிழில் இத்தனை இனிமையாகக் கொண்டுவந்ததில் கம்பரை நாம் எப்படியெல்லாம் பாராட்டவேண்டும்? அதே சமயத்தில் கம்பரைப் பாராட்டுவது என்பது அவர் எழுதிய ராமாயணத்தைப் படித்தாலே போதுமானது. கம்ப ராமாயணத்தைப் படிப்பது என வரும்போது ஒவ்வொரு பாடலுக்கும் உரை வைத்துப் பார்த்துப் படிக்கவேண்டும். உரை வைத்துப் படிக்கவேண்டும் என்று சொல்லும்போதே அந்த உரையை நன்கு தெளிந்த உரையாசிரியர் ஒருவர் கற்பித்தால் நல்லது எனத் தோன்றும்.. நன்கு தெளிந்த என்று சொல்லும்போதே அந்த உரையாசிரியருக்கு மூலநூலின் ஆழமும் நன்கு உணர்ந்தவராக இருந்தால் நமக்குக் கிடைப்பது தேனில் ஊறிய பலாச்சுளைதான் என்று சொல்லவும் வேண்டுமோ. இப்படிப்பட்ட உரையாசிரியராக உன்னத உருவமாக உருவெடுத்திருக்கும் திரு ஹரிகியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இப்படித்தான் நம்மாழ்வார் ஸ்டடி ஸர்க்கிள் என்று ஒரு குழுமத்தை இங்கே விசாகையில் நானும் திரு ஸம்பத் அவர்களும் ஆரம்பித்தோம். ஆனால் எங்களுக்கு ஒரு நல்ல தெளிந்த உணர்ந்த உரையாசிரியர் சரியாக அமையவில்லை என்பதில் வருத்தமே. இந்த ஆன்மிகச் செழிப்பு மிகுந்த ஆந்திரத்தில் இந்த விஷயத்தில் திரு ஹரிகியை ஒத்த சான்றோர்களின் ஆதரவு கிடைக்காதது என்பது எங்களது துரதிருஷ்டம்தான் (இத்தனைக்கும் சின்னஜீயர், பெரிய ஜீயர் எல்லோரையும் முயற்சி செய்தோம்). ஆனால் பெங்களூரு அந்த அதிருஷ்டத்தைச் செய்துள்ளது.. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வமாக உருவாகி அங்கே அன்பர்களுக்கு அந்த செல்வம் பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதே எங்கள் செவியில் தேனாறு போல பாய்கிறது.

இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரு ஹரிகி மேலும் பல விருதுகள் பெற்று கௌரவிக்கப்படவேண்டும் என்பது என்னுடைய அவா. சான்றோர்களின் புலமை வீணடிக்கப்படக்கூடாது என்பதுடன் அது உரியவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்ற விஷயத்தில் நம் முன்னோர்கள் எப்போதுமே தெளிவாக இருந்ததானால்தான் இன்று நாம் எத்தனையோ காவியங்கள் கதைகள் பற்றிப் பேசுகின்றோம். எதிர்கால சந்ததியினரை மனதில் வைத்து எழுதப்படும் பேசப்படும் எந்த நல்ல செயலும் போற்றப்படவேண்டும் என்பதோடு திரு ஹரிகி அவர்களின் சேவைக்கு நாம் நன்றி சொல்லவும் கடமைப்பட்டுள்ளோம்.

வாழ்க அவர் தமிழ்ப்பணி, வளர்க அவரது சேவை..

கடைசி பாரா: அவ்வபோது நினைவுபடுத்தவேண்டும் என்பது போல சு.கோதண்டராமன் எழுதிய பாரதியின் வேதவாக்கிலிருந்து பாரதியின் முத்திரை வரிகள்:

நமக்குத் தொழில் கவிதை நாட்டுக் குழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தல் – உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்
சிந்தையே இம்மூன்றும் செய்

அன்பு நண்பர்களே,

கடந்த ஓராண்டு காலமாக எத்தனையோ பணிகளுக்கிடையேயும் , அடாது மழை பெய்தாலும் விடாது தொடருவோம் என்று குறிப்பிட்ட நேரத்தில் தவறாது நடுவு நிலைமையுடன் வல்லமையாளரைத் தேர்ந்தெடுத்து அவர்களுடைய  தனித்திறமைகளை ஆய்ந்தறிந்து எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் தவறாமல் அழகாக வெளியிட்டு வரும் திரு திவாகர் அவர்களுக்கும்,  இடையில் அவசரப் பணி நிமித்தம் நான்கு வாரங்கள் தொடர முடியாத சூழலில் அதே முனைப்போடு இந்தப்பணி தடைபடாமல் செய்து முடித்த திரு இன்னம்பூரான் ஐயா அவர்களுக்கும் வல்லமை குழுவினரின் மனம் நிறைந்த நன்றி.

இந்த வார வல்லமையாளராகப் பிரகாசிக்கும் திரு ஹரிகி அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

அன்புடன்

பவள சங்கரி

பதிவாசிரியரைப் பற்றி

9 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. இவ்வார வல்லமையாளர் தமிழறிஞர் ஹரிகி ஐயா அவர்களுக்கு உளம்கனிந்த பாராட்டுக்கள்!

  2. இவ்வார வல்லமையாளர் தேர்வு கண்டு மனம் மிக மிக மகிழ்ச்சி அடைந்தது (அந்த மகிழ்ச்சியை எழுத்து வடிவில் விவரிக்க எனக்குத் தெரியவில்லை).  ஹரிகி அவர்களுக்குப் பாராட்டுக்கள். 

    அன்புடன் 
    …..தேமொழி 

  3. கம்பனின் புகழ்பரப்பும் தமிழறிஞர் திரு.ஹரிகி அவர்களின் போற்றத்தக்க சேவைக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த வல்லமையாளர் விருது மிக்க மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகிறது. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் திரு.ஹரிகி அவர்களே!!.

  4. கம்பனின்   கவிரசம்     ஹரிகியின்  உரைத்தமிழில்
    பாரதியின் வேதரசம்   சுகோவின்    நடைத்தமிழில்
    வல்லமை  யாளரென வாகைப்பெரும் இத்தருணம்
    வாழியெனப் பாடுகிறேன் வளர்கநல் தமிழ்ப்பணியே!

  5. இந்த வார வல்லமையாளர் ஹரிகி அவர்களுக்கு வாழ்த்தும் பாராட்டும்.

  6. இந்த வார வல்லமையாளர் திரு.ஹரிகி ஐயா அவர்களுக்கும், பாரதியின் கருத்துக்களை சிறப்பாக வழங்கி வரும் திரு.சு.கோதண்டராமன் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    வல்லமையாலர்களைத் தேர்வு செய்யும் பணியைச் செவ்வனே செய்து வரும் திரு.திவாகர் ஐயா அவர்களுக்கு என் உளங்கனிந்த நன்றிகள்.

  7. ‘வல்லமையாளர்’ திரு. ஹரிகி ஐயா அவர்களுக்கு என் வாழ்த்துகள்! தங்கள் தமிழ்ப்பணிக்கு என் பாராட்டுகள்!!! 
    தொடர்ந்து வல்லமையாளர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கும் வல்லமை குழுவுக்கும், ஆசிரியர் கூறியுள்ளது போல், பிரதிபலன் பாராமல் வெளியிட்டு வரும் திரு.திவாகர் ஐயா அவர்களுக்கும், திரு. இன்னம்பூரான் ஐயா அவர்களுக்கும் என் நன்றிகள்!

  8. திரு. ஹரிகி ஐயா அவர்களுக்கு என் மனம் கனிந்த பாராட்டுகளும் 
    சிரம் தாழ்ந்த வணக்கங்களும்…

Leave a Reply to பழமைபேசி

Your email address will not be published. Required fields are marked *